கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 டிசம்பர், 2023

சென்னை வெள்ளப் பேரிடர் பணிகளில்... "பெரியார் தொண்டறம் அணி" சார்பில் 15,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன! தொடரும் "பெரியார் மருத்துவக் குழுமத்தின்" இலவச சிறப்பு மருத்துவ முகாம்!


16-10

சென்னை டிச.13, சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு மழை காரணமாக ஏற்பட்ட பாதிப் புகளில், பெரியார் தொண்டறம் அணி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருந்த நிலையில் தொடர்ந்து மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் 36 மணி நேரத்தில், 47 ஆண்டுகளில் இல்லாத 50 செ.மீட்டருக்கும் மேல் பொழிந்த கனமழை காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னை புறநகர்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு இயந்திரம் போர்க்கால அடிப்படையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக பெருமளவி லான உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் தவிர்க்கப்பட்டது. மீட்புப் பணிகளும் அரசால் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றதால் மூன்றே நாட்களில் 90 விழுக்காடு பகுதிகள் வழக்கம் போல இயங்கத் தொடங்கிவிட்டன. மற்ற இடங்களி லும் நிவாரணப்பணிகள் அரசால் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டும், படகுகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு தமிழ்நாடு அரசு, மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த வெள்ளப்பேரிடரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட, பெரியார் தொண்டறம் அணி, கடந்த 6 ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரையிலுமான 6 நாட் களில் வேறு யாரும் செல்லத் துணியாத, இடுப்பளவு தண்ணீரில் சென்று அங்கிருக்கும் 15,000 மக் களின் பசியைத் தணித்திருக்கின் றனர். உணவு, பிஸ்கட், ரொட்டி, தண்ணீர் ஆகியவற்றை வழங்கி யது. 12 ஆம் தேதி, உணவு தயா ரிப்பை கைவிட்டு மற்ற பணிகளை முன்னெடுத்த நிலையிலும் 1000 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு தேவை இருப்பதாக அழைப்பு வந்ததால் 2000 நபர் களுக்கு உணவு தயாரிக்கப்பட்டு, பெத்தேல் நகர், அயனாவரம் ஆகிய பகுதிகளில் உணவு வழங் கப்பட்டன. திடீரென்று இதற்கான களப்பணியாளர்களை திரட்ட முடியாத சூழலில், பெரியார் திடலில் சந்தா வழங்கும் விழாவுக்கு வருகை தந்திருந்த தோழர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு 2000 டப்பாக்களில் உணவை அடைக் கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உரிய இடங்களுக்கு அனுப்பப்பட் டது. இப்பணிகளில் ஊடகவிய லாளர் அழகிரிசாமி, தஞ்சை இரா. ஜெயக்குமார், செந்தூர்பாண்டியன், ஓசூர் வன வேந்தன், கிசோர், பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள் ஆகியோர் அப் பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக முடித்துக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மக்களுக்கு இன்றைய தேவையான மருத்துவ உதவிகள் செய்யும் பொருட்டு, பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் முதல் கட்டமாக வருகிற டிசம்பர் 16, 17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு தேதிகளில் அமைந்தகரை, வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு, நடத்தப்பட இருக்கின்றன.

செவ்வாய், 12 டிசம்பர், 2023

வீடு வீடாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன


28-2-scaled

“எங்க ஊருக்குள்ள இதுவரைக்கும் யாருமே வந்ததில்லை; நீங்கதான் முதலில் வந்திருக்கீங்க”
எண்ணூர் அத்திப்பட்டு மக்கள் “பெரியார் தொண்டறம் அணி” தோழர்களிடம் நெகிழ்ச்சி!

எண்ணூர், டிச.10 அத்திப்பட்டு, அத்திப் பட்டு பள்ளம் பகுதிகளில் பெரியார் தொண்டறம் அணி சார்பில் நேற்று (9.12.2023) நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த 50 ஆண்டு காலம் காணாத பெருமழை பொழிந்த காரணத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச் சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், முதல மைச்சரே முன்னுதாரணமாக களத்தில் நின்று வழிகாட்டியதால் சென்னைப் பெருநகரம் விரை வில் மீண்டு விட்டது. புறநகர்களிலும் அரசு மற்றும் தன்னார்வலர்களின் தளராத ஒத்து ழைப்போடு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. ஆனாலும் இந்த மீட்புப் பணிகளின் கரங்கள் எட்டாத இடங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் எண்ணூர் மாவு பாஷா என்னும் தோழர், பெரியார் தொண்டறம் அணிக்கு, “எண்ணூர் அத்திப்பட்டு கிராமம் புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரையிலும் அந்த மக்களுக்கு எந்த நிவாரண மும் கிடைக்கவில்லை. நீங்கள் வர முடியுமா?” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், பெரியார் தொண்டறம் அணி அங்கு சென்றிருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் எண்ணூரை அடுத்துள்ள அத்திப்பட்டில், மஸ்ஜிதே மதினா அஹ்லே சுன்னத் ஜமாத் மசூதி க்கு முன்பு 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு சூடான உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. கைக்குழந்தை உள்ளவர் களுக்கு கூடுதலாக பால் பாக்கெட் வழங்கப் பட்டது. நேற்றுதான் அந்த கிராமத்திற்கு மின் சாரம் வழங்கப்பட்டிருந்தது. அதுவரையிலும் எண்ணூர் ரயில் நிலையத்திலும், சத்திரத்திலும், தெரிந்தவர்களின் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் ஒவ்வொருவராக திரும்பிக் கொண்டிருந் தனர். அவர்களில் சிலர், “ஊருக்குள்ள மக்கள் நிறைய இருக்காங்க. இதுவரைக்கும் அங்க யாருமே போனதில்லை. நீங்க வருவீங்களா?” என்று விரக்தியுடன் கேட்டனர். மறுமொழி பேசாமல் உடனே தோழர்கள், ”வண்டியை ஊருக்குள்ள திருப்புங்க” என்று தயாராகி விட்டனர். ஆனால், பிள்ளையார் கோயில் சாலை என்றழைக்கப்பட்ட அந்த கிராமத்தை முதன்மைச்சாலையுடன் இணைக்கும் சாலையும் தண்ணீரில் மூழ்கியிருந்தது. நான்கு சக்கர வண்டியின் ஓட்டுநர், தண்ணீரில் இறங்கி நடந்து பார்த்துவிட்டு, ஓரிடத்தில் இருந்த பள்ளத்தை உறுதி செய்த பிறகு, ”வண்டி உள்ளே வராதுங்க” என்று அறுதியிட்டுக் கூறிவிட்டார். சளைக்க வில்லை பெரியார் தொண்டறம் அணித் தோழர்கள், கைவசம் இருந்த ஒரு இருசக்கர வாகனத்துடன் அங்கேயே இருந்த உள்ளூர் காரர்கள் சிலரின் உதவியில் இன்னும் சில இருசக்கர வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு உணவுப் பொருட்களுடன் ஊருக்குள் செல்லத் தொடங்கிவிட்டனர். ஆனாலும், போதாமை காரணமாக உணவுப் பொருட்களை தோளில் சுமந்தவாறும் தண்ணீரில் இறங்கி விட்டனர். மற்றவர்களையும் போல இவர்களும் ஊருக்குள் வராமல் போய்விடுவார்களோ என்று அஞ்சிய அம்மக்களுக்கு தோழர்களின் முன்னெ டுப்புகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்துவிட, உற்சாகத்துடன் வழி காட்டிச் சென்றனர்.

அத்திப்பட்டு என்பது சாலையோரம் உள்ள பகுதி. உள்ளே இருப்பது அத்திப்பட்டு பள்ளம். பெயர்க்காரணம் பொருத்தமாகத்தான் இருந்தது. முதன்மைச் சாலை, கிளைச்சாலைகள், குறுக்குச் சாலைகள் என எல்லா இடங்களிலும் தண்ணீர் நீக்கமற தேங்கியிருந்தது. சாலையின் இருபுறமும் அடர்ந்த முட்செடிப் புதர்கள், வீட்டு வாசலைத் தாண்டினால் தண்ணீரில்தான் காலை வைக்க வேண்டும். புழல், பூண்டி ஏரிகளில் தண்ணீர் திறந்து விட்டால் முதலில் இந்த ஊருக்குத்தான் வரும். இன்னமும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருந்தது. முற்றிலும் வடிந்த பின்னும் தேங்கி யிருக்கும் தண்ணீரை மோட்டார் கொண்டுதான் வெளியேற்ற வேண்டும். அல்லது தானாக வற்ற வேண்டும். இப்படிப்பட்ட சூழல்தான் அங்கு நிலவுகிறது. அப்படிப்பட்ட பகுதியில் பிள்ளையார் கோயில் தெரு, பகவத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக தேடிச்சென்று, 250 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. வீடு தேடி வந்த நிவாரணப் பொருட்களை வியப்புடன் பெற்றுக் கொண்டனர். அதிலொரு பெண், “நீங்கதான் ஊருக்குள்ள முதன் முதலில் வந்திருக்கீங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும். அந்தக் கடவுளுக்குத் தான் நன்றி சொல்லணும்” என்று நெகிழ்ந்து போனார். அனுசுயா அக்கா, வள்ளியக்கா என்ற அங்கிருக்கும் மக்களை பெயர் சொல்லி அழைத்து அவர்களுடன் உரை யாடி மக்களோடு மக்களாக ஒன்று கலந்துவிட்ட தோழர் தளபதி பாண்டியன், “அந்தக்கடவுள் இந்தத் தண்ணீரை வராமலேயே தடுத்திருக் கலாமே அக்கா” என்றதும், அந்தப்பெண், “அது வும் சரிதான்” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார். அதன்பிறகு தோழர்களிடம் விசா ரித்து, தொண்டு செய்கிற அனைவரும் பெரியார் தொண்டர்கள் என்று தெரிந்து கொண்டார்.
பெரியார் தொண்டறம் அணியை வழி நடத்திக் கொண்டிருக்கும் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில், வழக்குரைஞர்கள் தமிழன் பிரசன்னா, தளபதி பாண்டியன், துரை அருண், பிரின்சு முகநூலைப் பார்த்து தன்னார்வலராக வந்து கலந்து கொண்ட சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர் கென்னத் அருள், பசும்பொன் செந்தில்குமாரி, மு.பவானி, புரசை சு.அன்புச்செல்வன், உடுமலை வடிவேல், முரளி கிருஷ்ணன், சின்னத்துரை, செ.பெ. தொண்டறம், எழுத்தாளர் அதிசா, இராமச்சந்திரன், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். பிற்பகல் 2:30 மணிக்கு பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட தோழர்கள், இரவு 8 மணிக்குத்தான் திரும்பினர். தளபதி பாண்டியனின் கைபேசி உரையாடலிலேயே ஒருங்கிணைப் பட்டு, பூவை தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் அமைந்த கரையில் 1000 பேருக்கு உணவு தயாராகி, டப்பாக்களில் அடைக்கப்பட்டு அடுத்த களப் பணிக்காக காத்துக்கொண்டிருந்தது. பெரியார் தொண்டறம் அணித் தோழர்களும் அடுத்த பணிக்கு அணியமாயினர்.

புயல் - வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!


3-16

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் – பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் – பெரியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் சார்பில்
புயல் – வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை
முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!

இயற்கையின் சீற்றம் காரணமாக புயல் – மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மக்கள் பெரும் அல்லலுக்கும், துயருக்கும் ஆளாகியுள்ளார்கள் – தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மட்டும் அல்ல; தன்னார்வ நிறுவனங்களும் ‘உற்றுழி உதவுதல்’ என்ற முறையில், உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடும், மனிதநேயத்துடனும், ‘‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்‘’, ‘‘பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்‘’ என்கிற அறக்கட்டளை அமைப்புகளின் சார்பிலும், ‘‘பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள்” சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்து
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் இன்று (11.12.2023) காலை 11 மணியளவில் வழங்கினார். நூல்களைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முதலமைச்சரிடம் அளித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், அரசின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சரிடம் உரையாடி விடைபெற்றார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உடன் சென்றிருந்தார்.

சென்னை வெள்ளப் பேரிடர் மீட்புப் பணியில் அய்ந்து நாட்களில் 14,000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் பெரியார் தொண்டறம் அணித் தோழர்களால் வழங்கப்பட்டுள்ளன!


9-20-scaled

சென்னை, டிச.12, நேரிடையாகவும், மற்றவர்களின் உதவிகள் மூலமும், இன்னொருவரிடம் கொடுத்தனுப்புவதன் மூலமுமாக எனப் பல வகைகளிலும் பெரியார் தொண்டறம் அணியி னர் நிவாரணப் பொருட்களை ஓய்வில்லாமல் வழங்கி வருகின்றனர்.

நான்காம் நாளாக பேரிடர் மீட்புப் பணிகளில் பெரியார் தொண்டறம் அணியினர் ஈடுபட்டனர். இதற்காக, தாம்பரம் ரங்கநாதபுரம் 7 ஆவது தெருவிலும், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியிலும், அமைந்தகரையில் திருவீதி அம்மன் கோயிலிலுமாக மூன்று இடங்களில் உணவு தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன. தன்னிச்சையாக நடைபெற்ற நிவாரணப் பணிகளில் அமைந்தகரையிலுள்ள திருவீதி அம்மன் கோயில் மற்றும் பெரம்பூர் டான் பாஸ்கோ கிறித்துவப் பள்ளி, தாம்பரம் ரங்க நாதபுரத்திலுமாக மூன்று இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, எண்ணூரில் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள மஸ்ஜிதே மதீனா மசூதி போன்ற பகுதிகளில் வைத்து கொடுக்கப்பட்ட அரிய வாய்ப்பு பெரியார் தொண்டறம் அணித் தோழர்களுக்கு இயற்கையாக அமைந்தது குறிப் பிடத்தக்கது. இந்த மூன்று இடங்களி லிருந்தும் 6.12.2023 லிருந்து 11.12.2023 வரையிலான அய்ந்து நாட்களில், 15,000 பேருக்கு உணவும் மற்ற உதவிகளும் கொடுக்கப்பட் டுள்ளன.

பெரியார் தொண்டறத் தோழர்கள் நேரிடை யாக செய்யும் பணிகளைத் தவிர இன்னும் பல பணிகளும் நடைபெற்றுவருகின்றன. இதில் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் முதல் தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில், முதல் தளம் வரையிலும் தண்ணீர் ஏறிவிட்டதால், முதல் மாடியில் 3 பெண்கள் கைக் குழந்தையுடன் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யமுடியுமா? என்று அந்தக் குடும் பத்தின் நண்பர் ஒருவர், பெரியார் தொண்டறம் அணி வெளியிட்டிருக்கக்கூடிய ”வாட்ஸ் ஆப்” குழுவில் பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்த வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அண்ணா நகர் துணை ஆணையர் உமையாள் அவர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு, அவர் களை காவல்துறை வாகனத்திலேயே அழைத்து வந்துவிட்டதை ஒளிப்படம் எடுத்து தளபதி பாண்டியனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார் அண்ணா நகர் துணை ஆணையாளர் உமையாள். தளபதி பாண்டியன், அந்தப்படத்தை வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிட்டவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் மிகவும் நன்றி என்று பதில் அனுப்பியிருக்கிறார்.
அதே போல், அய்யப்பன் தாங்கலில் இருக்கும் Rehoboth Home for the Mentally Challenged Women என்ற அமைப்பிலிருந்து பெரியார் தொண்டறம் அணியினருக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 200 பேருக்கான உணவு, தண்ணீர் முதலியவற்றை அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்க்கவில்லை யென்றாலும் அவர்களே மனநல மாற்றுத் திறனாளிகள் சேர்ந்து உண்பதை படம் எடுத்து அனுப்பி நன்றி தெரிவித்திருக்கிறார்கள். குழந் தைகளுக்குத் தேவைப்படும் பிஸ்கட்கள் வியாசர்பாடி கலியாணபுரம் மூன்று தெருக்களில் வழக்குரைஞர் பா. மணியம்மை தலைமையில் வழங்கப்பட்டது. தாம்பரத்தில் 1000 பேருக்கு உணவு 3500 தண்ணீர் பாட்டில்கள் பா.முத்தையன் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன. அதே போல அமைந்தகரை, எழும்பூர், கொருக் குப்பேட்டை, கொடுங்கையூர் பகுதிகளிலிருந்து உணவு தேவைக்கான அழைப்பு வரப்பெற்று மற்றவர்கள் மூலம் உணவும், தண்ணீரும் அனுப் பப்பட்டிருக்கின்றன. நேற்றும் (11.12.2023) பல இடங்களில் இருந்து வந்த அழைப்புகளுக்காக அமைந்தகரையிலுள்ள திருவீதி அம்மன் கோயிலில் 2000 பேருக்கு உணவு தயாரிக்கப் பட்டு, தேவையான இடங்களுக்கு அனுப்பப் பட்டது.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங் கிணைப்பில் வழக்குரைஞர்கள் தளபதி பாண் டியன், கெய்சர் பாண்டியன், திவாகர், துரை அருண் மற்றும் முரளிகிருஷ்ணன் சின்னத்துரை, பசும்பொன், மு.பவானி, ராம்குமார், ஆவடி ரவீந்திரன், ஆதினிபாக்யா, அறிவன் பாக்யா, நித்யகுமார், அரும்பாக்கம் சா.தாமோதரன், அழகிரி (எ) நரேஷ், பூவை தமிழ்ச்செல்வன், சாம்குமார், டேனியல், கோமதி, வந்தனா, சாந்தி, லூர்து, சாம்பீம் பெரியார், கருணா பாண்டியன் பாரதி, ராம், சிறீதர், ஆனந்தன், ரமா ஆ.கிசோர் நேற்றைய (11.12.2023) பெரியார் தொண்டரணி சார்பில் தொண்டாற்றினர்.

தொடரும் தொண்டறம்

பெரியார் தொண்டறம் அணி சார்பில் உணவு தயாரிப்புப் பணியை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால், ஏதேனும் ஓரிடத்திலிருந்து உணவுக்காக அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. ஒருவர் கூட பட்டினி கிடந்துவிடக்கூடாது என்பதால், தோழர் பிரின்சு தேவையிருந்தால் அழையுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இப்பதிவைக் கண்டு, முரளிகிருஷ்ணன் சின்னத்துரையின் நண்பர் கைலாஸ் சத்யா தொடர்பு கொண்டு 400 சாப்பாடு அவசியம் தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஈஞ்சம்பாக்கத்திற்கு 500 உணவு தேவை என்று அழைப்பு வந்தது. இன்னும் சில இடங்களில் அழைப்புகள் வந்தவுடன் அவசரமாக 2000 பேருக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. சமையல் தொடங்கும் போது மேக மூட்டத்துடன் தூறல் போடத் தொடங்கியது. களப்பணியாளர்கள் அதிகம் தேவைப்பட்ட சூழலில் திராவிடர் கழகத் தலைவரின் தள்ளிவைக்கப்பட்ட விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்காக வெளியூரில் இருந்து வந்திருந்த தோழர்கள் உணவுப் பொட்டலம் போடும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். நாங்கள் உறுதி செய்த எண்ணிக்கையை விட கூடுதலாக சமைத்ததால் யாருக்கேனும் உணவுத் தேவை இருக்கிறதா என அதிஷா, கிருத்திகா தரனிடம் கலந்துபேசி, கூடுதலாக அமைந்தகரையில் தயார் செய்த 2000 பேருக்கான உணவையும் தேவைப்பட்ட மக்களுக்கு சேர்க்கப்பட்டது. உணவை கொண்டு செல்லும் வண்டியை ஏற்பாடு செய்வதிலிருந்து பல இடையூறுகளைக் கடந்து, பிரின்சு, தமிழ் க.அமுதரசன், அன்சாரி, மில்லர் செல்வன், முரளிகிருஷ்ணன் சின்னத்துரை ஆகியோரின் ஒத்துழைப்போடு பெத்தேல் நகரிலும், அங்கிருக்கும் தோழர்கள் மூலம் இதுவரை யாரும் செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று நிவாரணப்பணிகளை செய்துவிட்டு, அங்கிருந்த மக்கள் – பெரியார் தொண்டறம் அணித்தோழர்களிடம் காட்டிய உளப்பூர்வமான நன்றியைப்பெற்றுக்கொண்டு, மிகுந்த மனநிறைவுடன் தோழர்கள் இரவு 11:30 க்குப் பிறகு இருப்பிடங்களுக்குத் திரும்பினர்.