ஆசிரியர் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா? தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்!

 


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா? தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கடந்த 27.09.2026 அன்று சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நடத்தி, உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில், அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழு வினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘ராம் யாத்ரா’வாம்!

ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

நூற்றுக்கணக்கான குழந்தைகள், கொளுத்தும் வெய்யிலில் போதுமான  ஏற்பாடுகளின்றி அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் காவி உடை அணிவித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன? மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து முன்னணி வகையறாக்களும் ராமேஸ்வரத்தைத் தொடர்ந்து மதவெறித் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசும் வழிவகுக்க முயற்சிக்கிறது. இப்போது அந்தப் பாதையில் த.வெ.க. அரசு செல்கிறதா?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில். ராமநாதபுரம் என்பதை ‘ராமன்நாடு’ என்று ஆங்கிலத்தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்புகளை எழுப்பி, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதே ராமன் கதையைச் சொல்லித் தான், தமிழ்நாட்டின் பொருளாதார நலனுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டிய சேதுக் கால்வாய்த் திட்டம், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.

குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்?

பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் யார்? மாவட்ட ஆட்சியர் இதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொல்லப்படுகிறதே, என்ன பின்னணி?

தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து, மதவெறிக் காடாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்போர் யாராயினும், அவர்களைத் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள் – வரலாறும் மன்னிக்காது.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

29.9.2026       

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!

 


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) ‘‘அண்ணா வெறும் படம் அல்ல; என்றும், நமக்குப் பாடம்’’ என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2026) பகுத்தறிவுப் பகலவன் திராவிடர்தம் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்களது 118 ஆவது பிறந்த நாள் பெருவிழா!

தமிழ் மான, தன்மானப் பெருவிழா!

தனது கல்விப் பருவத்தை சென்னையில் முடித்தவு டன், தந்தை பெரியார் என்ற சுயமரியாதை ஈர்ப்பு மய்யத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் தளபதியாக, தந்தை பெரியாரால் பெருமைப்படுத்தப்பட்டார்!

திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி
வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம்!’

அண்ணா ஒரு பல்கலைக் கொள்கலன்! எழுத்து, பேச்சு, சிந்தனை, செம்மையான ஆளுமை, நாடாளு மன்றவாதி, ஓராண்டு முதலமைச்சர் பதவிக் காலம் என்ற குறுகிய தனது ஆட்சிக்காலத்தை, திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம்’ ஆவார்!

பொதுவாழ்வில் அவர் தனது அறிவு ஆசானிடமிருந்து – ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராகி கற்றுக்கொண்ட பல பண்புகள் அவரை நாளும் உயர்த்தி, வரலாற்றில் எவரும் பெற முடியாத தனித்த ஓர் இடத்தில் அமர்த்தி யுள்ளது!

‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்!’

எதிர்நீச்சல், துணிவு, எதிரிகளிடத்தில்கூட கனிவு, ஆட்சி கிடைத்தபோது பணிவு, ஆளுமையில் அவர் எந்த ஏற்றம் பெற்றாலும், அந்த ஆட்சியை தனது ஆசானுக்குக் காணிக்கை ஆக்கிய பண்பின் உச்சம். ‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்’ என்ற வீர சபதத்தினை அரசியலில் நிறைவேற்றிக் காட்டிய விந்தை மனிதர் பேரறிஞர் அண்ணா என்ற பெரும் ஆளுமை!

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியாரே!’ என்று கூறியது மட்டுமல்ல, அதைச் சொல்லாலும், செயலாலும் அரசு மூலம் நிரூபித்துக் காட்டிய மாவீரர் நம் அண்ணா அவர்கள்.

முதலமைச்சர் பதவி, அவரது வாழ்வின் வசந்தமல்ல; தந்தை பெரியாருடன் இருந்து பரப்புரை செய்ததே ’தம் வாழ்வின் வசந்தம்’ என்று மனந்திறந்த மாமனிதர் அவர்.

தன்மான ஆடை வழங்கிய
தகைசால் வள்ளல் அண்ணா!

தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி செல்லுபடியாக்கியதன்மூலம், அத்திருமணம் மூலம் பிறந்த தலைமுறைகளுக்குச் சட்டப்படி தன்மான ஆடை வழங்கிய தகைசால் வள்ளல் அண்ணா!

அண்ணா வெறும் படம் அல்ல; என்றும்
நமக்குப் பாடம்!

அறிஞர் அண்ணாவின் திராவிடர் ஆட்சிதான் மக்களின் சுயமரியாதை தொடங்கி, மாநிலங்களின் சுயமரியாதை வரை விளக்கி, அதற்காகப் போராட, அரசியல் களம் அமைத்தவர் நம் அண்ணா!

அண்ணா ஆட்சிதான், கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியாக அவ்வப்போது வளர்ந்து – வழிகாட்டியது!

காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்!

எனவே, அண்ணா ஒரு காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்.

என்றும் மக்கள் நெஞ்சில் இருக்கும் செந்தமிழ்ப் பெட்டகம்; அறிவுச் செம்மல்!

வாழ்க! வாழ்கவே!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

15.9.2026        

புதன், 21 ஜனவரி, 2026

தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

 

‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சரின் அறிவிப்பு –‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ அவர் என்பதை உலகறியச் செய்யும் எடுத்துக்காட்டு

துணைவேந்தர் நியமனம்முதல் கலை, மொழி, இலக்கியம், வரலாறு

அனைத்தையும் காவி மயமாக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. அரசு!
குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘‘செம்மொழி இலக்கிய விருதுடன்’’ தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை!

துணைவேந்தர் நியமனம் முதல், கலை, மொழி, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுத் தளத்தை எல்லாம் ஒன்றிய பி.ஜே.பி. அரசு காவி மயமாக்கிவரும் நிலையில், இந்திய அளவில் குறிப்பிட்ட மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருதும்’, தலா 5 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்ற ‘திராவிட மாடல்’ அரசின் நாயகரின் அறிவிப்பு – ‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’ நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பதற்கான எடுத்துக்காட்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி, வரவேற்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் அவர்களது அண்மை அறிவிப்பு  – இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் பாராட்டி வரவேற்கும் மிக அருமையானதொரு திட்டமாகும்!

‘‘குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் “செம்மொழி இலக்கிய விருது” என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

படைப்புகளின் இலக்கியத் தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும்.

காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை
உருவாக்கும் என்பது நிச்சயம்!

அடுத்து அமையப்போவதும் ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சிதான்! அப்போது, இதைவிடப் பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்தப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்!’’ என்று கூறியுள்ளது இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் காதுகளில் மட்டுமல்ல, இலக்கிய ரசனை உள்ள அந்தந்த மொழிப் பற்றாளர்களின் காதுகளில் தேன் பாய்ந்த மகிழ்ச்சியை உருவாக்கும் என்பது நிச்சயம்!

அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க., ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்தே – அரசின் பொது வள சுதந்திரத்துடன் இயங்கி வந்த வரலாற்று ஆய்வு அமைப்பு, கலாச்சாரப் பாதுகாப்பு அமைப்புக் குழு அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – காவிமயம் ஆக்கப்பட்டு வருகின்றன!

இதை, நாடாளுமன்றத்தில்கூட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி, அரசின் கலை, இலக்கிய, மொழி அமைப்புகள், வரலாறு, அறிவியல் அமைப்புகள் எல்லாவற்றையும் காவி மயமாக்கி வரும் நிலையில், சுதந்திரமாக இதுவரை தலையீடு இன்றி நடந்து வந்த இலக்கிய பீடமான ‘‘சாகித்ய அகாடமி’யின்  விருதையே – அது தகுதி மிக்க ஒருவருக்குச் செல்லக்கூடாது – காரணம், அவர் இடதுசாரி கருத்தாளர் என்பதால், அப்பரிசை நிறுத்தி வைத்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு. இது ஏற்கத்தக்கதா? நியாயமா?

இதற்கு சரியான ஆக்கப்பூர்வமான பதிலடிதான் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் வரவேற்கத்தக்க மேற்கண்ட அறிவிப்பு!

‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்!’

‘திராவிட மாடல்’ அரசு, வெறுப்பு அரசியல் நடத்தாத ஒன்று; எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை. பண்பாட்டுப் படையெடுப்பு, மொழித் திணிப்பை ஒரு வழிமுறையாகக் கொள்ள திட்டமி்ட்டு செயல்படுவதை எதிர்ப்பதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று நமது முதலமைச்சர் இந்தப் புதிய ஏற்பாட்டினை அறிவித்துள்ளார், தக்க நேரத்தி்ல்!

‘‘பரந்த, விரிந்த மனப்பான்மையாளர்’’ அவர் என்பதை உலகறிய இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை
19.1.2026

செவ்வாய், 18 நவம்பர், 2025

நாடு பழைய பார்ப்பனீய – வருணாசிரம திசைநோக்கித் தள்ளப்படுகிறதா?


ஆசிரியர் அறிக்கை
*இந்தியாவின் நவீன தொழிலாளர் கொள்கை பாரம்பரிய, மனுஸ்மிருதி முதலியவற்றின் சாரமாம்!

* பிறவியிலேயே தொழிலாளர்களாகவும், சம்பளமின்றி ‘‘பிராமணனுக்குப்’’ பணி செய்யவேண்டும் என்பதுதான் நவீன தொழிலாளர் கொள்கையா  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

‘‘நவீன தொழிலாளர் கொள்கை’’ என்பது, பழம்பெரும் சாஸ்திரங்களையொட்டி உருவாக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுவது – நாட்டை பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கித் தள்ளப்படுவதாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எச்சரித்து அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

ஒன்றியத்தில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.– பா.ஜ.க. அரசு – தாங்கள் பதவியேற்றபோது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எடுத்த வாக்கு றுதிக்கு எதிர் முரணாக, நாளும் தங்களது  ‘ஹிந்துத்துவா’ கொள்கைகளை அனைவருக்கும் பொதுவான அரசின் நடைமுறை சட்டத் திட்டங்களாக்கி, நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமும் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றிய அரசையும், அதே கட்சி – கூட்டணியைச் சார்ந்த மாநில (ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.) அரசுகளையும் ஹிந்துராஷ்டிர அரசுகளாகவே கருதி, நடத்தி வருவது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரி யதாகும்!

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு போன்ற நடவடிக்கை களுக்குப் பிரதமர், நிதியமைச்சர் போன்ற வர்கள் ‘தீபாவளிப் பரிசு’ என்று கூறி, ஹிந்துத்துவா கொள்கைத் திணிப்புகளைச் செய்கின்றனர்.

‘தீபாவளி என்பது ஒரு மதப் பண்டிகை. மற்ற மதக்காரர்களும் மதங்களை ஏற்காதவர்களும்கூட நாட்டில் உள்ள குடிமக்கள் என்கிறபோது, ஒரே மதம் (ஹிந்து மதம்), ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய, வேத ஸநாதன கலாச்சாரம்) என்பதைத்தான் ‘ஆரிய ஆட்சியாகவே’ நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!

ஒன்றிய தொழிலாளர் நலத் துறையின் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை!

இப்போது ஓர் அதிர்ச்சியூட்டக்கூடிய ஆணை – திட்டம் – ஒன்றிய தொழிலாளர் நலத் துறையில் வெளியிடப்பட்டுள்ளது!

‘‘பழைமை ஆவணங்களான மனுஸ்மிருதி, யக்ஞ வல்கிய ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி, சுக்ர நீதி, அர்த்த சாஸ்திரம் ஆகியவை அரசு நீதி குறித்து வலுவாகக் கூறியுள்ளன.

நீதி, நியாயமான ஊதியம், சுரண்டலிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதில், ஆள்வோரின் கடமை என்னவென்பதுபற்றி அவற்றில் கூறப்பட்டுள்ளன.

நவீன தொழிலாளர் சட்டங்கள் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, உழைப்பை நிர்வகிக்கும் இத்தகைய கோட்பாடுகள் இந்திய நாகரிகத்தின் உருவாக்கத்தில் வலுவான அடிப்படை அம்சங்கள் உள்ளன.

இந்தியாவின் பாரம்பரிய புரிதல் என்னவெனில், ‘‘உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டுமல்ல; சமூக ஒற்றுமையையும், கூட்டு முன்னேற்றத்தையும் நிலை நிறுத்த உதவும் ‘புனிதமான’ மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது’’ என்று கூறும் இந்த வரைவுக் கொள்கை, இத்தகைய பாரம்பரிய ஆவணங்களிலிருந்து உத்வேகம் பெறுவதாகவும், இத்தகைய கொள்கைகள் முற்றிலும் நவீன தொழிலாளர் கொள்கைகளுடன் இசைந்துள்ளதாகவும் கூறுகின்றது.

‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு மனுஸ்மிருதியில்!

‘‘தார்மீகம்’’, ‘‘புனிதம்’’ போன்ற வார்த்தைகள் – மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் முதலிய வர்ணாஸ்ரம தரும – பிறவி ஜாதி அடிப்படையில் உழைக்கும் வர்க்கமான மக்களைக் ‘‘கீழ்ஜாதி’’யாக்கி, அவர்களைப் பிறவி ‘‘அடிமை வகுப்புகளாக’’ – டாக்டர் அம்பேத்கர் மொழியில் கூறவேண்டுமானால் Servile Classes என்று தாழ்வுபடுத்தி, அதிலிருந்து மீள முடியாதவர்களாக, படிக்கும் உரிமை, திருமண உரிமை, சொத்துரிமை, சுதந்திர வாழ்வுரிமை அற்றவர்களாக்கி வைத்ததோடு, ‘சூத்திரர்கள்’ என்பதற்கு ஏழு வகைப் பிரிவு என்று மனுஸ்மிருதி சுலோகம் 410, அத்தியாயம் 8 கூறுவது என்ன?

‘‘அரசன் வைசியனை வர்த்தகம் வட்டி வாங்கு தல், பயிரிடுதல், பசுவைக் காப்பாற்றல் இவை களையும், சூத்திரனை துவிஜாதிகளுக்குப் பணி விடையுஞ் செய்யச் சொல்லவேண்டியது. அப்படிச் செய்யாவிடில் அவர்களைத் தண்டிக்க’’

என்று கூறியுள்ளது.

அசல் மனுதர்மத்தின் மற்ற சுலோகங்கள் இதோ!

இதுவே அப்படியே, ‘‘அர்த்தசாஸ்திரம்’’ என்ற ஆரிய நூலிலும்!

இந்தக் கொள்கையை நாட்டில் உள்ள தொழிலாளர் வர்க்கம் தனது சட்டத் திட்டங்களாக ஏற்றால் என்ன நிலை ஏற்படும்?

சுலோகம் 413, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சம்பளங்கொடுத்தேனும் கொடாம லேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் அல்லவா!’’

சுலோகம் 414, அத்தியாயம் 8

‘‘சூத்திரன் யஜமானானால், வேலையினின்று நீக்கப்பட்டிருந்தாலும், அந்த வேலையானது அவனை விட்டு நீங்காது. இம்மைக்கும், மறு மைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவன். ஆதலால், அவன் மறுமைக்காகவும், பிராமண சிசுருைஷ செய்யவேண்டியது.’’

சுலோகம் 415, அத்தியாயம் 8

‘‘யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.’’

சுலோகம் 416, அத்தியாயம் 8

‘‘மனையாள், பிள்ளை, வேலைக்காரன் இவர்க ளுக்குப் பொருளில் சுவாதீநமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமாநனையே சாரும். அதாவது யஜமான் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாதென்று கருத்து.’’

சுலோகம் 417, அத்தியாயம் 8

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை  வலிமையாலும் எடுத்துக் கொள்ள லாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொரு ளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.’’

இதுதான் இனி ஒன்றிய அரசின் தொழிலாளர் துறை கொள்கையாக அமையப் போகிறதா? (இதுபற்றி நேற்று (16.11.2025) மார்க்சிஸ்ட் நாளேடான ‘தீக்கதிர்’ ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது).

நாடு பழைய பார்ப்பனீய வருணாசிரம திசை நோக்கி தள்ளப்படுகிறதா?

கடுமையாக எதிர்க்க முன்வருவது
அவசர, அவசியமாகும்!

இதனை முளையிலேயே கிள்ளி எறிய முன்வர வேண்டும்.

நாடெங்கும் அனைவரும் தக்க விழிப்புணர்வுடன் இருந்து, தமிழ்நாடு அரசும், அதன் தொழிலாளர் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க முன்வருவது அவசர, அவசியமாகும்!

 கி.வீரமணி
  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை 
17.11.2025       

செவ்வாய், 28 அக்டோபர், 2025

ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

 


வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்!
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆணவக் கொலை தடுப்புக்கான  சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதல மைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’   என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (17.10.2025) காலை தமிழ்நாடு சட்டப்பேர வையில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டமொன்றை இயற்றிட, ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையில் ஒரு தனி ஆணையம் அமையும். அதன் வழிகாட்டுதலையொட்டி, அடுத்து ஆணவக் கொலைத் தடுப்புச் சட்டம் உருவாகும்’’ என்று விடுத்துள்ள இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கே வழி காட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் ஆகும்!

இதுபற்றி சட்டப்பேரவையில் அவர் உரை யாற்றும்போது, (அண்மையில் 13 நாள்களுக்கு முன்பு)செங்கல்பட்டு – மறைமலை நகரில் நடைபெற்ற நமது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஜாதி ஒழிப்புக்கான முக்கிய நடவடிக்கையாக ஆணவக் கொலையைத் தடுக்கச் சட்டம் நிறைவேற்றக் கோரும் தீர்மானத்தை முக்கியமாகக் குறிப்பிட்டு, இச்சட்டத்தின் தேவைபற்றிக் கூறியது நம்மை மெய்சிலிர்க்கச் செய்தது. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க முதல் மாகாண மாநாட்டின் தீர்மானங்களைச் சட்டமாக்கிட 40 முதல் 60 ஆண்டுகள் ஆயின.

4.10.2025 செங்கல்பட்டு மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்கள் அடுத்த 13 நாள்களில் செயல்பாட்டுக்கு வர ஏற்பாடுகள் தொடக்கம்!

என்னே வேகம்! என்னே விவேகம்!!

இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி!

கருஞ்சட்டையினருக்கு ‘முதல் சல்யூட்’ அளித்த எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே,

இந்த ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான ஆணவப் படுகொலை தடுப்புச் சட்ட ஏற்பாட்டுக்கான முன்னெடுப்புக்கு எங்களது ‘டபுள் சல்யூட்’ – வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

17.10.2025          

பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!

 


இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர்
பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி!
தவறான தகவல் பரப்பும் ‘விஷமச் செடியை’ முளையிலேயே கெல்லி எறியவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

மற்றவை

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவர் பாபா சாகேப் டாக்டர்
பி.ஆர்.அம்பேத்கரின் புகழைக் குறைக்கும் ஆரிய முயற்சி – தவறான தகவல் பரப்பும் விஷமச் செடியை முளையிலேயே கெல்லி எறியவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கரின் ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பிரபல சட்ட மேதை, புரட்சியாளர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது ஒப்புவமையற்ற ஒத்து ழைப்பிலும், சட்ட அறிவாலும், குழுவில் உள்ள பலரது கருத்துகளை அலட்சியம் செய்யாமலும், அவற்ைற உள்வாங்கியும், தனது லட்சியங்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாத வண்ணமும், ஒரு சர்க்கஸ் வித்தை வித்தகர் புலி வாயில் தலையை விட்டு மீளுதல், கூண்டுக்குள் விரைந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் மூலம் மக்களை வியக்க வைக்கும் திறனாளியாக இருப்பதுபோன்று செயல்பட்டு, அவருக்கு வரைவுக் குழுவில் இருந்த உயர்ஜாதி உணர்வாளர்கள் முதல் பல் வகையாளர்களின் எதிர்ப்பு இருந்த நிலையிலும், அவர் ஆற்றிய பணியின் சிறப்பு, ஆற்றல் உலகப் புகழ் பெற்றதாகும்!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புகழ் உலகளாவி, வரலாற்றில் வைர வரிகளாக ஓளிவீசுகின்ற நிலையில், பொறுக்குமா ஆரியம்?

‘அணைத்து அழிக்கும்’ மகா வித்தையாளர்களின் ‘விதைக்காது விளையும் கழனி’ அல்லவா ஆரியம் – அண்ணா சொன்னதுபோல!

பி.என்.ராவ் அய்.சி.எஸ்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்பற்றிய விளக்கக் குறிப்புரையாளர் (Commentators) என்ற பெயரில், வியாக்கியானம் செய்வோர் சிலர், புதுவகைப் பிரச்சா ரத்தினைச் செய்து அம்பேத்கர் புகழை மறைக்க, ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை அவர் எழுதி முடிக்கவில்லை. அதற்கு முன்பே, பி.என்.ராவ்
அய்.சி.எஸ். (இவர் கொங்கணி மொழி பேசும் சரஸ்வதி பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது) என்ற சட்ட நிபுணர்; அரசியலமைப்புச் சட்ட வரைவு ஆலோசகராக பிரிட்டிஷ் அரசுக் காலத்திலேயே 1946 இல் நியமிக்கப்பட்டு, அதனைத் தயாரிக்கும் பணியை ஏற்றுச் செய்தார்’’ என்று தொடங்கி, இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு சன்னமான முறையில் தொடக்கம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சட்ட நிபுணர் பி.என்.ராவ் (பெனகல் நரசிங் ராவ்) அவர்கள் சிவில் அதிகாரியாகத்தான் இந்திய அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்.

அவரிடம் அப்போது இந்தப் பணியை அந்நாளைய பிரிட்டிஷ் அரசு விட்டதற்கு முக்கிய காரணம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னோடியான 1935 சட்டம் (India Act of 1935) எழுதுவதற்கு அமைக்கப்பட்ட அலுவலகத்தில் அந்நாளில், உதவிய வர் என்பதால்தான்!

நாம் மறைக்கவோ,
மறுக்கவோ இல்லை!

அந்த அடிப்படையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 இல் அரசியல் நிர்ணய சபை மூலம் உருவாகும் அரசியலமைப்புச் சட்ட வரைவுக்கு மூளையாகப் பயன்படும் ஒரு வரைவை (Working Draft) தயாரித்துக் கொடுத்தார் என்பதை நாம் மறைக்கவோ, மறுக்கவோ இல்லை. அது ஒரு பொதுக் குறிப்பான வரைவு (Rough Draft).

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அதற்கு தமது ஆளுமை, ஆற்றல்மூலம் சதை, ரத்தம் எல்லாம் தந்து, அதில் அரசியல் உரிமைகளை மக்கள் தங்களுக்குத் தாங்களே தந்து, நாட்டின் மக்களாட்சி, இறையாண்மை மக்களிடையே உள்ளது என்பதையும், சமதர்ம ஆட்சி யாக, ஜனநாயகக் குடியரசாகவே நீடிக்கும் என்றும் பதிவு செய்து, பீடிகை என்ற முகப்புரையைச் (Preamble) சிறந்த அடிக்கட்டுமானமாக்கிவிட்டார்!

நாடாளுமன்றத்தில்
பதிவும் செய்துள்ளார்!

அவர் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடியாதபோது, இவற்றைச் சாதித்ததுபற்றியும், பலவற்றை அவர் செய்ய எண்ணியபோதும், முழுமையாக இயற்ற முடியாத நிலை இருந்ததைக் குறித்தும், நாடாளுமன்றத்திலேயே பிறகு 1954 இல் பதிவும் செய்துள்ளார்!

அவர் பி.என்.ராவ் அவர்களது பங்களிப்பைக் குறைக்கவோ, மறக்கவோ இல்லை. உரிய முறையில் அதனைக் குறிப்பிட்டு, அவரது உதவிக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத்
தொடங்கி உள்ளனர்

ஆனால், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை, ஏதோ அரசியலமைப்புச் சட்ட வரைவுப் பணியின் இடையில் வந்துவிட்டுச் செல்லும் ஒரு கதாபாத்தி ரம்போல சித்தரித்து, எல்லாமே பி.என்.ராவ்தான் செய்தார் என்று இப்போது ஒரு புதுவகை விஷமப் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.

இந்த விஷமச் செடியைச் (Disinformation), திட்ட மிட்டே பரப்பப்படும் பொய்த் தகவல் பரிமாற்றத்தினை முளையிலேயே கெல்லி எறிந்து, உண்மை வர லாற்றை உலகத்தாருக்கு எடுத்துரைப்பது முக்கிய பெருங்கட மையாகும்!

இதற்கு முக்கிய காரணி யார் என்பதை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது
ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்

ஒருமுறை, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்து முடித்த பிறகு, எப்படி ‘அரசியல் கறிவேப்பிலை’யாக்கப்படும் வேதனைப்படும் நிலை தனக்கு ஏற்பட்டது என்பதை மிகுந்த விரக்தி கலந்த வருத்தத்துடன்,

‘‘இந்த நாட்டில் ஒரே ஒரு கூட்டம் அறவே தங்களது ஏகபோகத்தைக் காட்டினாலும்கூட, அவர்களுக்கு ஒரு பாரதம் தேவைப்படும்போது, வியாசர்தான் (அவர்களால் கீழ்ஜாதி என்று கூறப்பட்ட) தேவைப்பட்டார். அதே போல, இராமாயணம் தேவைப்பட்டது. வால்மீகி என்ற வேடர் தேவைப்பட்டார். அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படும்போது ஓர் அம்பேத்கர் தேவைப்படுகிறார்’’ என்றார்.

‘‘என்றாலும், அறிவுடைமை தங்களுக்குத்தான் என்று கூறுகிறார்களே’’ என மனம் நொந்து, வெந்து கூறியதை மறக்க முடியுமா?

பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் பணியில் மிகக் கடுமையாக உழைப்பை வழங்கியதன் காரணமாகத் தன் உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு உழைத்தவரைத்தான், இன்று குறைத்து மதிப்பிடத் துணிகிறார்கள். அதுதானே ஆரியத்தின் வழமை!

உலகப் புகழ் பெறுகிறார் – ஆனால், உள்ளூரில் ஆரிய இருட்டடிப்புக்கு ஆளாகினார். ஒப்புக்கு முக படாம் காட்டி, வாக்கு வங்கிக்கான ஒரு தலை என்பது போலக் காட்டினார்கள். அவரது புகழை, பெருமையை மெதுவாகப் பெயர்த்தெடுக்கத் தொடங்கி விட்டனர் என்பதை அனைவரும் புரிந்து, பாதுகாப்பு அரணைப் பலப்படுத்த முன்வரவேண்டும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை    

20.10.2025  

குறிப்பு: இதுகுறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சஞ்சய் ெஹக்டே அவர்கள் விரிவான விளக்கங்களுடன் ‘ஹிந்து’ ஆங்கில  நாளேட்டின் (17.10.2025) நடுப்பக்கத்தில் எழுதிய ஓர் அருமையான கட்டுரையின் தமிழாக்கத்தை, 3 ஆம் பக்கத்தில் படிக்கவும்.

3 ஆம் பக்கம்

 அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு பிற்போக்கு திரிபுவாதம்

– சஞ்சய் ஹெக்டே
(உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர்)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருபவர் பாபா சாகேப் அம்பேத்கர். அவரால் தான் அது உருவக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவு. ஆனால் ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆக வேண்டும் என்று துடிக்கும் சிலர் அம்பேத்கர் அதை உருவாக்கவில்லை – சர் பெனகல் நரசிங் ராவ் என்ற அதிகாரிதான் அதை உருவாக்கியவர் என்று விதண்டாவாதம் செய்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்தப் பெருமை கிடைத்ததை பொறுத்துக் கொள்வார்களா இவர்கள்? வரலாற்றைத் திரிக்கவும், திருத்தவும் புதிதாக சிலவற்றை அதில் திணிக்கவும் துடிப்பவர்கள் இவர்கள்.

உண்மையில் நடந்தது என்ன?

ஓர் ஓவியத்திற்கான வடிவத்தை திரு.பி.என்.ராவ் அமைத்துத் தந்தார். ஆனால் அதை அழகுற வரைந்து எழிலோவியமாக மாற்றியவர் அம்பேத்கர். ஒரு திறன்மிக்க பொறியாளர் போல் கட்டிடத்திற்கான மாதிரி வரைப்படத்தை மட்டுமே பி.என்.ராவ் கொடுத்தார். கல் சுமந்து, மண் சுமந்து ஒவ்வொரு அங்குலமாக சீர்படுத்தி எழில் மிக்க மாபெரும் கட்டடமாக உருவாக்கும் பணியாளர்களைப்போல் அதை முழுமையாக்கி நமக்குத் தந்தவர் அம்பேத்கர்.

அரசமைப்புச் சட்டக் குழுவில் ஓர் ஆலோசகராக இருந்தவர் பி.என்.ராவ். அவர்தான் முழுக்க முழுக்க அரசமைப்புச் சட்டத்தைத் தயாரித்ததாகவும், அம்பேத்கர் ஆங்காங்கே சில திருத்தங்களை மட்டுமே செய்ததாகவும் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது. இந்தியாவின் அடித்தளமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துவிட்டதால் ஏற்படும் காழ்ப்புணர்வுதான் இது. அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் விஷமத்தனமான முயற்சி இது.

ஒன்றிணைந்த பணி – போட்டியிட்ட பணியல்ல

அரசியலமைப்புச் சட்டம் உருவானதில் இருவருக் குமே தவிர்க்கமுடியாத பங்களிப்பு இருந்துள்ளது. அவர்கள் செயலாற்றிய விதம் மட்டுமே வெவ்வேறாக இருந்தது. திரு.பி.என்.ராவ் அரசியலமைப்புச் சட்டக் குழுவின் ஆலோசகராக 1946 ஜூலையில் நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ‘இந்திய அரசுச் சட்டம் 1935’ – தயாரிப்பில் உதவி புரிந்தவர் அவர். பதினொரு ஆண்டுகளுக்குப் பின் 1946இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் பணியில் அவருடைய ஆற்றலும், அறிவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களைத் தெரிந்து கொண்டு  தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். எனவே முதல் கட்டப் பணியில் அவர் ஓர் ஆலோசகராக மட்டுமே இருந்து தொடக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். 1947 அக்டோபரில் பி.என். ராவ் தன் அறிக்கையைச் சமர்ப்பித்தார். 243 பிரிவுகளும் 13 பட்டியல்களும் அதில் இருந்தன. அவருடைய அறிக்கை அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியை தொடக்கி வைத்தது என்று மட்டும் சொல்லலாம். அந்தக் குழுவில் அவர் உறுப்பினராக இருக்கவில்லை. ஆலோசகராக மட்டுமே இருந்தார். ஒரு சட்ட வல்லுநர் என்ற வகையில் மட்டுமே அவர் சேர்க்கப்பட்டிருந்தார். எவருக்கும் எதற்கும் அவர் பிரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

 அம்பேத்கரின் பணி மாறுபட்டிருந்தது

வரைவுக் குழுவின் தலைவர் என்ற முறையில் சட்ட வரைவாக மட்டுமே இருந்த ஆவணத்தை ஓர் அரசியல் உடன்படிக்கையாக  (covenant) மாற்றவேண்டிய பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாடு பிரிக்கப்பட்டு கொந்தளிப்பு ஏற்பட்டிருந்த காலக்கட்டம் அது. காந்தியார் கொல்லப்பட்டதால் நாடே புரட்டிப் போடப்பட்டிருந்த பரபரப்பான சூழ்நிலை. அப்படிப்பட்ட கலவரங்கள் பெருகிய ஒரு காலக்கட்டத்தில், அம்பேத்கர் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுச் சட்டப்பிரிவுகளையும், விதிகளையும் உன்னிப்பாகக் கவனித்து எழுதிக் கொண்டிருந்தார். விவரிக்க இயலாத பணிச்சுமை அது. எளிதான காரியமே அல்ல அது. எல்லோரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளும்படியும் எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையிலும் இருக்கும்படி அரசியலமைப்புச் சட்டத்தை மிகவும் கவனமாக உருவாக்கினார் அவர்.

புள்ளிகளை மட்டுமே வைத்துவிட்டுப் போனவர் பி.என். ராவ். அவற்றைக் கொண்டு கண்கவரும் கோலத்தை வரைந்தவர் அம்பேத்கர். ஓர் உருவத்திற்கேற்ற ஆளுயரப் பளிங்குக் கல்லை வைத்துவிட்டு அவர் நகர்ந்து விட்டார். வியர்வை சிந்தி, உளி பிடித்துச் செதுக்கி ஓர் அழகுச் சிலையை உருவாக்கிய சிற்பி போல் அல்லவா அம்பேத்கர், பி.என்.ராவின் வடிவத்திற்கு உயிர் கொடுத்து அரசியலமைப்புச் சட்ட உயிரோவியத்தை இந்தியக் குடியரசுக்கு அளித்தார்? பெருமைக்குரியவர் அவரல்லவா? அவரை நாம் பெருமைப்படுவதால் பி.என். ராவைச் சிறுமைப்படுத்துவதாக ஒரு நாளும் ஆகிவிடாது. இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை.

நீதியை நிலைநாட்டும் கருவியாக அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் மாற்றியமைத்தார். பி.என்.ராவ் அழகான கட்டமைப்புச் சட்டம் தந்தார். அதற்குள் அற்புதமான ஒரு சித்திரத்தைப் பொருத்தியவர் அம்பேத்கர் அல்லவா? வெறும் கல்லாக இருந்ததை அற்புதச் சிலையாகச் செதுக்கிய சிற்பியல்லவா அவர்?

பி.என்.ராவின் பங்களிப்பை அம்பேத்கர் ஒரு நாளும் மறுத்ததில்லை. பி.என்.ராவும் அது முழுக்க முழுக்க தன் சாதனைதான் என்று என்றுமே பெருமைப்பட்டுக் கொண்டதில்லை. தேவையின்றி, சம்பந்தமில்லாத சிலர் உள்நோக்கத்துடன் வரலாற்றைத் திரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்பதே உண்மை. ஓர் அரசியல் சார்ந்த உள்நோக்கம் கொண்ட விஷமம் இது.

1949 நவம்பர் 25 ஆம் நாளன்று தனக்கு அளிக்கப்பட்ட பணிப் பொறுப்பினை நிறைவு செய்து அம்பேத்கர் அரசமைப்புச் சட்டக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்:

“இந்தப் பணி முழுக்க முழுக்க என் சாதனை அல்ல. இதில் ஒரு பகுதி பி.என்.ராவுடையது. அவர் அளித்த வரைபடத்தை வைத்து நான் என் பணியை முடித்துள்ளேன். 141 நாட்கள் என்னுடன் உழைத்த வரைவுக்குழு உறுப்பினர்களுக்கும் இதில் பங்கு உண்டு. பேருதவி புரிந்த எஸ்.என்.முகர்ஜி அவர்களும் போற்றுதலுக்குரியவர்.”

அம்பேத்கரால் முழுமை பெற்ற அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னடக்கம் நிறைந்த பி.என்.ராவ் “இது என் சாதனை” என்று சொன்னதாக எந்தச் சான்றும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. “அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை” என்று பி.என்.ராவை இன்று சிலர் போற்றுவது வரலாற்றுப் பிற்போக்கான  திரிபு மட்டுமல்ல; பி.என்.ராவின் தன்னடக்கத்தையே இழிவுபடுத்தும் செயலும் ஆகும் என்றால் அது மிகையாகாது.

அரசியல் நோக்கம்:

அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்ட ரீதியான ஆவணம் மட்டுமல்ல, சமூக அறிக்கையுமாகும். தனி மனிதனின் சுயமரியாதையை அங்கீகரிக்கும் ஆவணம் அது. பல போராட்டங்களிலிருந்து உருவான ஆவணம் அது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அதிகாரப் பங்களிப்பு உறுதி செய்யப்பட்ட வேண்டும் என்று முழங்கும் சங்கு அந்த ஆவணம்! அம்பேத்கரை அதிலிருந்து பிரித்துப் போடுவது அதன் உயிரோட்டத்தையே அழிப்பதற்குச் சமமான இழிச்செயலாகும்.

அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் பரிந்துரைத்தவர் காந்தியார்தான். அவர்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டக்குழுவில் பங்குபெற்றே ஆகவேண்டும் என்பதில் காந்தியார் உறுதியாக இருந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாக்கப்படும் எந்த அரசியலமைப்புச் சட்டமும் ஏற்புடையதாகாது என்றாராம் காந்தியார். அவருடைய இந்த முன்யோசனை நற்பயன் விளைவித்தது.

1947இல் மதவெறிப் போராட்டங்களால் நாடே பிளவுப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில் இந்த அரசியலமைப்புச் சட்ட உருவாக்கப் பணியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அம்பேத்கர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் ஒரு நன்மைக்கே! அவர் தவிர்க்கப்பட்டிருந்தால் நாட்டில் மேலும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கக்கூடும். அம்பேத்கரை அந்தக் குழுவில் சேர்த்ததால் காந்தியார் அதை முன்யோசனையுடன் தவிர்த்தார் என்றே கூறலாம். இல்லாவிட்டால் குடிஅரசின் துவக்கமே பாதிக்கப்பட்டிருக்கும். அம்பேத்கரின் சிறந்த பங்களிப்பால் நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டது. அவரால் உருவாகி முடிந்த அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டபின் அமைதி ஏற்பட்டு நாடு ஒன்றுபட்டது.

பி.என்.ராவ் வடிவமைத்த சட்டத்திற்கு ஒரு தார்மீக அலங்காரம் தந்தார் அம்பேத்கர். அடிப்படை உரிமைகள் சார்ந்த சட்டப்பிரிவுகளுக்கு அவரே நன்றிக்குரியவர். பல கோட்பாடுகளும், விதிமுறைகளும் அம்பேத்கரின் அறிவால் பதிவு செய்யப்பட்டவை.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமைகள் யாவுமே அவருடைய அறிவாற்றலிலிருந்து பிறந்தவை. அவருடைய உரைகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு நிரந்தர தார்மீகத் தத்துவமாகவே மாற்றி விட்டன.

சமூகச் சமத்துவமும், பொருளாதாரச் சமத்துவமும் இல்லாவிட்டால் வெறும் அரசியல் சமத்துவத்தால் எந்தப் பயனும் இல்லை என்று எச்சரித்தவர் அம்பேத்கர்.

“எத்தனை காலம்தான் நாம் சமூக, பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை மக்களுக்கு அளிக்காமல் இருக்க முடியும்? சமூகத்திலும், பொருளாதாரத்திலும் சமத்துவம் ஏற்படுத்த நாம் தவறினால் அரசியல் ஜனநாயகத்திற்கே ஆபத்து ஏற்பட்டு விடும்” என்று எச்சரித்தார் அம்பேத்கர்.

இந்த முரண்பாடு விரைவில் நீங்க வேண்டும் என்றார் அவர். இதை நாம் நீக்கத் தவறினால் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொதித்தெழுந்து அரசியல் ஜனநாயகத்தையே தரைமட்டமாக்கி விடுவார்கள் என்றும் கூறினார் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் இன்றும் அம்பேத்கரின் மேற்கண்ட எச்சரிக்கைகள் வலிமைமிக்க தார்மீக அறிக்கைகளாக நிலைத்துள்ளன.

மறதியின் ஆபத்து

ஒவ்வொரு குடியரசும் கடந்த கால நிகழ்வுகளை மறக்காமல் இருக்க வேண்டும். மறதி என்பதே அபாயகரமான ஒன்று. அம்பேத்கருக்கு மேல் பி.என்.ராவை உயர்த்திப் பிடித்துக் காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே முரணான செயல். ஜாதி பாகுபாட்டை எதிர்க்கும் அரசியலமைப்புச் சட்டத்தையே அது சிறுமைப்படுத்தும் செயலாகி விடும். அம்பேத்கரைக் கவுரவிப்பது பி.என்.ராவை குறைத்து மதிப்பிடுவதாகி விடாது. இருவருமே குடியரசுக்காக மனசாட்சிக்கு விரோதமின்றி பணியாற்றியவர்கள்.

அரசியலமைப்புச் சட்டம் வெறும் ஒரு சட்டப் புத்தகம் போன்றதல்ல. அது தேசிய நோக்கம் உள்ள ஓர் உன்னத அறிக்கை. ஒரு சட்ட வல்லுநரின் அறிவுக் கூர்மையும், ஆற்றலும் அதற்குத் தேவைப்பட்டது. ஒரு சீர்திருத்தவாதியின் கொள்கைப் பற்றும் அதற்குத் தேவைப்பட்டது. ஒன்றை பி.என்.ராவ் அளித்தார். மற்றொன்றை அம்பேத்கர் வழங்கினார்.

அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது நேரு, பட்டேல், ராஜேந்திர பிரசாத் உட்பட அனைவரும் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பைப் போற்றிப் புகழ்ந்தனர். பி.என்.ராவின் பங்களிப்பையும் பாராட்டினர். பாரபட்சமான முறையில் எவரும் எதையும் கூறவில்லை. பி.என்.ராவ் சிறந்த ஆலோசகராக விளங்கினார். அம்பேத்கர் தார்மீக சட்டக் கட்டமைப்புக் கலைஞராக விளங்கினார். இருவருமே போற்றப்பட வேண்டியவர்கள். இருவருமே நன்றிக்குரியவர்கள். ஒரு பொறியாளர் போல் செயல்பட்டவர் பி.என்.ராவ்.  ஈடு இணையற்ற சட்டக்கலை கட்டமைப்பு நிபுணர் போல் பணியாற்றியவர் அம்பேத்கர். இதை எவரேனும் ஏற்க மறுத்தால் குடியரசையே ஏற்க மறுத்தது போலாகும்.

(திரு. சஞ்சய் ஹெக்டே அவர்கள் எழுதி ‘தி இந்து’ (17.10.2025) ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் மய்யக்கருத்து)

              நன்றி. ‘தி இந்து’ – 17.10.2025

 மொழியாக்கம் : எம்.ஆர். மனோகர்.

- விடுதலை நாளேடு,20.10.25