ஆணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரத்து 567 எக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் தமிழ்நாடு அரசு ஆணை



விடுதலை நாளேடு,
Published February 2, 2024

சென்னை, பிப்.2 ஈரோடு மாவட் டத்தில் 80,567 எக்டேர் பரப்பில் ‘தந்தை பெரியார்வன உயிரின சரணாலயம்’ உதயமானது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் “ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபி செட்டிபாளையம் வட்டங் களைச் சேர்ந்த 80,567 எக்டேர் வனப் பரப்பில் ‘தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்’ என்ற புதிய சரணாலயம் அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் அரசுக்குஅனுப்பிய கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, கடந்த ஜன. 30ஆ-ம் தேதி அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள காப்புக் காடுகளை ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம்’ என அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட் டில் உள்ள வன உயிரின சரணா லயங்களின் எண் ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
வட பர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங் கலம், நகலூர் காப்புக்காடுகளைச் சேர்ந்த 80,567.76 எக்டேர் பரப்பை வன உயிரின சரணா லயமாக அறிவிக்குமாறு வனத் துறை கருத்து அனுப்பியுள்ளது.

இந்த காப்புக்காடுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கருநாடக மாநிலத்தில் உள்ள மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும்போது முக்கிய வழித்தடம் உருவாகி, புலிகளின் வாழ்விடப் பகுதியாக அமையும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் பல்வேறு தாவ ரங்கள், வன விலங்குகள் நிறைந்துள்ளன.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள காவிரி வனப் பகுதிகளுடன் இணைக் கும் முக்கியப் பகுதியான இந்த இடத்தைப் பாதுகாப்பது, சந்தன மரங்களின் மீள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும்.
இந்த காப்புக்காடு 70 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள், 35 வகை மீன் இனங்கள், 10 வகை நீர்நிலவாழ் இனங்கள், 25வகை ஊர்வன இனங்கள், நிலத்தில் வாழும் 5 வகை முதுகெலும்பில்லா விலங் குகள், 233 வகை பறவை இனங்கள், 48 வகை பாலூட்டி இனங்களை கொண்ட பல்லு யிர் பரவல் பகுதியாகும்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித-வன உயிரினமோதலைத் தணிக்கவும் இதை வன உயிரினச் சரணாலய மாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, மேற் கூறிய பகுதிகள் தந்தை பெரியார் வன உயிரினசரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 மே, 2023

அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும் தலைமைச் செயலாளர் ஆணை

 

 6

சென்னை, மே 10 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அய்ஏஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள், கழகம் மற்றும் வாரியத் தலைவர்களுக்கும் வெ. இறையன்பு எழுதியிருக்கும் கடிதத்தில், 

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கரும்பலகையில், நாள்தோறும் ஒரு திறக்குறளை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். மேலும், ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின் பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில அலுவலகங் களைத் தவிர்த்து மற்ற துறைகளில் இந்த உத்தரவு பின்பற்றப்பட வில்லை என்றும், இனிமேல் சரியாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய 58 பேருக்கு பணி ஆணை

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

சென்னை, ஆக. 15- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் கொள்கையை சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயனோ அதனை செயல்படுத்தி - தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்தார் என்று நேற்று (14.8.2021) பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மனம் திறந்து வாழ்த்தினார்.

தந்தை பெரியார் அவர்களின் விருப்பத் தினை நிறைவேற்றும் வகையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதை யொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் நேற்று மாலை சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளை யம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத் தினார்.

முன்னதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்று இனிப்புகளை வழங்கி வாழ்த்து களைத் தெரிவித்தார்.

பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் பெரியார் அருங் காட்சியகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன் னாடை அணிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டார். பின்னர் அனைவரும் விடை பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர்

சோ.சுரேஷ், எழும்பூர் பகுதி தி.மு.க. பொறுப் பாளர் கோ.ஏகப்பன், வட்டச் செயலாளர்

ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர்கள் விஜய குமார், சோ.வேல் மற்றும் ரங்கநாதன், மொய் தீன், மருதன், புனிதவதி எத்திராஜ், தேவந்தி அப்பாய் உள்ளிட்ட பலர் இந்நிகழ் வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை


தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போரின் வழியில் அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர்

பல்வேறு போராட்டங்கள் கண்டு - அந்த உரிமையை சட்டப்படி நிலைநிறுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கிய

பின்பு அதற்காக பாடுபட்ட தலைவர்களுக்கு, சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு பெரியார் திடலில் வெற்றி மலர் தூவி மரியாதை - வெற்றிக் கனியை

வழங்கிய முதலமைச்சருக்கு தமிழர் தலைவர், கழகத் துணைத் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து! (சென்னை பெரியார் திடல், 14.8.2021)

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை - புதிய சரிதம்; பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய 58 பேருக்கு பணி ஆணை - முதல் கட்டம்!


தந்தை பெரியார் கொள்கைவழி - கலைஞர் பிறப்பித்த சட்டத்தை செயல்படுத்தி ‘‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்'' அகற்றம்  - ஸ்டாலின் ஆட்சியில்!

தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல - மீட்சியின் அத்தியாயம்!

- தமிழர் தலைவர்  ஆசிரியரின் மனந்திறந்த பாராட்டு-

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற  தந்தை பெரியாரின் கொள் கையை சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயனோ அதனை செயல்படுத்தி- தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று மனந்திறந்த பாராட்டினை தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

இன்று (14.8.2021)  காலை ஒரு பொற்கால ஆட்சியின் புதியதோர் புரட்சி பூபாள இசை எம் காதுகளில் தேனிசையாகப் பாய்ந்து பரவசப்படுத்துகிறது!

கோவில் கருவறைக்குள் பதுங்கிய ஜாதி - தீண்டாமைப் பாம்பு!

உழைப்பின் மறு உருவமாம்  ‘ மானமிகு சுயமரியாதைக்காரரான' எமது மூத்த சகோ தரர் மதிப்புமிகு கலைஞர் - தமது ஆசானான அறிவுத் தந்தையின் அன்புக்கட்டளையாக, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி, அதன்மூலம் கருவறைக்குள் ஒளிந்து கொண்ட ஜாதி - தீண்டாமைப் பாம்பை அடித்து விரட்ட முயன்றபோது, அதை ஆட்சியின் சட்டங்கள்மூலமே சாதித்துக் காட்டி சரித்திரம் படைப்போம் என்றார்.

அரை நூற்றாண்டுகால நீதிமன்ற - வீதிமன்ற அறப்போர்கள் தொடர்ந்தன. இன்று வெற்றிக்கனி பறித்துள்ளோம்!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்!

தந்தை பெரியாரின் உடலுக்கு அரசு மரி யாதை செய்த துணிச்சல்கார முதலமைச்சர் கலைஞர், அதன் பிறகு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.

‘‘தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்த எங்கள் அரசு, அவருடைய ‘‘நெஞ்சில் தைத்த முள்ளை'' - அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் சட்டத்தைச் செயலாக்கப் படுத்தி - அகற்ற முடியவில்லையே என்பதே எனது அந்த ஆதங்கம்- மனவருத்தம்'' என்றார்.

கடந்த 99 நாள்களுக்குமுன் கலைஞரின் கொள்கை வாரிசு, செயல்மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தந்தையின் ஆதங் கத்தைப் போக்கிய தனயனாக - திராவிடர் ஆட்சி முதலமைச்சராக அமர்ந்து முள்ளை அகற்றி, ஜாதி ஒழிப்பு - தீண்டாமை அழிப்பு வரலாற்றில் ஒரு புதிய பொன்னேட்டை இணைத்துள்ளார்.

மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் 58 பேருக்கு (அனைத்து ஜாதியினருக்கும்) அர்ச்சகர் நியமனம் ஆணை அளிப்பு!

அதுவும் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயத்தக்க வகையில் சிறப்புடன் செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்,  முத்தாய்ப்பாய் இன்று (14.8.2021) மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்  மண்டபத்தில் அனைத்து ஜாதியினர் பயிற்சி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு (58 பேருக்கு)  நியமன ஆணைகளை வழங்கி, துளி ரத்தம்கூட சிந்தாத அமைதிப் புரட்சியாக - அறிவுப் புரட்சியாக அகிலம் பாராட்டும் வண்ணம் ஒரு சமூகப் புரட்சியை, தக்க சான்றோர்கள், ஆதீனங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அனைவர் முன் னிலையிலும் சாதித்துக் காட்டியுள்ளார். பாராட்ட வார்த்தைகளே இல்லை!

முதலமைச்சரின்   ‘பேசாது செய்த புரட்சி' விழாவை மேலும் பெருமைக்குரியதாக்கியது!

சட்டத்தை செயலாக்கிய சாதனை!

அன்று தந்தை விரும்பினார்; தனயன் (கலைஞர்) ஆட்சியில் சட்டங்கள் செய்தார் - சலிக்காமல். இன்று தனது தந்தை விட்டுச் சென்ற பணியை தனயன் (முதலமைச்சர்) முடித்து வைத்தார்.

அறிஞர் அண்ணா, ‘‘பெரியாருக்கு ஆட்சியைக் காணிக்கையாக்கினார்'' - கலைஞர் அவர் விரும்பிய சட்டம் செய்தார் - கலைஞரின் தனயன் முதலமைச்சராகி  சட்டத்தினைச் செயலாக்கி  சாதனை சரித் திரம் படைத்திருக்கிறார்.

இது ஆட்சி மட்டுமல்ல - மீட்சியும் அல்லவா!

வகுப்புரிமை - சமூகநீதிப்  போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த நாள்

(ஆகஸ்ட் 14) இன்று! (1950).


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.8.2021

சனி, 8 பிப்ரவரி, 2020

தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.8 திரிபுராவில் லெனின் சிலை அகற்றப் பட்டது போல், தமிழ்நாட்டிலும் பெரியார் சிலைகள் இடிபடும் என்று பா.ஜ.க.வின் எச்.ராஜா சுட்டுரையில் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்து மதவெறி தலைக் கேறிய ஒருவன் கடந்த 17.9.2018 அன்று தாராபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தி, செல்பி எடுத்து தமிழகத்தில்  கலவரத்தை உருவாக்க முயற்சி செய்தான். பின் விசாரணைக்குப் பின் அவன் கந்தசாமி (கவுண்டர்) மகன் நவீன்குமார் என்று அறியப்பட்டு, அவன் மீது குற்ற எண் 454 ஷீயீ 2018 என்ற வழக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 504, மற்றும் 506 (2)  பிரிவுகளின் கீழ் தாராபுரம் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின்  பிணை மனு கடந்த 23.10.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்,  நீதிபதி வி.தண்டபாணி முன்பு மருத்துவர் கொடுத்த கடிதத்தைக் கொடுத்து மேற்படி நவீன் குமாருக்கு மன நோய்க்காக சிகிச்சை அவசியமாகிறது என்றும், அவரால் யாரையும் அடை யாளம் காண முடியவில்லை என்றும், உடனே பிணை கொடுக்க வேண்டும் என்றும் அவரது வழக்குரைஞர்  வாதிட்டும், அரசு வழக்குரைஞர் மருத்துவர் சான்றிதழ் கொடுத்துப் பேசினார்.

நீதிபதி அந்தக் கடிதங்களை என்னிடம் கொடுத்து ஒரு மனநோயாளியை இன்னும் சிறையில் வைத்திருக்க வேண்டுமா என்று என்னிடம் கேட்க, நான் அவர் மனநோயாளி அல்ல என்றும், தாராபுரம் நீதிமன்றத்தில் இந்த வாதத்தை வைக்காமல், மாவட்ட அமர்வு நீதிமன் றத்திலும், இங்கும்தான் வாதிடுகிறார்கள் என்றேன்.

மேலும் 17.9.2018 ஆம் தேதிக்குப் பின் சென்னை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை என்று முக்கிய ஊர்களில் பெரியார் சிலை சேதப்படுத்த நவீன்குமாரே காரணம். சென்னையில் பெரியார் சிலை மீது செருப்பு வீசிய ஜெகதீசன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். இதற்குக் காரணமான நவீன்குமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டும், திருப்பூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை. நவீன்குமார் பெரியார் பிறந்த நாளன்று தெரிந்தே இந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார். தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இன்று வரை எழுத்து மூலமான எதிர்ப்பினை ஏன் பதிவு செய்யவில்லை என்றும், பிணை மனு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.  விசாரணையின் போது நவீன் குமார் தந்தை கந்தசாமியும் (கவுண்டர்) உடனிருந்தார்.

இறுதியில் நீதிபதி நவீன் குமாருக்கு மனநோயாளிக் கான சிகிச்சை அவசியமாகிறது என்றும், அதனால் பிணை வழங்குவதாகக் கூறி கீழ்க்காணும் நிபந்தனை களை விதித்தார்.

1. நவீன் குமாரால் சேதப்படுத்தப்பட்ட தாராபுரம் பெரியார் சிலையை அவர் குடும்பத்தினர் சீர் செய்து சரிப்படுத்த (ரிப்பேர்) வேண்டும்.

2. மன நோய்க்கான சிகிச்சையை நவீன்குமார் உடனடியாக எடுக்க வேண்டும்.

3. மன நோய்க்கான சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு வாரங்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.

4. மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் உயர்நீதிமன்றம் அளித்த பிணை உத்தரவு தானாகக் காலாவதியாகிவிடும். அவரைக் காவல்துறை அதிகாரி கள் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இவை அநேகமாக மறந்திருக்கலாம்.

மேற்படி வழக்கில் தாராபுரம்காவல்துறையினரால் குற்றப்பத்திரிக்கை இன்று வரை தாக்கல் செய்யப்பட வில்லை. எனவே, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை செய்து இறுதி அறிக்கையினைத் தாக்கல் செய்ய தாராபுரம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார்தாரரும் தாராபுரம் கழக மாவட்ட திராவிடர் கழக செயலாளருமான க.சண்முகம்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இம்மனுவின் விசாரணை நேற்று (7.2.2020) நீதிபதி பி.இராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. இன்னும் புலன் விசாரணை முடியவில்லை என்று அரசு வழக்குரைஞர் கூறினார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு களாக இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததை சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள் மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக் கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தர விட்டார்.

- தகவல்: வழக்குரைஞர் சு.குமாரதேவன்

- விடுதலை நாளேடு, 8. 2. 20