அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 மார்ச், 2024

ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  Published March 12, 2024, விடுதலை நாளேடு

சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்று (12-3-2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாள்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று (11-4-2024) அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப் புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றி லும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத் தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
இதன் காரணமாகத்தான், தமிழ்நாடு அரசு அமைந்த வுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டி யிருக்கிறது.

இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறை வேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்பு கிறேன்.

– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 2 செப்டம்பர், 2021

திராவிடர் கழகம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலை சென்னை அண்ணாசாலையில் மீண்டும் நிச்சயம் அமைக்கப்படும்


சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை,செப்.1- சட்டமன்றத்தில் இன்று (1.9.2021) மறைந்த திமுக தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (1.9.2021) வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் (தஞ்சாவூர் தொகுதி) நீலமேகம்  பங்கேற்று பேசியபோது, 1971ஆம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென தந்தை பெரியார் முடிவு செய்தார் . அதன் பின்னர் 1975ஆம் ஆண்டு அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் மணியம்மையார் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலையை நிறுவி குன்றக்குடி அடிகளாரால் அந்த சிலை திறந்து வைக்கப் பட்டது. அதன்பின்னர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தில் சில விஷமிகள் கலைஞர் அவர்களின் சிலையை சேதப்படுத்தினர். பின்னர் அந்த இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டா மென கலைஞர் அவர்கள் கூறிவிட்டார். எனவே, தந்தை பெரியார் நினைத்ததை அன்னை மணியம்மையார் செய்து காட்டி யதன் அடிப்படையில் மீண்டும் அண்ணா சாலையில் கலைஞரின் சிலையை நிறுவ வேண்டுமென குறிப்பிட்டார்.

முதலமைச்சர் அறிவிப்பு

முதலமைச்சர் மு.கஸ்டாலின் அதற்கு பதிலளித்து பேசிய போது குறிப்பிட்டதாவது: 

 இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்  நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற் றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்று, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்காக முறையாக அனுமதியும் பெற்று, அந்தச் சிலை வைக்கப்பட்டது.  ஆனால், அந்தச் சிலை ஏன் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது உங் களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.  நான் அந்த விஷயத்திற்குள்ளே சென்று, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் கோரிக்கை வைத்தார்

இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்புகூட, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா   கி. வீரமணி அவர்கள் என்னைச் சந்தித்து, அவரும் இந்தக் கோரிக்கையை என்னிடம் எடுத்து வைத்திருக்கிறார்.  இது பெரியார் நினைத்தது; பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது.  எனவே, மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டுமென்று அவரும் என்னிடத் திலே வற்புறுத்தியிருக்கிறார்.  நான் அப்போது சொன்னேன்; பொதுவான இடங்களிலே, போக்குவரத்திற்கு இடையூறாக இதுபோன்று சிலைகள் வைக்கப்படக்கூடாது என்று நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  எனவே, அவரிடம் அந்தச் சட்டச் சிக்கல்களை யெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ‘நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான்; எனவே, புதிதாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை’ என்று அவர் சொன்னார்.  எனவே, அதை வைக்க வேண்டுமென்று ஆசிரியர் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார். 

அதுமட்டுமல்ல; அண்ணா சாலையிலே தந்தை பெரியார் சிலை இருக்கிறது; அதேபோல, பேரறிஞர் அண்ணா சிலை இருக்கிறது; மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களுடைய சிலை இருக்கிறது.  ஏற்கெனவே, கலைஞர் அவர்க ளுடைய சிலையும் இருந்தது.  எனவே, அந்த இடத்திலே நீங்கள் அதை வைக்க வேண்டு மென்று வற்புறுத்தியிருக்கிறார்.   அண்ணா சாலையில் அதை வைப்பது குறித்து நான் சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்வது உகந்ததாக இருக்கும்.     நீதிமன்றம் பிறப்பித்தி ருக்கிற உத்தரவிற்கும் நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.  நிச்சய மாக கலைஞர் அவர்களுடைய சிலை அண்ணா சாலையிலே வைக்கப்படும் என் பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்  முதலமைச்சர்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

நீட்: தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெற கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு!

 

 சட்டமன்றத்தில் இன்று: பாராட்டத்தக்க அறிவிப்பு!

முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை, ஆக.18  நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க  ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்ட முன்வடிவு இக்கூட்டத் தொடரிலேயே கொண்டு வரப் படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று (18.8.2021) திட்டவட்டமாக அறிவித்தார்.

‘நீட் விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதற்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  அளித்த பதில் வருமாறு:

மாண்புமிகு முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சை பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்.  எனவே, அந்தப் பிரச்சினை களுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய  அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப் பெறலாம்.  ஆனால், முக்கியமான ஒன்று; ‘நீட்’ பிரச்சினை குறித்து அவர் இங்கே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார்.  

நீட் பிரச்சினையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம் இருக்கிறோம்.  அதில் எந்த மாற்றமும் கிடையாது.  அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதிமொழி தந்தோம்.  ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதுதான் நம்முடைய இலட் சியமாக இருக்கும்.  அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.    

அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இதுபற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை  அரசுக்கு வழங்கிட வேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே இராஜன் அவர்கள் தலைமையிலே ஒரு குழு அமைக்கப்பட்டு, அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார்கள்.  தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரி சீலிக்கப்பட்டு, இந்தக் கூட்டத் தொடரிலேயே அதற்குரிய சட்டமுன்வடிவு கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்து, அமர் கிறேன்.

- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

புதன், 26 பிப்ரவரி, 2020

தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ளமத்திய அரசு அலுவலகம் முன்முற்றுகைப் போராட்டம்

திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள

மத்திய அரசு அலுவலகம் முன்

முற்றுகைப் போராட்டம்;  அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும்!

திருச்சி, பிப்.22  ‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட் டம் நடைபெறும்; அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருச்சியில் நேற்று (21.2.2020) செய்தியாளர்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

மாநாடுபோல்...

திருச்சியில், அன்னை மணியம்மையார் அவர்களு டைய நூற்றாண்டு விழா அரங்கத்தில், புதுப்பிக்கப்பட்ட அந்த அரங்கத்தில், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மகளிரணி தோழியர்கள் உள்பட பல்வேறு பொறுப்பாளர்களும், மாநிலம் முழுவதும், கன்னியாகுமரி தொடங்கி திருத்தணி வரையில் எல்லா மாவட்டங் களிலிருந்தும் தோழர்கள், இருபால் தோழர்கள், பொறுப் பாளர்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 800 பேர் இந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநாடுபோல் இடமின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்களே பார்த்திருப் பீர்கள்.

அந்த அளவிற்கு சிறப்புமிக்க இந்தப் பொதுக்குழுவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 14 தீர்மானங்கள் மிகச் சிறப்பான அளவிலே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

14 தீர்மானங்கள்

அந்த 14 தீர்மானங்களும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள், அதேபோல, சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கிற ஆபத்துகள், கல்வித்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கண்ணிவெடிகள் ஆகியன குறித்தவையாக உள்ளன.  மனுதர்மம் ஆட்சிக்கு வந்து, குலக்கல்வித் திட்டம் மீண்டும் வருமோ என்கிற அச்சம் இருக்கிறது.

ஏற்கெனவே ‘நீட்' தேர்வைப் பொறுத்தவரையில், 9 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அதுபோலவே, நெக்ஸ்ட் தேர்வு என்று வாழ்நாள் முழுவதும் தேர்வு என்ற நிலை.

‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள்!''

இதற்கு முன் 11 நாள்களாக தமிழகத்தில் கன்னியா குமரியில் தொடங்கி, திருத்தணி - சென்னைவரை பல மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, கிளர்ச்சியை அறிவிப்போம் என்று சொன்ன நிலையில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. மாணவப் பிஞ்சுகளுக்கு 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிபோல'' ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு, அதனை கைவிட்டு இருக்கிறார்கள். 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை கைவிட்டு இருக்கிறார்கள். அதனை நாங்கள் வரவேற்று இருக்கிறோம். அது இப்போது அரசு ஆணையாகக் கூட வெளிவந்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கதாகும்.

அதுபோலவே, ‘நீட்' தேர்வு என்பது இருக்கிறதே, ஏற்கெனவே நாம் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். விதிவிலக்கு ஏற்கெனவே தரப்பட்டும் இருக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்வது நீதிமன்றங்களுடைய வேலையல்ல. சட்டம் சரியா? இல்லையா? என்றுதான் சொல்ல வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதுவரை கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றப்பட்டாலும், ஒத்திசைவு பட்டியல் என்கிற கன்கரண்ட் பட்டியலில்தான் இருக்கிறதே தவிர, அது ஒன்றும், மத்திய அரசினுடைய ‘எக்ஸ்குளூசிவ் ரைட் ' என்று சொல்லக்கூடிய அந்தப் பட்டியலுக்குப் போகவில்லை.

ஆகவே, அதை வைத்துக்கொண்டு, நாங்கள்தான் நிர்ணயிப்போம், மாநில அரசு சொல்வதைக் கேட்க முடியாது என்று மத்திய அரசால் சொல்ல முடியாது.

ஆனால், அதைவிட பெரிய ஆபத்து, மருத்துவ மனைகள் இல்லாமல், மெடிக்கல் எஜூகேசன் என்று சொல்லக்கூடிய மருத்துவக் கல்வி இருக்க முடியாது. பொது சுகாதாரம் என்பவையெல்லாம் கூட மாநில அரசின்கீழ்தான் இருக்கிறது.

மாநில அரசு எதிர்த்து

முறியடிக்கவேண்டும்

ஆகவே, அண்மையில் இதனை நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டு வரும்பொழுது, ஒரு பெரிய சூழ்ச்சிப் பொறி மற்றொன்று வைக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசினாலே!

பொது சுகாதாரம், மருத்துவமனைகள், மாநிலங்களில் இருப்பது, குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருப்பதை,  ஒத்திசைவு பட்டியலில் கொண்டு வந்து, தாங்களே அதை ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று ஒரு முயற்சி நடந்திருக்கிறது. அதை மாநில அரசு தெளிவாக எதிர்த்து, அதனை முறியடிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மார்ச் 23 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம்முன் முற்றுகைப் போராட்டம்

எனவேதான், இந்த ஆபத்து நாளுக்கு நாள் அதிக மாகக் கூடிய நிலை இருக்கிறது. எங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், பல்வேறு தீர் மானங்கள் தமிழகத்தின் நலன் கருதி, மனித உரிமை களைக் கருதி, சமூகநீதி பாதுகாப்பை கருதி தீர்மானங் களை நிறைவேற்றினாலும்கூட, இதில் மிக முக்கியமாக சொல்லவேண்டுமானால், குறிப்பாக 3 ஆவது தீர் மானத்தில், நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வுகளையெல்லாம் எதிர்த்து வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அந்த முற்றுகைப் போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தினாலும்கூட, ஒத்தக் கருத்துள்ளவர்களும் அந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

‘நீட்' தேர்வை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், குறிப்பாக தமிழ் நாட்டிற்கு அது பொருந்தாது; தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றவேண் டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் கொடுக்க மறுத்தாலும், இன்னொரு முறை அந்தத் தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

காரணம், அரசமைப்புச் சட்டப்படி நமக்கு அது சலுகையல்ல; அது நமக்கு உரிமை என்கிற காரணத் தினால், அதனை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், முற்றுகைப் போராட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்பது அந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

அனுமதி மறுத்தால், மீறி முற்றுகைப்

போராட்டம் நடத்தப்படும்!

அந்த முற்றுகைப் போராட்டம் வழமைப்போல், திராவிடர் கழகம் அறப்போராட்டமாகத்தான் நடத்தும். திராவிடர் கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்பட்டதில்லை.

முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொன்னால், மீறி அந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு

இன்று மாலை சமூகநீதி பாதுகாப்பு மாநாடு உழவர் சந்தையில் நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில், தோழமைக் கட்சியினர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டிற்கு அரசமைப்புச் சட்டப்படி கொடுக் கப்பட்ட, காலங்காலமாக நம்முடைய தலைவர்கள் நீதிக்கட்சி காலத்திலிருந்து போராடி பெற்ற வெற்றிகள், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் எல்லோருமே தொடர்ச்சி யாக திராவிட இயக்கம் கட்டிக் காத்த அந்த இட ஒதுக் கீட்டிற்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

உயர்ஜாதியினருக்கு

வயது வரம்பில் சலுகையா?

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படையையே குலைக்கக் கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீட்டில், உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10 சதவிகிதம் என்று உள்ளே நுழைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்த வயது விதிவிலக்கைக் கூட, உயர்ஜாதியினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கும் சலுகை வழங்கியிருப்பதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வயது வரம்பில் சலுகையோ அதே சலுகையை உயர்ஜாதியினருக்கும் வழங்குவோம் என்று சொல்லி, வேண்டுமென்றே இவர்களுடைய உரிமையை பறிக்கக்கூடிய ஆபத்தும் அண்மையில் வந்திருக்கிறது இரண்டு நாள்களுக்கு முன்பு. அதையெல்லாம்கூட கண்டித்து தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.

ஆகவே, மாலையில் நடைபெறும் மாநாட்டில், அது தெளிவாக்கப்படும்.

எனவே, ஊடக சகோதரர்களாகிய நீங்கள் மாலை யிலும் வாருங்கள். அங்கே பல முக்கியமான அறிவிப்புகள் வெளிவரும்.

‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து,

இதற்கு வரக்கூடாது

செய்தியாளர்: சட்டப்பேரவையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: முதலமைச்சர் அதை அறிவித்த வுடன், பலரும் வரவேற்றனர். நாங்கள் உள்பட! அதி லொன்றும் சந்தேகம் வேண்டாம். அந்த முயற்சி என்பது நல்ல முயற்சி என்றாலும், முழு முயற்சியாக அது அமையவேண்டும்.

‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றியும், பிறகு அதற்கு ஒப்புதல் கிடைப்பதில் எப்படி சிக்கல் வந்ததோ, அதுபோல இதற்கு சிக்கல் வரக்கூடாது.

அடுத்தபடியாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வலியுறுத்தியதுபோல, வேகவேகமாக அந்த சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம் என் பதைவிட, இன்னும் கொஞ்சம் ஆழமாக அந்த சட்டத்தை விரிவுபடுத்தியிருந்தால், நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

டெல்டா மாவட்டங்கள் என்று அய்ந்து மாவட்டங்கள் மட்டும் இருந்தால், மற்ற மாவட்டங்கள் பாலைவனமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை வருகிறது என்று சொன்னவுடன், அந்த மாவட்டத்துக் காரர்கள் அச்சப்படுகிறார்கள். அதுபோலவே, மற்ற இடங்களிலும் இந்த ஆபத்துகள் ஏற்படுகின்ற சூழல் இருக்கின்றது.

எனவேதான், முழுமையடைந்த ஒரு சட்டம் வர வேண்டும் என்று  நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில், இந்த சட்டம் இப்பொழுது நிறை வேற்றப்பட்டு இருக்கிறது சட்டமன்றத்தில். அது எப்பொழுது முழுமையாக சட்டமாக மாறும். இப்பொழுது மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்டம் வந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதற்கு ஒப்புதல் வாங்கவேண்டும். ஒப்புதல் வாங்கி, அதனை முழுமை யாக நிறைவேற்றி, அதனை செயல்படுத்தும்பொழுது, ‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து, இதற்கு வரக்கூடாது என்பதை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதியில்லை என்பதுதானே

உங்களுடைய கொள்கை

செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்; ஜாதியில்லை என்பதுதான் உங்களுடைய கொள்கை. இது முரணாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

தமிழர் தலைவர்: இதைப்பற்றி தெளிவாக நாங்கள் எழுதியிருக்கின்றோம். ஏனென்றால், ஜாதி அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்திற் காக விளம்பரம் கொடுக்கும்பொழுதே, இந்த ஜாதியில் தான் மணமகன் வேண்டும், மணமகள் வேண்டும் என்று வெளிப்படையாகப் போடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஜாதியை ஒழிப்பதற்கு சட்டம் இல்லை. தீண்டாமையைத்தான் ஒழித்திருக்கிறோம் என்கிறார்கள், அதுவும் உண்மையாக ஒழிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், சுடுகாட்டிற்குப் போவதற்குக்கூட பாதை கூட கிடையாது.

ஆகவேதான், அடையாளப்படுத்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில், Socially and  Educationally Backward Classes என்று வருகிறபொழுது, உயர்ஜாதிக் காரர்கள், மற்றவர்கள் என்று வரக்கூடிய இட ஒதுக்கீட் டைக் குறிக்கிறபொழுது, அதற்கு அடித்தளம் மிக முக்கியமானது.

யார்? யார்? பிற்படுத்தப்பட்டவர்கள், எவ்வளவு பேர் என்று தெரியும்.

ஆகவேதான், சில பேர் நினைக்கலாம், ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறார்கள், இவர்களே ஜாதி வாரியாகக் கணக்கெடுக்கவேண்டும் என்று சொல் கிறார்களே, அது முரண்பாடு உள்ளதென்று கருதலாம்.

அது தோற்றத்தில்தான் முரண்பாடே தவிர, வேறொன்றுமில்லை - அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று முதலில் போடட்டும்.

பெரியார்தான் கேட்டார், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது'' என்று 17 ஆவது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே, அதனை எடுத்துவிட்டு, ‘‘ஜாதி ஒழிக்கப் பட்டு விட்டது'' என்று போடுங்கள் என்றார்.

தீண்டாமை என்பது ஜாதியினுடைய விளைவு. ஆனால், ஜாதி இருக்கும். தீண்டாமை மட்டும் ஒழிக்கப் படவேண்டும் என்று போட்டார்கள். ஜாதி என்ற வார்த்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே, ஜாதி என்பது நடைமுறையில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களை யும் அதை வைத்துதான் அடையாளம் காண முடியும்.

பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே விருந்து சாப்பிடக்கூடிய அபாயம்

ஆகவே, இப்பொழுது அதனை விட்டுவிட்டால், ஏற்கெனவே உயர்ஜாதிக்காரர்களுக்கு, ஏழைகள் என்ற பெயரால், பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே அவர்களுடைய பங்கை முழு மையாக விருந்து சாப்பிடக்கூடிய அபாயம் ஏற் பட்டிருப்பது - இன்னும் விரிவாக்கப்படக் கூடிய பேரபாயம் அதன்மூலம் வரக்கூடும்.

ஆகவேதான், ஜாதி வாரியாகக் கணக்கெடுங்கள் என்று சொல்கிறோம். மதம் கூடாது என்றாலும், எந்த மதம் என்று போடும்பொழுது, அந்த மதத்தைப் போடுகிறார்கள் அல்லவா!

இட ஒதுக்கீடு என்பது, Socially and  Educationally Backward classes என்பதுதான்.

அதை அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார், Backward என்பது Nothing but Bundle of Caste  என்றார்.

இதை ஏற்கெனவே நாங்கள் வலியுறுத்தினோம்; சென்ற முறையே ஜாதிவாரியாகக் கணக்கெடுத்து வைத் திருக்கிறார்கள். ஆனால், அதை வெளியிடவில்லை. இந்த முறை அதனை தெளிவாக ஆக்கவேண்டும் என்பதைதான் இன்று திராவிடர் கழகப் பொதுக்குழு விலும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.

 - விடுதலை நாளேடு, 22.2.20