ஆளுநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆளுநர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 நவம்பர், 2023

அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ''அடக்கிவாசிக்க''வேண்டும்!


 உச்சநீதிமன்றத்தின் ஆணை - பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே!

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

2

அவரது அறிக்கை வருமாறு:

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பதுபோன்றது!

அடாவடியாக ஆளுநர்கள் சிலர் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, ஏதோ தங்களுக்கே தனி அதிகாரம் இருப்பதுபோல, எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவரும் போக்கினை எதிர்த்து, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன;  ஆளுநர்கள், உரிய சட்டப்பூர்வமான அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளும், தெளிவுரைகளும் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பது போன்று அமைந்துள்ளன.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் (தமிழ்நாட்டு தி.மு.க. அரசு உள்பட) பலருக்கு உரிய நியாயம் கிடைக்கும்;  அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் அவமதித்து திசை திருப்பும் திருகுதாள முறைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது தெளிவாகிறது!

அரசியல் அருவருப்பின் உச்சம்!

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே, அவர் ஏதோ ஆளுநர் ஆட்சி (Governor Rule -Article 356) நடைபெறுவதுபோல, அதீதமாக நடந்து கொள்வது அரசியல் அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

இதற்கு டில்லி ஒன்றிய ஆட்சியாளரின் ‘‘சமிக்ஞையும், கண் ஜாடையும்'', வெளிப்படையான ஆதரவுமே மூலகாரணம் என்பதை நாட்டில் உள்ள சாதாரண குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும்!

முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றிலேயே ஓர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களைப்போல் வெளிநடப்புச் செய்தது விவஸ்தையற்ற நடவடிக்கையே! அரசு - அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த தனது சட்டமன்ற உரையில், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர் களின் பெயரையே விட்டுவிட்டுப் படிப்பது - அதில் இல்லாததை இணைத்துச் சொல்வது போன்றவை ஜனநாயக மரபுக்கும், மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்களாகும்!

10 மசோதாக்களைக் காலவரையின்றிக்  கிடப்பில் போடுவது - அரசு நிர்வாகம் சீர்குலைவு அடையும் வகையில் அன்றாடம் ஓர் அரசின் மூலாதாரக் கொள் கைகளை எதிர்த்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது, குழந்தைத் திருமணங்களை ஆதரித்து, ஊக்குவிப்பது போல, குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் சில நிகழ்வுகளில் நடந்துகொள்வது போன்ற பலவற்றையும் செய்தார்.

ஆளுநர்களின் அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் (கிடப்பில் போட்ட மசோதாக்கள் மற்றும் பல கோப்புகள்பற்றி) என்ன செய்தார்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டகேள்வியும், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘‘அலங்கார பதவிதான் ஆளுநர் பதவியே தவிர, அவர்களுக்கென தனியே, பிரத்தியேக ஆளுமை செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பதவி அது அல்ல'' என்பதையும், ‘‘சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது'' என்று ஓங்கியடித்துக் கூறியுள்ளது அவர்களது அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி யேயாகும்!

அரசமைப்புச் சட்டம்பற்றிய தெளிவுரையாகக் கொள்ளவேண்டிய ஓர் ஆவணமாகும் - சரியான சட்ட விளக்கமுமாகும்.

உடனடியாக ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியே ஆர்.என்.ரவிக்கு இல்லை!

இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent)  அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை.

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டு மல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத் துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகி விடக் கூடும்.

எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை''யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!

அனைத்து மாநில ஆளுநர்களும் இனி அடக்கிவாசிக்கவேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர் களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது!


ஆசிரியர் கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

24.11.2023


புதன், 25 அக்டோபர், 2023

ஆரியர் - திராவிடர்பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி "ஆளுநர் மாளிகையே... அடக்கிடு வாயை..." - டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம்

சென்னை,அக்.25 - ஆரியர் - திராவிடர்பற்றி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி., கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு, தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய ‘நீட்' விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது. அந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்! ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ. பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதியாக, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார். ‘தமிழ்நாடு' என்று சொல்லாதீர்கள், ‘தமிழகம்' என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்கவில்லையா? வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தைத் தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித் திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகி களின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்து விட்டதாம். பா.ஜ.க. தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பா.ஜ.க. தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வர லாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து - ஒன்றிய பா.ஜ.க. அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து- ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த திரு.ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை? சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவது தி.மு.க. அரசு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண் டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்குகிறது ‘திராவிட மாடல்' அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடி யேற்றியபோது மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார். விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ் நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதோ ஒரு நீண்ட பட்டியல்! விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல. மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம்! பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை! மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு! பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது! பெருந்தலைவர் காமராசருக்கு, மணிமண்டபம்! மூதறிஞர் இராஜாஜிக்கு, நினைவாலயம்! தில்லையாடி வள்ளியம்மாளுக்கு, மணிமண்டபம்! வீரவாஞ்சியின் உறவினருக்கு, நிதி! வ.உ.சி. இழுத்த செக்கு, நினைவுச் சின்னம் ஆனது! விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம்! தியாகிகளுக்கு, மணிமண்டபம்! விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம்! தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு! நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போசுக்குச் சிலை! தியாகி கக்கனுக்குச் சிலை! சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்! - இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிப்பற்று - இனப்பற்றுடன் நாட்டுப்பற்றையும் ரத்த உணர்வாகக் கொண்டவர்கள் நாம். இந்திய விடுதலையின் 75 ஆவது ஆண்டு விழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடினோம். மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாளை ‘மகாகவி நாள்’ என அறிவித்தோம். மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம். செக்கிழுத்த செம்மல் - கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம் பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் படைப்புகளைத் தொகுத்துப் பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப் பட்டுள்ளது. காந்தியாரிடம் மாற்றம் தந்தது மதுரை! விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளிக் காட்சிகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் 20 முறை தமிழ்நாட்டுக்கு வந்தவர் அண்ணல் காந்தியடிகள் அவர்கள். அரையாடை அணிவது என்ற முடிவை மதுரை மண்ணில் இருந்துதான் காந்தியடிகள் எடுத்தார்கள். இதன் அடையாளமாகச் சென்னை அருங் காட்சியக வளாகத்தில் காந்தியடிகளின் நினைவுச் சிலையை அமைத்துள்ளோம். விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால், தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் - விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இப்படி பட்டியல்கள் ‘திராவிட மாடல்' அரசில் ஏராளமாக இருக்கின்றன என்பதை ஆளுநர் திரு.ரவி புரிந்து கொள்ள வேண்டும். ‘‘இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும்'' என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றினார்கள். முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பா.ஜ.க.வின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல், ‘திராவிடம்’ என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும். இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது. அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்கா தவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித் தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல் வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந் தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். திராவிட இயக்கம்பற்றி முனைவர் பட்டங்கள்! தமிழ்நாட்டில் பி.எச்.டி ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப் பட்ட தலைப்புகள்- குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட் டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பிஎச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங் களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன.அது போலவே, திராவிட இயக்கப் படைப்புகள் - படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார். தந்தை பெரியாரின் தொலைநோக்கு! விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பது தான் தமிழ்நாட்டின் வரலாறு. விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற் போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், காந்தியார் சுட்டுக் கொல்லப் பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, காந்தியாரைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறிய வர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’க் கடைப் பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ‘‘வெள்ளையர் ஆட்சி ஏன் ஒழியவேண்டும்'' என்று தலையங்கம் தீட்டிய பெரியார்! திராவிட இயக்கம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று கூவுவது ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்படும் உரைகளில் அடிக்கடி இடம்பெறுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் யார், ‘குடிஅரசு' ஏட்டில் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்’ எனத் தலையங்கம் எழுதிச் சிறை சென்றவர்கள் யார் என்பதும் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் புரியும். அதுவரை ‘‘ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை!'' பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய ‘கவர்னர்' என்ற நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்து கொண்டு கூச்சமில்லாமல் பொய்களைப் பேசுகிறார் ஆளுநர். திடீரென்று திருக்குறளில் “என்நன்றி கொன்றார்கும்” குறளை படித்திருக்கிறார். அதிமுக மேனாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் திரு.ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு- தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லை யென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல் வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்! -இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆளுநருக்கு எதிரான போராட்டம் 'பேருரு' எடுப்பது உறுதி!


WhatsApp%20Image%202023-07-25%20at%2014.54.59

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுந ருக்கு எதிரான போராட்டம் "விஸ்வரூபம்" எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (Article) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண் ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப் பட்டமாகச் செய்து - தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்!

சண்டித்தனம் செய்வதே - வாடிக்கையா?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட வரைவுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும், அல்லது முறைப்படி திருப்பி அனுப்பாமலும் காலந் தாழ்த்தி மக்கள் அரசான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைச் செயல்படாமல் செய்ய திட்டமிட்ட சண்டித் தனத்தைச் செய்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மிக உணர்ச்சி கொந்தளிக்கும் பிரச்சினையான 

நீட் தேர்வு விலக்கு போன்ற பிரச்சினையில் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதிக் கொண்டு 'நான் ஒரு போதும் கையெழுத்துப் போட மாட்டேன்" என்ற பொல்லாத வார்த்தைகளைக்  கூறி, ஜனநாயக விரோத அடாவடித் தனத்தை அங்கலாய்ப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்!

ஏதாவது ஒரு சாக்கை வைத்து, ஒரு சிறு கும்பலைக் கூட்டி, நாளும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சனாதன சத்சங்க பிரசங்கி போல, பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரராகவே,  தான் தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறும் ஓர் ஊழியக்காரர் என்பதை அறவே மறந்து விட்டு அனுதினமும் தனியே தர்பார் நடத்தி வருகிறார்!

சட்ட வரைவுகள் 

"கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஊறுவதற்கா?

பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற பழைய சட்டத்தை ஒரு பிடிமானமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை காவி மயமாக்க  தனது அதிகாரத்தை அவசியமற்றுப் பயன்படுத்துகிறார்.

ஆளுநர் வேந்தராக இருப்பதை ஏற்காத சட்ட வரைவு அவரது "கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஓராண் டுக்கு மேல் ஊறிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் இல்லாத  - தலையில்லா   பல்கலைக் கழகங்களாக பல மாதங்களாக  (சில ஆண்டுகளாகவே)  இருந்து வருவது கொடுமை!

பல்கலைக் கழகங்களில்   ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்த, தனித்தனித் சுதந்திரமான பல்கலைக் கழக விதிமுறைகள் - துணைவேந்தர் நியமனம் உட்பட உண்டு.

உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்பிற்குள் தேவையின்றித் தலையிடுவதா?

அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது, தான் விரும்புவது போல அச்சட்டங்களை மாற்றுங்கள், சம்பந்தமில்லாதவர்களை நியமனம் செய்யுங்கள் என்று மாநில அரசின் உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்புக்குள் இயங்க வேண்டியவைகளை மாற்றிட முறையற்ற சட்ட வரம்பு மீறிய ஆலோசனைகளைக் கூறி வரும் கொடுமை! இதனால் பல பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தர் கையெழுத்திட்ட பட்டங்கள்  பெறுவதில் தாமதத்தின்   காரணமாக அவர்கள் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. (பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு)

முன்பு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சனாதன  விளக்கம் கூறும் ராஜ் பவனத்தின் துணை பெற்றவருக்கு பதவி நீட்டிப்பை ஓராண்டு  அளித்து புதிய துணைவேந்தர் நியமிக்கப் படாமலேயே அவரே அப்பதவியைத் தொடரும் வகை உதவினார் ஆளுநர்!

பல்கலைக் கழக விதி முறைகளை மாற்றச் சொல்லி அழுத்தம் - இப்படி பல! இதற்கிடையில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்து காவல்துறை விசாரணையில் அதற்கு முகாந்தரம் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகும்கூட, அவர்கள்மீது ஊழலுக்கான வழக்குத் தாக்கலாக அனுமதி அளிக்க இந்த ஆளுநர் ஆர்.என். ரவி தயக்கம் காட்டி தனது வழக்கமான "தாமதப் பெட்டி"க்குள் போட்டு வைத் துள்ளார்.

ஊழலைச் செய்த மேனாள் அமைச்சர்கள்மீதுள்ள கோப்புகள் மேல் நடவடிக்கைக்கான அனுமதி அளிக்காது  கிடப்பில் வைத்துள்ளார் (அதிமுகவுடன் கூட்டணி வர இருப்பதால் இப்படி ஒரு பாராமுக குறுக்குச் சாலோ  என்று விவர மறிந்தவர்கள் பேசும் நிலை;  வெளிப்படை விவாதங்கள்). 

மகா வெட்கக்கேடு! கண்டனத்திற்குரியது!!

 நீட் தேர்வுக்கு விதி விலக்குக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அறவழியில் நடந்து வரும் நிலையில் "எதன் மீதோ மழை பொழிந்தது" என்பதைப் போல ராஜ்பவனத்தில் இருப்பது மகா வெட்கக் கேடு!

வன்மையான கண்டனத்திற்குரியது!  

ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஒரு மாபெரும் போராட்டம்   "பேருரு" எடுப்பது உறுதி!

மக்கள் நினைத்தால் மாற்றங்கள் தானே வரும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
22.8.2023

சனி, 11 மார்ச், 2023

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!


வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் ஆளுநர் அவர்களே!

தமிழ்நாடு பெரியார் மண் - சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது- கனவுகள் சிதைக்கப்படும்!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த்தினாலும், பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்! பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே! இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு: 

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்த நாள் முதல் இந்த நாள் வரை - தாம் அரசமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசின் ஓர் அங்கம் - அதன் வாயாகவும், குரலாகவும், செயலாகவும் இருக்கவேண்டும் என்ற அடிப்படைக் கடமை உணர்வை மறந்து அல்லது துறந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி யான தி.மு.க. ஆட்சியின் முழு முதல் எதிர்க்கட்சித் தலைவர்போலவே நடந்து வருவதோடு, நித்தம் நித்தம் ஆளுநர் வசிக்கும் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். பிரச்சார கேந்திரமாகவும் மாற்றி, திராவிட ஆட்சித் தத்துவத்தின் கொள்கை லட்சியங்களுக்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அனைத்துத் தரப்பு மக்களின் ஆத்திரத்தையும் பரிசோதித்துக் கொண்டே இருக்கிறார்!

தமிழ்நாட்டு மக்களின் 

பொறுமையை சோதித்து வருகிறார்!

மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளை (சுமார் 14-க்கும் மேற்பட்ட மசோதாக்களை) வேண்டுமென்றே ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டு, தமிழ்நாட்டு ஆட்சி, தமிழ்நாட்டு மக்களின் பொறுமையை சோதித்து வருகிறார்!

இதற்கு ஓர் ஆழமான பின்னணியாம்; அந்தப் பின்ன ணியை பின்னியவர்களின் கெட்ட புத்தியும்  (Mala fide), தீய எண்ணமுமே இதன் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதை சராசரி மக்களால் கூட ஊகித்துவிட முடியும்.

இதற்கிடையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினைப் பிளந்து, பிரிவுகளாக்கி சின்னாபின்னமானாலும் ஒரு பக்கம் சண்டை, மறுபக்கம் அரசியல் உறவு என்ற குரலொலி!

நாளும் அரங்கேறும் வித்தைகள் - 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்று தங்களது வாடகைக் குதிரைகளுக்குக் ‘கொள்ளு' காட்டுகிறது போலும்.

‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; 

காலிப் பை!''

முகமூடி அணிந்த அந்தக் குதிரைகளும் ‘‘வெறும் பைதான் கொள்ளு இல்லை; காலிப் பை'' என்பதைப் புரிந்துகொள்ளாமலே சவாரிக்குச் சரி என்று தலையாட்டி, அடிமை முறிச் சீட்டிலிருந்து வெளியேறிட ஆசை இருந்தாலும், துணிவின்றி அல்லாடுகின்றன!

இதற்காகவே மக்களின் ஆத்திரத் தீயில் அனுதினமும் நெய்யூற்றி வளர்க்கின்றன ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் ஆளுமை முகங்களும்!

அதில் சமீபத்திய வியூகம்தான் ஆன்-லைன் சூதாட்ட தடை மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, ஏறத்தாழ நான்கு மாதங்கள் - 142 நாள்கள் ஆன பிறகும், ஒப்புதல் தராமலேயே கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர்.

தற்கொலைகள் 

எண்ணிக்கை 44

இக்காலகட்டத்தில், தமிழ்நாட்டில் ஆன்-லைன் சூதாட்டத்தினால் வாரந்தோறும் வளர்ந்த தற்கொலைகள் எண்ணிக்கை 44 என உயர்ந்து வந்தது!

இத்தனை உயிர்ப் பலிக்குப் பின்பு - இப்போது அச்சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் திருப்பி அனுப்பி - ஓர் அரசியல் போருக்கு ஆயத்த மாகிறார் போலும்!

அதற்குக் காரணம் இந்த சட்டமன்றத்திற்கு அப்படி ஒரு சட்டம் செய்ய அதிகாரம் இல்லையாம்!

எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து 

'ஞானம்' பெற்றாரோ? 

அதை இத்தனை நாள் கழித்து எந்த காவி மரத்திற்குக் கீழ் அமர்ந்து ‘ஞானம்' பெற்றாரோ தெரியவில்லை!

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்பற்றியும் ‘அறிவு சூன்யமா?'

அந்தப் படிக்கு அதிகாரம் இந்த ‘திராவிட மாடல்' ஆட்சிக்கு இல்லை என்று கூறும் இவர், அதே விதி, பிரிவுகளைக் கொண்ட சட்ட வரைவான அவசரச் சட்டத்திற்கு (Ordinance) ஒப்புதல் கொடுத்தாரே அது சரியா?

பதிலளிப்பாரா ஆளுநர் ரவி?

அது சரி என்றால், இப்போது மறுப்பது அபத்தம் அல்லவா? திட்டமிட்ட அரசியல் வம்பு வளர்க்கும் படலம் அல்லாமல் வேறு என்ன?

அவருக்கு அரசமைப்புச் சட்டத்தை இன்று தமிழ் நாட்டு மண்தான் போதித்துக் கற்றுக் கொடுக்கவேண்டும் போலிருக்கிறதே!

ஏழாவது அட்டவணையில் உள்ள மாநில அரசின் அதிகாரங்கள் - (சட்டம் இயற்ற) என்ற பிரிவில், 34 ஆவது தலைப்பாக, Betting and Gambling என்று உள்ளது கூடத் தெரியாமலா இந்த சட்டப் பேரவைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று கூறுகிறார்!

வாதத்திற்காக இதை ஏற்றுக்கொண்டாலும்கூட, மற்றொரு கேள்வியை உடனே கேட்பார்களே!

அது தெரிந்த ‘சட்ட ஞானி' ஏன் 4 மாதம் மசோதாவைக் கிடப்பில் போட்டார் - உடனடியாகத் திருப்பி அனுப்பி, இதே காரணத்தை உடனே கூறியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

அறிஞர் அண்ணா அடிக்கடி எழுதுவார்:

‘சூட்சமம் புரிகிறதா தம்பி' என்று. அதுதான் இப்போது நமக்கு நினைவிற்கு வருகிறது!

மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கையெழுத்திடத்தானே வேண்டும்!

இப்போது அதே வாசகங்களுடன் அப்படியே மார்ச் 20 ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவையில் அம்மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 200 ஆவது (Article 200) கூற்றின்படி, இவர் கையெழுத்திட்டு அனுப்பித்தானே ஆகவேண்டும்?

அப்போதும் இதைவிட பெரிய வித்தையையும், வியூகத்தையும் செய்ய அவரது ஆலோசகர்கள் யோசிப்பார்களோ?

அறிஞர் அண்ணாவின் ‘ஆரிய மாயை'யில் தெளிவாக கூறியிருப்பதுபோன்று,

‘தந்திர மூர்த்தி போற்றி

தாசர்தம் தலைவா போற்றி!'

தமிழ்நாட்டு மண் சுயமரியாதை மண் - 

அதன் சூட்டை காவி தாங்காது!

எத்தனை தந்திரங்கள், சூழ்ச்சிப் படலங்களை நிகழ்த் தினாலும், இந்தப் பெரியார் மண்ணும், மக்களும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று வென்று காட்டுவார்கள்!

பொய் நெல்லைக் குத்திப் பொங்கலிட்டு மகிழலாம் என்று நினைத்து, வெறும் கானல் நீர் வேட்டையில் இறங்காதீர் - ஆளுநர் அவர்களே!

இந்த மண் சுயமரியாதை மண் - அதன் சூட்டை காவி தாங்காது - கனவுகள் சிதைக்கப்படும்!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

11.3.2023   

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

வெள்ளி, 6 ஜனவரி, 2023

பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே, உச்சநீதிமன்றம் வைத்த குட்டை மறந்துவிட்டீர்களா?

செவ்வாய், 12 ஜூலை, 2022

திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்தது ஆங்கிலேயர்களா? வரலாற்றை மறைத்து பிரச்சினையை திசை திருப்புவதா?

தி.மு.க. அரசின் ''திராவிட மாடலுக்கு'' எதிராக உள்ளார்ந்த திட்டத்தோடு வீண் வம்பை வளர்ப்பது சரியல்ல!

வியாழன், 15 ஏப்ரல், 2021

கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் சபரிமலையில் இருமுடி கட்டி வந்து வழிபாடாம்


சபரிமலை, ஏப். 13- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பம்பை சென்று, அங்குள்ள கணபதி கோவிலில் வைத்து இருமுடி கட்டிக்கொண்டு - அங்கிருந்து நடை பயணமாக அய்யப்பன் சன்னிதானத்தின் வலிய நடைப்பந்தலுக்கு சென்றார்.

அங்கு அவரை திருவிதாங் கூர் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர் எஸ்.ரவி, ஆணையர் பி.எஸ். திருமேனி ஆகியோர் வரவேற்க அதைத் தொடர்ந்து, படி பூஜைக்கு பின், இரு முடி கட்டுடன் 18ஆம் படி வழியாக ஆளுநர் வழிபாடு செய்தாராம். ஆளு நருடன் அவரது இளைய மகன் கபீர் முகமது கானும் உடன் சென்றார்.

பின்னர் இரவு சபரிமலையிலுள்ள விருந்தினர் மாளி கைக்கு சென்று ஓய்வு எடுத் தார். நேற்று காலை மீண்டும் நெய்யபிஷேகம் நடத்தி, மாளிகப்புரம் கோவில் அருகில் சந்தன மரக் கன்று ஒன்றை நட்டு வைத்துத் தொடர்ந்து, ஆளுநர் ஆரிப் முகமது கான் நடைபயணமாக பம்பை வந்து அங்கிருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றாராம்!