கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கரோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

கோவிட் - 19 வைரசும் மூடநம்பிக்கைக் கிருமிகளும்


அதிவேகமாக பரவி வரும் கரோனா தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 கோடிகளைக் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

 பாரதீய ஜனதா தலைவர்கள் தொடர்ந்து கரோனா நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து வினோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வலே மும்பையில் ஒரு நிகழ்வில் ‘கோ கரோனா கோ’ முழக்கத்தை எழுப்பினார். 

மேலும், அசாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிப்ரியா, மாட்டுக் கோமியம் மற்றும் சாணத்தை கரோனா வைரஸை குணப்படுத்த உதவக்கூடும் என்று கூறினார். அதே போல்  அகில இந்திய இந்து மகாசபா கரோனாவை  தடுக்கும் பொருட்டு டில்லியில் ஒரு  மாட்டு கோமிய விருந்தையும்  நடத்தியது.

சமீபத்தில் சில அமைப்பினர் கரோனாவுக்கு மருந்தாக கோமியத்தைக் கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச் சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கரோனா அண்டாது என்றும் கூறினர்.

கரோனா வைரசை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த மகபூப் அலி இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச்சாணத்தையும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறி உள்ளார்.

 பசு மாட்டின் கோமியத்தைக் குடித்தால் கரோனா வைரஸ் தாக்கம் குணமடையும் என்று கூறும் இந்து அமைப்புகள் பசு மாட்டுக் கோமியத்தைக் குடிக்கும் நிகழ்ச்சிகளை பல இடங்களில் நடத்தி வருகின்றன. அதேபோல, மேற்குவங்க மாநிலம் - கொல்கத்தாவில் பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் கரோனாவைக் குணப்படுத்தும் என்று மாட்டு கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தியுள்ளார்.

அவர் வழங்கிய கோமியத்தை ஒருவர் வாங்கிக் குடித்துள்ளார். கோமியம் குடித்தவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாட்டுக் கோமியம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகி நாராயண் சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க., நிர்வாகி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள கொல்கத்தா மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் சாயன்டன் பாசு, ‘நாராயண் சட்டர்ஜி, பசு கோமியம் என்று கூறியே அதனை வழங்கியுள்ளார். மக்கள் யாரையும் அவர் ஏமாற்றவில்லை. யாரையும் அவர் கட்டாயப்படுத்தி குடிக்கச் சொல்லவில்லை. பசுக் கோமியம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று இதுவரையில் நிரூபணம் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்திய வைராலஜிகல் சொசைட்டியின் டாக்டர் ஷைலேந்திர சக்சேனாபசு சிறுநீரில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன என்பதைக் காட்ட எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை.

"மேலும், பசுவின் சாணத்தைப் பயன்படுத்துவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் ஏனெனில் பசுவின்  மலம் சார்ந்த விஷயங்கள் ஒரு கரோனா வைரசைக் கொண்டிருக்கக்கூடும், இது மனிதர்களிடம் பரவலாம் என கூறி உள்ளார்.

மாட்டுச் சாணம் சோப்பைப் போலவே,  ஆல்கஹால் இல்லாத கை கழுவும் சானிடிசரை "நாட்டு மாடுகளிலிருந்து பெறப்பட்ட வடிகட்டிய மாட்டு சிறுநீருடன்" செய்து இணையத்தில் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. தற்போது இது கையிருப்பு இல்லை என கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், பிரபல இந்தி செய்தி சேனலில் யோகா குருவான ராம்தேவ், வீட்டில் மூலிகை கை கழுவும் சானிடிசர்களை உருவாக்கப் பரிந்துரைத்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களும் (சி.டி.சி) ஆல்கஹாலை  அடிப்படையாகக் கொண்ட கை சுத்திகரிப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று கூறுகின்றன.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினில் பேராசிரியர் சாலி ப்ளூம்ஃபீல்ட் கூறுகையில், ஓட்காவில் கூட 40 சதவீத  ஆல்கஹால் மட்டுமே இருப்பதால் வீட்டில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு கை சுத்திகரிப்பு மருந்துகளும் பயனற்றதாக இருக்கும் என கூறி உள்ளார்.

கடந்த வாரம், வட இந்தியாவில் அரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ், மக்கள் இறைச்சி சாப்பிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். "சைவமாக இருங்கள்" என்று அவர் 'டுவீட்' செய்துள்ளார்.

"பல்வேறு வகையான விலங்குகளின் இறைச்சியை வைத்திருப்பதன் மூலம் மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் கரோனா வைரஸ் போன்ற வைரஸ்களை உருவாக்கும் என கூறினார்.

ஆனால் கால்நடை   அமைச்சகம் இது முட்டை மற்றும் கோழி விற்பனையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாகக் கூறிய பின்னர், இந்திய அரசாங்கத்தின் உண்மைச் சரிபார்ப்பு சேவை அந்தக் கோரிக்கையை மறுத்தது.

அதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.மீன், கோழி, முட்டை ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதில்லை. கோழி மற்றும் மீன்களைத் தவிர முட்டைகளின்   புரதம் முக்கிய சத்துக்களாகும், எனவே எந்த பயமும் இல்லாமல் இதை சாப்பிடுங்கள் என கூறினார்.

உயிர்க்கொல்லி என்று அஞ்சப்படும் ஒரு நோயைப் பயன்படுத்தி எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள். தமிழ்நாட்டில் இத்தகு மூடநம்பிக்கைகள் போணியாவதில்லை - காரணம் இது பெரியார் மண் - திராவிடப் பூமி.

 

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42% 21 வயதுமுதல் 40 வயதுள்ளோர்

இளைஞர்களே எச்சரிக்கையாக இருப்பீர்!

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42 சதவிகிதம் 21 வயது முதல் 40 வயதுள்ளோர் - இளைஞர்களே எச்சரிக் கையாக இருப்பீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மத்திய நல்வாழ்வுத் துறையின்

புள்ளி விவரம்

மத்திய நல்வாழ்வுத் துறையின் கூட்டுச் செயலாளர் அகர்வால் பத்திரிகைகளிடம் கரோனா வைரஸ் (கோவிட் 19) இந்தியாவில் எப்படி, யாரை பாதிக்கிறது எந்த வயது அளவில் உள்ளவர்கள் என்பதுபற்றிய புள்ளி விவரங்களைத் தந்துள்ளார் - முதல் முறையாக!

இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும், அதேநேரத்தில் வேதனைக்கும், விசனத் திற்கும் உரியதாகவும் உள்ளது!

இந்தியாவில் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் (Confirmed Positive for Covid-19) 42 சதவிகிதத்தினர் 21 வயதிலிருந்து 40 வயதுக்கு உட் பட்டவர்களேயாவார்கள்.

என்னே கொடுமை!

கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 17 சதவிகிதம் பேர்தான் 60 வயதுக்கு மேற் பட்ட வயது வரம்பு அடுக்கில்!

அமெரிக்காவோடு இதை ஒப்பிடும் போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களில்  32 சதவிகிதம்தான் - 20 வயதுமுதல் 40 வயதுள்ளவர்கள்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை

இந்தியாவில், நம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளவர்கள் 2,904 பேர்.

75 மரணங்கள் நிகழ்ந்துள்ளன (சனிக் கிழமை நிலவரப்படி) தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 4 (இன்று காலை நிலவரப்படி).

மரணமடைந்தவர்களின் பட்டியலில் வயது பற்றிய தகவலை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை பகுத்து அளிக்கவில்லை.

20 வயதுக்குக் கீழே கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 9 ஆகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆலோசனை அமைப்பு உடனடியாக வேகமான முறையில் Antibody  மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அடிப்படையில் வெளியிலிருந்து வந்தவர்களில் Evacuee Centres செய்யத் தொடங்கவேண்டும்.

இதன் பரிசோதனை முடிவு (Results) 15, 30 மணித் துளிகளில் தெரிந்துவிடும் என்றும் கூறியுள்ளது மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை.

அதிர்ச்சி தரும் தகவல்!

இப்போதுள்ள கரோனா நோயாளிகளில் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 40 வய துள்ள வர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள்.

இளைஞர்களே,

வாலிபர்களே,

மிகவும் கவனமாக இதனைத் தடுக்க ஒத்துழையுங்கள்!

வயதானவர்களுக்குத்தான் வரும், நம்மை ஒன்றும் செய்யாது என்று நினைத்து ஊரடங்கை மீறி, வெளியே வருவது, இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி ‘ஜாலி ரைட்' - Adventure செய்யும் வீண் விபரீத வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

கரோனாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர். சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். உங்களை நம்பியுள்ள உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் இவர் களைப்பற்றியெல்லாம் ஒருகணம் சிந்தி யுங்கள் - தன்னைக் காத்து, தான் சார்ந்த குடும்பத்தையும், சமூகத்தையும் கரோ னாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியம் வேண்டாம்!

வாழ வேண்டியவர்கள் நீங்கள்!

இளைஞர்கள் -வாலிபர்கள் - சாதிக்க வேண்டியவர்கள் நீங்கள் என்பதை மறவாதீர் - பொறுப்போடு நடந்துகொள் ளுங்கள்!

தனிமை - தூய்மை -  கட்டுப்பாடு கடைபிடியுங்கள்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.4.2020

சனி, 4 ஏப்ரல், 2020

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது!

பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறுக!

உடனடித் திட்டம்: மருத்துவச் சேவைகள் - பொருளாதாரத் திட்டங்கள்பற்றி

ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம்!

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது; பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்றும், மருத்துவச் சேவைகள், பொருளாதாரத் திட்டங்கள்பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம் என்றும் மத்திய அரசுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று

இன்றைய நிலவரத்தில் நாடெங்கும் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தபாடில்லை; கூடுதலாகி வருகிறது. ஒரு பகுதியினர் குணமாகி வீடு திரும்பும் செய்திதான் இந்தப் பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று ஆகும்.

பிரதமரின் உரை - ஏமாற்றத்தையே தந்தது!

நேற்று (3.4.2020) பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றப் போகிறார் என்ற செய்தி வந்த வுடன், மாநில முதலமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள்வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தகட்ட ஆக்கப்பூர்வ திட்டங்களின் - சிகிச்சைக்கு மருத்துவமனைகளின் விரிவாக்கம் - அதற் கேற்ப மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி உதவி, மத்திய அரசே ஆங்காங்கு தனது சுகாதாரத் துறை, அறிவியல் ஆய்வுத் துறை, தொழில்நுட்பத்துடன், நிதித்துறை மூலம் மக்களின் அல்லல் அவதிகளைப் போக்கும் வகையில் பல புதிய தெம்பூட்டும் அறிவிப்புகளை அறிவிப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏமாற்றத்தையே தந்தது.

நாட்டில் இருக்கும் 1.2 கோடி சிறு வியாபாரிகளின் மளிகைக் கடைகள் போன்றவற்றில், சுமார் ஒரு கோடி கடைகள் மூடப்பட்டுள்ளன. - ஊரடங்கு காரணமாக.

ஊரடங்கு தேவைதான்- எனினும், இப்படி அனைத்தும் மூடப்பட்டதால், வேலை கிட்டாது ஏற்படும் பொருளாதார இழப்பினால் பாதிக்கப்படுபவர்கள் சிறு தொழில் நடத்து பவர்கள்தான்.

அவர்களுக்குப் போதிய மாற்று புது நம்பிக்கை தரும் திட்டம் இல்லையே என்ற ஏமாற்றம் உள்ளது.

மாநில அரசுக்கு

நிதி வழங்குவதில்

முன்னுரிமை முக்கியம்!

மாநில அரசுகள்தான் உண்மையில் மக்களிடம் நேரடித் தொடர்புடைய அரசுகள்; மத்திய அரசின் திட்டங்கள் எவையாயினும் மாநில அரசின்மூலம்தான் செயல்படுத்த முடியும் என்பது யதார்த்தம். எனவே, மாநில அரசுகளுக்கு நிதியை வழங்குவதில் முன்னுரிமை காட்டுதல் முக்கியம்.

பழைய பாக்கி - நிலுவைகளை அளிப்பது, மதிப்புக் கூட்டு வரி சில மாதங்கள் தள்ளல், ஜி.எஸ்.டி. பாக்கி, கூடுதலாக கரோனா தடுப்பு - ஒழிப்பு தற்காலிக மருத்துவமனைகள் - சோதனை மய்யங்கள் உருவாக்குவது - மருத்துவ ஓய்வாளர்களை மீண்டும் பணியமர்த்தி, அடுத்த கட்டத்திற்குத் தயார் நிலை போன்ற திட்டங்கள் ‘போர்க்கால அடிப்படை' என்று உச்சரிக்கையில் நிதி ஆதாரங்களைப்பற்றி அறிவிப்பு வந்திருந்தால், புது நம்பிக்கையை அது பெருக்கியிருக்கும். வெறும் ஒலி, ஒளிக்காட்சிகளின்மூலம் நாடே ஒன்றுபட் டுள்ளது என்பதை நாளை (5.4.2020) 9

மணிக்கு 9  நிமிடங்கள் இருட்டில் ஒளி பாய்ச்சுதல் என்பது ஒரு நல்ல அடையாள மாகக் கூட இருக்கலாம். ஆனால், இது அறிவியல்பூர்வமானது அல்ல. ஆக்கப் பூர்வ எதிர்ப்பார்ப்புகளை அது எந்த அளவில் நிறைவேற்ற உதவும் என்ற கேள்வி பல பக்கங்களிலிருந்து கிளம்புகிறது!

உடனடித் திட்டங்கள் அவசியம்!

பொருளாதார நிபுணர்கள், மருத்துவத் துறை பேரறிஞர்கள், சிறந்த சிந்தனை யாளர்கள் - இவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைத்து-  உடனடித் திட்டம், நிவாரணம், தடுப்புக்கான சிகிச் சைகள் - கூடுதல் மருத்துவ சேவையாளர் கள் அணி ஆயத்தம் - நீண்டகால அடுத்த கட்ட பொருளாதார சிக்கல் தீர்வு - விவ சாயிகளின் வாழ்வாதாரம் - வேலை வாய்ப்பு - விலைவாசி உயர்வு - நிதி நிலைமைபற்றி ஆக்கபூர்வ ஆலோசனை களை மக்களுக்குத் அறிவிப்பதே அவசரத் தேவையாகும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.4.2020


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கவேண்டிய கடமையின் உச்சம்

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்!

சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

கரோனாவின் கொடூரம் இன்னும் சில வாரங்களில் உச்சக்கட்டத்திற்குச் செல்லக் கூடும்; ஆதலால், மக்கள் மிகவும் எச்சரிக் கையாக இந்த கரோனா தொற்று பரவாம லிருக்க மிகமிக, மிகப் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

அது யார் கையில் இருக்கிறது? நம் கையில், நம் முடிவில், நம் உறுதி யில்தான் தோழர்களே இருக்கிறது. எளிய வழி - மருந்துச் செலவுகூட இல்லை!

நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளு வதைக் கடைப்பிடிப்பதன்மூலம் நம்மையும் காப்பாற்றி, அடுத்த (சமுதாயத்து) மனிதர் களையும் காப்பாற்றும் பெருங்கடமையாற்று கிறோம்.

நன்றிக் கடனுக்குரியவர்கள்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத் துவ தொண்டறச் செம்மல்கள், இதனை ஒருமுகப்படுத்தும் ஆட்சியாளர்கள்  - பிரதமர் முதல் முதல்வர்கள், ஆளுவோர், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாராளமாக வாரி வழங்கிடும் நாடாளுமன்ற உறுப் பினர்கள், தனியார் நிறுவனங்கள் அனை வருமே சமூகத்தின் நன்றிக் கடனுக்குரிய வர்கள்.

டில்லியிலும் மற்ற இடங்களிலும் மருத் துவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்த வர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக் குரிய ஒன்று. அவர்களுக்குரிய மருத்து வமும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டி யது மிகவும் அவசியமாகும். நாட்டு மக்களின் நல்லெண்ணம் அவர்களின்பால் நிச்சயம் இருக்கிறது. அவர்கள் குணம் பெறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

மிகவும் நெருக்கடியான, மனவேதனை யும், பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏற்படும் மக்களின் மன அழுத்தமும் கூடும் இவ்வேளையில், கட்சி, ஜாதி, மதம், குரோத உணர்ச்சி, அரசியல் தூண்டிலைத் தூக்கி குட்டையைக் குழப்பி சிறு மீன், பெருமீன் கிடைக்காதா என்றெல்லாம் பார்க்கும் கயமை இவைகளுக்கு இடமில்லை.

அரசியல் ஆதாயம் தேட நினைப்பது

மிகப்பெரிய சிறுமைக்குணம்!

எவர் எந்த அளவு உதவினாலும், வாழ்த்தவேண்டும்; வரவேற்கவேண்டும். எல்லோரும் ‘‘அம்பானி, கிருபானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ அல்லது பெருமுதலாளிகளோ அல்ல. (அவர்களில் பலர் மக்கள் பணத்தை பல ஆயிரம் கடன் வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டு, வெளி நாட்டில் உல்லாச வாழ்வு வாழ்கின்ற சமுதாய அட்டைகள்). பிரதமர் நிதிக்கோ, முதல்வர் நிதிக்கோ, அவரவர் முடிந்த அளவுக்கு உதவுகிறார்கள்; இதை விமர்சனம் செய்வதோ, கேள்வி கேட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதோ மிகப்பெரிய சிறுமைக்குணம்.

பா.ஜ.க., தி.மு.க.வை நோக்கி - நன்கொடை பற்றி எழுப்பும் கேள்வி மிகவும் கேவலமான - சுமூக சூழ்நிலையைக் கெடுப்பதாகும்.

ஒருவருக்கொருவர் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு இதுவா நேரம்?

மக்கள் அறிவார்கள், யார் உண்மையாக அழுகிறார்கள் என்பதை!

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு!

தமிழக அரசைப் பொறுத்தவரை அவர்கள் குறிப்பாக மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை முதலியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பலரையும் அழைத்து கருத்துரைகள் - யோசனைகள் கேட்டு, போர்க் காலத்தில் ஏற்படும் கூட்டுப் பொறுப்பாக அனை வரையும் ஈடுபடுத்தினால், மிகப்பெரிய ஒருமையும், சீர்மையும் தழைத்தோங்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்.

முதலமைச்சர் இது மருத்துவர்கள் பிரச்சினை என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. என்றாலும், குறையோ, விமர்சனமோ செய்யத் தேவையில்லை.

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்!

1. ஓய்வு பெற்ற அதிலும் கடந்த ஆண்டு, இவ்வாண்டு ஓய்வு பெற்ற - அனுபவம் மிகுந்த - மருத்துவர்கள் மீண்டும் தற்காலிகமாகப் பணியில் சேர ஒரு பட்டியல் தயாரித்து தயார் நிலையில் - இரண்டாம் கட்டப் பணி - தற்காலிக மருத்துவ சோதனை நிலையில், மருத்துவ உதவிப் பணிகள் செய்வதற்கு.

2. அதுபோலவே தொடர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கு ஓய்வும், புத்தாக்க சக்தியும் தேவை என்பதால், அதனை மாற்றிவிட இத்தகைய முயற்சிகள் தேவை.

3. நிதி ஆதாரத்திற்கு மத்திய அரசு, மாநில அரசுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி., பங்கு, மானிய பாக்கி, மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிதிகள் பாக்கி இவற்றை உடனே மத்திய அரசு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு அனைத்து எம்.பி.,க்கள்மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டியது அவசர, அவசியமாகும்!

ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

இப்போது அனைவரின் கவனமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டும், தூய்மைப்படுத்திக் கொண்டும் (அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும்; 20 நொடிகள் சோப்புப் போட்டுக் கழுவுதல், தும்மல் - இருமலின்போது மற்றவர்மீது படாது கைக்குட்டையால், காகிதத்தால் முகத்தை மூடுதல், முகக்கவசம், ஒரு மீட்டர் தள்ளி நிற்றல் - முதியவர்கள் முறைப்படி மருந்து களைத் தவறாது எடுத்துக் கொள்ளுதல் - ஆரோக்கிய எளிய உணவு) வாழ்ந்து ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

சமூகத்தைப் பாதுகாக்கும்

காவல் அரண்கள்

காவல்துறையின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. காவல்துறையினருக்காக அல்ல ஊரடங்கு ஆணை - நமக்காக - நம் உயிர் காக்க. அவர்கள் நம் உயிர் காக்கும் தோழர்கள் - கால நேரம் பாராது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர் களும், காவல்துறையினரும், துப்புரவுத் தொழிலாளர்கள் என்ற தன்னல மறுப் பாளர்களும் நம் சமூகத்தைப் பாதுகாக்கும் காவல் அரண்கள்.

அவர்களது தொண்டுக்குத் தலை தாழ்த்தி வணங்கி நன்றி கூறுவோம்!

உங்கள் மனச்சாட்சி,

உங்களை மன்னிக்காது!

இந்நேரத்தில் சிலர் வாணிபத்தில் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்க உதவும் உணவுப் பண்டங்கள், காய்கறிகளில் விலையேற்றி லாபம் தேட நினைக்காதீர்கள். இதைவிடப் பெரிய சமூக விரோதச் செயல் வேறில்லை. யார் மன்னித்தாலும், உங்கள் மனச்சாட்சி, உங்களை மன்னிக்காது!

கொள்முதல் கூடுதலானால் அரசிடம் உதவி கேளுங்கள் - தன்னார்வ நிறு வனங்களின் உதவி கேளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு பசி தீர ஒத்துழையுங்கள். ‘போதும்' என்ற ஒரு சொல் அந்தப் பசிக்குத் தரும் உணவுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மை - பெருந்தன்மை!

இந்நேரம் நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது.

சமூகத்தை - உலகத்தைக் காக்க

உன்னதமான கடமையாற்ற வாரீர்!

கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத் தோடு - ஒத்தறிவு (empathy) - ‘பிறிதின் நோய் தன் நோய்போல்' கருதி, பெருந்தன் மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

ஆழ்ந்து சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

வீட்டுக்குள் இருங்கள்!

சட்டத்தை மதிக்காத சமூகம் பாழ்பட்ட சமூகம்.

தந்தை பெரியார் சொன்னார், ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்று. ஆழ்ந்து சிந்தி யுங்கள்! செயல்படுங்கள்! வீட்டுக்குள் இருங்கள்! அப்போதுதான் கரோனா கேட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற முடியும்!

மறவாதீர், ஒத்துழைப்பீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.4.2020

புதன், 1 ஏப்ரல், 2020

கரோனாவைத் தடுக்க இந்து அறநிலையத் துறை யாகம் நடத்தச் சொல்வதா?

மக்களைத் தவறான சிந்தனைக்கு இழுத்துச் செல்வது பேராபத்து - தடுத்து நிறுத்தவேண்டும்!

கரோனாவைத் தடுக்க இந்து அற நிலையத் துறை யாகம் நடத்தச் சொல்வதா? மக்களைத் தவறான சிந்தனைக்கு இழுத்துச் செல்வது பேராபத்து - தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கரோனா வைரசின் கோரத் தாண்டவம்!

‘சந்தடி சாக்கில் கந்தப் பொடித் தூவுதல்' என்ற பழமொழியும், ‘ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது' என்ற முதுமொழியும் நாட்டு மக்கள் அறிந்த ஒன்று.

ஏற்கெனவே ‘விடுதலை' தலையங்கம் ஒன்றில், ‘வீடு பற்றி எரியும்போது, சுருட் டுக்கு நெருப்புக் கேட்கும் (ஈனச்) செயல்' என்ற பழமொழியையும் நினைவூட்டியிருந் தோம்!

கரோனா என்ற கொடூரம் உலகையே ஆட்டிப் படைக்கிறது. 199 நாடுகளில் அதன் கோரத் தொற்றுத் தாண்டவம் குறைந்த பாடில்லை.

எல்லா மதக் கடவுளரும் (அப்படி ஒருவர் இருந்தால்) கரோனாவுக்கு அஞ்சி அவரவர் கூடாரத்தை மூடச் சொல்லி, அந்தந்த மத பக்தர்களிடம் கூறி யிருக்கிறார்கள் போலும்!

கரோனாவை ஒழிக்கச்

சிறப்பு பூஜையா?

சர்வசக்தி, சர்வ வியாபி, சர்வ தயாபரன் என்று கடவுளுக்குச் சொல்லப்படும் மனிதனுக்கு மேற்பட்ட சக்திகள் கற்பனை என்பதும், கடவுள்களும், கோவில்களும், மசூதிகளும், மாதா கோவில்களும்கூட சமூகப் பரவலால் கரோனா தொற்று ஏற்படுகிறது என்பதால், மூடப்பட்டுள்ள நிலையில்,

இங்குள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை, அதன் நோக்கம் வெறும் தணிக்கை (Audit) செய்வதுதான் என்று சட்டத்தின் கர்த்தாக்கள் கூறியதையே புறந்தள்ளிவிட்டு, மதச்சார்பற்ற அரசு என்று பிரகடனப்படுத்தப்பட்ட அரசமைப் புச் சட்டப்படி நடக்கவேண்டிய அரசின் துறை, கரோனாவை ஒழிக்க சிறப்பு பூஜை நடத்த ஆணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி உண்மை தான் என்றால், வன்மையாகக் கண்டிக் கின்றோம். பார்ப்பனர்களுக்கு வருமானத் திற்கு வழி என்பதைத் தவிர, மூடநம் பிக்கைகளைப் பரப்பும் முட்டாள்தனக் கேலிக் கூத்தின் வெளிச்சம் இது என்பதைத் தவிர வேறு என்ன?

மக்கள் வரிப் பணம் அல்லவா அரசுத் துறைமூலம் செலவழிக்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதம்!

பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதத்தில், ‘‘கரோனா தடுப்பு நிதிக்கு மத அறக்கட்டளைகள் (கோவில் வருமானங்களிலிருந்து) வரும் வருவாயில் 80 விழுக்காடு எடுத்துக்கொண்டு மருத்து வக் கருவிகள், மருத்துவமனைகள் கட்டப் பயன்படுத்துங்கள்'' என்று கேட்கும்போது, இப்படி ஒரு பார்ப்பனப் புதுச் சுரண்டலா - யாகம் என்பதன்மூலம்?

யாகத்தினால் குணப்படுத்த முடியும் என்றால், நிரூபிக்கட்டும். மருத்துவம னைக்குப் போகாமலேயே வெறும் மந்திர உச்சாடனம்மூலம், பிரசாதம்மூலம் குணப் படுத்திடலாம் என்றால், உலகம் நம்மைப் பார்த்து எப்படிச் சிரிக்கும்? யோசனை வேண்டாமா?

அரசமைப்புச் சட்டத்தின்

51-ஏ(எச்) பிரிவு

‘‘அறிவியல் மனப்பான்மையை ஒவ் வொரு குடிமகனுக்கும் பரப்பவேண்டியது அடிப்படைக் கடமை'' என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவை இப்படித்தான் மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதா?

மதத் தலைவர்களை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சாமியார்களை அழைத்துப் பிரதமர் மோடி கலப்பதற்கு முன்னே, விஞ்ஞானி களோடு காணொலிமூலமாவது யோசனை கேட்டிருந்தால், பாராட்டலாம்.

இறைவனின் திருவிளையாடலாம் - கர்ம வினைப் பயனாம்!

இங்குள்ள அதிபுத்திசாலி அமைச்சர் ஒருவர், ‘இறைவனின் திருவிளையாடல்' என்று ஊதுகிறார். இது சரி என்றால், மத்திய - மாநில அரசுகளும், பிரதமரும், முதல மைச்சரும் கரோனா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது கடவுள் விரோதச் செயல் அல்லவா!

புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநர் ஓர் அய்.பி.எஸ்., ‘கர்மவினைப் பயன்' என்று கூறி, தனது அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்.

‘கர்ம வினைப்பயன்' என்று கைகட்டி, வாய் பொத்தி இருக்கச் சொல்லுவது ஒன்றே போதும் அல்லவா? இதைவிட பொறுப்பற்ற பேச்சுகள் வேறு உண்டா?

இன்னும் சிலர், ‘‘கோதுமை மாவு அகல் விளக்கு ஏற்றினால், அந்த வெளிச்சத்தில் கரோனா வைரஸ் சாவும்'' என்றும், மற்ற சிலர், ‘‘பசுமாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா கிருமிகள் சாகும்'' என்றும் சொல்கின்றனர்.

பிரபல இந்தி நடிகரின் உளறல்!

பிரபல இந்தி நடிகர் ஒருவர், பிரதமர் கூறியதுபோல், ஓங்கிக் கைதட்டினால், ‘‘அமாவாசையில், மணியடித்தால் கரோனா வைரஸ் ஓடிவிடும்'' என்று உளறிக் கொட்டி, நாடே நகைத்தபின், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார். ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு நாள்தான் முட்டாள்தினம்; இதுபோன்ற முட்டாள்தனம் வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்!

தடுப்பு முறையும் - அறிவியலுமே

உலகைக் காக்கும்!

இப்போது அவசரத் தேவை தனிமைப் படுத்திக் கொள்ளல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை பலமுறை கழுவுதல், ஒரு மீட்டர் தூரம் இடைவெளி - தும்மல், இருமல் வந்தால், கைக்குட்டையை வைத்து மற்றவர்மீது பரவாமல் தடுத்தல், அறிகுறி சந்தேகம் வந்தால், தனிமையைத் தாண்டி, மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளல் போன்ற எல்லா முறைகளையும் தாண்டி, ‘‘மூடநம்பிக்கை வைரஸ்'' நம் மூளைக்குள் புகுந்து, நிரந்தர மூளை கெட்ட முட்டாள்தனத்தின் மூலதனமாக்கிவிடக் கூடாது, எச்சரிக்கை!

அறிவியல்படி நடந்துகொள்ளவேண் டும் என்று ஒரு பக்கத்தில் அரசே அறிவித்துக்கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கத்தில்  மூடத்தனத்தின்பக்கம் ஓர் அரசுத் துறையே, மக்களை இழுத்துச் செல்லுவது அரசுக்கு எதிரான - ஆபத்தான நடவடிக்கை அல்லவா! யாகம்தான் நடக் கிறதே, நாம் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டலாமா? உடனே இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்!

தடுப்பு முறையும், அறிவியலும் அதன் வெற்றியுமே உலகைக் காக்கும் என்பது அனுபவப் பாடம்!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.4.2020

புதன், 25 மார்ச், 2020

‘‘ஏப்ரல் 14 ஆம் தேதிவரை மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும்'' என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அரசின் முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததால் உயிரிழப்புகள் மிகக் குறைவு!

பல்கலைக் கழகங்களில் மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு

ஆய்வினை ஊக்கப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்!

ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அனை வரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற  பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; இத்தாலி போன்ற நாடுகளில் அரசின் உத்த ரவைக் கடைப்பிடிக்காததால் சீனாவை மிஞ்சும் அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன; ஆனால், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்த தால் மிகக் குறைவான உயிரிழப்பு களே ஏற்பட்டிருக்கின்றன  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமரின் 21  நாள்கள் வீட்டுக்குள் இருப் பது மிக அவசியம் என்பதை வரவேற்கிறோம்.

மருத்துவர்களின் அறிவுரை - உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற அமைப்பு கள் இதுபோல் தீவிரமான அவசர நடவடிக் கைகள் மிகவும் தேவை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மருத்துவர்களும் - அரசுகளும் சொன்னதைக் கேட்காததால்....

இத்தாலி போன்ற நாடுகளில் மக்களில் பலர் முதலில் மருத்துவர்களும், அந்நாட்டு அரசு களும் சொன்னதைக் கேட்டு நடக்காமல், கூட்டம் கூட்டமாகக் கூடியதால் சீனாவையும் மிஞ்சும் அளவுக்குக் கரோனா நோய் தாக்க மும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தடுப்பு முன்னெச்சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால்,

மிகவும் குறைவான இழப்புகளே!

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் தொடக்கத்திலேயே தடுப்பு முன்னெச் சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால், மிகவும் குறைவான இழப்புகளே ஏற்பட்டு முற்றுப் புள்ளியை நோக்கி நடைபோடுகின்றன.

நமது நாடு பெரும் அளவுக்கு 130 கோடி மக்களைக் கொண்ட நாடு. வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ள மக்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து வாழும் நிலையில், 21 நாள்கள் வீட்டுக்குள் முடங்கும் தேவையான ஆணை யைப் பிறப்பித்த பிரதமர், ஏழைகளின் அன்றாட உணவு மற்றும் வசதிகள்பற்றியும் அந்த உரையில் அறிவித்திருந்தால், அதனை செயல்படுத்துவதற்கு அச்சத்தை ஏற்படுத்தி யிருக்காது.

காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்!

இதற்கு உடனடியாக மத்திய அரசு எவ் வகையில் உதவுகிறது, ஏழை - எளிய மக் களுக்கு நிம்மதியாக முடங்கிக் கிடக்க என்னென்ன முறையில் உதவிகள் - உணவு வழங்கல் முதலியன கிடைக்கும் என்பதையும் காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்.

மக்கள் மீண்டும் கூடாமல் இருக்க நகரும் உணவு விடுதிகள்மூலம் விநியோகம் செய்யும் ஒரு ஏற்பாட்டைச் செய்வது அவசர அவசியம்!

அதுபோலவே, வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யும் காய்கறி, அரிசி முதலிய அத்தியா வசியப் பொருள்கள் தரும் திட்டமும்கூடச் செய்தால் நலம்!

ராணுவத்தின்  DRDO (Defence Research Development Organisation) போன்றவற்றி னையும் முழு வீச்சில் பயன்படுத்தி, புதிய உதவிக் கருவிகளையோ, மருந்தினையோகூட கண்டுபிடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும்

டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்த்து, நாடு தழுவிய அளவில் - கிராமங்களிலும்கூட மருத்துவ வசதிகள் கிடைக்க நீண்ட காலத் திட்டத்தையும், மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும். ‘நீட்', ‘நெக்ஸ்ட்' என்ற இந்தத் தேர்வு முறைகள் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தராததால், துணிவுடன் அவற்றை ரத்து செய்து, பழைய அந்தந்த மாநில தேர்வு முறையைப் புகுத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

பல பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக் கென நிதி ஒதுக்கீடு செய்து, மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு ஆய்வினை ஊக்கப்படுத்திட உதவவேண்டும்!

சோதனைகளிலிருந்துதான் படிப்பினையைப் பெற முடியும்!

எந்த சோதனைகளிலிருந்தும் படிப்பினைப் பெற்று, அதற்கேற்ப வீண் பிடிவாதமின்றி எது வெற்றிகரமானதோ அதனை அமல்படுத்த சிறிதும் கூச்சநாச்சமே கொள்ளக்கூடாது!

மத்திய - மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.3.2020


சனி, 21 மார்ச், 2020

கடவுள் - மதக்கேடு!

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உல கையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள் ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற் போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 276 பேரைப் பாதித்துள்ளது.

கரோனாவால் சீனா வுக்கு அடுத்து கிழக்கு ஆசி யாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென் கொரியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் கரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச் சையளிக்கப்பட்டு வருகின் றனர். இந்தச் சூழலில் தென் கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த் தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதி காரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்ப தற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப் போது அங்கு வந்திருந்த வர்களுக்கு ‘புனித நீர்' வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனை வருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அந்த ‘புனிதநீரைக்' குடித்தவர் களில் 46 பேருக்கும் கரோனா இருப்பது தற் போது கண்டறியப்பட்டுள் ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பல ருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், "இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டு களுக்கும் நான்தான் பொறுப்பு" எனத் தெரிவித் துள்ளார்

இந்தோனேசிய அதிபர் - "பக்கத்து நாடுகளில் எல் லாம் 'கரோனா' பரவிய நிலையில் நம் நாட்டில் மட்டும் பரவாமைக்குக் கார ணம் கடவுளின் கருணையே கருணை" என்று பிரார்த்த னைக் கூட்டத்தில் கூறிய மறுநாளே, மூவர் கரோ னாவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்தோனேசிய சுகாதாரத்துறை அறிவித்தது தெரிந்ததே!

மதமும் கட வுளும் மக்களுக்கு கேடு என்பதற்கு இன்னும் ஆதார மும் தேவையோ!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 21.3.20

வெள்ளி, 20 மார்ச், 2020

கடவுள்கள் விளம்பர 'மாடல்களா?'

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான ஜம்மு வைஸ்ணவி தேவி சிலைக் கோவில், உஜ்ஜைன் காலபைரவர் சிலை,உத்தராகன் ஜுவாலா தேவி சிலை. கொல்கத்தா காளிகா தேவிசிலை, மோடிக்கு மிகவும் பிடித்த வாரணாசி சங்கடமோர்ச்சன் கோவில்அனுமான் சிலை. , இந்தூர் பைரவி தேவி சிலை, பூனே தகுடு சேட் கோவில் பிள்ளையார் சிலை, மகாகாலேஷ்வர் கோவில் லிங்கம், மற்றும் சோம்புரா சிவலிங்க சிலை என அனைத்திற்கும் முகத்தில் முகக்கவசம் அணிவித்து விட்டார்கள். இந்த அனைத்து கோவில் சிலைகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாம். இக்கோவில்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.  சிலைகளுக்கு முகக்கவசம் குறித்து அந்த அந்த கோவில் நிர்வாகங்கள் கூறியதாவது: மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவே இந்த  சிலைகளுக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். பரவாயில்லை முதல் முதலாக இந்த சிலை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும் - சாமி சிலைகளே சினிமா நட்சத்திரங்களின் பாணியில் விளம்பர மாடலுக்குப்  பயன்படுகிறதே - இதுதான் சாமிகளின் யோக்கியதைத்  தெரிந்து கொள்வீர்.

- விடுதலை நாளேடு, 20.3.20