திங்கள், 7 அக்டோபர், 2019

மேகதாதுவில் அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரவே கூடாது!

மீறிக் கட்டப்பட்டால் தமிழ்நாடு மக்களின் எதிர்ப்பலை மேகதாது அணையின் உயரத்தைவிட மேலே எழும்பும்!
கருநாடக மாநிலத்தில் மேகதாது அணையைக் கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு எந்த வகையிலும் உதவிடக்கூடாது - அனுமதி தரவும் கூடாது; மீறி அணை கட்டப்படுமேயானால், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு அலை மேகதாது அணையின் உயரத்தைவிட அதிகமாக எழும் என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘புலி வருகிறது, புலி வருகிறது' என்று சொல்லிச் சொல்லிக் கொண்டே இருந்த போது - ஒரு நாள் நிஜமாகவே புலி வந்தது என்ற கதைபோல, கருநாடக மாநில அரசு மேகதாது என்னும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் விடயத்தில் மிகத் தீவிரமாக இறங்கிவிட்டது.
தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லையாம்!
இது தொடர்பான மத்திய அரசுக்கும், கருநாடக மாநில அரசுக்குமிடையிலான கடிதத் தொடர்பில், மேகதாது அணை கட்டும் பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறியிருக்கிறது கருநாடக அரசு.
இது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. கட்சிகளை மறந்து தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதுகுறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
2017 இல் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்!
அவ்வப்போது மேகதாது அணைப் பிரச்சினை தலைதூக்கும் பொழுதெல் லாம் தமிழ்நாடு கிளர்ந்து எழுந்து வருகிறது. 2017 பிப்ரவரி 23 ஆம் தேதியன்று சென்னையிலும், தரும புரியிலும் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுண்டு.
காவிரி பிரச்சினையில் தொடக்க முதல் திராவிடர் கழகம் களம் கண்டு வந்துள்ளது. பலமுறை அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தியதுண்டு. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு, ஆக்க ரீதியான கருத்துகளை ஆவணத்துடன் அளித்தும் வந்திருக்கிறோம்.
மேட்டூர் அணை முற்றிலும் மூடப்படும் அபாயம்!
கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொல்லே காலிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி யாற்றின் குறுக்கே சிவசமுத்திரம் அருவியின் அருகே மேகதாது என்னும் இடத்தில் அணை ஒன்றினைக் கட்டி நீர் மின் நிலையம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளது கருநாடக மாநில அரசு. இந்த அணை கிருஷ்ண ராஜசாகர் அணையை விடப் பெரியது என்று கருநாடக மாநில அமைச்சராக இருந்த ஜெயச்சந்திரா கூறினார். இந்த அணையால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் நீர் முற்றிலும் முடக்கப் பட்டுவிடும்.
மேகதாதுவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் அணைக்கு நிரந்தர மூடு விழா நடத்தப்பட்டுவிடும்.
கருநாடகத்தின் கேளாக்காது!
மேகதாதுவில் அணையைக் கட்டி னாலும், தமிழ்நாட்டுக்கு அளிக்கப்படும் தண்ணீரை கட்டாயம் அளிப்போம் என்று கருநாடக மாநில அரசுகள் (எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே இராகம்தான்) சொல்லுவது வாடிக்கை தான்; கேட்டுக் கேட்டு காது புளித்துப் போனதுதான் மிச்சம்.
காவிரி நடுவர் நீதிமன்றம் கூறினாலும் சரி,  உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தாலும் சரி, எல்லோருக்கும் ‘நாமம் சாத்துவது' தான் கருநாடக மாநில அரசின் எண்ண நீரோட்டமாகும்.
எந்தத் துணிவில் மேகதாதுவில் அணை கட்ட கருநாடக மாநில அரசு நிதி ஒதுக்கியது? (ரூ.5,912 கோடி).
1981 இல் நடந்தது என்ன?
1981 ஆம் ஆண்டு கருநாடகத்தில் குண்டுராவ் முதலமைச்சராக இருந்த போது, மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டிட அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி வருவதாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, கடும் எதிர்ப்பு தீர்மான வடிவத்தில் காட் டப்பட்டது. கட்சிகளை மறந்து தமிழ்நாடே ஓரணியில் நின்றது - அதன் காரணமாக அந்த முயற்சி கருவிலேயே சிதைக்கப் பட்டது.
ஆனாலும், அவ்வப்போது கரு நாடகம் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டே வருகிறது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரவே கூடாது
இப்பொழுது மத்தியிலும், கருநாடக மாநிலத்திலும் பி.ஜே.பி. அரசு இருந்து வரும் நிலையில், மீண்டும்  அந்த முயற்சி யில் ஈடுபட்டு வருவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம், மேகதாது அணை கட்டும் பகுதியில் ஆய்வினை நடத்திட அனுமதியளித்தது உண்டு. அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதை மத்திய அரசு மறந்து விடக்கூடாது. அடுத்தகட்டமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து சட்ட ரீதியாக அனுமதி பெற்றிட, சகல சக்திகளையும், யுக்திகளையும் கருநாடக மாநில பி.ஜே.பி. அரசு முயலும் நிலையில்,  அதற்கு மத்திய பி.ஜே.பி. அரசு கண்டிப்பாக இணங்கிவிடக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாகத் தெரி வித்துக் கொள்கிறோம்.
அணையின் உயரத்தைவிட  எதிர்ப்பு அலைகள் உயரும் - எச்சரிக்கை!
அரசியல் நோக்கத்தோடோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ மத்திய அரசு கருநாடகத்திற்கு மேகதாது அணை கட்ட அனுமதி அளித்துவிட்டால், மேக தாது அணையின் உயரத்துக்கு மேலே தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பு அலைகளாக பொங்கி எழுவார்கள் என்று எச்சரிக் கிறோம்.
கடந்த 22.2.2018 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் பெற்று, காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உணர்வு ஒருமனதாக தெரிவிக்கப்பட்டதையும் நினைவூட்டுகிறோம்.
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
- விடுதலை நாளேடு, 7.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக