புதன், 9 அக்டோபர், 2019

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் வந்தது எப்படி?

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவர்கள் வன்னியரா? இதோ உதயசூரியன் உருவான வரலாறு
-------------------------------------

தி.மு.கழகத்தின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ சின்னத்தைக் கொடுத்ததே வன்னியர்கள்தான் என்று சமீபகாலமாக மாங்காய்கள் வெம்பிக் கொண்டிருக்கின்றனர்.

கொள்கைச் செம்மல் ஏ.கோவிந்தசாமி அவர்கள் வன்னியர் குலத்தில் பிறந்தார்கள் என்பதைத் தவிர்த்து இன்றைய மாங்காய்களுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.

1952ல் ஏ.கோவிந்தசாமி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் தலைமையிலான உழைப்பாளர் பொதுநலக் கட்சி (Tamil Nadu Toilers' Party) சார்பாகதான் போட்டியிட்டாரே தவிர, திமுக சார்பில் அல்ல. அத்தேர்தலில் திமுக போட்டியிடாத நிலையில் ஏ.ஜி அவர்களுக்கு திக மற்றும் திமுகவினர் தேர்தல் பணி செய்து வெற்றி பெற வைத்தார்கள். அந்தத் தேர்தலில் அவருக்கு வழங்கப்பட்ட சின்னம் ‘சேவல்’. டிடிபி கட்சி, தேர்தல் அங்கீகாரம் பெறாத கட்சியாக இருந்தமையால் போட்டியிட்டவர்கள் சுயேட்சை சின்னமான ‘சேவல்’ சின்னத்தைப் பெற்று போட்டியிட்டார்கள். அந்த தேர்தலின் போது ‘உதயசூரியன்’ சின்னமும் சுயேட்சை சின்னம்தான். அந்தச் சின்னத்திலும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டதுண்டு.

ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ ஆன நிலையில் டிடிபி கட்சியும், காமன்வீல் கட்சியும் மைனாரிட்டி ராஜாஜிக்கு ஆதரவாக காங்கிரஸில் சேர்ந்தனர். இந்த முடிவை ஏற்காத ஏ.ஜி, உழவர் கட்சி என்கிற புதிய கட்சியை உருவாக்கினார் (திருக்குறள் முனுசாமி கூட இந்தக் கட்சியில் இருந்தார் என்று வாசித்த நினைவு). 1953ல் மும்முனைப் போராட்டம் நடந்தபோது திமுக முன்னணியினர் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி தாமாகவே முன்வந்து திமுகவில் இணைந்தார். திமுக கொள்கைகளை சட்டமன்றத்தில் முழங்கினார்.

அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எம்.எல்.ஏ.வான ஏ.ஜி, ஜில்லா போர்டு பதவிக்கு போட்டியிட்டார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சுயேட்சை சின்னம் உதயசூரியன் (நகராட்சி மற்றும் நகராட்சி வார்டுகள் தவிர்த்த உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சின்னம் இல்லை, சுயேட்சை சின்னம்தான்).

1957ல் திமுக முதன்முறையாக சட்டமன்றத்தில் போட்டியிட்டது. அரசியல் கட்சி அங்கீகாரம் இல்லாத நிலையில் திமுக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னங்களில்தான் போட்டியிட வேண்டியிருந்தது. அறிஞர் அண்ணா கூட சேவல் சின்னத்தில்தான் போட்டியிட்டார். கலைஞர் உட்பட சிலருக்குதான் உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் திமுக வென்றது.

இதையடுத்து அரசியல் கட்சி அங்கீகாரம் பெற்ற பிறகு 1958ல்தான் திமுக, தேர்தல் கமிஷனிடம் ‘உதயசூரியன்’ சின்னத்துக்கு விருப்பம் தெரிவித்து, அச்சின்னத்தைப் பெற்றது.

உதயசூரியன் சின்னத்தை திமுக விரும்பிக் கேட்டதற்கு காரணம் ஏ.கோவிந்தசாமியோ, அவர் ஜில்லா போர்ட் தேர்தலில் இச்சின்னத்தில் வெற்றி பெற்றதோ அல்ல.

காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி பெரியார் சுயமரியாதை இயக்கம் நடத்தத் தொடங்கியிருந்தார். 1929ல் செங்கல்பட்டில் இந்த இயக்கத்துக்கு மாநாடு நடந்தது. அப்போது மாநாட்டுக் கொடியில் சூரியன் உதிப்பதைப் போன்ற சின்னத்தை உருவாக்கி இருந்தார்கள். சூரியக் கதிர்களில் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்கள் வரையப்பட்டிருக்கும்.

பின்னர் ரெட்டைமலை சீனிவாசன் இயக்கத்தினரும் உதயசூரியனை தங்கள் சின்னமாக கொடியில் பொறித்தார்கள். ‘ரெட்டை மலை’ என்கிற பெயர் சீனிவாசனுக்கு இருந்ததால் இருமலைகளை வரைந்து அதற்கு நடுவே சூரியனை வரைவார்கள். எனவே இக்கட்சியினரேகூட சூரியக்கட்சி என்று அழைக்கப்பட்டார்கள். ‘உதயசூரியன்’ என்று பத்திரிகையும் நடத்தி இருக்கிறார்கள்.

இவ்வகையான வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலேயே உதயசூரியன் சின்னத்தை கேட்டுப் பெற்றார் பேரறிஞர் அண்ணா. மற்றபடி கொள்கைச் செம்மல் ஏ.கோவிந்தசாமி அவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் இச்சின்னத்தில் போட்டியிட்டதற்கும், பின்னர் திமுகவுக்கு உதயசூரியன் ஒதுக்கப்பட்டதற்கு எவ்வித நேரடித் தொடர்புமில்லை.

1957ல் சுயேட்சை சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்களில் ஒரே ஒருவர்தான் 1962ல் திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக அது உருவெடுத்தபோது, அதிலும் நின்று வென்றார். (அதாவது 1957ல் சூரியன் சின்னத்தில் நின்ற கலைஞர் தவிர்த்த திமுகவினர் எவரும் 1962ல் வெல்லவில்லை).

1957ல் தொடங்கி 2016 வரை 13 முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரே கட்சி, ஒரே சின்னம் என்று சாதனை படைத்தவர் கலைஞர். 60 ஆண்டு காலமாக ஒரு கட்சி, ஒரே சின்னத்தில் போட்டியிடும் பெருமையையும்bu இந்தியாவிலேயே திமுக மட்டும்தான் பெற்றிருக்கிறது.
நன்றி. ..............இவண் சி.ரமேஷ் வழக்கறிஞர் மாந்தாங்கல் இராணிப்பேட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக