புதன், 2 அக்டோபர், 2019

"இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்!" பிரதமர் மோடிக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,அக்.2, இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
அவர் நேற்று (1.10.2019) விடுத் துள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:
சென்னை அய்.அய்.டி.யின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக வந்த இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், விமான நிலையத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது, “உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று நான் பேசியது, அமெரிக்காவில் இன்னமும் எதி ரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித் திருக்கிறார்.
அய்.நா. அவையில் உரையாற்றும் போது, செம்மொழித் தமிழின் உன்னத வரிகளான, கணியன் பூங்குன்றனார் எழுதிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் இந்தச் சொற்கள் இங்குள்ள நம் எல்லோருக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரக்கூடியவை.
தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
தொன்மையான மொழி
மிகவும் மூத்த, தொன்மையான மொழி தமிழ்தான் என்பதைப் பன்னெடுங்காலமாக மொழியியல் வல்லுநர்கள், தொல்லியல் ஆய்வா ளர்கள், வரலாற்றாசிரியர்கள், மேலை நாட்டறிஞர்கள் பலரும் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அந்தத் தமிழ் கூறும் மண்ணின் மீது, மக்களின் பேச்சு வழக்கிலேயே இல்லாமல் வழக்கொழிந்த  சமஸ் கிருதத்தையும், ஆதிக்க மனப்பான் மையுடன் இந்தியையும் திணிப்பதில், கடந்த 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது முதல் தீவிரமாகச் செயல் பட்டது திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பா.ஜ.க. அரசு.
மத்திய  அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி - சமஸ்கிருதப் பெயர்களே சூட்டப்பட்டதுடன், அவை குறித்து தமிழில் விளம்பரம் வெளியிடும்போதுகூட, இந்தி - சமஸ்கிருத உச்சரிப்பிலேயே, தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
என்ன திட்டம், அதன் பொருள் என்ன என்பதைக்கூட தமிழ் உள் ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு; மத்திய பா.ஜ.க. அரசின் செயல் பாடுகள் தொடர்ந்து இருந்து வரு கின்றன.
'குரு உத்சவ்' என மாற்றுவது
ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று மாற்றுவது, சமஸ்கிருத வாரத்தைகளை எல்லா இடங்களி லும் கட்டாயப்படுத்த முனைவது, ரயில்வே - அஞ்சலகம் - வங்கி உள் ளிட்ட துறைகளில் இந்தியை மட் டும் முன்னிலைப்படுத்தி, மற்ற மொழி பேசுவோரின் வேலை வாய்ப்பைப் பறிப்பது, இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்ற குரலை அடிக்கடி ஒலிக்கச் செய்வது - இப்படி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வந்த நிலையில்; அதில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி தரத் தக்க  பெரிய மாற்றமாக, "தமிழ்தான் உலகின் பழைமையான மொழி" என்ற வரலாற்று உண் மையை இந்தியப் பிரதமர் அவர்கள் ஏற்றுப் போற்றியிருப்பது அமைந் திருக்கிறது.
அதுவும், கீழடி அகழாய்வுகளுக்கு மத்திய அரசின் நிதியை உரிய முறையில் ஒதுக்கீடு செய்யாமல், மத்திய தொல்லியல் துறையின் ஆய்வுகளை பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட நிலையில்; தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள் மூலம், சங்ககாலத் தமிழர்கள், அப்போதே உருவாக்கிய நகர நாகரிகத்தின் சிறப்புகள் வெளியாகியுள்ள சூழ லில், தமிழின் பெருமை குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது, உலகத்தார் கவனத்தை ஈர்த்திருக் கிறது.
அங்கீகாரத்தை
அளிக்க வேண்டும்
தொன்மைமிக்கதும், பழம்பெரும் இலக்கிய - _ இலக்கண வளங்கள் செறிந்ததும், மூத்த நாகரிகமும் பண்பாடும் உடையதும், உலகம் தழுவிய அளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவது மான தமிழ் மொழிக்குரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டிய பொறுப்பு, திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு நிச்சய மாக இருக்கிறது.
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியா வின் ஆட்சிமொழிகளாக ஆக்கி அங்கீகாரம் வழங்கிட  வேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த முயற்சியின் முதல் கட்ட மாக, அந்த மொழிகளிலெல்லாம் மூத்த மொழியான தமிழை, இந்தி யாவின் ஆட்சிமொழியாக ஆக்கிட வேண்டும் என்றும், திராவிட முன் னேற்றக் கழகம் தொடர்ந்து முன்வைத்திடும் கோரிக்கையின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கிட வேண்டும் என்றும் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழி
தமிழ், அது பிறந்த இந்திய நாட்டைத் தவிர பிற நாடுகள் பலவற்றில், ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றுள்ள உண்மையை, பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பு பற்றி சென்னை அய்.அய்.டி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் அவர்கள், “இட்லி, தோசை,  வடை, சாம்பார் ஆகியவை சுவை யாக இருக்கும்” என்று குறிப்பிட் டுள்ளார்.
தமிழர்கள், விருந்தோம்பலுக்கு மட்டுமல்ல, நன்றியுணர்வுக்கும் நீண்ட காலமாகவே பெயர் பெற்ற வர்கள்.
எனவே பிரதமர் மோடி அவர்கள், இந்தியாவின் ஆட்சி மொழித் தகுதியைத் தமிழுக்குத் தருவதற்கு உளப்பூர்வமாக முயற்சி செய்து, உண்மையான முறையில் சட்டநடவடிக்கைகளை மேற் கொண்டு அதனை நிறைவேற்றினால், தமிழர்கள் அவருக்கு என்றென்றம் நன்றி பாராட்டுவார்கள்.
மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக
மேலும், தமிழ் மொழியை மத்தியில் ஆட்சிமொழி ஆக்குவது, பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவைப் போற்றும் அரிய செயலாகவும் அமையும்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
- என்ற திருக்குறளை அறிந்துள்ள தமிழர்கள், பிரதமர் மோடி அவர்கள் தமிழ் மொழி  மீது காட்டும் இந்த ஆக்கபூர்வமான அக்கறையை, விரைவில் நடைமுறைச் செயலாக்கத் திற்குக் கொண்டு வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க் கிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தளபதி மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 2.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக