புதன், 27 செப்டம்பர், 2023

ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்- அறவழியில் போராட்டம் விரைவில்!


 தந்தை பெரியார் நெஞ்சில் தைத்தமுள்ளை நீக்கி அவர் நெஞ்சில் பூ வைத்தவர் நமது முதலமைச்சர்

ஆகமம் தெரியாதவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக உள்ளனர்; 

ஆகமப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கின்றனர்!

1

ஆகமம் தெரியாத பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்; முறையாகப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கிறார்கள். இதற்கொரு முடிவு காண அறவழியில் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்படும் - ஆட்டம் போடவேண்டாம் ஆரியம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

14.8.2021 அன்று (இரண்டாண்டுகளுக்கு முன்பு) சமூகநீதிக்கான சரித்திர நாயகரும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு இதுவரை எந்த ஓர் அரசும் இந்தியாவிலேயே அதிகாரப்பூர்வமாகத் தராத ஒரு சிறப்பு இடம் தந்து, உயர்த்திய சாதனை புரிந்து, ஓர் அமைதிப் புரட்சியைச்  செய்து சரித்திரம் படைத்தார்.

இரத்தம் சிந்தாப் புரட்சி!

அதன்படி உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஆகமப்படி பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் பணி நியமனத்தை உரிய முறையில் பெற்று, கோவில்களில் பணி செய்து வருகின்றனர்!

அத்துடன் கோவில் கருவறைக்குள் தமிழும், பெண்களும் போகும் வகையில், 29 ஓதுவார்களுக்குப் பணி நியமனம் கிடைத்தது. இது ஒரு பெரும் சமூகப் புரட்சி - இரத்தம் சிந்தாதப் புரட்சி!

25.9.2023 அன்று இந்து அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட (அடுத்த வரிசை) 15 ஓதுவார்களில் 5 பெண் ஓதுவார் களுக்குப் பணி நியமனம் கிடைத்துள்ளது.

இந்த 10 பெண் ஓதுவார்களும் கோவில் களில் ஓதுவார்களாக நியமன வாய்ப்புப் பெற்றுள்ளார்கள்! 

நமது முத்தமிழறிஞர் கலைஞர் விரும் பியதுபோல, தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியதோடு, மேலும் கூடுதலாக ‘திராவிட மாடல்' ஆட்சி பெரியாரின் நெஞ்சில் பூ வைத்துள்ளது. எவரும் செய்ய அஞ்சும் பெண்ணியப் புரட் சியைச் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனைத்தான் நமது முதலமைச்சர் அவர்கள் மிகப் பொருத்தமாக சமூக வலை தளப் பதிவில் 26.9.2023 அன்று குறிப் பிட்டுள்ளார்கள்.

நமது முதலமைச்சர் அவர்களையும், இத்துறையில் இத்தகு சாதனைகளை நாளும் செய்துவருகிற அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.

கடந்த 28 மாதங்களில் 10 பெண் ஓதுவார் கள் பல கோவில்களுக்கு நியமனம் ஆகி யிருக்கிறார்கள்.

மொத்தம் உள்ள ஓதுவார் பணிகளில் 107 பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன!

இதுபோலவே அர்ச்சகர்கள் பணியில் பார்ப்பனர்கள் தொடுத்த பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்,

1.  பரம்பரை நியமனம் ரத்து என்பது செல்லும்.

2. ஜாதி அடிப்படை அல்லாது ஆகமத் தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்கள் நியமனங்கள் நடைபெறும் என்று திரும்பத் திரும்பக் கூறினாலும், குறிப்பிட்ட அமைப் பாளர்களும், பார்ப்பனர்களும் ஏதாவது ஒரு சட்ட சந்து, பொந்துக்குள் நுழைந்து  இந்த நியமனங்கள் தங்குத் தடையில்லாமல் நடை பெற, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் - ஒரு நிரந்தர முடிவு இல்லா ததுபோல (No Finality) ஒரு காட்சி ஜோட னைகளைத் தந்து, தங்களது ‘ஆக்டோபஸ்' தனத்தை அப்பட்டமாகக் காட்டியே வருவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

வல்லடி வழக்குகளைப் போடுவதா?

தமிழ்நாடு ‘திராவிட மாடல்' அரசு - பொறுமையாகவும், சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளாமலும் சட்டப் போராட்டத்தை உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து சளைக்காமல் நடத்தி வருகிறது!

‘‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை நியமனம் செய்கிறார்கள்'' என்கிற பொய் யான குற்றச்சாட்டுகளைக் கூறினர்.

மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே புதிய ஆட்டுக்கல்லில் போட்டு அரைப்பது போல, வம்படியாக வல்லடி வழக்குகள் போட்டு வருவது கண்டு தமிழ்நாட்டு ஒடுக் கப்பட்ட மக்கள் கொதித்து வருகின்றனர்!

தரக்குறைவாக நடந்துகொள்ளும் 

பார்ப்பனர்கள்!

தமிழ்நாடு அரசின், முதலமைச்சரின் பெருந்தன்மையை அவர்கள் பலவீனம் போல கருதி, சட்ட சிலம்ப சதிராட்டம் ஆடுகிறார்கள் பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத் - கோவில் பாதுகாப்பு குழு என்ற ஓர் அக்கிரகார அவதாரக் குழுவினர்.

அவர்கள் எந்த எல்லைக்குச் சென்றுள் ளார்கள் என்றால், சமயப் பெரியவர்கள் சுகிசிவம் போன்ற அறிஞர்களைத் தரக்குறை வாய்ப் பேசி, தாக்குதல் நடத்தத் துணியும் அளவுக்குத் தரம் தாழ்ந்த தங்கள் வன்மத்தை வெளிப்படையாகக் காட்டி வருகின்றனர்!

முதலமைச்சரையும், அமைச்சர்களை யும், அரசையும் நாராச நடையில் விமர்சிக்கின்றனர்!

தமிழ்நாடு அரசின் மனிதாபிமானம்

பல பிரபல கோவில்களில் நீண்ட காலம் - ஆகமப் பயிற்சியே அறவே இல்லாத அர்ச்சர்களை மனிதாபிமான - கருணை அடிப்படையில் அவர்களை வெளியேற்ற வில்லை - உடனடியாக இந்து அறநிலையத் துறை மறுபரிசீலனை செய்து அவர்களை வெளியே அனுப்பிட, சலுகைகளை நிறுத்திட ஆவன செய்ய, முடிவு எடுக்க பார்ப்பனரல்லாத பக்தர்களும், பயிற்சி பெற்று, வேலை கேட்டு விண்ணப்பித்தவர் களும் வீதிக்கு வந்து - கோவில்களுக்குமுன் வந்து தங்களது பயிற்சிக்குப் பின்னும் வேலை கிடைக்கவில்லை என்ற நிலையில், பயிற்சியே பெறாதவர்களை, ஆகமம் அறியாத அவ்வகை தற்குறிகள் அர்ச்ச கராகத் தொடர்ந்து, தங்களது வாய்ப் பிற்குத் தடையாக இருக்கலாமா? என்று போராடக் கிளம்பும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்களா?

பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவுக் காலம் வேலை கிட்டாமல் மனக்குமுறலுடன் இருப்பது?

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் 

தெருவில் நிற்பதா?

மற்றவற்றில் வருண தர்மம் பாராது எல்லா தொழில்களிலும் பார்ப்பனர் வயப் படுத்தும்போது, அதற்குரிய படிப்புப் படித்தும், எங்கள் சகோதரர்கள் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று தெருவில் நிற்பதா? என்னே, கொடுமை!

இதுபற்றி மிக வேகமாக சிந்திக்கவேண் டிய - அறவழியில் போராட்டக்களம் காணும் அவசரம் நெருக்குகிறது என்பதை ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.9.2023


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை ஒழிப்பதே இந்தக் கொடுமைக்கு ஒரே தீர்வு!


* ‘நீட்' தேர்வில்  பூஜ்ஜியம், மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள்கூட மருத்துவக் கல்வியில் முதுநிலைப்  படிப்பில் சேரலாம் என்றால், ‘நீட்' தேர்வு என்ற ஒன்று தேவையே இல்லை என்று ஆகிடவில்லையா?

* கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் திட்டம்தான் ‘நீட்!'

1

‘நீட்' தேர்வில் பூஜ்ஜியம் எடுத்தாலும், மைனஸ் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்றால், எம்.பி.பி.எஸ்.சில் சேர ‘நீட்' ஏன்? ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேரா மல் தடுப்பதுதானே - கார்ப்பரேட்டுகள் கொழுக்கத் தானே! இக்கொடுமைகளுக்கு வரும் 2024 இல் நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை வீழ்த்துவதே ஒரே தீர்வு  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

‘நீட்' தேர்வு என்பது இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்துக்கும் ஒரே தேர்வு என்று முதலில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு - பிறகு அதன் கொடுங்கரங்கள் மருத்துவ மேற்பட்டப் படிப்புகளுக்கும் என்று ஆக்கியது - ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மற்றும் முதல் தலைமுறையினர் டாக்டர்களாக வருவதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பார்ப்பன வருணாசிரமத்தின் ஒருவகையான புது அவதாரமே ஆகும்.

‘நீட்' தேர்வில் ஊழல் நடக்கவில்லையா?

ஏற்கெனவே நேரிடையாக அந்தந்த மாநிலங்களில் மருத்துவக் கல்வித் தேர்வு நடைபெற்று வந்ததில், ஊழல் ஏதோ பெரும் அளவில் தலைவிரித்தாடியதுபோலவும், அதன்மூலம் ‘‘தகுதி, திறமை'' உள்ள மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரவில்லை என்பதுபோலவும் போலிக் காரணங்களைக் கூறினர்.

‘தகுதி, திறமை' என்ற பெயரால் எத்தகைய மோசடி கள் ‘நீட்' தேர்வில் - அது தொடங்கிய 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை நடந்துள்ளன எனவும், ஆள் மாறாட்டம் உள்பட பல கேவலமான ஊழல்முறைகளால் அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் வழக்கு கள் பல உயர்நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு, நீதிபதிகளால் சுட்டியும் காட்டப்பட்டுள்ளது!

வணிக முறையில் ‘நீட்' தேர்வு தயாரிப்பா?

அதற்கான அரசு ஆணை (G.O.) ஒன்றிய அரசால் வெளியிடும்போதே, அது உலக வர்த்தகத்தின் அடிப் படையின்கீழ்தான் (GATT) வெளியிடப்பட்டது. அப்படி யானால், வணிகம் போன்றே ஆக்கப்பட்டது என்று பொருள். நாம் அப்பொழுதே, தொடக்கத்தில் இதைச் சுட்டிக்காட்டினோம்.

இந்த நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டில் உள்ள ‘Non Resident Indians (NRI), Overseas Citizen of India (OCI), Persons of Indian Origin (PIO)  தவிர, நேரடியாக அயல்நாட்டினருக்கு (Foreign Nationals)  என்றே 2017 முதல் இட ஒதுக்கீடு செய்து, பல மருத்துவக் கல்லூரிகள் குறிப்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளைப் பணத்தை அதிகாரப்பூர்வமாகவே - சட்டப் பூர்வமாகவே சம்பளம்மூலம் பெற இதில் வழிவகை செய்யப்பட்டதோடு, ‘நீட்' (NEET) தேர்வுக்கான பயிற்சி மய்யம் என்ற பெயரால், கார்ப்பரேட் கொள்ளை இலாபக் குபேரர்கள், ஒவ்வொரு பயிற்சி மாணவரிடமும் 3, 5, 8 லட்சம் ரூபாய் வரை வசூலித்து, பல கோடி ரூபாய் ‘‘அறுவடை'' செய்துகொள்ள ‘நீட்' தேர்வு அவர்களுக்கு வசதியாகக் கதவுகளை அகலமாகத் திறந்து வைத்தது.

‘நீட்' காரணமாக தற்கொலைகள்!

தமிழ்நாட்டிலும், கருநாடகத்திலும், ஆந்திரத்திலும், அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் ‘நீட்' தேர்வு காரணமாக ஏராளமான மாணவர்கள் மன அழுத்தத்தாலும், தோல்வி அச்சத் தாலும் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரம் தொடர் கதையாகி வருகிறது!

ஒன்றிய அரசோ இந்தத் தற்கொலைகளைப்பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவோ, இரக்கங்காட்டி இதன் மூலத்தை ஆராய முன்வரவோ இல்லாது, ‘‘மூர்க்கனும், முதலையும் பிடித்ததை எளிதில் விடமாட்டார்கள்'' என்பதுபோன்று நடந்துகொண்டு வருகிறது!

நேற்றுமுன்தினம் (20.9.2023) ஒன்றிய அரசின் மருத்துவ சுகாதாரத் துறையின்மூலம் ஒரு விசித்திர அறிவிப்பு வெளிவந்தது!

‘‘நீட் தேர்வில் Zero Percentile   பூஜ்ஜியம் மதிப்பெண், மைனஸ் மதிப்பெண் வாங்கியவர்களும்கூட, மேற் பட்டப் படிப்பில் கலந்தாய்வில் கலந்துகொண்டு மேற் பட்டப் படிப்பில் சேரலாம்'' என்பதே அது!

ஜீரோ பெர்சண்டைல் என்றால், பூஜ்ஜியம் மதிப் பெண்கள் மட்டுமல்ல, அதற்கும் கீழே மைனஸ் மதிப் பெண்கள் எடுத்திருந்தாலும் தகுதி உண்டு என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள். (‘நீட்' தேர்வில் நெகட் டிவ் மதிப்பெண் கள் உண்டு என்பதால், பூஜ்ஜியத்துக்கும் கீழும் மதிப்பெண்கள் (மைனஸ்) வழங்கப்படும்).

கார்ப்பரேட்டுகள் கொழுக்கவா?

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனே நமது தி.மு.க. தலைவரும், ஏனைய தமிழ்நாட்டு சமூகநீதிப் போராளி களான பல முற்போக்குக் கட்சியினரும், 

1. அப்படியானால், இந்த மேற்படிப்பில் சேர ‘நீட்' தேர்வு எழுதவேண்டும் என்ற நிபந்தனை ஏன் இருக்க வேண்டும்?

2. ‘நீட்' தேர்வுக்கும், இந்த மேற்பட்டப் படிப்புக்கும் இந்த முன் நிபந்தனை எதற்காக?

கார்ப்பரேட்டுகள் மாணவர்களைச் சுரண்டிக் கொழுக்கவா? அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடமிருந்து சம்பளக் கட்டணமாக ரூ.50 லட்சத்திற்குமேல் ‘வசதி'யாக வசூலித்துக் கொண்டு கொள்ளை ராஜ்யம் நடத்தவா? பின் எதற்காக?

பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றாலும், மைனஸ் மதிப்பெண்கள் பெற்றாலும் ராஜ்ஜியம் நடத்தலாம் பணக்கார பெருமுதலாளிகளின் பிள்ளைகள் என்பதற் காகவா?

இப்போது அதிகாரப்பூர்வமாக அதிக சம்பளக் கட்டணம் வைத்து, அதிகாரப்பூர்வ (சட்டப்பூர்வமாக) பணமாகவே அதிக பணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரியினர் பெற இது வசதி செய்கிறதா, இல்லையா?

தகுதி, திறமை என்று பேசுவோர் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து 100% மதிப்பெண்கள் எடுத்தாலும் தரம் இல்லை என்று சொல்லிவிட்டு, இப்போது ‘நீட்' தேர்வில் 0%-க்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும், இடம் உண்டு என்று சொல்வது தடித்தனம் அல்லவா?

யாரெல்லாம் மருத்துவ மேற்படிப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள்?

PG-NEET தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் எடுத்த 14 பேரும், பூஜ்ஜியத்திற்கும் கீழே மைனசில் மதிப்பெண்கள் (-40/800 வரை) எடுத்துள்ள 13 பேரும் மருத்துவ மேற்படிப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள் என்கிறது ஒன்றிய அரசின் அறிவிப்பு. அதாவது தேர்வு எழுதிய 2,00,517 பேரும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம் என்றால் எதற்கு அந்தத் தேர்வு? கார்ப்பரேட்டுகள் கொழுக்கவா?

இளநிலைக்குச் (எம்.பி.பி.எஸ்.) சேரும்போது, ‘நீட்', பிறகு தேர்வுகள், அதற்குப் பிறகு ‘நெக்ஸ்ட்', அதையும் தாண்டி மேல்படிப்புக்கும் ‘நீட்' (P.G. NEET) என்றால், அவர்கள் தேர்ந்தெடுத்த ‘நீட்' ‘தகுதி'யாளர்கள்மீதே அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்று பொருளா? அல்லது ஒவ்வொரு இடத்திலும் கோச்சிங் சென்டர் கொள்ளைகளுக்கு வகை செய்து கொடுக்கவேண்டும் என்ற கொள்ளை வணிக நோக்கமா?

மருத்துவக் கல்லூரி நடத்தும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூட, PG NEET தேர்வில் தோல்வியடைகிறார்கள், குறைந்த மதிப்பெண்கள் எடுக் கிறார்கள் என்றால் என்ன வகையான சதி இது?

உலக நாடுகளில் பிரபல டாக்டர்களாக - இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பரிணமிப்பது 

‘நீட்' தேர்வு எழுதியா?

தகுதி, திறமை பேசும் இந்த உயர்ஜாதி உன்மத்தர் களைக் கேட்கிறோம், இன்று பல வெளிநாடுகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சர்ஜன் - ஜெனரல் - தலைமை மருத்துவ ஆலோசகர்கள், ஆளுமைப் பொறுப்பில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக தென்னாட்ட வரில் ‘நீட்' தேர்வு எழுதியதாலா அந்தப் பதவிக்குத் தகுதியாகி உள்ளார்கள்?''

இல்லையே!

நம் மருத்துவக் கல்லூரிகளில் படித்து, ‘நீட்' தேர்வு எழுதாமலே சென்று படித்தவர்கள்தானே!

வரும் தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சியை ஒழித்தால்தான் விடிவு பிறக்கும்!

ஒடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக, கிட்டாப் பொருளாக ஆகும் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த ‘நீட்' என்ற பன்னாடைத் தேர்வு முறை.

இதனை ஒழிக்க ஓர் அரிய வாய்ப்பு வரும் பொதுத் தேர்தல் (2024). அதில் இந்த பார்ப்பனிய மேலாண்மை ஆதிக்கம் கொழுந்துவிட்டு எரியும் பா.ஜ.க. - 

ஆர்.எஸ்.எஸ். அரசை அகற்றிவிட்டால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் (‘நீட்' தேர்வு ஒழிப்பு உள்பட) உரிய விடியல் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நிச்சயம் ஏற்படும்!

வடக்கேயும் ‘நீட்' கொடுமை இப்போது புரிய ஆரம்பித்துவிட்டது!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.9.2023

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களையும் இழிவாகப் பேசுகிறார் அண்ணாமலை


இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் அதைவிட அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

2

திராவிட இயக்கத்தையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுபடுத்திப் பேசிவரும் அண்ணாமலை தலைமை வகிக்கும் பி.ஜே.பி.யுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என்ற பெயரில் உறவு கொண்டால், அதைவிட அரசியல் விபத்து அ.தி.மு.க. வுக்கு வேறு ஒன்று இருக்க முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.  

அவரது அறிக்கை வருமாறு:

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்பது போன்ற செய்திகள் நேற்று (18.9.2023) தொலைக்காட்சி ஊடகங்களில் முதலிடம் பிடித்துள்ளன.

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவையும் கொச்சைப்படுத்திப் பேசும் அண்ணாமலை!

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் திட்டமிட்டே திராவிடர் இயக்கத்தையும், ஆட்சியையும், அதன் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அ.தி.மு.க. தலைவர்களையும் வம்பிழுப்பது போன்று - தனக்குத் தெரியாத பழைய செய்திகளை - யாரோ அரைகுறைகள் எடுத்துத் தந்த ஆதாரமற்ற தகவல்களை ‘பாத யாத்திரை'யில் பேசி, ஊடக விளம்பரம் தேடிட முயற்சிக்கிறார்.

விளம்பர வெளிச்சத்துக்காகப் பேசுகிறார்

விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்பதற்காக இந்த விபரீத வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

அதற்கான பதில்களை அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் கள் தருவதோடு, பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என் றும் தெரிவித்துள்ளனர்.  இது தற்காலிகமா? நிரந்தரமா? மீண்டும் ‘‘சுவற்றுக்கீரையை வழிச்சிப் போடு'' என்று கேட்கும் நிலை ஏற்படுமா? என்பதே கேள்வி.  இந்த நிலையில் உறுதியாக இருக்கவேண்டும். அகில இந்திய பி.ஜே.பி. இதுகுறித்து எவ்வித மூச்சும் விடவில்லை.  ‘‘குட்டி பகை ஆடு உறவு'' என்பதுபோன்ற நிலையை இனியும் அ.தி.மு.க. எடுக்கலாமா? என்ற கேள்வி எங்கும் பரவலாக உள்ளது!

அ.தி.மு.க.வினருக்கு ஒரு வேண்டுகோள்!

அ.தி.மு.க. சகோதரர்களுக்கு ஒரு முக்கிய வேண்டு கோள்: ‘‘சுயமரியாதை என்பது தவணை முறையில் வருவதல்ல; அது நிரந்தரமாக அமைதல் வேண்டும்.''

தமிழ்நாட்டு அரசியலில் பங்காளியையும், பகையாளி யையும் சரியாக அடையாளம் கண்டு, அதற்கேற்ப அரசியல் களம் அமைவதே முக்கியம். பங்காளி உறவு வேறு; பகையாளி நோக்கம் வேறு.

நம் இன எதிரிகள் முதலில் அரசியல் ரீதியாக இக்கட்சி, அடுத்து அக்கட்சி என்று திட்டமிட்டு செயல்படுகின்றனர். பதவி ஆட்சி பலம், பண பலம், புஜ பலம், பத்திரிகை பலம் என்று எல்லா வகை பலத்தையும் பிரயோகிக்க தங்களது அதிகார பலத்தின்மூலம் ஆயத்த நிலையில் உள்ளனர்.

இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் 

அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் - அது மிகப்பெரிய அரசியல் விபத்தே!

இந்நிலையில், அ.தி.மு.க. என்ற அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி பா.ஜ.க.வுடன் உறவை உறுதி செய்தால், அதைவிட மிகப்பெரிய அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!

காலே இல்லாத காவிகள் காலூன்றிட எண்ணுவதே கூட்டுப் பலத்தைக் கணக்கிட்டுதானே! ஆட்டுக்கு மாலை போடும் பூசாரிக்கு, அதன்மீதுள்ள மதிப்பா - கவலையா காரணம்?

சிந்தியுங்கள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
19.9.2023

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா


15

பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.

கருநாடக அரசின் சமூக நலத்துறை தொடர்பாக பன் னாட்டு ஜனநாயக தின விழா பெங்களூரு விதான சவுதாவில்  நடைபெற்றது. இதில் முதல மைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அரசியல் சாசன புத்தகத்தை வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா, காவல் துறை அமைச்சர் பரமேஸ்வர், கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, உணவுத்துறை அமைச்சர் கே. எச்.முனியப்பா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கன்னட மொழி வளர்ச் சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, பொதுப் பணித்துறை அமைச்சர் சதீஸ் ஜார்கிகோளி, மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, சட்டமன்ற மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களும் உறுதிமொழி எடுத் தனர். அதுபோல் இந்த விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்றிருந்தனர். அவர்கள் விதானசவுதா கட்டடம் முன் பாக நின்று அரசியல் சாசன புத் தகத்தை வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் முதலமைச்சர் சித் தராமையா பேசும்போது கூறிய தாவது:- அரசியல் சாசனத்தை ஒழித்துவிட்டு மனு தர்மத்தை (ஸநாதன தர்மம்) அமலுக்கு கொண்டு வந்தால், 90 சதவீத இந்தியர்கள் அடிமைத்தனத்தில் தள்ளப்படுவார்கள். இதற்காக பல்வேறு சதிகள் நடைபெற்று வருகின்றன. நாம் இந்திய மக்கள் என்று சொன்னதுமே அரசியல் சாசன புத்தகம் திறந்து கொள் கிறது. அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாம் சரியாக புரிந்து கொண்டு பின்பற்றா விட்டால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது.

சமத்துவ சமுதாயம் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளின் படி எங்கள் அரசு அனைவரின் முன்னேற்றத்திற்காக திட்டங் களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. மக்களின் பணத்தை மீண்டும் மக்களுக்கே வழங்குவது தான் எங்கள் திட்டங்களின் நோக் கம் ஆகும். அரசியல் சாசனம் தொடங்கப்பட்ட பிறகு நமது நாட்டில் ஜனநாயகம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. புத்தர், பசவண்ணர் காலத்தில் இருந்தே ஜனநாயக கோட்பாடுகள் நமது மண்ணில் இருந்தது. அரசியல் சாசனத்தை அமலுக்கு கொண்டுவந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களிலிருந்து நமது அரசியல் சாசனத்தின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட் டது. அரசியல் சாசனத்திற்கு எதிரான சக்திகள், மனு தர் மத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றன. இதில் எச்சரிக் கையாக இருக்க வேண்டும். இவ் வாறு சித்தராமையா கூறினார்.

பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் பன்னாட்டு ஜனநாயக தின விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள், பள்ளி, -கல்லூரி மாணவ-மாணவிகள் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்கும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இதில் பங்கேற்ற வர்கள் அனைவரும் அரசியல் சாசன புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பிரதமர் மோடி மத்தியபிர தேச மாநிலம் போபாலில் நடந்த விழாவில், ஸநாதன தர்மத்தை ஒழிப்பதையே குறிக் கோளாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் செயல்படுவ தாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, ஸநாதன தர்மத்தை அமல்படுத்தினால் மக்கள் அடிமைப்படுத்தப்படு வார்கள் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனி, 16 செப்டம்பர், 2023

“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்


23

காஞ்சிபுரம்,செப்.15- அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத் தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்ட தொடக்கத்தில் அடையாளமாக 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண் டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் - அறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

 சட்டமன்றப் பேரவையில் விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நா ளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீ காரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத் தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.  

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீ கரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது,  குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்றும், இந்த மகத்தான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார். 

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்றும், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை அறிவுறுத்தி இருந்தார்.  

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

தருமபுரி  மாவட்டம், தொப்பூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின்  விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை  தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார். 

இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 24.7.2023 முதல் 4.8.2023 வரை முதல் கட்டமாகவும்,  5.8.2023 முதல் 14.8.2023 வரை இரண்டாவது  கட்டமாகவும், மேற்சொன்ன இரண்டு கட்டங்களிலும்,  விடுபட் டவர்களுக்கு 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள்  பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்துள்ளது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 

விண்ணப்பதாரர்களின்  விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர் களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.9.2023 முதல் அனுப்பி வைக்கப்படும்.  

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தல்

அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான இன்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்து, 13 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி எம். மகாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப் பினர்கள் கே. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், கு. செல்வப்பெருந்தகை, இ. கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர். ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, வளர்ச்சி ஆணையர் / முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி மோகன், வங்கிகளின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

இதுதான் ஸனாதனம் என்பது!

Viduthalai  September 10,-2023  இந்தியா,

கோவில் கட்டிய மகாராணியையே வெளியே தள்ளிய கொடுமை!
காரணம், மகாராணி விதவையாம்!

1
போபால், செப்.10 கோவில் கட்டிய மகா ராணியையே வெளியே தள்ளிய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. காரணம், மகாராணி விதவையாம் - இதுதான் ஸனாதனம்!

விவரம் வருமாறு:

பன்னா மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டம். முன்பு குவாலியர், மேவாட், இந்தூர், சித்தோட் போன்ற சமஸ்தானங்களில் ஒன்றாக இருந்தது

இந்த சமஸ்தான பட்டத்து மகாராணி ரித்தேஷ்வரி ராஜே.  இவர் தற்போதைய ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான வசுந்தரா ராஜேவின் நெருங்கிய உறவினரும் கூட 

பன்னா மத்தியப் பிரதேசத்தின் ‘‘கோவில் களின் நகரம்'' என்று அழைக்கப்படுகிறது, பன்னா சமஸ்தான மன்னர்கள் பலநூறு கோடிகள் ஒவ்வொரு கோவில்களுக்கும் வைப்பு நிதியாகத் தந்து அதில் வரும் வட்டியில் தான் கோவில் நிர்வாகம் நடக்கிறது,

பட்டத்து மகாராணிக்கே அவமானம்!

நடந்து முடிந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று தற்போதைய பட்டத்து மகாராணியும், ஜோதி ராதித்ய சிந்தியாவின் அத்தையுமான ரித் தேஷ்வரி ராஜே தாங்கள் கட்டிய பத்மாவதி கோவில் பிரகாரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலின் விழாவில் கலந்துகொண்டு ஆரத்தி எடுக்க முயல, கைம்பெண்ணான அவரை ஆரத்தித் தட்டை தொடவிடாமலும், கோவிலுக்குள் நுழையவிடாமலும் அடித்து வெளியே தள்ளியுள்ளனர்.

இந்நிகழ்வின் போது பட்டத்து இளவரசரான பைரவ்சிங் ராஜேவும் அங்கே நின்றுகொண்டு இருந்தார். ஆனாலும், அவரால் தனது தாயாரை எழுப்பி விட முடிந்ததே தவிர, தள்ளி விட்ட பார்ப்பனர்களை ஒன்றும் கேள்வி கேட்க முடியவில்லை. 

இக்கோவிலில் மகாராணிகள் ஆரத்தி எடுப்பது வழக்கம், ஆகையால்தான் கடந்த ஆண்டைப்போல் பன்னா மகாராணி ஆரத்தி எடுக்க முயன்றார். அவர்களது முன்னோர்கள் கட்டிய கோவில், அவர்களது நிதியில் இன்றும் இயங்குகிறது, ஆனால், கணவனை இழந்தவர் என்பதால் அடித்து விரட்டுகிறார்கள்.    

இன்றும் ஸனாதனம் இவ்வளவு கொடூர முகம் காட்டுகிறது, ஆனால், கட்டுக்கதைகளை அப்படியே நம்பிக்கொண்டு ஸனாதன அடிமைகளாக மக்கள் இருப்பதையும் காண முடிகின்றது.

மகாராணி மீதே வழக்காம்!

இந்த நிலையில் கோவில் நிர்வாகம்- பன்னா மகாராணி மீது ‘‘ஹிந்துக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் நடந்துகொண்டார். மேலும் கோவில் ஊழியர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்த முயன்றார்'' என்று பார்ப் பனர்கள் கொடுத்துள்ள புகாரின்படி பாதிக் கப்பட்ட மகாராணி மீதே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சனி, 2 செப்டம்பர், 2023

சிங்கப்பூர் அதிபராக தமிழர் தேர்வு


21

சிங்கப்பூர், செப். 2
- சிங்கப்பூரின் அதிபராக கடந்த 6 ஆண்டுகளாக ஹலிமா யாகூப் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவரின் பதவிக்காலம் இந்த மாதம் 13-ஆம் தேதி யுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டேன் என அறிவித்த நிலையில், அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது .

அதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில், அதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76) டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நடை பெற்றது.

இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று (1.9.2023) அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில், வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இலங்கை வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 2001-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரசியலில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த அவர், சிங்கப்பூரின் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிய மைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது நாட்டின் உயரிய பதவி யான அதிபர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.