முரசொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முரசொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 டிசம்பர், 2023

அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

பிற இதழிலிருந்து - அயோத்திதாசரைப் போற்றிய திராவிட இயக்கம்!

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும், சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடி அயோத்திதாசப் பண்டிதர்தான்” என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் போற்றப்பட்ட பேரொளியாம் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களுக்கு சென்னை கிண்டியில் மணிமண்டபம் அமைத்து அதனைத் திறந்து வைத்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

•“தமிழ்நாட்டு அரசியலில் - தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சாற்களையும் அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள்.

வள்ளுவர் - அவ்வை - கபிலர் - வள்ளலார் - வரிசையிலே தமிழ்ச் சிந்தனை மரபை வளர்த்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பெருமையைப் போற்றக்கூடிய அளவில் சென்னையில் அவரது உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 3.9.2021 அன்று அறிவித்தார் முதலமைச்சர் அவர்கள். அயோத்திதாசப் பண்டிதர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டு அது நேற்றைய தினம் (1.12.2023) முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆரியர் எதிர்ப்பு - பார்ப்பனர் மறுப்பு - ஜாதி பேதம் - பெண்ணுரிமை - தமிழ்ப் பற்று - இடஒதுக்கீடு - பவுத்தம் - தமிழ்ப் பண்பாடு - ஆகியவை குறித்து காலனியாதிக்கக் காலத்திலேயே எழுதியும் - கோரிக்கை வைத்தும் - இதழ் நடத்தியும் போராடி வந்தவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள். அதனால்தான் தனது முன்னோடியாக அயோத்திதாசப் பண்டிதரை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாக இருப்பவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி.அப்பாத்துரையாரும்தான்” என்று பெங்களூரில் பேசியவர் தந்தை பெரியார். அயோத்திதாசருக்குப் பிறகு ‘தமிழன்’ இதழை நடத்தியவர் தான்அப்பாத்துரையார். அவருக்கும் பெரியாருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது.பெங்களூருக்கு பெரியாரை அழைத்து மாநாடுகளில் பேச வைத்துள்ளார் அப்பாத்துரையார்.

‘தமிழன்’ இதழை 1907 முதல் 1914 வரை நடத்தினார் அயோத்திதாசப் பண்டிதர். அவருக்குப் பிறகு 1926 ஆம் ஆண்டு மீண்டும் அந்த இதழ் வெளியானது. அதனை வரவேற்று தனது ‘குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதி இருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் செய்திகளை அதிகம் வெளியிடும் இதழாக பிற்காலத் ‘தமிழன்’ இதழ் அமைந்தது. எனவே திராவிட இயக்க எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக அயோத்திதாசரைக் குறிப்பிட்டு எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ‘உண்மை’, ‘விடுதலை’ ஆகிய இரண்டு இதழ்களிலும் அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், 1993 ஆம் ஆண்டு ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலை எழுதினார். இதில் அயோத்திதாசர் வரலாறு முழுமையாகச் சொல்லப்பட்டது. பெரியாரிய ஆய்வாளர்கள் எஸ்.வி.ராஜதுரை - வ.கீதா ஆகிய இருவரும் இணைந்துTowards a non - brahmin millennium : From Iyothee Thase to periyar என்ற நூலை 1998 ஆம் ஆண்டு வெளியிட்டனர். 1999 ஆம் ஆண்டுதான் ஞான.அலாசியஸ் தொகுத்த அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் புத்தகம் வெளியானது. இதன் பிறகு அவர் அதிகம் பேசப்பட்டார்.

அறிவுச்சூழலில் அதிகம் பேசப்படத் தொடங்கிய அயோத்திதாசப் பண்டிதருக்கான அரசு அங்கீகாரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து வழங்கி வந்தது.

1999 ஆம் ஆண்டு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த தலித் எழில்மலை அவர்கள், தாம்பரத்தில் சித்த மருத்துவ நிலையம் அமைக்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களிடம் இடம் கேட்டார். ‘நீங்கள் இடம் கொடுத்தால் அயோத்திதாசர் பெயரால் அந்த மருத்துவ நிலையத்தை அமைக்க முடியும்’ என்று அமைச்சர் தலித் எழில்மலை சொன்னார். அந்தப் பெயருக்காகவே இடம் தருவதாகச் சொல்லி 12 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார் முதலமைச்சர் கலைஞர். 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் அதனைத் திறந்து வைத்தார்.

ஒன்றிய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, அயோத்திதாசரின் அஞ்சல் தலை வெளியிடும் முயற்சிகளுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்டார். 21.10.2005 அன்று சென்னையில் அயோத்திதாசர் அஞ்சல் தலை வெளியீட்டு விழா நடந்தது. தலைவர் கலைஞர் பங்கெடுத்தார்.‘தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி’என்று அயோத்திதாசரை அழைத்தார் கலைஞர்.

2007-2008 நிதி நிலை அறிக்கையில், அயோத்திதாசரின் ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை அரசு கொண்டாடும் என தி.மு.க. அரசு அறிவித்தது.

அயோத்திதாசப் பண்டிதரால் தொடங்கப்பட்ட ‘ஒரு பைசா தமிழன்’ இதழின் நூற்றாண்டு விழாவை தி.மு.க. அரசு 8.7.2008 அன்று சென்னையில் நடத்தியது. மாண்புமிகு அமைச்சர்கள் இனமானப் பேராசிரியர் அன்பழகன், பரிதி இளம்வழுதி, தமிழரசி ஆகியோர் பங்கெடுத்த இந்த விழாவில் - சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன், கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களான ஆர்.நல்லகண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்களான யசோதா, ரவிக்குமார் மற்றும் பேராசிரியர் பெரியார் தாசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

2008-2009 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அயோத்திதாசப் பண்டிதரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு.

இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதருக்கு சென்னையில் அவர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துள்ளார்.

ஆதி திராவிடர் குடியிருப்புகளை மேம்படுத்த “அயோத்திதாசப் பண்டிதர்குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்” வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிவிப்பையும் திராவிட மாடல் அரசு செய்துள்ளது.

- இப்படி அயோத்திதாசப் பண்டிதரின் புகழைப் பரப்புவதில் திராவிட இயக்கமும், தி.மு.க. அரசும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருந்துள்ளதை திறந்த மனத்தோடு இருப்பவர்கள் நன்கு உணரலாம். தொண்டையில் ‘முள்’ அடைத்திருந்தால் உணர முடியாது.

- நன்றி: 'முரசொலி', தலையங்கம், 2.12.2023


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

பிற இதழிலிருந்து - ஒற்றைச் சிலை சொல்லுமே!

 

பாராட்டத்தக்க தலையங்கம்

சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவச் சிலை வைக்கப்படும்‘ என்ற முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அனைவரது உள்ளத்திலும் ஆயிரம் இன்ப அலைகளை உருவாக்கி உள்ளதுஎழப்போகும் சிலை என்பதுஆயிரம் சிலைகளுக்கு சமமானது!

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு. 1968 ஆம் ஆண்டு கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள் தான்அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள்அவர் தலைமையின் கீழ் அமைச்சராக இருக்கிறார் கலைஞர் அவர்கள்.

சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களும் ஒப்புக் கொண்டார்ஆனால் தனக்குச் சிலை அமைக்க வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

அதற்குப்பிறகு கலைஞருக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும் என்று ‘விடுதலை’ நாளிதழில் 1968-ஆம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார். "சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். “கலைஞர் அறிவில் சிறந்தவர்நிர்வாகத்தில் சிறந்தவர்பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதில் சிறந்தவர்அவரது சிலையை ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமைத்தே தீர வேண்டும்இதில் அபிப்பிராயம் வெளியிட கலைஞருக்கே உரிமை இல்லையாருக்காவது சங்கடம் இருக்குமானால் சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்’’ என்று பெரியார் அவர்கள் அறி வித்தார்கள்முதலமைச்சர் அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

1971ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் முதலமைச்சர் கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார்சிலை அமைக்கும் குழுவின் புரவலராக பெரியார் இருந்தார்தலைவராக தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார்துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருந்தார்கள்.

பெரியாரின் மறைவுக்குப் பிறகுஅன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு 21.9.1975 அன்று எல்.அய்.சிஅருகில் சிலை திறந்து வைக்கப்பட்டதுமற்ற சிலைகளை விட இந்த சிலைக்கு ஒரு சிறப்பு உண்டு. "நெஞ்சில் சால்வை புரளஅதன் ஒரு முனையைக் கை மேல் போட்டுக் கொண்டு - கை உயர்த்தி கலைஞர் கர்ஜிக்கும் கோலம் கொண்டது இந்தச் சிலைஎன்றும் மேடையில் அவர் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பது போலவே அது இருக்கும்.

24.12.1987 அன்று எம்.ஜி.ஆர்மரணத்தின் போது நடந்த வன்முறையில் இந்த சிலை தாக்கப்பட்டதுஈட்டியால் குத்தி உடைக்கப்பட்டதுஅப்போதும் கலைஞரிடம் கோபம் பிறக்கவில்லைகவிதை தான் பிறந்தது.

உடன் பிறப்பே!

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சில் தானே குத்துகிறான்.

அதனால் நிம்மதி எனக்கு !”  - என்று எழுதினார் கலைஞர்அவர் நிம்மதி அடைந்திருந்தாலும் தமிழர் தம் நெஞ்சில் அந்த ஈட்டி பாய்ச்சல் வலி இருந்து கொண்டே இருந்ததுஇந்த நிலையில் தான் தி.மு.சட்டமன்ற உறுப்பினர் .கே.ஜி.நீலமேகம் அவர்கள் சட்டமன்றத்தில் தனது கோரிக்கையை வைத்தார்சென்னை அண்ணாசாலையில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர்கலைஞர் சிலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

முதன்முதலாக சிலை அமைக்க தந்தை பெரியார் எத்தகைய முயற்சியை எடுத்தார்களோ அதே போன்ற முயற்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்ததையும் முதலமைச்சர் தனது உரையில் குறிப் பிட்டுள்ளார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைச் சந்தித்து அவரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார்இது பெரியார் நினைத்ததுபெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டுநாங்கள் அதை வைத்ததுஎனவே மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டும் என்று அவரும் என்னிடத்திலே வற்புறுத்தியிருக்கிறார்அதில் உள்ள சட்டச் சிக்கல்களை நான் சொன்னேன். ‘நாங்கள் ஏற்கெனவே அனுமதி வாங்கியதுதான்எனவே புதிதாக அனுமதி வாங்கத் தேவையில்லை’ என்று அவர் சொன்னார்அண்ணா சாலையில் பெரியார் சிலையும்அண்ணா சிலையும்எம்.ஜி.ஆர்சிலையும் இருக்கிறதுகலைஞர் சிலையும் ஏற்கெனவே இருந்ததுஅதைத் தான் வலியுறுத்தி இருக்கிறார்இது குறித்து சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்வேன்நிச்சயமாக அண்ணா சாலையில் கலைஞர் சிலை அமைக்கப்படும்“ என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அப்படி அமைக்கப்படும் சிலை எத்தனையோ கருத்துக்களைச் சொல்வதாக அமையும்இது தந்தை பெரியாரின் கனவுகலைஞரின் திறமையைப் போற்றும் அடையாளமாக அமைக்க நினைத்த சிலைஅண்ணா அவர்கள் இருந்து திறந்து வைத்திருக்க வேண்டிய சிலை இதுஅந்த சிலை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘கலைஞர் சிலையை யார் கை வைக்கிறார் என்று பார்க்கிறேன்’ என்றார் பெரியார்பாவேந்தரால் ‘அன்னை’ என்று போற்றப்பட்ட மணியம்மையாரால் திறந்து வைக்கப்பட்ட சிலைவன்முறையாளர்களால் அந்த சிலை சேதம் செய்யப்பட்டதுசிலையை வீழ்த்தினாலும் தலைவர் கலைஞர் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்தார்ஆட்சி நடத்தினார்எத்தனையோ பேருக்கு சிலை வைத்தார்மணிமண்டபம் எழுப்பினார்ஆனால் அவர் சிலைஅவரது கண்ணுக்கு முன்னால் சிதைக்கப்பட்டதுஅவரது உடலை அடக்கம் செய்ய ஆறடி இடம் கேட்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டதுஇந்த அய்ம்பதாண்டு வரலாற்றை இந்த ஒற்றைச் சிலை சொல்லுமே!

நன்றி: 'முரசொலி', 3.9.2021, தலையங்கம்

செவ்வாய், 28 ஜனவரி, 2020

'முரசொலி' தலையங்கம் [28.1.2020] பெரியார் - மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்!


1971-ஆம் ஆண்டு பெரியாரின் சேலம் மாநாடு தமிழ்நாட்டின் 'பெரு'மக்களாலும், ஏடுகளாலும் மறுமதிப்பு செய்யப்பட்டு, மறுவாசிப்புக்கு உட்படுத்தப் பட்டன - மறுமதிப்புகள் ஒப்பாய்வுக்குரியன. ஒரு கனவானின் அந்த மாநாட்டு விமர்சனம் அத்தகைய தாய் இருந்தது. அதையொட்டி உத்திரமேரூர் அருகே பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கைதும் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு யார் காரணம்? எவர் காரணம்? இதன் பின்புலம் என்ன என்று நாம் தெரியாதவர்கள் இல்லை.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெரியாரைத் ‘தங்கத் தேரில் அறிவின் தேக்கம்' என்பார். அவர் ‘இடித்தாலும் வானம், எரிந்தாலும் மின்னல், அடித்தாலும் சூறை அனல்தான், பிடித்தாலும் குன்றான இவ்வீரன் குன்றான் - நிலைகுலையான்' என்றும் சொல்வார். பெரியார், வர்ணாசிரமத்தின் 5, 4 ஆம் படிகளுக்கான மக்களின் வழிகாட்டி, பஞ்சம, சூத்திர ஜாதிகளின் புருஷரில் உத்தமன் அவர்; அதாவது நமக்குப் புரு ஷோத்தமன்! நம் மக்கள், தொகையில் பெரும்பான் மையினராய் இருந்தும் மவுடீகிகளாய் இருக் கிறார்களே, என்று வருந்தியவர் அவர்.

பெரியார் அவர்தம் வாழ்நாளில் கிளர்ச்சி, போராட்டம், சிறை என்பதைத் தவிர வேறெதுவும் அவருக்குத் தெரியாது. பஞ்சம, சூத்திர மக்கள் உயர்வுக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதற்காக அவர் அறிமுகம் இல்லாத மக்களுக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தவர்; உயர்த்தியவர். ஓயாமல் அம்மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய் தவர். சொல்லடிகளுக்கு - கல்லடிகளுக்குக் கவலைப் படாதவர். தாக்குதல்களை ஏற்று இறுதி வரை - மரண பரியந்தம் வரை பொது வாழ்வைத் தொடர்ந்தவர்.

கடைசிக் கட்டத்தில் படுக்கையில் கிடந்த போதும் 'ஒரு நிகழ்ச்சிக்குத் தேதியைக் கொடுத்து விட்டேன், அதில் கலந்து கொண்டு விட்டு மருத்துவமனைக்கு திரும்பி விடுகிறேன்' என்று மருத்துவரிடம் அனுமதி கோரியவர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள் ளுங்கள் என வெள்ளைக்கார ஆளுநர் இருமுறை அழைத்தபோதும் மறுத்தவர். அதிகார ஆசை இல் லாதவர். அதிகாரத்தில் இருப்பவரை தம்வயப்படுத்தி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூக அமைப்பில் நாம் எங்கே சிக்கி இருக்கிறோம் என்பதைக் கண்டறிந்து நமக்குச் சொன்னவர். நமக்கு வழங்கப்பட்ட இடத்தையும், அதற்குரிய உண்மையான பொருளையும் எடுத்துக் காட்டியவர். வெகுமக்களாக இருக்கிற நாம் - பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு உழைக்கிற நம் சக்தியை அறியாத ஆதிக்கவாதிகளுக்கு அதன் உன்னதத்தைத் தமது பரப்புரையின் மூலம் எடுத்தோதி திடுக்கிட வைத்தவர். ஒருகட்டத்தில் ‘வெளியேறு' என்று ஒரு பிரகடனத்தை முன்வைத்தவர்.

நமது எதிரிகள் எத்தகையவர்கள் என்பதை கிரிப்ஸ் தூதுக்குழுவுக்கு எடுத்துரைத்தவர். எங்கள் அரசியல் அதிகாரத்தை உங்கள் பார்வையின் கீழ் வைத்துக் கொண்டு எங்கள் இன மக்களைக் காப்பாற்றுங்கள் எனத் தீர்மானத்தின் மூலம் வெள்ளையனைக் கோரியவர். நமது சுதந்திரத்தை ஆதித்தாய் தீயை காப்பாற்றியது போல காக்க முயன்றவர். நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் - 'அவிசாரி' போயிருந்தால் உங்களுக்காகச் செய்து இருப்பேனே தவிர எனக்காக அல்ல என்று பகிரங்கமாக சொன்னவர்.

சமூகம் ஏற்றுக் கொண்ட முறைகளும், மரபுகளும் 'சமன்மைக்கு’ எதிராக உள்ளன, ஆகவே, அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்து அதனை அழிக்க முற்பட்ட வர் தம்மை 'அழிவு வேலைக்காரன்' என்று தமது பொதுப்பணியை விமர்சனம் செய்தவர். வேத, உபநிடத, இதிகாச, புராண, இலக்கியங்கள் எதுவும் மக்கள் வாழ்க்கைக்கு ஆக்கம் தருவதாக இருக்க வேண்டும். அதன் அறிவுரைகள் உண்மைக்கு மாறா னதாக - மனித குலத்திற்கு எதிராக இருக்குமானால் அவற்றை நிராகரியுங்கள் என்று அறிவைக் கொளுத்தியவர்.

பெரியார் தமது பரப்புரையின் போது இறுதியில் 'நான் சொல்வதாலேயே இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நான் சொல் வதைச் சீர்தூக்கி ஆராய்ந்துப் பாருங்கள், உண்மை இருப்பின் ஏற்று கொள்ளுங்கள்' என்றே சொன்னார். பெரியார் ஆட்சி அதிகாரம் இல்லாத ஒரு மனிதராக இருந்தவர், அவருடைய எச்சங்களாகப் பெரியார் இயக்கங்கள் இருக்கின்றன. அவரின் கொள்கையை அவர்கள் பரப்பி வருகிறார்கள், பெரியார் இறந்து 47 ஆண்டுகள் ஆகி விட்டன, ஆனால், அவரின் கொள் கைகளோ அல்லது அவரின் பணிகள் பற்றியோ பேசப்படும்போது ஆதிக்க சக்திகள் துடிதுடித்துப் போகின்றன.

ஏடுகளும், ஊடகங்களும், பேரிரைச்சல் இடு கின்றன. ஒரு குறிப்பிட்ட சாரார்கள் அதிகமாகப் பேசுகிறார்கள். பெரியார் கூறாததை, அவர் இயக்கம் செய்யாததைத் திரித்துச் சொல்கிறார்கள். அதற்குப் புதுப் பொருளைக் கற்பிக்கிறார்கள். வானமே இழந்து விழுமளவுக்கு அவர்கள் பேரொலி எழுப்பினாலும் நம் பக்கம் வெற்றி சங்கநாதம் ஊதப்படுகிறது. போர் முரசம் அதிருவது போல் பஞ்சம, சூத்திர மக்கள் மரித்தும் வாழும் அம்மானுடனுக்காக - அவரின் கொள்கைக்காக அணிவகுத்து நின்று விட்டார்கள்.

படை, இரண்டு அணிகளாக நிற்கின்றன. எள்ளும் பச்சையரிசியுமாக, பளிச் சென்றுத் தெரிகிறது. ஆக, ஒரு கனவான் இப்போது பெரியார் நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி தப்பும் தவறுமாகப் பேசியதன் விளைவு - எவனோ ஒருவன் உத்திரமேரூர் பக்கம் பெரியாரின் சிலையை உடைத்துள்ளான். அதைச் சில மணி நேரங்களில் சரி செய்துவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தக் கனவான் முரசொலி ஏட்டையும் பேசினார். தி.மு.க.காரன் கையில் வைத்திருப்பான் முரசொலி ஏடு - என்று பேசினார். அடுத்து ‘அறிவாளி' வைத்திருக்கும் ஏடொன்றின் பெயரைச் சொன்னதன் விளைவு - முரசொலியை வைத்திருப்பவர் யார் என்று பொருள் ஆகிறது - அந்தக் கனவானின் பேச்சுப்படி! ஆகவே, 'திமிர் வாதக்காரர்களை' தோற்றுவிப்பதற்கு நமது எதிரி களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.

நம்மை தஸ்யூக்கள், தாசர்கள், கருப்பர்கள், சூத்திரர்கள், அசுரர்கள் எனத் தொடங்கி 'திராவிடப் பொறுக்கிகள்' வரை ஏசி முடித்து இருக்கிறார்கள். அதாவது ‘இன' இழிவுப்படுத்தி இருந்தார்கள்; படுத்தியும் வருகிறார்கள். பின்னர் ‘ராட்சசர்கள்' வேறு; ‘அசுரர்கள்’ வேறு என்றார்கள். அசுரர்கள் ராட்சசர்கள் அல்ல என்றனர். அசுரர்கள் தேவர்களுக்குப் பகைவர் என்றனர். இவர்கள் இருவகை தேவர்களுக்கும் பகைவர்கள் என்றனர். அதே ஆட்டத்தை ‘அந்தக் காலத்திற்குப்’ பிறகு இந்தக் கனவான் மூலமாக நமது அரசியல் எதிரிகள் ‘இந்தக் காலத்தில்' மீண்டும் தொடங்கி இருக்கின்றனர்,

1971 - தேர்தலின்போது பெரியார் மாநாட்டின் ஊர்வலப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப் போது இன்னும் ஓர் ஆண்டில் தேர்தல் வரப் போகிறது, இப்போதும் அதே முழக்கத்தை அதே பாணியில் கிளப்பி இருக்கிறார்கள். நம்மை தமிழக மக்களிடமிருந்து அந்நியப்படுத்த ஓர் ஆதிக்கச் சக்தி தன் முயற்சியை ஒரு கனவானின் வழி தொடங்கி இருக்கிறது. நம் முன்னோர் வகுத்த சூத்திரம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. பெரியாரின் பிறந்த நாளைக் கொண்டாடாத ஆட்சியாளர்கள்கூட கனவானை எதிர்க்கிறார்கள்.

நாம் ஜனநாயக யுகத்தில் இருக்கிறோம். நம் ஆசான்மார்கள் ‘அவர்களை'ப் பற்றி எல்லாவற்றை யும் நமக்குக் கற்பித்துச் சென்று இருக்கிறார்கள். முதன்முதலில் மான்கொம்பைக் கூர்தீட்டி எழுத்து களைப் பானை ஓட்டில் எழுதிய இனம் - நம் இனம்! சிந்து முதல் வைகையை தாண்டி ஏழ்பனை நாடு களும் நம் நாடுகளாக இருந்தவை. இந்தப் பரம் பரையில் வந்தவன் முரசொலிதான் வைத்திருப்பான்; அது அவனின் வெற்றி வேற்கை! (வேல் +கை),

பெரியாரும், அவர் கொள்கையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பேசப்படுகிறது என்பது தொடர் நிகழ்மை; ஏனெனில் ‘சநாதனம்' இருக்கும் வரையும் அந்நிகழ்மை இருந்தே தீரும். ஆகவே பெரியார் மரணத்திற்குப் பின்னும் நிலைத்து வாழ்கிறார்; வாழ்வார்! முரசொலியும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- விடுதலை நாளேடு 28 1 20

சனி, 19 அக்டோபர், 2019

மனிதநேய வாழ்நாள் சாதனையாளரை வாழ்த்தி வணங்குவோம்!

முரசொலி' தலையங்கம்




மனிதநேயம் பற்றி நிரம்பப் பேசப்படும் காலம் இது. ஒரு தனி மனிதன், தான் பழகி அறிந்த இன்னொரு மனிதனிடம் மட்டும் அல்லாமல், அனைத்து மனிதரி டத்தும், விளைந்து கனிந்து விரிந்த பார்வையோடு, இன - மொழி - பூகோள எல்லை ஆகிய அனைத்தையும் கடந்து, கைமாறு கருதாமல், மாறாத - குறையாத, அன்பு அரவணைப்பு பரிவு பாசம் பாராட்டுவதுதான் உண்மையான மனித நேயம்.

தமிழர் பண்பாடே மனிதநேய வார்ப்புதான். சங்க இலக்கியங்கள், மனிதநேய அடிப்படையில் மானுடத் திற்குச் சொல்லப்பட்டவைதான். உலகப்பார்வை என்பது தமிழர்களின் வேர் குணம்தான். இல்லா விட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றன், அகிலத்தை அணைத்திடும் பார்வை யோடு, அனைவருமே என்னுடைய உறவினர் தாம் என்று அறைகூவி இருப்பானா?

"யாதானும் நாடாமால் ஊராமால்” என்று அய்யன் திருவள்ளுவர் அன்றே பிரகடனப்படுத்தியிருப்பாரா? பூங்குன்றன் - வள்ளுவன்வழிச் சிந்தனையில் செயலாற்றி வருபவர்கள் திராவிடர்கள் - தமிழர்கள். குறிப்பாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் ஆகியோர் மனிதநேயம் போற்றிய மாபெரும் சீலர்கள்.

தந்தை பெரியார், மனிதநேயத்திற்கு மாண்புமிகு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். மானுடத்தை, பற்றிப் படர்ந்தது அவருடைய அரிய அணுகுமுறை. அதனால்தான் அவர் "மனிதனை நினை" என்றார்; திராவிட மனிதனை மட்டுமல்ல, உலகத்தில் எங்கெல் லாம் அடக்கி ஒடுக்கப்படுகிறானோ அந்த மனிதனைத் தான் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

தந்தை பெரியார் அவர்களைத் தலைவராகக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களும், மனிதநேயம் செறிந்த மகத்தான தலைவர். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் கருணை மிகக் கொண்டு, அன்பு மேவிய அறிவாயுதம் தாங்கி இணையற்றவராக இலங்கியவர் அண்ணா .

தந்தை பெரியார் வகுத்தளித்த பாதையில், அறிஞர் அண்ணா மேற்கொண்ட பயணத்தை, தொடர்ந்து நடத்திய தலைவர் கலைஞர், வாழ்நாளெல்லாம் மனித நேயத்தை மாணிக்கமென மதித்துப் பின்பற்றினார். அவரை வெறுத்தவர்கள் சிலர் உண்டெனினும், கலைஞர் யாரிடமும் வெறுப்பு பாராட்டினார் இல்லை; மாறாக, தன் மீது வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள் மீதும்கூட, அன்பையும் மனித நேயத்தையும் மழையெனப் பொழிந்து, அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கி மனம் மகிழ்ந்தவர்.

அத்தகைய திராவிட மனிதநேயத்தின் உருவக மாக, அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) செயலாக்கத்தில் சிறந்து வருகிறது. அமெரிக்காவில் நேர்த்தியான மனிதநேயப் பணிபுரியும் இந்த அமைப்பின் சார்பில், வாஷிங்டன் மேரிலாந்தில், கடந்த செப்டம்பர் 21, 22-இல் நடை பெற்ற மாநாட்டில், நமது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு, 2019-ஆம் ஆண்டிற்கான "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டிருப் பது, உலகத் தமிழர்கள் அனைவர்க்கும் உவப்பையும், பெருமிதத்தையும் உருவாக்கி இருக்கிறது.

இந்த விருது 1953ஆம் ஆண்டு முதல் கடந்த 65 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர், முதல் திராவிடர் -தமிழர், ஆசிரியர் அய்யா அவர்கள்தான் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நமது மகிழ்ச்சியும் பெருமிதமும் இரட்டிப்பாகிறது.

அய்யா வீரமணி அவர்கள், பத்தாவது வயது முதலே மேடைப் பேச்சில் ஆர்வம் காட்டி, தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்ததால், "திராவிட இயக்கத் தின் திருஞான சம்பந்தர்” என்று அறிஞர் அண்ணா அவர்களால் அந்தக் காலகட்டத்திலேயே புகழ்ப் பட்டம் சூட்டப் பெற்று அணி செய்யப்பட்டவர்.

ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட காலம் தந்தை பெரியார் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவர். 28 வயதிலே திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர். 29 வயதிலே "விடுதலை" ஏட்டிற்கு ஆசிரியர் ஆனவர். கடந்த 41 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தின் தலைவராக வலம் வந்து; தமிழர் நலன், தமிழின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்து, இன - மொழிப் பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்வதிலே அயராது பாடுபட்டு வருபவர்.



தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை, எந்தவித சமரசமும் இன்றிப் பாதுகாத்துப் பரப்பி வருபவர். இன்றைக்கு நம்முடன் இருந்து வழிகாட்டும் திராவிடர் தலைவர்களில் மூத்தவர். இந்த விருதுக்கு முழுவதும் பொருத்தமானவர், முற்றிலும் தகுதி மிக்கவர்.

எனவேதான், "சமுதாயத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், சமூகநீதி காத்து, மனிதநேயம் வளர்க்கவும் இவர் வாழ்நாள் முழுவதும் முழுநேரத் தொண்டு செய்து வருவதைப் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறோம்” என்று, அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்கள், விருதினை வழங்கியபோது தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருப்பது உன்னத மான செய்தி ஆகும்.

விருதினைப் பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், "விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால் தான் வழங்கப்பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது, மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது” என்று, திராவிட இயக்கத்தின் அடையாளமான அடக்கத்தோடும் ஆணித்தரத்தோடும் குறிப்பிட்டிருப்பது, தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த கவனமாக வளர்த்தெடுத்த பகுத்தறிவு - சுயமரியாதைப் பாரம்பரியத்திற்கே பெருமை கூட்டுவதாகும்.

இதைப் போன்றதொரு கருத்தை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், "பெரியாரின் கொள்கைகளை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அய்யா அவர்களின் தொண்டறம் தொய்வின்றித் தொடர இந்த விருது ஊக்கமளிக்கும்" என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பிரதிபலித் துள்ளார்.

தமிழர் தலைவர் பெற்றுள்ள விருது மிகவும் மேன்மையானது. அந்த விருதைவிட எண்ணிலா மடங்கு மேன்மையானவர், மனித நேயத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு தோழரிடமும் கடைப்பிடித்தொழுகும் நமது தமிழர் தலைவர். இந்த மனிதநேயரைக் கண்டறிந்த அமெரிக்க மனிதநேயர் சங்கத்தை வாழ்த்திப் பாராட்டுவோம்!

தனிப்பெருமை வாய்ந்த விருதினைப் பெற்று, தாயகம் திரும்பியிருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களை வாயார வாழ்த்தி, மனமார வணங்குவோம்!

நன்றி: 'முரசொலி'  தலையங்கம் 19.10.2019

- விடுதலை நாளேடு 19 10 19