சனி, 19 அக்டோபர், 2019

மனிதநேய வாழ்நாள் சாதனையாளரை வாழ்த்தி வணங்குவோம்!

முரசொலி' தலையங்கம்




மனிதநேயம் பற்றி நிரம்பப் பேசப்படும் காலம் இது. ஒரு தனி மனிதன், தான் பழகி அறிந்த இன்னொரு மனிதனிடம் மட்டும் அல்லாமல், அனைத்து மனிதரி டத்தும், விளைந்து கனிந்து விரிந்த பார்வையோடு, இன - மொழி - பூகோள எல்லை ஆகிய அனைத்தையும் கடந்து, கைமாறு கருதாமல், மாறாத - குறையாத, அன்பு அரவணைப்பு பரிவு பாசம் பாராட்டுவதுதான் உண்மையான மனித நேயம்.

தமிழர் பண்பாடே மனிதநேய வார்ப்புதான். சங்க இலக்கியங்கள், மனிதநேய அடிப்படையில் மானுடத் திற்குச் சொல்லப்பட்டவைதான். உலகப்பார்வை என்பது தமிழர்களின் வேர் குணம்தான். இல்லா விட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றன், அகிலத்தை அணைத்திடும் பார்வை யோடு, அனைவருமே என்னுடைய உறவினர் தாம் என்று அறைகூவி இருப்பானா?

"யாதானும் நாடாமால் ஊராமால்” என்று அய்யன் திருவள்ளுவர் அன்றே பிரகடனப்படுத்தியிருப்பாரா? பூங்குன்றன் - வள்ளுவன்வழிச் சிந்தனையில் செயலாற்றி வருபவர்கள் திராவிடர்கள் - தமிழர்கள். குறிப்பாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் ஆகியோர் மனிதநேயம் போற்றிய மாபெரும் சீலர்கள்.

தந்தை பெரியார், மனிதநேயத்திற்கு மாண்புமிகு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். மானுடத்தை, பற்றிப் படர்ந்தது அவருடைய அரிய அணுகுமுறை. அதனால்தான் அவர் "மனிதனை நினை" என்றார்; திராவிட மனிதனை மட்டுமல்ல, உலகத்தில் எங்கெல் லாம் அடக்கி ஒடுக்கப்படுகிறானோ அந்த மனிதனைத் தான் மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

தந்தை பெரியார் அவர்களைத் தலைவராகக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களும், மனிதநேயம் செறிந்த மகத்தான தலைவர். "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் கருணை மிகக் கொண்டு, அன்பு மேவிய அறிவாயுதம் தாங்கி இணையற்றவராக இலங்கியவர் அண்ணா .

தந்தை பெரியார் வகுத்தளித்த பாதையில், அறிஞர் அண்ணா மேற்கொண்ட பயணத்தை, தொடர்ந்து நடத்திய தலைவர் கலைஞர், வாழ்நாளெல்லாம் மனித நேயத்தை மாணிக்கமென மதித்துப் பின்பற்றினார். அவரை வெறுத்தவர்கள் சிலர் உண்டெனினும், கலைஞர் யாரிடமும் வெறுப்பு பாராட்டினார் இல்லை; மாறாக, தன் மீது வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள் மீதும்கூட, அன்பையும் மனித நேயத்தையும் மழையெனப் பொழிந்து, அவர்களிடம் மாற்றத்தை உருவாக்கி மனம் மகிழ்ந்தவர்.

அத்தகைய திராவிட மனிதநேயத்தின் உருவக மாக, அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association) செயலாக்கத்தில் சிறந்து வருகிறது. அமெரிக்காவில் நேர்த்தியான மனிதநேயப் பணிபுரியும் இந்த அமைப்பின் சார்பில், வாஷிங்டன் மேரிலாந்தில், கடந்த செப்டம்பர் 21, 22-இல் நடை பெற்ற மாநாட்டில், நமது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு, 2019-ஆம் ஆண்டிற்கான "மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டிருப் பது, உலகத் தமிழர்கள் அனைவர்க்கும் உவப்பையும், பெருமிதத்தையும் உருவாக்கி இருக்கிறது.

இந்த விருது 1953ஆம் ஆண்டு முதல் கடந்த 65 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதினைப் பெறும் முதல் இந்தியர், முதல் திராவிடர் -தமிழர், ஆசிரியர் அய்யா அவர்கள்தான் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நமது மகிழ்ச்சியும் பெருமிதமும் இரட்டிப்பாகிறது.

அய்யா வீரமணி அவர்கள், பத்தாவது வயது முதலே மேடைப் பேச்சில் ஆர்வம் காட்டி, தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்ததால், "திராவிட இயக்கத் தின் திருஞான சம்பந்தர்” என்று அறிஞர் அண்ணா அவர்களால் அந்தக் காலகட்டத்திலேயே புகழ்ப் பட்டம் சூட்டப் பெற்று அணி செய்யப்பட்டவர்.

ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட காலம் தந்தை பெரியார் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவர். 28 வயதிலே திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றவர். 29 வயதிலே "விடுதலை" ஏட்டிற்கு ஆசிரியர் ஆனவர். கடந்த 41 ஆண்டுகளாக, திராவிடர் கழகத்தின் தலைவராக வலம் வந்து; தமிழர் நலன், தமிழின் நலன் எங்கெல்லாம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்து, இன - மொழிப் பெருமைகளை மீட்டுருவாக்கம் செய்வதிலே அயராது பாடுபட்டு வருபவர்.



தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை, எந்தவித சமரசமும் இன்றிப் பாதுகாத்துப் பரப்பி வருபவர். இன்றைக்கு நம்முடன் இருந்து வழிகாட்டும் திராவிடர் தலைவர்களில் மூத்தவர். இந்த விருதுக்கு முழுவதும் பொருத்தமானவர், முற்றிலும் தகுதி மிக்கவர்.

எனவேதான், "சமுதாயத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், சமூகநீதி காத்து, மனிதநேயம் வளர்க்கவும் இவர் வாழ்நாள் முழுவதும் முழுநேரத் தொண்டு செய்து வருவதைப் பாராட்டி இந்த விருதினை வழங்குகிறோம்” என்று, அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் அவர்கள், விருதினை வழங்கியபோது தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருப்பது உன்னத மான செய்தி ஆகும்.

விருதினைப் பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், "விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால் தான் வழங்கப்பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது, மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது” என்று, திராவிட இயக்கத்தின் அடையாளமான அடக்கத்தோடும் ஆணித்தரத்தோடும் குறிப்பிட்டிருப்பது, தந்தை பெரியார் அவர்கள் மிகுந்த கவனமாக வளர்த்தெடுத்த பகுத்தறிவு - சுயமரியாதைப் பாரம்பரியத்திற்கே பெருமை கூட்டுவதாகும்.

இதைப் போன்றதொரு கருத்தை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், "பெரியாரின் கொள்கைகளை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அய்யா அவர்களின் தொண்டறம் தொய்வின்றித் தொடர இந்த விருது ஊக்கமளிக்கும்" என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பிரதிபலித் துள்ளார்.

தமிழர் தலைவர் பெற்றுள்ள விருது மிகவும் மேன்மையானது. அந்த விருதைவிட எண்ணிலா மடங்கு மேன்மையானவர், மனித நேயத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு தோழரிடமும் கடைப்பிடித்தொழுகும் நமது தமிழர் தலைவர். இந்த மனிதநேயரைக் கண்டறிந்த அமெரிக்க மனிதநேயர் சங்கத்தை வாழ்த்திப் பாராட்டுவோம்!

தனிப்பெருமை வாய்ந்த விருதினைப் பெற்று, தாயகம் திரும்பியிருக்கும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களை வாயார வாழ்த்தி, மனமார வணங்குவோம்!

நன்றி: 'முரசொலி'  தலையங்கம் 19.10.2019

- விடுதலை நாளேடு 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக