திங்கள், 7 அக்டோபர், 2019

திருக்குறளைச் சிறுமைப்படுத்தியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழிறைவன்
கடந்த 22.9.2019 அன்று 'தினமணி' ஞாயிறு இதழில் அறிவு சான்ற ஒரு பேனா, திருக்குறள் பற்றி நயவஞ்சகமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறது.
புகழ்வதைப் போலப் புகழ்ந்து, இகழ்வதை வஞ்சப் புகழ்ச்சி என்பார்கள். இது அந்த வகையைச் சேர்ந்தது.
முகத்துக்கு நேராகப் புகழ்ந்துவிட்டு முதுகில் குத்தும் கோழைத்தனம் இது.
'இந்த வாரம்' என்ற பகுதியில் 'கலா ரசிகன்' எழுதிய சிறு குறிப்பில் வள்ளுவரைப் பற்றியும், திருக்குறள் பற்றியும் மேற்சொன்ன வஞ்சப் புகழ்ச்சியும், முதுகில் குத்தும் கோழைத்தனமும் இடம்பெற்றிருக்கிறது.
திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் என்ற உரையாசிரியர் பற்றி தங்களுக்கே மிகவும் உரித்தான இனப்புத்தியோடு சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
"திருக்குறளுக்கு எத்தனை எத்தனையோ உரைகள் வெளிவந்தாலும் அவை யாவுமே பரிமேலழகர் உரையைச் சார்ந்தோ, அதனடிப்படையிலோ, அதன் உதவியுடனோ தான் எழுதப்பட்டிருக்கின்றன" என்று கலா ரசிகன் கூறும் கருத்து, திருக்குறளுக்கு உரை கண்ட மற்ற எல்லா அறிஞர்களையும் இழிவு படுத்துகின்ற கருத்தாகும்.
பழங்காலத்தில் திருக்குறளுக்குப் பத்து அறிஞர்கள் உரை கண்டனர், பரிமேலழகர் உட்பட.. பிற்காலத்திலும் பலர் திருக்குறளுக்கு உரை கண்டிருக்கின்றனர். இவர்கள் யாவரும் பரிமேலழகரைப் பார்த்தா உரை எழுதியுள்ளார்கள்? பரிமேலழகர் என்ன ஞான சூரியனா? மற்றவர்கள் யாவரும் அவரைப்பார்த்து உரை எழுதும் அளவுக்கு அறிவுத்திறனற்ற ஞான சூனியங்களா? இது அப்புலவர் பெருமக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அவமானம் அன்றி வேறென்ன?
எப்போதுமே அவர்கள் தங்கள் இனத்தார் என்றால், ஒன்றுமில்லாவிட்டாலும் உயர்த்திப் புகழ்வார்கள். மற்றவர்கள் மாமேதைகளாக இருந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். பாரதியாரை மகாகவி என்பார்கள். அதேசமயம் பாரதிதாசனாரைப் பற்றி ஒரு வார்த்தை புகழ்ந்து சொல்லமாட்டார்கள்.
இதற்கு அடுத்து வரும் ஒரு கருத்து இன்னும் பேதைமைத் தனமானது.
"பரிமேலழகரை அகற்றி நிறுத்தினால் திருக்குறள் இல்லை. திருக்குறளை அகற்றி நிறுத்தினால் தமிழும் இல்லை".
எழுதுவதற்குப் பத்திரிகை இருந்தால் எதையும் எழுதி விடலாம், யார் கேட்கப் போகிறார்கள் என்கிற இறுமாப்புத்தான் இது .
பரிமேலழகர் இல்லை என்றால் திருக்குறள் இல்லையாம். இதைக்கேட்டு நகைப்பதா? வருந்துவதா?
வள்ளுவப் பெருந்தகையின் வான் புலமை எங்கே? ஒரு வைதிக உரையாசிரியன் எங்கே?
வானுக்கும் பூமிக்கும் எட்டாத உயரமல்லவா இவர்கள் இருவருக்கும் இடையில்?
பரிமேலழகரையே எடுத்துக்கொள்வோம். பரியை விடவும் அதன் மேல் அமர்ந்துள்ள அழகர் உயர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். அவர் ஏறும் பரி அவரைவிட மேம்பட்டதாக இருக்க முடியாது.
பள்ளிப் பிள்ளைகள் புத்தகத்திற்கு அட்டை போடுவார்கள். எவ்வளவு அழகான அட்டையாக இருந்தாலும் அது புத்தகத்தை விட உயர்ந்ததாக இருக்க முடியாது.
அதுபோல திருக்குறள் என்ற புத்தகத்துக்கு போடப்பட்ட வெறும் அட்டை தான் பரிமேலழகர் உரை. அதற்குமேல் அதற்கு ஒரு பெருமையும் இல்லை.
பரிமேலழகர் இல்லையென்றால் திருக்குறள் இல்லை என்று கூற முடிகிறதென்றால், இந்த மேதாவிலாசங்களை முகத்தில் அறைவது போலக் கேட்பதற்கு மானமுள்ள தமிழர்கள் இல்லை என்று பொருளாகிவிடும்.
திருவள்ளுவர் பரிமேலழகரை நம்பியா திருக்குறள் எழுதினார்?
திருக்குறள் ஓர் அறிவு விளக்கு. அணையாத ஒளிபடைத்த அறிவு ஞாயிறு. அதைப் பார்த்துக் குரைக்கின்றன சில பிராணிகள்.
பரிமேலழகர் இல்லையென்றால் திருக்குறள் இல்லாமலேயே போய்விடுமோ? எத்துணை நப்பாசை! நாக்கொழுப்பு?
"கம்பன் இல்லை என்றால் தமிழ் இல்லை" என்றும் சிலர் கூறுகின்றனர்.
அது என்னவோ தமிழ் என்றால் எவருக்கும் இளக்காரம் ஆகிவிட்டது!
அதற்கு நான் பதில் எழுதினேன். "கம்பன் மட்டுமல்ல, எந்தக் கொம்பன் இல்லாவிட்டாலும் தமிழ் என்றென்றும் இருக்கும்" என்று!
அதே பதிலைத்தான் பரிமேலழகர் இல்லை யென்றால் திருக்குறள் இல்லை என்று திருக்குறளை தரம் தாழ்த்த  விரும்புவோர்க்கும் சொல்கிறேன்.
பரிமேலழகர், உண்மையைச் சொல்லப்போனால், அவர் திருக்குறள் கருத்துக்களுக்கு எதிரி. திருக் குறளைத் திரித்துப் பேசிய திரிபுவாதி. முதல் நூல் ஆசிரியரது கருத்துக்களுக்கு மாறாக ஆரியக் கருத்துக்களைப் பூசி அலங்காரம் செய்ய நினைத்தவர்.
மூலநூலையே அவர் சில இடங்களில் திருத்தி மாற்றி அமைத்துள்ளார்.
எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் வள்ளுவர் தீட்டிய ஓவியத்தின் மீது சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்.
வள்ளுவர் 'மக்கட் பேறு' என்று அதிகாரத்திற்குப் பெயரிட்டு வழங்கினால் அதைப் "புதல்வரைப் பெறுதல்" என மாற்றி அமைத்தவர் அவர்.
தமிழ் நூல்கள் பலவற்றில் சொற்களைத் தங்களுக்கு ஏற்ப மாற்றியும் திருத்தியும் வெளியிட்ட மகானுபவர்கள் அவர்கள்.
'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற திருக்குறள் வரிக்கு "அறிவறிந்த என்றதனால் ஈண்டு பெண்மக்களையே ஒழித்து ஆண் மக்களையே குறித்தது" என்றவர் பரிமேலழகர்.
அதாவது அறிவு ஆண் மக்களுக்கே உரியது. பெண் மக்களுக்கு அது இயற்கையாகவே கிடையாது என்ற கருத்தின் விளைவு அந்த உரை.
இவ்வாறு அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில், பகுத்தறிவுக்கு ஒவ்வாத வகையில் வள்ளுவத்துக்கு வடமொழிக் கருத்துக்களை, வைதீகக் கோட்பாடுகளை ஏற்றி உரைத்தவர் பரிமேலழகர்.
இதைக் கருதியே நாமக்கல் கவிஞர் அவர்கள் 'திருவள்ளுவர் திடுக்கிடுவார்' என்று ஒரு நூலே எழுதினார்.
வள்ளுவத்துக்குச் செய்த இந்த இழிவு வான்புகழ் வள்ளுவரை ஈன்றெடுத்த தமிழ்மொழிக்கே, தமிழ்நாட்டிற்கே, தமிழ் மக்களுக்கே செய்த இழிவாகும். தமிழர்கள் இதைக் கண்டிக்க முன்வர வேண்டும்.
- விடுதலை நாளேடு - 7.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக