சனி, 28 மார்ச், 2020

ரஜினி பூனைக்குட்டி வெளியில் வந்தது!

கலி.பூங்குன்றன்

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அளித்த பேட்டி 'இந்து தமிழ்' நாளேட்டில் (26.3.2020) வெளிவந்துள்ளது.

என்மீது காவிச் சாயம் பூச நினைக்காதீர்கள் என்று கூட அவர் சொன்னதுண்டு. அதே நேரத்தில் தாம் நடத்த இருப்பது "ஆன்மிக அரசியல்" என்று இன்னொரு பக்கத்தில் சொல்லிக் கொண்டும் வருகிறார்.

இதே ரஜினிகாந்த் 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளையொட்டி 12, 13 ஆகிய இரு நாள்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்?

கேள்வி: அரசியல் - ஆன்மிகம் ஒப்பிடுங்கள்?

ரஜினி பதில்: "ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் - கீரியும் மாதிரி. எதிர்த் திசையில் உள்ளவை"

என்றாரா இல்லையா?

அப்படி சொன்னவர்தான் இப்பொழுது 'ஆன்மிக அரசியல்' நடத்தப் போவதாகப் பேசியுள்ளார். அதாவது இவர் நடத்தப் போகும் அரசியல் என்பது பாம்பும் - கீரியுமாக, அசல் சண்டை அரசியலாக (சினிமாவில் சண்டைக் காட்சிதானே பிரமாதம்!) இருக்கும் - அப்படித்தானே!

ரஜினியை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்; அவ ரைப் பேச விட்டாலே போதும் - அவர் முகத்திரையை அவரே கிழித்துக் கொண்டு விடுவார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்தப் பயத்தில்தான் செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறாரோ!

சரி... 'டிஸ்கவரி' சேனல் பேட்டிக்கு வருவோம்.

1. இந்துக்களுக்கு ஒரு நாடு தான் உள்ளது. அது இந்தியா மட்டுமே என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் கூட்டமும், அவற்றின் அரசியல் வடிவமான பிஜேபியும் கூறி வரு வதைத்தான் அட்சரம் பிறழாமல் சொல்லுகிறார் ரஜினி.

இந்தியா 'இந்துக்களின் நாடு' என்று யார் சொன்னது என்பது முதற் கேள்வி. ஒரு மதம் என்று சொன்னால் அதனைத் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும், அதற்கென்று ஒரு மதநூலும் இருக்க வேண்டும்!

இந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும் இருக்க வேண்டும். வரையறைகள் இந்து மதத்துக்கு உண்டா?

இல்லை என்பது மட்டுமல்ல; முரண்பாடுகளின் மொத்த உருவமாக அல்லவா இந்து மதம் இருக்கிறது.

சங்கரர், மத்துவர், இராமானுஜர் என்பவர்கள் இந்து மத முன்னோடிகள் என்றால் இவர்களுக்குள் முரண் பாடுகள் ஏன்? (சங்கரர் என் கடவுளின் அவதாரங்கள் ஆயிற்றே!)

சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள்கிறாரா? ஜீயரை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?

ஜீயரின் வைணவத்தில் வடகலை-தென் கலைப் பிரிவுகள் ஏன்? அவர்களுக்குள் சண்டைகள் ஏன்? காஞ்சீபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரன் காலத்தில் இலண்டன் பிரிவி கவுன்சில் வரை போய் சந்தி சிரித்தது ஏன்?

"இந்து மதம் என்பது நாம் வைத்த பெயர் அல்லவே - வெள்ளைக்காரன் வைத்த பெயர்" என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறினாரே! இந்த இலட்சணத்தில் 'இந்து மதம்' எங்கே வந்து குதித்தது?

சரி... இந்து மதமே இருப்பதாக - வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சரி சமமாகத்தானே இருக்க வேண்டும்? இந்து மதத்தில் அப்படி இருக்கிறதா?

பிறப்பிலேயே பேதத்தை ஏற்படுத்தியவன் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகிய பிர்மா என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதே!

நான்கு வருணத்தையும் படைத்தவன் பிர்மா எனும் கடவுள் - பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணனைப் படைத்தான், பாதங்களிலிருந்து சூத்திரனைப் படைத் தான் என்று இந்து மதத்தின் முக்கிய நூல் என்று கூறப்படும் மனுதர்மம் கூறுகிறதே! (அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87).

சூத்திரன் என்றால் ஏழு வகைப்படுவான் என்று கூறி, அதில் ஒன்று விபசாரி மகன், இன்னொன்று பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் - என்று கூறப்பட்டுள்ளதே! (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415).

இதனை ஏற்றுக் கொள்கிறாரா ரஜினி? இந்த வருண வரிசையில் ரஜினிகாந்த் சூத்திரர் தானே.... அப்படி யென்றால்.... அவர் யார்?

இந்துக்களின் அய்ந்தாம் வேதம் என்று கீதையைச் சொல்லுகிறார்களே. அந்தக் கீதை 'பகவான்' கிருஷ் ணனால் அருளப்பட்டது என்றும் சொல்லுகிறார்களே... அந்தக் கீதை தான் என்ன சொல்லுகிறது?

"சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் - நான்கு வருணங் களையும் நானே படைத்தேன்" என்று 'பகவான்' கிருஷ் ணன் சொல்லுவதாகச் சொல்லவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32) என்று சொல்லுகிறதே!

இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இந்த இந்து மத நாடாகத்தான் இந்தியா ஆக வேண்டுமா? இந்த இந்துக்களுக்குத் தான் ஒரு நாடு இல்லை என்று ரஜினிகாந்த் கவலைப்படுகிறாரா?

ஜெகத் குரு என்று இந்து மதத்தில் கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி "தீண்டாமை க்ஷேமகரமானது" என்று கூறுகிறாரே! ("ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள்" இரண்டாம் பாகம்).

டிஸ்கவரி சேனலில் சகோதரத்துவத்தைப் பற்றி ரஜினி கூறியுள்ளாரே - தீண்டாமை க்ஷேமகரமானது என்பதுதான் சகோதரத்துவத்திற்கான அடையாளமா?

இந்தியா இந்துக்களின் நாடு என்று சொல்லுவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதம் என்பது ரஜினிக்குத் தெரியுமா?

முன்பு அப்படி இருந்தது - இப்பொழுது இந்து மதம் மாறிவிட்டது என்று சொல்லப் போகிறாரா? ஓர் இந்துக் கோயிலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அதற்குரிய பயிற்சியும், கல்வியும் பெற்றால் அர்ச்சகரா கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து சங்கராச்சாரியர்களும் ஜீயர்களும் உச்சநீதி மன்றம் செல்கிறாரார்களே - இது குறித்து ரஜினியின் கருத்து என்ன?

சூத்திரன் தொட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். சாமி செத்துப் போய விடும் என்று எங்களின் வைகனாச ஆகமம் சொல்லுகிறது என்று உச்சநீதிமன்றத்திலே ஆதாரம் காட்டிப் பேசினார்களே. இதுதான் இந்து மதத் தின் சகோதரத்துவம் என்பதற்கான அடையாளமா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது ஓதுவார் திருவாசகம் பாடினார் என்பதற் காகக் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைத்தனரே! (கல்கி, 4.6.2000).

இவற்றையெல்லாம் அறிந்துதான் ரஜினி - ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி கூறும் இந்து நாட்டைப் பற்றி டிஸ்கவரி சேனலில் பேட்டி கொடுத்தாரா?

திலகர் மறைந்தபோது, அவரது உடலைச் சுமக்க காந்தியார் சென்றபோது, 'ஒரு பிராமணன் உடலை ஒரு சூத்திரன் தொடக் கூடாது' என்று கூறி காந்தியாரையே அவமதித்த வரலாறு தெரியுமா ரஜினிக்கு?

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாருக்கே இந்து மதத்தில் இந்த நிலை என்பதை ரஜினிகாந்த் உணர்வாரா? திருந்துவாரா?

2. எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்கி றோம், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர் களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே என்று பேட்டி கொடுத்திருப்பது நியாயந்தானா?

450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த கூட்டம் தானே இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டு வருகிறது. இது நியாயம்தான் என்று கூறுகிறாரா திருவாளர் ரஜினி?

பூரிஜெகன்நாதர் கோயில் உண்மையில் புத்தர் கோயில்தான் என்று விவேகானந்தர் கூறியது குறித்து கருத்தென்ன?

பசுவதைத் தடை என்ற பெயராலே ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே அகில இந்திய காங்கிரசின் தலைவர் காமராசரை தீயிட் டுக் கொளுத்தியவர்கள் யார்? (தி.மு.க. தொண்டர் ஒருவரால் தப்பிப் பிழைத்தார்). இன்றைய பிஜேபியின் பழைய பெயரான ஜனசங்கத்தைச் சேர்ந்த வர்களும், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர் களும், நிர்வாண சாமியார்களும், சங்கராச் சாரியார் களும் தானே!

காமராசரைப் பற்றி பெருமையாகப் பேசும் திருவா ளர் ரஜினி - காமராசருக்கு ஏற்பட்ட இந்த நிலையைத் தெரிந்த பிறகும் இந்து மதத்தின் சகிப்புத் தன்மையை தலையில் தூக்கி வைத்து மெச்சப் போகிறாரா?

3. இந்தியாவின் கலாச்சாரம் குறித்தும் கருத்து சொல்லி இருக்கிறார். இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரம் இருக்கிறதா? பன்மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் தான் இந்தியா -  இந்தியா ஒரே நாடல்ல!

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வீடு வரை மாறுபாடு கொண்ட பல கோடி மக்கள் வாழும் துணைக் கண்டமே! துப்பாக்கி முனையில் வெள்ளைக்காரர்களால் நிர் வாக வசதிக்காக உண்டாக்கப்பட்டது தான் இந்தியா!

4. பொருளாதார ரீதியான சமத்துவம் பற்றியும் பேசு கிறாரே - ஒருவன் ஏழையாகவும், ஒருவன் பணக்கார னாகவும் இருப்பதற்குக் காரணம் 'கர்மப்பலன்' எனும் இந்து மதத் தத்துவத்தை ஏற்கிறாரா ரஜினி?

எல்லாம் புரிந்து கொண்டுதான் ரஜினிகாந்த் பேசுகிறாரா?

புரியாமல்தான் பேசுகிறார் என்றால் இப்பொழு தாவது புரிந்து கொள்ளட்டும்!

புரிந்து கொண்டுதான் பேசுகிறார் என்றால் - இவரை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 27.3.20

புதன், 25 மார்ச், 2020

‘‘ஏப்ரல் 14 ஆம் தேதிவரை மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கவேண்டும்'' என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அரசின் முன்னெச்சரிக்கை

நடவடிக்கைகளைக் கடைப்பிடித்ததால் உயிரிழப்புகள் மிகக் குறைவு!

பல்கலைக் கழகங்களில் மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு

ஆய்வினை ஊக்கப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்!

ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அனை வரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற  பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; இத்தாலி போன்ற நாடுகளில் அரசின் உத்த ரவைக் கடைப்பிடிக்காததால் சீனாவை மிஞ்சும் அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன; ஆனால், தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்த தால் மிகக் குறைவான உயிரிழப்பு களே ஏற்பட்டிருக்கின்றன  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பிரதமரின் 21  நாள்கள் வீட்டுக்குள் இருப் பது மிக அவசியம் என்பதை வரவேற்கிறோம்.

மருத்துவர்களின் அறிவுரை - உலக சுகாதார நிறுவனம் (WHO) போன்ற அமைப்பு கள் இதுபோல் தீவிரமான அவசர நடவடிக் கைகள் மிகவும் தேவை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மருத்துவர்களும் - அரசுகளும் சொன்னதைக் கேட்காததால்....

இத்தாலி போன்ற நாடுகளில் மக்களில் பலர் முதலில் மருத்துவர்களும், அந்நாட்டு அரசு களும் சொன்னதைக் கேட்டு நடக்காமல், கூட்டம் கூட்டமாகக் கூடியதால் சீனாவையும் மிஞ்சும் அளவுக்குக் கரோனா நோய் தாக்க மும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

தடுப்பு முன்னெச்சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால்,

மிகவும் குறைவான இழப்புகளே!

தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் இதில் தொடக்கத்திலேயே தடுப்பு முன்னெச் சரிக்கை முறைகளைச் சரியாகக் கண்டறிந்து நடந்துகொண்டதால், மிகவும் குறைவான இழப்புகளே ஏற்பட்டு முற்றுப் புள்ளியை நோக்கி நடைபோடுகின்றன.

நமது நாடு பெரும் அளவுக்கு 130 கோடி மக்களைக் கொண்ட நாடு. வறுமைக் கோட் டுக்குக் கீழே உள்ள மக்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து வாழும் நிலையில், 21 நாள்கள் வீட்டுக்குள் முடங்கும் தேவையான ஆணை யைப் பிறப்பித்த பிரதமர், ஏழைகளின் அன்றாட உணவு மற்றும் வசதிகள்பற்றியும் அந்த உரையில் அறிவித்திருந்தால், அதனை செயல்படுத்துவதற்கு அச்சத்தை ஏற்படுத்தி யிருக்காது.

காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்!

இதற்கு உடனடியாக மத்திய அரசு எவ் வகையில் உதவுகிறது, ஏழை - எளிய மக் களுக்கு நிம்மதியாக முடங்கிக் கிடக்க என்னென்ன முறையில் உதவிகள் - உணவு வழங்கல் முதலியன கிடைக்கும் என்பதையும் காலந்தாழ்த்தாமல் அறிவிப்பது முக்கியம்.

மக்கள் மீண்டும் கூடாமல் இருக்க நகரும் உணவு விடுதிகள்மூலம் விநியோகம் செய்யும் ஒரு ஏற்பாட்டைச் செய்வது அவசர அவசியம்!

அதுபோலவே, வீட்டுக்கு வீடு விநியோகம் செய்யும் காய்கறி, அரிசி முதலிய அத்தியா வசியப் பொருள்கள் தரும் திட்டமும்கூடச் செய்தால் நலம்!

ராணுவத்தின்  DRDO (Defence Research Development Organisation) போன்றவற்றி னையும் முழு வீச்சில் பயன்படுத்தி, புதிய உதவிக் கருவிகளையோ, மருந்தினையோகூட கண்டுபிடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும்

டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்த்து, நாடு தழுவிய அளவில் - கிராமங்களிலும்கூட மருத்துவ வசதிகள் கிடைக்க நீண்ட காலத் திட்டத்தையும், மத்திய - மாநில அரசுகள் யோசிக்கவேண்டும். ‘நீட்', ‘நெக்ஸ்ட்' என்ற இந்தத் தேர்வு முறைகள் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தராததால், துணிவுடன் அவற்றை ரத்து செய்து, பழைய அந்தந்த மாநில தேர்வு முறையைப் புகுத்த மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

பல பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிக் கென நிதி ஒதுக்கீடு செய்து, மருந்தியல் துறையில் புதிய தொற்றுநோய்த் தடுப்பு ஆய்வினை ஊக்கப்படுத்திட உதவவேண்டும்!

சோதனைகளிலிருந்துதான் படிப்பினையைப் பெற முடியும்!

எந்த சோதனைகளிலிருந்தும் படிப்பினைப் பெற்று, அதற்கேற்ப வீண் பிடிவாதமின்றி எது வெற்றிகரமானதோ அதனை அமல்படுத்த சிறிதும் கூச்சநாச்சமே கொள்ளக்கூடாது!

மத்திய - மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.3.2020


சனி, 21 மார்ச், 2020

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை செய்யப்படாதது ஏன்?

நிர்பயா பாலியல் வன்கொலை: குற்றவாளிகளுக்குத் தூக்கு வரவேற்கத்தக்கதே!

பாபர் மசூதி குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிவது எப்படி?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பேரறிவாளன் உள்பட எழுவர் விடுதலை செய்யப்படாதது ஏன்?

மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாமீதான பாலியல் வன்கொலை குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது வரவேற்கத் தக்கது என்றும், தீர்ப்புகள் கால தாமதத்தோடு அளிக்கப்படுவதும்,  ராஜீவ் கொலை வழக்கில்

சம்பந்தப்படுத்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்த தீர்ப்புக்குப் பிறகும் சிறையில் உழலுவதும் எப்படி? இத்தகு தாமதங்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்  என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டில்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை - கொலை  வழக்கில் குற்ற வாளிகள் நால்வருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, அது நேற்று (20.3.2020) விடியற்காலை 5.30 மணிக்கு நிறைவேற்ற வும்பட்டது.

தூக்குத் தண்டனைபற்றிய கருத்து

தூக்குத் தண்டனை கூடாது என்று ஒரு பக்கம் சர்ச்சை நடந்துகொண்டு இருந்தாலும், அந்தச் சட்டம் இருக்கும் வரைக்கும், அதனைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட முடியாத ஒன்றே!

அதிலும் நிர்பயா மீது கேவலமான - அருவருப்பான - மனித சமூகம் வெட்கித் தலைகுனியத்தக்க செயல்களில் ஈடுபட்ட கயவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக் கப்பட்டதை வரவேற்கத்தான் வேண்டும்.

பெண் என்றால் போதைப் பொருளா?

பெண் என்றால் ஒரு போதைப் பொருள் - காமப் பதுமை என்று நினைக்கும் ஆண் ஆதிக்கத்துக்கும் - பெண்கள் படுக்கை யறைக்கு உரியவர்கள் என்று கூறும் மனுதர்மச் சிந்தனைக்கும்  கொடுக்கப்பட்ட மரண தண்டனையாகவே இதனைக் கருதவேண்டும்.

இதில் என்ன கொடுமை என்றால், இந்தத் தீர்ப்புக் கிடைப்பதற்குக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன என்பது தான். தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லிக் கொண்டு இருக்கிறோமே தவிர, செயல்பாட்டில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பாகவே இருந்து வருகிறது. இதற்கொரு முடிவு எட்டப்பட்டாக வேண்டும்.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்

ராஜ நடைபோட்டுத் திரிகிறார்களே!

ஒரு பட்டப்பகலில் பாபர் மசூதி இடிக் கப்பட்டு 28 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள். ஏன், மத்திய அமைச்சர்களாகவும்கூட அலங்காரமாக வாழும் அவலத்தை நினைத்தால், ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

‘‘ஒரு குலத்துக்கொரு நீதி'' என்னும் மனுநீதி மாறுவேடம் போட்டுத் திரிவதாகத்தான் கருதவேண்டும்.

ராஜீவ் கொலை வழக்கும் -

உண்மை நிலையும்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 28 ஆண்டு காலம் சிறையிலே உழலுகிறார்கள்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ், ஓய்வுக்குப் பின் அந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளாரே!

‘இந்தத் தீர்ப்பு வழங்கப்படும்போது எங் களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்தது' என்று கூறினாரே!

விசாரணை அதிகாரியாக இருந்த சி.பி.அய். அதிகாரி தியாகராசன், ‘‘பேரறிவாளன் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்தோம்'' என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளாரே!

இரண்டு வகை தண்டனையா?

இதற்கு மேலும் உச்சநீதிமன்றமும் ஏழு பேர்கள் விடுவிக்கப்படலாம் என்று கூறிவிட்டது; தமிழ்நாடு அரசும் அமைச்சரவையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும், இன்னும் விடுதலை செய்யப் படவில்லை.

குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களுக்கு இரு வகையான தண்டனையா? 28 ஆண்டு சிறை மற்றும் தூக்குத் தண்டனையா?

ஒரு பக்கத்தில் தாமதிக்கப்பட்ட தீர்ப்பு - இன்னொரு பக்கத்தில் தாமதிக்கப்பட்ட விடுதலையா? இதுதான் இந்திய நாட்டின் நான்குத் தூண்களுள் இரண்டு முக்கிய தூண்களின் நிலைப்பாடா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

குரல் கொடுக்கட்டும்!

நாடாளுமன்றத்தில் இதற்கொரு தீர்வு காண கட்சிக்கு அப்பாற்பட்டு உறுப்பினர்கள் குரல் கொடுக்கட்டும். குற்றவாளிகள் தப்பக் கூடாது - அதேநேரத்தில் நிரபராதிகள் தண் டிக்கப்படவும் கூடாது - தீர்ப்புகளுக்கான கால வரையறையும் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.3.2020

கடவுள் - மதக்கேடு!

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உல கையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள் ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற் போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 276 பேரைப் பாதித்துள்ளது.

கரோனாவால் சீனா வுக்கு அடுத்து கிழக்கு ஆசி யாவில் அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடு தென் கொரியா ஆகும். தென் கொரியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் கரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச் சையளிக்கப்பட்டு வருகின் றனர். இந்தச் சூழலில் தென் கொரியாவின் சியோங்னம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த் தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 46 பேருக்கு கரோனா இருப்பதை அதி காரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுப்ப தற்காகத் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பிரார்த்தனை ஒன்றில் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அப் போது அங்கு வந்திருந்த வர்களுக்கு ‘புனித நீர்' வழங்கப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் மூலம் அனை வருக்கும் இந்தப் புனித நீர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் அந்த ‘புனிதநீரைக்' குடித்தவர் களில் 46 பேருக்கும் கரோனா இருப்பது தற் போது கண்டறியப்பட்டுள் ளது. இந்த தேவாலயத்தின் போதகர் மற்றும் அவரது மனைவியும் இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 90 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மேலும் பல ருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனைகளைத் தீவிரப் படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்த தேவாலய போதகர் கிம், "இங்கு நடந்தது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அனைத்து குற்றச்சாட்டு களுக்கும் நான்தான் பொறுப்பு" எனத் தெரிவித் துள்ளார்

இந்தோனேசிய அதிபர் - "பக்கத்து நாடுகளில் எல் லாம் 'கரோனா' பரவிய நிலையில் நம் நாட்டில் மட்டும் பரவாமைக்குக் கார ணம் கடவுளின் கருணையே கருணை" என்று பிரார்த்த னைக் கூட்டத்தில் கூறிய மறுநாளே, மூவர் கரோ னாவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்தோனேசிய சுகாதாரத்துறை அறிவித்தது தெரிந்ததே!

மதமும் கட வுளும் மக்களுக்கு கேடு என்பதற்கு இன்னும் ஆதார மும் தேவையோ!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 21.3.20

வெள்ளி, 20 மார்ச், 2020

டாக்டர் கிருபாநிதி - நினைவிருக்கிறதா?


ஏற்கெனவே தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவராக தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் கிருபாநிதி நியமிக்கப் பட்டாரே - அவரை அவமானப்படுத்தி தானே வெளியேற்றினீர்கள் - கடைசியில் திமுகவுக்குத்தானே போனார்.

பா.ஜ.க. தேசிய செயலாளரான இல.கணேசன் தன் கையைப் பிடித்து முறுக்கினார் என்று டாக்டர் கிருபாநிதி பேட்டியே கொடுத்தாரே. அப்பொழுதே 'விடுதலை' அதை வெளியிட்டு பிஜேபியின் உயர் ஜாதித் திமிர் முகத்திரையைக் கிழித்ததே - மக்கள் மறந்து போயிருப்பார்கள் என்ற நினைப்பா?

நினைவூட்டக் கருஞ்சட்டைக்காரன் இருக்கிறான் - எச்சரிக்கை.

- விடுதலை நாளேடு, 18.3.20


பணிகள் காத்திருக்கின்றன - பணிகளைத் தொடருவோம்!

அன்னையார் மறைவிற்குப் பிறகு கழகத்திற்கு முழுப் பொறுப்பேற்று 42 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்

*  ‘‘குருவியின் தலையில் பனங்காய்தான்'' என்றாலும் - தோழர்களின் தோள்களின் துணையால், பணிகள் சுமையல்ல; சுகமே!

அன்னை மணியம்மையார் மறைந்த நிலையில்,  கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று 42 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், அய்யா - அம்மா பணிகளைத் தொடர் வதிலும், சவால்களைச் சந்திப்பதிலும், உரிமைகளைப் பெறுவதிலும், சாதனைகளிலும் பெருமிதம் கொள்ளும் அளவுக்குப் பணிகள் நடந்துள்ளன - இவையெல்லாம் தோன்றாத் துணையாக இருக்கும் தோழர்களின் ஒத்துழைப்பால், கருஞ்சட்டைத் தோழர் களின் களப்பணியால் என்பதை நன்றி உணர்வோடு நினைவு கூறி,  காத்திருக்கும் பணிகளைத் தொடருவோம்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசமிகு கழகக் கொள்கைக் குடும் பத்தவர்களே,

இன்று (18.3.2020) எனது தனிப் பொறுப்புக்கு ஆளாக்கிய பணிகளின் 42 ஆவது ஆண்டு தொடக்கம் ஆகும்.

நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் இயற்கையெய்தி அவர்கள் விட்ட அய்யா பணிகளை முடிக்கும் கடமை இந்த சிறிய ‘‘குருவியின் தலையில் பனங்காயாக'' விழுந்தது.

‘‘குருவி தலையில் பனங்காயா?''

குருவி தாங்குமா என்ற அச்சமும், அய்யமும் பலருக்கும் இருந்தது; மக்கள் தலைவராக இருந்து மறைந்த மதிப்பிற்குரிய ஜி.கே.மூப்பனார் அவர்கள் குடந்தையில் நமது மாநாடு மூர்த்தி கலையரங்கில் முன்பு நடந்தபோது குறிப்பிட்டு,  ‘இந்தக் குருவி அந்தப் பனங்காய் போன்ற பெருங்கட மையைச் சரியாகவே செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது' என்று தட்டிக் கொடுத்து, இலட்சியப் பயணத்தை அய்யா - அம்மா காலத்திற்குப் பின் முன்னெடுத்து முனைப்புடன் செய்திட உதவியது.

இந்த சிறு குருவியால் அந்த பெரும் பனங்காயைத் தாங்கி நடத்திட முடி வதற்குரிய இரகசியம் என்ன தெரியுமா?

குருவியின் பலம் அல்ல - தாங்கும் தோழர்களின் தோள்கள்!

குருவியின் பலம் அல்ல; இந்தக் குருவி அமர்ந்துள்ள தோள்கள் தந்தை பெரியாரின், அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் தோள்கள் மட்டுமல்ல, ‘‘கடமையாற்றுவதில் துறவிக்கும் மேலான தொண்டர்கள்'' என்ற அய்யாவால் பெருமைப்பட்ட நமது கருஞ்சட்டை கழக வீரர்களின் தோள்களும்கூட! எனவே ‘குருவிக்கு சுமையல்ல; சுகமே!'

எனவேதான், எத்தனை எதிர்ப்புகள் கடல்போல -

எத்தனைத் துரோகம் மலைபோல!

எத்தனை அவதூறுகள் புயல்போல - வீசியது, நாளையும் வீசும்; வீசினாலும், நம் பயணத்தைத் தடுத்திட முடியாத வெற்றிப் பயணமாகவே ஒவ்வொரு ஆண்டும் சரித்திர சாதனை செய்து வருகிறோம்!

நமது இயக்கம் எப்படிப்பட்டது?

நம் இயக்கம் - ஒரு கட்சி அல்ல - சதா இயங்கிக் கொண்டே இருக்கும் உயிரோட்ட இயக்கம் ஆகும்.

பன்முகச் செயற்பாடுகள் - களங்கள் பற்பல!

சலிப்பில்லை! களைப்பில்லை!!

ஊடகங்களும், பார்ப்பனர் ஏடுகளும் அவர்களுக்கு ஆலவட்டம் சுற்றும் சுற்றுக் கோள்களான வேறு பல ஊடகங்களும் நம் செயற்பாடுகளை திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும், அன்றாடம் மக்களை நேரடி யாகச் சந்தித்து நம் கொள்கைகளை விளக்கிடும் வாய்ப்பை வழமையாக்கிக் கொண்ட நமக்கு அது ஒரு பாதிப்பில்லை. பழக்கப்பட்டதுதான்!

விளம்பர வெளிச்சத்தாலா சுவாசிப்பது நடைபெறுகிறது? இல்லையே! மூக்குத் தெரிகிறது; சுவாசிப்பது அனைவர் காதிலும் விழுகிறதா என்பதா முக்கியம்?

எப்படிப்பட்ட இயக்கம்?

நம் இயக்கம் ஓர் திறந்த புத்தகம்!

நம் இயக்கம் வெளிப்படைத் தன்மை கொண்ட நிகரற்ற இயக்கம்.

ரகசிய இயக்கமோ - பயங்கரவாத இயக்கமோ அல்ல. தீவிரவாத இயக்கமோ, வன்முறை இயக்கமோ அல்ல.

மாறாக, மக்கள் மனதை மாற்றி - மனதில் ‘புகுந்து' அதை போராட்டக் களமாக்கி, ரத்தம் சிந்தாமல், ஆயுதம் ஏந்தாமல், அமைதிவழி அறிவியக்கப் புரட்சியை ஏற்படுத்திவரும் தனித்தன்மையான அதி சய இயக்கம்! நன்றி பாராட்டாத இயக்க மும்கூட!

இதனை எளிதில் தோற்கடிக்கலாம் என்று கனவு கண்டவர்களின் - மனப்பால் குடித்தவர்களின் - இன எதிரிகளின் அந்த முயற்சி தோற்றுப்போன வரலாறு - மறுக்கப்பட முடியாத ஒன்றே!

அறிவுப்போர் என்பதால், அதன் வெற்றிக்கனியைப் பறிக்க அவசரப்பட்டு விட முடியாது என்பதும் வரலாற்று உண்மை!

ஆட்சிக்குப் போகாமலேயே ஆட்சி செய்த அறிவு ஆசான் கண்ட இந்த அறிவியக்கத்தின் சாதனை ஆற்றொழுக்கான அருவியின் ஓட்டமாகும்.

42 ஆண்டுகள் - திரும்பிப் பார்க்கலாமா?

42 ஆம் ஆண்டுப் பொறுப்பில் வரும் இன்று சற்றே திரும்பிப் பார்ப்போமா?

பிரச்சாரக் களம் - போராட்டக் களம் - தந்தை பெரியார் - அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார் உருவாக்கிய அறப் பணிகள் அனைத்துத் துறையும் அப்பழுக்கின்றி - தோழர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பால், கூட்டுப் பணித் தோழர்களின் நாணயம்மிக்க பணித் திறத்தாலும், சீரோடும், சிறப்போடும், தொய்வின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன!

சில எடுத்துக்காட்டுகள் இதோ:

பிரச்சாரக் களம்:

2019 மார்ச் 18 முதல்......... ஓராண்டில்...

27.8.2019 - திராவிடர் கழகப் பவள விழா மாநாடு சேலத்தில் - மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்ட மாநாடு - தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன்!

அமெரிக்காவில்...

பெரியார் பன்னாட்டு அமைப்பும், அமெரிக்க மனிதநேய அமைப்பும் இணைந்து வாஷிங்டன் அருகில் உள்ள மேரிலாண்டில் இரண்டு நாள் மாநாடு.

அதையொட்டி தொடர்ந்து நான் கலந்து கொண்ட பெரியார் விழாக்கள் -  பாஸ்டனில், சிகாகோவில், கலிபோர்னியாவில் என்று அமெரிக்காவில் பெரியார்தம் கருத்து மழை அடைமொழியாக நடந்ததே!

16.11.2019 இல் விருதுநகரில் பகுத்தறி வாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு.

போராட்டக் களத்தில்...

7.02.2019 இல் மனுதர்ம எரிப்புப் போராட்டம்!

16.3.2019 - பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலின வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் (திராவிடர் கழக மகளிரணியினர் ஏற்பாடு).

15.6.2019 - மாநில உரிமைகள், சமூக நீதிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத, ‘நீட்' தேர்வு திணிப்புகளுக்கு எதிரான ஆர்ப் பாட்டம் (தஞ்சையில்).

1.10.2019 - அண்ணா பல்கலைக் கழ கத்தில் - பொறியியல் கல்வி பாடத் திட்டத் தில் பகவத் கீதையா? கண்டன ஆர்ப் பாட்டம்.

25.2.2020 - பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் என்பதில் இந்துத்துவாவை நுழைக்கும் ‘ஹரேராமா ஹரேகிருஷ்ணா' இயக்கத்தையும் (இஸ்கான்), அதனை மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு அடி பணிந்து செயல்படுத்தத் துடிக்கும் தமிழக அரசின் போக்கைக் கண்டித்தும் போராட் டம். (இரண்டும் திராவிட மாணவர் கழக அணியினர் முனைப்புடன் செய்தனர்).

சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்மூலம்...

2019 ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் டிசம்பர் 31 ஆம் தேதிவரை நடைபெற்ற சுயமரியாதை இணையேற்பு நிகழ்வுகள் மொத்தம் - 461.

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 420

இதில், வேற்று மாநிலத்தவர் இணையேற்பு நிகழ்வுகள் - 13

பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் - 9

மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 19

2020 ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் மார்ச் மாதம் 16 ஆம் தேதிவரை நடைபெற்ற இணையேற்பு நிகழ்வுகள் மொத்தம் - 118

ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் - 110

இதில், வேற்று மாநிலத்தவர் இணை யேற்பு நிகழ்வுகள் - 6

மணமுறிவு பெற்ற இணையேற்பு நிகழ்வுகள் - 5

பார்ப்பனர் இணையேற்பு நிகழ்வுகள் - 2 ம் அடங்கும்

இப்படி தொடர் சங்கிலிகளாக செயல் பாடுகள்!

நீட் தேர்வு போராட்டம் - கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அறப்பணிகள் - அறிவுப் பணிகள் - தொடர் பணிகள்.

கிராமங்களில் மருத்துவ சேவை முகாம் - புற்றுநோய் கண்டறியும் முக்கிய பணிகள்.

புத்தகக் கண்காட்சி -

புதிய வெளியீடுகள் அறிமுகமும், பரப் புதலும்.

‘உண்மை' ஏட்டின் பொன்விழாக் கொண்டாட்டம்

மார்ச் 16 இல் அன்னையார் நூற்றாண்டு நிறைவு - சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு அஞ்சல் தலை, நூற்றாண்டு மலர், படக்கதை நூல், அன்னையாரின் தொண்டு பற்றிய பிரபல கவிஞர்கள் இசைப் பாடல் ஒலிநாடா வெளியீடு.

பயணம் தொடர்கிறது....

இப்படி அடைமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது. அத்தனைக்கும் காரணம், கட்சி, ஜாதி, மதங்கள் கடந்து பெரிதும் நம்மை ஊக்கப்படுத்துவதால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

இமை கொட்டாத போர் வீரர்களாக களத்தில் நிற்கும் நம் கருஞ்சட்டை உறவு களுக்கும், தொண்டறத் துறவுகளுக்கும், எமது தலைதாழ்ந்த நன்றி! நன்றி!!

பயணம் தொடர்கிறது -

பணிகள் காத்திருக்கின்றன!

அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

18.3.2020


கடவுள்கள் விளம்பர 'மாடல்களா?'

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான ஜம்மு வைஸ்ணவி தேவி சிலைக் கோவில், உஜ்ஜைன் காலபைரவர் சிலை,உத்தராகன் ஜுவாலா தேவி சிலை. கொல்கத்தா காளிகா தேவிசிலை, மோடிக்கு மிகவும் பிடித்த வாரணாசி சங்கடமோர்ச்சன் கோவில்அனுமான் சிலை. , இந்தூர் பைரவி தேவி சிலை, பூனே தகுடு சேட் கோவில் பிள்ளையார் சிலை, மகாகாலேஷ்வர் கோவில் லிங்கம், மற்றும் சோம்புரா சிவலிங்க சிலை என அனைத்திற்கும் முகத்தில் முகக்கவசம் அணிவித்து விட்டார்கள். இந்த அனைத்து கோவில் சிலைகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாம். இக்கோவில்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.  சிலைகளுக்கு முகக்கவசம் குறித்து அந்த அந்த கோவில் நிர்வாகங்கள் கூறியதாவது: மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கவே இந்த  சிலைகளுக்கு முகக்கவசம் அணிய உத்தரவிட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். பரவாயில்லை முதல் முதலாக இந்த சிலை ஒரு நல்ல காரியத்திற்கு பயன்பட்டுள்ளது என்பது ஒருபுறம் இருக்கட்டும் - சாமி சிலைகளே சினிமா நட்சத்திரங்களின் பாணியில் விளம்பர மாடலுக்குப்  பயன்படுகிறதே - இதுதான் சாமிகளின் யோக்கியதைத்  தெரிந்து கொள்வீர்.

- விடுதலை நாளேடு, 20.3.20

குற்றங்களைத் தாங்களே செய்துவிட்டு பிறர்மீது பழி சுமத்தும் இந்து முன்னணி வகையறாக்களின் வஞ்சக நாடகங்கள் எத்தனை! எத்தனை!!

திருப்பூர் - தென்காசி - சதுமுகை - கோபி என்று அடுக்கடுக்கான மோசடி நடவடிக்கைகளைப் பாரீர்!

‘இந்து' என்பதன் யோக்கியதை இதுதானா? இந்து ராஜ்ஜியம் வந்தால் எத்தகைய

அபாயம் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!

இந்து முன்னணியினர் குற்ற செயல்களை தாங்களே சோடனை செய்து அரங்கேற்றி, அவற்றை இஸ்லாமியர்கள்மீது பழி சுமத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி, ‘இந்து' மனப்பான்மை என்பது எத்தகைய குரூரமானது; அவர்கள் கூறும் இந்துராஜ்ஜியம் வந்தால் நாடு எத்தகைய அபாய நிலைக்கு ஆளாகும் என்பதையும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்து மதம் என்பது வேறு; இந்துத்துவா என்பது வேறு என்றெல்லாம் கதைப்பார்கள். கேட்டால் உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது - இந்துத்துவா ஒரு வாழ்க்கை முறை என்றெல்லாம் பசப்புவார்கள்.

‘இந்து' என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள்

‘இந்து' என்பதற்கு நேரிடையாகப் பதில் சொல்ல வக்கற்றவர்களின் பேச்சு இது.

இந்து ராஜ்ஜியத்தை (ராஷ்டிரா) உண் டாக்கப் போகிறோம் என்கிறார்கள் - இப்படி சொல்பவர்கள் - பல பெயர்களில் நடமாடவும் செய்கிறார்கள்.

இந்து முன்னணி, இந்து மகாசபா, இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், பி.ஜே.பி. என்று பல்வேறு பெயர்களைச் சூட்டிக் கொள்வார்கள். இவர்களிடையே உறுப்பினர் முறை என்பது கிடையாது; காரணம் குற்றப் பின்னணியும், குற்றச் செயல்களிலும் ஈடுபடும் போக்கையும் கொண்ட இவர்கள் தப்பித்துக் கொள்ள இப்படியொரு தந்திரமான வழியை, யுக்தி யைக் கையாளுகிறார்கள். காந்தியாரைச் சுட்டுக்கொன்றவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றால், இல்லை, இல்லை, அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல என்று சாதிக்க முற்படுவ தில்லையா?

ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு...

இப்பொழுது பி.ஜே.பி. மத்தியிலும், சில மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் வந்த நிலையில், பி.ஜே.பி. அதன் சங் பரிவார் களிடையே, அமைப்புகளில், பொறுப்புகளை, பதவிகளைப் பெறுவதற்குப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர் - இலாபம் கருதி!

தங்கள் அமைப்புகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கும், பொதுமக்கள் மத்தியில் பிர பல்யம் அடைவதற்கும் சில தந்திரமான வேலைகளில் ஈடுபடுவது அம்பலத்துக்கு, வெளிச்சத்துக்கு அதிகாரப்பூர்வமாகவே வெளிவந்துவிட்டது.

திருப்பூரில் என்ன நடந்தது?

நேற்று (19.3.2020) வெளிவந்த ஒரு தகவல்:

1. திருப்பூரைச் சேர்ந்த - இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நந்து என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது எலக்ட்ரிக் கடையை மூடிவிட்டு வீடு திரும் பும்போது தம்மை இசுலாமியர்கள் தாக்கிய தாகவும், தாக்கியபோது, ‘அல்லாஹ் அக்பர்' என்று கோஷம் போட்டுத் தாக்கியதாகவும், தங்களை இந்து என்று ஏமாற்றிட அவர்கள் காவி வேட்டி கட்டியிருந்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியது காவல் துறை - இந்த ஆசாமி நடத்தியது, கபட நாடகம் என்பது அம்பலத்துக்கு வந்தது.

தாம் சேர்ந்த இந்து மக்கள் கட்சியில் செல்வாக்குப் பெறுவதற்காக தம்மை நந்து கத்தியால் கிழிக்கக் கூறியதாகவும், அவ்வாறு தான் செய்ததாகவும் நந்துவின் ஓட்டுநர் இராமமூர்த்தி காவல்துறையிடம் உண்மை யைக் கக்கிவிட்டார்.

அதவத்தூரில் நடந்தது என்ன?

2. திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன் றியம், அதவத்தூரில் ஒரு நாடகம்; அக்கிரா மத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டட ஒப்பந்தக்காரர் பணியிலும் ஈடுபட்டு வருபவர். ஆறு மாதங் களுக்குமுன் இந்து முன்னணி அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மூன்று மாதங்களுக்குமுன் இந்து முன்ன ணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராக வும் ஆனார்.

5.3.2020 இரவு 2 மணியளவில் அவர் திருச்சி - சோமரசம்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தனது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் வாகனத்திற்கு யாரோ சிலர் தீ வைத்துவிட்டனர் என்பதுதான் அந்தப் புகார். அப்படி தீ வைத்தவர்கள் இந்து மதத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர் என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகார் கொடுத்ததோடு சில இந்து முன் னணி நண்பர்களை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் பார்த்தபோதுதான் குட்டு அம்பலமானது.

புகார் கொடுத்த சக்திவேல், அவரது கூட் டாளியான மற்றொரு சக்திவேல், முகேஷ் ஆகியோர் இணைந்தே பெட்ரோல் வாங்கி வந்து மோட்டார் பைக்கைக் கொளுத்தியது அம்பலத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் உள்பட மூவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய இழிவான, தந்திரமான செயல் பாடுகள் என்பது புதியன அல்ல; இது மாதிரி யான கபட நாடகங்களை இதற்கு முன்பும் அரங்கேற்றியும் உள்ளனர்.

சத்தியமங்கலத்தில் சதி!

3. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தை அடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமியின் சிலை கீழே தள்ளப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்தபோது, அதனைச் செய்தவர்கள் அவ்வூரைச் சேர்ந்த மஞ்சநாதன் (வயது 17), செல்வக்குமார் (வயது 23) ஆகியோர் என்றும், அவர்கள் இருவரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்; திராவி டர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழி யைப் போடுவதுதான் அவர்களின் நோக்கம் என்ற குட்டு உடைபட்டது (‘தி இந்து', 18.2.2002).

தென்காசியில் ‘அரங்கேற்றம்!'

4. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அவலம் ஒன்று - அது நடந்தது 2006 ஜனவரி 24 ஆம் தேதி.

தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார் பாண்டியன் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப் பட்டார். அந்தக் கொலை தொடர்பாக மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. அதன் பின்னணியில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பும் நடந்தது. அது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேர்களும் இந்து முன்னணியினரே!

குமார் பாண்டியன் கொலை செய்யப் பட்டபோது பெரிய அளவில் மதக் கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து, (இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு) அதன்மூலம் பெரிய அளவு கல வரத்தைத் தூண்டவேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட் டவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்களே!

கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். கேரளா வில் கல்குவாரியில் பணி செய்தவர். பாறை களை உடைக்கப் பயன்படுத்தும் அமோனி யம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்ப தற்காக கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கோபி அருகே ஒரு ‘நாடகம்'

5. ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஒரு சம்பவம் - கணபதிபாளையத்தைச் சேர்ந்த ராஜகுரு (வயது 31) இந்து அதிரடிப்படை மாநிலப் பொதுச்செயலாளர்.

காவல்துறையில் புகார் ஒன்றைக் கொடுத் தார் அவர்.

1.10.2016 அன்று இரவு குல்லா அணிந்த நான்கு பேர் தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் துரத்தி வந்ததாக கோபி காவல் துறையிடம் பரபரப்பான புகாரைக் கொடுத் தார்.

காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது - அது ஒரு கபட நாடகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரே தனது ஸ்கூட்டருக்குத் தீ வைத்துக்கொண்ட கதை யும் தெரிய வந்தது - அதனைத் தொடர்ந்து ராஜகுரு கைது செய்யப்பட்டார். காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் சிவகுமார் கூறுகையில், சம்பவத்தன்று ஸ்கூட்டரை எரித்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த ஸ்கூட் டரை அவரே கைப்பேசியில் படம் பிடித் துள்ளார். அவரை மர்ம நபர்கள் துரத்திய போது, வாய்க்காலில் குதித்துத் தப்பி ஓடிய தாகக் கூறியிருந்தார். அவரது கைப் பேசியை சோதனை செய்தபோது, ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருந்ததை 20 நிமிடங்கள் வரை படம் பிடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

தென்காசியில் இன்னொரு சம்பவம்!

6. தென்காசி குளத்தூரான் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இந்து முன்னணியின் முன்னாள் நிர்வாகி. பிறகு ‘பாரத் சேனா' என்ற இந்து அமைப்பின் தலைவர். 2017 ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு தனது வீட்டின்முன் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த மோட்டார் சைக்கிளை யாரோ தீ வைத்துவிட்டனர் என்று புகார் கூறினார். நள்ளிரவில் பட்டாசு வெடித்ததுபோல சத்தம் கேட்டதாகவும் கூறினார். விசாரணை செய்தபோது, அந்த நபரே அதனை செய்தார் என்பது தெரிய வந்தது. காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.

சோழபுரத்திலும் சோடனை!

7. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த காளிகுமார் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமான் சேனையின் மாநில செயலாளர். அவர் காரில் சென்றபோது, சோழபுரம் சுங்கச்சாவடி அருகே அடை யாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியது என்றும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் காவல்துறைக்கும், தீயணைப்பு நிலையத் துக்கும் தகவலும் தெரிவித்தார்.

விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், அவர் புகார் பொய்யானது, மோசடியானது, இட்டுக்கட்டப்பட்டது என்று கண்டறிந்து, காளிகுமார் உள்பட மூன்று பேரையும் கைது செய்தது.

மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துவது என்ன?

இதுதான் ‘இந்து' - ‘இந்துத்துவா!'

இந்து அமைப்புகள் - இஸ்லாமியர்கள்மீது அபாண்ட பழி சுமத்தி, கலவரங்களை உண்டாக்குவது என்பது ஒன்று; தாங்கள் பாதிக்கப்பட்டதாக நம்ப வைத்து கபட நாடகம் ஆடி, அதன்மூலம் அனுதாபத்தைத் தேடுவது, இரண்டு, அந்த அனுதாபத்தை முதலீடாக்கி அமைப்பில் பதவிகளை அபகரிப்பது மூன்றாவது.

இதைவிட நாம் முடிவுக்கு வரவேண்டியது ‘இந்து' மதத்தின்மீது பெரும் பிடிப்பு வைத்துள் ளவர்களின் மனநிலை என்பது எத்தகையதாக இருக்கிறது என்பதுதான் முக்கியதாகும்.

இந்துராஜ்ஜியம் வந்தால்.... எச்சரிக்கை!

மதத்தால் மாறுபட்டு இருந்தாலும், சக மனிதரிடத்தில் சகோதரத்துவமாகப் பழகக் கூடாது, வெறுக்கவேண்டும்; எதையும் மதப் பார்வையோடு பார்க்கவேண்டும் -  அதற்காக எந்த எல்லைக்கும் சென்று கபட நாடகம் ஆடுவது - பழியை பிறர்மேல் போடுவது - அந்த நாடகம்கூட ஒரே மாதிரியான சோடனை என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது. இவைதான் இந்து மதம் - இந்துராஜ்ஜியம் உண்டாக்க நினைப்போரின் இழிவான மனப்பான்மை.

திரேந்திர கே.ஜா. எழுதிய நூல் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்

அதுமட்டுமா?

பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ரகசிய இயக்கமாக அவற்றை நடத்தியபோதே அதில் துப்பாக்கிப் பயிற்சி, இராணுவப் பயிற்சி பெற, இந்து மகா சபை அன்னாள் தலைவராக இருந்த மூஞ்சே, ஜெர் மனிக்குச் சென்று, இட்லரைச் சந்தித்து, இத்தாலியில் முசோலினியைச் சந்தித்து ஒரு இராணுவப் பயிற்சிப் பள்ளி தொடங்க மேற்கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் விளை வுதான் - ‘‘போன்சாலே மிலிட்டரி ஸ்கூல்'' என்ற இந்த இராணுவப் பயிற்சிப் பள்ளி;  (RSS - Run Institution). 2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டவர் ‘அபிநவ் பாரத்'  அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி பிரக்யாசிங் தாகூர். இந்தக் குண்டுவெடிப்பில் இராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி மருந்து பயன்படுத்தப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.  பிரக்யாசிங் தாகூர் பிணையில் வந்து, எம்.பி.,யாகி காந்தியார் கொலையை நியாயப்படுத்தி, இந்திய நாடாளுமன்றத் திலேயே பேசி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த கண்டனத்திற்கு ஆளான நிகழ்வு அண்மைக்கால வரலாறு அல்லவா!

(‘நிழற்சேனைகள்' என்ற தலைப்பில் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவாவைப் பரப்ப எப்படி வன்முறையைக் கற்றுக் கொடுக்க அமைப்புகளை உருவாக்கியுள்ளது என்பதற்கு திரேந்திர கே.ஜா. என்பவர் எழுதியுள்ள ஆங்கில நூல் ஆதாரமாகும்).

வி.டி.சவார்க்காரின் ‘இந்துத்துவா' நூலில் கையாளும் சொற்றொடர், ‘‘Hinduize Military, Militarize Hindus'' ‘‘இராணுவத்தை இந்து மயமாக்கு - இந்துக்களை இராணுவ மயமாக்கு'' - அதுதானே இப்போது கூச்ச நாச்சமின்றி நடத்தப் பெறுகிறது. அதனால், பழைய கிரிமினல்கள் புதிய பாதுகாப்புத் தேடி இந்து அமைப்புகளில், பா.ஜ.க.வில் சேர்ந்து பதவி பெறுகிறார்கள்.

இவையெல்லாம் எத்தகைய அபாயகர மானது, மனிதப் பண்பாட்டுக்கு விரோதமானது என்பது தெரியவில்லையா? இவர்கள் கூறும் இந்து ராஜ்ஜியம் வந்தால், நாடு எந்தக் கதிக்கு ஆளாக நேரிடும் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இவர்கள் நம்பும் இந்து மதம் ஒழுக்கத்தை வளர்க்கிறதா - குலைக்கிறதா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளட்டும்!

குறிப்பாக இளைஞர்கள் இந்தத் தீய இந்து மத சக்திகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது சமுதாய நலன் கருதி மிக அவசியமாகும் - எச்சரிக்கை!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.3.2020


வியாழன், 19 மார்ச், 2020

இனமானப் பேராசிரியர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் சூளுரை

தன்மானத்தைவிட இனமானமே முக்கியம் என்று வாழ்ந்து காட்டியவர் இனமானப் பேராசிரியர்

மதவெறி- ஜாதிவெறியைத் தகர்ப்போம்!

திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!

எதிர்வரும் சவால்களை நமது தளபதி சந்திப்பார் - வெல்வார்!

இனமானப் பேராசிரியர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் சூளுரை

சென்னை, மார்ச் 15   மதவெறி, ஜாதிவெறிகளை வீழ்த்துவோம் - தன்மானத்தைவிட இனமானமே பெரிது என்ற உணர்வைக் கொள்வோம். இன மானப் பேராசிரியரின் பாடங்களைப் பின்பற்று வோம் -  தளபதி மு.க.ஸ்டாலின் எதிர்வரும் சவால்களை சந்திப்பார் - வெற்றி கொள்வார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சங்கநாதம் செய்தார்.

நேற்று (14.3.2020)  மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், இனமானப் பேராசிரியருமான க.அன்பழகன் அவர் களுடைய படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அவரது   உரை வருமாறு:

நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்

மிகுந்த சோகத்திற்கும், துன்பத்திற்கும் இடையில், இந்த வீர வணக்க நிகழ்ச்சி நாள்.  நம்முடைய இனமானப் பேராசிரியரை இறுதியாக  வழி யனுப்பினாலும்,

என்றைக்கும் பேராசிரியர் மறையவில்லை, நம்மோடுதான் இருக்கிறார், நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார், நம் ரத்த நாளங்களில் உறைந் திருக்கின்றார், உணர்வை ஊட்டுகின்றார். எதைப் பாடமாக அவர்கள் சொல்லிக் கொடுத்தார்களோ, அந்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் நினை வூட்டுகிறோம் என்பதற்காக, இந்தப் படத்தைத் திறந்து வைத்து, எனக்குப் பிறகு ஒரு சிறந்த வீர வணக்க உரையை நிகழ்த்தவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் அன்பு சகோதரர், கலைஞரால், பேராசிரியரால் அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் விட்டப் பணிகளை நான் முடித்தே தீருவேன் என்று சூளுரைக்கக் கூடிய  அருமை சகோதரர், அருமை தளபதி அவர்களே,

பேராசிரியரின் படத்திறப்பு நிகழ்விற்கு முன்னிலை ஏற்று சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் அருமை சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களே,

அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அருமைத் தோழர்களே, அவருடைய இழப்பால் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய அவருடைய குருதிக் குடும்பத்தவர்களே, கொள்கைக் குடும்பத்த வர்களாக இருக்கக்கூடிய அருமை சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பேராசிரியர்களை

அடையாளம் காட்டினார்

பேரறிஞர் அண்ணா அவர்கள்  இந்த இயக்கத்தில் தளபதியாக இருந்த காலத்தில், இரண்டு பேராசிரியர் களை அடையாளம் காட்டினார்.

பல பேருக்கு இந்த வரலாறு நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு. தந்தை பெரியார் அவர்களையே, அண்ணா அவர்கள் முதலில் ‘‘பேராசிரியர்'' என்று குறிப்பிட்டார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று சொன்னார்கள். அந்த பேராசிரியரின் உரை  மாலை நேர வகுப்புகளாகத்தான் தொடங்கும். மூன்று மணி நேரம், நான்கு மணிநேரம் பல ஊர்களிலே நடக்கும் என்று சொன்ன அண்ணா அவர்கள்,

அடுத்து அவரால் அடையாளம் காட்டப்பட்ட இன்னொரு பேராசிரியர்தான் இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கக்கூடிய நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்?

இளைஞர்களுக்குத் தெரியவேண்டும். சுருக்கமாக சொல்லுகிறேன். பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்? இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் இந்த அரங்கத்தைவிட்டுப் போகவேண்டும்.

அதுதான் அந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது நாம் நினைவூட்டிக் கொள்ளவேண்டிய பாடமும்கூட.

தந்தை பெரியார் சொன்னார்,  இந்த இயக்கம் தன்மான இயக்கம் - சுயமரியாதை இயக்கம்; தன்மானம் என்று சொல்லும்பொழுது, தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதுதான் தன்மானம். ஆனால், தன்மானத்தைவிடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் இனமானம்.

தன்மானம் தோற்கவேண்டும்;

இனமானம் வெற்றி பெறவேண்டும்

தன்மானத்திற்கும், இனமானத்திற்கும் போட்டி வருகின்ற நேரத்தில், தன்மானம் தோற்க வேண்டும்; இனமானம் வெற்றி பெறவேண்டும். அதற்காகத்தான் உழைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்த பாடத்தை, பேராசிரியர் சொல்லிக் கொடுக்கவில்லை;  மாறாக வாழ்ந்து காட்டினார். அவர்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர்.

தன்னை விட மூத்தவர்கள், இளையவர்கள், தன்னைவிட அதிகமான சிறப்புப் பெற்றவர்கள் என்பதைப்பற்றி எல்லாம் அவருக்குக் கவலை யில்லை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்ற குறள் முக்கியமானது.

கலைஞர் கட்சியின் தலைவர் என்று சொல் லுகின்ற நேரத்தில், கட்டுப்பாடோடு பின்பற்றி னாரே, அதனால்தான் அவர் இனமானப் பேராசிரி யர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பாடத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

‘‘கொள்கைகளைப் பேசா நாட்களெல்லாம்

பிறவா நாட்களே!''

அதுபோலவேதான், அவரைப் பொருத்தவரை யில், எந்தப் பதவியையும் அவர் தேடிப் பிடித்ததில்லை. எல்லாப் பதவிகளும் அவரைத் தேடிப் பிடித்தன. அதுதான் அந்த இனமானப் பேராசிரியருடைய தனித்தன்மை. கொள்கைகளைத்தான் எந்த மேடையிலும் சொல்வார். தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கையை, பகுத்தறிவுக் கொள்கையை, இனமானக் கொள்கையை அண்ணா அவர்கள் எப்படி  விரிவாக விளக்கினார்களோ, அதற்கடுத்து, மிகத் தெளிவாக, கலைஞரும், பேரா சிரியரும்,  எல்லா மேடைகளிலும், இந்தக் கொள்கை களைப் ‘‘பேசா நாட்களெல்லாம் பிறவா நாட்களே'' என்று கருதியவர்கள் பேசியவர்கள்!

இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்; இந்த இயக்க வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நான்கு தலைமுறைகளைப் பேராசிரியர் கண்டிருக்கின்றார்.

எந்தக் கொம்பனாலும்

வீழ்த்திவிட முடியாது

கழகத்தின் தலைவராக, தளபதியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்; ஏற்றுக் கொண்டிருப்பது மட்டு மல்ல, தட்டிக் கொடுத்திருக்கிறார். உற்சாகப்படுத்தி யிருக்கிறார், இளைஞர்களை வரவேற்கக்கூடிய அந்த மனப்பான்மை இருக்கிறதே, அதுதான் இந்த இயக்கத்தினுடைய ரத்தவோட்டம் - அதுதான் ஜீவநாடி!  இதை எந்தக் கொம்பனாலும் வீழ்த்திவிட முடியாது என்பதற்கு உத்தரவாதம்.

அண்ணா அவர்கள் இயக்கத்தில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இந்த மூன்றைக் கவசங்கள் போலத் தந்தார்கள்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

அண்ணா அவர்கள் மறைகின்ற நேரத்தில், பெரியார் ஒரு விளக்கத்தை சொன்னார்கள். அது என்ன தெரியுமா?

‘‘மூன்றும் முக்கியம்தான் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் முக்கியம்தான். கடமை என்பதற்கு ஒரு பொருள் சொல்லலாம்; இரண்டு பேர் மாறுபடலாம். கண்ணியம் என்பது ஒருவருக்குக் கண்ணியமாக இருப்பது, இன்னொருவருக்கு வேறு விதமாக தெரியலாம். அதற்கு இரண்டு அர்த்தங்கள், வியாக்கியானங்களை சொல்லலாம். ஆனால், கட்டுப்பாடு என்பதற்கு ஒரே பொருள்தான். எனவே, இந்த இயக்கம் தழைக்கவேண்டுமானால், திராவிட இயக்கம் என்றைக்கும் நிலைக்கவேண்டுமானால், கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு'' என்று சொன்னார்கள்.

கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கிறார்!

அந்தக் கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கின்ற நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

இந்தப் பாடம் நமக்கு உறுதியாக இருக்கின்ற வரையில், எந்தக் கொம்பனும் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது; இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று கணக்குப் போட முடியாது.

எனவேதான், பெரியார் தந்த வழியிலே, அண்ணா காட்டிய முறையிலே, கலைஞர் உழைத்த உழைப் பிலே, இன்றைக்கு எல்லோரையும் சேர்த்து வைத்து, செதுக்கப்பட்டவர்தான் நமது தளபதி! எதிர் வருகின்ற சவாலை ஏற்கக்கூடிய எங்கள் தளபதி அவர்கள், சகோதரர் அவர்கள் துணிவாக, களத்திலே நின்று சந்திக்கக்கூடியவர்!

மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது

எனவே, இது வெறும் வீர வணக்க நாள் அல்ல நண்பர்களே, மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது.

‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?'' என்று கேட்கக்கூடிய அந்த உணர்வோடு நம்முடைய லட்சியத்தை நோக்கிப் போகின்றோம் என்பதைப் புதுப்பிக்கின்ற நாள் இந்த நாள் - இந்தப் படத்திறப்பு.

அதை செய்வதற்குரியவர்தான் அடுத்து இங்கே உரையாற்றவிருக்கிறார்கள்.

பேராசிரியர் பேசியதைப்பற்றி இங்கே துரை முருகன் அவர்கள் சொன்னார்கள். அதையே நான் வழிமொழிகிறேன்.

அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாக, பேராசிரிய ருடைய அந்த விளக்கம் இருக்கிறதே, எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்குத் தெளிவான பதிலை சொல்வார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன்.

இளைஞர்கள், புதிதாக தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்கள், அந்தத் திராவிடத்தை அழிப்போம் என்று சிலர் கனவு காண்கிறார்கள் அல்லவா - திராவிடத்தை நாங்கள் வீழ்த்திவிடுவோம் என்று இப்பொழுது யார் யாரெல்லாமோ வந்திருக் கிறார்கள் அல்லவா! சில பேரை ஏமாற்றுகின்ற வகையில்,  பேசுகிறார்கள்.  நாம் பக்குவப்படுத்தி இருக்கின்ற வயலில் இருக்கின்ற நாற்றங்காலை, வேறு வயலில் திருட்டுத்தனமானப் பிடுங்கி நடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களை அடை யாளம் காணவேண்டும்.

பேராசிரியர் பேசுகிறார் கேளுங்கள்:

பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன் - பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்

‘‘எதற்காக தமிழ்நாட்டில், தமிழர்களாகிய நாம், திராவிடர் கழகம் என்று பெயர் வைக்கவேண்டும். தமிழர் என்ற பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?''  என்று கேட்டார்கள்.

அதற்குப் பதில் சொல்கிறார் பேராசிரியர்,

‘‘நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் பதில் இதுதான். பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன். பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்.''

எவ்வளவுத் தெளிவாக இருக்கிறது பாருங்கள். எனவே,  இந்தத் தெளிவு இருக்குமேயானால், இந்த இயக்கத்தை ஆயிரமாண்டுகள் ஆனாலும், எந்த வடநாட்டுக் காற்றும், வாடைக் காற்றும் அசைத்துவிட முடியாது. மதவெறி இந்த இயக் கத்தை உலுக்கிவிட முடியாது.

அதைத் தெளிவாகச் சொன்னது மட்டுமல்ல,

தமிழர் என்று கூறிக்கொள்வதில் நான் பெரு மைப்படுகிறேன். திராவிடர் என்பதால், நான் உரிமை பெறுகிறேன். இதுதான் பேராசிரியர் அவர்களுடைய விளக்கம்.

திராவிடர் என்று சொன்னால்தான், உரிமை - மான உரிமை - ஆட்சி உரிமை - எல்லா உரிமை களும்.

எனவேதான் நண்பர்களே, இந்தப் பாடங்கள் என்றைக்கும் நிற்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது,  அந்தப் பாடத்தை நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, பேராசிரியர் அவர்களுடைய பாடங்கள், என்றைக்கும் நாம் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய பாடங்கள். என்றைக்கும் மறையக்கூடிய பாடம் அல்ல. ஏனென்றால், கொள்கைகளைக் கொண்டது. ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக.

ஆட்சிக்காக நாம் செய்யவேண்டியதில்லை. கொள்கைக்காக, கொள்கையை செய்வதற்காக, லட்சியத்தை அடைவதற்கான வழிமுறை அது.

பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது

எனவே, இந்த மேடை, இந்த வீர வணக்க நாள் - நம்முடைய தளபதி எல்லாவற்றையும் சேர்த்து, எல்லா ஆற்றலையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்.

அவரை உற்சாகத்தோடு, இத்தனைத் தோழர்கள் கூடி, லட்சியப் பயணத்தில், இந்தப் பந்தயக் குதிரை வெல்லும் என்று சொல்வதற்காகத்தான் இந்த மேடை.

பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது. சில குதிரைகளைக் கொண்டு வந்து காட்டினார்கள் - ஆனால், சில நாள்களுக்கு முன்பு அவை பொய்க்கால் குதிரைகள்  என்று புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு வந்து விட்டது என்பதை நாடே தெரிந்துகொண்டிருக்கிறது.

நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம்!

எனவே, நாளையும் நமதே  - நாளைய மறுநாளும் நமதே - நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம் - அதுவே பேராசிரியர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்ற பாடம்.

ஆட்சி என்பது இருக்கிறதே காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக - அதை செய்யக்கூடிய தளபதி இங்கே இருக்கிறார் - அவருடைய கரத்தைப் பலப்படுத்துவதற்கு அத்தனைப்  பேரும் இங்கே இருக்கிறோம்.

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய  மேடை  இந்த மேடை

இவ்வளவுப் பேரும் மேலும் கூடுவார்களே தவிர, இது குறையாது - இது வளரும் - அதுதான் இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய  மேடை இந்த மேடை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மதவெறி வெல்லாது

ஜாதி வெறி வெல்லாது

இனப் பகை ஒழியும் என்பதில் அய்யமில்லை.

இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும்!

பாரம்பரிய விரோதிகள் இருக்கின்ற இடம் தெரியாமல் போவார்கள். எங்கள் இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும் - அதுதான் இந்தப் பேராசிரியருடைய புன்னகைக்குப் பொருள் என்று கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பேராசிரியர்! வெல்க திராவிடம்!

வாழ்க பெரியார்! வளர்க  பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

-  விடுதலை நாளேடு 15 3 20

பாலபிரஜாபதி அடிகளார் பார்வையில் பெரியார்

கேள்வி: ‘அய்யாவழி என்பது இந்து மதம்தான்' என்றும், ‘அது தனி மதம் இல்லை' என்றும் உங்கள் எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?

பதில்: ‘‘ராமன் குகனைக் கட்டியணைத்து சகோதரனாக ஏற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட ராமருக்குக் கோயில் கட்டிவைத்துவிட்டு அவரை நான் தொடக்கூடாது என்று சொல்கிறார்கள். வேடனான கண்ணப்ப நாயனார் சிவபெருமானுக்குக் கண்ணைக் கொடுத்தார். தான் உண்ட உணவை சிவனுக்குக் கொடுத்தார். இன்று நீங்கள் கஞ்சியைக் கொண்டு வைத்துவிட்டு வடமொழியில் சொன்னால்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார் என்றால் நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? யார் இந்து என்று ஒரு வரையறை சொல்லுங்கள். இந்து என்ற வார்த்தையே ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. வேறு வழி இல்லாமல் அந்த வார்த்தையை வைத்திருக்கிறோம்.''

கேள்வி: ‘‘ஒரு சமயத் தலைவரான நீங்கள் ‘இனிமேல்தான் பெரியாருக்கு வேலை' என்று பேசுகிறீர்களே?''

பதில்: ‘‘வைக்கம் போராட்டத்தைப் பெரியார் நடத்தாமல் இருந்திருந்தால் சுசீந்திரம் கோயில் இருக்கும் தெருவுக்கு சில ஜாதியினரால் போக முடியுமா? பெரியார் இன்று இருந்திருந்தால் கருவறை நுழைவுக்காகப் போராடியிருப்பார். எங்கள் தலைமைப் பதியை அரசு எடுக்கக் கூடாது என்று போராடியிருப்பார். என் கொள்கை தடைப்படுகிறபோது, பெரியார் இருந்தால் வெற்றிபெற்றிருப்போம் என்று சொல்கிற உரிமை எனக்கு இருக்கிறது.''

- ‘ஆனந்த விகடன்', 18.3.2020, பக்கம், 101

- விடுதலை நாளேடு 14.3.20

செவ்வாய், 17 மார்ச், 2020

ஈரோட்டில் அன்னை நாகம்மையார் சிலை - வேலூரில் அன்னை மணியம்மையார் சிலை

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 17 ஈரோட்டில் அன்னை நாகம் மையார் சிலையும், வேலூரில் அன்னை மணியம் மையார் சிலையும் நிறுவப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

சென்னை பெரியார் திடலில் தொண்டறத்தாய் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா அவர்களின் நினைவு நாளில் (மார்ச் 16) திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழா நிறைவுப் பேருரையை நிகழ்த்தினார்.

முக்கிய அவ்வுரையில் அவர் குறிப்பிட்டதாவது:

* நெருக்கடி காலத்தில் அன்னையார் பல்வேறு சவால்களைச் சந்தித்தார்.

* தணிக்கைக் குழுவினரின் கத்தரிக்கோலிலிருந்து ‘விடுதலை' ஏட்டை நாள்தோறும் காப்பாற்ற வேண் டிய நிலை இருந்தது, அதனையும் கடந்து வந்தார்.

* வருமான வரித் துறையின் தொல்லை மற்றொரு பக்கம். இயக்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களி லிருந்து கிடைக்கும் வருவாயை முடக்கி, பெரியார் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு முட்டுக்கட்டை - அதனையும் கடந்து வந்தார்.

அன்றைய எதிரிகளும் - இன்றைய எதிரிகளும்!

* அன்றைக்கு வெளிப்படையாக எதிரிகளைச் சந் திக்க முடிந்தது - அவர்களை அன்னையார் எதிர்கொண்டார். இன்று வஞ்சகமான எதிரிகளைச் சந்திக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

* இவற்றை எப்படி சந்திப்பது - வெற்றி கொள்வது என்பதற்கு நமது தலைவர்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் வழிகாட்டிச் சென்றுள்ளனர்.

* உயிரை இழந்துதான் நமது உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அதற்கும் தயாராவோம்!

* அன்னையார் நினைவிடத்தில் நாம் வைப்பது வெறும் மலர்வளையம் மட்டுமல்ல - செயல்களையே மலர்வளையமாக வைப்போம்!

பெண்களின் நிலை என்ன?

* மக்கள்தொகையில் சரி பகுதியாக இருக்கக் கூடிய பெண்களின் நிலை என்ன? அவர்களுக்குரிய உரிமைகள் நிலை நிறுத்தப்பட்டனவா?

* பெரும்பாலும் பெண்கள் உழைக்கக் கூடியவர்கள் - அவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுவிட்டனவா? அவர்களுக்குரிய பிரச்சினைகளை அவர்களால் வெளிப்படையாகக் கூற முடிகிறதா? உரிமைகளைப் பெற முடிகிறதா?

* அன்னையாரின் நூற்றாண்டில் பெண்கள் மத்தி யில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தேவை. வீட்டுக்கு வீடு பெண்களைச் சந்தித்து எடுத்துக் கூறுங்கள்.

* என்ன கொடுமை என்றால், பெண்களின் உரி மைக்குப் பெண்களே எதிரிகளாக இருப்பதுதான் வேதனை.

* பெண்ணாகப் பிறப்பதற்குக்கூட உரிமை இல் லையே! கருவில் இருக்கும்போதே ஆணா, பெண்ணா என்று அறிந்து, பெண் என்றால், கருவிலேயே அழிக்கப்படும் கொடுமை நீடிக்கலாமா?

* தாய்ப்பால் கொடுத்தவர்களே கள்ளிப்பால் கொடுக்கும் கொடுமையை இனியும் அனுமதிக் கலாமா?

* இங்கே நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள், திருமணமாகி, குடும்பமாக வசிக்கக் கூடிய அந்தப் பெண் பிள்ளைகளின் பெயர்களுக்கு முன்னால் காணப்படும் முன்னொட்டு - இனிஷியல் அய்யா - அம்மா பெயர்களின் முதல் எழுத்தான ஈ.வி.ஆர்.எம். என்ற அந்தப் பெருமை யைப் பெறுகிறார்கள்.

* அவர்கள் இந்த விழா மேடைக்கு வந்து, அன்னை மணியம்மையார் பெயரில் உள்ள பவுண்டேஷனுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து தங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

* அன்னையார் அவர்கள் அய்யாவை 95 ஆண்டு காலம் வாழ வைத்தார்கள். ஆனால், அவர்கள் 60 ஆண்டுகள் கூட வாழவில்லை.

* நான்கு ஆண்டுகள் தான் இயக்கத்திற்குத் தலைமை வகித்து நடத்திச் சென்றார்கள் என்றாலும், அந்தக் காலகட்டத்தில் தன் ஆளுமையை நிரூபித்துக் காட்டினார்கள்.

* தி.மு.க.வில் கலைஞர், நாவலர் இருவருக்குமிடையே பிணக்குகள் ஏற்பட்டபோது, அவர்கள் இருவரையும் சென்னை பெரியார் திடலுக்கு அழைத்து, அய்யா, அண்ணா இல்லாத இந்தக் காலகட்டத்தில், கட்டுப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள்.

* தந்தை பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்களோ, அந்தக் கடமையை அன்னையார் செய்தார்கள். இந்தச் செய்தியை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமது ‘‘நெஞ்சுக்கு நீதி'' நூலிலும் பதிவு செய்தும் இருக்கிறார்.

* அம்மா எவ்வளவோ தூற்றலுக்கெல்லாம் ஆளாகி இருந்தார்கள். அப்படி தூற்றியவர்கள் எல்லாம் பிற்காலத்தில் அதே அம்மாவைப் போற்றும் அளவுக்கு அம்மா வெற்றி பெற்றது சாதாரணமானதல்ல.

அய்யா - அம்மா பேணிய

மாபெரும் மனிதப் பண்பு

* ராஜாஜியின் ஆலோசனையைப் பெற்றுத்தான் பெரியார், மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், உண்மை வேறுவிதமானது என்பதற்கு ஆதாரம் உண்டு - ஆவணமும் உண்டு.

* பெரியாரின் அந்த முடிவு தவறானது - சரிப்பட்டு வராது - பெரியாருக்குப் பிறகு இயக்கத்தை ஒரு பொடிப் பெண் நடத்துவது இயலாது என்றுதான் அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதினார்.

* நினைத்திருந்தால், அந்தக் கடிதத்தை தந்தை பெரியார் வெளியிட்டு இருக்கலாம். ஏன் வெளியிடவில்லை? அந்தக் கடிதத்தில் ராஜாஜி ‘‘அந்தரங்கம்'' என்று எழுதி இருந்ததுதான் அதற்குக் காரணம்.

* உயிரோடு இருந்தவரை தந்தை பெரியாரும் சரி, அன்னை மணியம்மையாரும் சரி அதை வெளியிடவில்லை. எத்தகைய உயர்ந்த பண்பாடு - அறிவு நாணயத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். வரலாற்றுக் காரணத்துக்காக அவர்கள் மறைவிற்குப் பிறகு நான் வெளியிட்டேன்! (இந்தத் தகவலை தலைவர் ஆசிரியர் கூறியபோது, மன்றத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் அமைதியின் ஆழத்திற்கே சென்றனர்).

* தலைவர்கள் என்போர் யார்? மக்கள் பின்னால் செல்லுவோர் தலைவர்கள் அல்ல - அரசியலுக்கு வேண்டுமானால் இது பொருத்தமானதாக இருக்கலாம்.

* ஆனால், மக்களைத் தன் பின்னால் அழைத்துச் செல்லுவோர்தான் உண்மையான தலைவர் - அதைத்தான் தந்தை பெரியாரும், அம்மாவும் செய்தார்கள்.

இருபெரும் தலைவர்களுக்கு சிலைகள்

* சுயமரியாதை இயக்கம் என்பது ஒரு மனிதநேய இயக்கம். அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற தந்தை பெரியார். அவர்களின் தன்னிகரற்ற பணிக்குத் தோள் கொடுத்தவர் அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையாரும் ஆவார்கள்.

* ஈரோட்டில் அன்னை நாகம்மையார் சிலை திறக்கப்படும். அதற்கு நமது திராவிட இயக்க வீராங்கனை - மேனாள் மத்திய இணையமைச்சர் - தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் சகோதரி சுப்புலக்குமி ஜெகதீசன் முக்கிய பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, அன்னை மணியம்மையார் சிலை அவர்கள் பிறந்த வேலூரில் நிறுவப்படும் - அதற்கான செயல்பாட்டுக் குழுத் தலைவராக நமது வி.அய்.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் இருந்து செயல்படுத்துவார்.

விழாத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது நிறைவுரையில் எடுத்து வைத்த முக்கிய முத்துகள் இவை.

- விடுதலை நாளேடு 17 3 20

ஞாயிறு, 15 மார்ச், 2020

இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்!

கவிஞர் கலி.பூங்குன்றன்

எத்தனையோ பேராசிரியர்களை நாடு கண்டு இருக்கிறது. ஆனால், இனமானப் பேராசிரியர் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க _ போற்றிப் புகழத்தக்க _ வரலாற்றில் நிலைக்கத் தக்கவர் _ தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் செம்மாந்து நின்ற மானமிகு க.அன்பழகன் அவர்களே ஆவார்!

நேர்கொண்ட பார்வை _ இரு பொருள் தரும் சொற்களைப் பேசாமல் -_ எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுதான் அவரின் அணுகுமுறையும் நடைமுறையுமாகும்!

பதவிக்காக வளைவது _ குனிவது _ நழுவுவது என்பது எல்லாம் அவரைப் பொருத்தவரை எதிர்மறைச் சொற்களே!

தி.மு.க. என்பது இந்து மதத்திற்கு எதிரானது _ இந்துக்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் _ எனவே பெரும்பான்மையான மக்களுக்கு தி.மு.க எதிரானது என்று நிலைநாட்ட பார்ப்பன சக்திகள் படாத பாடு படுகின்றன.

பார்ப்பனர் இந்து மதம் என்கிற போர்வையிலே தங்களின் (பார்ப்பன) ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையும் _ இந்து மதம் என்று சொன்னால் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள், அடிமைகள், இழி ஜாதியினர் என்று நசுக்கி மிதிப்பதையும் எடுத்து விளக்கும்பொழுதுதான் இவர்களின் இந்து மதப் பூச்சாண்டியின் பற்களை உடைக்க முடியும்.

நீ கீழ்ஜாதி _ நீ அடிமை _ நீ சேரியிலே வாழக்கூடியவன் _ நீ படிக்கக் கூடாது _ பஞ்சமன் _ தீண்டத்தகாதவன் என்று ஒடுக்கி வைத்து _ ஒதுக்கி வைத்து, அவர்களையும் இந்து மதம் என்னும் வலைக்குள் சிக்கவைத்து,  பக்திப் போதை ஊட்டி, மயக்கி அடியாள்களாக ஆக்கிக் குளிர்காயலாம் என்று அந்த குல்லூகப்பட்டர் பரம்பரை விரிக்கும் சூழ்ச்சி வலையைக் கிழித்துத் தள்ளினால் _ இவர்கள் ஒண்டுவதற்கு இந்த மதம் எங்கே மீதி இருக்கப் போகிறது?

தாழ்த்தப்பட்டவன் இந்துவா? பிற்படுத்தப்பட்டவன் இந்துவா? அப்படியானால் அவர்களுக்கு இடஒதுக்கீடு என்கிறபோது ஏன் எதிர்க்கிறாய்? அவர்களும் இந்துக்கள் தானே? அவர்கள் இந்துக் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை தேவை என்கிற போது, ஏன் எதிர்க்கிறாய்? அதற்காகச் சட்டம் செய்தால் ஏன் உச்சநீதிமன்றம் செல்லுகிறாய்?

ஆகமங்களைத் தூக்கிக் காட்டி சாஸ்திரங்களை சாட்சிக்கழைத்து இவர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டாகி விடும் _ ஏன் சாமி செத்துப் போய்விடும் _ அதற்காகத் தீட்டுக் கழிக்க வேண்டும். ஆயிரம் புதிய கலசங்களைச் செய்து வைக்க வேண்டும் _ பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரை காட்டுக் கூச்சல் போடுவது ஏன்?

தினமலரும், தினமணியும், துக்ளக்கும் வரிந்து கட்டிக்கொண்டு ஆமாம் ஆமாம் என்று அவுட்டுத் திரியை அவிழ்த்துப் போட்டு ஆந்தைகள் போல அலறுவானேன்?

இதைப் பற்றி எல்லாம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எத்தனை எத்தனைக் கூட்டங்களில் எடுத்துக் கூறியிருப்பார்கள்? எத்தனை எத்தனை மாநாடுகளில் விரிவுரையாற்றி இருப்பார்கள்?

இதற்கெல்லாம் நாணயமான பதில் சொல்லும் பண்பாடும், நாணயமும் இல்லாதவர்கள் தாங்கள் அடிமைப்படுத்து வதற்கு ஒரு கூட்டம் வேண்டும் _ பெரும்பான்மை என்னும் பலத்தைக் காட்டி சிறுபான்மையினரைச் சீண்ட வேண்டும் _ அதன் மூலம் எல்லா வகையிலும் ஆதாயக் குளிர் காய வேண்டும் என்கிற தந்திரம் தந்தை பெரியார் சகாப்தத்தில் நடக்காது என்று நிரூபிக்க வேண்டும்.

அதனால்தான் “இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளதே’’ என்னும் முழக்கத்தை திராவிடர் இயக்கம் முன்வைக்கிறது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

இதுதான் நமது கொள்கை. இதற்கெல்லாம் சமாதானம் சொன்னால் எதிரி ஜெயித்துவிடுவான் என்பார் தந்தை பெரியார். இந்த வகையில் மறைந்த இனமானப் பேராசிரியர் சிந்தனைகள் சீர்தூக்கத்தக்கவை.

பள்ளத்தூரில் இனமானப் பேராசிரியர் பேசி ‘விடுதலை’யில் (25.3.1982) வெளிவந்த அந்தக் கருத்து முத்திரை இதோ:

“‘பிராமண’ருக்கு முன்னாலே அத்தனை பேரும் சூத்திரர்கள்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். இங்கே ஏழையாக இருக்கிற வலையரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். எங்களைப் போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக, எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்லுகிறபோது பிராமணர்களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்.

‘பிராமண’ரிடத்திலேயா நாம் கோபித்துக் கொள்வது? என்னுடைய முட்டாள்தனத்தை வைத்து நீ என்னை ஏமாற்றலாமா? என்று கோபித்துக் கொள்வதைப் போல _ நாம் முட்டாளாக இருந்தால் எவனும் நம்மை ஏமாற்றத்தான் செய்வான். ஆகவே, நாம் யார் என்று கேட்டால், நாம் ஜாதி அடிப்படையை ஒத்துக்கொள்ளாத _ ஏற்றுக்கொள்ளாத வள்ளுவர் வழியிலே வந்த _ வடலூர் வள்ளலார் வழியிலே வந்த _ தமிழ்ப் பண்பாட்டு வழியிலே வந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேதான் இந்துக்கள் என்று சொல்லுவதிலேகூட எங்களுக்கு அக்கறை இல்லை.

இங்கே பேசிய நண்பர்கள் சொன்னார்கள். நம்முடைய முகவை ராமச்சந்திரன் பேசியபோது சொன்னார். கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா? இந்துவைத்தானே கண்டிக்கிறீர்கள் என்று  வேறு ஒரு கட்சியிலே உள்ள ஒருவர் சொன்ன கருத்தை இங்கு எடுத்துச் சொன்னார்.

நான் இந்துவைக் கூட கண்டிக்கவில்லை. எங்களை இந்து என்று சொல்கிறான். இந்து என்று சொன்னால், இந்தப் படிக்கட்டுகளிலே ஏதாவது ஒரு படிக்கட்டிலே நின்றாக வேண்டும். நான் இந்து இல்லை என்று சொன்னால் படிக்கட்டிலே நிற்க வேண்டியதில்லை. இந்து என்று சொன்னால் நான் சூத்திரன். இந்து என்று சொன்னால் நான் ‘பிராமண’ருடைய உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து என்று சொன்னால் நான் நால்வகை ஜாதிக்கும் ஆட்பட வேண்டும். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிற காரணத்தால்தான் நான் தமிழனே தவிர, இந்து அல்ல என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் இந்து அல்ல என்று சொன்னால் இந்துக்களுக்கு விரோதமாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல; நான் இந்துவும் அல்ல; முஸ்லிமும் அல்ல; கிறிஸ்துவனும் அல்ல; இன்னும் சொல்லப்போனால் புத்த மதத்தைச் சேர்ந்தவனும் அல்ல. எனக்கு என்று ஒரு மதம் இருந்தால் நான் மனிதன் என்ற மதத்தைச் சேர்ந்தவன்.’’

இன்றைக்கு இன எதிரிகளுக்கு இந்து என்ற கூண்டு வைத்து தி.மு.க.வை வீழ்த்திடலாம் என்று வியூகம் வகுக்கும் கும்பலுக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பே இனமானப் பேராசிரியர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் (26.5.1983) தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆற்றிய உரை: கழகக் கண்மணிகளின் காதுகளில் ‘கணீர் கணீர்’ என்று ஒலிக்க வேண்டியவையாகும்.

இதோ அந்த இனமான முழக்கம்:

“தமிழர்களை ஓர் இனமாக ஆக்கிப் பார்க்க வேண்டும். ஆட்சி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நண்பர் சுப்பு அவர்கள் பேசும்போது இந்த ‘ஆட்சி’யை விட ‘இலட்சியம்’ முக்கியமானது என்று சொன்னபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் இந்தச் சமுதாயம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகின்ற ஒரு சமூகம். தமிழினம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ காரணங்களால் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டு போகிறது என்பதை கடந்த 45 ஆண்டுகால அனுபவத்தில் உணர்ந்து வேதனைப்படுபவன் நான்.

இந்தச் சமூகம் வாழவில்லை; இந்தச் சமூகத்திற்கு வாழ்வதற்கான ஆற்றல் இல்லை; தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. இந்தச் சமூகத்திற்கு, தான் ஒரு சமூகம் என்கிற உணர்ச்சியே இல்லை.

ஒரு சமூகம் என்கிற உணர்வு ஏற்படவேண்டும். வகுப்புவாதத்திற்காக அல்ல; இன்னொரு இனத்தாரைப் பகைப்பதற்காக அல்ல;  நம் இனத்தின் வீழ்ச்சியை மாற்றுவதற்காக.

இந்த இனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற வீழ்ச்சி ஒரு வரலாற்று வீழ்ச்சி. கரிகால் பெருவளத்தான் காலத்தில் தமிழன் கொடிகட்டி ஆண்டான். அந்த வரலாற்றைச் சொல்ல நேரமில்லை.

ஓர் ஆயிரம் ஆண்டுக் காலமாக தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் மெல்ல மெல்ல சீரழிக்கப்பட்டுவிட்டது.

சீரழிக்கப்பட்டது என்றால், ஓர் உயர்ந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, அதை பூசை செய்ய பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்று எழுதிவைத்த காரணத்தாலே தமிழர்களுடைய கலை, பண்பாடு, கோயில்களிலே அழிக்கப்பட்டன. கடவுள் வழிபாட்டிலேயே தமிழனுடைய பண்பாடு அழிக்கப்பட்டது என்றால் மற்ற துறைகளிலே அழிப்பது என்பது மிகச் சாதாரணம். ஒருவனை ஆண்டவன் பெயராலே முட்டாளாக்கி விட்டால் எப்போதுமே அவனை அடிமையாக இருக்க வைக்கலாம்.

கடவுள் பெயராலே நம் மக்களை முட்டாளாக ஆக்கியதற்குப் பின்னர் நம்மை அடிமைகளாக வைத்திருக்க எவனெவனுக்கோ முடிந்தது. நம்மைப் பொருத்தவரையிலே எவனெவனுக்கோ அடிமையாக இருந்த காரணத்தால் இன்றைக்கு இவனுக்கு அடிமையாக இருக்கிறோம்.

என்ன காரணம்? தமிழனுக்கு தமிழன் என்கிற உணர்வு இல்லை.’’ இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் உரையாற்றினார்.

இனமானப் பேராசிரியர் இன்று நம்மிடையே உடலால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் ஆற்றிய இந்த இனமான சங்கநாதம் செப்பேடாக _ சங்கப் பலகையாக நம் முன் என்றென்றும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். சறுக்கல் வராமல் தடுத்தாட் கொள்ளும் பிரகடனங்கள் இவை!

எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய அறிவு நாணயம் என்பது இனமானப் பேராசிரியருக்கான தனித்தன்மையான முத்திரை இதோ:

“சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா தஞ்சாவூரில் 1976 ஜனவரி 22 முதல் 24 முடிய சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. அவ்விழாவில் மாயவரம் சி.நடராசன் படத்தைத் திறந்து வைத்து இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் தெரிவித்த _ தெளிவித்த  கருத்து _ வரலாற்றின் ஒளிவிளக்காகும்.

“சமுதாயத்தில் வளர்ந்து இருக்கின்ற ஜாதித் தன்மைகளால் மனிதன் மனிதனாக நடத்தப் பெறவில்லை. மனிதனாக நடக்கும் தன்மையை இழந்திருக்கிறார்கள் என்பதை ஓயாது எடுத்துச் சொன்ன காரணத்தினால்தான், அந்த வித்து முளைத்து, மரமாகி, அதிலிருந்து விழுதுகளாய்க்  கிளம்பியதுதான் பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிடர் கழகம் ஆகும். நாங்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களாக இருந்ததால்தான் அமைச்சர்களானோம். தஞ்சையில், கரந்தையிலே ஒரு மாநாடு நடந்தது. அதிலிருந்து இயக்கம் அரசியலில் இயங்க வேண்டும் என்ற கருத்து தோன்றினாலும் பெரியாரை எதிர்க்க எங்களுக்குத் தெம்பு கிடையாது. ஆனதினால், பெரியாரிடமிருந்து விலக நாங்கள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தோம்.’’ (‘விடுதலை’ 31.1.1976 பக்கம் 2)

 திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கும் இனமானப் பேராசிரியர். உடன் தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் இராமசாமி.

 பெரியார் _ மணியம்மை திருமணம் என்பது ஒரு சாக்காகக் கூறப்பட்டதே தவிர, அரசியலில் செல்ல வேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்பதை வெளிப்படையாகச் சொல்லும் துணிவு கலந்து அந்த அறிவு நாணயத்தை எத்தனை பத்தரை மாற்றுத் தங்கத்தாலும் எடைபோட்டுப் பாராட்டலாம்! இதுதான் இனமானப் பேராசிரியருக்கான அறிவு ஆளுமை. கருத்துகளை ஆழமாக வெளிப்படுத்தும் அழகும் அடடே, எத்தனை கம்பீரம் -_ எடுப்பு!

இன்றைக்குத் திராவிடமா? தமிழா? என்ற கேள்வி சில தரப்பில் திட்டமிட்டு எழுப்பப்படுகிறது. ஏன், இன்னும் சொல்லப்போனால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறுவோரும் கிளம்பியிருக்கிறார்கள்.

இதுகுறித்து இனமானப் பேராசிரியர் வெளிப்படுத்திய கருத்து விவேகமானது.

சென்னைப் பெரியார் திடலைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை’த் தொடங்கி வைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் தெரிவித்த கருத்துதான் அது. (7.9.2010)

அந்த உரை “திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் _ தேவையும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளிவந்துள்ளது.

“அந்தக் காலத்திலே தந்தை பெரியாரும், அறிஞர்அண்ணாவும் சேர்ந்து நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.

 பெரியார் திடலில் அன்னை நாகம்மையார் அரங்கத்தை

இனமானப் பேராசிரியர் திறந்து வைக்கிறார்.

 “எதற்காகத் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்னும் பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?’’ என்று கேட்டார்கள்.

நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் விளக்கம் இதுதான்:

பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’. பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்’. என்று பளிச்சென்று சொன்னார். (அரங்கே அதிரும் அளவுக்குப் பலத்த கரவொலி)

‘தமிழர்’ என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்; ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன் என்றும் அழுத்திக் கூறினார்.

மேலும், அந்த உரையில், “ஏன் இந்தத் திராவிட இன உணர்வும் பற்றும் நமக்கு ஏற்பட்டது? இந்த உணர்வு _ தமிழரை இழிவுபடுத்தியதை, சூத்திரன் என்று தாழ்த்தியதைப் பொறாமல் உரிமைக் குரல் எழுப்பியபோது ஏற்பட்டது.’’ என்று கூறினார்.

திராவிடர் என்பதற்கான விளக்கமும் விவேகமும் இதற்கு மேல் தேவைப்படாது. எவரைச் சந்தித்தாலும் கைகொடுத்துக் குலுக்கும் அந்தச் சமத்துவ உணர்வு _ தந்தை பெரியாரின் சுயமரியாதை _ பகுத்தறிவு _சமதர்ம சித்தாந்தத்தின் கருப்பையில் தோன்றியது. இனமானப் பேராசிரியர் உடலால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் எழுப்பிய கொள்கை முழக்கம் என்றும் நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.

- உண்மை இதழ், 16-31.3.20

சனி, 14 மார்ச், 2020

ஆன்மிகத்தின் இலட்சணம் என்ன?

கேள்வி: பெரியாரின் கொள்கைப்படி வாழ்ந்தவர்களின் கடைசிக்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில்: நெற்றி முழுவதும் விபூதியிட்டு,  தள்ளாமல் நடந்து, கபாலி கோவிலை சுற்றி வருபவர்கள் பலர், ஒரு காலத்தில் பெரியார் கொள்கைகளோடு வாழ்ந்தவர்கள்தான்.

‘துக்ளக்‘, 18.3.2020

அப்படியா? ஒரு பத்துப் பேரைச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

நூறு வயதைத் தாண்டி கழகம் நடத்தும் மாநாடுகளுக்கெல்லாம் தன்னந்தனியாக தவறாமல் வரும் கருஞ்சட்டைத் தோழர்கள்பற்றி நெற்றி நிறைய திருநீறையும் பூசிக்கொண்டு, மடத்துக்கு வரும் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கும் சங்கராச்சாரியாரின் சீடருக்கு என்ன தெரியும்?

பக்தியிலே மூழ்கி பெரியார் உரையைக் கேட்டு நாத்திகர்களாக மாறியவர்களின் பட்டியலைக் கொடுக்க நாங்கள் தயார் - அதே முறையில் பட்டியல் கொடுக்க குருமூர்த்திகள் தயார்தானா?

அதுசரி, பார்வதி தேவியாரின் ஞானப்பாலைக் குடித்த திருஞான சம்பந்தர் பதினாறு வயதிலேயே அற்பாயுளில் மண்டையைப் போட்டது - எதனாலாம்?

‘துக்ளக்‘ கூட்டத்துக்கு ஒரே ஒரு கேள்வி. உங்களின் சாவர்க்கார் ஆத்திகரா - நாத்திகரா?

***

கேள்வி: முட்டாள் அலைவான், புத்திசாலி பிரயாணம் செய்வான்; புத்திசாலியின் ஒரு பயண அனுபவம் சொல்லுங்களேன்... ப்ளீஸ்...!

பதில்: புத்திசாலி பயணம் செய்வான் என்பதற்கு மகத்தான உதாரணம் மகாத்மா காந்தி. தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய அவர், நாடு முழுவதும் செய்த பிரயாண அனுபவத்தால் அவருடைய உடையே மாறி, மோகன்தாஸ் காந்தி மகாத்மா காந்தியாகி மக்களை ஆட்கொண்டார். உல்லாசத்துக்கு மட்டும் பிரயாணம் செய்பவர்கள் எல்லோருமே ஒரு வகையில் முட்டாள்களே!

‘துக்ளக்‘, 18.3.2020

காந்தியார் பயணம் நல்லதுதான். அவர் பயணத்தைத்தான் உங்களின் இந்து மகா வெறியனான சித்பவன் பார்ப்பானாகிய நாதுராம் கோட்சே துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்து முடிவுரை எழுதிவிட்டானே!

“வேதம் ஓத வேண்டியவர்களின் கைகளில் ‘டி ஸ்கொயர்’ எதற்கு? ஆபரேசன் செய்யும் கத்தி எதற்கு?” என்று பேச ஆரம்பித்துவிட்டாரே - அவர் பயணம் ஆபத்து என்று கூடி முடிவு செய்துதானே ‘மகாத்மா’வின் உயிரைக் குடித்துத் தீர்த்தீர்கள் - இந்த வெட்கக்கேட்டில் காந்தி புராணம் வேறா?

கேள்வி: தமிழ்நாட்டில் இனி வருங்காலத்தில் ‘ஜாதிக்குள்ளாகவே மோதல்கள் உருவாகும்‘ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்: அவர் கூறுவது முற்றிலும் உண்மை. ஜாதிக்குள் மோதல்கள் - அரசியலால்தான் உருவாகும். அரசியல் ஜாதிகளைப் பிரிக்குமே தவிர, இணைக்காது. ஆன்மிகமும், கலாச்சாரமும் மட்டுமே ஜாதிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும்.

‘துக்ளக்‘, 18.3.2020

அந்த ஜாதிகளை உருவாக்கியது யார்? அந்த ஜாதிகள் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? ‘துக்ளக்‘கின் கொள்கை என்ன? ஜாதி என்பதே மனிதருக்குள் பிரிவினையை ஏற்படுத்துவது தானே - இதில் அரசியல் ஜாதிகளைப் பிரிக்கும் என்ற பேச்சு எதற்கு?

ஜாதியை முதலீடாக கொண்ட கட்சிகள் இங்கு போணி ஆவதில்லை என்பது வேறு விடயம்.

இதிலே மதத்தை ஏன் விட்டுவிட்டார் குருமூர்த்தி? ஓ, அதைத் தொட்டால் மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, பார்ப்பனீயத்தை சிம்மாசனத்தில் அமர்த்தும் அவாளின் இந்து மத அரசியலின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடுமே என்ற அச்சமா?

கடைசியில் அது என்ன ஒரு சொட்டு?

ஆன்மிகமும், கலாச்சாரமும் மட்டுமே ஜாதிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தும் என்ற உளறல் ஒரு கேடா?

உங்கள் ஆன்மிகம் என்பதே ஜாதிக்கு ஜாதி சிண்டு முடிவதுதானே? உங்கள் ஆன்மிகத்தில் ஒரு மதத்துக்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிளவுகளும், வெட்டுக் குத்துகளும்தானே.

நாமதாரி கூட்டத்துக்குள் வடகலை - தென்கலை சண்டை ஊர் சிரிக்கிறதே! காஞ்சி வரதராஜன் கோவிலில் பாசுரத்தை யார் முதலில் பாடுவது என்பதில், குடுமிப் பிடிச் சண்டை - சந்தி சிரிக்கிறதே- சாக்கடை நாற்றத்தைவிடக் குடலைப் புரட்டுகிறதே!

காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதியின் ஆன்மிகத்துக்குள் புகுந்து விளையாடும் திருவிளையாடல்கள்பற்றி, காஞ்சி மடத்தின் மேனாள் மேலாளர் சங்கரராமன் தான் புட்டு புட்டு வைத்தாரே... அவற்றையெல்லாம் மறுபடியும் வெளியிடவேண்டும் என்று திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் ஆசைப்படுகிறாரா?

தந்தை பெரியாரின் கோட்பாட்டில் ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தி தனிச் சொத்து - அங்கே எப்படி?

தந்தையைக் கொன்று, தாயைப் புணர்ந்தவனுக்கே சுலபத்தில் மோட்சத்துக்கு டிக்கெட் கிடைத்துவிடுகிறதே - அந்தக் காமக் கொடூரனுக்கு நேரில் தோன்றியல்லவா உமையொரு பாகன் (சிவன்)அழைப்புக் கொடுத்தான் என்று புராணம் புகல்கிறதே - இதுதானே ஆன்மிகத்தின் - பக்தியின் இலட்சணம்!

கண்ணாடி வீட்டிலிருந்து குருமூர்த்தி அய்யர்கள் கல்லெறிய ஆசைப்படவேண்டாம்!

- மின்சாரம்

- விடுதலை ஞாயிறு மலர் 14 3 20

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதா?

எல்லா 22 மொழிகளுக்கும் இந்தி - தேவநகரி எழுத்தாம்!

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதா?

வருமான வரித்துறை தொடர்பான புதிய மசோதாவுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில மொழிகளிலும் பெயர் சூட்டப்படவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க. உறுப்பினர்கள்

புதுக்கரடியை விட்டுள்ளனர்!

நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வைக் கூட்டத்தில் நேற்று (13.3.2020) உ.பி.யைச் சேர்ந்த இரண்டு பா.ஜ.க. உறுப்பினர்கள் பேசுகையில்,

‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தி- தேவநகரி எழுத்தில் எழுதினால், பலராலும் புரிந்து கொள்ளப்படும்'' என்ற ஒரு விநோதமான  - அதேநேரத்தில் மிகவும் ஆபத்தான மற்ற அத்தனை மொழிகளையும் இந்தி மயமாக்கி, அவற்றை மெல்லச் சாகடிக் கவும், இந்தி மொழி ஏகாதிபத்தியம் தழைத்தோங்கவும் இப்படி ஒரு புதுக்கரடியை விட்டுள்ளனர்!

யாரோ ஒரு உறுப்பினர் கருத்துதான் இது என்று எளிதாக இதை அலட் சியப்படுத்திவிட முடியாது; கூடாது. மத்திய ஆர்.எஸ்.எஸ். அரசின் திட்டத் திற்கு இது ஆழம் பார்க்கும் முன் னோட்டமாகவும்கூட இருக்கக் கூடும்!

எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர் நமது தோழர்கள்

அந்த உறுப்பினர்கள் பேசும்போதே மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செய லாளர் மானமிகு வைகோ அவர்கள் இதற்குக் கடுமையான மறுப்பையும், எதிர்ப்பையும் ஓங்கிய குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார்!

அதுமட்டுமா?

நிதிநிலை அறிக்கைபற்றிய விவா தத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பேசும்போது, ஒரு மசோதா வைப் புதிதாகக் கொண்டு வந்து நிறை வேற்றும் நிலையில், அதன் பெயர் இந்தியில்தான் - ‘‘விவாத் சீவிஸ்வாஸ்''  (Vivad se vishwas) என இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். ‘‘பெயர் ஏன் வெறும் இந்தியில் மட்டும் இருக்கவேண்டும்? இது யாருக்குப் புரியும்? ஏன் அந்தந்த மாநிலங்களுக்குரிய மொழிகளில் இருக்கக் கூடாது? அப்போதுதானே இச்சட்டத்தின் நோக்கம் நிறைவேற முடியும்'' என்று திருச்சி சிவா, வைகோ, தி.மு.க.வின் வில்சன் ஆகியோரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்!

2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி பாக்கிகளை - ஏற்கெனவே நிலுவையில் உள்ள தொகைகளையும் சேர்த்துக் கட்டிவிட்டால், அதற்கான வட்டித் தொகையையும், அபராதத் தொகையினையும் தள்ளுபடி செய் வதற்கு வழிவகுக்கும் மசோதா இம்மசோதா!

இது  அந்தந்த வட்டார, மாநில மொழிகளில் இருந்தால்தானே,  அதைப் புரிந்து அவரவர்கள் செயல்படும் வாய்ப்பு ஏற்பட முடியும்  என்னும் அவர்களது கேள்வியின் நியாயத்தை உணர்ந்து, மற்ற மொழிகளிலும் இச் சட்டம் மொழியாக்கம் செய்து பரப் பப்படும் என்ற உறுதியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி, நிலவிய சூட்டைத் தணித்துள்ளார்!

நாம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்!

கரோனா வைரஸ் (Covid 19) பற்றி      கைத்தொலைப்பேசிகளில் வரும் அறிவுரை இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருப்பதைக் கூட அந்தந்த மாநில  மொழிகளில் ஒலிபரப்பினால்தான் அது செய்யப்படும் நோக்கம் நிறைவேறக் கூடும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் தமிழ்நாட்டில்.

சற்று அசந்தால், நம் மொழி - மற்ற மாநில மொழிகள் காணாமற்போகும் அபாயம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதால், என்றும் நம் விழிப்புணர்வு தேவை! தேவை!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.3.2020

வெள்ளி, 13 மார்ச், 2020

ஜெர்மன் நாட்டிலிருந்து பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக்  கழகத்தைச் சார்ந்த பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர் ஸ்வென் வொர்ட்மென் (பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனி கிளை) இன்று (13.3.2020) சென்னை - பெரியார் திடலில் தமிழர் தலைவரைச் சந்தித்து உரையாடினர். தந்தை பெரியார் பற்றியும் அவர் நிறுவிய இயக்கமான திராவிடர் கழகம் பற்றியும்,  அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு பற்றியும் சுருக்கமாக, ஆழமாக தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். வருகை தந்த மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.  தமிழர் தலைவரைச் சந்தித்த குழுவில் ஸ்வென் வொர்ட்மென் உடன் பேராசிரியை குல்கார்தி பார்போசா, பி.எச்.டி ஆராய்ச்சி மாணவர்கள் ரெனாபி தாவலோஸ், பெரினா யோகராஜா, டொமினிக் க்ரோப் அடங்குவர். பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடம், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் நூல் நிலையம் ஆகியவற்றை குழுவினர் சுற்றிப் பார்த்தனர்.

 - விடுதலை நாளேடு 13 3 20

 

யார் காட்டுமிராண்டி?

யார் காட்டுமிராண்டிகள் என்பதை குருமூர்த்திகள் சொல்லு வதுதான் கடைந்தெடுத்த நகைச்சுவை.

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொன்ற கூட்டத்தை எந்த இடத்தில் நிறுத்தலாம்?

450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் பெரிய மனுஷர்கள் என்று பீற்றிக் கொள்ளும் அத்வானி போன்றவர்கள் தலைமை தாங்கி இடித்துத் தரை மட்டமாக்கினார்களே இந்தக் காவிக் கும்பலை எந்த இடத்தில் நிறுத்துவது?

குஜராத்தில் முஸ்லிம் பெண் என்பதால், கர்ப்பிணி என்றும் பாராமல் அந்தப் பெண்ணின் வயிற்றைக் குத்திக் கிழித்து, அந்தச் சிசுவை தீயில் தூக்கிப் போட்டு குதியாட்டம் போட்ட கூட்டத்தையும் அந்த நேரத்தில் அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவரையும் எந்த இடத்தில் நிறுத்துவது?

கண்ணியவான்கள் பட்டியலிலா - காட்டு விலங்காண்டிகள்  பட்டியலிலா?

தனது பயணத்தின்போது பிரசவ வலியால் துடித்த பார்ப்பனப் பெண்ணின் அழு குரல் கேட்டு, தன் வாகனத்தை நிறுத்தி, அந்த வாகனத்துக்குள்ளேயே பிரசவம் நடக்க வசதி செய்து கொடுத்தவர் தந்தை பெரியார்  -ஆம் அவர் நாத்திகர்தான்!

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொன்ன மகா பெரியவாள்(?) சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆத்திகர்தான் -குருமூர்த்தி கும்பல் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஆசாமிதான் இந்த சங்கராச்சாரியார்.

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவரும் அவரே!

இதில் யார் காட்டுமிராண்டி? குருமூர்த்தி கூட்டமே பதில் சொல் பார்க்கலாம்!

- கருஞ்சட்டை

 - விடுதலை நாளேடு 13 3 20

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து' என்று தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மத்திய அரசு

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது தமிழக அரசு இதில் உறுதியாக இருக்கவேண்டும்!

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து' என்று தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மத்திய அரசு; அதனை ஏற்கமாட்டோம் என்ற தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; இதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்; இருக்கும் என நம்புகிறோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்று

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம் - தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா பெயரில் நிறுவப்பட்ட திராவிடர் இயக்கச் சாதனை களின் பெருமைமிகு சான்று ஆகும்.

இதனை கபளீகரம் செய்து மத்திய அரசு தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர, தந்திரமாக அதனைப் பிரித்து, மிகப்பெரிய உயர்கல்வி ஆராய்ச்சித் தனி நிறுவனமாக, அதிகமான நிதியை ஒதுக்கிச் செய்வதாக தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி, தனது வலையை விரித்தது.

அப்போது நாமும், தி.மு.க.வும் மற்றும் பல கல்வியாளர்களும், பல அரசியல் கட்சிகளும் எதிர்த்தன!

தமிழ்நாடு அரசுக்குத்

தக்க முன்னெச்சரிக்கை விடுத்தோம்!

தமிழக அமைச்சர்கள் அய்வர் கொண்ட குழு ஒன்று போடப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டபோதே, நாம் தமிழ்நாடு அரசுக்குத் தக்க முன்னெச் சரிக்கை விடுத்தோம்.

‘‘இத்திட்டத்தை தமிழ்நாட்டு அ.தி. மு.க. அரசு ஏற்கக்கூடாது; இதனால் காலங்காலமாக நமக்கு - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இட ஒதுக்கீடு பறிக்கக் கூடிய அபாயமும், ‘‘ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டு நுழைந்து, முழு ஒட்டகமும் உள்ளே வந்து, உள்ளே இருப்பவர்களை வெளியே விரட்டிடும்'' கதைபோல, அண்ணா பல்கலைக் கழகத்தின் நிலை மையும் ஆகிவிடும்!'' என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.

தற்போதுள்ள நிலவரப்படியே மத்திய அரசு தாராளமாக நிதி உதவியை மாநில அரசுக்கு - அண்ணா பல்கலைக் கழக பெருவளர்ச்சிக்குத் தரலாம்; A1 Research University   என்று ஆக்கலாமே!

உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது

‘‘இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்க வில்லை'' என்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் நேற்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த கபளீகரத் திட்டத்திற்கு இடம் தராத வகையில், உயர்கல்வித் துறை அமைச்சரின் கூற்று அமைந்துள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இறுதிவரை இருக்கவேண்டும்; இருக்கும் என நம்புகிறோம்.

அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்தால், இட ஒதுக்கீடு  பறிபோவது, அண்ணா பெயரில் மாற்றம் மட்டுமல்ல; நியமனங்களும் இட ஒதுக்கீடு  பின்பற்றப்படாமல் நடை பெறும்.

ஆளுநரின் நியமனம் - தவறான முன்மாதிரி!

சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தேடல் குழு கன்வீனராக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் (ஜே.என்.யூ.) துணைவேந்தர் என்ற பிரச்சினைக்குரிய நபரை ஆளுநர் நியமித்திருப்பது தவறான முன்மாதிரி யாகும். வெளிமாநிலத்தவர், ஏன் தமிழ் தெரியாத ‘சூரப்பர்கள்' அங்கு வந்து அதையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, உரிமைக்குப் போராடத் தயார் நிலையில் இருப்போம் நாம் அனைவரும்.

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.3.2020


வயிற்றிலும் - வாயிலும் அடித்துக்கொள்ளும் ‘தினமலர்!'

தி.மு.க. பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் 80 ஆண்டுக்கு மேலான பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். தி.மு.க.வின் 43 ஆண்டுப் பொதுச்செயலாளர்.  அவர் பணியின்மீது ‘தினமலருக்கு' என்ன சந்தேகம்? ‘தினமலர்' சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

தி.மு.க. செல்லும் பாதை யைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களே சொல்லி விட்டார் (2.12.2018). வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்கிறது ‘தினமலர்க்' கும்பல்!

‘தினமலர்க்' கூட்டத்தின் புலம்பலுக்கான காரணம் வெளிப்படையாகவே தெரிகிறது.

-  விடுதலை நாளேடு,12.3.20

புதன், 11 மார்ச், 2020

தடித்த தோலுக்கு சொரணை வராது!

பெண்களைப் பற்றி 'தினமலர்', 'துக்ளக்', கும்பலுக்கு என்ன கருத்து என்பது ஊரறிந்த ஒன்று.

பெண்களின் மக்கள் தொகை வீழ்ச்சி, பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கூறியதற்குப் பதில் அளிக்க முடியாமல் மூச்சுத் திணறும் தினமலர் - பந்தை அடிக்க முடியாத நிலையில் காலை அடிக்கிறது.

இராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறித்து 'துக்ளக்' ஆத்திரப்படுகிறதே - அது குறித்து குருமூர்த்தி அய்யர்வாளைச் சீண்ட வேண்டியதுதானே!

பெண்கள் அதிகம் படித்தால், கை நிறைய சம்பளம் வாங்கினால் - ஆணுக்கு அடங்கமாட்டார்கள். குடும்பம் சீரழிகிறது என்று கூறும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தைச் சீண்ட வேண்டியது தானே!

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியபோது, தினமலரின் பேனாவுக்கு முடக்கு வாதம் ஏற்பட்டதா?

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களி லும் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது 1996 முதல் நாடாளுமன் றத்தில் நிலுவையில் இருக்கிறதே - அது குறித்து என்றைக்காவது திரிநூல் தினமலர் கண்டித்ததுண்டா?

பெரியார் கல்வி நிறுவனங்கள் பெண்களுக்குத் தொழிற்கல்வி அளிப்பது - ஆத்திகக்காரர்களுக்கு எப்படி தெரியும்?

"மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப் புகளிலும் அதே விகிதத்தில் அளிக்கப்பட வேண்டும்" என்றால்,

தினமலரின் அஸ்தியில் ஜூரம் கண்டு கொந்தளிப்பது - அதன் மனுதர்மப்புத்தி யைத் தானே புலப்படுத்தும். என்ன சூடு கொடுத்தாலும்  தடித்துப்போன தோலுக்குச் சொரணை மட்டும் வராது - வரவே வராது.

-  விடுதலை நாளேடு,11.3.20

கரோனா பரவிவரும் நிலையில் கோவில்களுக்கு வரவேண்டாம் என்பது வரவேற்கத்தக்கதே!

சர்வ சக்தி - சர்வ வியாபி - சர்வதயாபரன் எனும் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்யென்று உணர்வீர்!

பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டும் தமிழர் தலைவரின் அறிக்கை

கரோனாவா - சிவனா? யாருக்கு சக்தி?

வாரணாசி சிவனுக்கு முகக் கவசம்

கரோனா நோயின் அச்சத்தால் கோவில்களுக்கு வரவேண்டாம் என்று கோவில் தேவஸ்தான நிர்வாகம்  அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி - கடவுளின் சர்வ சக்தி என்பதெல்லாம் உண்மையல்ல என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவேண்டிய தருணம் இது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

சீனாவில் ஏற்பட்ட ‘கரோனா வைரஸ்' என்ற தொற்று நோய், அங்கே லட்சக்கணக்கானவர்களைப் பாதித்ததோடு, மூவாயிரம் பேர்களுக்குமேல் உயிர்க் கொல்லியாகவும் அமைந்தது - மனித குலத்திற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவலம்; துன்பமும், துயரமும் பொங்குமாங் கடல்போல் வாட்டுகின்றது!

அந்நோய் தொற்றானதால் உலக நாடுகள், சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நுழைந்து, சுற்றுலா,  தொழில், பயணங்கள் இவைகளில் எல்லோரும் அஞ்சி வாழும் கொடுமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும், கைகொடுப்பது, தும்மலை அருகிலிருந்து செய்வது, அடிக்கடி கைகளைச் சுத்தமாக கழுவாமை முதலிய பல்வேறு அன்றாட உடல் அசைப்புகளுக்கும் மிகவும் கவனமாக இருக்க மருத்துவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி ஒழுகவேண்டிய நியதிகள் ஆகும்!

வருமுன்னர் காப்பதே சிறப்பு!

வருமுன்னர் காப்பதே சிறப்பு. எனவே, தகுந்த எச்சரிக் கையை ஏற்று நடப்பது சாலச் சிறந்தது. மத்திய - மாநில அரசுகளும் அவரவர்கள் யுக்தானுச்சார முறையில் அவசரத் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்று வருகின்றன. மேலும் தீவிரமாக்குவது - போர்க்கால நடவடிக்கைகளைப் போன்று செய்தல் அவசியம் என்று பலரும் கூறுவது - நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான். எந்த மாச்சரியத்திற்கும் இடந்தரக் கூடாத சூழல் இந்த கரோனா எதிர்ப்பு யுத்த முயற்சிகளும், முன்னெடுப்புகளும் - மனிதாபிமான முறைகளே!

பகுத்தறிவு அடிப்படையில் ஒரு கேள்வி

இந்நேரத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்டுவது - பகுத்தறிவு அடிப்படையில் மிகவும் தேவைப்படும்.

கோவில்கள், திருவிழாக்களுக்கு மக்கள் அதிகம் கூடுவார்கள் என்கிறபோது, அதை தவிர்ப்பது நல்லது என்று கேரள அரசு போன்ற அரசுகள் வெளிப்படையாகக் கூறு கின்றன. அவ்வளவு தூரம் போவானேன்!

‘‘திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் வரவேண்டாம்; அதிலும் குறிப்பாக என்.ஆர்.அய். என்ற வெளிநாட்டிலிருந்து வரும் பக்தர்கள் அறவே அதனைத் தவிருங்கள்'' என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அதுபோலவே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் அதிக பக்தர்கள் வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் - தேவசம் போர்டு சார்பாக பக்தர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இவை வரவேற்கப்பட வேண்டியவைகள் - கரோனாவின் கொடுமையைக் கருதி,

கடவுளுக்கே முகமூடியா?

வாரணாசியில் ஒரு கடவுள் சிலைக்கே அங்கே உள்ள அர்ச்சகர், நிர்வாகிகளால் வாய்க்குக் கவசம் - நோய் தடுக்க மூக்கு, வாயை அடைக்கும் முகமூடி அணிவிக்கப் பட்டுள்ளது எவ்வளவு வேடிக்கை என்பதை பக்தகோடிகள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

கரோனா - கடவுளையும் தாக்குமாம்! தடுப்பு முறையாம் - இந்த முகபடாம்!

அட, அதிபுத்திசாலி ஆத்திகர்களே! பரிதாபத்திற்குரிய பக்தர்களே - கொஞ்சமாவது யோசித்தீர்களா? கரோனா கடவுளைத் தாக்கும் என்றால், ‘‘கடவுள் சக்தி  என்னவாயிற்று?'' என்று பகுத்தறிவுவாதிகள் கேட்டால், ஏன் கோபம் வர வேண்டும்?

சர்வ சக்தி சாமிக்கு இது தேவையா?

‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் - திருப்பதி வெங்கடாசலபதி'' என்பதால்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் பலரும் தங்களையும், தங்களது பதவி சேமிப்பு களையும் பாதுகாக்க அடிக்கொருமுறை குடும்ப சமேதரராய் ‘ஜருகண்டி' இல்லாமல் வசதியான தரிசனம் செய்து வருகின்றனர்!

அதுபோலவே, அடுத்த பெரு வருவாய் சபரிமலை அய்யப்பனுக்குத்தானே! அவன் இந்தக் கரோனாவைத் தடுத்திருக்கவேண்டாமா? துவம்சம் செய்திருக்கவேண்டாமா? அதை பினராய் விஜயன் தலைமையில் (கம்யூனிஸ்ட் அரசு அல்லவா) செய்யவேண்டியுள்ளது!

கடவுளையும், பக்தர்களையும் பாதுகாப்பதும் மனித சக்தி தானே - அரசுகள்தானே!

‘‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை'' என்பது கரோனா வுக்குமுன் செல்லுபடியாகாது என்பதால்தானே தகுந்த தடுப்பு ஏற்பாடுகள்.

‘‘கடவுள் கருணையே வடிவானவன்'' என்று சொல்கிறார்கள் பக்தர்கள்.  அதற்கு நிரூபணம் எங்கே?

கடவுள்களின் முச்சக்தி எங்கே?

‘‘எல்லா மதக் கடவுள்களுக்கும் முப்பெரும் சக்திகள் உண்டு'' என்று பொதுவாக அனைவரும் கூறி, அதனால் உலக க்ஷேமம் கருதி கடவுளை வணங்கி, பிரார்த்தனை மூலம், காணிக்கை போடுவதன்மூலம் பலனடையலாம் என்று போதிக்கிறார்கள்.

1. சர்வ சக்தி (Omnipotent)

2. சர்வ வியாபி (Omnipresent)

3. சர்வ தயாபரன் (Omniscient)

இம்மூன்றும் இருந்தால், கரோனா, பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சார்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் மனித குலத்தை அழிக்க வரலாமா? தண்டனை தந்தான் என்றால், அன்பே வடிவமானவன் என்பது பொய் அல்லவா?

அறிவை விரிவு செய்க - பேராபத்தைத் தவிர்த்திடுக!

இப்படிக் கேட்பது நிதர்சனமானது. கண்ணுக்குத் தெரிந்து, கண்மூடிப் பழக்கத்திற்கு அடிமையாகலாமா? குடிப்பவருக்குத் தேவைப்படும் போதை போன்றதுதானே பக்தி!

கடவுளால் ஆகாதது- மருத்துவத்தால் இன்று முடிகிறது. இதுதான் பகுத்தறிவின் விளக்கம்.

எது நடந்தாலும் புத்தியை மட்டுப்படுத்தாமல், கோபத்தைத்தான் பதிலாகத் தர முடியுமே தவிர, அறிவை விரிவு செய்ய இதைவிட அருமையான வாய்ப்பு மனித குலத்திற்கு வேறு கிடைக்குமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள், தோழர்களே!!!

 

கி.வீரமணி

ஆசிரியர்

நன்றி: ‘உண்மை' தலையங்கம்

சென்னை

11.3.2020

கேந்திர வித்யாலயாவின் வேலை வாய்ப்பு விளம்பரம் (மோசடி)

தமிழ்நாட்டில் மட்டும் தமிழும் - ஆங்கிலமும் இருட்டடிப்பு செய்யப்படுவதின் மர்மம் என்ன?

மத்திய அரசுக்குச் சொந்தமான திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புக்கான விளம்பரத்தில் பெரும்பாலும் இந்தியும், கொஞ்சம் ஆங்கிலமும் கலந்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளதில் அந்தந்த மாநில மொழிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தாய்மொழியான தமிழ் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கேந்திர வித்யாலயாவின் 2020-2021 ஆண்டு ஆசிரியர்கள் பணிக்கான அறிவிப்பு,

தகுதியானவர்கள் கவனத்திற்கு!

முதுநிலை பட்டயப்படிப்பு(பிஜிடி) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு(டிஜிடி) மற்றும் டிப்ளமா கம்யூட்டர் புரோகிராமர், மேற்பார்வையாளர், செவிலியர், யோகா ஆசிரியர், தமிழ் ஆசிரியர், கைவினைப் பொருள் தயாரிப்பு பயிற்சியாளர், பி.டி. ஆசிரியர் போன்றோர் தேவைப் படுகிறது, மேலே கூறியவற்றிற்கு தகுதியான நபர் கள் தகுந்த சான்றிதழ்களோடு 15.3.2020 மற்றும் 16.3.2020 அன்று கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாக வரவும்

நேர்முகத்தேர்விற்கு வரவேண்டிய நேரம் காலை 8 மணி முதல் 10 வரை

இடம் கேந்திரிய வித்யாலயா, சி யு டி என், திருவாரூர்

இப்படி ஒரு  விளம்பரம் திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிக்கான கேந்திர வித்யாலயாவிற்காக  நாளிதழ்களில் வெளியாகியுள்ளது,

அதில் கேந்திரவித்யாலயா என்ற பெயர் மட்டுமே தமிழில் உள்ளது. மற்றவை அனைத்துமே பெரிய எழுத்துக் களில் இந்தியில் உள்ளது.

அதன் கீழே பெயரளவிற்கு ஆங்கி லத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது இதைப் படிக்கும் இந்தி தெரியாத நபர்கள் தமக்கான விளம்பரம் இல்லை என்று நினைக்கும் நோக்கில் திட்டமிட்டே இந்த விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா ஜம்மு, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங் களில் ஆங்கிலத்தில் தனியாகவும், இந்தியில் தனியாகவும், மேலும் அந்தந்த மாநில மொழிகளில் தனியாகவும் விளம்பரம் கொடுக்கும்போது, தமிழகத்தில் இந்தியை முக்கியப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விளம்பரங்களைப் பார்க்கும் போது தமிழாசிரியர்களும் இந்தி கற்று இருக்க வேண்டும் என்ற ஒரு மறைமுக எண்ணத்தையும் உருவாக்கி யுள்ளார்கள் என்று தெரிகிறது.

இதன் மர்மம் - சூழ்ச்சி புரிகிறதா?

மத்திய அரசின் நிறுவனம் ஒன்றின் இத்தகு விளம்பரம் எதைக் காட்டுகிறது? தமிழ்நாடு என்றால் வஞ்சிக்கப்படத்தான் வேண்டுமா? மத்திய அரசு என்பது இந்தியா முழுவதுக்குமானது இல்லையா? இந்த விளம்பரம் எல்லா மொழி களிலும் வெளிவர மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் - அத்தோடு இட ஒதுக்கீடுபற்றியும் குறிப்பிட வேண்டும்.

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை,

11.3.2020


இந்தூரில் என்ன நடந்தது?டாக்டர் கிருபாநிதி பதில்:

தமிழா தமிழா (ஏப்ரல் 2003) ஏட்டுக்கு டாக்டர் கிருபாநிதி அளித்த பேட்டி.
கேள்வி: இந்தூரில் என்ன நடந்தது?
டாக்டர் கிருபாநிதி பதில்: தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன். அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழித்திடுவேன் என்று பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.
நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா, அவர் எதையும் கேட்கிற நிலையில இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார் கிட்டப் பேசுறோம், என்ன பேசுறோம்னு உணருகிற நிலையில் - நிலைமையில இல்லை. ஒரு கட்டத்தில் என் கையைப் பிடிச்சி முறுக்கி அடிச்சிட்டார்.
கேள்வி: இல கணேசன் உங்கள்மீது அவ்வளவுக் கோபமாவதற்கு என்ன காரணம்?
டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது அதற்கு முன் கட்சி கணக்கு வழக்குகளை சரி பார்த்து ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல குளறு படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசியச் செயலாளராக ஆன பிறகும் மாநில கட்சி நிதியை கையாண்டு கொண்டி ருந்தார். இதை நான் தடுத்ததால் ஆத்திரப் பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய் விட்டார்.
கேள்வி: நீங்கள் தமிழக தலைவராக பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங் களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?
டாக்டர் கிருபாநிதி: ஆமாம், தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப் படை வசதிகள்கூட செஞ்சு தரலை ஃபேக்ஸ் மிஷன் நானே சொந்தமாக வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சிக்கிட்டேன். இப்படி கட்சிப் பணிகளுக்குச் சொந்த பணத்தை செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமையகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களை இயக்கும் சூத்ரதாரி இல. கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.
கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வு தலைவிரித்து ஆடுகிறது என்று பலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்ப தால்தான் அவமானப்படுத்துகிறார்களா?
(சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால ஜீரணிக்க முடியல என்று கூறினார்.
- நாச்சியாள் சுகந்தி முகநூல் கருத்து , 11.3.20

செவ்வாய், 10 மார்ச், 2020

டாக்டர் ராமதாசுக்கு 'முற்றி விட்டதா?'

மின்சாரம்

'திரௌபதி' திரைப்படம் ஒரு ஜாதி வெறி திரைப்படம் என்று கி. வீரமணி சொல்லி விட்டாராம்.

அப்படியே துள்ளிக் குதிக்கிறார் திண்டிவனம் மருத்துவர் இராமதாசு. 'திரௌபதி' படம் ஜாதி வெறி திரைப் படம் என்றால் டாக்டருக்கு என்ன வந்தது? ஓ, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறாரா - குற்றம் உள்ள நெஞ்சம் குறு குறுக்கத்தானே  செய்யும்!

அப்படம் ஜாதி வெறிப் படமா இல்லையா என்பது - எச். ராஜா போன்ற சங்கிகள் பாராட்டி சொல்லியதிலிருந்தே தெருவுக்கு வந்து விட்டது.

அந்தப் படம் குறித்து ஆசிரியர் வீரமணி எங்கே சொன்னார்? என்ன சொன்னார்?  என்பது ஒருபுறம் இருக் கட்டும். அவர் கூறியது தவறு என்று பட்டால் கருத்து ரீதியாக மறுக்க முடியாத அளவுக்குக் கருத்து வளம் குன்றி விட்டதா மருத்துவருக்கு?

"தமிழ்நாட்டில் எல்லா ஜாதிகளையும் ஒழித்து விட்ட பெருமை கி. வீரமணி யையே சாரும். அதற்காக அவருக்கு ஜாதிகளை ஒழித்த சாதனையாளர்(?) என்ற பட்டத்தைக்  கொடுக்கலாம்" என்று சிபாரிசு செய்துள்ளார்.

வீரமணி ஜாதி ஒழிப்பு வீரரா, இல்லையா என்பது ஊர் உலகத்திற்கே தெரியும். இந்த வகையில் டாக்டர் ராமதாஸ்  எப்படிப்பட்டவர் என்பதும் நாட்டுக்கே தெரிந்த விடயமே!

ஜாதிக்காக ஒரு அமைப்பு - ஜாதியின் பெயரால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது என்பதால்  மக்களை ஏமாற்றிட இன்னொரு பெயரில் இன்னொரு கட்சி. இந்தத் தந்திரம் எல்லாம் எடுபடாது.

திராவிடர் கழகத் தலைவர் மீதான ஆத்திரம் இத்தோடு முடிந்து விட்டதா?

"பெரியார் விட்டுச் சென்ற பல்லாயிரம் கோடி சொத்துக்களை சுரண்டி தின்றதைத் தவிர  இவர்கள் செய்த சேவை என்ன?" என்று கேள்வி  வேறு கேட்கிறார்.

பெரியார் அறக்கட்டளை எந்தப் பணிகளை எல்லாம் செய்கிறது என்பதும் உலகறிந்த ஒன்றே!

ஆனால் கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் வேலையை டாக்டர் செய்ய ஆசைப்படலாமா?

'வன்னியர் கல்வி அறக்கட்டளை' என்று துவங்கப்பட்டு கோடிக்கணக்கில் வசூல் வேட்டையாடி உருவாக்கப்பட்ட அந்த அறக்கட்டளையின் பெயர் மாற்றப்பட்ட மர்மம் என்ன?

அது மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை என்று தனது பெயரால் மாற்றிக் கொண்டதும் -

கோனேரிகுப்பத்தில் உள்ள அறி வியல் கல்லூரியும், பொறியியல் கல்லூரியும், அறக்கட்டளை பெயரில் உள்ளதா  - மருத்துவரின் மனைவியின் பெயரில் உள்ளதா?

ஊரே கை கொட்டி சிரிக்கிறது - கட்சிக்காரர்களே மண்ணை வாரி இறைக்கிறார்கள்? ஏமாந்து விட்டோமே என்று கதறுகிறார்கள்.

ஏடுகள் எல்லாம் பக்கம் பக்கமாக தோலுரித்துக் காட்டின.

பாவம், மருத்துவர் இராமதாஸ் ரொம் பவும் தான் குழம்பிப் போயிருக்கிறார்.

"டாக்டருக்கு தேவை வைத்தியம்!" என்று எழுதியிருந்தோம் - இப்பொழுது முற்றிப் போய் விட்டது - அவசர உதவிக்கு மருத்துவர்கள் குழுவே தேவைப்படுகிறது.

மக்கள் மத்தியில் செல்லாக் காசாக்கப் பட்டு சட்டமன்றத்தில் ஒரே ஒரு இடத்தைக் கூடத் தர முன் வராமல் தமிழக மக்கள் உதறித் தள்ளி விட்டனர்.

எவ்வளவுக் கோடிப் பணம் குவிந்தென்ன? அதிகாரப் பசியை அது தீர்க்குமா?

அந்த வெறியில் ஏதேதோ கிறுக்கு கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். வீரமணி செய்த சேவை என்ன என்று கேட்கிறார் இப்பொழுது! ஆனால் மருத்துவர் 'நிதானமாக, தெளி வாக இருந்தபோது வீரமணி என் னென்ன சேவை எல்லாம் செய்தார்கள்' என்று பட்டியலே போட்டுள்ளார். இதெல்லாம் அவருக்கு நினைவில் இல்லை - செலக்டிவ் அம்னீசியாவில் இருக்கிறாரோ!

அது சரி, இராமதாஸ் சொல்லுவதற் கெல்லாம் பதில் எழுத வேண்டுமா என்று கேட்கலாம் - அதுவும் சரிதான்.

- விடுதலை நாளேடு 5.3.20

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு நாளில்

கழகத்  தலைவர்  தலைமையில், அன்னையின்  நினைவிடத்தில்  மலர்வளையம்  வைத்துச்  சூளுரை

சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் கவிஞர் கலி.பூங்குன்றன் மரியாதை செலுத்தினார்

சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் (10.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாளான இன்று (மார்ச் 10) கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் அணிவகுத்து வந்து தந்தை பெரியார் சிலை, அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மரியாதை

 அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுப் பிறந்த நாளான இன்று நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு (10.3.2020)

அம்மா சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிக்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவுப் பிறந்த நாளான இன்று சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மா சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. (10.3.2020)

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா


அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை

சென்னை,மார்ச்10, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள்  விழாவையொட்டி இன்று (10.3.2020) காலை  தமிழர் தலைவர் தலைமையில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் சூளுரை எடுத்துக்கொண்டனர்.

திராவிடர் மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தோழர்கள்  இன்று பெரியார் திடலில் ஒன்றிணைந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் திடலிலிருந்து ஊர்வலமாகச் சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள்.

‘தந்தை பெரியாரை 95 ஆண்டு காலம் காத்த அன்னை மணியம்மையார் வாழ்க’ என முழக்கமிட்டனர்.

பெரியார் திடலில் தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவ சிலைக்கு மாலை வைத்து, ‘அன்னை மணியம்மையார் வாழ்க’வென கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் முழக்கமிட்டனர்.

நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சூளுரை ஏற்பு

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூற, அவரைத் தொடர்ந்து  அனைவரும் உறுதிமொழி கூறி சூளுரை ஏற்றனர்.

பெரியார் நூலக வாசகர் வட்டம்

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் கி.சத்தியநாராயணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

திராவிடன் நிதி நிறுவனம்

திராவிடன் நிதி சார்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், அருள், வெங்கடேசன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொழிலாளர் கழகம் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள்

மகளிர் அணி, மகளிர் பாசறையின் சார்பிலும் மலர்வளையம் வைக்கப்பட்டது.

மோகனா அம்மையார், திருச்சி தங்காத்தாள்,  கழக துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி,  காப்பாளர் க.பார்வதி, கு.தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, டெய்சி மணியம்மை, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பேராசிரியர் தவமணி, நாகவள்ளி முத்தையன்,பெலா.மு.சந்திரா, வி.வளர்மதி, பி.அஜந்தா, தங்க.தனலட்சுமி, பெரியார் களம் இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, பூவை மு.செல்வி, ஓவியா அன்புமொழி, செல்வி முரளி, மோகனப்ரியா, மு.பவானி, வி.யாழ்ஒளி, யாழ்மொழி, சீர்த்தி, பாக்கியா, கனிமொழி, மணிமேகலை, த.மரகதமணி, அய்ஸ்வரியா, அன்புமதி, மேகலா, வெண்ணிலா உள்ளிட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பங்கேற்றோர்

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன்,மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் யாழ்திலீபன், பெரியார் சமூகக் காப்பு அணி அமைப்பாளர் சோ.சுரேஷ், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கவிஞர் கண்மதியன், வேலூர் மண்டல செயலாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன், ஆடிட்டர் இராமச்சந்திரன், தூத்துக்குடி பெரியாரடியான், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முனியசாமி, இங்கர்சால் பகலவன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் பாலு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் பி.சி.ஜெயராமன், கு.சோமசுந்தரம், வே.மணிகண்டன்,  சைதை மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், க.திருச்செல்வம், மு.சேகர், ஈ.குமார், மு.சண்முகப்பிரியன், க.வெற்றிவீரன், ச.மகேந்திரன், சைதை எத்திராஜ், வாசுதேவன், புழல் மாறன், ஆவடி கலைமணி, தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் இராமண்ணா, பி.சீனிவாசன், குன்றத்தூர்  திருமலை, அருணாசலம், காரைமாநகர் தே.சுரேஷ், இராமாபுரம் ஜெனார்த்தனன், பெரு.இளங்கோ, இரா.சதீசுகுமார், பொன்மாடசாமி, காரல்மார்க்ஸ், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், கே.செல்லப்பன், புரசை சு.அன்புச்செல்வன், ம.டில்லிபாபு, ஆத்தூர் சேகர், பா.முத்தழகு, பெரியார் நூலக வாசகர் வட்டம் க.சேரன், க.செல்லப்பன், ஆ.சீ.அருணகிரி, து.முத்துகிருட்டினன், தீனன், அப்துல் காதர், தொழிலாளர் கழகப் பொறுப்பாளர்கள் நாகரத்தினம், கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார்மாணாக்கன், க.தமிழினியன் மற்றும் சென்னை மண்டலத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 - விடுதலை நாளேடு, 10.3.20