கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜூன், 2026

கருவறை முதல் கல்லறை வரை - கவிஞர் கண்ணதாசன்



கருவறை தொடங்கிக் கல்லறை வரைக்கும்

வருவதும் போவதும் வரைமுறை அன்று 

ஒருவினை மறையின் மறுவினை தோன்றும் 

ஊழ்வினை உறுத்துவந் தூட்டும் எனும்படி 

பட்டினி உணர்வு பரபரப் பென்பது கட்டளை போலக் கழுத்தினை நெரிக்கும்! 

நண்பர் என்பதில் நல்லவர் தீயவர் அன்பர் என்பதில் அறவோர் மறவோர் கொண்டவர் தமக்குள் குறையினர் நிறையினர் 

கொள்கைகள் தம்மில் கூடுதல் குறைச்சல்

ஆயிரம் ஈட்டிகள்! ஆயிரம் ஈட்டிகள்! அனைத்தையும் விலக்கி அடவி சென்றாலும்

 பாயும் ஈட்டிகள் பாசக் கம்புகள்! மானிடச் சாதியில் மறுபடி மறுபடி தோன்றும் விதியிது! துயரா, நலமா? வாழ்க்கை என்பதை வாசலில் ஒருநாள் அற்புதச் சொர்க்கமாய் அறிந்துநாம் போற்றுவோம்! 

மறுநாள் பொழுது மயங்கி விடிந்தால் நரகம் போலதை நாமே தூற்றுவோம்! எத்தனை சலனம்? எத்தனை சபலம்? பித்துப் பிடித்துப் பேதை போலாகி தத்துவ ஞானச் சந்நிதி விழுந்து 

காய மேஇது பொய்யெனக் கதறுவோம் மாய மாதா மயக்கென உளறுவோம்! நாற்றச் சடலமும் ஊத்தைப் பையெனத் தூற்றித் தூற்றித் துயரம் தீருவோம்! ஆத்தாள் அப்பன் அனுசரித் ததனால் ஊத்தைப் பையை உலகில் சுமந்தோம்! நாமா காரணம்? நமதா குற்றம்? நன்றோ தீதோ நாமும் பிறந்தோம்! இன்றோ நாளையோ எங்கோ இருப்போம்! 

வாழும் வரைக்கும் வாழ்க்கையை நினைத்து 

அங்கம் தனில்நோய் அணுகா வாறும் ஆசை எனும்நோய் அடையா வாறும் துன்பம் எனும்நோய் தொடரா வாறும் ஆடி முடித்தால் ஆனந்தம் அதிகம்! 'வாழ்வோம்' என்பதை வரையெனப் போட்டால் 

'வாழ்வீர்' என்பதை இறைவன் உரைப்பான்!

'இந்த முதலடிக்குக் கவிதை எழுத வேண்டாம்' என்று எவ்வளவோ சொல்லியும், மறுத்து, இது தனக்குப் பிடித்ததெனச் சொல்லி, கவிஞர் 1.7.81. இரவு 7.30. க்கு எழுதி முடித்தார். இதுவே, கவியரசர் தமிழகத்தில் இறுதியாக எழுதிய கவிதை.

- இராம. கண்ணப்பன்

முதலடி தந்தவர்: என். சிவகாமி நாகப்பன்.

குமுதம் வார இதழ், 1981

- தேடி எடுத்தவர்:-செ.ர.பார்த்தசாரதி



வியாழன், 30 ஏப்ரல், 2020

புரட்சிக்களம் பாடிய கவிஞன்



வானின் வண்ணம் பாடிய கவிஞன் வாழ்வின் வசந்தம் பாடிய கவிஞன் அழகின் மயக்கம் பாடிய கவிஞன் அருவியின் அழகைப் பாடிய கவிஞன்
மலையின் சிகரம் பாடிய கவிஞன் கலையின் உணர்வைப் பாடிய கவிஞன் 
நிலத்தின் நிலையைப் பாடிய கவிஞன் 
நீரின் பெருமை பாடிய கவிஞன் கடலின் அலையைப் பாடிய கவிஞன் 
உடலின் தன்மை பாடிய கவிஞன் காதல் சுகத்தைப் பாடிய கவிஞன் காம சுரத்தைப் பாடிய கவிஞன் மலரின் மணத்தைப் பாடிய கவிஞன் 
மாந்தரின் மனதைப் பாடிய கவிஞன் 
இயற்கை எழிலைப் பாடிய கவிஞன் 
இல்லாத இறையைப் பாடிய கவிஞன் என்ற வகையில் எண்ணற்ற கவிஞருண்டு 
ஆனால் . . . 
அறிவின் ஆற்றலைப் பாடிய கவிஞன் 
அழியாக் கல்வியைப் பாடிய கவிஞன் 
பசியின் கொடுமையைப் பாடிய கவிஞன் 
பகுத்தறிவுக் கருத்தைப் பாடிய கவிஞன் 
ஜாதியை சாகடிக்கப் பாடிய கவிஞன் 
சமத்துவம் சமைக்கப் பாடிய கவிஞன் 
இசையின் இனிமையைப் பாடிய கவிஞன்
புரட்சிக் கனவைப் பாடிய கவிஞன் புரட்சிக் கருவைப் பாடிய கவிஞன் புரட்சியின் உருவைப் பாடிய கவிஞன் 
பாரதிதாசன் ஒருவன் மட்டுமே ! அதனால் பெரியார் அப்பெருங் கவிஞனை புரட்சிக் கவிஞர் என்றே அழைத்தார் அந்தக் கவிஞன் காண விரும்பிய புதியதோர் உலகம் படைப்போம் - கெட்டட் போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம் பேதமிலா அறிவுடைய அவ் வுலகிற்கு பேசு சுயமரியாதை உலகென்று பெயர் வைப்போம் வாழ்க புரட்சிக் கவிஞர் ! 

- அதிரடிக . அன்பழகன்

- விடுதலை நாளேடு, 29.4.20