இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை


 வம்பை விலைக்கு வாங்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க  ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?

WhatsApp%20Image%202023-07-25%20at%2014.54.59

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா? என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வம்பை விலைக்கு வாங்கிய அமித்ஷா

புதுடில்லியில் நடந்த அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் 38 ஆவது கூட்டத்தில் - தலைமை வகித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்!

வழமையாக ஹிந்தித் திணிப்புக்கு வாதாடுபவராகவே அவர் இருந்து வருகிறார்.

அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பது போன்று, மொழிகள் பற்றி அவர் கூறிய கருத்து அவரது ஆணவத்தைக் காட்டுகிறதா அல்லது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதா என்பது மக்களுக்கு விளங்கவில்லை!

பன்மொழிகள் பேசும் மக்களின் மொழிகளை, வெறும் உள்ளூர் மொழிகள் - “Local Languages'' என்ற சொற்றொடர்மூலம் கொச்சைப்படுத்தியுள்ளார்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளவை 22 மொழிகள் ஆகும். முன்னால் குறைவான அளவு மொழிகளே! பல அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள்மூலம் 22 ஆக அங்கீகாரம் பெற்றுள்ளன.

அதன் தலைப்பு ‘மொழிகள்'  - ‘Languages' என்பது தான். இதன்படி அனைத்து மொழிகளுமே “Local Languages'' - தேச மக்களால் பேசப்படும் தேசிய மொழிகளே!

உள்ளூர் மொழி என்ற பெயரில் அழைப்பது தவறு! மாபெரும் தவறு!

ஹிந்தி மட்டுமே தேசிய மொழி   National Language  என்பதை அரசமைப்புச் சட்டம் கூறவில்லை என்பது தெளிவு.

இந்த நிலையில், மற்ற மொழிகளை ‘உள்ளூர் மொழிகள்' - ‘லோக்கல் மொழிகள்' என்று கூறுவதே அபத்தம் அல்லவா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டு மக்களது கடுமையான கண்டனத்தை உடனடியாகத் தெரிவித்துள்ளார்.

‘‘எதிர்ப்பின்றி அனைவரும் ஹிந்தியை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் ஹிந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும்.

இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல'' என்பதை விளக்கிவிட்டு, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இரட்டை நாக்கு- போக்குபற்றியும் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார்!

130 கோடி மக்கள் தொகையில் சில ஆயிரம் பேரே....

தமிழ்மீது அளவற்ற பாச மழையை - பெருமைகள் பற்றி இங்கே பேசிவிட்டு, காரியத்தில் ஹிந்தியைத் திணிப்பது, சமஸ்கிருதத்திற்கு - அது புழக்கத்தில் இல்லாத வெகு, வெகு, வெகு சிறுபான்மை -  130 கோடி மக்கள் தொகையில் சில ஆயிரம் பேர்களே பேசும் மொழி!

பல மடங்கு அதிகத் தொகையை மொழி வளர்ச்சி என்ற சாக்கில் பார்ப்பனர்களுக்கு (மானியம்) வழங்கும் நிலை - இரட்டை வேடம் அல்லவா?

தமிழ் செம்மொழி; உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழி; மக்கள் மொழி; அத்தகுதி ஹிந்திக்கோ, சமஸ்கிருதத்திற்கோ உண்டா? என்றாலும், தமிழை இன்னமும் நீஷ பாஷை - சமஸ்கிருதம் தேவ பாஷை - சடங்கு, சம்பிரதாயம், அரசமைப்புச் சட்டத்திற்கு இந்த ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளே தேவை என்பது திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

பச்சையான பண்பாட்டுப் படையெடுப்பு அல்லாமல் வேறு என்ன?

மீண்டும் மொழிப் போர்

மீண்டும் மொழிப் போர் - மொழிப் புரட்சி வெடிக்க, ஹிந்தி வெறியர்கள் முயற்சிக்கலாமா?

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஹிந்தி பேசாத பல்வேறு மாநிலங்களிலும் அந்த மொழித் திணிப்புக்கு எதிரான அறப்போர் உரிமைப் போராக ஆவதை ஒன்றிய ஆட்சியாளர்கள் விரும்புகிறார்களா?

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்பது பழமொழி. இப்போது ஆண்டி ஊதிக் கெடுக்க வில்லை - அரசே தேவையின்றி ஊதிக் கெடுத்து, மீண்டும் மொழியை போர்க் கருவியாக்கி பார்க்கத் துடிக்கிறது!

இது தேவைதானா?

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

சென்னை
6.8.2023


திங்கள், 15 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா?

February 09, 2021 • Viduthalai

ஹிந்தி மாநிலங்களில் ஹிந்திக்கு இடமில்லை என்றால் ஏற்பார்களா?

 மொழி உரிமையைக் காக்க தமிழக அரசு முன்வரட்டும்!

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா? ஹிந்தி மாநிலங்களில் ஹிந்திக்கு இடமில்லை என்றால் ஏற்பார்களா? மொழி உரிமையைக் காக்க தமிழக அரசு முன்வரட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அரசமைப்புச் சட்டத்தை எழுதிய சட்ட கர்த்தாக் களும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் ஆழமாக விவாதித்தே பன் மதம், பன் மொழி, பல கலாச்சாரம், பல்வகை நாகரிகம், உணவு மற்றும் பழக்க வழக்கங்களின் பன்முகத்தன்மையை மனதிற்கொண்டே கல்வியை மாநிலப் பட்டியலில் வைத்தார்கள்.

கல்வியை ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்

1976 இல் (நெருக்கடி நிலை காலத்தில்) வெளிச்சத்திற்கு வராமலேயே, கல்வியை ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். அது இன்றுவரை தொடருவதோடு, மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியில் - அறிவிப்பும், ஆணையும், திருத்தமும் செய்யப்படாமலேயே - கல்வி (மத்திய அரசு பட்டியலில்) கொண்டு செல்லப்பட்ட கொடுமை ஏற்பட்டுள்ளது!

மாநில மக்களின் மொழி உரிமைதான் முதல் பலியாகும் கொடுமை! (First Casualty)

பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களின் தாய்மொழி- ஆட்சி மொழி - தமிழ்!

‘‘ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவதுபோல'' தமிழ்நாட்டில் நுழைந்த மத்திய கல்வி போர்டின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (K.V. School) தமிழ்நாட்டில் நுழைந்து - தமிழ் மண்ணில் நிலைப் பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளுக்கு மட்டுமே அப்பள்ளிகளில் அதிமுக்கியத் துவம் தருவதோடு, தமிழ்ப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதியைச் செய்து  தராமல் கைவிரிப்பது நியாயந்தானா? இது ‘‘தமிழ்நாடு'' என்ற நினைப்பே மறந்துவிட்டதா? சமஸ்கிருதம் போல் 130 கோடி மக்களில் 26,000 பேர் பேசும் மொழியா தமிழ்?

உலகம் முழுவதும் உள்ள பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களது தாய்மொழியாக, ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள மொழி செம்மொழி நம் தமிழ் மொழி அல்லவா?

இதற்கு வாய்ப்புக் கதவுகளை மூடுவது அதுவும் தமிழ் மண்ணிலேயே என்றால், நம் ரத்தம் கொதிக்க வில்லையா?

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிகளில் தமிழுக்கு இடம் இல்லை என்பது கொடுமையிலும் கொடுமை!

1938-லேயே ஹிந்தியை ஆச்சாரியார் ஆட்சி கட்டாய பாடமாக்கிய நேரத்தில், ‘‘தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக'' என்ற குரல் கொடுத்த 10 ஆயிரம் பேர் (கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட) சிறைக்குப் போய் தண்டனை அனுபவித்து, இன்று தமிழ்நாட்டு அரசின் கொள்கைத் திட்டமாக 50 ஆண்டுகளாக தமிழ், ஆங்கிலம் - இருமொழிக் கொள்கை ஆட்சியில் செயல்பட்டு வரும் மண்ணில்,  ‘‘பிச்சைக்கு நுழைந்தவர், சிம்மாசனத்தில் அமர்ந்து வீட்டுக்காரரையே வெளியே தள்ளும் கொடுமை''போல, தமிழுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் இடம் இல்லை என்று கூறுவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

திராவிடர் ஆட்சி 1967 இல் ஏற்படுவதற்கும் மூல காரணம் மொழிப் போராட்டம் அல்லவா? அதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடலாமா?

தமிழ்நாட்டுத் தமிழர்கள் - திராவிடர்கள் - இன உணர்வுடனும் தங்களது தனி அடையாளத்தை இழந்து விடக் கூடாதவர்களாகவும் இருக்கவேண்டாமா?

ஹிந்தி பேசும் மாநிலங்களில்

ஹிந்திக்கு இடமில்லை என்றால் பொறுத்துக் கொள்வார்களா?

தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றுதான் மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்த முடியும் என்று இருந்த ‘தடையில்லா சான்றினை' (No objection Certificate)  கூட மத்திய அரசு நீதிமன்றம்மூலம் நீக்கிய தன் விளைவு, தமிழுக்கே கதவடைக்கும் கொடுமை அதுவும் தமிழ் மண்ணிலேயே நீடிக்கும் கொடுமை இருக்கிறது!

உத்தரப்பிரதேசத்துப் பள்ளிகளில் ஹிந்திக்கு இட மில்லை என்றால், அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா?

இதுபற்றியெல்லாம் தமிழ்நாடு அரசு கவனஞ்செலுத்தாமல், அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்ட வர்களைப்போல, கண்டும் காணாததுபோல் - தமிழ் மொழி புறக்கணிப்பை அலட்சியமாக எடுத்துக் கொள்வது ஏற்கத்தக்கதா?

நிதிநிலை அறிக்கையில் திருக்குறளை மேற் கோள்காட்டினால் போதுமா? தமிழ், தமிழர் என்று நெக்குருகப் பேசுவது ஒருபுறம், மறுபுறம் மத்திய கல்விக் குழுமம் நடத்தும் (கே.வி.பள்ளிகளில்) பள்ளிகளில் தமிழுக்கு கதவடைப்பதும் ஏற்கத்தக்கதா?

தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தங்களது மொழி உரிமைக் கொள்கையைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.

உதவாதினி தாமதம் உடனே விழி தமிழக அரசே!

 

 கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

9.2.2021

திங்கள், 8 பிப்ரவரி, 2021

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்


மத்திய பா..அரசுக்கு தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,பிப்.8- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.2.2021) வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள் ளதாவது:

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாண வர்கள் கண்டிப்பாக சமஸ்கிருதம் படித்துதேர்ச்சி (பாஸ்அடைந்தால் மட்டுமே, 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்பிற்குச் செல்ல முடியும்” என்றுதகவல் அறியும் உரிமைச் சட் டத்தின் வாயிலாகவெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. “சமஸ் கிருதத்திற்குப் பதில்தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்க முடியாது” என்று வெளிவந்துள்ள இன்னொரு தகவல் பேரதிர்ச்சியளிக்கிறதுதமிழ்மொழியைசொந்தத் தமிழ் மண்ணிலேயே அவமதிக்கும் துணிச் சல்மத்திய பாஜ அரசுக்கு எப்படிஎங்கிருந்து வந்தது.

49 கேந்திரிய வித்யாலயா பள்ளி களிலும் தமிழ் கற்பிக்கும் ஆசிரி யர்களே இல்லை என்ற அவல நிலைஅதிமுக அரசுபாஜவிடம் கும்பிட்டுக் கூட்டணி வைத்து குழைந்து குழைந்து குற்றேவல் செய்வதால் விளைந்துள்ள விபரீதம் ஆகும்.

தமிழகத்தில் தமிழ்மொழிக்கு உரிய இடம் இல்லை-பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமனமும் இல்லை என்று மதிமயங்கிச் செயல் படும் மத்திய பாஜ அரசு-இந்திப் பேசும் மாநிலங்களில் இது போன்று “இந்தி கட்டாயம் இல்லை”; “இந்தி கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம்” என்று சொல்லி  விட முடியுமாமாணவர்கள் தமிழில் தேர்ச்சி (பாஸ்அடைந்தால் மட்டுமே, 6ஆம் வகுப்பிலிருந்து

7-ஆம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக் கப்படுவார்கள் என்று இந்தி பேசும் வட மாநிலங்களில் உத்தரவு பிறப் பித்து விட முடியுமாஆனால் அங் கெல்லாம் செய்ய சிறிதும் துணிச்சல் இல்லாத மத்திய பாஜ அரசு-“தமிழ் நாட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டோம் - தமிழாசிரியர்கள் நிய மிக்க மாட்டோம்'' என்று ஆணவ மாகக் கூறுவதற்குக் காரணம்தமிழ கமும் -தமிழர்களும் இளிச்சவாயர்கள்ஏமாந்த சோனகிரிகள் என்ற எண்ணமா?

தமிழ்நாட்டில் உள்ள 49 கேந் திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்கவும் - கட்டாயமாக கற்கவும் உத்தரவிட்டு-சமஸ்கிருதஇந்தித் திணிப்பை தமிழகத்தில் அறவே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்தமிழ்ச் செம்மொழிக்கு, “அதிமுக-பா.அரசுகள்” கை கோத்து உருவாக்கும் பேராபத்தை தமிழகம் ஒருபோதும் மறக்காதுமன்னிக்காதுதமிழகத்தின் எதிர்காலமாம் இன் றைய மாணவமாணவியர் என் றைக்கும் மன்னிக்க மாட்டார்கள் என்று எடுத்துரைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சனி, 14 மார்ச், 2020

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதா?

எல்லா 22 மொழிகளுக்கும் இந்தி - தேவநகரி எழுத்தாம்!

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதா?

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில மொழிகளிலும் பெயர் சூட்டப்படவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க. உறுப்பினர்கள்

புதுக்கரடியை விட்டுள்ளனர்!

நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வைக் கூட்டத்தில் நேற்று (13.3.2020) உ.பி.யைச் சேர்ந்த இரண்டு பா.ஜ.க. உறுப்பினர்கள் பேசுகையில்,

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தி- தேவநகரி எழுத்தில் எழுதினால், பலராலும் புரிந்து கொள்ளப்படும்'' என்ற ஒரு விநோதமான  - அதேநேரத்தில் மிகவும் ஆபத்தான மற்ற அத்தனை மொழிகளையும் இந்தி மயமாக்கி, அவற்றை மெல்லச் சாகடிக் கவும், இந்தி மொழி ஏகாதிபத்தியம் தழைத்தோங்கவும் இப்படி ஒரு புதுக்கரடியை விட்டுள்ளனர்!

யாரோ ஒரு உறுப்பினர் கருத்துதான் இது என்று எளிதாக இதை அலட் சியப்படுத்திவிட முடியாது; கூடாது. மத்திய ஆர்.எஸ்.எஸ். அரசின் திட்டத் திற்கு இது ஆழம் பார்க்கும் முன் னோட்டமாகவும்கூட இருக்கக் கூடும்!

எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர் நமது தோழர்கள்

அந்த உறுப்பினர்கள் பேசும்போதே மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செய லாளர் மானமிகு வைகோ அவர்கள் இதற்குக் கடுமையான மறுப்பையும், எதிர்ப்பையும் ஓங்கிய குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார்!

அதுமட்டுமா?

நிதிநிலை அறிக்கைபற்றிய விவா தத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பேசும்போது, ஒரு மசோதா வைப் புதிதாகக் கொண்டு வந்து நிறை வேற்றும் நிலையில், அதன் பெயர் இந்தியில்தான் - ‘‘விவாத் சீவிஸ்வாஸ்''  (Vivad se vishwas) என இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ‘‘பெயர் ஏன் வெறும் இந்தியில் மட்டும் இருக்கவேண்டும்? இது யாருக்குப் புரியும்? ஏன் அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளில் இருக்கக் கூடாது? அப்போதுதானே இச்சட்டத்தின் நோக்கம் நிறைவேற முடியும்'' என்று திருச்சி சிவா, வைகோ, தி.மு.க.வின் வில்சன் ஆகியோரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்!

2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி பாக்கிகளை - ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொகைகளையும் சேர்த்துக் கட்டிவிட்டால், அதற்கான வட்டித் தொகையையும், அபராதத் தொகையினையும் தள்ளுபடி செய் வதற்கு வழிவகுக்கும் மசோதா இம்மசோதா!

இது  அந்தந்த வட்டார, மாநில மொழிகளில் இருந்தால்தானே,  அதைப் புரிந்து அவரவர்கள் செயல்படும் வாய்ப்பு ஏற்பட முடியும்  என்னும் அவர்களது கேள்வியின் நியாயத்தை உணர்ந்து, மற்ற மொழிகளிலும் இச் சட்டம் மொழியாக்கம் செய்து பரப் பப்படும் என்ற உறுதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி, நிலவிய சூட்டைத் தணித்துள்ளார்!

நாம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்!

கரோனா வைரஸ் (Covid 19) பற்றி      கைத்தொலைப்பேசிகளில் வரும் அறிவுரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருப்பதைக் கூட அந்தந்த மாநில  மொழிகளில் ஒலிபரப்பினால்தான் அது செய்யப்படும் நோக்கம் நிறைவேறக் கூடும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் தமிழ்நாட்டில்.

சற்று அசந்தால், நம் மொழி - மற்ற மாநில மொழிகள் காணாமற்போகும் அபாயம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதால், என்றும் நம் விழிப்புணர்வு தேவை! தேவை!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.3.2020

செவ்வாய், 10 டிசம்பர், 2019

தமிழர் தலைவரின் போராட்ட அறிவிப்பு எதிரொலி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திக்கு இடமில்லை

தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, டிச.8 ""உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் 'இந்தி'யா? கிளர்ச்சி வெடிக்கும்"" என தமிழர் தலைவர் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு இந்தித் திணிப்பைக் கைவிட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட எச்சரிக்கையை அடுத்து  உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்து பின்வாங்கியுள்ளார்.

சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்பு களை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கடந்த திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். இதற்கென ஆறு லட்ச ரூபாயை தமிழக அரசு சமீபத்தில் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

ஆனால், தமிழைப் பரப்புவ தற்காகவும் ஆராய்ச்சிப் படிப்பு களுக்காகவும் துவக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படுவது சரியல்ல  சரியான செயல் அல்ல என்று திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் போராட்ட அறிக் கையை 5.12.2019 அன்று வெளியிட்டி ருந்தார். எதிர்க்கட்சியான தி.மு.கவும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக விளக்கமளித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன், மாணவர்க ளுக்குக் கூடுதலாக வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியைப் பயில்வது கட்டாயமல்ல என்றும் தெரிவித்தார்.

இதற்குப் பிறகும் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக் கப்பட்டது. மேலும் உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் முன்பாக ஆர்ப் பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை விருப்பப்பாடமாக கற்பிக்கும் முயற் சிகள் கைவிடப்படுவதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

"இந்த விவகாரம் அரசியலாக்கப் படுவதால் இந்த முடிவை எடுத்தி ருக்கிறோம். இந்திக்குப் பதிலாகத் தெலுங்கைக் கற்பிக்க முடிவு செய் திருக்கிறோம். ஏற்கெனவே முடிவு செய்தபடி பிரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு  மொழி கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும்" என  கூறினார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்.

மாணவர்கள் கேட்டதால்தான் இந்தி கற்பிக்க முடிவுசெய்தோம். ஆனால், தி.மு.க. இதைத் தேவையில்லாமல் சர்ச்சையாக்கிவிட்டது என்கிறார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோ. விஜய ராகவன். "120 மாணவர்களின் சாபம் தி.மு.கவை சும்மா விடாது" என்கிறார் அவர்.

தங்கம் தென்னரசு

கடும் கண்டனம்!

முன்னதாக இந்த விவகாரம் குறித்து தி.மு.கவைச் சேர்ந்த முன் னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, "இது தி.மு.க. தலைவருக்குக் கிடைத்த வெற்றி. அரசின் இந்த முடிவை தி.மு.க. வரவேற்கிறது. ஆளுங்கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி சுட் டிக்காட்டி அரசியல் செய்வதால்தான், அவை மாற்றப்படுகின்றன. ஆகவே இம்மாதிரி விவகாரங்களில் அரசியல் செய்வதில் தவறில்லை" என்று தெரிவித்தார்.

சென்னை தரமணியில் செயல் படும் உலகத் தமிழாராய்ச்சி நிறு வனம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞரான தவத்திரு தனிநாயகம் அடிகளின் முயற்சியால், அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்டு, 1970இல் இருந்து செயல்படத் துவங்கியது.

- விடுதலை நாளேடு 8 11 19