சனி, 19 அக்டோபர், 2019

"தமிழ் இனமான வீரமணியார் வாழ்க!'

இலக்கியத் திறனாய்வாளர்


கொடைக்கானல் காந்தி




தமிழர் தளபதி கி.வீரமணி அய்யா அவர்கள் ஆசிரியர் எனத் தமிழக அறிஞர்கள் அழைத்து மகிழும் உலகத் திராவிடர் கழகத் தலைவர், தமிழகத் தின் பகுத்தறிவு அரசியல் முன்னணித் தலைவர்.

தலைவர் 1933ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 2ஆம் நாள் பிறந்தார்; அவருடைய பெற்றோர்கள் சி.எஸ்.கிருஷ்ணசாமி, திருமதி. மீனாட்சி அம்மாள்; கடலூர் மாவட்டம் பழைய கடலூர் நகரில் பிறந்தவர்; 1958இல் திருமதி. மோகனா அவர்களை மணம் செய்து கொண்டவர். இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் பெற்றவர்கள்.

அய்யா அவர்கள் 1956ஆம் ஆண்டு அண்ணா மலை பல்கலைக் கழகத்தில் பொருளாதார முது கலைப் பட்டம் பெற்றவர், பின்னர் 1960இல் சென்னை பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றவர்.

எம்.ஏ.,பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர், பள்ளி, கல்லூரி நாள்களில் நிறைய உரைப் பரிசுகள் பெற்றவர். தொடர்ந்து இன்று வரையில் விருதுகள் பெற்றுவரும் வித்தகர் வீரமணியார்.

மியான்மரில் (பர்மா) பிப்ரவரி திங்கள் 2003ஆம் ஆண்டு , "பேரறிவாளர்" பட்டம் பெற்றவர்.

31.03.2009இல் சென்னையில் 'முரசொலி' அறக் கட்டளை சார்பாக "கலைஞர் விருது" பெற்றவர்;

26.09.2009இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் "தந்தை பெரியார் விருது" பெற்றவர்.

24.07.2011இல் அய்தராபாத் நகரில் "நீதியரசர்

பி.எஸ்.ஏ. சாமி விருது" பெற்றவர்!.

தனது ஒன்பதாவது வயதில் மேடைகளில் பேசத் தொடங்கிய வீரமணியார் இன்றும் நம் முன் முழங்கி வருவது நமது தலைமுறைக்குப் பெருமை!

அவர் இன்று திராவிடர் கழகத் தனிப் பெரும் தலைவர்; பெரியார் மணியம்மை பல்கலைக் கழக நிறுவனர், வேந்தர்; பெரியார் அறக்கட்டளைச் செயலாளர்; தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தாளாளர், உலக நாடுகள் மனிதநேய அமைப்புகளில் சிறப்பு உறுப்பினர்; பெரியார் மணியம்மை தொழில் நுட்பக் கழகத்தின் தலைவர் என கல்விக் கடலின் கரைகள் தொட்ட மேதை!

'விடுதலை', தமிழ் நாளிதழ், 'உண்மை'  தமிழ் அரை மாத இதழ், 'பெரியார் பிஞ்சு' மாத இதழ்,  "The Modern Rationalist" ஆங்கிலப் பத்திரிக்கை

ஆகியவற்றின் ஆசிரியர் இவர்!

90 நூல்களுக்கு மேல் தமிழிலும்,ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த ஏந்தல் இவர்.

பெரியார், பன்னாட்டு மய்யத்தை சிகாகோ (அமெரிக்கா), லண்டன் (இங்கிலாந்து), சிங்கப்பூர் ஆகிய இடங்களில் தொடங்கிய நிறுவனர்!

சென்னை, தஞ்சாவூர் வல்லம், சேலம், திருச்சி, சோளிங்கநல்லூர், திருவாரூர் ஆகிய நகரங்களில் இலவச மருத்துவ நிலையங்கள் தொடங்கியவர். சமநீதிக்கான வழக்குரைஞர் மன்றத்தை புதுடில் லியில் தொடங்கி அதன் காப்பாளராக இருப்பவர்!

பெண்களுக்காகத் தனியாக பெரியார் நூற்றாண்டு பெண்கள் மருந்து இயல் கல்லூரியைத் திருச்சியிலும், பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியற் கல்லூரியை வல்லத்திலும் உண்டு செய்தவர் இவர். சென்னையில் பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அகாடமி உண்டாக்கியவர்.

'விடுதலை' நாளிதழ் 1935இல் பெரியாரால் தொடங்கப் பட்டது. 1950, 60களில் வீரமணியார் பெரியாருக்குத் துணையாக 'விடுதலை' நாளிதழில் எழுதிடத் தொடங்கி, 1962-77இல் நிர்வாக ஆசிரியராக இயங்கி, 1978 முதல் அதன் ஆசிரியராக இயங்கி வருகிறார்.

முன்னர் அடியவன், காரைக்குடி அழகப்பர் கல்லூரிகள் தமிழ் மன்றப் பொதுச் செயலாளாராக இருந்த போது தலைவர் வீரமணியை அழைத்துத் தமிழ் மாநாடு நடத்திய பெருமை இங்கு புகைப் படத்துடன் நினைவில் வருகிறது. 4.4.2003இல் காரைக் குடி அழகப்பர் பல்கலைக் கழகம் வீரமணியாருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

தமிழக அரசு,"சமூக நீதிக்கான பெரியார் விருது" வழங்கியது; கனடாவில் உள்ள நியூபவுண்ட்லேண்ட் நகரத்து வடக்கு அட்லாண்டிக் கல்லூரி, சுற்றுச் சூழல், நல்வாழ்வு, வறுமை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகிய இவரது கொள்கைகளைப் போற்றி விருது வழங்கிக் கவுரவித்தது; தேசிய வளர்ச்சி முன்னேற்ற அமைப்பு புதுடில்லியில் "பாரதத் ஜோதி விருது" வழங்கியது;  திராவிடர் கழகத்தினர் இவரின் எடைக்கு எடை தங்கக் கட்டி வழங்கி மகிழ்ந்தனர். அதன் பண மதிப்பான 25 மில்லியன் ரூபாயைக் கொண்டு 'திராவிடர் கழக அறக்கட்டளை' என இவர் தொடங்கி இருக்கிறார்; மலேசியா திராவிடர் கழகம் இவருக்கு "கருத்துக் கனல்" எனும் பட்டம் வழங்கியது!

அய்யா வீரமணியார் உலக நாடுகள் பலவற்றில், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்க அய்க்கிய நாடுகள், கனடா, ருசியா, ஜப்பான், மியான்மர், இங்கிலாந்து மற்றும் சில அய்ரோப்பிய நாடுகள் என தொடர்ந்து பலமுறை சென்று கருத்தரங்கம், பொது மேடை, மாநாடு எனப் பகுத் தறிவுத் தமிழ் முழக்கம் பல செய்து வந்துள்ளார்!

நாக்பூர், சென்னை, புதுவை, அண்ணாமலை, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகங்களிலும், அழகப்பர் கல்லூரி (நூலாசிரியர் ஏற்பாட்டில்), எத்திராஜ் மகளிர் கல்லூரியிலும் என நூறு கல்விக் கூடங்களில் பல் வேறு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி உள்ளார்!

குறிப்பாக லண்டன்வெஸ்ட் மினிஸ்டர் அரண் மனையில் உள்ள கனவான்கள் பேரவையில் (House of Lords - London) ஜி.யூ. போப் நினைவுச் சொற்பொழிவை 15.01.2004இல்  நிகழ்த்தியவர்.

1984இல் நியூயார்க் நகரில் உலகத் தமிழ் சங்கம் நடத்திய பன்னாட்டு மாநாட்டில் சிறப்புச் சொற்பொழி வாற்றியது; 1985இல் டென்மார்க் நாட்டின் கோபன் ஹேகன் நகரில் உலக அமைதி கருத்தரங்கில் பேருரையாற்றியது; 1955இல் அமெரிக்க நாட்டு டொலிடோ நகரத்து உலக நாடுகள் சார்பான தமிழ்நாடு பவுன்டேசன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியது; 1996இல் விஜயவாடா நகரில் 4ஆவது உலக நாத்திகர் மாநாடு நடத்தித் தலைமையேற்று உரையாற்றியது; 1997இல் மும்பாயில் மனித நேயதத்துவ உலக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றியது என வீரமணியாரின் பகுத்தறிவுப் பாட உரைகள் பற்றி ஆயிரம் செய்திகள் உண்டு!

முத்தாய்ப்பாக "பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம்" அமைத்து அய்யா வீரமணியார் ஆற்றி வரும் தொண்டு பற்றி நிறைவாய் எண்ணி மகிழ்கிறேன்!

'பட்டாம் பூச்சி விளைவு' போல (Butterfly Effect) அய்யா வீரமணியார் பெரியார் திடலிலிருந்து எழுப்பும் சிறு அசைவுகூட உலகப் பகுத்தறிவரங்கில் நல்ல பெரும் விளைவுகளை உண்டு செய்து கொண்டு இருக்கிறது. ஆசிரியர் வாழ்க!

நன்றி: 'முள்ளும் மலரும்' செப்டம்பர் - 2019

 - விடுதலை நாளேடு 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக