திங்கள், 28 ஆகஸ்ட், 2023

கழு...க்குத் தெரியுமா கற்பூர வாசனை? - கவிஞர் கலி. பூங்குன்றன்

 

 23

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான "தகைசால் தமிழர்" விருது தமிழ்நாடு அரசால் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அளிக்கப்பட இருக்கிறது என்ற செய்தி ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும், அதன் அரசியல் வடிவமான பிஜேபிக்கும் அடிவயிற்றில் ரணத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை "அப்பழுக்கற்ற அரசியல் பிதாமகன் நல்லகண்ணுவை   அவமானப்படுத்துகின்றனர்" என்று சிண்டு முடியும் வேலையையும் அந்த கூட்டத்திற்கு உரித்தான முறையில் உளறிக் கொட்டியிருக்கிறார். 

வேறு எந்தச் செய்தி ஏடும் வெளியிடாத இச்செய்தியை ஆர்.எஸ்.எஸ்.இன் ஊது குழல்களான 'தினமல'ரும், 'ஏசியாநெட் தமிழ்' என்ற இணைய தளமும் மட்டுமே வெளியிட் டுள்ளன. தகுதி வாய்ந்த தலைவர்கள்பற்றிய அவதூறை வெளியிட வேண்டாம் என பிற ஊடகங்கள் புறக்கணித்து விட்டனவா என்று தெரியவில்லை.

இதில் ஏன் மூத்த பொதுவுடைமைவாதி சங்கரய்யா அவர்களின் பெயரை விட்டு விட்டார். என்பது அண்ணாமலைக்கே வெளிச்சம். அய்யா நல்லகண்ணுவும் சரி,   சங்கரய்யாவும் சரி,  அண்ணாமலையின் பிதற்றலைக் கண்டு நகைத்திருப்பார்கள். இந்த பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.-களுக்கு சூடு கொடுக்கக்கூடிய முற்போக்கு சக்தி வாய்ந்த போர்வாள்கள் அவர்கள். அந்த வரிசையில் திராவிடர் கழகத் தலைவருக்கு   "தகைசால் தமிழர்" விருது கொடுத்திருப்பது கண்டு உலகம் முழுவதும் உள்ள முற்போக்குச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளர்களும், அறிவியல்வாதிகளும், பிற்போக்குச் சக்திகளை வீழ்த்த வேண்டும் என்று கருதுகின்ற நல்லெண் ணம் கொண்டவர்களும்  மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். வாழ்த்துகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து எல்லாம் தோழர்கள் வாகனங்கள் மூலமாக பெரியார் திடலுக்கு வருகை தந்து ஆசிரியர் அவர்களுக்குச் சால்வை  போர்த்தியும், சந்தாக்கள் அளித்தும் தங்களின் அளவற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 

யாருக்கு விருது அளிப்பது என்பதற்கு தமிழ்நாடு அரசு அதற்கென்று உள்ள ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின்படி இந்த விருது வழங்கப்படுகிறது. 

யாருக்கு விருது அளிக்கப்பட வேண்டும் என்பதை அண்ணாமலையைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டுமோ? அண்ணா மலையைக் கத்துக்குட்டி என்றும், அரைவேக்காடு என்றும், அக்கப்போர் பேர்வழி என்றும், அரசியல்வாதிகள் அவ்வப்பொழுது அடை யாளம் காட்டியும், கன்னத்தில் அறைவது போல சூடு போட்டும் விமர்சனம் செய்ததற்குப் பின்னா லும்கூட அவருக்கு நல்ல புத்தி வந்ததாகத் தெரியவில்லை. 

திராவிடர் கழகத் தலைவர் யார் என்பது பற்றி இவருக்கு என்ன தெரியும்? ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த ஆசாமியாக அல்லவா இவர் இருக்கிறார். பத்து வயதில் மேடை ஏறி முழங்கி மக்களைக் கவர்ந்த மாணவர் ஆசிரியர் வீரமணி.  அவர் கடலூரில் 1944ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் தந்தை பெரியார் முன்னிலையிலும், அறிஞர் அண்ணா முன்னிலையிலும் அந்த 11 வயதுச் சிறுவன் ஆற்றிய உரையின் வீச்சைக் கண்டு அய்யாவும், அண்ணாவும் ஆச்சரியப்பட்டனர். அறிஞர் அண்ணா அவர்கள் மனம் திறந்து பாராட்டினார்.

"இப்பொழுது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இருந்தால் இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கி இருப்பார்கள். இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல - பெரியாரின் பகுத்தறிவுப் பால்" என்று அறிஞர் அண்ணா அவர்களால் 11 வயதில் அடையாளம் காட்டப்பட்டவர்தான் இன்று 90 ஆம் வயது காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆவார்.

 90 வயதில் 80 ஆண்டுகாலப் பொது  தொண்டு என்ற விகிதாச்சாரம் இந்தத் தலை வருக்கல்லாமல் வேறு யாருக்கும் உண்டோ! இந்த வயதிலும் மாதத்திற்கு 20 நாள் சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்கும் தலைவர் வேறு எவரேனும் உண்டோ! என்ற கேள்வி நியாயமானதல்லவா? பள்ளி மாணவனாக இருந்த பொழுது கோடை விடுமுறை நாள்களில் தந்தை பெரியாரால் ஈரோட்டில் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கு கொண்டு பிரச்சாரத்திற்குக் கிளம்பியவர் பள்ளிப் படிப்பிலும் சூரராகத் திகழ்ந்தவர்.

மாணவர் பருவத்திலேயே 'முழக்க'மிடும், 'புதுமை' ஏடுகளை நடத்தியவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் கல்வித் திறனில் ஒளி வீசியவர். எம்.ஏ. தேர்வில் முதல் மாணவராக வெற்றிக் கொடி நாட்டியவர். தங்கமெடல் வாங்கியவர். ஹானர்ஸ் படிப்பில் மூன்று மெடல்களை தட்டிப் பறித்தவர். இந்த மூன்றில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயில் பெயரில் அளிக்கப்படும் பரிசையும் வென்றவர் என்ற வரலாறு எல்லாம் இந்த கற்றுக் குட்டிகளுக்குத் தெரியுமா?

1956 ஆகஸ்ட் முதல் தேதி தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட ராமர் பட எரிப்புப் போராட் டத்தில் ஈடுபட்டு முதன் முதலாக கைது செய்யப் பட்டவர். இதுவரை 56 முறை கைதானவர் - சிறை சென்றவர். மிசா கைதியாக  358 நாட்கள்.

 தந்தை பெரியாரின் புரட்சிக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி புத்துணர்ச்சியை ஏற்படுத்திய காரணத்தினால் இன எதிரிகளின் தூண்டுதலாலும், விபீஷணர்களாலும் உயிருக் குக் குறி வைக்கப்பட்டவர். மம்சாபுரம், வட சென்னை, ராயபுரம், புதுவண்ணை, சேலம் தம்மம்பட்டி, விருத்தாசலம், திருச்சி, திருப்பூர் போன்ற இடங்களில் தாக்குதலுக்கு ஆளானவர். 

அவருக்குப் பெண் பார்த்து, திருமண ஏற்பாட்டையும் தானே முன் நின்று திருமணத்தை நடத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் கையெழுத்திட்ட அழைப்பு! அப்பொழுது தந்தை பெரியார்  -   'இயக்க நலன் கருதியே இந்த ஏற்பாடு' என்று சொல்லவில்லையா?

 1960ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தந்தை பெரியாரால் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டவர். அதேபோல 1962இல் விடுதலை ஆசிரியராகவும் தந்தை பெரியாரால் திராவிடர் கழகத்தின் அமர்த்தப்பட்டவர். 10.8.1962 அன்று 'விடுதலை'யில் தந்தை பெரியார் எழுதுகிறார், "எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோன்று மற்றொருவர் வந்தார் - வருகிறார் - வரக்கூடும் என்ற உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்க படி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே  -அவரை நம் இயக்கத் தலைமை பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக  ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்" என்று தந்தை பெரியார் சொன்னார் - என்றால் இதைவிட பெரிய விலை மதிக்க முடியாத விருது வேறு ஒன்று இருக்க முடியுமா?

24
தகைசால் தமிழர் விருது:
உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் துரைசாமி ராஜூ வாழ்த்து

இல்லை, பெரியாரிடம் இந்த விருதைப் பெற்றவர்கள், இவரைத் தவிர வேறு எவரேனும் உண்டா? 'விடுதலை' ஆசிரியராக அறிவித்த தோடு மட்டுமல்லாமல், அந்த 'விடுதலை' ஆசிரியருக்குரிய நாற்காலியில் இரண்டு தோள்களையும் பற்றி தந்தை பெரியார் அவரை அமர வைத்தார்  என்றால் அடடே இந்த வானளாவிய புகழும், மதிப்பீடும் வேறு எவருக்குத் தான் கிடைக்க முடியும்!

தந்தை பெரியார் மறைவிற்குப் பின்பு அன்னை மணியம்மையார் நான்கு ஆண்டு களுக்கு மேல் தலைமைப் பொறுப்பேற்று இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் மறைவிற்குப் பிறகு தலைமையேற்ற ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வைத்த நம்பிக்கையில் சிறு துரும்பு அளவில் கூட, பிறழாமல், எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல், தந்தை பெரியார் வகுத்துத் தந்த பாதையில் வீறு நடை போட்டு வெற்றிகளைக் குவித்து வருவதை யார் தான் மறுக்க முடியும்?

28

மேனாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே வாழ்த்து

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, இன்றைக்கு அது வெற்றி பெற்ற நிலையை அடைவதற்கு உந்து சக்தியாக, ஓயா உழைப் பாளியாக  - போராட்ட தளகர்த்தராக இருந்தவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் அல்லவா! 

'திராவிட மாடல்' அரசின் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதனை நிறைவேற்றிக் கொடுக்கவில்லையா? சிந்திக்க வேண்டும்! 

தமிழன் கட்டிய கோயிலில் தமிழ் இல்லை, தமிழன் அர்ச்சகராக முடியாது  என்று இருந்த நிலைக்கு காரணம் என்ன? அண்ணாமலை உட்பட அனைவரும் சூத்திரர்கள் என்ற காரணத்தினால் தானே! சூத்திரன் என்றால் என்ன? வேசிமகன் என்று மனுதர்மம் சொல்லும் பொருள் என்பது அண்ணாமலைகளுக்குத் தெரியுமா?

அண்ணாமலை உட்பட தமிழர்களின் இழிவை ஒழித்ததில், சுயமரியாதையை காப்பாற்றியதில் தந்தை பெரியாருக்கும், அவர் வழிவந்த ஆசிரியர் வீரமணிக்கும், திராவிடர் கழகத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதை அண்ணாமலைகள் மறந்து விட வேண்டாம். இல்லை, இல்லை நாங்கள் சூத்திரர்களாகத்தான் இருப்போம் என்றுதான் அண்ணாமலை போன்ற பேர்வழிகள் கூறுவார்களோ?

25

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் உளறித் தொலைக்கட்டும். வீரமணிக்குத் 'தகைசால் தமிழர்' விருது அளிக்கலாமா என்பது போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கட்டும். மான முள்ள மக்கள், சுயமரியாதை உள்ள மக்கள், பகுத்தறிவு சிந்தனை உள்ள மக்கள் இதன் தன்மையைப் புரிந்து கொள்வார்கள்.

சமூகநீதிக் களத்திலும் திரா விடர் கழக தலைவர் நடத்திய போராட்டங்கள், பொறித்த வெற் றிகள் சாதாரணமானவை அல்ல. 

எம்.ஜி.ஆர். அவர்கள் முதல மைச்சராக இருந்த பொழுது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் இடஒதுக்கீடு கிடையாது என்ற சமூக அநீதி ஆணையைப் பிறப்பித்த போது, பொங்கி எழுந்தது யார்? அனைவரையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தியவர் யார்? அந்த ஆணையைக் கொளுத்தி அதன் சாம்பலை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியவர் யார்? 

அடுத்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் எம்ஜிஆரின் அண்ணா திமுக படு தோல்வி அடைந்தது. அதற்கான காரணம் என்ன என்பதை முதலமைச்சர் எம்ஜிஆர் ஒப்புக்கொண்டாரே! 

"அரசியல் சம்பந்தம் இல்லாத ஒரு இயக்கம், ஒரு தலைவர் என்னுடைய ஆட்சி சமூகநீதிக்கு எதிர்ப்பாக நடக்கக் கூடியது என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தது தான் என் தோல்விக்குக் காரணம்" என்று செய்தியாள ரிடம் சொல்லவில்லையா? அந்த இயக்கம் இது? அந்த தலைவர் யார்? என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா? 

தொடர்ந்து என்ன நடந்தது? வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டது மட்டு மல்லாமல்,  அதுவரை பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு 31 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 50% ஆக முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் உயர்த்தினார் என்றால், அதன் பின்னணியில் இருந்த  முக்கியக் காரணம் இன்றைக்குத் "தகை சால் தமிழர்" விருது பெறவுள்ள வீரமணியும் திராவிடர் கழகமும் அல்லவா? வருமான உச்ச வரம்பை ரத்து செய்ததோடு பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 50 சதவீதம் உயர்த்தப்பட்டது.

இன்றைக்கு இந்தியாவிலேயே 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சட்டப்படியாக நிமிர்ந்து நிற்பது தமிழ்நாட்டில் தானே! அய்ம்பது சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பொழுது அந்த 69 சதவீதத்திற்கு ஆபத்து வந்தது. அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிக் கொடுத்தவர் யார்? 

"இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி பிரிவின் படி மாநில அரசாங்கமே சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒன்ப தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் 

69 சதவீதத்திற்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது - சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடும்" என்ற கருத்தைச் சொன்னதோடு மட்டுமல்லாமல், அதற்கான மசோதாவை வடிவமைத்துக் கொடுத்தவரும் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தானே!

 அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதன்படி செயல்பட்டார் என்பது சமூகநீதி வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். 

அதேபோல இந்திய அரசில் அதன் துறை களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ, இடஒதுக்கீடு அறவே இல்லை என்ற கொடுமை இருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டம் 340 ஆம் பிரிவின்படி   10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அரசு ஒரு குழு அமைத்து, பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. அதன்படி முதல் குழு காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.  ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை. ஜனதா அரசாங்கம் வந்த பொழுது பிபி மண்டல் தலைமையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான நலக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகள் சுற்றி தகவல்களையும் தரவுகளையும் பெற்று பிற்படுத்தப்பட்டோருக்காக இட ஒதுக்கீடு அளிக்க பல்வேறு பரிந்துரைகளை ஒன்றிய அரசிடம் அளித்து 10 ஆண்டுகள் கடந்தும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

 அந்த நிலையில் இந்தியா முழுவதும் 42 மாநாடுகளையும், பதினாறு போராட்டங்களையும் நடத்திய இயக்கம் எது? அந்த இயக்கத்தின் தலைவர் யார்? இந்தியாவுக்கே தெரியும். இந்தியா முழுமையுமுள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களை எல்லாம் ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டக் களங்களில் நின்றவர் திராவிடர் கழகத் தலைவர் அல்லவா?

இந்தியாவில் வாராது வந்த மாமணியாம் பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு என்று அறிவித்தார் - இது சாதாரணமானதா  எண்ணிப் பார்க்க வேண்டும். 

அந்த அறிவிப்பின்போது தந்தை பெரியார், பாபா  சாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் கனவு நனவாயிற்று என்று பெருமிதமாக பிரகடனப்படுத்தியது உண்டே! சமூகநீதியில் வீரமணியின் பங்கு எத்தகையது என்பதை பிரதமர் வி.பி. சிங் மனதார பாராட்டியனாரா இல்லையா?

வி.பி. சிங் கூறுகிறார் கேளுங்கள்: 

"புரட்சி என்பதை வாளை தூக்கிக் கொண்டு மட்டும் சாதிக்க முடியாது. மக்கள் மனதில் எழுகிற மறுமலர்ச்சியை வைத்துத் தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்கள் எல்லாம் செய்கின்ற பணியை விட உயர்ந்த பணியை வீரமணியாகிய நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள். எனவே உங்களைப் பாராட்டுகிறேன். அரசியலில் எனது அருமைத் தோழர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களிடமிருந்து உணர்ச்சி பெறுகிறேன். அதே போல் சமுதாயப் பணியில் நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியை பெறுகிறேன்" என்று திருச்சியில் 28.12.1992 அன்று கூறினாரே!

அதுமட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்குத் தலைமை வகித்த பி.பி. மண்டல் அவர்களுக்கு சென்னை பெரியார் திடலில் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பில் பங்கேற்ற பி.பி. மண்டல் அவர்கள் என்ன கூறினார்.

"பிற்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான எனது பரிந்துரைகளை சட்டப்படியாக்கும் ஆற்றல் வீரமணிக்கே உண்டு. சமூகநீதிக்கான மக்கள் சக்தியை வீரமணி அவர்களே, நீங்கள் தான் உருவாக்க வேண்டும்"  என்று பேசவில்லையா? 

இன்றைக்கு அண்ணாமலை உள்பட  பிற்படுத்தப்பட்டோர் அய்பிஎஸ் ஆவதற்கு இந்த மண்டல் குழு பரிந்துரை சட்டமாக்கப்பட்டதன் விளைவு அல்லவா? அந்த நன்றி உணர்ச்சி கூட இல்லாமல், அதற்குக் காரணமாக  இருந்த தலைவருக்கு ஒரு விருது அளித்தால் - அதனை உளமார நன்றி உணர்ச்சியுடன் வரவேற்பதற்கு பதிலாக ஆற்றாமையை வெளிப்படுத்துவது அவருடைய அறியாமையா, நன்றி கெட்டத்தனமா அல்லது  என்பதை பொதுமக்கள் உணர்வார்கள். 

சமூகநீதியால் பலன் பெற்ற மக்கள், சமுதாயத்தில் பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்ட மக்கள், தந்தை பெரியாரின் தொண்டால், திராவிடர் கழகம் ஆற்றிய சீரிய பணியால், அதனைத் தந்தை பெரியாருக்குப் பிறகு தலைமை தாங்கி சீரும் சிறப்புடன் தீவிரமாக நடத்தி வரும் ஆசிரியர் கி.வீரமணி வெற்றிகளைக் குவிக்கும் காரணத்தினால் அவருக்கு பொதுமக்கள் பல்வேறு கால கட்டங்களில் பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். தஞ்சையில் எடைக்கு எடை தங்கம் வழங்கினார்கள். புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி வழங்கினார்கள்.

 ஆனால், இவற்றையெல்லாம் அவர் தம் வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. அறக்கட்டளைகளாக்கி 46 கல்வி அறப்பணி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். நாட்டு மக்களுக்குப் பயனுள்ள வகையில் தொண்டு அறமாக, செயல் பணியாக உருவாக்கினார் என்பதை அறிவு நாணயம் உள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள். 

இன்றைக்குத் தந்தை பெரியார் சிந்தனைகள் உலக அளவில் பரவிக் கொண்டிருக்கின்றன. பெரியார் பன்னாட்டு மய்யத்தை உருவாக்கித் தந்தை பெரியார் சிந்தனைகளை பரப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தவர் ஆசிரியர் வீரமணி. 

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற உறுப்பினர்கள் "தந்தை பெரியார் வாழ்க" என்று குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன என்பதை அறிவோடு அண்ணாமலைகள் சிந்திக்கட்டும்! 

மம்சாபுரத்தில் ஆசிரியர் வீரமணி தாக்கப்பட்ட பொழுது நாடாளுமன்றத்தில் ஜெயபால் சிங் காஷ்யப் என்ற உறுப்பினர்  ஆசிரியர் வீரமணி தாக்கப்பட்டது குறித்து பிரச்சினையை கிளப்பி "வீரமணி ஜிந்தாபாத்" என்று முழக்கமிடவில்லையா? 

இந்த விவரங்கள் எல்லாம் கத்துக்குட்டிகளுக்கு எங்கே தெரியப் போகிறது? ஆசிரியர் வீரமணி பற்றி எத்தனை டாக்டர் ஆய்வு பட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன என்ற இந்த உண்மைகளை அறியாமல் உளறலாமா?

29

"தகைசால் தமிழர்" விருது மட்டுமல்ல, இதுவரை உலக அளவில் அவர் பெற்ற பெற்ற விருதுகள் எத்தனை, எத்தனையோ!

கி. வீரமணி பெற்ற விருதுகளின் பட்டியல் நீளமானது.

•  1993ஆம் ஆண்டு நாகை பெண்கள் மாநாடு 'இனமானப் பேரொளி' என்ற பட்டத்தினை வழங்கியது.

•  1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழங்கிய. 'தந்தை பெரியார் சமூக நீதி விருது'.

•  2000ஆவது ஆண்டில் புதுடில்லி குளோபல் பொருளாதாரக் கவுன்சில் வழங்கிய, 'பாரத் ஜோதி' விருது.

• 2003ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் தமிழ்ச்சங்கம் வழங்கப்பட்ட ‘ஆக்ஸ்போர்டு தமிழ் விருது'.

•  2003ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம்.

•  2003ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் வழங்கிய, ‘பேரறிவாளர்' விருது.

•  2009ஆம் ஆண்டு மலேசிய திராவிடர் கழகம் வழங்கிய கருத்துக் கனல் விருது.

•  2009ஆம் ஆண்டு முரசொலி அறக்கட்டளை வழங்கிய, ‘கலைஞர் விருது'.

•  2010ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய, ‘பெரியார் ஒளி விருது'.

•  2010ஆம் ஆண்டு கோவை கே.ஜி. அறக்கட்டளை வழங்கிய, 'ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது'.

•  2011ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் பி.எஸ்.ஏ.சாமி அறக்கட்டளை வழங்கிய ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது'.

•  2012ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி வழங்கிய “வாழ்நாள் சாதனையாளர் விருது''. 

2019ஆம் ஆண்டு "அமெரிக்க மனித நேய சங்கம்" வழங்கிய "மனித நேய வாழ்நாள் சாதனையாளர்' விருது.

•  2019ஆம் ஆண்டு காஞ்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய, ‘தந்தை பெரியார் விருது'.

•  2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் இயங்கும் மகாராஷ்டிரா ஃபவுண்டேஷன் சார்பில் "நரேந்திர தபோல்கர் விருது".

•  2022ஆம் ஆண்டு உலக திராவிட மகளிர் மாநாட்டில் "பகுத்தறிவுப் போராளி" என்ற பட்டம்.

•  2022ஆம் ஆண்டு கனடா டொராண்டோவில் வழங்கப்பட்ட 'வாழ்நாள் சாதனையாளர் விருது'. 

2023ஆம் ஆண்டு காயிதே மில்லத் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்ட, ‘பொதுவாழ்வில் நேர்மைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.

இந்த வரிசையில் 25.06.2023 அன்று டெல்லியில் சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைப் போராட்டக் கல்வி தொடர்பான தொடர் பணிக்கான ’வாழ்நாள் சாதனையாளர்  விருது-2023’ தலைநகர் டில்லி பிரகதி திடலில் உள்ள ‘சி.ஜி. ஸ்மார்ட் ஹாபிடேட் பவுண்டேசன்’ அமைப்பு மற்றும் 'டி ஆர்க்  பில்டு அமைப்பு' வழங்கியது.

இவ்வளவு விருதுகளையும் பெற்ற ஒரு தலைவருக்கு தந்தை பெரியார் வழிவந்த 'திராவிட மாடல்' அரசு "தகைசால் தமிழர்" விருது அளித்துக் கவுரவித்து மகிழ்கிறது என்றால் உண்மையான தமிழர் இரத்தம் உள்ளவர்கள் உளந்திறந்து பாராட்ட முடியாவிட்டாலும், தங்களுடைய ஆற்றாமையை அறியாமையை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாமே! 

குறிப்பு:  இதனை அண்ணாமலையை பொருட்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையாகக் கருதாமல் இது தந்தை பெரியார்மீதும், திராவிட இயக்கத்தின் மீதும் சேற்றைவாரி இறைக்கும் அனைத்து விபீஷணர்களுக்கும் சேர்த்துதான்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

"துரோணாச்சாரி காலமல்ல இது ஏகலைவன் காலம்!"- முதல்வர் ஸ்டாலின்


WhatsApp%20Image%202023-08-26%20at%2015.13.08

இந்தியாவில் இரண்டுவகை குழந்தைகள் உள்ளனர்.

ஒரு வகை உயர்ஜாதி பணக்கார  வீட்டுக் குழந்தைகள்! அவர் களின் காலை உணவே நெய்யில் இனிப்புச்சுவைகலந்து செய்யப்பட்ட பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை கலவைகள், இக்குழந்தைகள் பெரு நகரங்களின் உயர் குடியிருப்புகளில்  உள்ளனர். 

அதே நேரத்தில் 100க்கு 50 குழந்தைகளில் பெரும்பாலோர்களின் பெற்றோர்கள் பெரும் சுமைகளுக்கு இடையே குழந்தைகளுக்கு உணவு கொடுத்து தாங்களும் உணவைத் தயார் செய்து வேலைக்குச் செல்வார்கள். 

இதர 100க்கு 46 குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. அவர்களுக்கு காலை ஆகாரம் என்பது தண்ணீரும் கடைகளில் கிடைக்கும் சிப்ஸும் பிஸ்கட்டும் தான். 

பெரும்பாலான தாய்மார்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் அதிகாலை வேலைக்குச் செல்லவேண்டிய நெருக்கடியில் குழந் தைகளுக்கு உணவு சமைத்துக் கொடுக்க நேரமின்மையால் பள்ளி செல்லும் பாதையில் உள்ள கடைகளில் கிடைக்கும் தின் பண்டங்களை வாங்கித்தந்து அதனை சாப்பிடச் சொல்லி சென்று விடுவார்கள். மதிய உணவு பள்ளிகளில் கிடைத்துவிடுகிறது. இரவு மட்டும் தான் வீட்டு உணவு; இதுதான் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும்!

தமிழ்நாட்டில் ஏராளமான ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று இன்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்த மதிய உணவுத் திட்டம் தற்போது புதிய உருவம் பெற்று காலை சிற்றுண்டி திட்டமாக விரிவடைந்துள்ளது.

இந்தியாவில் இந்த ஜாதியினர்தான் படிக்க வேண்டும், இந்த ஜாதியினர் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று மேலோங்கி இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை தகர்க்க உருவானது நீதிக்கட்சி - அன்று சென்னை மாகா ணத்தில்  உயர்ஜாதியினரின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியது.

கல்விக்கே ஜாதிய படிநிலைகளை தகர்த்து எறியும் சக்தி இருக்கிறது என்பதை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுவர்களுக்கு கல்வி வழங்க முடிவு செய்தது அன்றைய நீதிக்கட்சி அரசு. ஆனால், காலம் காலமாக இருந்த ஜாதி ஒடுக்குமுறைகளால் வறுமையில் வாடி கூலித்தொழில் செய்து வந்த மக்கள் தங்கள் பிள்ளைகளையும் வேலைக்கே அனுப்பி வந்தனர்.

முறையான உணவு கூட இல்லாத அவர்களின் வலியை உணர்ந்த நீதிக்கட்சியின் ஆட்சியாளர் சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவு திட்டத்தை தொடங்க முடிவு செய்தார். சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் கடந்த 1920ஆம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்தத் திட்டம் நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டது. இதற்கு கிடைத்த வெற்றியையடுத்து 4 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டது. ஒருவேளை உணவு கிடைத்த நிலையில் கஷ்டப்பட்ட குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்,   பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். இப்படி அந்த ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்தது.

இந்த உணவுத் திட்டத்தின் பலன்களை உணர்ந்த காமராஜர், தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.  இவ்வளவுக்கும் அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசு பொருளாதார உதவிக் கரம் நீட்டவில்லை. இந்த திட்டத்தால் மாநிலம் முழுவதும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கற்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு மேனாள் முதலமைச்சர் எம்ஜிஆர். திருச்சி பாப்பாக்குறிச்சியில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மதிய உணவு திட்டத்தை சத்துணவுத் திட்டமாக தரம் உயர்த்தினார். 

இந்தத் திட்டம் வெறும் .பசி தீர்க்கும் ஒன்றாக இருந்ததையும் குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படு வதையும், அதற்காக பெரும் நிதி ஒதுக்கப்படுவதையும்  கவனத்தில் கொண்டு  ஊட்டச்சத்துடன் ஏழை மாணவர்கள் இருக்க, இந்த சத்துணவு திட்டத்தில் முட்டைகளை வழங்க முடிவு செய்தார் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். 

1989இல் 2 வாரத்துக்கு ஒரு முட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்த அவர், 1998 ஆம் ஆண்டு வாரம் ஒரு முட்டை, 2006 ஆம் ஆண்டு வாரம் 2 முட்டை, 2007 ஆம் ஆண்டு வாரம் 3 முட்டை என அதிகரித்து 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வரும் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். முட்டை சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார்.

அவருக்குப் பின் வந்த ஜெயலலிதா. பள்ளி மாணவர்களுக்கு  கலவை சோறு திட்டத்தைக் கொண்டு வந்தார். இதனால் மாணவ மாணவிகள் தினசரி விதவிதமான கலவை கொண்ட உணவு வகைகளை  சாப்பிட்டனர். அதே போல் முட்டை உணவும் வெவ்வேறு வகையாக மாற்றம் செய்யப்பட்டது. 

அதன் பிறகு  தமிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டத்திற்கு இருண்ட காலம் வரத் துவங்கியது. உணவுத்திட்டத்தில் ஹிந்துத்துவ அமைப்புகளின் தலையீடு காரணமாக - ஏற்கெனவே வட இந்தியாவில் தோல்வி அடைந்த வருணாஸ்ரமத்தை தீவிரமாக ஆதரிக்கும் பிறரை கடைப்பிடிக்க வலியுறுத்தும் - இஸ்கான் அமைப்போடு சேர்ந்து  உணவுத் திட்டத்தை கொண்டு வர  முயற்சி செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் மதவாதத்திற்கும் இட மில்லை மதவாதத்தை உணவில் திணிக்கும் திட்டத்திற்கும் ஆதரவில்லை - இதனால் அது முழுமைபெறவில்லை. 

அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு  திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி  சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்தது, அதன் பிறகு மதிய உணவுத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது மட்டுமல்லாமல் புதிய வடிவம் எடுக்கத்துவங்கியது

2022 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளன்று காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்ட மன்றத்தில் வெளியிட்டபோதே இதற்கு வரவேற்பு அதிகரித்தது. தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு  இந்த காலை சிற்றுண்டித் திட்டம் பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் தான்  மதிய உணவு அமைப்பாளர்களை பணியமர்த்தியுள்ளது. 

இதன் பலன்  ஆற்றல் மிக்க கல்வி அறிவு மிக்க ஒரு பெரும் தலைமுறையை தமிழ்நாடு கொண்டிருக்கும். எதிர் காலத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களை அனைத்து துறையிலும் பின்னுக்குக்குத்தள்ளி தமிழ்நாட்டை  முன்னேற்றப்பாதையில் கொண்டுவர - கல்வி அறிவு வளம் கூடிய பெரும் இளைஞர் படைகள் தெற்கிலிருந்து புறப்படும். முக்கியமாக சுகாதாரம் தொடர்பான நிதி குறிப்பாக ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் தொகை வேறு நல்ல திட்டங் களுக்கு செல்லும் வகையில் ஆரோக்கியமான சமூகம் தெற்கில் உருவாகும்.

இதில் ஒரு விழுக்காடு முதலீடு செய்தால் பிற்காலத்தில் 9 விழுக்காடு பயன் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. 'ஏகலைவனுக்கு வில் கற்றுக் கொடுக்க மறுத்தார் துரோணாச்சாரி. ஆனாலும் தானாக முயன்று உழைத்து வில் வித்தை வீரன் ஆனான் ஏகலைவன். அதைக் கூடப் பொறுக்காமல் வர்ணாசிரமப் புத்தியோடு ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்டுப் பெற்றார். துரோணாச்சாரியார். அதனைத்தான் பொருத்தமான நேரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இது. துரோணாச்சாரி காலமல்ல - ஏகலைவன் காலம் என்றார். சமூகநீதித் திட்டம் என்றார். சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்று முதலமைச்சரை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பாராட்டியது தான் எத்தகைய தொலைநோக்கு!

புதன், 23 ஆகஸ்ட், 2023

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை




 "ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்! திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது"

சிறப்புகள் பெரியார் - அண்ணா - கலைஞர் - ஸ்டாலின்  உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்துக்கே! 

1

"ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்!" "திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது" - சிறப்புகள் பெரியாருக்கே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

காங்கிரசில் இருந்த காலம் முதலே கோயில் நுழைவு - ஜாதி பேதமற்று அனைவரும் கருவறைக்குச் சென்று  வழிபடும் உரிமை ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தும், போராடியும் வந்த தந்தை பெரியார் 1969ஆம் ஆண்டு   அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் உரிமைப் போராட்டத்திற்கு மூல வித்தாக கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை பெரியார் திடலுக்கே நேரில் வந்து சந்தித்து, "அந்த அறப்போராட்டத்தைத் தள்ளி வையுங்கள்; அதற்குள் அதற்கு வழிவகுக்கும் வகையில் தனிச் சட்டமே நிறைவேற்றித் தங்களது ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசே  நடைமுறைக்குக் கொண்டு வரும் - இது உறுதி" என்றார்!

2

அதன்படியே தனித்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள் - 1970இல்!

அதனை எதிர்த்து தமிழ்நாட்டுப் பார்ப்பன அர்ச்சகர்களும், சில மடாதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காமல், நேரே டில்லி உச்சநீதிமன்றத்தில் தனி வழக்குகளைத் தொடுத்தனர்.

திருவாளர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் பரிந்துரையை ஏற்று, அந்நாளைய பிரபல மூத்த வழக் குரைஞரான பல்கிவாலா அவர்களே வாதாடினார்.   கே.பராசரன் போன்ற பல மூத்த வழக்குரைஞர்களும் மனுதாரர்களுக்காக வாதாடினர்.

 ‘சேஷம்மாள் வழக்கு'

அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேக்கர், எம்.எச்.பெக் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விரிவாக விசாரித்தது! தீர்ப்பும் கூறியது. (ஜஸ்டீஸ் டி.ஜி. பாலேக்கர் - இவர் மராத்திய அர்ச்சகப் பார்ப்பனரின் மகன் என்பது ஒரு சுவையான தகவல்).

இந்த வழக்கை ‘சேஷம்மாள் வழக்கு' என்றே சுருக்கமாகச் சட்ட நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.

இவ்வழக்கினை கலைஞர் தலைமையிலான தமிழ் நாடு தி.மு.க. அரசு  சிறப்பாக, திறம்பட மூத்த அரசு வழக்குரைஞர்களை வைத்து நடத்தியது.

தீர்ப்பில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம் செல்லும் (செல்லாது என்றுதான் பார்ப்பனர்கள், அர்ச்சகர்கள் வாதாடினர்) என்றும், தமிழ்நாடு அரசின், பாரம்பரிய அர்ச்சகர் நியமன ஒழிப்புச் சட்டம் செல்லும் என்றும் கூறிவிட்டு, ஆனால் "அர்ச்சகர் ஆவதற்கு ஆகமங்களைப் படித்து தகுதி பெற்றவர் மட்டுமே அர்ச்சகராக நியமனம் பெற முடியும் - அரசமைப்புச் சட்ட 26ஆவது பிரிவின்படி 'மதவிஷயம்' அது" என அத்தீர்ப்பில் கூறினர். இதன்படி "தமிழ்நாடு அரசு விரும்பியபடி உடனடியாக  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகமத் தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும்" என்ற ஒரு நிபந்தனைத் தடுப்பை ஏற்படுத்தியது அத்தீர்ப்பு!

இதைத்தான் அன்று 'விடுதலை' தலையங்கத்தில் "ஆபரேசன் வெற்றி; நோயாளி செத்தார்" என்ற சொற்றொடர் மூலம் விளக்கினோம்.

மறுபடி ஆட்சிகள் மாறின, இந்தப் போராட்டம் பல ஆண்டுகள், பல களங்களைச் சந்தித்தது.

முற்றுப் புள்ளி

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின்படியான நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின்  தீர்ப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்தது. அதன் மீதான மேல் முறையீட்டினை இந்திய உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு - நேற்று (22.8.2023) தள்ளுபடி செய்ததின் மூலம் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் அரசால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் செல்லு படியாகும் என்பது இரண்டாவது முறையாகவும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு  உள்ளது.  


3

நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி...

அடக்கம் செய்யப்பட்டபோது தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தந்த துணிவுமிக்க கலைஞர் துயரத்துடன் கூறினார். "தந்தைக்கு அரசு மரியாதை கொடுத்தும், அவர் "நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி" - ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகும் ஜாதி ஒழிப்பு விருப்பத்தை நிறைவேற்றிட முடியவில்லையே" என்று குறிப்பிட்டார்!

மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் தலைமையில் ஓர் உயர் நிலைக்குழுவினை நியமித்து உரிய ஆகமப் பயிற்சிப் பள்ளியில் ஆகமக் கல்வியைக் கொடுத்து அர்ச்சகர் நியமனத்திற்கு வழி வகை செய்தார்.

அதை எதிர்த்தும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

205 பேர் தகுதி பெற்றனர்

1972 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பல வழிகளை கவனத்தில் கொண்டே 2006இல் கலைஞர்  தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற் றப்பட்ட  புதிய சட்டப்படி  தனித்தனியே வைணவக் கோயில், சிவன் கோயில்களுக்கு ஏற்ப  அர்ச்சகர் பயிற் சிக்கென  69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டு (அதில் சில பார்ப்பன மாணவர்களும் கூட உண்டு) 205 பேர் தகுதி பெற்றனர்!

ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் -  இரு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், வெங்கட ரமணா ஆகியோரும் -  16.12.2015 அன்று, சேஷம்மாள் வழக்கில் வந்த தீர்ப்புப்படி, "ஆகமத் தகுதியின்படி எந்த ஜாதியினரானாலும் அர்ச்சகராக நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு" என்று தீர்ப்புக் கூறிவிட்டு, இறுதிப் பாராவில், "தனிப்பட்ட முறையில் யாராவது பாதிக்கப்பட்டவர்களானால் அவர்கள் தனியே நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் தேடிடலாம்" என்றும் கூறி ஒரு "சிறு சந்து" விட்டிருந்த நிலையைப் போன்ற வரிகள் அத்தீர்ப்பில் காணப்பட்டன.

சரித்திர நாயகருக்கு மக்கள் தந்த பெருமை!

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு 2021 - ஆகஸ்ட் 14ஆம் தேதி,  ஒப்பற்ற முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், ஆகமப் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாக காத்திருந்தோரில் சிலரை முதற் கட்டமாக நியமனம் செய்தது. அந்த வரலாறு காணாத சரித்திரச் சாதனை யினை நிகழ்த்தியவர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் என்று மகிழ்ச்சிப் பேருவகையுடன் மக்கள் தந்த பெருமையைப் பெற்றார்!

ஆதிக்கச் சுவையை ஆயிரக்கணக்கான ஆண்டு களாய் அனுபவித்த ஆரியம் பொறுக்குமா? மீண்டும் ஆங்காங்குள்ள சில ஆரிய நச்சரவங்களின் மறைமுக உதவியோடு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நியமனம் பற்றி புது வழக்கு -  "ஆகமப் பயிற்சி பெற்றவர் - ஜாதிக் கண்ணோட்டமின்றி, அர்ச்சகர் நியமனத் தகுதி உடை யவரே" என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் -  அவ் வழக்கினை அனுமதிக்காமலேயே அத்தீர்ப்பு சரியானதே என்று அதைத் தள்ளுபடி செய்து ஒரு முழு வட்டப் பயணத்தை உச்சநீதிமன்றம் - இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து  விட்டது.

திருப்புமுனைத் தீர்ப்பு!

இதன்மூலம் - இப்போது

"ஆபரேஷனும் வெற்றி, 

நோயாளியும் பிழைத்தார்! 

எழுந்தார்! மகிழ்ந்தார்!" 

நமது முதல் அமைச்சரும், அவரது அரசும், இதற்கு முக்கிய காரணமாக அமைந்து 53 ஆண்டுகால சமூகப் போராட்டமான ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட் டக் களத்தில் பெரு வெற்றி வாகை சூடியது வரலாற்றின் வைர வரிகளாகும்.  நியாயத் தராசினைச் சரியாகப் பிடித்த நீதிபதிகளும் - மக்களின் பாராட்டுக்கு உரிய வர்கள் - இது ஒரு திருப்பு முனைத் தீர்ப்பு! 

தொடரட்டும் ஒப்பற்ற முதலமைச்சரின் சரித்திர சாதனைகள்! எஞ்சிய நியமனங்கள் தொடரட்டும்; இடையில்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் அர்ச்சகர் பயிற்சியும் தொடரட்டும்!

இதன் மூலம் பெரியார் வென்றார், அண்ணா வென்றார், கலைஞர் வென்றார், ஸ்டாலின் வென்றார், மக்கள் வென்றார்கள்! 

முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!!

திராவிடம் வெல்லும்!  நாளைய வரலாறு சொல்லும்!!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
23.8.2023


செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆளுநருக்கு எதிரான போராட்டம் 'பேருரு' எடுப்பது உறுதி!


WhatsApp%20Image%202023-07-25%20at%2014.54.59

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுந ருக்கு எதிரான போராட்டம் "விஸ்வரூபம்" எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (Article) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண் ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப் பட்டமாகச் செய்து - தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்!

சண்டித்தனம் செய்வதே - வாடிக்கையா?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட வரைவுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும், அல்லது முறைப்படி திருப்பி அனுப்பாமலும் காலந் தாழ்த்தி மக்கள் அரசான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைச் செயல்படாமல் செய்ய திட்டமிட்ட சண்டித் தனத்தைச் செய்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மிக உணர்ச்சி கொந்தளிக்கும் பிரச்சினையான 

நீட் தேர்வு விலக்கு போன்ற பிரச்சினையில் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதிக் கொண்டு 'நான் ஒரு போதும் கையெழுத்துப் போட மாட்டேன்" என்ற பொல்லாத வார்த்தைகளைக்  கூறி, ஜனநாயக விரோத அடாவடித் தனத்தை அங்கலாய்ப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்!

ஏதாவது ஒரு சாக்கை வைத்து, ஒரு சிறு கும்பலைக் கூட்டி, நாளும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சனாதன சத்சங்க பிரசங்கி போல, பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரராகவே,  தான் தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறும் ஓர் ஊழியக்காரர் என்பதை அறவே மறந்து விட்டு அனுதினமும் தனியே தர்பார் நடத்தி வருகிறார்!

சட்ட வரைவுகள் 

"கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஊறுவதற்கா?

பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற பழைய சட்டத்தை ஒரு பிடிமானமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை காவி மயமாக்க  தனது அதிகாரத்தை அவசியமற்றுப் பயன்படுத்துகிறார்.

ஆளுநர் வேந்தராக இருப்பதை ஏற்காத சட்ட வரைவு அவரது "கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஓராண் டுக்கு மேல் ஊறிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் இல்லாத  - தலையில்லா   பல்கலைக் கழகங்களாக பல மாதங்களாக  (சில ஆண்டுகளாகவே)  இருந்து வருவது கொடுமை!

பல்கலைக் கழகங்களில்   ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்த, தனித்தனித் சுதந்திரமான பல்கலைக் கழக விதிமுறைகள் - துணைவேந்தர் நியமனம் உட்பட உண்டு.

உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்பிற்குள் தேவையின்றித் தலையிடுவதா?

அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது, தான் விரும்புவது போல அச்சட்டங்களை மாற்றுங்கள், சம்பந்தமில்லாதவர்களை நியமனம் செய்யுங்கள் என்று மாநில அரசின் உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்புக்குள் இயங்க வேண்டியவைகளை மாற்றிட முறையற்ற சட்ட வரம்பு மீறிய ஆலோசனைகளைக் கூறி வரும் கொடுமை! இதனால் பல பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தர் கையெழுத்திட்ட பட்டங்கள்  பெறுவதில் தாமதத்தின்   காரணமாக அவர்கள் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. (பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு)

முன்பு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சனாதன  விளக்கம் கூறும் ராஜ் பவனத்தின் துணை பெற்றவருக்கு பதவி நீட்டிப்பை ஓராண்டு  அளித்து புதிய துணைவேந்தர் நியமிக்கப் படாமலேயே அவரே அப்பதவியைத் தொடரும் வகை உதவினார் ஆளுநர்!

பல்கலைக் கழக விதி முறைகளை மாற்றச் சொல்லி அழுத்தம் - இப்படி பல! இதற்கிடையில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்து காவல்துறை விசாரணையில் அதற்கு முகாந்தரம் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகும்கூட, அவர்கள்மீது ஊழலுக்கான வழக்குத் தாக்கலாக அனுமதி அளிக்க இந்த ஆளுநர் ஆர்.என். ரவி தயக்கம் காட்டி தனது வழக்கமான "தாமதப் பெட்டி"க்குள் போட்டு வைத் துள்ளார்.

ஊழலைச் செய்த மேனாள் அமைச்சர்கள்மீதுள்ள கோப்புகள் மேல் நடவடிக்கைக்கான அனுமதி அளிக்காது  கிடப்பில் வைத்துள்ளார் (அதிமுகவுடன் கூட்டணி வர இருப்பதால் இப்படி ஒரு பாராமுக குறுக்குச் சாலோ  என்று விவர மறிந்தவர்கள் பேசும் நிலை;  வெளிப்படை விவாதங்கள்). 

மகா வெட்கக்கேடு! கண்டனத்திற்குரியது!!

 நீட் தேர்வுக்கு விதி விலக்குக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அறவழியில் நடந்து வரும் நிலையில் "எதன் மீதோ மழை பொழிந்தது" என்பதைப் போல ராஜ்பவனத்தில் இருப்பது மகா வெட்கக் கேடு!

வன்மையான கண்டனத்திற்குரியது!  

ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஒரு மாபெரும் போராட்டம்   "பேருரு" எடுப்பது உறுதி!

மக்கள் நினைத்தால் மாற்றங்கள் தானே வரும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
22.8.2023

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம்! ‘திராவிட மாடல்' அரசு கடுமையாக எதிர்க்கும் - எதிர்க்கவேண்டும்!விஸ்வகர்மா திட்டம்' என்ற பெயரில் குலக்கல்வியா?


‘விஸ்வகர்மா திட்டம்' என்ற பெயரில் குலக்கல்வியா? 

செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா?

 அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்!

1

‘விஸ்வகர்மா' திட்டம் என்ற பெயரில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவேண்டும் என்பதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கை- திட்டம் என்பது அம்பலமாகிவிட்டது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி இந்தத் திட்டத்தை முறியடிப்போம். ‘திராவிட மாடல்' அரசு - முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பார் - எதிர்க்கவேண்டும் என்று வலியுறுத்து கிறோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை - ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் செயல்பாடாகும்.

மோடி ஆட்சியில் குலதர்மப் பாம்பு படமெடுக்கிறது!

இப்போது மீண்டும் ஆரியத்தின் ஆணிவேரான பே(வ)தத்தினை - படிக்கட்டு ஜாதி முறையை Graded inequality என்று டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்திய பேத ஒழிப்புக்கு எதிராக மனித சமத்துவத்தை வெடி வைத்து, உயர்ந்தவன் - தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப் படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது - இப்போதும்!

2

‘‘விஸ்வகர்மா திட்டம்'' என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த ‘‘கீழ்ஜாதியர் அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் - அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்டு 15 ஆம் நாளில் டில்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி அவர்கள்.

16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா''  (‘‘PM Viswakarma'')  திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதார குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளதாம்! பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு - சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம்! 

2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்!

18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்!
சனாதனத்தின் முழு வீச்சு!

என்னே கொடுமை! சனாதனத்தின் முழு வீச்சுத் திணிப்பல்லவா இது! வர்ணாசிரம வக்கிரத்தின் அக் கிரமம் அல்லவா இது!

தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் - விளக்குமாறு கட்டும் தொழில் (ஙிக்ஷீஷீஷீனீ விணீளீமீக்ஷீ), பொம்மை செய்தல், சிரைக்கும் தொழில் (ஙிணீக்ஷீதீமீக்ஷீ), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருமாம்!

இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப் படையில் கடன் அளிப்பார்களாம்!

தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட் டிருக்கிறது பார்த்தீர்களா?

நம் நெஞ்சங்கள் சமூகநீதிக்காகப் போராடிப் போராடி, சலவைத் தொழிலாளியின் மகன் மீண்டும் அதே தொழிலில் போய் அவமானமும், தற்குறித்தனத்தையும் பெறாமல், திராவிடம் முயன்று அவரைப் படிக்க 

வைத்து அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். ஆக்கி வெற்றி கண்டது!

திராவிடத்தின் அடிப்படையே ஆரிய வர்ண தர்ம மும், குலத்தொழிலும் அல்ல! ஆடு மேய்ப்பவர்களையும் - அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். ஆக்கி, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதே!

அதுதானே உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும்? இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத் தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் உங்களுக்குக் கிட்டும் - இந்த ஆரிய ஆர்.எஸ்.எஸ். சனாதன ஆட்சியில்!

திருக்குறள் பிறந்த மண்ணில் குலக்கல்வியா?

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்''

என்ற குறள் பிறந்த மண்ணில் இப்படி மீண்டும் குலக்கல்வியா? அதுவும் அனைத்து இந்தியாவிலும் என்றால், இதைவிட கடைந்தெடுத்தப் பிற்போக்குத்தனம் உண்டா? முன்னேற்ற கடிகாரத்தை தலைகீழாகத் திருப்பி வைப்பதா?

இதுபற்றிக் கண்டனக் குரலினை அத்துணை முற் போக்கு - ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் - ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி இத்திட்டத்தை கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.

அனைத்துக் கட்சிகளையும் திரட்டுவோம்!

தொழிலை ஏன் பாரம்பரியமாகச் செய்ய வற்புறுத்த வேண்டும் - செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், சிரைப்பவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்?

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை 1952-1953 இல் ஓட ஓட விரட்டி, ஒழித்து சமத்துவ நாயகர் பச்சைத் தமிழர் காமராசர் துணையோடு, புது வாய்ப்பு களை உருவாக்கி வரலாறு படைத்த மண் பெரியார் மண்ணான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் இந்த மண்!

இதுபற்றி அனைத்துக் கட்சிகளையும் திரட்டி, தலைவர்களை அழைத்து, முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தக் குலதர்ம புதுக்கரடியை விரட்டிட அனைத்து முயற்சிகளையும் செய்திட ஆயத்தமாவோம்!

உதாவதினி தாமதம் -

உடனே விழியுங்கள் ஒடுக்கப்பட்டோரே!

ஆச்சாரியாரின் பழைய குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடிப்போம்!

தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, அகில  இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க - டாக்டராக, பொறி யாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான ஒரு திட்டமே இந்தப் புதிய குலதர்மத் தொழில் புதுப்பிக்கும் இந்தத் திட்டமாகும்!

பெற்றோர்களே, புரிந்துகொண்டு, விழித்துக் கொள் வீர்! விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர்!

தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்' ஆட்சியும், அதன் ஆற்றல்மிகு முதலமைச்சரும் தமிழ்நாடு இத்திட்டத்திற்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப் படுத்துவதும் அவசர, அவசியம்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.8.2023
...........................
வாய்க் கொழுப்பு ‘தினமலர்!'
இது உங்கள் இடம் என்ற பகுதியில் ‘தினமலரில்' வெளிவரும் கடிதங்களும் சரி,
செய்திகளும் சரி கொழுப்பு தினவெடுத்து அவுட்டுத் திரி ஆணவத்துடன்
அம்மண ஆட்டம் போடுகிறது. இன்று வெளிவந்துள்ள ஒரு கடிதத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ‘‘தி.மு.க.வினர் எத்தர்கள் என்பதை நாடறியும்'' என்பதுதான் அந்தத் தலைப்பு. ஒட்டுமொத்த தி.மு.க.வினரையே தடியால் எழுதும் தடியர்களை
அடையாளம் காண வேண்டாமா?


வியாழன், 17 ஆகஸ்ட், 2023

‘நீட்’டை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம்- இளைஞரணி ஆர்ப்பாட்டம்!


‘நீட்’டை தமிழ்நாடும், அரசும் எதிர்க்கிறது!
தமிழ்நாடு அரசு ‘நீட்’டுக்கு எதிராக நிறைவேற்றிய மசோதாவின் கதி என்ன?
கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வு
அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அடகு போன அவலம்!

1

சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’டை எதிர்த்து சட்டப் போராட்டமும், மக்கள் போராட்டமும் நடந்துகொண்டுள்ளது. ஆனாலும், ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், வரும் 22  ஆம் தேதி திராவிட மாணவர் கழகம், இளைஞரணி சார்பில் தமிழ்நாடு  தழுவிய நிலையில் ‘நீட்’டை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி, மருத்துவக் கல்வி படிப்பிற்கு அகில இந்தியா முழுவதற்கும் ஒரே தேர்வு - ‘நீட்’  (NEET) தேர்வு என்று ஆரியம் திட்டமிட்டே இதனைப் புகுத்திய கதை ஒரு நீண்ட பின்னணி உடையது - சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

‘நீட்’ செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

முதன்முதலில் இப்படி ஒரு தேர்வு கொண்டு வரப்படவேண்டும் என்ற முடிவை உள்ளே திணித்தது ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கம்.

இதனை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட நிலையில், அது தேவையில்லை என்று தலைமை நீதிபதி, அல்டமாஸ் கபீர், மற்றொரு நீதிபதி விக்ரமஜித் சென் ஆகியோர் தீர்ப்பு வழங்க, குஜராத்தைச் சேர்ந்த தவே என்ற (பார்ப்பன) நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை (‘நீட்’ தேர்வு தேவை)தந்தார்.

அந்தத் தலைமை நீதிபதி வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர்  ஓய்வு பெற்ற நிலையில், மறுசீராய்வு என்ற போர்வையில் - மரபுக்கு மாறாக, முன்பு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஜஸ்டிஸ் தவே தலைமையில் ஓர் அமர்வு மீண்டும் ‘நீட்’ தேர்வு தேவை என்ற தீர்ப்பின்மூலமே ‘நீட்’ தேர்வு நுழைந்தது!

‘நீட்’டை தி.மு.க. ஆதரித்தது என்ற பொய்யான - புரட்டான பிரச்சாரம்!

தி.மு.க. அதை ஆதரித்தது என்ற ஓர் அப்பட்டமான புளுகுப் பிரச்சாரத்தினை அதன் அரசியல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போன்றவை கூறியபோது, அதனை எதிர்த்து தி.மு.க. வழக்கே போட்டது என்பதை பலமுறை நாம் விளக்கியிருக்கிறோம்.

ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட்’ தேர்வுக்கு (பா.ஜ.க. - மோடி அரசு) ஓராண்டு விலக்கும், தமிழ்நாட்டிற்கு - கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

அ.தி.மு.க. ‘நீட்’ தேர்வை ஆதரிக்கவில்லை; எதிர்த்து அது கூடாது என்பதே அதன் நிலைப்பாடு என்ற நிலையில், அதே உறுதியை அவருக்குப் பின் ஆட்சியைத் தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இரட்டை வேடம் போட்டு, அரைகுறையான சட்ட வரைவை - விதிவிலக்குக் கோரி ஒன்றிய அரசுக்கு அனுப்பி, அதை ஏற்காமல் அவர்கள் (மோடி ஆட்சி) திருப்பி அனுப்பியதையும் வசதியாக சட்டமன்றத்திற்கே கூட அறிவிக்காமல் மறைத்து வைத்திருந்தனர். உயர்நீதிமன்றத்தில் ‘நீட்’ தேர்வுபற்றி வந்த ஒரு வழக்கின்மூலமே இந்தப் பூனைக்குட்டி வெளியே வந்தது.

அரியலூர்: அனிதாவின் தற்கொலை

தொடக்கத்திலிருந்து தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் ‘நீட்’ தேர்வை எதிர்த்து கடுமையான பிரச்சாரம், போராட்டங்களை நடத்தி வந்தோம். திராவிடர் கழகம் நாடு முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி, மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அரியலூர் அனிதா, ஓர் ஆதிதிராவிடத் தொழிலாளியின் மகள் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் (1200-க்கு 1176 மதிப்பெண்கள்) வாங்கியும், ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் (86) பெறாமல், உச்சநீதிமன்றம் வரையில் போராடி, விரக்தி, வேதனையில் தற்கொலை செய்துகொண்டார் தனது மருத்துவக் கனவு நிறைவேறாததால்.

அனிதாவைத் தொடர்ந்தும் தற்கொலைகள்!

அனிதாவைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு தோல்வியால் ஏழை, எளிய, கிராம, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பலரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த 10 ஆம் தேதியன்றுகூட குரோம்பேட்டை ஜெகதீசுவரன் தற்கொலை செய்துகொண்டார்;  மகன் இறந்த துக்கம் தாளாமல், மாணவனுடைய தந்தை செல்வசேகர் கடந்த 14 ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.  இப்படித் தொடர்ந்து ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 21 நபர்களை பலி கொண்டுள்ளது. (இந்திய அளவில் இன்னும் எத்தனை எத்தனையோ!).

இதற்கிடையில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘நீட்’ தேர்வு ஒழிப்புக்குரிய ஏற்பாடுகளை சட்ட ரீதியாக உடனடியாக மேற்கொண்டு ஜஸ்டீஸ் ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அது ஆராய்ந்து சிறப்பான ஓர் அறிக்கையை மூன்றே மாதங்களில் தந்தது.

அதன் பரிந்துரை அடிப்படையில் சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வு விலக்குக்கான தனி மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்மூலம் அனுப்பப்பட்ட நிலையில், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக - முறைகேடாக ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டதை எதிர்த்து, பலத்த எதிர்ப்புக் குரல் (நாடு தழுவிய பிரச்சாரப் பயணம்)  எழுந்தது. அப்படியிருந்தும், ஆளுநர் ஆர்.என்.ரவி அம்மசோதாவினை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்தார்.

கார்ப்பரேட் முதலாளிகளைக் கொழுக்க வைக்க ஓர் ஏற்பாடு

முதலில் திருப்பி அனுப்பினார்; உடனே சட்டமன்றத்தைக் கூட்டி, விரும்பிய திருத்தங்களைச் செய்து ஆளுநர்மூலம் குடியரசுத் தலைவருக்கே அனுப்பிட, ஆளுநர் பிறகு அசைந்தார். அது குடியரசுத் தலைவரைச் சென்றடைந்து, அவரது பரிசீலனை என்ற அளவில் நிலுவையில் உள்ளது.

தி.மு.க. அரசு அதன் அதிகார எல்லைக்குள் எந்த அளவு விரைந்து செயல்பட முடியுமோ, அதைச் செய்து, பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை நமது முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரிலும், கடிதங்கள் வாயிலாகவும், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து இடையறாது வற்புறுத்தியும் வரத் தவறவில்லை!

‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டது. அது உலக வர்த்தகச் சட்டத்தின்கீழ்தான் அதன் ஆணை வெளியிடப்பட்டது!

(அ) கார்ப்பரேட் முதலாளிகள் கோச்சிங் சென்டர்களை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தி, பல கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கிறார்கள் என்ற பரவிய செய்திபற்றி ஒன்றிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

‘நீட்’ தேர்வில் ஊழல் மற்றும் குறைபாடுகள்

(ஆ) ஊழலை ஒழிக்க வந்தோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் - ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம், கேள்வித் தாள்கள் குழப்பம் போன்று ஒவ்வொரு தேர்வின்போதும் குற்றம், குறைகள், ஊழல் நடைபெறாத ‘நீட்’ தேர்வே இல்லை என்பது உயர்நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த  பல வழக்குகள்மூலம் வெளிச்சத்திற்கு வந்தன!

(இ) அதிக பணம் கொடுத்து வெளிநாட்டுக் கோட்டா, காலி இடங்களை நிரப்ப வசதி என்பதன்மூலம் ஏராளமான பணத்தோட்டம் காய்ச்சித் தொங்கும் நிலை - யதார்த்தமாகும்.

இந்த நிலையில், என்ன செய்ய முடியுமோ, அதைத் தி.மு.க. அரசு செய்துகொண்டிருக்கிறது.

ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா?

இதற்கிடையில், சம்மன் இல்லாது ஆஜராவதைப் போல, தமிழ்நாட்டில் ஒரு போட்டி அரசு நடத்திடும் அரசமைப்புச் சட்ட விரோத ஆளுமை அவதாரமான ஆர்.என்.ரவி என்ற ஆர்.எஸ்.எஸ். சனாதன பிரச்சார ஆளுநர், ‘‘எனக்கு அதிகாரம் இருந்தால், நான் ‘நீட்’ தேர்வு ரத்து சட்டத்திற்குக் கையெழுத்துப் போடமாட்டேன்’’ என்று தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத நிலைப்பாட்டைக் கூறி, தமிழ்நாட்டு மக்களை, பெற்றோரை, தமிழ்நாடு அரசை நாளும் வீண் வம்புக்கு இழுக்கிறார்!

பி.ஜே.பி.யிடம் அடகுபோன அ.தி.மு.க.

‘நீட்’ தேர்வைப்பற்றி அ.தி.மு.க. எடப்பாடி அணியினர் கூறுவது உண்மையானால், இந்த ‘நீட்’ தேர்வை முறையற்ற முறையில் ஆதரித்து, தனது அரசமைப்புச் சட்டக் கடமைக்கு விரோதமாக நடக்கும் ஆளுநர்பற்றி என்றாவது ஒரு கண்டனவார்த்தையாவது கூறியது உண்டா?

காரணம், பா.ஜ.க.விடம் இவர்கள் கட்சியை அடகு வைத்துவிட்டனர் தங்கள் அ.தி.மு.க.வை! ‘‘மடியில் கனம் வழியில் பயம்‘’ - அதற்குக் கைமாறாகவோ என்னவோ, பழைய அமைச்சர்கள்மீதுள்ள வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், காலந்தாழ்த்துவது எதைக் காட்டுகிறது?

ஒரு பக்கம் ஊழல் ஒழிப்புப்பற்றி ஊருக்கு உபதேசம்; மறுபுறம் ஊழல் செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டை; அதற்கு அனுமதி அளிக்காமல் கிடப்பில் போடப்படும் கோப்புகள்.

அதற்கு கைமாறாக அ.தி.மு.க., ஆளுநரின் ‘நீட்’ தேர்வு ஆதரவினைக் கண்டித்து லேசாகக் கூட இதுவரை ஏதும் கூறவில்லை.

வரும் 22 ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

இவற்றை மக்களுக்கு விளக்கிடவும், மருத்துவக் கல்வி உரிமையை நிலை நாட்டிடவும், இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திடவும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகர் அல்லது முக்கிய நகரங்கள் - கிராமங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வருகிற 22 ஆம் தேதி நடைபெறும். இவ்வார்ப்பாட்டத்தில் திராவிட மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் நடத்தி, ‘நீட்’ தேர்வு ரத்து தேவை என்பதை வற்புறுத்துங்கள்!

கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்17.8.2023 சென்னை


 ‘நீட்' தேர்வு சாதித்தது என்ன?
மூன்று ஆண்டுகளில் 13,500 மருத்துவ இடங்கள் வீண்!

கடந்த ஜூலை 21, 2023 அன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ள பதில், ‘‘நீட் தேர்வால் பல்லாயிரம் மருத்துவக் கல்லூரி இடங்கள் வீணாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. தேசிய மருத்துவக் கவுன்சில் வழங்கியுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2019-2020 முதல் 2022-2023 ஆம் ஆண்டு வரையிலும் இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் 860 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 12,758 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றி வீணடிக்கப்பட்டுள்ளன'' என்பது அப்பட்டமாக வெளியிடப்பட்டுள்ளது.


கல்வி ஆண்டு       காலியாக உள்ள            காலியாக உள்ள

                                       இளநிலை                         முதுநிலை

                                       மருத்துவ இடங்கள்     மருத்துவ இடங்கள்

2019-2020                      273                                         4614

2021-2022                      326                                         3744

2022-2023                       261                                        4400


படிக்க மாணவர்கள் தயார், படிக்க மருத்துவ இடங்களும் தயார்; மருத்துவர்களின் தேவையோ நாடெங்கும் இருக்கிறது. ஆனால், நடுவில் தடைக் கதவாக ‘நீட்'!

அந்த ‘நீட்'டைத்தான் நிறுத்தமாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு!

நிறுத்த வைக்கவேண்டியது நமது கடமையா, இல்லையா?

------------------------

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பதவி உயர்வில் இடஒதுக்கீடு - தொல். திருமாவளவன் கடிதம்


1

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான  தொல். திருமாவளவன் கடிதம் கொடுத்திருக்கிறார்.

ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளில் பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன. மற்ற சமூகத்தினரை காட்டிலும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்வதே மிகவும் சவாலானதாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில். அவர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு வெறும் உத்தரவாக மட்டுமே இருக்கின்றன.

இந்த நிலையில்தான் உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஒன்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளனர். இந்த கடிதத்தில்,

"பிஜேபி எம்.பியான கிரித் சோலங்கி தலைமையிலான எஸ்.சி. எஸ்.டி., நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த அய்ந் தாண்டுகளில் குரூப் A-யில் பதவி உயர்வு பெற்ற எஸ்.சி. எஸ்.டி., ஊழியர்களின் பிரதிநிதித்துவம், எஸ்.சி.க்கான 15%க்கும் எஸ்.டி.க்கு 7.5% க்கும் குறைவாகவே உள்ளது என்று எடுத்துக்காட்டியுள்ளது. இதேபோன்ற குறைவான பிரதிநிதித்துவம் குரூப் 'சி' மற்றும் 'டி'-க்கும் காணப்படுகிறது.

இதை நிவர்த்தி செய்ய, எஸ்.சி. எஸ்.டி., பிரிவினருக்கான பின்னடைவு காலியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது; அதுமட்டுமின்றி, 45 நாட்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் தற்காலிக நியமனங்களில் எஸ்.சி. எஸ்.டி. மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DOPT) உத்தர விட்டுள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் குறிப்பிட்ட பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு அவுட்சோர்சிங் செய்கின்றன, இட ஒதுக்கீட் டைப் புறக்கணிக்கின்றன. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய ஒன்றிய அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,   பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கான உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக, 2022 ஆம் ஆண்டின் சிவில் மேல்முறையீட்டு எண். 629 இல், "ஜர்னைல் சிங் & பிறர் Vs லச்மி நரேன் குப்தா & பிறர்" என்ற வழக்கில், பதவி உயர்வு அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை வழங்குவதற்காக எஸ்.சி.,  மற்றும் எஸ்.டி.களின் பிரதிநிதித்துவத்தை அளவிடுவதற்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. மதிப்பீட்டின் அலகு என்பது 'கேடர்' ஆகும், இது குரூப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

ஒவ்வொரு தனிப்பட்ட கேடருக்கும் கணக்கிடக்கூடிய தரவு தொகுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஏற்ப, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது, ஒன்றிய அரசின் கடமை. உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரவுகளை உடனடியாக சேகரிக்கவும் அதன் அடிப்படையில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி.யினருக்கு நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உரிய உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்கவேண்டும்" என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தகவல்கள் எவற்றை குறிக்கின்றன எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உச்சநீதிமன்றம் உள்பட அறிந்திருக்கும் செய்தியாகும். நாடாளுமன்ற நிலைக் குழுவும் இதனை எடுத்துக்காட்டி உள்ளது. நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர்கள் நிர்வாகத்தில் உரிய இடம் பெற்று இருக்காவிட்டால் அது எப்படி உண்மையான ஜனநாயகமாகும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுக்குரிய பங்கு நிராகரிக்கப்பட்டால் நாட்டில் புரட்சி வெடிப்பது சாத்தியமாகும் என்று சொல்லி இருப்பதையும் ஒன்றிய அரசுக்கு இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம் - வலியுறுத்துகிறோம். 

1992 முதல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஒன்றிய அரசுத் துறைகளில் அளிக்கப்பட்டும் இதுவரை அவர்களுக்குரிய 27% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால் - அரசு தரும் புள்ளி விவரங்களின்படி பார்த்தாலே இல்லை என்பது வெளிப்படை. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தவிர்க்கப்படவே முடியாத ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இத்தகைய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது சமூகநீதியிலும் ஜனநாயக ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் ஆகும். 

இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு சமூக நீதிக்கு எதிரானது  என்று வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று. அதே நேரத்தில் உயர் ஜாதியினர் கல்வி வேலை வாய்ப்புகளில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் அவர்களுக்கு கதவுகளை திறந்து விடும் வகையில் பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது  சமூக அநீதியாகும். குறுக்கு வழியில் பாய்ந்து சமூக நீதியின் ஆணிவேரையே வெட்டுகின்ற அபாயகரமான செயலாகும். 

இந்த நிலையில் பெரும்பான்மை மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் கைகோத்து ஒன்றிணைந்து, வரும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதிக்கு எதிரான பிஜேபியை மிகப்பெரிய அளவில் வீழ்த்த வேண்டும் என்ற சபதத்தை - உறுதியை எடுத்துக் கொள்வார்களாக!