மனிதப்பற்று, தன்மானம், பகுத்தறிவு, சரிநிகர், இனவுணர்வு, மொழி உணர்வு இவற்றிற்காகவும் நலவாழ்வு,வரலாறு மற்றும் சிந்தனைத் தூண்டலுக்காகவும் பயன்பட
செவ்வாய், 23 மே, 2023
தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்
வெள்ளி, 8 அக்டோபர், 2021
அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் கட்டாயம் - அரசு வேலையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்வு
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
சென்னை, செப்.14 அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (13.9.2021) சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப் படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும்.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை
(வேலைவாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசுப் பணியி டங்களில் பின்வரும் இனத்தவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்) கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
கரோனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
பாலின சமத்துவம் முக்கியமானது
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும். மாற்றத்தை ஊக்குவிப் பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து, நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில், பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீத ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்திட உரிய சட்டத்திருத்தம் மேற்கொள் ளப்படும்.
தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வு நடவடிக்கைகளை மேம்படுத்த ரூபாய் 15 லட்சம் செலவில் மடிக்கணி னிகள் மற்றும் அதைச் சார்ந்த மென் பொருட்கள் வழங்கப்படும்.
அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மய்யம் மற்றும் (அ) மற்றும் (ஆ) பிரிவு அடிப்படை பயிற்சி நிலையத்தில் கணினி ஆய்வகத்தில் புதுப்பிக்கும் பொருட்டு ஒரு லட்ச ரூபாய் செலவில் கணினி அச்சுப்பொறி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்
முதன்மைப் பேச்சு நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையத்தில் மாநில, ஒன்றிய அரசு மற்றும் பொதுப்பணித் துறை நிறுவன அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயிற்சி யாளர்கள் அண்ணா மேலாண்மை நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து பயிற்சி தொடர்பாக தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லவும், பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்து வசதிக்காகவும் 40 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மினி பேருந்துகள் வாங்கப்படும்
அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடகப் பாதை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஒரு படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும். அதற்கான அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும்
மாநில அரசுப் பணியில் உள்ள இடை நிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் அரசு விடுதி காப்பாளர்கள் மற்றும் முறையான பயிற்சி பெறாத அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதற்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
