அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 செப்டம்பர், 2022

அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்: அண்ணா வெறும் படமல்ல - வழிகாட்டும் பாடம்! -செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

• Viduthalai

பெரியாரின் திராவிட மண்ணில் காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, செப்.15 பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்து வழிகாட்டிய மண்ணில் காவிகள் படையெடுக் கலாம், வாலாட் டலாம் என்று நினைத்தால், அந்த வால் ஒட்ட நறுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) அண்ணா சாலையில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அண்ணாவின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம் - விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப் படுகிறது

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய 114ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவான இன்று - முன்பு எப் பொழுதும் தேவைபட்டதைவிட, அண்ணா அவர்களின் முப்பெரும் சாதனைகளுடைய விளக்கம், விரிவாக்கம் இப்பொழுது அதிகமாகத் தேவைப்படுகின்ற காலகட்டம்.

அண்ணா அவர்கள் ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளம் வகுத்தார்கள். நீதிக்கட்சி ஆட்சியினுடைய தொடர்ச்சி தன்னுடைய ஆட்சி என்று அடக்கத்தோடும், உரிமையோடும் எடுத்துச் சொல்லி, அதனைத் தொடர்ந்தார்கள்.

அண்ணா அவர்களுடைய ஆட்சியினுடைய முப் பெரும் சாதனைகள் அதனுடைய விளைவுகள் - அதனுடைய தாக்கங்கள் இன்றைக்கும் தேவைப் படுகின்றன.

உதாரணத்திற்கு, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்கள்.

பெரியார் மண்ணை - காவி மண்ணாக ஆக்கிவிடவேண்டும் என்கிற தீவிர முயற்சிகள் நடைபெறுகின்றன

ஆனால், தமிழ்நாடு, பெரியார் மண்ணாக, திராவிட மண்ணாக இருப்பதை காவி மண்ணாக ஆக்கிவிட வேண்டும் என்பதற்குத் தீவிரமான முயற்சிகள் நடைபெறுகின்ற காலகட்டத்தில், அண்ணா அவர்கள் படமல்ல - பாடம் இன்றைய காலகட்டத்திற்குத் தேவை!

அதேபோலத்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்து, ஓர் அருமையான பண்பாட்டுப் புரட்சியை அண்ணா அவர்கள் உருவாக்கினார்கள் சட்ட ரீதியாக. தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட விளக்கம் கண்டார்.

இன்று அவற்றிற்கெல்லாம் கேள்விக் குறிகளாக, சனாதன படையெடுப்பு   நடைபெறுகின்றது.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை என்று, தமிழும் - ஆங்கிலமும்தான் தமிழ்நாட்டில். இங்கே வேறு மொழிக்கோ, மூன்றாவது மொழிக்கோ இட மில்லை. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். மொழி திணிப்புக்கு இங்கே இடமில்லை என்பதைத் தெளி வாக்கினார் அண்ணா அவர்கள்.

ஆனால், இன்று வருகின்ற செய்தி என்ன?  இந்திதான் இந்தியாவை இணைக்கும் என்று கூறுகிறார் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ஒருவர்.

இந்தி, இந்தியாவை இணைக்குமா? அல்லது பிளக்குமா? என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், அந்த சுவ ரெழுத்தைக் கூடப் படிக்கத் தவறுகிறார்கள்.

எனவேதான், அண்ணா இப்பொழுது தேவைப் படுவது வெறும் படமாக அல்ல - அண்ணா அவர் களுக்கு நாம் புகழ்மாலை சூட்டுவது மட்டும் போதாது - மலர்மாலைகளை அவருடைய சிலைக்கு அணிவிப்பது மட்டும் போதாது - அண்ணாவினுடைய கொள்கைகளை நாம் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம், வீதி மன்றம் இவற்றையெல்லாம் தாண்டி, மக்கள் மன்றம் தீர்ப்பளிக்கக்கூடிய உணர்வை உருவாக்கத் தந்தை பெரியார் வழியில், அண்ணா வழிகாட்டினார் - கலைஞர் தொடர்ந்தார்; இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது.

ஆகவே, இது தொடரவேண்டுமானால், அண் ணாவை நாம் போற்றவேண்டும் என்பது வார்த்தைகளால் அல்ல - செயல்களால்தான்.

செய்தியாளர்: பெரியார் சிலை பீடத்தில் உள்ள கடவுள் இல்லை வாசகம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்லியிருக்கிறதே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அந்த வழக்கே இன்னும் அனுமதிக்கப்பட்டதா என்று சந்தேகத்தில் இருக்கிறது. 

அந்த வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டு, காலாவதியாகக் கூடிய சூழலில், அதற்கு அனுமதி கொடுக்கவேண்டுமா? இல்லையா? என்று கேட்டு இருக்கிறார்கள். வழக்கு வரட்டும், முழு விவரங் களை உங்களுக்குப் பிறகு சொல்கிறேன்.

 காவிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்

செய்தியாளர்: தமிழ்நாட்டில் பெரியார் சிலை மற்றும் பெரியார் சார்ந்த சில சர்ச்சைகள் எழுகின்றனவே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: காவி படையெடுப்பு இங்கே வருகிறது; காவி படையெடுத்தால், அதன்மூலம் காலிகள் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும்; மக்களாலும் தடுக்கப்படும். நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவுக்குச் சூட்டும் புகழ்மாலை

‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

அண்ணாவின் 114 ஆம் ஆண்டுப் பிறந்த நாளில், அவர் வழிகாட்டிய வகையில் ஆட்சி நடத்தும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் புகழைப் பரப்புவதே அவருக்குச் சூட்டும் புகழ் மாலை  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறிள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2022) அறிஞர் அண்ணாவின் 114 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

இது ஒரு திராவிடர்த் திருவிழா! காரணம், தந்தை பெரியாரின்  தலைமாணாக்கராக இருந்து அண்ணா எழுதிய எழுத்துகளும், பேசிய பேச்சுகளும், ஆட்சியைப் பிடித்து ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அடித்தளமிட்டுச் செய்த சாதனைகளும், அவர்தம் போதனைகளும் என்றென்றும் நிலைத்து நின்று, பின் வந்த ஆட்சிகளுக்குக் கலங்கரை விளக்கமாக ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது!

தந்தை பெரியாரிடம் கற்ற பாடங்களை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற ஆயுதங்களுடன் தனது பொது வாழ்க்கையை நடத்தியவர்.

ஆட்சி என்பது காட்சியல்ல; திராவிடப் பேரினத்தின் அடிமை வாழ்விலிருந்து ஏற்படவேண்டிய மீட்சி என்பதனை நன்கு புரிந்து, ஓராண்டு கால ஆட்சி என்பதில் முப்பெரும் நிலைத்த சாதனைகளைச் செய்து, சாகா சரித்திரம் படைத்தவர்.

இன்று பலருக்கு அண்ணா வெறும் படம் - சிலைக்கு மாலை சூட்டிவிட்டு சிலர் அண்ணாவின் பகுத்தறிவு, சுயமரியாதை, பண்பாட்டுப் புரட்சியை மறந்துவிடுகின்றனர்!

சீலம் முக்கியம்; செயல்திறன் மூலம் இன்றைய ‘திராவிட மாடல்' ஆட்சி அதைச் சாதித்து சரித்திரம் படைக்கிறது!

ஆரிய அலையில் 

சனாதன சுறா

அண்ணா அன்றே எச்சரித்தார்:

‘‘ஆரிய அலையிலே சனாதனம் என்ற சுறா மீன்கள் உலவுகின்றன. வருணாசிரமம் என்ற வாயகன்ற திமிங்கலங்களும்,  மீன்களும் உள்ளன'' என்று.

இன்று அது ‘‘விஸ்வரூபம்'' எடுத்து, தனது பெருஉருவைக் காட்டி ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' தத்துவத்தை அழிக்க ஆலவட்டம் சுற்று கிறது. அந்த ஆரிய மாயையை வீழ்த்தும் பொறுப்பு உண்மையான அண்ணாவின் தம்பிகட்கும், சீடர் களுக்கும் விடியலை விரும்பும் அனைவருக்கும் தேவை!

அண்ணா வாழ்க!

அண்ணாவின் ‘திராவிட மாடல்' ஆட்சியின் சரித்திர புகழ் திக்கெட்டும் பரவுவதே - பரப்புவதே அறிஞர் அண்ணாவுக்குச் சூட்டும் வாடா மாலை!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

15.9.2022


புதன், 3 பிப்ரவரி, 2021

அண்ணா நினைவு நாள் செய்தி: அண்ணா வாழ்க! திராவிடம் வெல்க!!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அறிக்கை!

அறிஞர் அண்ணா அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2021) திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தந்தை பெரியாரின் தள நாயகராகத் திகழ்ந்துதனது அறிவு ஆசானுக்கே தான் பெற்ற ஆட்சியை சட்டமன்றத்தில் காணிக்கையாக்குகிறேன் என்று பிரகடனப்படுத்திஅவரது கொள்கைகளை சட்டங் களாக்கி ஆள வைத்து - அவனியை அதிசயப்பட வைத்த அறிஞர் அண்ணாவின் 52 ஆம் நினைவு நாள் இன்று (3.2.2021).

அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரை ஆளாக்கிய அவரது ஆசான் எழுதிய இரங்கலின் இரண்டு வாக்கியங்கள் என்றும் சரித்திரத்தில் ஒளி வீசச் செய்யும் அனுபவ முத்திரைகளாகும்!

அண்ணா மறைந்தார்;

அண்ணா வாழ்க!

எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்த கருத்து வீச்சுகள் இவை!

அண்ணா என்ற தனி மனிதருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம்.

அண்ணா என்ற கொள்கை - தத்துவம் - லட்சியம் என்றும் மறையாது வாழும் என்றார்விரித்து எவ்வளவோ எழுதலாம்!

இன்று அண்ணாவின் உண்மையான ஆட்சி மலர்வது காலத்தின் கட்டாயம்.

தி.மு.. - அண்ணா கண்ட அரசியல் ஆயுதம்அந்த ஆயுதம் சொல்லும் செய்தி ''திராவிடம் வெல்லும்'' என்பதே!

அண்ணா வாழ்கதிராவிடம் வெல்க!!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

3.2.2021

அண்ணா நினைவு நாள் சிந்தனை


தந்தை பெரியாரின் மாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இந்நாள் (3.2.1969). பகுத்தறிவாளர் பெர்ட்ரண்ட் ரசலின் நினைவு நாளும் இந்நாள்தான் (1970).

அண்ணா என்று வரும்போது நாட்டு மக்கள் நினைவிற்கு வருவது - தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கை களை வாலிபர்களிடத்திலே கொண்டு சென்றது. புராண, இதிகாச ஆரிய சனாதனங்களை அழகு தமிழில் எழுத்திலும், பேச்சிலும் கொண்டு சென்றது. அதன்மூலம் பெரும் எழுச்சியை ஏற்படுத் தியது. அரசியலுக்குச் சென்ற நிலையிலும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த நிலையிலும் குறுகிய காலத்தில் அவர் நிகழ்த்திக் காட்டி நிலை நிறுத்திய முப்பெரும் சாதனைகள் எல்லாம் கல்வெட்டுகளாக நாட்டு மக்கள் நெஞ்சிலே நிலைத்திருக்கக் கூடியவையாகும்.

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரின் கன்னிப் பேச்சு என்பது இன்றைக்கும் அனைத்துத் தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது - என்றென்றும் பேசப்படவும் போகிறது.

"நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள் நான் ஒரு வங்காளிக்கோ, அல்லது மராட்டியனுக்கோ, அல்லது குஜராத்திக்கோ எதிரான வன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல "என்ன வாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்". திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித் தன்மை பெற்றதும், வித்தியாசமானது மான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரே காரண மாகும்" என்று மாநிலங்களவையில் முழங்கினார் அறிஞர் அண்ணா (1962 ஏப்ரல்).

திராவிட என்ற இன வரலாற்றுச் சொல்லைத் தம் கட்சிகளில் இணைத்துக் கொண்டிருப்போர் தங்கள் தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் இந்த வரலாற்றுப் பிரகடனத்தைக் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டி வைத்து ஒவ்வொரு நாளும் படித்துப் பார்த்து, இந்தப் பாட்டையில் கண்ணியமாகக் கடமையாற்று கிறோமா என்று தனக்குத்தானே சுய விமர்சனம் செய்து கொள்வது மிக மிக முக்கியம்.

"பிரிவினையைக் கை விட்டாலும், அந்தப் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன" என்று அண்ணா சொன்னதையும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அண்ணா சொன்ன அந்த மாநில சுயாட்சி என்பது இப்பொழுது ஓரத்தின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது!

இரு மொழிதான் இங்கு - மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்று சட்ட ரீதியாக நிலை நிறுத்திச் சென்றார் அண்ணா.

இந்திய மத்திய அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தேசிய கல்விக் கொள்கை என்ற முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைக்கவில்லையா? அந்த மத்திய ஆட்சியின் கட்சியுடன் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கும் அகில இந்திய அண்ணா தி.மு.க. நகமும், சதையுமாக குழைந்து குழைந்து ஒட்டி உறவாடுவது எப்படி - எப்படி?

தன் இறுதி மூச்சு அடங்கும் வரை பகுத்தறிவாளராக பளிச்சென்று காணப்பட்டவர் அண்ணா. இப்பொழுது என்ன நடக்கிறது?

அண்ணா திமுக கட்சியின் நிறுவனர் என்று சொல்லிக் கொண்டு எம்.ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோருக்கு அதிகாரப் பூர்வமாகக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறதே - அண்ணா திமுகவில், அண்ணா சிந்தனையாளர் ஒரே ஒருவர் கூடக் கிடையாதா?

"நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறு தலைச்சாமி, ஆனைமுகச் சாமி, ஆழிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கைமீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கிச் செல்லும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே. நாம் இந்து என்று கூறிக் கொண்டு தொழ வேண்டுமே  -இந்தச் செய்தியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே!" என்றாரே அறிஞர் அண்ணா.

அரசியலிலும் சரி, ஒருவனே தேவன் என்று சொன்ன போதும் உருவமற்ற தேவன், ஊண் வேண்டாத சாமி, ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி, அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து கதைக்கூறா சாமி உண்டா? என்று அண்ணா அவர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார். (திராவிட நாடு 26.9.1948) உருவச் சிலைகளைக் கடவுள் என்று கூறி வீழ்ந்து கும்பிடுபவர்களை எள்ளி நகையாடுகிறார்.

இத்தகைய பகுத்தறிவாளர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருப்பவர்கள் அவரின் பகுத்தறிவுச் சிந்தனை யைக் காலில் போட்டு மிதித்து கட்சியின் தலைவர்களுக்கு (எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா) கோயில் கட்டும் பேதமையை என்னவென்று சொல்ல! இந்தக் கோயிலுக்கு பெயர் தமிழர் குலச்சாமியாம்.

இந்தக் குலச்சாமி ஏன் சிறை சென்றது என்று எப்படி ஸ்தலபுராணம் எழுதுவார்களாம்?

கோயில்கள் எப்படி எல்லாம் தோன்றின என்பதற்கு இது ஒன்று போதாதா?

சிவாச்சாரியார்களை அழைத்து இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகமாம்! ஆரியமாயை எழுதிய அண்ணா எங்கே? ஆரியத்திற்கு அடிமையான இந்த அண்ணா திமுக எங்கே? அண்ணா நினைவு நாளில் சிந்திக்க வேண்டும்.

வியாழன், 14 நவம்பர், 2019

தப்புத் தப்பாக உளறுவது யார் 'தினமலரே'?

மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முடிச்சவிழ்க்கிகள் 'தினமலர்' உருவத்தில் நடமாடத்தான் செய்கிறார்கள்.

தளபதி ஸ்டாலின் சொன்னது என்ன? 'தினமலர்' கூறுவது என்ன? 1937இல் தொடங்கப்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில்  13 சர்வாதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 1948 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அண்ணா அவர்கள் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த உண்மையைத் தானே தளபதி ஸ்டாலின் சொன்னார்.

இது தவறு என்று சொன்னால் ஆதாரத்துடன் மறுக்கலாம். அதுதான் அறிவு நாணயம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலை.

வரலாற்றை மக்கள் மறந்திருப்பர் என்று ஸ்டாலின் தப்புத் தப்பாக சொல்லுகிறார் என்று இந்தத் 'தப்பிலி'கள் சொல்லு வதுதான் வேடிக்கை. தளபதி ஸ்டாலின் தப்புத் தப்பாக எதையும் சொல்லவில்லை. வரலாற்றை சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு அண்ணா சர்வாதிகாரி யாக பெரியாரால் நியமிக்கப்பட்டதற்கும், திகவிலிருந்து திமுக பிரிந்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அப்பட்டமாக  அபாண்டமாக எதையாவது கிறுக்குவதும், உளறுவதும் பிறகு நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் இந்தப் பார்ப்பன சவுண்டிகளுக்குச் சர்வ சாதாரணம் தானே!

-  கருஞ்சட்டை

 - விடுதலை நாளேடு 14 11 19