ஞாயிறு, 6 அக்டோபர், 2019

49 பேர் மீதான தேசத் துரோக வழக்கை வாபஸ் வாங்குக! - ஆசிரியர் அறிக்கை

ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்தை மதிக்க வேண்டும்


49 பேர் மீதான தேசத் துரோக வழக்கை வாபஸ்  வாங்குக!
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பெரு மக்கள் மத்திய ஆட்சியின் தவறான போக்குகளை சுட்டிக் காட்டி பிரதமருக்கு கடிதம் எழுதிய காரணத்தால் அந்த 49 பேர்மீதும் தொடுக்கப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கினை பிரதமர் தலையிட்டு வாபஸ் வாங்கச் செய்ய வேண்டும். அதுதான் ஒரு ஜனநாயக நாட்டுக்கான நடவடிக்கையாக இருக்க முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
(குறள் 448)
"தவறு கண்டவிடத்துக் கடிந்து அறிவுரை கூறித் தடுப்பவரைத் துணையாகக் கொள்ளாத அரசன் கெடுக்கும் பகைவரின்றியே தானே கெட்டழிவான்" என்று தொலைநோக்கோடு கூறினார் திருவள்ளுவர்.
இன்றைக்கு மத்தியில் ஆட்சி லகானைப் பிடித்துள்ள பிஜேபி ஆட்சிக்கு குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நூற்றுக்கு நூறு துல்லியமாகவே இது பொருந்துகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மாற்றுக் கருத்துக்கு இடமில்லா விட்டால் அது ஜனநாயக நாடாக இருக்க முடியாது. எதேச்சதிகாரக் காடாக மாறுவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே.
பெரு மக்கள் 49 பேர் எழுதிய கடிதம்
கலைத்துறை, கல்வித்துறை, வரலாற்றுத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கற்றுத் துறை போன பெருமக்கள், அறிஞர்கள் 49 பேர் கையொப்பமிட்டு பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்குக் கடிதம் ஒன்றை விவரமாக எழுதியுள்ளனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலந்தொட்டு நாட்டில் நடைபெறும் மதத் தொடர்பான வன்முறைகள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகள், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவலங்கள், கொடுமைகள்  இவற்றை எல்லாம் புள்ளி விவ ரங்களோடு பட்டியலிட்டு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்?
மக்கள் நல அரசின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் பட்சத்தில் நல்லெண்ணக் கண் கொண்டு அதனைப் பார்த்து, ஆய்ந்து, உரிய நடவடிக்கைகளை ஆக்கப் பூர்வமாக எடுத்திருக்க வேண்டும் அல்லது அவர்களை நேரில் அழைத்துக் கூட விவாதித்திருக்க வேண்டும்.
ஆனால் நடந்ததோ அதற்கு நேர் மாறான நிட்டூரமான நடவடிக்கையாகும்.
பீகாரிலிருந்து யாரோ ஒரு வழக்குரைஞராம் - அவர் நீதிமன்றம் சென்று, பிரதமருக்குக் கடிதம் எழுதிய 49 பேர்கள்மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் - நீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டு வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டதாம். காவல்துறை - நாட்டின்மீது அக்கறை கொண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதிய பெரு மக்கள் 49 பேர் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துவிட்டது.
பிஜேபி பிரமுகர்கள் கூறும் சமாதானம் சரியானதா?
தேசத்  துரோக வழக்கைப் பதிவு செய்ய வேண் டும் என்று நீதிமன்றம் சொன்னதா? பொதுவாக வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று தானே நீதிமன்றம் கூறியது. அப்படியிருக்கும் பொழுது தேசத் துரோக வழக்கைப் பதிவு செய்தது காவல்துறை தானே.
நீதிமன்றம் சொன்னதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பேற்க முடியும் என்று பிஜேபி பிரமுகர்கள்  கூறும் சமாதானம் எப்படி சரியானதாக இருக்க முடியும்?
பிஜேபி ஆட்சியில் தன்னாட்சி உரிமை கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே!
செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர்
பொதுவாக உலக நாடுகளை வலம் வரும் இந்திய பிரதமர் செய்தியாளர்களைக்கூட சந்திப்பது கிடையாது. நாடாளுமன்ற கூட்டங்களிலும் பெரும்பாலும் பங்கேற்பதைத் தவிர்த்து வரக் கூடியவராகவே இருந்து வருவதும் வெளிப்படை.
ஜனநாயகத்திற்கான பண்புகளின் வேர்கள் அனைத்தும் மத்திய பிஜேபி ஆட்சியில் வெட்டப்பட்டு வருவது - நாட்டுக்கு நல்லதல்ல. இந்தப் போக்கு தொடர்ந்தால் பச்சையான எதேச்சதிக்காரத்தில்தான் நாட்டைக் கொண்டு சேர்க்கும்.
அதுவும் இரண்டாம் முறையும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி மிகப் பெரும்பான்மைப் பலத்தோடு அமைந்து விட்ட நிலையில், எதேச்சதிகாரத்தின் பாய்ச்சல் அதிகரித்து வருகிறது. நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வழக்கினை வாபஸ் பெறுக!
குறைந்தபட்சம் 49 பேர்கள்மீது திணிக்கப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கினைப் பிரதமர் தலையிட்டு விலக்கிக் கொள்ளச்செய்வதன் மூலமாகவாவது 'எங்களுக்கும் ஜனநாயக உணர்வு உண்டு' என்று காட்டிக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும். இந்தப் பிரச்சினை உலக நாடுகள் மத்தியிலும், இந்தியாவின் மதிப்பை மிகவும் கீழே தள்ளி விடும் - திருவள்ளுவரின் குறளை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
(குறள் 448)
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
- விடுதலை நாளேடு, 6.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக