சனி, 19 அக்டோபர், 2019

இந்துத்துவா பார்வையிலும் - ஈரோட்டின் பார்வையிலும் பெண்கள்!

கலி.பூங்குன்றன்


விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்குச் சமமானவர்களே   - ஒன்றுக்கும் உதவாதவர்கள்  - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - "தினமணி" தீபாவளி மலர் -1997

*****


வேலைக்குச் செல்லும் பெண்களில் 10 சதவிகிதம் பேர்கள்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள் - என்று இதே சங்கராச்சாரியார் சொன்னதற்காக, காஞ்சிபுரத்தில் திராவிடர் கழக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (9.3.1998)

"இன்று பெண்கள் அதிகம் கல்வி கற்க ஆரம்பித்து விட்டார்கள். திருமணத்தின் போது கணவன் மனைவி இருவரின் கல்வியும், சரிசமமாக இருந்து வருகிறது. சிலவேலைகளில் கணவனைவிட மனைவி அதிகம் படித்தவளாக இருக்கிறாள் அல்லது திருமணத்திற்குப் பிறகு படித்துப் பட்டம் பெற்று விடுகிறாள்.

சிலர் கணவனைவிட உயர் பதவிக்குச் சென்று விடுகிறார்கள். வருமானமும் கணவனைவிட அதிகம் வரத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் கணவனின் மனநிலைக்கு ஏற்ப  நடக்காத சூழல் மனைவிக்கு ஏற்பட்டுவிடும். இங்கு ஈகோவும் தோன்றி விடுகிறது. இந்த ஈகோதான் இந்தியாவில் இப்பொழுது நடக்கிறது. அதிகமான விவாகரத்துக்குக் காரணமாக  அமைந்து விடுகிறது.

மனைவி கணவனுக்கு சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும். பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகி விட்டால் அந்தப் பெண்ணை விலக்கி விடுவது நல்லது.

மனைவி என்பவள் கணவனின் தேவை களை நிறைவேற்றுவதை மட்டுமே கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை. இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகி விட்டால், அப்பெண் தேவையில்லை. அவருக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவையை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பயன்? ஆகையால் திருமணம் என்னும் காண்ட் ராக்டை முடித்து விட வேண்டும்."

- இவ்வளவையும் பேசி இருப்பவர் இப்பொழுது உடன்கட்டையை ஆதரித்துப் பேசும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாட்சாத் மோகன் பாகவத்துதான் - எங்கே பேசினார்? இந்தூரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் (30.6.2014).

பாரதத்தில் கற்பழிப்பு நடக்கவில்லை - இந்தியாவில் தான் கற்பழிப்பு நடப்பதாகக் கூறியதும் சாட்சாத் இந்த ஆர்.எஸ்.எஸ். தலை வர்தான்.

ஆர்.எஸ்.எஸ். - பிஜேபியில் இருக்கும் பெண்கள் இதைப் பற்றி எல்லாம் சிந்தித்த துண்டா?

பார்ப்பன நீதிபதி பார்வையில் பெண்கள்


Women should go back to their homes and not think of competing with men on everything. Since the lady is more capable of building the home. what is necessary that there must be a switch over from office to home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள். ஆதலால் அவர்கள் அரசு அலுவல்கள், பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணிகளில் ஈடுபடவேண்டும். எதற் கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிட வேண்டும்.

- (8.11.1996 அன்று பிரம்மகுமாரிகள் மாநாட்டில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா உரையிலிருந்து)

இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான்:


எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு


இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர் என்று இந்திய ரிசர்வ் வங்கி இயக்கு நர்களில் ஒருவரும், "துக்ளக்" ஆசிரியருமான எஸ். குரு மூர்த்தி பேசியிருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

"துக்ளக்" ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்போது ஆர்பிஅய் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கக் கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.

சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எஸ். குருமூர்த்தி கலந்துகொண்டு பேசுகையில், "இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30 சதவீதம் பேர்தான் உள்ளனர்.  பொருளாதாரம் தொடர்ந்து உயருவதற்குக் காரணம் நம் குடும்பம். அதன் மய்யமாக இருப்பவர்கள் தான் பெண்கள்.  ஆனால் பெண்கள் முன்பு போல இப்போது இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும், பெண் மைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் குறைந்துவிட்டனர்."

25.8.2019 'தினமணி'

பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு


எதிரான சங்கராச்சாரியார்


Sankaracharya against quota for women in politics virtually rejected for the demand for seperate reservation for women.

('The Pioneer' - 17.3.1997)

பெண்களுக்குத் தனியே இடஒதுக்கீடு அரசமைப்பில் கூடாது என்று கூறுகிறார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இவரை ஏற்கிறீர்களா? பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்கிற திராவிடர் கழகத்தை ஏற்கிறீர்களா?

பெண்களை அவமதிக்கும் ஸ்லோகம்


வடமொழி ஸ்லோகத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 1990ஆம் ஆண்டு டிசம்பர் 24இல் "இந்தியன் எக்ஸ்பிரஸ் - மெகசின்"  பகுதியில் முதல் பக்கக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு வெளிவந்துள்ளது.

'Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a women be pure'

இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ அல்லது கடல் சுவை நீரால் நிரப்பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மை யானவளாக இருப்பாள்.

இந்து மதத்தில் பெண்கள் நிலை


1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங் கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது : எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4. மதவிதிகள் கூறும் நூல்களில் ஒன் றாகிய ராமாயணம் உரைப் பது: தப்பட்டைகள், பயிரிடு பவர்கள், ஒடுக்கப்பட் டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக் கப்பட வேண்டும்.

-  (சுந்தர காண்டம் 5)

5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன் மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடை யவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர் களாகவோ இருக்கும்படியான மற்றவர் களுடைய இரக்கத்தினால் வாழ்பவ ளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்ச மென்னவெனில், அவளு டைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப் பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள்.

(அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப் பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள்  - எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.

(அத்தியாயம் 9, 22)

8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

தந்தைபெரியார் பார்வையில் பெண்கள்


1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரி யாரின் சீலங்கள் எப்படி இருந்தன?

1. மக்கள் பிறவியிலும், ஆண் - பெண் என்ற தன்மையிலும் உள்ள உயர்வு, தாழ்வு என்கிற  வித்தியாசங்கள் கண்டிப்பாய் ஒழிக்கப் பட வேண்டும்.

2(அ). குடும்பச் சொத்தில் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சம உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(ஆ). புருசன் மரணமடைந்துவிட்டால் அவன் சொத்து முழுவதையும் பெண்சாதிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

(இ) பாகம் பிரியாத குடும்பங்களில் கணவன் இறந்து போனால், அக்கணவனுக்குள்ள சகல உரிமைகளும், சொத்துகளும் அவனது மனைவிக்கு சர்வ சுதந்திரமாய் அனுபவித்துக் கொள்ள உரிமை அளிக்கப்பட வேண்டும்.

3. எல்லாப் பொதுப் பள்ளிக்கூடங்களிலும் ஆண் பெண் என்கின்ற வித்தியாசம் இல்லா மலும், உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசம் இல்லாமலும் கட்டாயப் படிப்பு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் 90 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் தலைமையில் 1928இல் சென்னையில் நடைபெற்ற தென் னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பதை எண்ணினால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியாது.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது ('குடிஅரசு' 16.6.1935) என்று சொன்னவரும் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியாரே!

85 ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுத் தந்தை பெரியார் தம் சிந்தனைச் சீலங்களையும், இந்த 2015இல் ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் கூறும் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து தெளிவு பெறுவதுடன் இந்தியாவைப் பொறுத்தவரையில் பாசிச இந்துத்துவாவின் அழிவில்தான் பெண்ணுரிமைப் புரட்சி மலர முடியும்.

இந்நாட்டு பெண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்பவர்களை அடையாளம் காண வேண்டிய காலகட்டம் இது. குறிப்பாக பெண்களைப் போகப் பொருளாக, அடிமையாக எண்ணுவதும், அதன் அடிப்படையில் செயல்படுவதும்தான் இந்துத்துவா!

சிந்தியுங்கள் - இந்துத்துவாவா - பெரி யாரியலா? குறிப்பாக பெண்கள் சிந்திக்கட்டும்.

- விடுதலை நாளேடு 13 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக