சனி, 26 அக்டோபர், 2019

வீர வணக்கம்! வீர வணக்கம்!

மயிலாடுதுறை இயக்க கொள்கைத் தூண்

மானமிகு கோ. அரங்கசாமி அவர்களுக்கு

வீர வணக்கம்! வீர வணக்கம்!

திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர், மயிலாடு துறைப் பகுதியில் கழகத்தின் பாசறையாக விளங்கி, கழகத் தின் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் போன்ற எண் ணற்றவர்களை உருவாக்கி இயக்கத்திற்குக் கொடையளித்த முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு தோழர் கோ.அரங்கசாமி (வயது 93). அவர்கள் நேற்று (25.10.2019) மதியம் மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

அவர் நடத்திய மளிகைக் கடை, கழகத்தின் பாசறை போல் சதா இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.  சுவர் எழுத்தாளர் சுப்பையனுக்கு அடைக்கலம் தந்து தமிழ்நாடு முழுவதும் அவர்சுவர் எழுத்துப் பிரச்சாரம் செய்ய முக்கிய  காரணமாக இருந்தவர்.

சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவராக இருந்த மானமிகு தோழர் தி.நாகரத்தினம் அவர்களின் உடன் பிறவா சகோதரர்!

கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டமான சட்ட எரிப்புப் போராட்டங்கள் உட்பட கழகம் நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் முதலடி எடுத்து வைத்து சிறை ஏகிய இலட்சிய வீரர்.

விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் எதிலும் பின்புலமாக இருந்து, மற்றவர்களை முன்னிறுத்தி, இயக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற ஊக்கச் சக்தியாக இருக்கும் இயல்பைக் கொண்டவர்.

கழகத்தில் இளைஞர்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அணுகுமுறையில் முன் மாதிரியாக இருந்தவர் - சிறந்த பண்பாளர்! அவர் மறைவு அவரது குடும்பத்தை மட்டும் சார்ந்ததல்ல. இயக்கம் என்னும் இலட்சிய குடும்பத்துக்கே பேரிழப்பாகும்.

குடும்பத்தில் பிள்ளைகளையும் இயக்க வழி ஆற்றுப் படுத்தியவர்.

சில மாதங்களுக்கு முன், மயிலாடுதுறைக்கு சென்ற நானும், எனது வாழ்விணையிரும் அவரைச் சந்தித்து உரை யாடி விடை பெற்றது தான் இறுதிச் சந்திப்பாக அமைந்தது போலும்!

அவர்தம் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும், கழகத் தினருக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவர்தம் அளப்பரிய மறக்க இயலா இயக்கத் தொண்டுக்கு வீர வணக்கத்தையும் செலுத்துகிறோம்.

தலைமைக் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்  தஞ்சை இரா. ஜெயக்குமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்கள்.

- கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.10.2019

குறிப்பு: மானமிகு கோ. அரங்கசாமி அவர்களது உடல் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக