வெள்ளி, 25 அக்டோபர், 2019

வாழ்நாள் சாதனையாளர் தமிழர் தலைவர் வாழ்க!

ஆ. வந்தியத்தேவன்

அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.

அமெரிக்க மனித நேயர் சங்கமும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து, 22.09.2019 அன்று அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் - மேரிலாண்டில் நடத்திய சுயமரியாதை தத்துவ மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி பாராட்டியுள்ளது. இந்த இனிய வேளையில், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார் பிலும், 'சங்கொலி' ஏட்டின் சார்பிலும் இதயம் கனிந்த வாழ்த்துகளை நம்' ஆசிரியர்' அய்யா   கி.வீரமணிக்கு தெரிவித்து மகிழ்வோம்!

தமிழகத்தில் 'சுயமரியாதை இயக்கம்' வீறு கொண்டு எழுந்த 1927 ஆம் ஆண்டில் அமெரிக் காவின் சிக்காகோ நகரில் சூல் கொண்டு உருவான இயக்கம்தான் மனித நேய தோழமை இயக்கமான Humanist fellow ship   எனும் இயக்கம்! 1928 ஆம் ஆண்டில் புதிய மனித நேய இயக்கமாக The New Humanist என்ற பெயரில் புதுவடிவம் பெற்றது. 1952 ஆம் ஆண்டில் பன்னாட்டு மனித நேய அமைப்பான,  International Humanist and Ethical Union  என்ற அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டு, மனித நேயம், மத நல்லிணக்கம், பகுத்தறிவு, நாத்திகம், அறப்பணிகளில் ஈடுபடுதல் முதலான பணிகளில் முழு வீச்சில் இயங்கி வருகிறது மனித நேயர் சங்கம்!

பால்கர்ட்ஸ், கார்ல்சாகன், ஆலிவர் ஸ்டோன், கேதரின்ஹாப்பன், ஜான்டிலே, வாஸ்திமேகலம், ஆண்டன் ஜே. தர்சன் என உலக முழுவதிலும் உள்ள மனித நேயச் சிந்தனையாளர்களுக்கும், கல்வியாளர் களுக்கும், களப்பணியாளர்களுக்கும், அமெரிக்க மனித நேயர் சங்கம் 1953 ஆம் ஆண்டு முதல் விருது வழங்கி சிறப்பு செய்து வருகிறது.

இதனைப்போல, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து, பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International) 13.11.1994 முதல் இயங்கி வருகிறது. மருத்துவர் சோம.இளங்கோவன், வி.ஜே. பாபு, தேம்பாவணி கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களை இயக்குநர்களாகக் கொண்ட இந்த அமைப்பு அமெரிக்காவிலும், பிற அயல்நாடுகளிலும் பெரியார் கொள்கை களை பரப்பும் பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் சமூகநீதிக்காக பாடுபடும் மாமனிதர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையுடன், சமூகநீதிக்கான வீரமணிவிருதையும் இந்த அமைப்புவழங்கி வருகிறது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், பீகார் முதல்வர்

நித்திஷ்குமார், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, முன்னாள் மத்திய அமைச்சர் சந்திரஜித்யாதவ்,

உபி. மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, ஒடிசா பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் தானேசுவர் சாகூ, அய்தராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சாமி, மியான்மர் வீரமுனிசாமி, சிங்கப்பூர் எஸ்.டி.மூர்த்தி, குவைத் செல்லபெருமாள், பிற்படுத் தப்பட்டோர் சங்க தலைவர் ஹனுமந்தராவ், கருநாடக மாநில அட்வகேட் ஜெனரல் இரவிவர்மகுமார் முதலான பலருக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பு 'வீரமணி விருது' அளித்து பாராட்டியது.

ஜெர்மன் மொழியில் தந்தை பெரியார் குறித்து நூல் எழுதியும் - முத்தொள்ளாயிரம்' எனும் தமிழ் இலக்கியத்தையும், திருக் குறளையும் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தும், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களான இருளர் சமுதாய மக்கள் குறித்து கள ஆய்வு செய்தும் - ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டை நடத்தியும், அருந்தொண்டு ஆற்றிவரும் அம்மையார் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (Ulrike Niklas) அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 'சமூக நீதிக்கான வீரமணி விருதை', பெரியார் பன்னாட்டு அமைப்பு இந்த மாநாட்டில் வழங்கி பெருமைப் படுத்தியது.

இந்தவரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில்தான் அமெரிக்க மனித நேய சங்கமும், பெரியார் பன்னாட்டு அமைப்பும் இணைந்து 2019 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை (Humanist Life Time Achievement Award)  'ஆசிரியர்' மானமிகு கி.வீரமணிக்கு அளித்து மகிழ்ந்த து. அமெரிக்க மனித நேய சங்கத்தின் செயல் இயக்குநரான ராய்ஸ்பெக் ஹார்ட் (Roy Speck Hardt) விருதினை வழங்கி பாராட்டினார்.

"தந்தை பெரியார் உயிரோடு இல்லாத நிலையில், என்னை அடையாளப்படுத்தி அளிக்கப்பட்ட விருது இது! எனக்காக கொடுக்கப்பட்டது அல்ல இந்த விருது!" என்று விருதினைப் பெற்றுக் கொண்டு தன்னடக் கத்துடன் குறிப்பிட்டதோடு, பெரியார் பணி சிறக்க துணை நிற்கும் தன் வாழ்விணையர் அம்மையார் மோகனா அவர்களையும், திராவிடர் கழகத்தின் தலைமை நிர்வாகிகளையும் மேடைக்கு அழைத்து 'இவர்களுக்கும் பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் அளிக்கப் பட்ட விருது இது!' என்றும் குறிப்பிட்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பண்பு நலன் கண்டு அனைவரும் வியப்பின் எல்லைக்கே சென்று திகைத்து நின்றார்கள்!

'ஆசிரியர்' கி.வீரமணி அவர்கள், மாணவப் பருவம் தொட்டு பாராட்டுகளை விருது களாகப் பெற்று ஒளி வீசிய மகத்தான சாதனையாளர் ஆவார்!

தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, சாலமன் கதையில், மன்னராக நடித்து, வசனங்களை சிறப்புடன் பேசி, கைத்தட்டல்களை பரிசாகப் பெற்றவர் அவர்!

எட்டாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த போது, அவரின் தமிழ் ஆசிரியர் புலவர் பழனியாண்டி (முதலியார்) பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவர்களை ஆய்வு செய்ய வந்த மாவட்டக் கல்வி அலுவலரான முருகேச (முதலியார்), 'உங்களில் எவருக்காவது திருக்குறளை சொல்ல இயலுமா?' எனக் கேட்டார். அப்போது நம் வீரமணி அவர்கள் எழுந்து நின்று பத்து திருக்குறளை மனப்பாடமாக ஒப்பித்து, அதன் விளக்கத்தையும் சொன்னதையும் கேட்டு, மகிழ்ந்த ஆய்வாளர் பள்ளி இறுதி வகுப்பு வரை, கல்விக் கட்டணம் செலுத்தி மேலும் மாதம் ஒரு ரூபாய் கிடைக்கும் அளவுக்கு கல்வி உதவித் தொகையினை வீரமணி அவர்களுக்குப் பெற்றுத் தந்தார்! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பொருளாதார பாடத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றபோது, லேடி ஸ்டேரத்தே விருது, நடரா சாதங்க மெடல், ஒரேநேரத்தில் மூன்று பாராட்டு விருதுகள் - உதவித் தொகைகள், தந்தை பெரியார் அவர்கள் 100 ரூபாய் பணத்தை தந்தி மணியார்டர் மூலம் அனுப்பி கல்விக் கட்டணம் செலுத்த செய்த உதவி, நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் தந்தை பெரியார் தலைமையில் நாடகங்களை நடத்தி, அதன் மூலம் கிடைத்த தொகையை கல்விச் செலவுக்கு அளித்த உதவி இவைகளைப் பெற்று பிஞ்சுப் பருவத்திலேயே நம் அய்யா வீரமணி நிகழ்த்திய அரும் சாதனைகள் ஏராளம்! ஏராளம்!!

5 ஆம் வகுப்பில் பயின்று கொண்டு இருந்தபோதுதான் (29.07.1944 அன்று) கடலூரில் நடைபெற்ற தென்னார்க் காடு மாவட்ட திராவிடர் மாநாட்டை திறந்து வைத்து உரையாற்ற வருகை தந்த அய்யா பெரியாரை முதன் முதலாக சந்தித்தார் வீரமணி! அப்போது திராவிட நாடு படத்தை திறந்து வைத்துப்பேச அறிஞர் அண்ணா அவர்களும் அங்கே வந்திருந்தார்.

அந்த மாநாட்டில், அவரது ஆசிரியர் ஆ.திராவிடமணி அளித்த பயிற்சியினைப் பெற்று முழக்கமிட்டு, அனைவரின் பாராட்டு களையும் பெற்றார் வீரமணி! மாநாட்டில், அண்ணா உரையாற்றும்போது, வீரமணி அவர்களின் உரையைச் சுட்டிக்காட்டித்தான் தன் உரையைத் தொடங்கினார்.

"இப்போது பேசிய சிறுவன் வீரமணி காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்ராட்சம், அணிந்து இப்படி பேசியிருந்தால் இவரை, இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் பேசியதில் இருந்து, இவர் உண்டதெல்லாம் ஞானப் பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப்பால் தான்!" என்று திராவிடர் கழகத்தின் திருஞான சம்பந்தராக சிறுவன் வீரமணியை பாராட்டிப் புகழ்மாலை சூட்டினார் அண்ணா!

ஓராண்டு கழித்து, சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிலும், பெரியார் - அண்ணா முன்னி லையில் சிறுவன் வீரமணி எழுச்சியுரை ஆற்றினார். அப்போது தங்க முலாம் பூசிய வெள்ளி மெடலை, கி.வீரமணி அவர் களுக்கு வழங்கி பாராட்டி சிறப்பு செய்தார், அய்யா பெரியார்!

"இளமை வளமையை விரும்பும் என்பர்

இளமை எளிமையை விரும்பிய புதுமையை

வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!

பாடிக் கைவீசிப் பலருடன் உலவி

வேடிக்கை வேண்டும் வாடிக்கைதனை

அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும் !

தொண்டுமனப் பான்மை அந்தத் தூயனை

கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!

தமிழன் அடிமை தவிர்த்து குன்றென

நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்

பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்

கருதிய கருத்து வீர மணியை

வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை!"

என்று மணக்கோலம் பூண்டிருந்த நம் ஆசிரியர் வீரமணிக்கு வாழ்த்துப்பா பாடிய புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளே ஆசிரியரின் பண்பு நலனுக்கான பாராட்டுப் பத்திரம் அல்லவா?

நன்றி: 'சங்கொலி' 11.10.2019

- விடுதலை நாளேடு, 25. 10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக