செவ்வாய், 31 டிசம்பர், 2019

உறைந்தார்! நிறைந்தார்! எம் அறிவு ஆசான்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நம் விழி திறந்த வித்தகர்

நம் இனத்தின் மான மீட்பர்

மூடநம்பிக்கை இருட்டிலிருந்து

பகுத்தறிவு வெளிச்சத்தினைப் பாய்ச்சி,

நம் மக்களுக்கு மானமும் அறிவும்

போதித்த, போதி மரம் தேடாத புத்தர்!

தனக்கென வாழாது, சமூகத்திற்கே

உழைத்து, பிறவி பேதம் அகற்றிட

பிறவிப் போர் வீரராக 95 ஆம் அகவையிலும்

களங்கண்ட கருஞ்சிங்கம்

எம் அறிவு ஆசான்!

உலகத்தை தனது மானுடப் பார்வையால் அளந்து

சுயமரியாதைச் சூரணம் தந்து

எழுச்சி பெறச் செய்த ஏந்தல்

பெண்ணடிமை தீராமல் மண்ணடிமை

தீர்த்தல் பெரும் பேதமை என்று

உணர்த்தி, பேதமிலாப் பெருவாழ்வு

அனைவர்க்கும் தேவையென்று

நிலை நிறுத்திட, பதவி நாடா பொதுத் தொண்டின்

இமயமாய், நன்றி பாராட்டாத தொண்டராய்

தூயவடிவமாய், பருவம் பாராது மக்களுக்கு

உழைத்து, பகுத்தறிவு ஒளிப் பாய்ச்சிய

பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியாரின்

46 ஆவது ஆண்டு நினைவு நாள் வரலாற்றுக்

குறிப்பு நாள் இந்நாள்! (24.12.2019)

நம் அறிவுக்கு விருந்தானவர்

அகிலத்திற்கும் இன்று மருந்தானார்!

உலகம் பெரியாரையே நோய் தீர்க்கும்

மாமருத்துவராகப் பார்க்கிறது - இன்று!

இந்தியாவின் வடபுலங்களில் உள்ள

இளைஞர்களின் வழிகாட்டும் நாயகராக

பெரியார் என்ற ஞானசூரியன்

ஒளியும், வெப்பமுமான  இந்தப் பரிதி

கொடையாக மட்டுமல்ல; பாடமாகவும் திகழ்கிறது

இளைஞர்களுக்கு அவர் ஓர் அறிவாயுதம்;

போராட்டக் களத்தில் கிடைத்த

புதிய ஏவுகணை என்ற பெருமிதம் உள்ளது!

முனை மழுங்காத இந்த அறிவாயுதம் ஏந்துவோம்!

பெரியார் மறையவில்லை;

உறைந்துவிட்டார், எம் இளைஞர்களின்

இரத்த நாளங்களில் -

மக்கள் உள்ளங்களில் நிறைந்து விட்டார்!

பெரியார் வாழ்க!

பெரியார் வெல்க!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

24.12.2019

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

பார்ப்பன சக்திகளிடமிருந்து மீள பெரியார் தேவை! -உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரை

தந்தை பெரியார் நினைவு நாளில் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் சூளுரை

அய்தராபாத், டிச.29 பார்ப்பன ஆதிக்க சக்திகளிடமிருந்து விடுதலை பெறவும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச சக்திகளை வீழ்த்தவும் தேவை தந்தை பெரி யாரே என்று ஆந்திர மாநிலம் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சூளுரை ஏற்றனர்.

தெலங்கானா நாத்திக சங்கம், அறிவியல் மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவர் சங்கம், உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்றனர்.

மாணவர்களிடையே தெலங்கானா நாத்திக சங்கத் தலைவர் ஜி.டி.சாரய்யா பெரியார் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். "தந்தை பெரியார் கொள்கைகளை கிராமங்களிலும், மாணவர்களிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். பெரியார் கொள் கைகளை பரப்ப வேண்டும். அதன்மூலம் மட்டுமே பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய முடியும். பாஜக, ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா பாசிச அமைப்பினரிடமிருந்து பெரியார் கொள்கைகளால் மட்டுமே நாட்டை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். வேறு தீர்வு ஏதும் கிடையாது. தந்தை பெரியார் கொள்கை வழியில் நாத்திக வழியில் நடைபோடுவோம்" என்றார்.

அறிவியல் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் ஸ்பார்டகஸ் பேசுகையில், "தந்தை பெரியார்தலைசிறந்த மனிதநேயர். பெண் ணுரிமையாளர், மாபெரும் சமூக புரட்சிக் காரர். அவர் ஒருவர் மட்டுமே பார்ப்பனரல்லா தாருக்காக, சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்.

ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் கல்வி, உரிமைகளுக்காக தொண்டாற்றியவர். பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உரிமைகள் பெற வும், சமூக நீதிக்கான இடஒதுக்கீடுக்காகவும் அருந்தொண்டாற்றியவர்.

பார்ப்பனக் கொள்கைகளுக்குக் கடும் எதிரி.

இன்றைக்கு  ¢பாசிச இந்துத்துவ பாஜக, ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினருக்கு எதிராக மாணவர்கள்போராடி வருகின்றனர். ஆனால், நினைத்துப்பார்க்க முடியாத அள வுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கிராமங்கள் தோறும் பயணங்கள் செய்து இந்துத்துவ பாசிசத்துக்கு எதிராகக் களம் கண்டவர் தந்தை பெரியார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளை பரப்புவதுதான்.

வாழ்க பெரியார், வளர்க அவர்தம் கொள்கை

வெல்க திராவிடர் கழகம்"

இவ்வாறு ஸ்பார்டகஸ் பேசுகையில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 29.12.19

வெள்ளி, 27 டிசம்பர், 2019

மாதவிடாய் நாளில் கூலி இழப்பை தவிர்ப்பதற்காக கரும்பு பெண் தொழிலாளர்கள் கருப்பையை அகற்றும் கொடுமை

மகாராஷ்டிரா முதல்வர் தலையிட காங்கிரஸ் அமைச்சர் கோரிக்கை

மும்பை , டிச . 26 : கூலி இழப்பை தவிர்ப்ப தற்காக பெண் கரும்பு கூலித் தொழிலா ளிகள் தங்கள் கருப்பையை அகற்றும் கொடுமை மகாராஷ்டிராவில் நடந்து வருகிறது . இந்த பிரச்னையில் உடனே தலையிடக்கோரி மாநில அமைச்சர் நிதின் ராவுத் முதல்வர் உத்தவ் தாக்க ரேக்கு கடிதம் எழுதி இருக்கிறார் . மத்திய மகாராஷ்டிராவில் உள்ள மராத்வாடா பிராந்தியத்தில் கரும்புத் தொழிலாளிகள் பெருமளவில் உள்ள னர் . அவர்களில் கணிசமான எண் ணிக்கையில் பெண்கள் இருக்கின்ற னர் . மாதவிடாய் காலங்களில் இந்த பெண்கள் வேலைக்கு செல்வதில்லை . எனவே அவர்களுக்கு கூலி இழப்பு ஏற்படுகிறது . இதை தவிர்ப்பதற்காக அவர்கள் தங்கள் கருப்பையை அகற்றி விடுவதாகவும் இதுபோன்று சுமார் 30 , 000 பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றி இருப்பதாகவும் நிதின் ராவுத் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் . மேலும் , இந்த பெண்களுக்கு மாத விடாய் காலமான நான்கு நாட்களுக் கும் கூலி வழங்க சர்க்கரை ஆலைகள் முன்வந்தால் அவர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிரா அரசு மனிதாபிமான அடிப்படையில் இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட இலாகாவுக்கு பிறப் பிக்க வேண்டும் என்று நிதின் ராவுத் தமது கடிதத்தில் கோரியுள்ளார் . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச் சர் நிதின் ராவுத் , பொதுப்பணித்துறை , பழங்குடியினர் நலத்துறை , பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை , ஜவு ளித்துறை உள்ளிட்ட இலாகாக்களை தன் வசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
- தினகரன் நாளேடு 26 12 19

கிரகண மூடநம்பிக்கையை முறியடிக்கும் நிகழ்ச்சி (சென்னை, 26.12.2019)

இந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டுள்ளது; மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை

கிரகண மூடநம்பிக்கையை விளக்கி தமிழர் தலைவர் அறிக்கை

* சூரிய கிரகணம் - சந்திர கிரகணம் இயற்கையின் நிகழ்வு

* இதில் மூடநம்பிக்கைகளைப் புகுத்துவது வெட்கக்கேடு!

* விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம்

சூரிய கிரகணம் என்பது இயற்கை யில் நிகழக்கூடிய ஒன்றே! இதில் மூடநம்பிக்கையைப் பரப்பி வருகிறார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது - அந்தக் கடமையை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

கிரகணங்கள் (eclipses) என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத் திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோ ருக்குக் கிடைக்கும்.

இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப் பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ‘‘கிரகண தோஷம்'' நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும்,

கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?

அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப் பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.

கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறு வதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!

‘ராகு, கேது என்ற பாம்புகள்' விழுங்கு வதுதான் புராணக் கதை!

அதுமட்டுமா?

சூரியனுக்குக் குழந்தை பிறக்குமா?

சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண் டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத் தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற  பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!

படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்!  அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!

வானியல் வேறு; ஜோதிடம் வேறு!

வானவியலை (Astronomy) பகுத்தறிவா ளர்களான நாங்கள்  முழுக்க முழுக்க ஏற் கிறோம். ஆனால், ஜோதிடம் என்ற Astrology  என்பது போலி விஞ்ஞானம் (Pseudoscience). 9 கிரகங்களா,8 கிரகங் களா? புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பி னவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை யிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்த வேண்டாமா? மூடநம்பிக்கை இருளிலி ருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர வேண்டாமா?

அரசமைப்புச் சட்டம்

என்ன கூறுகிறது?

நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு, குடிமக்களின் அடிப்படைக் கடமை களில் ஒன்றான,

அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,

கேள்வி கேட்டு ஆராயும் பண்பு, மனித நேயம், சீர்திருத்தம் இவைகளைப் பரப்ப கட்டளை இட்டுள்ளதே!

அதன்மீது பிரமாணம் எடுத்தவர்கள் பரப்புகிறார்களா? பகுத்தறிவாளர்களும், இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் தானே அதைச் செய்கிறார்கள். ஆட்சியா ளர்கள் இதை கேலிக் கூத்தாக்கி மூடநம் பிக்கையை முழு மூச்சுடன் பரப்பும் பணி யில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்ட பிர மாண உறுதிமொழிக்கு விரோதம் அல்லவா?

மூளைக் கிரகணம் நீங்கவேண்டும்

இவர்களைப் பிடித்த ‘‘மூளைக் கிர கணம்'' எப்போது நீங்குமோ அப்போதுதான் உண்மை விடுதலை! விடுதலை!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.12.2019

கேள்விக்கென்ன பதில்?

சூரிய கிரகணத்தின்போது இந்துக் கோவில்கள் மட்டும் மூடப்படுவதேன்?

சூரிய கிரகணத்தின்போது கோவில்களின் நடை மூடப்பட்டு, கிரகணம் முடிந்த பின்னரே திறக்கப்படுகிறது!

ஏன் இந்து கடவுள்களுக்கு மட்டும்? மற்ற மதக் கடவுள்களுக்கு இல்லை. மாதாக் கோவில், பள்ளிவாசல் - மசூதிகள் ஏன் மூடப்படுவதில்லை?

அந்தக் கடவுள்களுக்கு மட்டும் ‘பயம்' இல்லையா? ‘தோஷம்' பிடிக்காதா?

வேடிக்கையாக இல்லையா?

கிரகண மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சியின் விவரம் 5 ஆம் பக்கம் காண்க

அறிவியல் ஆர்வமிகுதியில் பெண்கள், குழந்தைகள் பெரியார் திடலில் குவிந்தனர்

சூரிய கிரகணத்தின்போது மூடநம்பிக்கைகள் முறியடிப்பு

மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வில் கழகக் குடும்பங்களோடு தமிழர் தலைவர் உணவருந்தினார்

சென்னை,டிச.26, சூரிய கிரகண மூடநம்பிக் கைகளை முறியடிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம் சார்பில் இன்று (26.12.2019) காலை நடத்தப் பட்டது.  நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்தார்.

செந்தமிழ் சேகுவேரா அறிவியல் விளக்கங் களை எடுத்துரைத்தார். இளைஞர்கள், மாண வர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராள மானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந் தார்கள்.  கிரகணத்தின்போது சூரியனை பாது காப்பான கண்ணாடியால் அனைவரும் கண்டு பயன் பெற்றனர்.

சூரியகிரகண மூடநம்பிக்கைகளை முறி யடிக்கும் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிற்றுண்டி அருந்தினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத் தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலா ளர்கள் செ.ர.பார்த்த சாரதி,கோ.நாத்திகன், தி.செ. கணேசன்,  விடுதலைநகர் ஜெயராமன் மற்றும் சி.வெற்றி செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பெரியார் களம் இறைவி, சவுந்தரி நடராசன், தங்க.தனலட்சுமி, மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ந.விவேகானந்தன், சென்னை மண்டல இளை ஞரணி  செயலாளர் இர.சிவசாமி, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில ஒருங்கிணைப்பாளர் சோ.சுரேஷ், மகளிரணி நூர்ஜகான், சுமதி கணேசன், பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பூங்குழலி, ஆ.வெங்கடேசன், திண்டிவனம் சிறீராமுலு, திருவண்ணாமலை கவுதமன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், சீனுவாசன், புரசை சு.அன்புச்செல்வன்,  மடிப்பாக்கம் பாண்டு, கொரட்டூர் பன்னீர்செல்வம், கொடுங்கையூர் கோ.தங்கமணி, திராவிடர் மாணவர் கழகத்தினர் உள்பட கழகத் தோழர்கள், பொதுமக்கள் பெருந் திரளாக திரண்டிருந்தனர். கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடித்து சீர்த்தி - பகலவன் இணையர் தமிழர் தலைவருடன் சூரிய கிரகணத்தின்போது உணவருந்தினார்கள்.

"செய்வதையே சொல்கிறோம், சொல்வதையே செய்கிறோம்" என்று மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் பெரியார் திடலில் கழகத் தோழர்களால் சிறப்பாக ஏற்¢பாடு செய்யப்பட்டது.

அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அரும்பாக்கம் சா.தாமோதரன் சிக்கன் பிரெட் அளித்தார். வானவியல் காட்சி திரையிடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடை பெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு 26 12 19

திங்கள், 23 டிசம்பர், 2019

பாப்பாத்தியான எனக்கு ஏன் பெரியாரை பிடித்தது?

என்னுடைய சிறுவயது முதற்கொண்டு பெரியார் என்றால் சூத்திரன், பிராமண துவேஷி என்று மட்டுமே என் வீட்டு பெரியவர்கள் என்னிடம் கூறிட நான் கேட்டுள்ளேன். அது சிறுவயதில் என்னுடைய மனதில் மிக நன்றாகவே பதிந்தது. அன்றிலிருந்தே என்னுடைய நண்பர்களிடம் பெரியாரை பற்றி எந்தவித புரிதலும் இல்லாமல் தவறாக பேசியதே மிக அதிகம்.

பின் என்னுடைய கல்லூரி நாட்களில் எல்லா விதமான மாணவர்களுடனுமே நட்பு வைத்திருந்தேன். அதில் ஒரு நண்பன் மூலம் பெரியாரை பற்றிய சரியான புரிதலை கிடைக்கப் பெற்றேன். அன்று நான் முக்கியமாக புரிந்து கொண்ட விஷயம் பெரியாரின் மூலம் பிராமணப் பெண்கள் நிறையவே பலன் அடைந்துள்ளனர்.

பொதுவாக இந்த ஜாதி கட்டமைப்பு மற்றும் ஆணாதிக்கத்தின் அழுத்ததின் காரணமாக பெண்கள் தங்களுடைய ஜாதி பெருமையை நிறைய பேசுவார்கள். குறிப்பாக பாப்பாத்திகள் நிறையவே பேசுவார்கள். அப்படி தன்னுடைய ஜாதி பெருமையை பேசவில்லை என்றால் பிராமண ஆண்கள் தங்களை பிராமண பெண்களாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற பயமும் கூட இவர்கள் தங்களுடைய ஜாதி பெருமையை பேசுவதற்கான ஒரு முக்கியமான காரணம்.

அப்படி என்ன பெரியார் பார்ப்பன பெண்களுக்கு செய்துவிட்டார் ?

அந்தக் காலத்தில் மொட்டை பாப்பாத்தி என்ற கிண்டலான சொல்லாடல் இருந்தது, அது முக்கியமாக பார்ப்பன பெண்கள் தன்னுடைய கணவனை இழந்த பிறகு மொட்டை அடித்து காவி புடவையுடன் வீட்டின் ஓரமாக உட்கார வைத்து விடுவார்கள்.

அது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்தது. பெரியாருடைய பெண் விடுதலை போராட்டத்தின் பின் இந்த வழக்கம் முழுவதுமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மனுஸ்மிருதியின் படி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தரக்கூடாது என்றும் அவர்களை மாதவிடாயின் போது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற வழக்கங்களை பார்ப்பன ஆண்கள் அவர்களுடைய வீட்டு பெண்களிடம் காண்பித்து வந்தனர்.

பின் பெரியார் இது எந்த அளவிற்கு முட்டாள் தனம் பெண்களுக்கு கண்டிப்பாக சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறினார். பின் பெண்கள் அடக்கு முறையில் உள்ள காலகட்டத்தில் மறுமணம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடினமான ஒன்றாக இருந்துள்ளது.

அதை மிக முற்போக்காக அன்றே மறுமணம் கண்டிப்பாக பெண்கள் செய்து கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார். கருத்தடுப்பு, பெண்கள் கல்வி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை பார்ப்பனீயம் தனக்கு சாதகமாக உபயோகித்து கொண்டதை தடுத்து அவர்களுக்கு கண்டிப்பாக சம உரிமை தரவேண்டும் எனக் கூறியவர் பெரியார்.

தேவதாசி முறையை அடியோடு கிள்ளி எறிவதற்காக முத்துலட்சுமி ரெட்டி உடன் போராடியவர்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே சாஸ்திரத்தின் மூலம் பார்ப்பன பெண்களை ஒடுக்கி வைத்தனர். பின் பெரியாரின் பெண்கள் அடிமைத்தனத்திற்கெதிரான குரல் கண்டிப்பாக பார்ப்பன பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இன்றளவும் இருந்து வந்துள்ளது.

உதாரணத்திற்கு எல்லா பார்ப்பன வீடுகளிலுமே பெரியாரைவிட மஹாபெரியவாளுக்கு கூடுதல் மதிப்பு இன்றளவும் உள்ளது. பார்ப்பன பெண்கள் சந்திரசேகர ஸ்வாமிகளை தங்களுடைய உயிராகவும் வணங்குகின்றனர். ஆனால், பெண்களுக்கான சம சொத்து உரிமை சட்டம் இயற்றப்பட்ட பொழுது அதை எதிர்த்து பெண்களுக்கு எதற்கு சொத்தில் சமஉரிமை என டெல்லியில் போராட்டத்தையெல்லாம் முன்னெடுத்தவரே ஸ்வாமி சந்திரசேகரர்தான்.

ஆனால் பெரியார் கடைசி வரை பெண்களுக்கான மிக முற்போக்கான சிந்தனை மற்றும் செயல்களை முன்னெடுத்தார்.

உங்கள் தங்கையிடமோ, அக்காவிடமோ சென்று அடுப் பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்டுப்பாருங்கள் அண்ணன் என்றும் பார்க்காமல் செருப்பு பிஞ்சிடும் என்று பதிலளிப்பார்கள். அங்கே வாழ்கிறார் பெரியார்.

தான் பார்ப்பனீயத்துக்கு அடிமையாக இருக்கிறோம் என்று கூட தெரியாமல் பெரியார் என்ன செய்தார் என்று கூட தெரியாமல் அவரை திட்டும் பார்ப்பன பெண்கள் ஒருமுறை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களால் படிக்க முடிகிறது என்றால் அதற்கு பெரியாருடைய பங்கு கண்டிப்பாக உண்டு.

அதற்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டுத்தான் உள்ளோம்.

அவர் கிழவர் அல்ல எல்லாருக்குமான கிழக்கு திசை.

- ராஜலட்சுமி அனுராதா (வாட்ஸ் அப்)

(நன்றி: வாய்ஸ் ஆப் ஓபிசி,

டிசம்பர் 2019)

விடுதலை ஞாயிறு மலர் 14 12 19

விஜயபாரதத்துக்கு ‘விடுதலை’யின் பதில்கள் ‘விடுதலை’யின் கேள்விக்கு???

கேள்வி: சுவாமி விவேகானந்தரின் நல்லதொரு அமுத மொழி?

பதில்: பூக்களாக இருக்காதே... உதிர்ந்திடுவாய்... செடிகளாக இரு... பூத்துக்கொண்டே இருப்பாய்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

விவேகானந்தர் இதை மட்டுமா சொல்லி யிருக்கிறார்.

இதோ விவேகானந்தர்.

மதச் சண்டைகளும், ஜாதி வேற்றுமை களும், கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும்.  சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப்போராட்டங்களும் தொலைந்து போகு மென்று வருந்திக் கூறினார் விவேகானந்தர்.

(மறைமலை அடிகளாரின் ‘தமிழர் மதம்‘, பக்கம் 24)

கேள்வி: கைலாஷ், மானசரோவர் யாத்திரை பற்றி?

பதில்: கைலாயம் என்பது இமய மலையில் உள்ளது. இதன் உயரம் 6638 மீட்டர். சிந்துநதி பிரமாண்டமான சட்லஜ் நதிகள் இங்குதான் உற்பத்தி யாகிறது. மானசரோவர் என்பது அங்குள்ள பிரமாண்டமான ஏரி. சீன எல்லை யைக் கடந்துதான் கைலாயம் செல்லவேண்டும்.

சிவன், பார்வதி தேவியுடன் உறையும் இடம், தமிழ்நாட்டில் ஈரோட்டில் இருந்துதான் கைலாஷ் யாத்திரைக்கு அதிகமான பேர் சென்று வரு கிறார்கள். ஏதோ ஈ.வெ.ரா. பிறந்த மண் என்பதெல்லாம் ஹம்பக்.

(‘விஜயபாரதம்‘, 9.8.2019, பக்கம் 35)

மானசரோவர் - அதாவது கைலாஷைப் பற்றி விஜயபாரதம் ‘ஆகா’ எப்படியெல்லாம் சிலாகித்து எழுதுகிறது. சிவன் பார்வதி உறையும் இடமாம்.

அந்த இடம் இப்பொழுது யாரிடம் இருக்கிறது? எந்த நாட்டின் கீழ் இருக்கிறது? அதுதான் முக்கியம். அந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தால் ‘விஜயபாரதம்‘ வகையறாக்கள் வண்டி வண்டியாக அள்ளி விடும். சிவ - பார்வதி உறையும் இடத்தில் வண்டவாளம் பல்லிளித்து விடும்.

வானதி பதிப்பகம் வெளியிட்ட - சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூலின் பக்கம் 145, 146 என்ன சொல்லுகிறது?

இதோ:

திருக்கைலயங்கிரி என்று தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம். இது திப்பெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உள்பட்ட எல்லைப் பிராந் தியம், ‘கைலாஸ் மானஸரோவர்’ எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன் மீகத் துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம். இதற்குப் பாரதத்தில் வழங்கிய புராதனப் பெயர் ‘த்ரிவிஷ்டபம்‘ (தீப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில்தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது. பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப்பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன. ‘த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே, அதி வீஷ்ட பிச்ரிதா:--’’ என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

‘‘மூன்று தைவ சக்திகள் - அக்னி இடிமின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்; இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை ‘த்ரவிஷ்டபம்‘ (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை ‘த்ரதவிஷ்டபம்‘ என்றே குறிப்பிட்டு, ஆரிய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார். கிம்புருஷ வர்ஷம், கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக் கிறார். கைலாஸ பர்வதத்தை ‘ஹேம் கூடம்‘’ என்று மகாபாரதமும் ‘கிரௌஞ்ச பர்வதம்‘ என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954 இல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவே இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள். கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது. 1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், 1962  இல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்கப் பின் கைலாஸ் மானஸரோவர் புனித யாத்திரை தடைப்பட்டுவிட்டது.

- திரு.சவுரி எழுதிய ‘‘இந்தியாவின் கலையும், கலாச்சாரமும்‘’ என்ற நூல், பக்கம் 145, 146, (வானதி பதிப்பக வெளியீடு)

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படு கின்ற இடம்!

சிவபெருமான் உறைவதாகக் கூறப்படு கின்ற இடம்!

மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிர மிக்க முடிந்தது? அவன் படை எடுத்து வந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்? திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக் கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று? உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?

இதற்கெல்லாம் ‘விஜயபாரதம்‘ விலா வாரியாக பதில் சொன்னால், அதற்குப் பெயர் தான் அறிவு நாணயம் என்பது.

கேள்வி: திருவள்ளுவர் ஒரு ஹிந்துவா?

பதில்: சந்தேகமென்ன? அவர் ஹிந்துதான்.

அவருக்கு சென்னை மயிலாப் பூரில் கோவில் கட்டி ஹிந்துக்கள் வழிபாடு செய்து வருகிறார்களே! அது சரி, எங்காவது ஒரு முஸ்லிமோ, கிறிஸ்துவரோ தன் வீட்டில் வள்ளுவர் படம் வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?

- ‘விஜயபாரதம்‘, 22.11.2019, பக்கம் 35

திருவள்ளுவர் காலம் என்ன? 2000 ஆண்டுகளுக்குமுன் ஹிந்து மதம் என்ற ஒன்று உண்டா?

உங்கள் லோகக் குரு மூத்த சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாக்குமூலத்தைக் கொடுத்தால் அதை அப்படியே அட்சரம் பிறழாமல் ‘ஆம் என்க!’ என்று ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா!

பெரியவாள் சொன்னால் அது தெய் வத்தின் குரலாயிற்றே! ஆம் இதுவும் வானதி பதிப்பகம் வெளியிட்டதுதான். மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அருள்வாக்கை எல்லாம் தொகுத்து வெளியிடப்பட்டதுதான். ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் 167 ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.

‘‘நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று மொழிப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோமோ அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பற்றியது’’ என்று “திருவாய்” மலர்ந்துள்ளாரே!

வெள்ளைக்காரன் இங்கு வந்தது எப்போது?

திருவள்ளுவர் வாழ்ந்தது எப்போது?

திருவள்ளுவருக்கு மயிலாப்பூரில் கோவில் இருக்கிறதாம். அதை எப்பொழுது, யார் கட்டினார்கள்?

கோவிலை - அதுவும் ஹிந்து மதத்தில் கோவில் கட்டுவது என்பது மிகவும் மலி வான விடயமாயிற்றே. ஒருவனுடைய கொள் கையை ஒழிக்கவேண்டுமானால், அவனைக் கடவுளாக்கிட வேண்டும் என்பார்களே - அதுதான் திருவள்ளுவர் விடயத்திலும்.

சனாதன, வருண தருமத்தை ஒழிக்க வந்த கவுதம புத்தரையே மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்ன கூட்டம் எதைத்தான் செய்யாது?

பிள்ளையாரிலேயே தான் எத்தனை எத்தனைப் பிள்ளையார்? வேப்ப மரத்துக்குக் கீழிருந்தால், அது வேம்படி விநாயகர்; கடன்கார விநாயகர், ஒரு பெண்ணின் குறியில் துதிக்கையை வைத்திருந்தால், வல்லபைக் கணபதி - வெட்கக்கேடு.

கேள்வி: ‘கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக் கூடாது’ என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளாரே?

பதில்: காஞ்சிப் பெரியவர் போல ஃபேன் இல்லாமல், கார் இல்லாமல் கால்நடையாக ஊர் ஊராகப் போகிறவர்கள் கூடங்குளத் திட்டம் - ஏன் மின்சாரமே வேண்டாம் என்று கூறலாம். ஆனால், அவர்கூட, தனக்கு வேண்டாமென்றாலும், மற்றவர்களுக்கு மின்சாரம் தேவை என்பதால், கூடங்குளம் வேண்டாம் என்று கூறமாட்டார்.

‘துக்ளக்‘, 3.7.2019, பக்கம் 17

சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஃபேன் இல் லாமல், கார் இல்லாமல் கால்நடையாகப் போனார் - இருக்கட்டும்.

சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி இருந்தபோது ஜூனியர் சங்கராச் சாரியாராகவும், அவர் மறைந்த பிறகு மூத்த சங்கராச்சாரியாராகவும் இருந்த ஜெயேந்திர சரஸ்வதி கால்நடையாகப் போகவில்லையே! காரிலும், விமானத்திலும்தானே பறந்தார். அவர்மீது ‘துக்ளக்‘குக்கு என்ன கோபம்?

கிண்டலா? கேலியா?

- விடுதலை ஞாயிறு மலர் 7 12 19

சனி, 21 டிசம்பர், 2019

பஞ்சாபிலும், டில்லியிலும் ஊர்வலத்தில் பெரியார், அம்பேத்கர் படங்கள்

பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற போராட்டத்தில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாஃபூலே படங்களை ஊர்வலமாக எடுத்துவந்து அடித்தட்டு மக்களுக்காக இந்தியா முழுமைக்குமே பாடுபட்டவர்கள் இவர்கள் தான் என்று அடையாளம் காட்டினர்.

ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு ஆதரவாகத் திரண்ட டில்லியின் பல்வேறு பல்கலைக்கழக  மாணவர்கள் வியாழன் அன்று டில்லியில் நடத்திய பேரணியில் - தந்தை பெரியாரின் படத்தை உயர்த்திப் பிடிக்கும் மாணவர்கள்.

-  விடுதலை நாளேடு, 21.12.19

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் பேரணியில் ஓரணியாய்த் திரள்வீர்!

மக்கள் விரோத - ஜனநாயக விரோத குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (23.12.2019) சென்னையில் நடைபெறும் பேரணியில் கட்சி, ஜாதி, மதங்களைக் கடந்து ஓரணியாய்த் திரள்வீர்!

மக்கள் விரோத, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் காலை சென்னையில் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து ஓரணியில் திரள்வீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அண்மையில் நாடாளுமன்றத்தில் எந்தவிதமான ஆழ்ந்த பரிசீலனை - பார்லிமெண்ட்ரி செலக்ட் கமிட்டி போன்றவைகளின் பரிசீலனைக்கூட இல்லாமல், தடாலடியாக தங்களுக்குள்ள பெரும்பான்மை என்ற ஒரே பலத்தினைப் பயன்படுத்தி, அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் பிரதமர் மோடியும், அவரது நிழலாக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்.

அவர்களது கூட்டணிக் கட்சிகளும் நிர்ப்பந்தத் திற்குப் பயந்தும், வேறு சில ஆசாபாச காரணங்களாலும், இம்மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்து, வரலாற்றில் நீங்காப் பழியைத் தேடிக் கொண்டு விட்டனர்.

அதிமுக - பா.ம.க.வின்

செயல்பாடு எத்தகையது?

அதிலும் தமிழ்நாட்டில் இருந்து சென்ற அ.இ.அ.தி.மு.க., பா.ம.க. (ஒரு உறுப்பினர்) மக்களவை  - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மகுடிக்கு மயங்கியவர்களாகி விட்டார்கள்! அதன்படி மாநில உரிமைக்குப் போராடிய அண்ணாவையே அதிமுகவினர் அவமானப்படுத்தி விட்டார்கள்!!

இப்போது நாடே எரிமலை சீற்றத்தைப் போல கொந்தளித்துக் கிளம்பியுள்ளது. வடபுலத்தில், கிழக்கில், மேற்கில், தெற்கில் எல்லாப் பகுதிகளிலும் நாட்டின் அமைதி குலைந்ததற்கு, ஆட்சியாளர்களின் அடாத செயலே காரணம்! மதத்தை வைத்து நாட்டுக் குடி மக்களைப் பிரித்து வேற்றுமைப்படுத்தி, மதச் சார்பின்மை என்ற அரசியல் கோட்பாட்டினையும், சம வாய்ப்பு, சம உரிமை என்பதையும் மறுத்து, அடிப்படை உரிமைகளையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில், ஜனநாயக விரோதமான, மனிதநேயத்திற்கும் விரோதமான  குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திணித்து விட்டனர். பின்னால் வருவதற்கு இது ஒரு முன்னோட்டம்.

ஆப்பை அசைத்துவிட்ட  கதை!

ஆப்பை அசைத்து விட்டுள்ளனர்; ஆட்சியா ளர்களே தீமூட்டி அதற்குள் விரலைவிட்டு அவதிக்கு ஆளான வெட்கக் கேடான நிலை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அஜெண்டாவில் தலையாயதான முஸ்லிம் ஒழிப்பு - வெறுப்பு என்பது தான் இச்சட்டத்தில் முஸ்லிம் அகதிகளை இடம் பெற முடியாதவாறு செய்ததின் நோக்கம் என்பது உலகறிந்த ரகசியம்.

நாளை மறுநாள் நடைபெறும்

பேரணியில் பங்கேற்பீர்!

எனவேதான் உரிமைக் குரல் ஓங்கி, ஒலிக்கத் துவங்கி விட்டது; பெருத்த மெஜாரிட்டி உறுப்பினர் என்பது எண்ணிக்கையானாலும், வாக்கு வங்கிக் கணக்குப்படி தேர்தலில் பா.ஜ.க. வாங்கிய வாக்கு வெறும் 37.6 சதவிகிதம்தான்; எஞ்சிய 63 சதம் அதற்கு எதிரானது என்ற சுவர் எழுத்தை ஏனோ படிக்கத் தவறுகின்றனர்? இதனை எதிர்க்கும் உரிமை ஜனநாயகத்தில்  நம்பிக்கையுள்ள அத்துணைப் பேருக்கும் உண்டு என்பதை உணர்த்தி, நாட்டை ஹிந்து  ராஷ்ட்டிரமாக்கும் தவறான அரசமைப்புச் சட்ட விரோத முயற்சியை முறியடிக்க, நாளை மறுநாள் காலை  (23.12.2019) திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் - பெருந்திரளாக - நாடாளுமன்றத்தில் வாக்களித்த வன்னெஞ்சர்களைத் தவிர அனைவரும் கலந்து கொண்டு ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் காத்திடவும், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான சீர்குலைவைத் தடுத்திடவும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப அனைவரும் வாரீர்! வாரீர்!

இதில்,

கட்சி இல்லை,

மதம் இல்லை,

ஜாதியில்லை,

பேதமில்லை,

மனிதாபிமானமே முதன்மையானது என்பதால்  கூட்டணியையும் தாண்டி பெருந்திரள் பேரணியாக வாரீர்! வாரீர்!!

ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து

பாசிசத்தை விரட்டுவோம்!

ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்!!

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்,

சென்னை

21-12-2019


வன்புணர்ச்சியை (Rape) சமஸ்கிருத சுலோகங்கள் தடுக்குமாம்!

‘‘ஊசி மிளகாய்’’

நமது நாட்டில் மத்தியில் ஏற்பட்ட காவி ஆட்சியில் கவர்னர்களாக நியமிக் கப்பட்ட பலரும் "அதி மேதாவிகளான நவீன பிரகஸ்பதிகள்!"

என்ன அற்புதமான யோசனைகளை இலவசமாகவே அள்ளி விடுகின்றனர்!

நோபல் பரிசுக் குழுவினர் ஏனோ இன்னமும் இத்தகைய மஹா, மஹா "அறிவியல் அற்புதானந்தாக்களை"க் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்! வருத்தமாக இருக்கிறது!

நாட்டில் நடைபெறும் 'ரேப்' எனப்படும் வன்புணர்ச்சிகள் (Rape) - பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மராத்திய கவர்னர் 'பக்தசிங் கோஷியாரி' என்ற உலக மகா அறிவாளி ஒரு அரிய யோசனையை தள்ளினார்.

சமஸ்கிருத சுலோகங்கள் 'ரேப்'பை, வன்புணர்ச்சியைத் தடுக்கும். எனவே மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லிக் கொடுத்தால் இவைகளை நடக்காமல் தடுத்து விடலாமாம்!

'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆங்கில நாளேட்டில் 20.12.2019 அன்று இப்படி ஒரு செய்தி!

எப்படி வாயால் சிரிப்பது என்று தெரியாமல் திணறுகிறீர்களா? பாவம்.

பா.ஜ.க. ஆட்சியில் எப்படிப்பட்ட "கான்சிஸ்டியூஷனல் எக்ஸ்பர்ட்டுகள்" கவர்னர்களாக நியமனம் ஆகி இருக் கிறார்கள் பார்த்தீர்களா?

அதிகாலை எழுந்து கட்சி மாறிய வர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து, 72 மணி நேரத்திற்குப் பின் ராஜினாமா வாங்கி, அடுத்தவருக்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரான அரசியல்சட்டப் பாதுகாவலர் இவர்!

இவர் ஒரு நிகழ்ச்சியில், ஜம்னா லால் பஜாஜ் நிறுவன விழாவில் மேற் கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார்!

ஹிந்துத்துவாவில் மூழ்கித் திளைத்த ஒரு தகுதியாலேயே  - இவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள்!

அதனால் இப்படி தங்களிடம் உள்ள 'சரக்கை' வெளியே அவிழ்த்துக்  கொட்டுகிறார்கள்!

"என்ன விநோதம் பாரு

எவ்வளவு ஜோக்குப் பாரு பாரு!"

என்று பாடுங்கள்!

இந்தயோசனையை முன்பே தந்திருந்தால் "பொள்ளாச்சி" நிகழ்வு களைத் தடுத்திருக்கலாமோ!

தேவபாஷை சமஸ்கிருதம் - தேவர் களுக்குத் தலைவர் புராணப்படி தேவேந்திரன் -

அந்த இந்திரன் அகலிகையை "கற்பழித்தானே" அப்போது சமஸ்கிருத சுலோகங்கள் ஏதும் கிடைக்காததால் தானோ? அட சாம்பிராணிகளா?

சிவபெருமான் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் நெருங்கியபோது சமஸ்கிருத சுலோகங்களை  அவர்கள் ஓதப்பட வாய்ப்பில்லாததால்தானோ அந்த அசம்பாவிதங்கள் நடந்தனவோ - நமக்குப் புரியவில்லை.

மராத்திய கவர்னர் பெருமான் தான் விளக்க வேண்டும்.

அவருக்குத் தெரிந்திருக்காத ஒரு தகவலை நாம் தெரிவித்து சந்தேகம் கேட்கத் தோன்றுகிறது?

காஞ்சிபுரத்தில் ஓர் அர்ச்சகன் சமஸ்கிருத சுலோகங்களைத்தான் தினமும் கடவுள் பிரார்த்தனையின்போது கூறி அர்ச்சனை செய்பவன், கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே எத்தனைக் குடும்பப் பெண்களிடம் முறையற்ற (வன்புணர்ச்சி) செய்கையில் ஈடுபட்ட கதை சிரிப்பாய் சிரிக்கிறது.

சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் பத்ரிநாத்தையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

சமஸ்கிருத சுலோகங்கள் ஏன் இவர்களை தடுக்கவில்லை?

இதுதான் யாருக்கும் புரியாத 'தேவரகசியம்' போலும்!

பல கோடி மக்களால் பேசப்படும்(?) எழுதப்படும்(?) நம் தேவபாஷைக்கு 'ஜே ஜே!' .

இவரையே அடுத்து துணை ஜனாதி பதி - ஜனாதிபதியாகவும் ஆக்கினாலும் ஆக்குவார்கள் - யார் கண்டது?

- விடுதலை நாளேடு 21 12 19

புதன், 18 டிசம்பர், 2019

சென்னையில் டிச.23 இல் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனே  திரும்பப் பெறுக!!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை,டிச.18 திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இன்று (18.12.2019) காலையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது.

தீர்மானம் விவரம் வருமாறு:

மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும்  தவறான பொருளாதாரக் கொள்கைகளால்,  இந்தியா கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது. நாட்டின் உயிரோட்டமான வேளாண்மைக்கு ஊக்கமின்றியும், விளை பொருள்களுக்கு உரிய விலை இன்றியும் ஒளி இழந்திருக்கிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறது.  பெண்கள், தலித்துகள், பழங்குடி யினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மிகக் கடுமையான, முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையாலும், நடவடிக்கையாலும் சரி செய்ய வேண்டிய பணியைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ். வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள் கைக்குச்  செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், குடியுரி மைத் திருத்தச் சட்டம் 2019-அய் கடந்த 9.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.

1955ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக  எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத் திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பாஜக அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது.  மதவாதக்  கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று. இந்த சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.   ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம் - அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-அய் ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயக குரல்வளையை நெரித்தல் - தற் போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க.  அரசு.

மாணவர்களைத் தாக்குவதா?

இந்தத் திருத்தச் சட்டத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும்,  நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஏகோபித்த இந்த எதிர்ப்பை பா.ஜ.க. அரசு துளியும் மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அடுத்த கட்டமாக, ஜனநாயக வழியிலான போராட்டங் களை முன்னெடுத்து  வருகின்றன. அகில இந்திய அளவில் மாணவர் சமுதாயம்  எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகிறது. இயல்பாக எழும் மாற்றுக் குரலைச் சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு  இழந்து விட்டது. டில்லி ஜாமியா - உத்தரப்பிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது. மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய  காவல் துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நாடு முழுவதும் தன்னெழுச்சி யாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப் போராட்டங் களுக்கு ஆதரவளிப்பதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். கேரளாவில் ஆளுங் கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றா கப் பங்கேற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட் டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள்  ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையா ளமாக  அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழின விரோத போக்காகும்!

“எம்மதமும் சம்மதமே”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற உயர்ந்த சிந்தனைகளின் சிறப்புக் கருவூலமான  தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத் தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம். பாகிஸ்தான்- பங்களாதேஷ்- ஆப்கானிஸ் தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க அரசின் மத வாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.

தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்த திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது. மாநிலங்கள வையில் இந்த சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க. வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான்  காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலிருந்து  துணைச் செயலாளர் ஒருவர் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு, இந்த சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால் அதன்படி வாக்களித்தோம் என மாநிலங்களவை அ.தி. மு.க உறுப்பினரான திரு.எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம்,  தலையாட்டி வருகிறது  என்பது தெளிவாகத் தெரிகிறது.

அமைதி சீர்குலைந்தது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து,  பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. வடகிழக்கு மாநிலங் களிலும் தலைநகர் டில்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்திய பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார். பல நாடுகள் தங்கள் குடிமக்களை இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067-க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறி வியலாளர்களும்,  இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து உள்ளனர்.

சொந்த மண்ணிலே வாழும் அகதிகளை அந்நியப்படுத்துவதா?

‘‘வேற்றுமையில் ஒற்றுமை'' என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொள்ளவிருக்கும் குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப் புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந் நியப்படுத்திக்  கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளு மாகும். ஏற்கெனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதி வேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நிய ராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்து உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக் களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர். இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட் டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகை யிலும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த சட் டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

23 ஆம் தேதி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே  செயல்பட்டு, ஈழத் தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தி னருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட் கிழமை காலை 10 மணி அளவில், சென்னையில்  “குடியுரி மைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்திடுவது என அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம்  ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில்

பங்கேற்றோர்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை திமுக உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,  முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.இராமகிருஷ்ணன்,   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், வீரபாண்டியன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாகிருல்லா, ஈஸ்வரன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு 18 12 19


வட இந்தியா போராட்டத்தில் பெரியார் முழக்கம்

வட இந்தியாவில் நடக்கும் போராட்டங் களில் ஒலிக்கும் மராட்டிய முழக்கங்கள்:

நா சாவர்க்கர், நா திலக், நா சாது அவுர் சன்யாசி

ஹமாலா ஹவேது பக்து புலே, சாகு,

பெரியார் அவுர் அம்பேத்கர்.

தமிழாக்கம்:

வேண்டாம் சாவர்கர், வேண்டாம் திலகர்,

வேண்டாம் சாது சன்யாசி

எங்களுக்குத் தேவை புலே, சாகு மகராஜ்,

பெரியார், அம்பேத்கர்

வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புலே, சாகு பெயர்கள் முழங்கப்பட்டு வருகின்றன.

- விடுதலை நாளேடு 18 12 19

தமிழனை இந்தியன் இல்லை எனக் கூறும் சட்டம்- #CAB& #NRC விளக்கம்

*#CAB& #NRC இரண்டையும் போட்டு குழப்பிகொள்ள வேண்டாம்.*

*CAB என்பது நம் நாட்டுக்குள் வரும் அகதிகள் பற்றிய சட்டம்.*

*NRC என்பது நம் நாட்டில் உள்ளவர்களை அகதிகள் ஆக்கும் சட்டம்.*

*NRC சட்டப்படி உங்களை இந்தியன் என்று நிறுபிக்க வேண்டும்.* 
*நீங்கள் இந்தியாவின் பாஸ்போட் வைத்து இருப்பீர்கள் நீங்கள் இந்தியாவின் அடையாளம் என சொன்ன ஆதார்கார்டு வைத்து இருப்பீர்கள். இந்திய அரசாங்கம் வினியோகிக்கும் பொருளை வாங்க அரசு கொடுத்த ரேசன்கார்டு வைத்து இருப்பீர்கள் இதுவல்லாம் செல்லாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டு பிறப்பு சான்றிதல் இருக்கா என கேட்பார்கள் இல்லை என்றால் நீ இந்தியன் அல்ல அகதி என முடிவு செய்வார்கள் இதுதான் NRC.*

*இந்தியாவில் பிறந்த நமக்கு ஏன் பிறப்பு* *சான்றிதல் இல்லை என்ற கேள்வி வரலாம்*
*இந்தியாவில் பிறப்பு சான்றிதல் வேண்டும் என்ற சட்டம்1969ம் வருடத்தில் தான் அமல்படுத்தப்பட்டது அதனால்தான் 1969 க்கு பின் பிறந்தவர்களுக்கு பர்த் சர்டிபிகட் வேண்டும் என்கிறார்கள்*

*ஆனால் தமிழ்நாட்டில் பிறப்பு சான்றிதல் கட்டாயம் வேண்டும் என சட்டம் 2000ம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது அதனால் 2000ம் ஆண்டுக்கு முன்பு பிறப்பு சான்றிதல் பற்றிய போதிய விழிப்புனர்வு நம்மிடம் கிடையாது*

*2000ம் ஆண்டுக்கு பின்பு பிறந்த நம் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதல் கட்டாயம் இருக்கும் அவர்களுக்கு பிரச்சனை இருக்காதுதானே என நினைக்கலாம் அதுவும் கிடையாது*

*1989க்கு பின் பிறந்த குழந்தைகள் பிறப்பு* *சான்றிதலோடு அப்பா அம்மா இந்தியன் என்பதற்க்கான சான்றிதலும் காட்டவேண்டும்*
*மொத்தத்தில் எல்லாருமே ஆண்டிஇண்டியந்தான்.*

*இது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல எல்லருக்கும்தான் இதில் ஒரு முக்கிய விசயம் என்ன என்றால் வடநாட்டு இந்துவாக இருந்தால் எதுவுமே இல்லாவிட்டாலும் CAB சட்டம் மூலம் மீண்டும் இந்தியனாகி விடாமல் அந்தசலுகை தமிநாட்டு இந்துவுக்கு (தமிழனுக்கு) கிடையாது*

*மொத்தத்தில் இது நம்மை எல்லாம் காலிசெய்துவிட்டு வடந்நாட்டு பஜனை கோஷ்டியை இங்கு குடியமர்த்த போட்டதிட்டம். (39 தொகுதியிலும் தோற்கடித்ததால் எடுத்த முடிவாக இருக்கும்).*

*இவர்கள் திட்டம் எதுவுமே அவர்களுக்கு பலந்தராது.  இதுவரை எப்படி மக்கள் தொகை கனக்கெடுப்பு நடந்ததோ அதுபோல நடந்தால் ஒத்துழைப்பு கொடுப்போம் அப்படி இல்லாமல் CAB &NRC என அவர்களும் குழம்பி நம்மையும் குழப்ப நினைத்தால் யாரும் எந்த ஆவனங்களும் தரமாட்டோம் முடிந்ததை செய்துகொள் என ஒற்றுமையாக மறுத்துவிட்டால் எதுவுமே செய்ய இயலாது.*

- முஜிபூர் ரகுமான் என்பவர் முகநூலில் அளித்த பதில்

திங்கள், 16 டிசம்பர், 2019

மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்திமீது புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுக! : அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவு

சென்னை, டிச.16 மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன்காந்தி மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் (கிப்டு) இன்று காலை 10.30 மணிக்கு மூத்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள்.

1) மே 17 இயக்கத்தின் நிறுவனர்  திருமுருகன்காந்தி மீது பொய்யாகப் புனையப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

(2) இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர் களும் முதல் அமைச்சர், உள்துறை செயலாளர், காவல் துறைத் தலைமை இயக்குநர்  ஆகியோரை சந்தித்து முறை யிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய  ஆளுநர் அவர் களையும் சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானித் துள்ளது.

3) வலுவான வகையில் சட்ட ரீதியாக போராட வழக்குரைஞர்களை ஒருங்கிணைப்பது என்றும் தீர் மானிக்கிறது.

கூட்டத்தில் சி.பி.அய். மாநில செயலாளர் இரா. முத்தரசன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.  ஜவாஹிருல்லா, வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை கு. இராமகிருஷ்ணன், தெகலான் பாகவி (தேசிய துணைத் தலைவர், SDPI கட்சி),  மல்லை சத்யா (துணைப் பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்), குடந்தை அரசன் (தலைவர், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துக்களைத் தெரிவித்தனர்.

 - விடுதலை நாளேடு 16 12 19

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாட்டின் பல பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள்மீது தடியடி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதுடில்லி,டிச.16 குடியுரிமை சட்டத் திருத்தத் துக்கு எதிராக டில்லியில்  நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்களைத் தாக்கினர். கல்லூரி நூலகத்தையும் மோசமாகத் தாக்கிச் சிதைத்தனர்.  இதனைத் தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட் டம் தொடர்ந்து நடந்து வருகிறது. டில்லியில் நடக்கும் போராட்டம் பேருரு எடுத்துள்ளது. டில்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டு களை வீசி தடியடி நடத்தினர். காவல்துறையினரின் தடியடியையும் மீறி மாணவர்களின் போராட்டம்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்று ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண் டனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை காவல் துறையினர் வீசி தடியடி நடத்தினர். இந் நிலையில் திடீரென பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின.

இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப் பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்ய வில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப காவல்துறையினர் இப்படி பொய்ப் புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் டில்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாண வர்களை மோசமாக தாக்கியுள்ளனர். மாண விகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் புகுந்து ரப்பர் குண்டுகளால் சுட்டும் அடித்தும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஜவகர்லால் நேரு, அலிகார், அய்தராபாத் மற்றும் நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக் கழகங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஜாமியா மிலியா பல்கலைக் கழக கலவரத்தை தொடங்கி தற்போது உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத் திலும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. அங்கு மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள்  நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களைஅடித்து உதைத்து, லத்தி மூலம் காயப்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டில்லி, அய்தராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக மாண வர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

டில்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின், மாணவர்கள் சிந்திய ஒவ் வொரு சொட்டு ரத்தத்திற்கும் பாஜக பதில் சொல்லியாக வேண்டும் என்று குறிப் பிட்டு இருக் கிறார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் டில்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.  இங்கு மாணவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் வரும் காலங்களில் பாஜக பதில் சொல்லியாக வேண்டும். குடி யுரிமை சட்ட திருத்தத்தை பாஜக மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு நிறைய எதிர்ப்பு நிலவி வருகிறது, இதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது, என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட் டுள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். குடி யுரிமைச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? என்ற தலைப்பில் இந்த காட்சிப் பதிவு யூ டியூபில் வெளியாகி உள்ளது. அதில் இந்த சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விளக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- , விடுதலை நாளேடு, 16.12.19

'தினமலரே' அவதூறு பேசுவோர் யார்?

திராவிடர் கழகத் தலைவர் வைத்த குற்றச்சாட்டு என்ன? அதற்குத் 'தினமலர்' கூறும் பதில் என்ன? அதுவும் ஒரு தகவலைச் செய்தியாக வெளியிடும்போது - இதுதான் அவாளின் பத்திரிகா தர்மம்?

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்தவித மதத் தொடர்பான வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்பது அரசு ஆணை. அதற்கு எதிராக சில இடங்களில் கோயில்கள் எழுப்புவது சட்டப்படி குற்றம் என்ற குற்றச்சாட்டுக்கு அறிவு நாணயம் இருந்தால் 'தினமலர்' வகையறாக்கள் பதில் சொல்ல  வேண்டும். அதற்கு வக்கு இல்லாமல் சாராயம் குடித்தவன் உளறுவது மாதிரி (இராமன் குடித்த சோம பானமாகக்கூட இருக்கலாம் - என்ன!) உளறலாமா?

சரி... 'தினமலர்' வைத்த குற்றச்சாட்டுக்கே வருவோம்.

பிறரை அவதூறாக பேசக் கூடாது என சட்டம் சொல்கிறது உங்களைப் போன்றோர் (ஆசிரியர் வீரமணி போன்றோர்) 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதை மதிப்பதில்லையே என்பதுதான் தினமலரின் குற்றச்சாட்டு.

தினமலரைத் திரிநூல் என்று 'விடுதலை' எழுதினால் வருத்தப்படும் சிலர், இப்பொழுதாவது அது நியாயம்தான் என்று உணரக் கூடும்.

50 ஆண்டு காலமாக பிறரை அவதூறாக திராவிடர் கழகத் தலைவர் என்ன பேசினார்? எடுத்துக்காட்ட வேண்டும் அல்லவா?

ஆண்டுக்கு ஒரு முறை ஆவணி அவிட்டம் என்று கூறி பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே-

இதன் பொருள் என்ன? தங்களைப் பிராமணன்  - பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவன் என்று அறிவிப்பது தானே! பெரும்பாலான மக்களை சூத்திரர்கள் என்று (சூத்திரர்களுக்கு சாஸ்திரப்படி பூணூல் தரிக்க உரிமை கிடையாது) மறைமுகமாக இழிவுபடுத்துவதுதானே!

சூத்திரன் என்றால் வேசி மகன் என்று இவர்களின் மனுதர்மம் கூறவில்லையா?

இதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் கேள்வி எழுப்பினால்  இது பிறரை அவமதிப்பது ஆகுமா!

அவாள், வேசி மகன் என்று பெரும்பாலான மக்களைச் சொல்லலாம் - அது சட்ட விரோதம், நியாய விரோதம், மனித விரோதம் அல்ல - இப்படி சொல்லுகிறாயே என்று சுயமரியாதையுடன் எதிர் கேள்வி வைத்தால் அவதூறாம்.

இதுதான் ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம் என்பது

தமிழன் கட்டிய கோயிலில் தமிழன் அர்ச்சகனா னால் கருவறை தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துப் போய் விடும்; அந்த தோஷத்தைக் கழிக்க புதிய கலசங்கள் செய்து வைக்க வேண்டும். பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்று வைசனாச ஆகமத்தைத் தூக்கிக் கொண்டு உச்சநீதிமன்றம் வரைசெல்லும் கூட்டத்தினர் யோக்கியர்கள்.

இந்த ஆரிய அகம்பாவத்தை மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தோல் உரித்துக் காட்டினால் அவதூறா? சட்ட விரோதப் பேச்சா?

ஆட்சி அதிகாரம் கையிலே கிடைத்திருக்கிறது என்ற திமிரில் திரி நூலே, பூணூலைப் பேனாவாக்கி எழுதலாம் என்று மனப்பால் குடிக்காதே - வட்டியும் முதலுமாகக் கொடுக்கத் தமிழர்கள் தயார்! தயார்!!

-  விடுதலை நாளேடு 15 12 19

சமஸ்கிருத எதிர்ப்பு என்பது பார்ப்பன-ஆரிய எதிர்ப்பே மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் உருவாக்கம்

மக்களவையில் 12.12.2019 அன்று மசோதா, திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

அடுத்து தேசிய கல்விக்கொள்கையில் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர், இஸ்லாமியர் என்பதால்,உத்தர பிரதேசத்தில் உள்ள பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கு பார்ப்பன மாண வர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு.

ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்து யார் படித்தாலும், ஒன்றும் ஆகப் போவதில்லை. இருப்பினும் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திட அனைத்து வழிக ளிலும் செயல்படுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை ஆரிய, பார்ப்பன, வழக்கு ஒழிந்த மொழி என்று தொடர்ந்து சொல்லி வருவது திராவிடர் இயக்கமே. அதன் தொடர்ச்சிதான், மக்கள வையில் திமுக சமஸ்கிருத பல்கலைக்கழக மசோ தாவை எதிர்த்தது. கம்யூனிஸ்ட் உறுப்பினர் வெங்க டேசன் அவர்களும் இணைந்தது மகிழ்ச்சியே.

1926-க்கு முன்னால் உள்ள

வரலாற்றுச் செய்தி:

சென்னை மாநிலக் கல்லூரியில், சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300.  தமிழ் பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியா ருக்கு மாதச் சம்பளம் ரூ.80.  இதனை எதிர்த்து தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார். அன்றைய நீதிக்கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த இராமராய நிங்கவாரு என்ற பனகல் அரசர், இந்த வேற்றுமையை ஒழித்தார்.

ஆக, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது ஹிந்திக்கும் முன்னால், திராவிடர் இயக்கம் மேற்கொண்ட போர்.

அது,  டிசம்பர் 12-ஆம் தேதி  இந்திய அளவில் நாடாளுமன்றத்தில்  திராவிடர் இயக்கத்தின் குரலாக எதிரொலித்தது.

இன்று நடைபெறும் ஆட்சி ‘பச்சைப் பார்ப்பன ஆட்சி' என்றும், சூத்திரனை - பிராமணன் மேல்ஜாதி - கீழ்ஜாதிக்காரன் என்பவன் அப்படியே நீடித்து நிலைத்து என்றென்றும் ‘சிரஞ்சீவி'யாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டுவரும் ஆட்சி என்றும் காட்டுவதற்கு இதுவரை பலவித ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்றாலும், இன்றும் ஒரு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்.

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்' என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந் நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை' எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்கம்

கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில் லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள -  இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய  ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய் மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன 'மேலோர்' மொழியாக - சமஸ்கிரு தத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டி தர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு புரொஃபசருக்கு) 75 ரூபாய் தான் சம்பளம். சமற்கிருத ஆசிரியருக்குப் பெயர் - ‘புரொஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்று ஞாபகம்) என்பவர் வாங் கின சம்பளம் ரூ.300க்குமேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங் கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல்ராஜா அவர்களே இதைக்கண்டு மனம் கொதித்து என்னி டத்தில் நேரில் சொல்லி, “நீங்கள் இதைக்கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்' என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமைவாய்ந்தவர். என்ற போதிலும்கூட அந்தமாதிரி - அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட போடும். ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் எறும் தமிழ்ப்பண்டிதர் கள் இதே நிலைமையில்தான் இருக்கக்கூடும்.

- தந்தை பெரியார், விடுதலை, 15.2.1960

தகவல்: கோ.கருணாநிதி, வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு 15 12 19

பொங்கி எழுந்த மனைவி!

உறவினர் ஒருவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. தம்பதிய ருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதை கருத்தில் கொண்டு, முக்கிய உறவினர் கள் ஒன்று கூடி ஆலோசித்து, அந்த கணவருக்கு, இரண் டாம் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

இதையறிந்த மனைவி, ‘குழந்தை வேண்டி, கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வதில், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை; ஆனால், அதற்கு முன், நாங்கள் இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.'

‘அப்போது தான், இருவ ரில் யாருக்கு குறையுள்ளதென தெரிய வரும்...' என்று, பிடி வாதமாக வற்புறுத்தினார். அதற்கு சம்மதித்து இருவரும், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

பரிசோதனை முடிவில், பெண்ணுக்கு எந்த குறையும் இல்லை; கணவருக்கு தான் பிரச்சினை. இரண்டாம் திரு மணம் செய்து கொண்டாலும், குழந்தை பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என, தெரிய வந்தது.

இதையறிந்த அந்த பெண், ‘வாரிசு வேண்டும் என, என் கணவருக்கு இரண் டாம் திருமணம் செய்து வைக்க துடித்தீர்களே... இப்போது, அவரிடம் தான் குறை என்பது தெளிவாகி யுள்ளது; என்னிடம் குறை ஏதுமில்லை என்று உறுதியாகி விட்டது. இந்நிலையில், என்ன செய்யப் போகிறீர்கள்... எனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறீர்களா...' என, உற வினர்களிடம் ஆவேசப்பட் டார்.

உறவினர்கள் திகைத்து, வாயைடைத்து நின்றனர்.

அப்பெண், பழம் பஞ்சாங்கமாக, மவுனமாகி இருந் தால் என்னவாகி இருக்கும்?

தற்சமயம், நிலைமை உணர்ந்து, மீண்டும் ஆலோ சித்து, உறவுக்குள் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது என, ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

பெண்களே... எப்போது, எதற்கு, எப்படி நம் மவு னத்தை கலைக்க வேண்டுமோ, அப்போது பொங்கி எழுங்கள். துணிவு தான் ஆயுதம் என்பதையும், மறந்து விடக் கூடாது.

- எஸ். ராஜேந்திரன்,

தஞ்சாவூர்.

(‘தினமலர்', 6.10.2019)

கவனிக்கவும் - இனமல ரான ‘தினமலரிலேயே' இப்படி ஒரு வாசகரின் கடிதம்.

விபச்சாரம் என்றால் பெண்ணை ஒழுக்கம் கெட் டவள் என்பது; அதில் சம் பந்தப்பட்ட ஆணைக் கண்டு கொள்ளாமல் இருப்பது.

குழந்தைப் பேறு இல்லை என்றால், மலடி என்று வசை பாட்டுப் பாடுவது பெண் களைத்தானே!

அர்த்தமுள்ள இந்து மதத் தின் பெண்மீதான கேவலப் பார்வையே இது.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுவது என்ன?

‘‘பெண்களால் ‘ஆண்மை' என்ற தத்துவம் அழிக்கப்பட வேண்டும்.''

- ‘குடிஅரசு', 12.8.1928

- மயிலாடன்

- , விடுதலை நாளேடு 14 12 19

‘பாபாயணம்!'

‘‘இரட்டையரான நாங்கள் மருத்துவம் படித்து வருகிறோம். முதலாமாண்டு தேர்வில் நாங் கள் இருவரும் ஒரு தேர்வை சரியாக எழுதவில்லை. ‘பாபா கண்டிப்பாகத் தேர்ச்சி பெறச் செய்வார்' என்று நான் நம்பி னேன். தேர்வு முடிவுகள் ஒரு வியாழன் அன்றுதான் வெளி யாகின. நாங்கள் இருவரும் குறிப்பிட்ட அந்தப் பாடத்தில் ஒரே மதிப்பெண் (110) பெற்றுத் தேர்ச்சி பெற்றோம். அன்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் என் கைப்பேசி செயலியில் நான் ஒரு மேற்கோள் படித்தேன். ‘சாய் பாபாவை மறக்காதே, நீ 100 எதிர்பார்த்தால் அவர் 110 ஆகத் தருவார்' என்றது வாசகம்.''

- மு.வர்ஜிதி, ரீமா

(‘ஆனந்தவிகடன்', 11.12.2019, பக்கம் 94)

‘பாபாயணம்' என்னும் தலைப்பில் இப்படியொரு செய் தியை ‘ஆனந்தவிகடன்' வெளியிட்டுள்ளது.

‘குமுதம்' இதழ் மறைந்த சங்கராச்சாரியார்பற்றி ஒவ் வொரு இதழிலும் அற்புத மகாத் மியங்களை அவிழ்த்து விடு கிறது என்றால், ‘ஆனந்தவிகடன்' இதழோ பழைய சாய்பாபாவை தூசு தட்டி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அற்புதங்கள், அதிசயங் களை அவிழ்த்துவிடாவிட்டால், கடவுளானாலும் சரி, பாபாக் களாக ஆனாலும் சரி, சாமியார் களாக ஆனாலும் சரி, சங்கராச் சாரியார்களானாலும் சரி மக்கள் மத்தியில் போனி ஆகாது. இந்த இரகசியத்தை சரியாகத் தெரிந்து வைத்துள்ள ஊடகங்கள், மக் களை மதி மயக்கத்திலேயே வைத்திருந்தால்தான் ‘கல்லாவும்' கட்டலாம்; தங்களுக்கென்றுள்ள அக்ரகாரக் கலாச்சாரத்தையும் - சேதாரம் இல்லாமலும் ஒப்பேற்றலாம் என்ற முறையில் உண்மைக்கு மாறானவற்றை ஊதி ஊதி - வானத்தில் வண்ண வண்ண பலூன்களாகப் பறக்க விடுகிறார்கள்.

புட்டபர்த்தி சாய்பாபாவை நினைத்த மாத்திரத்திலேயே நோய்கள் தீரும் என்று  செய்தி பரப்பினார்கள். பல டாக்டர்கள், இன்ஜினியர்கள் அதற்காகவே என்று ஏற்பாடு.

ஆனால், அதே புட்டபர்த்தி சாய்பாபா, சாதாரண மனிதர் களுக்கு ஏற்படும் நோய்களாலும், உடல் உபாதைகளாலும் பல மாதங்கள் படுக்கையில் இருந் தார் என்பது தெரிந்த செய்தி. (கேலி செய்யவில்லை - நடப் பைத்தான் சொல்லுகிறோம்).

அற்புத பகவானுக்கு இது ஏன் நடந்தது என்று சிந்தித்தால், அதற்குப் பெயர்தான் பகுத்தறிவு - ஆனால், ‘‘பக்தி வந்தால் தான் புத்தி போய்விடுகிறதே!''

‘ஆனந்த விகடன்' வெளியிட்ட சாய்பாபாபற்றிய சங்கதி -மிகவும் ஆபத்தானது. படிக்கும் மாணவர்களைத் தவறான திசைக்கு இழுத்துச் செல்லும் மாபெரும் குற்ற நடவடிக்கை.

சாய்பாபாவை நினைத்தால் மார்க்குகள் குவியும் என்று தவறான வழியைக் காட்டலாமா? இதுதான் பத்திரிகா தர்மமா?

பக்தியை - புத்தியை இவ்வளவுக் கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லலாமா?

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 13 12 19

நவமியில் தொடங்கிய நல்ல காரியம்?

பழைய இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்த போது தினமணிக் கதிரில் வெளிவந்த இந்த செய்தி தட்டுப்பட்டது.

‘‘1927 இல் கதர்ப் பணிக் காக காந்திஜி கோவைக்கு வந்தார். கோவை பகுதியில் கதர்ப் பணியைத் தீவிரமாக எடுத்து நடத்தியவர் அய்யா முத்து.

அவர் இராமகிருஷ்ண வித்யாலயம் என்ற பள்ளிக் கட்டிடத்துக்கு காந்திஜியிடம் அடிக்கல் நாட்ட வேண்டினார்.

காந்திஜியும் ஒப்புக் கொண்டு, முதல் நாள் இரவு தங்கிவிட்டு, மறுநாள் காலை அடிக்கல் நாட்டுவதாகச் சொன்னார். ஆனால், உடன் இருந்தவர்களுக்கு அந்த நாள் பிடிக்கவில்லை. கார ணம், முதல் நாள் அஷ்டமி.

மறுநாள் நவமி. நவமியில் நல்ல காரியம் தொடங்குவதை அவ்வளவாக விரும்பமாட் டார்கள். கல்வியாளர் அவி னாசிலிங்கம் கூட அய்யா முத்துவிடம் நவமியில் அடிக்கல் நாட்ட வேண்டாமே என்றார்.

உடனே அய்யாமுத்து, ‘‘காரியம் ரொம்ப நல்ல காரியம். அதைத் தொடங்கி வைப்பவரோ ரொம்ப ரொம்ப நல்லவர். எதுவும் நடந்து விடாது'' என்றாராம்.

ஏற்பாடு செய்தபடியே நவமியில் அடிக்கல் நாட்டி னார் காந்திஜி. இன்று கோவை யில் பிரகாசமாய் விளங்கு கிறது இராமகிருஷ்ண வித் யாலயம்.''

- ஜெ.அன்பு பாலாஜி, திருச்சி

‘தினமணிக்கதிர்', 21.7.2013

மேற்கண்ட நிகழ்வுக்கும், நமது கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? காந்தியார் சம் பந்தப்பட்டது. இராம கிருஷ்ண வித்யாலய பள்ளி சம்பந்தப்பட்டது.

இவர்கள் எல்லாம் நம் பிக்கையாளர்கள்தான். இந்த நிலையில், இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது வைதீகர்கள் அஞ்சி நடுநடுங்கும் நவமியிலாகும்.

‘கெட்ட நாளில்' காந்தி யாரால் தொடங்கப்பட்ட பள்ளி நொடிந்துவிட்டதா - துலங்கவில்லையா? நல்ல படியாகத்தானே வளர்ந்தி ருக்கிறது. இதற்குப் பிறகாவது நல்ல நேரம், கெட்ட நேரப் பித்துக்குளித்தனத்தை விட் டுத் தொலைக்கக் கூடாதா?

இதில் இன்னொரு கேள் வியும் இருக்கத்தான் செய் கிறது. நவமி என்பது இராமன் பிறந்த நாள்தானே!

‘அஷ்டமி' என்பது கிருஷ் ணன் பிறந்த நாள்தானே (கோகுலாஷ்டமி).

கடவுள்கள் பிறந்த நவமி யும், அஷ்டமியும் கெட்ட தானது எப்படி?

ஓ, கடவுள்களே அறிவுப் பற்றாக்குறையால் பிறப்பிக் கப்பட்ட கெட்ட விஷயங் கள்தானே!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 12 12 19

சனி, 14 டிசம்பர், 2019

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்

சென்னை பாரிமுனையில் இடிக்கப்பட்டது ஆக்கிரமிப்பு கோயில்
சென்னை, டிச.14 பாரிமுனையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கோவில்  உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டது.
பாரிமுனை ஆர்மேனியன் சாலையை ஆக்கிர மித்து  சக்தி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு கோயில், அப்பகுதியில் போக்கு வரத்துக்கு பெரும் இடையூறாக இருந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாக, நடை பாதையை ஆக்கிரமித்துள்ள இக்கோவிலை இடிக்க வேண்டும் என, ‘டிராபிக்’ ராமசாமி, 2008இல் வழக்கு தொடர்ந்தார்.கோவிலை இடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் நிர்வா கத்தினர் தடை ஆணை பெற்றனர். 11 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், ஆக்கிர மித்து கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இராயபுரம் மண்டல அலுவலர் லாரன்ஸ் மற்றும் காவல் துறை உதவி ஆணையாளர் விஜயராமலு, ராயபுரம் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன் உள்ளிட் டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாநக ராட்சி ஊழியர்கள் 4 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு ஆக்கிரமிப்புக் கோவிலை இடித்து, லாரிகள் மூலம் கட்டட கழிவுகளை நேற்று அகற்றினர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-விடுதலை நாளேடு, 14.12.19

2500 ஆண்டு சமஸ்கிருதம் - 4500 ஆண்டு வரலாறு தமிழ் - ஆ.இராசா மகத்தான போர் முழக்கம்!

கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம் மட்டும்தான் தெரியுமென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் கடலில் எறி என்றவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார்
செத்த மொழிக்கு ரூ.150 கோடி - திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடா?
நாடாளுமன்றத்தில் மானமிகு  ஆ.இராசா மகத்தான போர் முழக்கம்!
புதுடில்லி, டிச.14  கடவுளுக்குத் தேவ பாஷை சமஸ்கிருதம்தான் தெரியும் என்றால், அந்தக் கடவுள்களைத் தூக் கிக் கடலில் வீசு என்று சொன்னவர் எங்கள் தத்துவ பிதாமகர் தந்தை பெரியார் என்றும், செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு ரூ.150 கோடி யும், வளமான திராவிட மொழிகளுக்கு ரூ.12 கோடியும் ஒதுக்கும் பாரபட்சம் ஏன் என்று இடி முழக்கம் செய்தார் திராவிட முன்னேற்றக் கழக கொள் கைப் பரப்பு செயலாளர் ஆ.இராசா அவர்கள்.
மக்களவையில், மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழக ஆராய்ச்சி மய்யம் அமைத்தல்' மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில்மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா பேசியதாவது:
பேரவை மாற்றுத் தலைவர் அவர் களே, இந்த சமஸ்கிருத பல்கலைக் கழக மசோதாவில் பங்கேற்கின்ற வாய்ப்பினை வழங்கியதற்காக முத லில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அவையில் நான் 5-ஆவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை அமைச்சராகப் பணியாற்றி இருந்தா லும், முதல் முறையாக என்னுடைய தாய்மொழியில் பேசுகின்ற வாய்ப்பை, அவசியத்தைப் பெற்று பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
எதிர்க்கட்சிகளுக்கும்
அதிக நேரம் ஒதுக்குக!
முதலில் நான் பேரவைத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்வது, பொதுவாக மசோதாவில் பேசுகின்ற வர்களுக்கு நேரம் ஒதுக்கும்போது, அந்தந்த அரசியல் கட்சிகளின் உறுப் பினர்களின் எண்ணிக்கை அடிப் படையில் நேரம் ஒதுக்குவது வழக்கம். நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக் கிறேன்.
ஆனால், இந்த முறை நடந்து கொண்டிருக்கின்ற விவாதம், சற்று வித்தியாசமான கோணத்தில் சென்று கொண்டு இருக்கின்ற காரணத்தி னால், எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், கருத்துக்கு கருத்து என் கின்ற அந்த அடிப்படையில் அதிக நேரத்தை எதிர்க்கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டும் என்று உங்களை நான் முதலில் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
மொழியை அழிக்க நினைத்தால் தி.மு.கழகம் எதிர்க்கும்!
இந்தச் சட்டத்தின் நோக்கம், சமஸ்கிருதத்தில் பட்டமேற்படிப்பு, முனைவர் படிப்பு, ஆராய்ச்சி படிப்பு, சாஸ்திர கல்வியை கற்பிப் பது என்கின்ற நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு இருக் கின்றது.
நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது நானோ எந்த மொழிக்கும் எதிரான வர்கள் அல்ல. ஆனால், எந்த ஒரு மொழியும், இன்னொரு மொழியின்மீது ஆதிக்கம் செலுத்துமானால், எந்த ஒரு மொழியும், தானே பெரிய மொழி, சிறந்த மொழி என்று சொல் கின்ற காரணத்தினால், இன்னொரு மொழியை அழுத்த நேர்ந்தால் அல்லது அழிக்க நேர்ந்தால் அதனை ஒருபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒப்புக்கொள்ளாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள்!
சமஸ்கிருதத்தை வளர்க்க வேண் டும் என்பதற்காக இந்த அரசு எடுக் கின்ற நடவடிக்கைகள் எங்களுக் கொன்றும் விரோதமானது அல்ல. ஆனால், அதே நேரத்தில் இந்த அவையில் பேசப்படுகின்ற கருத்துகள், அரசியல் வரலாற்றில் ஒரு மிகப் பெரிய பிழையை ஏற்படுத்துகின்ற வகையில் இருந்துவிடக் கூடாது.
இந்தியாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருந்தன என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொண்டாக வேண்டும். வரலாற்று ஆராய்ச்சி யாளர்கள் ஒப்புக்கொண்டு இருக் கிறார்கள். சி.பி.இராமசாமி அய்யர், எல்லோருக்கும் தெரிந்தவர்தான். திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவா னாக இருந்தவர். அதற்குப் பிறகு பனாரஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தவர்.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நேரு அவர்கள், சுதந்திரத்திற்குப் பிறகு எல்லா சமஸ்தானங்களையும் இணைக்க வேண்டும் என்று முடி வெடுத்த நேரத்தில், மாகாணங்களை இணைப்பதற்காக, நேஷனல் இண்டி கிரேஷன் கவுன்சில்- என்ற குழுவை ஆரம்பித்தபோது, அதன் தலைவராக யாரைத் தேர்ந்தெடுத்தார் என்றால்; சி.பி. இராமசாமி அய்யர் அவர் களைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.
சமஸ்கிருதத்திலிருந்து தமிழா?
ஏற்க முடியாது!
அவர் ஒரு சமஸ்கிருத பண்டிதர். அவர் என்ன சொல்கிறார் என்றால், "இந்த நாட்டினுடைய இரண்டு பண் பாடுகள், இரண்டு மொழி குடும்பங் களை அடிப்படையாகக் கொண்டது; ஒன்று, சமஸ் கிருதத்தை அடிப்படையாகக் கொண்டது, இன் னொன்று திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டவை. இவை இரண் டும் வேறு வேறு" - என்று சொன்னார்.
இதற்கு மூலம் எங்கே இருக்கின்றது என்று சொல்வதற்கெல்லாம் நேர மில்லை, நம்முடைய அமைச்சர் அவர்கள் கூட இங்கே சொன்னார்கள். நான் அதனை மறுக்கிறேன். சமஸ் கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்பதை ஒருபோதும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.
திராவிடத்தின் தனித்த அடையாளங்கள்!
நாடாளுமன்றத்தில், பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார் கள்: “நான் திராவிட இனத் தைச் சேர்ந்தவன், அப்படிச் சொல்லுகின்ற காரணத் தினால் நான் ஒரு குஜராத்திக்கோ, ஒரு மராட்டி யருக்கோ, ஒரு வங்காளியருக்கோ எதிரான வனல்ல.
நான் அப்படிச் சொல்வதற்கு என்ன காரணம், இந்த உலகத்துக்கு வழங்குவதற்கு எங்களிடத்தில் திட மான, தனித்த விழுமியங்கள் கொண்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் தனித்த அடை யாளத்தோடு இவ்வுலகிற்கு வழங்க முடியும்'' என்று சொன்னார்.
எனவே, முதலில் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்வது; இந்தி யாவில் இரண்டு சிந்தனை மரபுகள் இருக்கின்றன. ஒன்று, சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரியப் பண்பாடு, இன் னொன்று; தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளை அடிப்படை யாகக் கொண்டு இருக்கின்ற திரா விடப் பண்பாடு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
திறந்த மனதோடு
இந்த சமஸ்கிருத மொழி இந்தோ_அய்ரோப்பா குடும்பங்களின் தலையாய மொழிகளில் ஒரு மொழியாக இருக்கின்றது. அதேபோல தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகள் திராவிடக் குடும்பத்தின் அட்டவணையில் இருக்கின்ற மொழிகள் ஆகும். இரண்டுக்கும் சிறப்புகள் இல்லை என்று நான் சொல்லவில்லை. இரண்டிற்குமே இருக்கின்றது.
ஆனால், எதிலே குறை பாடும் இருக்கின்றது என் பதை அருள்கூர்ந்து திறந்த மனதோடு எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
சமஸ்கிருத மொழி, அது ஒரு செவ்வியல் மொழி, ஆனால் அந்த மொழிக்கு என்ன ஆதாரம்? வேதநூல் இருக்கிறது. ஆகமம் இருக்கின்றது. பகவத் கீதை இருக்கின்றது. புராணங்கள், மகாபாரதம், இராமா யணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன வயது? எவ்வளவு தாராளமயமான மனப்பான்மையுடன் கணக்கிட்டு சொன்னால் கூட 2500 ஆண்டுகளுக்கு மேல் சொல்ல முடியவில்லை. நான் அல்ல, வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், தமிழுக்கு வாருங்கள்_- திராவிடத்திற்கு வாருங்கள். 4500 ஆண்டு களுக்கு முன்னால் வரலாறு இருக்கின்றது.
முதற் தமிழ்ச்சங்கம்! அதனை அன்றைக்கு அமைத்த மன்னன் காய்சின வழுதி. 450 புலவர்கள் கொண்டது முதற்சங்கம். அதிலே முதுநாரை, முதுகுறுகு எனும் இரு நூற்கள் தவிர எல்லாம் கடலில் போய் விட்டன. வெள்ளத்தில் போய்விட்டது! இது வரலாறு! இன்றைக்கும் கல் வெட்டில் இருக்கின்றது. நான் ஏதோ இதனை தேவபாஷை என்றோ அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலோ பேசவில்லை.
நம்பிக்கை அடிப்படையில் பேசுவது அழகல்ல!
ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் நம்பிக்கை அடிப்படையில் பேசுவது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழகல்ல. மாண்புமிகு உறுப்பினர் நண்பர் சத்யபால்சிங் கூட- _ ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, மெத்தப் படித்தவர். இங்கே பேசினார் சமஸ்கிருதம் தெய்வ பாஷை என்று. நம்பிக்கை என்பது வேறு. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் சிறு வயதில் படிக்கின்றபோது, என்னுடைய தாய் தந்தை யர், வீட்டில் சிவன் படத்தை மாட்டி இருந்தார்கள். சிவன் தலையில் நிலா இருந்தது. நான் அதை அப்போது நம்பினேன் சிவனின் தலையில்தான் நிலா இருந்தது என்று. அது பகுத்தறிவு அல்ல, நம்பிக்கை! ஆனால், 1969 ஆம் ஆண்டு, ஆர்ம்ஸ்ட்ராங் தன்னு டைய இடது காலை எடுத்து நிலவில் வைத்தார் என்று சொன்னதற்குப் பிறகு, என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை .
எனவே, அறிவியல் என்று வருகின்றபோது, நம் பிக்கை நகர்ந்து வழிவிட்டால்தான் அது ஆரோக் கியமான மனிதப் பண்பு. இல்லாவிட்டால் அது மனிதப் பண்பு அல்ல என்பதை இந்த அவையில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
4500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தமிழ் மொழி!
எனவே, சமஸ்கிருதத்திற்கு என்று 'நம்பிக்கை நூல்கள்' இருக்கின்றன. தமிழ்மொழிக்கு என்று பார்த்தால் 4500 ஆண்டுகளுக்கு முன்னால் முதற் சங்கம், மூவாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன் னால் இரண்டாம் சங்கம், அதனை அமைத்தவர் வெண்டேர் செழியன் என்ற அரசர். அப்போதுதான் தொல்காப்பியம், இசை நுணுக்கம் ஆகிய நூல்கள் கிடைத்தன. (குறுக்கீடுகள்). அதற்குப் பிறகு ஒன்று, இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்கணக்கு நூல் கள் வந்தன, இன்னும் பெருமையோடு சொல்கிறேன். நம்முடைய மாண்புமிகு பிரதமர், வெளிநாட்டிற்குப் போய்ச் சொல்கிறார்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்" _ என்று. பிரதமர் சொல்கிற, அந்த வாக்கியம் எதில் இருக்கின்றது என்றால் முதலாம் நூற் றாண்டில் வந்த இந்த எட்டுத் தொகையில் வருகின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
நான் இன்னொன்றை விளக்கமாக வேறுபாட்டைச் சொல்கிறேன். சமஸ்கிருதம் முதன்மை என்று சொல் கிறீர்கள். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் _ அதாவது நான்கு வர்ணங்களையும் நானே படைத் தேன் என்று _- இது சமஸ்கிருதம். ஆனால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - என்று சொல்வது எங்களுடைய திருக்குறள்.
ஸ்திரீ ஜென்மா, பாவ கர்மா; பெண்ணாக பிறப் பது பாவம்! _ என்று சொல்வது சமஸ்கிருதம். பெண் ணிற் பெருந்தக்க யாவுள _- என்று சொல்வது திருக் குறள். (குறுக்கீடுகள்).
இந்திய சிந்தனை மரபு என்பது சமஸ்கிருதத்திற்கு மட்டும் சொந்தமா?
இந்த அடிப்படையில் நான் வருகிறேன். இந்தச் சட்டத்தின் நோக்கம் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால்...... இந்திய சிந்தனை மரபு, ஏதோ சமஸ் கிருதத்திற்கு மட்டும் தான் சொந்தம். முழு சொந்தம் என்று மறைமுகமாக ஒரு ரகசிய கள்ளத்தனத்தை மசோதாவில் நீங்கள் கொண்டு வருவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால், இந்தச் சட்டத்தின் 5ஆ-வது பிரிவு என்ன சொல்கின்றது என்றால், சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்பப் போகின்றோம் என்று இதில் நீங்கள் சொல்கிறீர்கள்.
எனக்கு விந்தையாக இருக்கின்றது. ஒரு மொழி யைக் காப்பாற்றுங்கள். தவறில்லை. இந்த சமஸ்கிருதம் அழிவினுடைய விளம்பிலே நின்றுகொண்டிருக்கிறது.
1961இல் சென்செக்ஸ் கணக்கெடுத்த போது சமஸ்கிகிருதம் பேசுபவர்கள் மொத்தம் 2165 பேர். இப்போது 20,000.... (குறுக்கீடு) பிரிவு 5-இன்படி இந்தச் சட்டத்தின் நோக்கம் சமஸ்கிருதத்தின் மூலமாக அறிவியலைப் பரப்ப வேண்டும், மானுட அறிவியலைப் பெருக்க வேண்டும், சமூக அறிவியலைப் பெருக்க வேண்டும், ஒழுக்கத்தைப் பெருக்க வேண்டும் என் றெல்லாம் இந்த மசோதா வில் சொல்கின்றீர்கள்.
ஆனால், நான் கேட்கிறேன். இந்த சமஸ்கிருத மொழி உள்ளபடியே தேவ பாஷையாக இருக்கு மானால், இந்த மொழி இந்தியாவுக்கு சொந்தமாக இருக்கு மானால், அருமை நண்பர் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.
சமஸ்கிருதத்தை எங்களால் ஏற்க முடியாது!
பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு ஒரு இஸ்லாமியத் தோழர், சமஸ்கிருதத்தில் முழுமை பெற்று, தேர்ச்சி பெற்ற பிறகு, பேராசிரியராக வந்த பிறகு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து மறுத்தீர்களே, அதற்கு என்ன காரணம்? அப்படி என்றால், நீங்கள் சமஸ்கிரு தம் என்பது இந்து மதத்திற்கு சொந்தம் என்கிறீர்கள், அப்படிச் சொல்வதாக இருந்தால் இந்த மொழியை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நான் திட்டவட்டமாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாம் இப்போது எங்கே நின்று கொண்டு இருக்கி றோம் என்றால், இந்த மொழி இறந்து விட்டதா? இருக்கிறதா' என்று மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டு இருக்கிறது.
ஷெல்டன் பல்லாக், ஜான் ஸ்நெல்லிங் என்ற இரண்டு மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சமஸ் கிருதம் ஒரு இறந்து விட்ட மொழி, மறைந்துபோன மொழி என்று சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர் கென்னர், சமஸ்கிருதம் அழிந்து போகவில்லை ; அருகி வருகின்றது என்று சொல்கிறார்.
நிதி ஒதுக்குவதில் முரண்பாடு ஏன்?
நான் உண்மையிலேயே, மனம் திறந்து சொல் கிறேன், ஒரு அழிந்து கொண்டு இருக்கின்ற மொழிக்கு உதவிட வேண்டும்- தண்ணீர் ஊற்ற வேண்டும் என்கிற நியாயமான எண்ணம் உங்களுக்கு இருக்கு மேயானால் அதில் எனக்கு உடன்பாடுதான். ஆனால், நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின் றீர்கள், 150 கோடி ரூபாய் 2017--2018- இல் சமஸ் கிருதத்திற்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால், தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் என்று எல்லா வற்றுக்கும் சேர்த்து வெறும் 12 கோடி ரூபாய் ஒதுக்கி இருக் கிறீர்கள்.
தெரிந்தே தவறு செய்கிறது அரசு!
2014இல் 70 ஆயிரம் மாணவர்களை நீங்கள் திட்டமிட்டு தனியாக வேண்டுமென்றே சமஸ்கிருதம் படிக்க வைத்து இருக்கிறீர்கள். 41 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. 6 மொழிப் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. அந்த 6 மொழிப் பல்கலைக் கழகங்களில் மூன்று சமஸ்கிருதம், ஒன்று ஆங்கிலம், ஒன்று இந்தி, ஒன்று உருது இருக் கின்றது. ஒன்றுகூட தமிழுக்கு இல்லை . பிற செம் மொழிகளுக்கும் இல்லை.
இந்த அரசு தெரிந்தே ஒரு தவறு செய்கிறது. பிரதமர் உள்பட நான் குற்றம் சாட்டுகிறேன். பிரதமர் பேசுகிற போது என்ன சொல்கிறார்? மரபியல் அறிவியல், உடல் மாற்று அறுவை சிகிச்சை, காஸ்மெடிக் சர்ஜரி இவையெல்லாம் வேத காலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்; சமஸ்கிருதத்தில் இருப்பதாக சொல் கின்றனர். யார் நம்புவார்கள், 2500 ஆண்டுகளுக்கு முன்னால்?
இந்திய அறிவியல் மாநாடு அரசு செலவில் நடக்கின்றது. அதிலே கட்டுரை வாசிக்கப்படுகின்றது. அதில் வேத காலத்தில் விமானங்கள் இருந்தது என்று கூறி சமஸ்கிருதத்தை துணைக்கு அழைக்கின்றீர்கள். இப்படிப்பட்ட மூடத்தனமான கருத்துக்களை தயவு செய்து நிறுத்துங்கள். தமிழ் உள்ளிட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் முக்கியத்துவம் தாருங்கள்.
இவ்வாறு  தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா பேசினார்.

- விடுதலை நாளேடு,14.12.19

வெள்ளி, 13 டிசம்பர், 2019

அமித் ஷாவின் பொய்கள்

FROM FACE BOOK

Vijayasankar Ramachandran (Frontline)

*அமித் ஷாவின் பொய்கள்*

குடியுரிமைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து உரையாற்றிய அமித் ஷா அதற்கான நியாயமாக முன் வைத்த புள்ளி விவரங்கள் இவைதான்:

ஆகஸ்டு 15, 1947இல் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்களின் மக்கள் தொகை 23%. 2011இல் அது 3.7% ஆகக் குறைந்தது. அதே நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானில் (1971இல் வங்க தேசமானது) 22% ஆக இருந்த முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை, 2011இல் 3.7% ஆகக் குறைந்து விட்டது.

இந்த இரண்டு நாடுகளிலும் முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கை 20 சதவீதப் புள்ளிகள் குறைந்து விட்டது.

இதையேதான் வலது சாரி ‘சிந்தனையாளர்களும் (?) தொலைக் காட்சி விவாதங்களில் முன் வைக்கின்றனர்.

இது உண்மையா?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் 1951இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒன்று பட்ட பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை 14.20% தான். மேற்கு பாகிஸ்தானில் அது 3..4% ஆகவும், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) 23.20% ஆகவும் இருந்தது.

1961இல் நடந்த கணக்கெடுப்பின் படி மேற்கு பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கை 2.83%.

1971 போருக்குப் பின் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்க தேசமானது. அந்த நேரத்தில் பாகிஸ்தானில் அவர்களின் எண்ணிக்கை 3.25%.

1991இல் நடந்த கணக்கெடுப்பில் இது 3.70% என்று சிறிது உயர்ந்தது.

இதே காலகட்டத்தில், வங்க தேசத்தில் முஸ்லிம் அல்லாதோரின் மக்கள் தொகை 9.60% ஆகக் குறைந்திருந்தாலும் பிஜேபி கூறும் 3.7% அல்ல.

இதில் பிஜேபி திட்டமிட்டு உருவாக்கும் குழப்பம் என்ன?

ஒன்று பட்ட பாகிஸ்தானில் 1951இல் இருந்த முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கையான 23%ஐ, பிரிவினைக்குப் பின் இன்று பாகிஸ்தானில் மட்டும் இருக்கும் அவர்களின் எண்ணிக்கையான 3.7% உடன் ஒப்பிட்டுத்தான் அந்தக் குழப்பத்தைச் செய்திருக்கிறது.

பொருளாதாரப் புள்ளி விவரத்தில் செய்யும் பித்தலாட்டத்தைப் போலவே இன்று பிரிவினை அரசியலிலும் செய்கிறது அந்தக் கட்சி.

(ஆதாரம்: இந்தியா டுடே)

G.Karunanidhy

வியாழன், 12 டிசம்பர், 2019

தலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை!

பன்மதங்கள், பல மொழிகள், பல (கலாச்சாரங்கள்) பண்பாடுகள் கொண்ட இந்தியாவில், ஒரே மதம் - ஹிந்து மதம், ஒரே மொழி - பார்ப்பன சமஸ்கிருதம், ஹிந்தி, ஒரே பண்பாடு  - ஆரிய வேத மத சமஸ்கிருதப் பண்பாடு என்று திணிக்கும் 'ஹிந்துத்துவா' கொள்கையை, (தனது நீண்ட கால கனவுத் திட்டங்களை) மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு,  இன்று அதற்குக் கிடைத்துள்ள மிருக பல பெரும்பான்மை மூலம், நாடாளுமன்றத்தில் 35 நாட்களில் 32 மசோதாக்கள் நிறைவேற்றம் என்பது போன்று நாளும் திணித்து வருவது கண்டு ஜனநாயக உலகம் திகைத்துப் போய் உள்ளது!

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்நாடு தந்தை பெரியார் மண்ணாகவும், 100 ஆண்டு பாரம்பரியம் மிக்க சமுக நீதிக் கட்சிகளின், சுயமரியாதை திராவிடப் பண்பாடு என்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதும், "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற ‘மனிதத்தை’ நிலை நிறுத்திடும் பண்பாட்டுத் தளமாகவும் சமத்துவமும் சுயமரியாதையும் என்றும் பூத்துக் குலுங்கி, காய்த்துக் கனிந்துள்ள பண்பட்ட மக்கள் உள்ள நிலமாகவும் விளங்குவதால், வடக்கின் வாடைக் காற்றை, தமிழ்நாடு தடுத்து நிறுத்தியது.

அதற்கு ஒரே காரணம் பெரியார் என்னும் மாபெரும் கொள்கை - லட்சியம் மாபெரும் தடுப்பு மருந்தேயாகும்.

இதை இன எதிரிகள் புரிந்து கொண்டதால்தான் முதலில் மூலாதாரமான பெரியார் என்னும் தத்துவத்தின் பெரிய பிம்பத்தையே உடைத்துச் சுக்கல் நூறாக்கலாம் என்று நினைத்து, முயற்சித்தனர். தோற்று வருகின்றனர். அது காற்றை விதைத்து, புயலை அறுவடை செய்த கதை ஆயிற்று.

தமிழ்நாட்டு இளைஞர்கள், வாலிபர்கள், மகளிர், முதியோர் மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ளவர்கள், விவரம் தெரிந்தவர்கள், விடியல் என்பது 'பெரியார்' என்னும் தத்துவத்தால்தான் - அந்த மருத்துவரால்தான் இந்தப் புற்றுநோயை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்திட முடியும் என்று கண்டறிகின்றனர்!

இன உணர்வு, மொழி உணர்வு, உரிமைகள், சமுகநீதி - இடஒதுக்கீடு போன்றவை அறிவு பூர்வ உரிமைப் போராட்டத் தளங்கள். அவைகளில் திராவிட உணர்வினை அகற்றிவிட முடியாது என்று கண்டறிந்தே ஆர்.எஸ்.எஸ். ஆரிய வேத மத கலாச்சார விற்பனையாளர்கள் தங்களுக்குள்ள பண வசதி, அதிகார பலம், ஊடக பலம், எளிதில் விலை போகும் விபீடணத் திருக்கூட்டம் இவைகளைப் பயன்படுத்தி விலைக்கு வாங்கி, உணர்ச்சிக்குத் தீனி போடும், கடவுள், மத உணர்வு, திரு விழாக்கள் - இவற்றின் மூலம் பக்தி போதைப் பொருள்களைத் தந்து மயக்கி வீழ்த்திடத் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

உண்மை கலப்பற்ற பொய் மூட்டைகளை, அவதூறுகளைப் பரப்ப ஒரு தனிப்படையே பணியாற்றுகிறது!

எதிர்த்து அழிக்கப்பட முடியாத தத்துவங்களை, எதிரிகளை, அணைத்து அழித்து விடுதல் மூலம் செய்ய முனைந்துள்ளனர். இது புத்தர் காலத்திலிருந்தே ஆரியத்தால் தொடங்கப்பட்டு, கையாளப்பட்டு வரும் - வியூகம் "Appreciate, Accept, Annihilate", என்று மூன்று வஞ்சக முறைகள்.

“முதலில் பாராட்டு, அடுத்து அதை ஏற்றுக் கொள்வது போல் ஊடுருவல், கடைசியில் அணைத்து அழித்து விடுதல் என்று முப்பெரும் முறைகளைக் கையாளுவார்கள்.  ஆரிய சனாதன வேத  மதமான - பேதத்தின் பேருருவான - ஹிந்து ஆரிய மதத்தின் பிறவி எதிரியான  புரட்சியாளர் அம்பேத்கருக்கு விழா எடுப்பது, போற்றிப் புகழ்வது, அணைத்துச் செயல்படுவதும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. வேடப்போக்காகும்.

அதுபோலவே தனது வாழ்வின் இறுதியில் மனம் மாறி, மதச் சார்பின்மை, சமுக நீதிக்குக் குரல் கொடுத்த காந்தியாருக்கு, 150ஆம் ஆண்டு கொண்டாடி அவரையும் அணைத்துக் கொண்டும் தமது வரலாற்றினை மாற்றி புது முகமூடி அணிகிறார்கள்.

தந்தை பெரியாரிடம்தான் நெருங்க முடியவில்லை. மலைகளில் எரிமலையிடம் எப்படி ஆரியம் நெருங்கும்?புதுப்புது உத்திகள், இராமாயண கால கற்பனையான மாரீச மான்களை "அனுப்பவும்" ஆயத்தமாகி வருகின்றனர்.

“திராவிடம் தமிழுக்கு எதிரி, திராவிடம் பேசுவோர் தமிழர் விரோதி என்று ஆரியமே 'சடகோபம்' சாத்தி, சிலரைக் கிளப்பி விட்டுள்ளனர். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பாகுமா? அழியாத சமத்துவம், சுயமரியாதை என்பதுதான் திராவிடம் - மீள் வரலாற்றை அது மட்டும் தான் தர முடியும் - ஆரியத்தை  வீரியத்துடன் வீழ்த்துவது பெரியார்தான் - என்பது புரியாததனால் சில அப்பாவிகள் பெரியார் ஊட்டிய தமிழ்த் தேசிய உணர்வை திசைத் திருப்பி, எதிரிகளை நண்பர்களாகவும், நண்பர்களை எதிரிகளாகவும் எண்ணி ஏமாறும் பரிதாப நிலை இருக்கிறது. அதுதான் மிகப் பெரும் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் அரண் என்கிற ஆய்வாளர் எழுதிய "ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்"  என்னும் ஒரு சிறு நூலில் இது வெகு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

இதோ அப்பகுதி:

"ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாசிச அமைப்பு, தமிழ்நாட்டில் மிகத் தந்திரமாகக் காலூன்றி வருகிறது. கபடி, சிலம்பாட்டம், சல்லிக்கட்டு போன்ற தமிழர் வீர விளையாட்டுகளை வைதிக இந்து மரபுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. திருவள்ளுவர், வள்ளலார், அம்பேத்கர் போன்ற ஆளுமைகளை இந்து வட்டத்துக்குள் அடைப்பது, ஆர்.எ.ஸ்.எஸ். அமைப்பின் பல கூட்டங்களில் வேட்டி கட்டுதல் போன்ற தமிழரின் தனித்த பண்பாட்டை தன்வயப்படுத்தும் முயற்சியைத் தீவிரமாகச் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய - வேத-சமஸ்கிருதப் பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள் வாங்கிக் கொண்டது. தமிழ்த்தேசியத்தின் அடையாளமாகச் சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தை பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். அவரின் ஆரிய எதிர்ப்பைத் தவிர்த்து விட்டு, தமிழ்த்தேசிய கூறுகளைக் கட்டமைக்க முயற்சித்தால் இந்துத்துவ சக்தியால் எளிமையாக அறுவடை செய்யப்படுவோம். இதைத் தெளிவாக உணர்ந்த இந்துத்துவ சக்திகள் பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகத் திரிக்கும் வேலையை 2013ஆம் ஆண்டில் இருந்து மிகத்தீவிரமாகச் செய்து வருகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய அரசியலை ஆராய முடியாது. இந்திய துணைக்கண்டத்தில் ஆரியர் அல்லாத ஒரு நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தேசிய இன மக்களின் மீது வீசப்படும் இந்துத்துவ திரிசூலத்தை பெரியாரின் கைத்தடி இல்லாமல் ஒருபோதும் எதிர் கொள்ளமுடியாது."

இந்த எச்சரிக்கை காலத்தின் தேவை; ஏமாந்தால் இனம், மொழி, பண்பாடு நாகரிகம், சமத்துவம் எல்லாம் அழியும். இளைஞர்களே! புரிந்து, தவறான பாதையில் செல்வதை விடுத்து, ஈரோட்டுப் பாதையில் உறுதியாக நில்லுங்கள்! வெல்லுங்கள்!

கி. வீரமணி

                ஆசிரியர்

- உண்மை இதழ் 16- 31. 8 .19