மே நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மே நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2024

ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை



விடுதலை நாளேடு
Published April 30, 2024
மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு
நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப் படும் திருநாள்!
உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க் கத்தாலும் பிரித்து வைத்து பேதப்படுத்தி சுரண்டிக் கொழுத்த சுயநல சக்திகளுக்கு எதிராக சூளுரைத்துத் தொழிலாளி வர்க் கம் வெற்றி கண்ட திருநாள் – வரலாற்றுப் பொன்னேட்டில் மிளிரும் உரிமை நாள்!
தந்தை பெரியாரும், திராவிடர் இயக்க மும் அடையாளம் காட்டிய அரிய திருநாள்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் அங்கே
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்” என்று புரட்சிக்கவிஞர் கேட்டதோடு,
‘‘பொத்தல் இலைக்கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்”
என்று கவிதையைச் சொடுக்கினார்!
இன்று அதானிகளும், அம்பானிகளும், டாட்டா, பிர்லாக்களும் ஆகிய கார்ப்பரேட் கனவான்களின் ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., மோடி ஆட்சியாகி, விலைவாசி ஏற்றமும், வேலையில்லாக் கொடுமையும், சமூகநீதி வெறும் கானல் நீராகி வரும் நிலையை மாற்றிடும் வாய்ப்பாக, நடை பெறும் மோதலைக் கருவியாக்கி, அனை வருக்கும் அனைத்துமான சமதர்ம உல கினை சமைக்க ஒருங்கிணைந்து ஒன்று திரண்டு வென்று காட்டி, எதேச்சதிகார உயர்ஜாதி – உயர்வர்க்க காவி ஆட்சியை வீழ்த்திட, வீறுகொண்டு சூளுரைப்
போம்!
எமது மே தின வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
30-4-2024

மே நாள் மேன்மை



விடுதலை நாளேடு
Published April 30, 2024

முனைவர் அதிரடி க. அன்பழகன்
மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்

உலகின் ஆகச்சிறந்த – பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலமுதல் இன்றுவரை மனித இனத்திலும் – உலக இயற்கையிடத்தும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எண்ணற்றவை. உலகில் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டது. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அறிவியல் உண்மைக்கு அறிவும் – உழைப்பும் அடிப்படை என்றால் அது மிகையில்லை.
அறிவார்ந்த உழைப்பே ஆக்கம் தரும். அயரா உழைப்பே அறிவை விரிவு செய்யும். அறிவின் உயர் எல்லையான பகுத்தறிவுதான் இன்றைய உலகின் கற்பனைக்கு எட்டா வளர்ச்சிக்கு அடிப்படை. அந்த அறிவை மனிதன் தன் உழைப்பால்தான் மிளிர வைக்கிறான் – ஒளிர வைக்கிறான்_ உயர வைக்கிறான்.
உழைப்பிற்கு இருக்கும் இந்த சிறப்பை மய்யப் படுத்தித்தான் பல சொலவடைகள்- பொன்மொழிகள் பிறந்துள்ளது.
உழைப்பே உயர்வு தரும்
உழைத்தால் தான் உயர்வு
உழைப்பால் உயர்ந்தோர்
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
-என பலவற்றைக் குறிப்பிடலாம். இந்த பெருஞ்சிறப்புக்குரிய உழைப்புக்கு ஊனம் ஏற்படுத்த, சுரண்டல் முறை தனது வீரியத்தை காட்டத்துணிந்தது. உலகை உருவாக்கும்- உன்னத வடிவமைக்கும்- உவமைக் கடங்கா நிலைக்கு உயர்த்திச் செல்லும் உழைப்பாளி களையும் அவர்களின் உழைப்பாற்றலையும், முதலாளித் துவம் சுரண்டத் தொடங்கியது.
உழைப்பாளிகளை உழைக்காது உறங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் உண்டு திளைத்தது. உழைப்பாளிகள் ஓடாய் மெலிந்தனர். உண்ண உணவின்றி நலிந்தனர்.
“சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ!
உந்தன் வேரினிலே” -என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.
உழைப்பாளிகள், உழைப்பினால் வியர்வையை சிந்துவதாய்தான் உலகெங்கும் உள்ள கவிஞர்கள்- எழுத்தாளர்கள்- புரட்சியாளர்கள் பதிவிட்டுள் ளார்கள். பகுத்தறிவு நெறியில் சிந்தித்த கவிஞர், பெரியாரால் புரட்சிக்கவிஞர் என்று பாராட்டப்பட்ட கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மட்டும்தான் ‘சிந்தினர்’ என்ற சொல்லுக்கு மேலான ‘சொரிந்தனர்’ என்ற சொல்லால் பாராட்டியுள்ளார்.

உலக உழைப்பாளி வர்க்கம் தனது உழைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்து, 8 மணி நேரம் உழைப்பு-8 மணி நேரம் குடும்பத்தோடு குதூகலம் – 8 மணி நேரம் ஓய்வு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1886- மே, 1-ஆம் நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிகாகோ, நியூயார்க், பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்காவின் பல நகரங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற் றனர். இதில் 1200க்கு மேற் பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நிறுத்தப் போராட்டம் வெகு சிறப் போடு வெற்றிகரமாக நடைபெற்றது.
1886 மே, 3ஆம் நாள் “மெக்கார்மிம்” நிறுவன வாயிலில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4-தொழிலாளர்கள் பலியானதுடன், 50 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்” சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியா னோர் எண்ணிக்கையே தெரியவில்லை.
நிறுவனங்களின் அதிபர்கள் (முதலாளிகள்) தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஏழு பேருக்கு தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.

இந்நிகழ்வு உலகத்தையே குலுக்கியது. அமெ ரிக்கத் தொழிலாளர்கள் தொடங்கிய 8 மணி நேர உழைப்பு எனும் போராட்டம், அப்போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர்நீத்த சிகாகோ தொழிலாளர் களின் உயிர்த் தியாகம் உலகெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. 8 மணி நேர உழைப்பு என்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கம் வென்றது. அதன் காரணமாகத்தான் இன்று உலகமெங்கும் மே, 1- தொழிலாளர் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதல் மே நாள் கொண்டாடி யவர் ம. சிங்காரவேலர். 1933 மே 21ஆம் நாள் மே தினக் கூட்டம் நடத்திய பெருமைக்குரியவர் இவரே.

தமிழ்நாட்டில் முதன்முதல் மே நாள் விழா கொண்டாடிய கட்சி பெரியாரின் சுயமரியாதை இயக்கம். மே 23, 1933-இல் சமதர்ம ஊர்வலம் சமதர்ம சங்கீதங்களுடன் கூட்டங்களை நடத்தி கொண்டாட வேண்டும் என்று தந்தை பெரியார் 14.05.1933 குடி அரசில் அறிவித்தார். நாடெங்கும் மே நாள் நிகழ்ச்சிகள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் மே நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், மே தினப் பூங்கா தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில்- “உலகத் தொழி லாளர்களே ஒன்றிணை வோம்” என்கிற ஒற்றை வரி தத்துவத் தினை உணர்த்திடும் உழைப் பாளர் சிலையும் நிறுவப்பட் டுள்ளது.

போராடிப் பெற்றிட்ட உழைப்பாளர் உரிமை- உலகை உலுக்கிய உழைப்பாளர் உரிமைக்குரல் அன்று வங்கிகள் மற்றும் பேருந்துகள், தேசிய உடைமையாக்கல் எனும் கொள்கைத் தளத்தில் பல புரட்சிகளை நடத்தியது. இன்றோ ஆளும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு அனைத்து அரசுத்துறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கும் பணி யால், பொதுத்துறைகளை அம்பானி, அதானி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பு செய்வதால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி- சமூகநீதியை ஆழக்குழி தோண்டி புதைக்கும் ஆபத்தை செய்துவருகிறது.
உழைக்கும் வர்க்கம்- அறிவை வளர்க்கும் அணியினர் அயர்ந்தால் ஆபத்து வென்றுவிடும். இந்தியாவில் மே நாள் ‘மேனாள்’ ஆனது என்று எழுதும் நிலையை எட்டி விடும். விழிப்புடன் இருப்போம். உழைப்பாளர் விழுமியம் காப்போம்,
உழைப்பாளர்களே! ஒன்று கூடுங்கள்!
மே நாள் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

புதிய அரசு - ஆட்சியில் ‘புதிய விடியல் வராதா' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளாகட்டும்' மே தின நாள்!


தமிழர் தலைவரின் மே தின வாழ்த்து!!

நாளை (1.5.2021) மே முதல் நாள்; மேதினியெங்கும் மே தின நாள்!

உழைப்பாளர் உரிமை பெற்ற வரலாற்றை உழைக்கும் வர்க்கமாம் தொழிலாளத் தோழர்கள் கொண்டாடி மகிழும் பெருநாள் - திருநாள்!

நம் நாட்டில் தொழிலாளர்கள் என்றால் வர்க்கத்தைவிட வருணத்தையே மய்யப்படுத்தி, குலத்தொழிலால் கொத்தடிமைகளாக காலங்காலமாய் வாழ்ந்த மக்களுக்கு, சமூக விடுதலையும், மனித சமத்துவமும் தேவை என்று முழங்கி, இயக்கங் கண்ட தந்தை பெரியார் ‘‘தொழிலாளியை பங்காளியாக்கி, உரிமையில் பங்குபெறும் சம ஈவினை உண்டாக்குக'' என்று தாம் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் மூலம் புதியதோர் உலகு காண வழி வகுத்தவர்.

இன்றும் உண்மையான திராவிடர் இயக்கங்கள் அந்த சுயமரியாதைச் சூரியக் கதிரொளியாக தொழிலாளர் பிரச்சினை முதல் அனைத்திலும் செயல்படுகின்றன!

கரோனா காலத்தில் மேலும் தொழிலாளர்கள் - புலம் பெயர்ந்தோர் உட்பட ‘‘காணத் தகுந்தது வறுமையே, அவர்கள் பூணத் தெரிந்தது பொறுமையே'' என்று வறுமையாலும், தொற்று நோய் அச்சத்தினாலும் அலைக்கழிக்கப்படும் அவதியில் அல்லல் பட்டு ஆற்றாது அழு கின்ற கண்ணீர் விடும் நிலை மாறவேண்டும்.

புதிய அரசு - ஆட்சியில் ‘‘புதிய விடியல் வராதா'' என்று நம்பும் மக்களுக்கு நல்ல விடையைக் காணும் ‘நல்ல நாளா கட்டும்' மே தின நாள்!

சோவியத் ரஷ்யா வின் 1932 மே நாள் கொண்டாட்டத்தில் நேரில் விருந்தினராகக் கலந்துகொண்ட தந்தை பெரியாரை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் உள் அடக்கம் நமது மே தின நாள் -

அனைவருக்கும் மே தின  நாள் வாழ்த்துகள்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

30.4.2021