ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 மார்ச், 2020

ரஜினி பூனைக்குட்டி வெளியில் வந்தது!

கலி.பூங்குன்றன்

டிஸ்கவரி சேனலில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அளித்த பேட்டி 'இந்து தமிழ்' நாளேட்டில் (26.3.2020) வெளிவந்துள்ளது.

என்மீது காவிச் சாயம் பூச நினைக்காதீர்கள் என்று கூட அவர் சொன்னதுண்டு. அதே நேரத்தில் தாம் நடத்த இருப்பது "ஆன்மிக அரசியல்" என்று இன்னொரு பக்கத்தில் சொல்லிக் கொண்டும் வருகிறார்.

இதே ரஜினிகாந்த் 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளையொட்டி 12, 13 ஆகிய இரு நாள்களிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் என்ன கூறினார்?

கேள்வி: அரசியல் - ஆன்மிகம் ஒப்பிடுங்கள்?

ரஜினி பதில்: "ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏன்னா அது பாம்பும் - கீரியும் மாதிரி. எதிர்த் திசையில் உள்ளவை"

என்றாரா இல்லையா?

அப்படி சொன்னவர்தான் இப்பொழுது 'ஆன்மிக அரசியல்' நடத்தப் போவதாகப் பேசியுள்ளார். அதாவது இவர் நடத்தப் போகும் அரசியல் என்பது பாம்பும் - கீரியுமாக, அசல் சண்டை அரசியலாக (சினிமாவில் சண்டைக் காட்சிதானே பிரமாதம்!) இருக்கும் - அப்படித்தானே!

ரஜினியை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம்; அவ ரைப் பேச விட்டாலே போதும் - அவர் முகத்திரையை அவரே கிழித்துக் கொண்டு விடுவார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்தப் பயத்தில்தான் செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறாரோ!

சரி... 'டிஸ்கவரி' சேனல் பேட்டிக்கு வருவோம்.

1. இந்துக்களுக்கு ஒரு நாடு தான் உள்ளது. அது இந்தியா மட்டுமே என்று கூறுகிறார்.

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்கள் கூட்டமும், அவற்றின் அரசியல் வடிவமான பிஜேபியும் கூறி வரு வதைத்தான் அட்சரம் பிறழாமல் சொல்லுகிறார் ரஜினி.

இந்தியா 'இந்துக்களின் நாடு' என்று யார் சொன்னது என்பது முதற் கேள்வி. ஒரு மதம் என்று சொன்னால் அதனைத் தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும், அதற்கென்று ஒரு மதநூலும் இருக்க வேண்டும்!

இந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது என்று ஒரு வரலாற்றுக் குறிப்பும் இருக்க வேண்டும். வரையறைகள் இந்து மதத்துக்கு உண்டா?

இல்லை என்பது மட்டுமல்ல; முரண்பாடுகளின் மொத்த உருவமாக அல்லவா இந்து மதம் இருக்கிறது.

சங்கரர், மத்துவர், இராமானுஜர் என்பவர்கள் இந்து மத முன்னோடிகள் என்றால் இவர்களுக்குள் முரண் பாடுகள் ஏன்? (சங்கரர் என் கடவுளின் அவதாரங்கள் ஆயிற்றே!)

சங்கராச்சாரியாரை ஜீயர் ஏற்றுக் கொள்கிறாரா? ஜீயரை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்கிறாரா?

ஜீயரின் வைணவத்தில் வடகலை-தென் கலைப் பிரிவுகள் ஏன்? அவர்களுக்குள் சண்டைகள் ஏன்? காஞ்சீபுரம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா? என்ற சண்டை வெள்ளைக்காரன் காலத்தில் இலண்டன் பிரிவி கவுன்சில் வரை போய் சந்தி சிரித்தது ஏன்?

"இந்து மதம் என்பது நாம் வைத்த பெயர் அல்லவே - வெள்ளைக்காரன் வைத்த பெயர்" என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறினாரே! இந்த இலட்சணத்தில் 'இந்து மதம்' எங்கே வந்து குதித்தது?

சரி... இந்து மதமே இருப்பதாக - வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சரி சமமாகத்தானே இருக்க வேண்டும்? இந்து மதத்தில் அப்படி இருக்கிறதா?

பிறப்பிலேயே பேதத்தை ஏற்படுத்தியவன் இந்து மதத்தின் படைத்தல் கடவுளாகிய பிர்மா என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதே!

நான்கு வருணத்தையும் படைத்தவன் பிர்மா எனும் கடவுள் - பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணனைப் படைத்தான், பாதங்களிலிருந்து சூத்திரனைப் படைத் தான் என்று இந்து மதத்தின் முக்கிய நூல் என்று கூறப்படும் மனுதர்மம் கூறுகிறதே! (அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87).

சூத்திரன் என்றால் ஏழு வகைப்படுவான் என்று கூறி, அதில் ஒன்று விபசாரி மகன், இன்னொன்று பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் - என்று கூறப்பட்டுள்ளதே! (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 415).

இதனை ஏற்றுக் கொள்கிறாரா ரஜினி? இந்த வருண வரிசையில் ரஜினிகாந்த் சூத்திரர் தானே.... அப்படி யென்றால்.... அவர் யார்?

இந்துக்களின் அய்ந்தாம் வேதம் என்று கீதையைச் சொல்லுகிறார்களே. அந்தக் கீதை 'பகவான்' கிருஷ் ணனால் அருளப்பட்டது என்றும் சொல்லுகிறார்களே... அந்தக் கீதை தான் என்ன சொல்லுகிறது?

"சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் - நான்கு வருணங் களையும் நானே படைத்தேன்" என்று 'பகவான்' கிருஷ் ணன் சொல்லுவதாகச் சொல்லவில்லையா? (கீதை அத்தியாயம் 4, சுலோகம் 13).

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32) என்று சொல்லுகிறதே!

இதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இந்த இந்து மத நாடாகத்தான் இந்தியா ஆக வேண்டுமா? இந்த இந்துக்களுக்குத் தான் ஒரு நாடு இல்லை என்று ரஜினிகாந்த் கவலைப்படுகிறாரா?

ஜெகத் குரு என்று இந்து மதத்தில் கூறப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி "தீண்டாமை க்ஷேமகரமானது" என்று கூறுகிறாரே! ("ஸ்ரீஜெகத் குருவின் உபதேசங்கள்" இரண்டாம் பாகம்).

டிஸ்கவரி சேனலில் சகோதரத்துவத்தைப் பற்றி ரஜினி கூறியுள்ளாரே - தீண்டாமை க்ஷேமகரமானது என்பதுதான் சகோதரத்துவத்திற்கான அடையாளமா?

இந்தியா இந்துக்களின் நாடு என்று சொல்லுவது - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதம் என்பது ரஜினிக்குத் தெரியுமா?

முன்பு அப்படி இருந்தது - இப்பொழுது இந்து மதம் மாறிவிட்டது என்று சொல்லப் போகிறாரா? ஓர் இந்துக் கோயிலில் இந்து மதத்தைச் சேர்ந்த யாராக இருந்தாலும் அதற்குரிய பயிற்சியும், கல்வியும் பெற்றால் அர்ச்சகரா கலாம் என்று சட்டம் கொண்டு வந்தால் அதனை எதிர்த்து சங்கராச்சாரியர்களும் ஜீயர்களும் உச்சநீதி மன்றம் செல்கிறாரார்களே - இது குறித்து ரஜினியின் கருத்து என்ன?

சூத்திரன் தொட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். சாமி செத்துப் போய விடும் என்று எங்களின் வைகனாச ஆகமம் சொல்லுகிறது என்று உச்சநீதிமன்றத்திலே ஆதாரம் காட்டிப் பேசினார்களே. இதுதான் இந்து மதத் தின் சகோதரத்துவம் என்பதற்கான அடையாளமா?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது ஓதுவார் திருவாசகம் பாடினார் என்பதற் காகக் கோயில் தீட்சதர்கள் அடித்து உதைத்தனரே! (கல்கி, 4.6.2000).

இவற்றையெல்லாம் அறிந்துதான் ரஜினி - ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி கூறும் இந்து நாட்டைப் பற்றி டிஸ்கவரி சேனலில் பேட்டி கொடுத்தாரா?

திலகர் மறைந்தபோது, அவரது உடலைச் சுமக்க காந்தியார் சென்றபோது, 'ஒரு பிராமணன் உடலை ஒரு சூத்திரன் தொடக் கூடாது' என்று கூறி காந்தியாரையே அவமதித்த வரலாறு தெரியுமா ரஜினிக்கு?

தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாருக்கே இந்து மதத்தில் இந்த நிலை என்பதை ரஜினிகாந்த் உணர்வாரா? திருந்துவாரா?

2. எல்லா மதங்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்கி றோம், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சகோதரர் களாக வாழும் நாடு இந்தியா மட்டுமே என்று பேட்டி கொடுத்திருப்பது நியாயந்தானா?

450 ஆண்டு வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்த கூட்டம் தானே இப்பொழுது இந்தியாவை ஆண்டு கொண்டு வருகிறது. இது நியாயம்தான் என்று கூறுகிறாரா திருவாளர் ரஜினி?

பூரிஜெகன்நாதர் கோயில் உண்மையில் புத்தர் கோயில்தான் என்று விவேகானந்தர் கூறியது குறித்து கருத்தென்ன?

பசுவதைத் தடை என்ற பெயராலே ஒரு பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே அகில இந்திய காங்கிரசின் தலைவர் காமராசரை தீயிட் டுக் கொளுத்தியவர்கள் யார்? (தி.மு.க. தொண்டர் ஒருவரால் தப்பிப் பிழைத்தார்). இன்றைய பிஜேபியின் பழைய பெயரான ஜனசங்கத்தைச் சேர்ந்த வர்களும், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்தவர் களும், நிர்வாண சாமியார்களும், சங்கராச் சாரியார் களும் தானே!

காமராசரைப் பற்றி பெருமையாகப் பேசும் திருவா ளர் ரஜினி - காமராசருக்கு ஏற்பட்ட இந்த நிலையைத் தெரிந்த பிறகும் இந்து மதத்தின் சகிப்புத் தன்மையை தலையில் தூக்கி வைத்து மெச்சப் போகிறாரா?

3. இந்தியாவின் கலாச்சாரம் குறித்தும் கருத்து சொல்லி இருக்கிறார். இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரம் இருக்கிறதா? பன்மொழிகள், பல இனங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் தான் இந்தியா -  இந்தியா ஒரே நாடல்ல!

உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வீடு வரை மாறுபாடு கொண்ட பல கோடி மக்கள் வாழும் துணைக் கண்டமே! துப்பாக்கி முனையில் வெள்ளைக்காரர்களால் நிர் வாக வசதிக்காக உண்டாக்கப்பட்டது தான் இந்தியா!

4. பொருளாதார ரீதியான சமத்துவம் பற்றியும் பேசு கிறாரே - ஒருவன் ஏழையாகவும், ஒருவன் பணக்கார னாகவும் இருப்பதற்குக் காரணம் 'கர்மப்பலன்' எனும் இந்து மதத் தத்துவத்தை ஏற்கிறாரா ரஜினி?

எல்லாம் புரிந்து கொண்டுதான் ரஜினிகாந்த் பேசுகிறாரா?

புரியாமல்தான் பேசுகிறார் என்றால் இப்பொழு தாவது புரிந்து கொள்ளட்டும்!

புரிந்து கொண்டுதான் பேசுகிறார் என்றால் - இவரை நாட்டு மக்கள் புரிந்து கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 27.3.20

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய்யர் குருமூர்த்தியா - ரஜினிகாந்தா?

துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர்  ரஜினிகாந்த் தந்தை பெரியார்பற்றிப் பேசிய பேச்சு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அல்லவா! அவர் அன்று பேசியது என்ன?

‘‘1971 இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு, ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை - அதை ‘சோ', ‘துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.''

ரஜினியின் இந்தப் பேச்சை மய்யப்படுத்திதான் கடந்த 6 வார காலமாக சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பின. விவாத - பிரதிவாதங்கள் நடந்தன.

‘துக்ளக்'கும் தன் பங்குக்குத் தனக்கே உரித் தான வக்கணையோடும், வில்லங்கத்துடனும் எழுதிக் குவித்தது.

இப்பொழுது இந்த வார ‘துக்ளக்'கில் (4.3.2020).

‘துக்ளக்' பொன் விழாவில் ரஜினி காந்த் பேச்சு என்று ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதோ அந்தப் பேச்சு:

‘‘1971 இல் சேலத்தில் பெரியார் அவர்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக் கொண்டு ஒரு ஊர்வலம் போனார்கள்'' (‘துக்ளக்', 4.3.2020, பக்கம் 13) என்று ரஜினி பேசியதாக ‘துக்ளக்' வெளியிட்டுள்ளது.

‘‘ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள்'' என்று ரஜினி காந்த் பேசியதை மாற்றி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள் என்று இவ்வார இதழில் ‘துக்ளக்' வெளியிடுவானேன்?

உடை இல்லாமல், செருப்பு மாலை போட்டு என்ற சொற்களை ‘துக்ளக்' மறைத்தது ஏன்?

ரஜினி பேசிய பேச்சுக்கு ஆதாரமாக வீடியோவே இருக்கும்பொழுது, ‘துக்ளக்' இந்தப் பித்தலாட்டம் செய்வானேன்?

உண்மையைச் சொல்லும்பொழுது, எப் பொழுது கேட்டாலும் அப்படியே முனை மழுங்காமல் அப்படியே சொல்ல முடியும்.

பொய்யைச் சொன்னால், அதைக் கடைசிவரை காப்பாற்றவே முடியாது. அந்த நிலையில்தான் ‘துக்ளக்'கும், குருமூர்த்தி அய்யர்வாளும் இப் பொழுது சிக்கியுள்ளார்கள். உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி நிலைதான் குரு மூர்த்திக்கு.

‘துக்ளக்' கின் துர்ப் போதனையைக் கேட்டு உளறிக் கொட்டிய ரஜினியை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இவாளை நம்பினால் என்னாகும் என்பதை இப்பொழுதாவது அவர் தெரிந்துகொள்வது நல்லது.

இதில் ரஜினி பொய்யரா அல்லது ‘துக்ளக்' குருமூர்த்தி பொய்யரா?

- விடுதலை நாளேடு, 26.2.20

செவ்வாய், 28 ஜனவரி, 2020

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்தது என்ன?

ரஜினிக்கு மறுப்பு

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு

தமிழர் தலைவர் பேட்டி

'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான  செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக்  கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று  சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.

ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது:  "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார்.  அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.

தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு 19 1 20

என்ன சொல்கிறார் நடிகர்? இவையும் ரஜினிகாந்தைப் பற்றிதான் - ஏடுகளில் வந்ததுதான் -2

இதுபோன்ற ஏராள தகவல்கள் உண்டு. பெரியார் படம் பார்த்த பின் அவர்மீது மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று சொன்னது - பாபா திரைப்படத்தில் பெரியாரை மட்டம் தட்டி, ராஜாஜியோடு ஒப்பிட்ட பாடலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்குத் தொடுத்தபோது, ரஜினி வருத்தம் தெரிவித்தது - பாடல் ஆசிரியர் வாலி நேராக பெரியார் திடலுக்கு வந்து வருத்தம் தெரிவித்தது போன்று ஏராளம் கைவசம் உண்டு, தேவைப்பட்டால் சந்திப்போம்!

- விடுதலை நாளேடு 23 1 20

வெள்ளி, 24 ஜனவரி, 2020

ரஜினியின் பின்ப(பு)லம் என்ன?

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினார் நடிகர் ரஜினிகாந்த்

மின்சாரம்

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு என்பார்கள். அது ரஜினிகாந்த் என்ற நடிகருக்குத் துல்லியமாகப் பொருந்திவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் 'சோ' ராமசாமியைப் புகழ்ந்து தள்ள வேண்டும் என்ற உந்துதலில் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் சொன்னதை நம்பி தந்தை பெரியார் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசினார்.

பிரச்சினை எரிமலைக் குழம்பாக வெடித்துச் சிதறிய நிலையில், நாலாப்பக்கங்களிலிருந்தும் கணைகள் கனலாகத் தாக்கிய கட்டத்தில், எதையாவது சொல்லித் தீரவேண்டும் என்ற நிலையில் ஒரு சில செய்தியாளர்களை மட்டும் அழைத்து, தன்னிலை விளக்கத்தை அளிக்க முயற்சி செய்துள்ளார்.

1971 ஜனவரி 23, 24 நாள்களில் சேலத்தில் திராவிடர் கழகத் தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு, அதனை ஒட்டிய பேரணி குறித்து 'துக்ளக்' விழாவில் உளறிக் கொட்டியதுதான் வம்பாகப் போய்விட்டது.

இதற்கு முன்பும்கூட எதையாவது ஒன்றைச் சொல்லி விட்டு, அது பிரச்சினையானவுடன் நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று புலம்பியதுண்டு.

'துக்ளக்' தனக்குக் குரல் கொடுக்கும் என்று மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகிவிட்டது.

'துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசினார்?

"1971இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவை யும் உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். அதனால் தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் 'துக்ளக்' பத்திரிகையை கைப்பற்றினார்கள். இந்த இதழை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். பிளாக்கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் பிரபலமாக்கினார்". இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

குருமூர்த்தி அய்யர்வாளோ அல்லது அந்த அக்ரகார வட்டாரமோ சொல்லிக் கொடுத்ததைத்தான் கிளிப் பிள்ளைப் பாட்டு போல் ஒப்பித்தார்.

ராமன், சீதையின் படங்கள் நிர்வாணமாகத்தான் சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டன என்று இந்தக் கூட்டத்தை நம்பிதான் சொல்லித் தொலைத்தார்.

“துக்ளக்" மட்டும் தான் தைரியமாக சேலம் மாநாட்டுப் படங்களை வெளியிட்டது என்றும் அடித்துக் கூறினார்.

பிரச்சினை வெடித்து வெளிச்சத்துக்கு வந்த நிலையில் அந்தப் படங்கள் வெளிவந்த (?) 'துக்ளக்' இதழை ரஜினியின் கையில் கொடுத்து, செய்தியாளர்களிடம் 'வெளுத்துவாங்கு' என்று கொம்புச் சீவி அனுப்பி இருக்க வேண்டும் அல்லவா?

அதுதான் இல்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பை யில் வரும்.

செய்தியாளர்களை ரஜினி சந்திக்கும்போது சேலம் படங்கள் வெளிவந்ததாகக் கூறப்பட்ட 'துக்ளக்' இதழோடு கம்பீரமாக வருவார் என்று எதிர்பார்த்தவர்கள் முகத்தில் கரியைத் தடவியதோடு, தனக்குத்தானும்கூட நன்றாக அரைத்த கரியை அப்பிக் கொண்டு விட்டாரே!

தான் 'தைரியமாக'ச் சொல்லக் காரணமாக விருந்த 'துக்ளக்' கைக் கொண்டு வரவில்லை. 'அவுட்லுக்' என்ற ஓர் இதழைக் கையில் வைத்து மந்திரவாதிபோல தளுக்குக் காட்டினார். 'இதோ பார் ஆதாரம்' என்றார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த 'அவுட்லுக்' இதழின் தொடக்கமே 1995 அக்டோபர் தான். 1971இல் நடந்த சேலம் நிகழ்ச்சிக்கு ஆதாரம் 1995 ஆம் ஆண்டு வந்த 'அவுட்லுக்' இதழாம்!

மேலும் கூடுதல் நகைச்சுவை என்ன தெரியுமா? நடிகர் எடுத்துக்காட்டியது 2017 நவம்பர் 20ஆம் தேதி 'அவுட்லுக்' இதழை. அந்த இதழிலாவது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன சேலம் படங்கள் இருந்தனவா? அதுவும் இல்லை.

சிரியுங்கள்! சிரியுங்கள்!! நன்றாகச் சிரியுங்கள்!!! விலா நோகச் சிரித்துத் தொலையுங்கள்!!!!

நடிகரின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்துச் சிரிப்பதா? பரிதாபப்படுவதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

என்ன செய்வது, இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய 'பரிதாபமே' நமக்கு.

சொல்லப்பட்டது - கேட்கப்பட்டது என்பதையெல்லாம் வைத்து ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுபவர் ஒரு பொறுப்பான ஆசாமியாக இருக்க முடியுமா?

ரஜினியை பற்றி கூட ஏராள தகவல்கள் உண்டே! எடுத்துக்காட்டுக்கு இதோ ஒன்று:

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்த கலாட்டாதான் அது:

குருமூர்த்திக்கு ரஜினி மீது என்ன வஞ்சமோ, இப்படி 'பழி தீர்த்து'க் கொண்டு விட்டார் என்று கூடச் சொல்லலாமே!.

இதில் கூடுதலான இன்னொரு நகைச்சுவையும் உண்டு. 'அவுட்லுக்' என்பது 'இந்து' குழுமத்தைச் சேர்ந்ததாம்! கூறுகிறார் நடிகர். எங்கே போய் முட்டிக் கொள்வதோ?

இப்படித் தத்து பித்து என்று உளறிவிட்டு, நான் கேள்விப் பட்டதைத்தான் சொல்கிறேன் என்று கூறி, 'இன்னும் சிறிது நேரம் இருந்தால் என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ, நாமும் உளறித் தொலைப்போமோ?' என்ற பதட்டத்தில் 'ஆளை விடுங்கள் சாமி!‘ என்று இடித்துப் புடைத்து விட்டுக் கம்பியை நீட்டிய காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

சேலம் ஊர்வலத்தின் போது, அதனை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜனசங்கத்தினர் ஊர்வலத்தில் சென்ற பெரியாரை நோக்கி வீசப்பட்ட செருப்பைப் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு எந்தவிதப் பதிலையும் சொல்லாதது ஏன்? இதுதான் ரஜினிகாந்தின் அறிவு நாணயத்துக் கான சரியான சாட்சியாம்.

இதற்குப் பதில் சொல்லாததன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் முனை முறியாத முழு எதிர்ப்புக்கும், படு வெறுப் புக்கும் ஆளாகிவிட்டாரே!

சேலம் நிகழ்வு மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல. மறக்க வேண்டிய சம்பவம் என்று தனது வீட்டின் அருகில் நடைபெற்ற பேட்டியில் கூறியுள்ளாரே நடிகர்.

மறக்க வேண்டிய ஒன்றை மறக்காமல் ஏன் நினைவு படுத்துகிறார்? ஒரு இரண்டு நிமிடப் பேட்டியில் கூட முரண்பாடு இல்லாமல் பேச முடியவில்லையே இவரால்? இந்த லட்சணத்தில் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறாராம்! நல்ல தமாஷ்!!

இராமனை வைத்து பெரியாரை சிறுமைப்படுத்தலாம் என்ற நப்பாசையில் மண் விழுந்துவிட்டதே - என் செய்வது!

'துக்ளக்'கின் துணிவைப் பற்றி சிலாகித்த குருமூர்த்தி வட்டாரத்து வார்த்தைகளை நம்பி வாய் நீளம் காட்டிய ரஜினி யின் நிலை  - எவ்வளவு பெரிய பரிதாபத்தின் பள்ளத்தாக்கில் குப்புற விழுந்து விட்டது.

இப்பொழுதாவது இந்தக் கூட்டத்தின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதைத் திருவாளர் ரஜினிகாந்த் உணர்வாரா?

இது ஒருபுறம் இருக்கட்டும் - இப்பொழுது தந்தை பெரியாரை சிறுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இதே நடிகர் 'பெரியார் மீது எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு உயர்ந்துவிட்டது!' என்று சொன்னார் என்றால் நம்ப மாட்டீர்கள்தானே!

அதையும்கூட நாளை பார்த்துவிடலாமே!

- விடுதலை நாளேடு, 22 1 20

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் நடந்தது என்ன?

ரஜினிக்கு மறுப்பு

'தி டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு

தமிழர் தலைவர் பேட்டி

'துக்ளக்' 50-ஆம் ஆண்டுவிழா நிறைவு நிகழ்வில், 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சி குறித்து உண்மைக்கு மாறான  செய்தியை கூறிய ரஜினிகாந்த் திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் 'டைம்ஸ் ஆப் இந்தியா'விற்கு கி.வீரமணி அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள். அப்படி வருபவர் மீதான நம்பகத்தன்மை அற்றுப் போய் விட்டது. அரசியலுக்கு வருகிறேன் என் பவர் பிறரின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்கவேண்டும். தந்தை பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய உண்மைக்கு மாறான கருத்தால் பெரியாரைப் பின்பற்றுபவர் களின் மனதைப் புண்படுத்தி விட்டார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரி யாரின் பற்றாளர்கள் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்" என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: "ரஜினி காந்த் உண்மைக்கு மாறாகக்  கூறி உள்ளார். மேடையில் சோ வைப் புகழ்கிறேன் என்று  சோ 'துக்ளக்' கில் எழுதாத ஒன்றையும், 'துக்ளக்'கில் அச்சிடாத ஒன்றை குறித்தும் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இவ்வாறு அவரைப் பேசத் தூண்டியது யார்? எங்கிருந்து அவருக்கு இப்படி பேசுமாறு உத்தரவு வந்தது?. ரஜினி யின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மேலும் மக்களிடையே அவர்மீதான நம்பிக்கையும் போய்விட்டது. இவர் கூறியுள்ளது 49-ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் நிகழ்வு ஆகும். இரண்டாம் நாள் கடவுளர் படங்கள் வாகனங்களில் மூடநம்பிக்கை குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கொண்டு வரப்பட்டன. அப்போது பெரி யாருக்குக் கருப்புக்கொடி காட்டிய ஜன சங்கத்தினர்(இன்றைய பாஜக) பெரியார் மீது செருப்பை வீசினார்கள். ஆனால் அப்போது பெரியார் வாகனம் முன்னே சென்றுவிட்டது, அந்த செருப்பு கடவுளர் படங்கள் கொண்டுவந்த வாகனத்தின் மீது விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது" என்று கூறினார்.

ரஜினி 'துக்ளக்' விழாவில் பேசியதாவது:  "1971இல் சேலத்தில் சிறீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ 'துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர் சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார்.  அது 50 ரூபாய்க்கு 'பிளாக்'கில் விற்றது" என்று கூறியிருந்தார்.

தந்தை பெரியார் மீது ரஜினிகாந்த் கூறிய இந்த உண்மைக்கு மாறான கருத் திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெரியாரிய அமைப்புகள் பல மாவட்டங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

 -  விடுதலை நாளேடு 19 1 20