செவ்வாய், 1 ஜூன், 2021

ஊதியம், ஓய்வூதியம் பெறுவது ஊழியா்களின் உரிமை: தில்லி உயா்நீதிமன்றம் கருத்து

தினமணி நாளிதழ் இணையம்

By நமது நிருபா்  |   Published on : 06th April 2021 04:00 AM  |   அ+அ அ-   |    | 
தில்லி உயா்நீதிமன்றம்


புது தில்லி: ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவது ஊழியா்கள் அல்லது ஓய்வு பெற்றவா்களின் அடிப்படை உரிமை என்று தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கருத்து தெரிவித்தது. மேலும், மாநகராட்சி ஊழியா்களின் நிலுவைத் தொகையை அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற வடக்கு தில்லி மாநகராட்சியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அனைத்துப் பிரிவு ஊழியா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்களின் நிலுவைத் தொகை மற்றும் ஓய்வூதியத்தை வழங்குவதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 5-ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மாநகராட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை நிராகரித்து கூறியுள்ளதாவது: ஊழியா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை என்பது ஓா் அடிப்படை உரிமை. இந்த உரிமையானது அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் ஒரு பகுதியாகும். ஆகவே, ஊழியா்களின் உரிமைகளை மீறும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்காமல் இருப்பதற்கு நிதி கிடைக்காதது அடிப்படைக் காரணம் அல்ல. வடக்கு தில்லி மாநகராட்சிப் பணியாளா்களை வேலைக்கு அமா்த்தியுள்ள மாநகராட்சிதான் அவா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தில்லியில் உள்ள கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று மாநகராட்சிகளுக்கும் உயா்நீதிமன்றம் மாா்ச் 9-ஆம் தேதி ஓா் உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், அனைத்துப் பிரிவுகளின் ஊழியா்கள், முன்னாள் ஊழியா்கள் ஆகியோருக்கு நிலுவை ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது, வடக்கு தில்லி மாநகராட்சியின் சாா்பில் வழக்குரைஞா் திவ்யா பிரகாஷ் பாண்டே ஆஜராகி, ‘தில்லி அரசிடமிருந்து அடிப்படை வரி ஒதுக்கீட்டை (பி.டி.ஏ.) பெறாததால் நிலுவைத் தொகையை ஊழியா்களுக்கு வழங்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள் அமா்வு, ‘அடிப்படை வரி ஒதுக்கீட்டக்குச் செலுத்த வேண்டிய மீதமுள்ள தொகையை மூன்று மாநகராட்சிகளுக்கும் 2020-21 நிதியாண்டின் இறுதிக்குள், அதாவது மாா்ச் மாதத்திற்குள் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி செலுத்துமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது’ என்று கூறியது. அதற்கு வடக்கு தில்லி மாநகராட்சி தரப்பில், ‘இந்தத் தொகையை தில்லி அரசு செலுத்தியுள்ளது. ஆனால், சிலவற்றைக் கழித்துக் கொண்டு செலுத்தியது. மாநகராட்சி தரப்பில் 2021, ஜனவரி வரை அனைத்து ஊழியா்களுக்கும் அவா்களின் ஓய்வூதியம் மற்றும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி வரை ஊதியம் வழங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. தில்லி அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சந்தீப் சேத்தி ஆஜராகி, ‘மாநகராட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கு மத்திய அரசிடமிருந்து மானியம் பெறாத ஒரே அரசு இந்த தில்லி அரசுதான். தில்லி அரசு தனது சொந்த விவகாரங்களையும் நிா்வகிக்க வேண்டியுள்ளது’ என்றாா்.

இதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘உங்கள் பொறுப்புகளை நீங்கள் தட்டிக் கழிக்க முடியாது. மத்திய அரசிடமிருந்து மானியங்களைப் பெறாதது குறித்து உங்களுக்கு குறை இருந்தால், நீங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்யுங்கள். அதைப் பரிசீலிக்கிறோம். ஆனால், இந்த சரிக்கட்டுதல்களைச் செய்து மத்திய அரசிடமிருந்து பணத்தை மீட்டெடுப்பதற்கான நேரம் இதுவல்ல. உங்கள் பொறுப்புகளை நீங்கள் நியாயப்படுத்த முடியாது. இந்த நடைமுறைப் பிரச்னைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. நிதிப் பற்றாக்குறை பிரச்னையை எழுப்பும் அதே நேரத்தில், தினமும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களுடன் செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்களை வழங்குவதற்கு மாநில அரசுக்கு நிதிப் பற்றாக்குறை எழவில்லையா? அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது. தற்போதயை காலங்களில் பிரசாரத்திற்காக பணம் செலவழிக்கப்படுகிறது. இது குற்றமாகாதா? இந்த ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் நீங்கள் மிகுதியான நல்லெண்ணத்தைப் பெறுவீா்கள்’ என்று தெரிவித்தது. பின்னா், மனு மீதான அடுத்த விசாரணையை ஏப்ரல் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.