சனி, 19 அக்டோபர், 2019

திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை - 2

அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலைகளையும் உடைக்கலாம்;


அவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதிக் கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது;


தகர்க்க முடியாது- மகத்தான கோட்டை




சேலம், அக்.1 அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலைகளையும் உடைக்க முடியும்; அவர்கள் உரு வாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதி என்கிற கோட் பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது;  அது எவராலும் தகர்க்க முடியாது - ஒரு மகத்தான கோட்டை என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

திராவிடர் கழகப் பவள விழா மாநாடு


கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பவள விழா மாநாட்டில்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மதராஸ் பிரசிடென்சி என்றால், மெட்ராசை மட்டும் குறிக்காது. ஒட்டுமொத்த தமிழகமே!


பாம்பே பிரசிடென்சி, குஜராத், மகாராட்டிரா போன்ற அந்தப் பகுதிகளை தனக்குள் அடக்கி வைத் திருந்த ஒரு பகுதி - மத்திய பகுதி. மதராஸ் பிரசிடென்சி என்றால், மெட்ராசை மட்டும் குறிக்காது. ஒட்டுமொத்த தமிழகமே, கேரளாவில் ஒரு பகுதி, ஆந்திராவில் ஒரு பகுதி, கருநாடகா பெங்களூர் வரையிலும் மதராஸ் பிரசிடென்சிதான். மதராஸ் வாலா, மெட்ராஸ் வாலா என்று டில்லியில் சொல்லுகிறான் என்றால், ஒட்டு மொத்த தென்னிந்திய திராவிடப் பகுதியைக் குறிக்கும், அதுதான் அதற்குப் பொருள். அந்தப் பிரசி டென்சிக்கு உட்பட்ட பகுதி.

இனம் என்கிற அடிப்படையில்,


இனம் இரண்டு வகை உண்டு!


அப்படிப்பட்ட காலகட்டத்தில், நான் பிறக்க வில்லை, நீங்கள் பிறக்கவில்லை, தந்தை பெரியார் பிறந்திருந்தார். அதனால், அன்றைக்கு அவர் கட்சித் தொடங்குகிறபொழுது, தமிழருக்கென்று தனியே கட்சி தொடங்க முடியாது; தெலுங்கருக்கென்று தனியே கட்சி தொடங்க முடியாது; கன்னடருக்கு என்று தனியே கட்சி தொடங்க முடியாது. ஒட்டு மொத்தமாக அனைவரையும் இணைக்கக்கூடிய ஒரு சொல்லாடல், திராவிடர்கள் என்ற சொல்லாடல். அதிலே ஜாதி வேறுபாடு இல்லை. இரண்டே ஜாதி களை, இரண்டே ஜாதிகளாகப் பார்க்கிற ஒரு பார் வையை தந்தை பெரியார் உற்றுநோக்குகிறார். இனம் என்கிற அடிப்படையில், இனம் இரண்டு வகை உண்டு தோழர்களே, ஒன்று, மொழி வழி அடிப்படையிலான தேசிய இனம். இன்னொன்று மரபு அடிப் படையிலான மரபினம்.

மரபினம் என்பதை ஆங்கிலத்தில், RACE என்று அழைக்கிறோம். ரேஸ் என்பது வேறு. தேசிய இனம் என்பதை மொழிவழி அடிப்படையில், Ethnic Group என்று சொல்வார்கள், Ethnic  City என்பார்கள். தமிழ்த் தேசிய இனம் என்றால், Tamil  Ethnic   Group  அது வேறு. 1956-க்குப் பிறகுதான் அந்த சிந்தனை மேலோங்குகிறது.

ஏனென்றால், அப்பொழுதுதான் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகத்தின்  உணர்வுகளை மதிப்பது தான், திராவிடர் கழகம் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற பண்பாடு. எவ்வளவு கட்டுப்பாட்டை நீங்கள் கடை பிடிக்கிறீர்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறபொழுது பெருமையளிக்கிறது.

தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில்


தலைநிமிர வைத்திருக்கிறது


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கித் தந்த இந்தக் கட்டுப்பாடுதான், இன் றைக்குத் தமிழ்ச் சமூகத்தை உலக அரங்கில் தலை நிமிர வைத்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

எனவே, மொழிவழி அடிப்படையில் இன்றைக்கு நமக்கு தமிழ் தேசிய இனம் என்ற ஒரு அடையாளத்தை உணர முன்வந்திருக்கின்றோம்.

ஆனால், 1944-களில் திராவிடர் கழகம் என்றுதான் இயக்கம் உருவாகக்கூடிய ஒரு சூழல் அமைந்தது. ஆனாலும், அப்படிப்பட்ட அந்தக் காலகட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் முன்வைத்த அரசியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவில் இரண்டே இரண்டு மரபினம்தான் இருக்கிறது. திராவிடம் என்பது தேசிய இனத்தின் அடையாளமல்ல, மரபினத்தின் அடையாளம். அகில இந்திய அளவில் இரண்டே இரண்டு மரபினம்தான். ஒன்று, ஆரிய மரபினம் - இன்னொன்று திராவிட மரபினம்.

ஆரிய மரபினம்தான் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து ஆதிக்கம் செய்கிறது!


ஆரியன் ரேஸ் - திராவிடன் ரேஸ் இரண்டே இரண்டு மரபினங்கள். ஆரிய மரபினம்தான் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து ஆதிக்கம் செய்கிறது.

உச்சநீதிமன்றமாக இருந்தாலும், உயர்நீதிமன்றங் களாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்பு களாக இருந்தாலும், பல்கலைக் கழகமாக இருந்தாலும், பள்ளிக்கூடமாக இருந்தாலும், கருவறையாக இருந் தாலும், எந்த அதிகார மய்யமாக இருந்தாலும் அத்தனைவற்றிலும் அதிகாரம் செலுத்தக் கூடியவை ஆரிய இனமாக இருந்தது.

ஆரிய ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம்


எனவே, அந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும்; திராவிட இனத்திற்கு அதிகாரத்தைப் பகிரவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம். குறிப்பிட்டு எந்த ஒரு ஜாதிக்கும் எதிரான ஒரு வெறுப்பு அரசி யலை அவர் விதைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மரபினம், ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்துகொண்டு, பெரும்பான்மை சமூகமாக இருக்கக்கூடிய திராவிட மரபினத்தை ஒடுக்குகிறது - சிதைத்து வருகிறது - அவர்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்து வருகிறது - இந்த ஆதிக்கத்தைத் தகர்க்கவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாரின் நோக்கம்.

பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளர் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடவுள் மறுப்பு மட்டும்தான் அவருடைய கொள்கை - கடவுள் இல்லை என்று சொன்னார் என்று அவரை சுருக்கிப் பார்க்கிறார்கள்.

கடவுளை அவர் ஏன்  இல்லை என்று சொல்ல வேண்டிய நிலை வந்தது என்றால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காக, அவர் மக்களை  அணி திரட்டுகின்றபொழுது, நடைமுறையில் சந்தித்த சிக்கல்களிலிருந்துதான் அடிப்படை உண்மையை உணர்ந்து தந்தை பெரியார் கடவுளையும் எதிர்க்க வேண்டும் அல்லது கடவுள் மறுப்பையும் உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்கு வரு கிறார்.

கடவுள் மறுப்பு என்பது ஒரு யுத்த தந்திரம்


கடவுள் மறுப்பு என்பது ஒரு ஸ்டேட்டஜி; அது ஒரு யுத்த தந்திரம்; போர் தந்திரம்; அது ஒரு நடைமுறை செயல் தந்திரம். கடவுள் மறுப்பு என்பது கோட்பாடல்ல. சமூகநீதிதான் கோட்பாடு. தந்தை பெரியார் முன் மொழிந்த கோட்பாடு என்பது சமூகநீதி கோட்பாடு. அதை நடைமுறைப்படுத்துகின்றபொழுது, கையாள வேண்டிய போர்த் தந்திரங்களில் ஒன்றுதான், கடவுள் மறுப்பு என்பது.

உச்சநீதிமன்றத்தில் 99 விழுக்காடு


நீதிபதிகள் யார்?


ஒரு குறிப்பிட்ட மரபினம், அகில இந்திய அளவில், வெள்ளையர்களின் வெளியேற்றத்திற்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மய்யங்களிலும், அனைத்து பீடங்களிலும் அவர்களின் கொடியே பறக்கிறது; அவர்களே கோலோச்சிக் கொண்டிருக் கிறார்கள். இன்றைய நாள் வரை உச்சநீதிமன்றத்தில் 99 விழுக்காடு நீதிபதிகள் யார்? எப்படி அது சாத் தியமாகிறது. உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளாக இருக் கின்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பாருங்கள். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகளைக் கணக்கிட்டுப் பாருங்கள். இப்படி அதிகார மய்யத்தில், அதிகார பீடத்தில் ஆளுமை செலுத்துவது அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மரபினத் தைச் சார்ந்தவர்கள் என்கின்ற நிலையில்தான், வெளிப்படையாக அவர் தனது போர்க் குரலைப் பிரகடனம் செய்கிறார்.

திராவிட சமூகத்தில் இருக்கிற


எல்லா சமூகத்தினரும் ஒரே சக்தி!


பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று வெளிப் படையாக அவர் அந்த இயக்கத்தை உருவாக்கு வதற்குக் காரணம், தன்னுடைய சமூகநீதி என்கிற சமத்துவக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற் காகத்தான். அப்படி சொல்லுகிறபொழுது, திராவிட சமூகத்தில் இருக்கிற எல்லா சமூகத்தினரும் ஒரே சக்தி என்ற பார்வையை முன்வைக்கிறார்.

அனைவரும் ஒரே சக்தி - அதிலே சூத்திரன், பஞ்சமன் என்கிற வேறுபாடுகள் எல்லாம் இல்லை. திராவிடன் என்ற ஒற்றை அடையாளம்தான். ஏனென் றால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய அல்லது தகர்த்து எறியவேண்டிய தேவையை உணர்ந்து பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் அதனை முன்மொழிந்தார்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர் தந்தை பெரியார்


இது எவ்வளவு நுட்பமானது; இதை வரலாற்றுப் பின்னணிகளோடு பொருத்திப் பார்க்கவேண்டும். அன்றைக்குத் தமிழன் என்று சொல்லவேண்டிய, தமிழ்த் தேசியம் என்று சொல்லவேண்டிய ஒரு தேவை எழவில்லை. 1956 -க்குப் பிறகு எழுகிறது. ஆனாலும், அந்தக் காலகட்டத்திலேயே, தமிழுக்கு முன்னுரிமை அளித்து, தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியவர் தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக்கூடாது.

அன்றைக்கெல்லாம் தமிழ்த் தேசிய இனம் என்கிற அடையாளம் பேசப்படாத நேரம். ஆனால், நீதிக் கட்சியில் முன்னணித் தளபதிகளில் ஒருவராக அல்லது தலைவர்களில் ஒருவராக விளங்கிய, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நடத்திய மாநாட்டில், தமிழ்நாடு தமிழருக்கே என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1930-களிலே அந்த மாநாடு அப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்; அவருடைய வருகையை தோழர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அண்ணன் அவர்கள் மேடையில் அமர்ந்ததும் நான் என்னுடைய உரையை சுருக்கமாக நிறைவு செய்ய விரும்புகிறேன்.

தோழர்களே, திராவிடம் என்கிற சொல்லாட்சி நடைமுறை எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறுவதற் காக இந்தவரலாற்றுப் பின்னணிகளைச் சுட்டிக் காட்டினேன்.

திராவிடம் என்று அழைக்கக்கூடிய


ஒரு தேவை உருவானது


ஆகவே, பாம்பே பிரசிடென்சி இருந்ததைப்போல, மதராஸ் பிரசிடென்சி  என்ற ஒன்று, திராவிட மொழி கள் பேசுகின்ற மக்களையெல்லாம் ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு நிலப்பரப்பாக இருந்த காலத்தில், அதை தமிழ்நாடு என்று சொல்ல முடியாது. ஆகவேதான், அந்த நிலப்பகுதியை திராவிடம் என்று அழைக்கக் கூடிய ஒரு தேவை உருவானது. அதிலிருந்துதான் திராவிடர் கழகம் என்கிற அமைப்பை உருவாக்க வேண்டிய தேவை - திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது ஒரு வரலாற்றுக் கட்டாயமாக மாறியது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளில் இருந்து தான் சமூகநீதியையும் நாம் பார்க்கக் கடமைப்பட்ட வர்களாக இருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை உருவாக்கிய பின்னர், அது முன்வைத்த கோரிக்கைகள் என்ன? அது முன்மொழிந்த கொள்கை, கோட்பாடு என்ன? இதை நாம் பாகுபாடு இல்லாத பார்வையோடு அணுகக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

மரபினத்தையும், தேசிய இனத்தையும்


போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது


தமிழை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாட்டை மேம்படுத்துவதற்காக, தமிழ் இனத்தை மீட்பதற்காக திராவிடர் கழகம் எண்ணற்ற பல செயல் திட்டங்களை வரையறுத்து இருக்கிறது. போராட்டங்களை நடத்தி யிருக்கிறது. மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை அனைத்தும் சமூகநீதிக்காக. ஆரிய மரபினம் - திராவிட மரபினம்; எனவே, மரபினத்தையும், தேசிய இனத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. தமிழ் என்கிற மொழிவழி அடிப்படையிலான இனத்தை தேசிய இனம் என்று நாம் அழைக்கிறோம்.

திராவிட இனம் என்பது பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு மரபினம். எனவே, ஆரிய மரபி னத்திற்கு எதிராகத்தான் தந்தை பெரியார், அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகத்தான் கடவுள் மறுப் பையும் கையிலெடுக்கிறார். கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு போர்த் தந்திரம். ஏனென்றால்,  ஆரிய மரபினத்தின் ஆதிக்கம் எங்கே நிலை கொண்டிருக்கிறது? மூன்று சதவிகிதம் என்று சொல்கிறோம்; அது சிறுபான்மைதான். ஆனால், மூன்று சதவிகிதமாக இருக்கிற சிறுபான்மைச் சமூகம் எப்படி இவ்வளவு பெரிய ஆட்சி அதிகார பீடத்தில் அமர முடிகிறது. இதற்கு எது காரணம்? யாரெல்லாம் பார்ப்பனரல்லாதார் என்று நாம் சொல்லுகிறோமோ, அவர்களும் அதே கருத்தியலை உள்வாங்கியவர் களாக, அவர்களின் கருத்தியல்களுக்குக் கட்டுப்பட்ட வர்களாக, அவர்களின் கருத்தியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக விளங்குவதுதான் காரணம். எனவே, அந்த ஆதிக்கத்தைக் கட்டிக் காப்பாற்றிக் கொண்டிருப்பது எது என்று பார்க்கின்றபொழுது,  அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்துத் துவம் அல்லது இந்து மதம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

இந்து மதத்தை எது காப்பாற்றுகிறது?


இந்து மதத்தை எது காப்பாற்றுகிறது? இந்துத்து வத்தை எது காப்பாற்றுகிறது? நம்முடைய குடும்பத் தைச் சார்ந்தவர்கள் அத்துணை பேருமே இந்துக் கள்தான். தந்தை பெரியார் குடும்பம் இந்துக் குடும் பம்தான். அவருடைய தந்தையின் பெயர் வெங் கடப்பட நாயக்கர்; இந்து பெயர்தான்; தந்தை பெரியாரின் பெயர் ராமசாமி நாயக்கர், இந்துப் பெயர் தான். என்னுடைய தந்தையின் பெயர்கூட ராமசாமி தான். இந்துப் பெயர்தான். நாம் யாரும் இந்து குடும்பம் அல்லாதவர்கள் அல்ல. ஆனால், தந்தை பெரியார் அதை எதிர்க்கவேண்டிய முடிவிற்கு ஏன் வருகிறார் என்றால், காலங்காலமாக ஒரு மரபினம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு பெரும்பான்மை சமூகம் மூடநம் பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறது. அதிகாரம் இல்லாமல் கிடக்கிறது; கல்வி இல்லாமல் இருக்கிறது. இப்படி கல்வி, அதிகாரம் போன்றவற்றை நுகர முடியாமல் இவர்கள் முடங்கிக் கிடப்பதற்கு எது காரணம் என்று கண்டறிந்தபொழுதுதான், இவர்களை இந்த முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைச் சேற்றுக்குள்ளே புதைத்து வைத்திருப்பது - இவர்கள்மீது திணிக்கப்பட்டு இருக்கிற கடவுள் நம்பிக்கை என்பதைக் கண்டறிகிறார், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அதனால்தான், கடவுள் மறுப்பை கையிலெடுக்கிறார்.

திராவிடர் கழகத்தின் களப்பணிகள்!


அடிப்படை நோக்கம், ஆரிய  மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பது.

அடிப்படை நோக்கம், சமூகநீதியை வென்றெடுப் பது

அடிப்படை நோக்கம், உழைக்கும் பெரும்பான்மை மக்கள், கல்வி, வேலை வாய்ப்பு, அதிகாரம் போன்ற வற்றை நுகரவேண்டும்.

இதுதான் அடிப்படை நோக்கம் தோழர்களே,  இதுதான் திராவிடர் கழகத்தின் நோக்கம். இதுதான்  திராவிடர் கழகத்தின் களப்பணிகள்.

ஆகவேதான் தந்தை பெரியார், ஜாதி ஒழிப்பை செயல் திட்டமாக வைக்கிறார்.

ஆகவேதான் பெரியார் பெண் விடுதலையை செயல் திட்டமாக வைக்கிறார்.

ஜாதியை ஒழிக்கவேண்டும், பெண் விடுதலையை வென்றெடுக்கவேண்டுமானால், சமூகநீதிக் கோட் பாட்டை இங்கே நிலைநாட்டவேண்டும்.

சமூகநீதிக் கோட்பாட்டை நிலை நாட்டவேண் டுமானால், ஆரிய மரபினத்தின் ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்குரிய போராட்டக் களங்களை அமைக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகம் செயல்படத் தொடங்கியது. தந்தை பெரியார் 95 வயது வரையில், உடல் நலிவுற்றிருந்த வேளையிலும், தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றி, தன்மானத்தை ஊட்டி, திராவிட உணர்ச்சி என்கிற தமிழ் உணர்ச்சியை, மான உணர்ச்சியை, தேசிய இன உணர்ச்சியை, சமூகநீதி உணர்ச்சியை விதைத்தார்.

பெரியார் வீழ்ந்தால், திராவிடமே வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டார்கள்!


அவர் வீழ்ந்தால், திராவிடமே வீழ்ந்துவிடும் என்று கனவு கண்டார்கள். அவர் அழிந்தால், திராவி டர் கழகம் அழிந்து போகும் என்று கனவு கொண் டார்கள்.

ஆனால், காலம் திராவிட அரசியலை முன் னெடுத்துச் செல்வதற்குரிய ஒரு காலக் கொடையாக பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்தது. பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளை செழுமைப் படுத்தினார், வலிமைப்படுத்தினார், எளிமைப்படுத் தினார். பெருவாரியான மக்களிடத்திலே கொண்டு போய் சேர்த்தார்.

அண்ணா வீழ்ந்தால், திராவிட அரசியல் வேரறுந்து போகும் என்று கனவு கண்டார்கள்


பேரறிஞர் அண்ணா வீழ்ந்தால், திராவிட அரசியல் வேரறுந்து போகும் என்று கனவு கண்டார்கள். 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா கால மானபோது, பலர் களிப்படைந்தார்கள். அந்த நேரத்தில், பெரியாரும், அண்ணாவும் உருவாக்கிய அந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காக சமூகநீதிப் போர்க்களத்தைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்லுவதற்காக, போர் வாளோடு புறப்பட்டவர்தான் திருக்குவளையில் தோன்றிய தலைவர் கலைஞர் அவர்கள்.

50 ஆண்டுகாலம் அவரை மய்யப்படுத்தியே தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல் சுற்றுச் சுழன்று வந்தது.

திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்


திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இந்தத் தமிழ் மண்ணிலே தொடர்ந்து போராடும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்.

அதையே செழுமைப்படுத்திய  தலைவர் கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தோடு இணைந்து, தமிழ் மக்களின் மீட்சிக்காகத் தொடர்ந்து போராடினார். தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, தமிழ் ஈழ மக்களுக்காகவும்தான். வரலாறு தெரியாதவர்கள், அறியாமையில் உழலுகிறவர்கள், அவதூறுகளை அள்ளிப் பரப்பிக் கொண்டிருக்கலாம், ஆனால், அது தற்காலிகமானதுதான்,  புரிந்துகொள்ளவேண்டும்.

தலைவர் கலைஞரும் இல்லை, பேரறிஞர் அண்ணாவும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை. இனி திராவிட அரசியல் என்கின்ற சமூகநீதி அரசியல்  அவ்வளவுதான் வீழ்ந்து போகும், கருகிப் போகும், சாம்பலாகும் என்று கனவு கண்டார்கள்.

பெரியாருக்குப் பின்னால், திராவிடர் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டு வருகிறார்


இல்லை, அதை வழிநடத்த இதோ நானிருக்கிறேன் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக, பெரியாருக்குப் பின்னால், திராவிடர் கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திக் கொண்டு வருகிறார். இன்றைக் குப் பவள விழா மாநாட்டினையும் தலைமை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் கட்டிக் காத்த அந்த சமூகநீதி அரசியலை,  அண்ணாவும், கலைஞரும் இல்லாவிட்டாலும், அவர்களின் வழியில் அதனைக் கட்டுக்கோப்பாக வழி நடத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தவராக இதோ நானிருக் கிறேன் என்று அண்ணன் தளபதி அவர்கள் இன்றைக் குக் களத்திலே வெற்றிகரமாக வீறுநடை போடுகிறார்.

தமிழர் தலைவரும், தளபதியும்


வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்!


பெரியார் இல்லை, அண்ணா இல்லை, கலைஞர்  இல்லை - ஆனால், சமூகநீதி அப்படியே இருக்கிறது. அதற்கான போர்க் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான போர்க்களம் இன்னும் சுறு சுறுப்பாகவே இருக்கிறது. அதற்கு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் களும், நமது அண்ணன் தளபதி அவர்களும் தான் அதற்கான தலைமைப் பொறுப்பை ஏற்று இன்றைக்கு வழிநடத்திக் கொண்டிருக் கிறார்கள்.

அந்தக் களத்தில் லட்சோபலட்சக்கணக் கான விடுதலை சிறுத்தைகளும் சமூகநீதி யைக் காப்பாற்று வதற்கு, சமத்துவத்தை வென்றெடுப்பதற்கு இடதுசாரிகளும், விடு தலை சிறுத்தைகளும், சிறுபான்மை சமூகத் தினரும் இன்றைக்கு ஒன்று சேர்ந்து நிற் கிறோம்.

ஆனால், நம்மைப் பிரிப்பதற்கு, சிதைப் பதற்கு ஜாதி அடிப்படையில் சிதறடிப்பதற்கு, மதவாத சக்தி கள், சங் பரிவார்கள் இங்கே காலூன்றத் துடிக்கிறார்கள்; தூண்டி விடு கிறார்கள். அதன் விளைவுதான், பெரியார் சிலைகளை உடைக்கின்ற துணிச்சல்; அம் பேத்கர் சிலைகளைத் தகர்க்கின்ற துணிச்சல்.

சமூகநீதி என்கிற கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம்பனாலும் நெருங்க முடியாது!


அம்பேத்கர் சிலைகளையும், பெரியார் சிலை களையும் உடைக்க முடியும்; அவர்கள் உருவாக்கி வைத்திருக்கின்ற சமூகநீதி என்கிற கோட்பாட்டுக் கோட்டையை எந்தக் கொம் பனாலும் நெருங்க முடியாது;  அது எவராலும் தகர்க்க முடியாத ஒரு மகத்தான கோட்டை என்பதைச் சொல்லி,

திராவிடர் கழகம் என்பது தமிழர் கழகம் தான்

திராவிடர் கழகம் என்பது சமூகநீதிக் கழகம் தான்

திராவிடர் கழகம் என்பது சமத்துவக் கழகம்தான்

திராவிடர் கழகம் என்பது ஆரிய மர பினத்தின் ஆதிக்கத்¬த் தகர்ப்பதற்கான ஒரு போர்க்களம் என்று கூறி,

வாய்ப்புக்கு நன்றி கூறி,  நிறைவு செய் கிறேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகப் பவள விழா வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக