கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கி.வீரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருது!

    

 சுதந்திரதின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

6

சென்னை, ஆக.1 "தகைசால் தமிழர்" விருதிற்கு திராவிடர் கழகத் தலைவர் முனைவர் கி. வீரமணி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப் படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால்  தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021 ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற் காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க் கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962 இல் ‘விடுதலை' நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டு களையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருப வரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist - (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச் சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான முனைவர். கி.வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

"தகைசால்  தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 2023 ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பெண்ணே! பெண்ணே! பெரியாரை எண்ணி பெருமிதப்படு!

-- ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
தந்தை பெரியாரின் மானுடப் பற்று மகத்தான சாதனை செய்த மறக்க முடியாத சமூக விஞ் ஞானம்! தன் காலத்திலேயே தாங்கொணா எதிர்பபையும் சந்தித்து , அந்த எதிர்ப்பே பிறகு அவரது கொள்கைப் பயிருக்கு நல்ல உரமாகி , விளைச்சல் வெற்றித் தந்ததைக் கண்டு களித்த வரலாறு அவருக்கே உண்டு . 

மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்கள் - இந்திய நாட்டில் படையெடுத்து மூளைக்குப்  போடப்பட்ட அடிமை விலங்கு காரணமாக அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டு - அடிமை வாழ்வு வாழ வேண்டியது ஆண்டவன் கட்டளையாகவும் , சனாதனத்தின் சங்கிலியாகவும் பிணைக்கப்பட்டது . 

' நாஸ்தீரி ஸ்வாதந்தர்யம் அர்ஹதி " ( பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கலாகாது)
 " ஸ்தீரியோ ஹீமூலதோஷனாம் ( பெண்தான் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணம்) 
"பால்யே பிதிர்வ ஸே விஷ்டேது பாணிக் கிரஹா யௌவ்வளே புத்தரானாம் பர்த்தரீ ப்ரேது நப ஜேத் ஸ்தீரி ஸ்வதந்தரதாம் ' பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதைக் கேள்.
வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்குக் குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்கவேண்டும். உனக்கு இதுதான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள் " 

ஸ்தீரினாந்த சூத்ர ஜாதினாம் " ( பெண்கள் அனைவருமே சூத்ர ஜாதி)
" நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம் ' 
( அதனால் பெண்களும் , சூத்திரர்களும் வேதம் படிக்கக் கூடாது ; வேதம் ஓதுவதைக் கேட்கக் கூடாது)
" ஸ்த்ரீதாம் உபநயனஸ்தானே விவாஹம் மனு ரப்ரவீத் அதாவது , பெண்களுக்கு உபநயனம் கிடையாது - எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது பெண்களுக்கு பூணூல் கல்யாணம் கூடாது - கிடையாது . 
" சிதாவாரோஹணம் பிரம்மச்சரீயம் " ( கணவனை இழந்த பெண் என்றால் அவளை
அவனது சிதையிலேயே தீ வைத்து தீர்த்துக்கட்டு! . 

இப்படியெல்லாம் ஆதிகாலத்து சனாதன தர்மம் இருந்தது- பெண்ணடிமை என்பது உயிர்க்கொலையில்கூட முடிந்துள்ளது . பிறப்பு முதல் இறப்பு வரை அடிமைகளாகவே இருக்கப் படைக்கப்பட்டவர்கள் . இவற்றில் பெரும்பாலான கொடுமைகள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஆட்சி- அதனையொட்டிய காலனிய ஆட்சிகளில் பல சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டன . 

பெண்களின் விடுதலைக்கு மிக முக்கியத் தேவை அவர்களுக்குப் படிப்புரிமையும் , சொத்துரிமையும் என்றார் தந்தை பெரியார் . குழந்தைத் திருமணம் , அதனால் விளைந்த ' பால்ய விதவைக் கொடுமைகள் ' மலிந்திருந்தன . மனிதநேயத்தோடு , அதனை உடைக்க முன்வந்தார் சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பே! 

அதனை தனது வீட்டில் - குடும்பத்திலிருந்தே துவக்கினார் - தனது தங்கை மகளின் பால்ய விதவைத்தனத்தை எதிர்த்து , மறுமணம் முடித்து , ' புரட்சி ' செய்து , அதனால் , தன்னுடைய புயலைப் பொருட் குடும்பத்திலும் , ஊரிலும், ஜாதியிலும் எழுந்த புயலை பொருட்படுத்தாது, இலட்சிய பயணத்தை தொடர்ந்த ஒரு மனிதாபிமானி!

- விடுதலை, தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( கட்டுரையின் ஒரு பகுதி)

புதன், 2 அக்டோபர், 2019

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 'வாழ்வியல் சிந்தனைகள்'- இரசித்த வரிகள்

'வாழ்வியல் சிந்தனைகள்' பாகம்-3இல் இருந்து இரசித்த வரிகள்
சுகன்யாயோகன்
Team Pratilipi எனும் பெயரில் ‘இன்றைய கதைகள் உங்களுக்காக’ எனும் தலைப்பில் கூகுள் குழுமம் இயங்கி வருகிறது. அதில் வாசகர்கள் பலரும் தங்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுகன்யா யோகன் எனும் வாசகர் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ள வாழ்வியல் சிந்தனைகள் 3ஆம் பாகத்தில் தான் படித்ததில் ரசித்த வரிகள் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
மனித வாழ்க்கையில் உடல் ஆனாலும், உடலை இயக்கும் மூளையானாலும் அவைகளும் இயந் திரங்கள் தானே! பழுது, தேய்மானம் அவற்றிற்கும் உண்டு என்பதனை ஏனோ நம்மில் பலர் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.
நீங்கள் சிரிக்கும் போது மட்டுமே உலகம் உங்களுடன் சிரிக்கிறது. நீங்கள் அழும் போது அது உங்களுடன் அழுவதில்லை.
அனுபவம் என்பது நல்ல பள்ளி தான்; ஆனால், அதற்கான கட்டணம் மிக அதிகம்.
புத்திசாலிகள் தம்முடைய தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள்; ஆனால், அதி புத்திசாலிகள் பிறருடைய தவறுகளிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
துணிச்சல் பெண்களுக்கு வருவதுதான் உண்மை யான விடியல்.
வாழ்க்கை என்பது கவர்ச்சியோ, உணர்ச்சியின் வடிகாலோ கிடையாது.
ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் உண்டு. இழப்புக்களுக்கு ஈடு செய்யவும் முடியும்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படாதீர்கள் உணர்ச் சிகளை நீங்கள் ஆளுங்கள்; உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டு விடாதீர்கள்.
நாம் ஒவ்வொருவரும் உலகத்தை மாற்றிவிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் ஒருவரும் அவரை மாற்றிக்கொள்ளத் தயாரில்லை.
நீங்கள் ஒரு சுதந்திரமற்ற அடிமையாக விரும் பினால், பிறர் மீது மனப்புழுக்கத்தை தேக்கி வையுங்கள்.
புத்தரை ஒருவன் இழிமொழிகளால் வசவுகளால் அர்ச்சித்த போது அவர் சொன்னாராம், "நான் பிச்சை வாங்கும் போது, போடும் உணவை ஏற்காவிட்டால் என்னவாகும்? அது பிச்சையிட முன்வந்தவருக்கே திரும்பும் அல்லவா! அதுபோல இழிமொழிகளை நான் ஏற்காதபோது எனக்கென்ன அதுபற்றிக் கவலை."
10 மணிக்குத்தான் என்னைச் சந்தித்தார். 12 மணிக்கெல்லாம் என்மீது உயிரையே விடுகிறாரே அவர் என்றால் அவன் 1 மணிக்கு உன் உயிரை வாங்கப் போகிறான் என்று பொருள்
ஏமாறுவது பெரும்பாலான 'படித்த பாமரர்கள்' உள்பட பலருக்கும் வழமை! ஏமாற்றுவது இந்த மூட நம்பிக்கை வியாபாரிகளின் முழு உரிமை.
மனைகளுக்கு சுவர் தேவை. மனங்களுக்கு சுவர் தேவையற்றது.
உலகம் முழுவதையும் அசைக்கும் ஆற்றல் உங்கள் உள் மனதில் உள்ளது.
வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருந்ததால்தான் வெற்றி பெற்றோம் என்று எண்ணுவது சரியல்ல.
உழைப்பு உழைக்கும் மக்களின் உடமை அல்லவா?
எதையும் மறைக்க மறைக்க அதனைத் தெரிந்து கொள்ளக் குறுக்கு வழி தேடல்கள் அதிகரிக்கும்.
மூன்றாமவர் கூறியதை முற்றாக உண்மை எனக் கொண்டு வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துக் கொள்ளாதீர்.
ஒருவர் ஒன்றைச் சொல்லி அதற்கு பொறுப்பு ஏற்கத் தயங்கினால், அவர் கோழை என்றே பொருள். அதற்கு மேல் அவரை நிர்பந்திக்க வேண்டியதில்லை.
வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்து என்பது மூலதனம்.
வளமான பூங்காவை கூட அதில் அமர்ந்து கொண்டே பாலைவனத்துப் பயணம் போல் நினைப் பவர் எவராலும் எதுவும் சாதிக்க முடியாது.
சமுதாயத்தில் வேண்டிய மாற்றங்கள் சீராக நடக்க வேண்டும். அதற்கு வழி வேண்டும். அதை யாராவது தடுத்தால், கைதி வந்த பிறகு உணவை மூடினால் என்ன கதியோ அந்தக் கதிதான் நேரும்.
எவர்க்கும் உதவு முன், அவர்கள் ஏன் நம்மை நாடி வந்தார்கள் என்பதை கொஞ்சம் நின்று நிதானித்து தெளிவு பெற வேண்டும்.
மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு உடனே தீர்வு சொல்லாதீர்கள்; உங்கள் பிரச்சினைகளுக்கே உங் களால் எளிதில் விடை காண முடியாத நிலையில் ஏன் இந்த அதிகபிரசங்கத்தனம்?
நிறைவு, செம்மை என்பன பொருளற்ற ஆசையாகும், முழுமைக்கு ஏது எல்லை?
எந்தச் செயலை உங்களுக்கு பிறர் செய்யக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்களோ, அந்தச் செயலை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாதீர்.
திடீர்கள் வாழ்வில் நீண்ட காலம் நிலைக்காதவை.
நேற்று பற்றி எண்ணும் சுவையும், நாளை பற்றிய பயமும் இன்றைய சுகத்தைச் சுமையாக்கும்.
பிறரது துன்பத்தில் இன்பம் காணும் விசித்திர மனிதர்கள்! பொறாமை புழுக்களாகவே நிரந்தரமாக வாழ்தல்; தனக்குக் கிட்டும் வாய்ப்புக்களைக் கூட மற்றவர் அழிவுக்கே பயன்படுத்தும் இழிந்த மனி தர்கள். இந்த பிறவிகளைப் புரிந்து அடையாளம் கண்டு வாழ்ந்தால் பிறகு வருந்தி அழ வேண்டிய தில்லை எவரும்.

- விடுதலை நாளேடு, 2.10.19

சனி, 28 செப்டம்பர், 2019

பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்

பெரியார் மண்ணில் அண்ணா பல்கலை கழகத்தில் ‘பகவத் கீதை'

விருப்பப் பாடம் என்று துணைவேந்தர் சொல்வதா?

தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி

தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!!



பெரியார் மண்ணில், அண்ணா பல்கலைக் கழகத்தில் ‘பகவத் கீதை' விருப்பப் பாடமாக வைக்கப்படும் என்று துணைவேந்தர் சொல்வதா? ஒரு மாதத்திற்குள் இந்த  அறிவிப்பைப் பின்வாங்காவிடில், தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி - தொடர் போராட்டம் நடைபெறுவது உறுதி! உறுதி!! என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகமல்ல!

அண்ணா பல்கலைக் கழகம் தனியார் பல்கலைக் கழகம் அல்ல. முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகம். மத்திய அரசின் நிதி உதவியை - பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் பல அமைப்பு களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி உதவியும் பெறும் பல்கலைக் கழகம்.
இந்தப் பல்கலைக் கழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர் - தமிழ் தெரியாத ஒருவர் துணைவேந்தராக தமிழ்நாடு அரசிடமோ, முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் போன்றவர்களிடமோ ஒப்புதல் ஏதும் பெறாமல், ஆளுநரால் தன்னிச்சையாக நியமனம் பெற்றவர்.
அப்போதே பலத்த எதிர்ப்புக் கிளம்பியது - யாருக்கும் மறந்துபோய்விடக் கூடிய ஒன்றல்ல.
விஷ உருண்டைக்குத் தேன் தடவியது போன்ற அறிவிப்பு

இந்நிலையில், தனது பச்சை இந்துத்துவா உணர்வை வேந்தர் தூண்டுதலோ அல்லது இவரது பதவியின் எதிர்காலக் கணக்குக் காகவோ, பகவத் கீதையை அப்பல்கலைக் கழகத்தில் விருப்பப்பாடம் என்று - விஷ உருண்டைக்குத் தேன் தடவியதுபோல் - அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது வன்மையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த அறிவிப்பு பின்வாங் கப்பட்டு, மாற்றி அமைக்கப்படல் வேண் டும்.
மற்ற மத நூல்களும் வைக்கவேண்டும் என்கிற குரல் எழுமே!

இதற்கான நியாயமான காரணங்கள் இதோ:
1. கீதை ஒரு இந்து மத நூல் மட்டுமல்ல, ஜாதியை ஆதரித்து நியாயப்படுத்தும் நூல்.
“சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம், குண - கர்ம விபாகச
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யா கர்த்தாரர மவ்யயம்”
(அத்தியாயம் 4, சுலோகம் 13)
அதாவது, ‘‘நாலு வருணங்களையும் நானே படைத்தேன். நானே அதனைப் படைத்தவனாக இருந்தாலும் அதனை மாற்றிட அல்லது திருத்தி அமைத்திட என்னால் முடியாது'' என்று கூறும் நூல்.
2. சூத்திரர்களும், பெண்களும் ‘பாவயோனி'யில் பிறந்தவர்கள் என்று அவர்களைக் கேவலப்படுத்தும் நூல்.
“மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு, பா - யோன்ய
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேஸ் பியாந்தி பராங்கதிம்''
(அத்தியாயம் 9, சுலோகம் 32)
அதாவது, ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள். அதனால் அவர்கள் கீழானவர்கள்.
“பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று வர்ணத்தாருக்கும் தொண்டூழியம் செய்வது ஒன்றே சூத்திரர்களின் இயல்பான கடமையாகும்” என்றும் கூறும் நூல் பகவத் கீதை.
மகளிரும் படிக்கும் ஒரு பல்கலைக் கழகத்தில் இப்படி இழிவுபடுத்தும் நூல் இடம்பெறலாமா?
3. இந்நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை (Secularism) கொள் கைக்கு முற்றிலும் முரணானது இது. இந்து மத நூலை இப்படி விருப்பப் பாடம் என்ற போர்வையோடு பல்கலைக் கழகத்தில் வைத்தால், மற்ற மதவாதிகளான இசு லாமியரின் ‘‘குரான்'', கிறித்துவர்களின் ‘‘பைபிள்'', சீக்கியர்களின் ‘‘கிரந்தம்'', பவுத்தர்களின் ‘‘தம்மபதம்'', ஜொராஷ்டர் களின்  ‘‘அவெஸ்தா'', பகுத்தறிவாளர்களின் ‘‘கீதையின் மறுபக்கம்'' நூல் - இவைகளை அதேபோல் விருப்பப் பாடமாக வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்தால், அதை  ஏற்று துணைவேந்தரோ - அவரது ‘அகாடமிக்  கவுன்சில்' என்ற அமைப்பு தலையாட்டுமா?
4. கீதை வன்முறையைத் தூண்டும் ஒரு கொலைகார நூல்!
முன்னாள் நீதிபதி எழுதிய ‘மகாத்மாவின் கொலை' நூல்

‘தேசப்பிதா'  என்று அழைக்கப்படும் அண்ணல் காந்தியாரை சுட்டுக்கொன்ற - தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.சிடம் பயிற்சி பெற்ற நாதுராம் விநாயக் கோட்சே, நீதி மன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்திலேயே,  தான் இந்த கொலை  முடிவுக்கு வருவதற்குப் பெரிதும் துணை நின்று தூண்டிய நூல் ‘பகவத் கீதை' என்று கூறியுள்ள நிலையில்,
'The Murder of the Mahatma' -   ‘மகாத்மாவின் கொலை' என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா 1963 இல் எழுதிய நூலில், 1977 வரை மூன்று பதிப்புகள் வெளியாகி - விற்பனையாகி - இக்கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்!
எவரே மறுப்பர்?
பகவத் கீதை வன்முறையைத் தூண்டும் நூல்!

கீதை கொலை நூல்தான் என்று சுவாமி சித்பவானந்தா எழுதிய விளக்கவு ரையிலேயே குறிப்பிட்டுள்ளார்!
‘‘இந்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டபடி நடந்துகொள்வதுதான் நல்ல மனிதன் ஒருவருடைய கடமை - தர்மம் ஆகும்'' என்பதே கோட்சே வாக்குமூலம். (அவர் கைப்பட எழுதியது ‘May it Please Your Honour' என்ற தலைப்பில் ஒரு நூலாகவும் (ஆங்கிலத்தில்) அது வெளி வந்துள்ளது).
‘‘...தாயகத்தைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தும் போராடவேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பகவத் கீதையிலிருந்து சில சுலோ கங்களைச் சொல்லி உணர்ச்சிகரமாகத் தனது வாக்குமூல உரையை முடித்தார்....'' - இப்படி நீதிபதி ஜி.டி.கோஸ்லா அந்த நூலில் குறிப்பிடுகிறார்!
‘‘கடமையைச் செய்; பலனை எதிர் பார்க்காதே'' என்பதில்  கடமை என்பது ஜாதி - வருணத்தைக் காப்பாற்றும் கடமை யைச் செய்யவேண்டும் என்று வன்முறை யைத் தூண்டும் ஒரு நூல் பகவத் கீதை ஆகும். இப்படிப்பட்ட நூலில் இருப்பதாகத் தவறான மேற்கோள்களைக் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்.
குறளை விருப்பப் பாடமாக வைக்கட்டும்!

திருக்குறள் போன்ற உலகப் பொது ஒழுக்க நூல் - ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாட்டில்' அவரது குறளை விருப்பப் பாடமாக வைக்க வேண்டாமா?
அண்ணா பல்கலைக் கழகத்தில் அண் ணாவின் அரிய சிந்தனைக் கருவூலங்களை வைக்கவேண்டாமா? அவர் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் அல்லவா அது?
தமிழ்நாடு முழுவதும் அறப்போர் கிளர்ச்சி  உறுதி!

இன்னும் ஒரு மாதத்திற்குள் இதைப் பின்வாங்கி மாற்றாவிடில், தமிழ்நாடு முழுவதும்  அறப்போர்க் கிளர்ச்சி தொடர் போராட்டமாக, அண்ணா பல்கலைக் கழகம் முன் தொடங்கி, தொடருவது உறுதி! உறுதி!!
பெரியார் மண்ணில் இப்படி உணர்ச் சிபூர்வ நெருப்புடன்  நெருங்கும் முயற்சி யில் இப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஈடுபடக் கூடாது.
ஒன்றுபட்டு கண்டனக் குரல் எழட்டும்!

தமிழக அரசும், முதலமைச்சரும் - மதச்சார்பின்மைக்கு எதிரான இதனை அகற்றிட முழு முயற்சியில் உடனடியாக ஈடுபடவேண்டும்!
ஒத்த கருத்துள்ள அனைவரும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், கல்வி யாளர்களும் ஒன்றுபட்டு கண்டனக்குரல் எழுப்பிட முன்வரவேண்டும்.

கி.வீரமணி,
முகாம்: பிலெடெல்ஃபியா (அமெரிக்கா)
தலைவர்,
திராவிடர் கழகம்
26.9.2019

புதன், 25 செப்டம்பர், 2019

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருது

விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை;

பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப்பட்டுள்ளது-பெரியார்தாம் விருதுக்கு உரியவர்

இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது

விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை



வாஷிங்டன், செப்.23 ‘‘மனிதநேய சாதனையாளர் விருது'' தனிப்பட்ட முறையில் எனக்கு வழங்கப்படவில்லை. பெரியாரின் தொண்டன் என்பதனால்தான் வழங்கப்பட் டுள்ளது; பெரியார்தாம் விருதிற்கு உரியவர். இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான ‘‘மனிதநேய வாழ் நாள் சாதனையாளர் விருது'' வழங்கப்பட்டது. அவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், ‘‘விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட வில்லை; பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப் பட்டுள்ளது. பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது மேலும் பணியாற்றுவதற்கு - இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப் பிற்குக் கிடைத்த விருது'' எனக் குறிப்பிட்டு மிகவும் நெகிழ்ச்சி கரமாகப் பேசினார். உலகளாவிய அளவில் ‘‘சுயமரியாதை மனித நேயம்'' பற்றிய நீண்டதொரு ஆழமான உரையினை வழங்கினார்.
அதற்கு முன்னதாக,  கலிபோர்னியா பெர்க்லிபி பல்கலைக் கழக தமிழ்ப்புல மேனாள் தலைவரும், சமஸ்கிருத அறிஞரு மான பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்  ‘‘செவ்வியல்,  தமிழி லக்கியங்களில் மனிதநேயக் குறிப்புகள்'' எனும் தலைப்பில் ஓர் ஆய்வுரையினை வழங்கினார்.


அடுத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கிடும் நிகழ்வு நடைபெற்றது. விருது வழங்கிடும் நிகழ்வின் வரவேற் புரையினை பேராசிரியர் முனைவர் அரசு செல் லையா வழங்கினார். அமெரிக்கா மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் விருது பெறவுள்ள தமிழர் தலைவர்பற்றிய சிறப்பினை எடுத்துரைத்து விருதினை தமிழர் தலைவருக்கு வழங்கி சிறப்பித்தார்.
முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் ‘மனிதநேயமும் திராவிட இயக்கமும்' எனும் தலைப்பில் திராவிட இயக்க சாதனைகள்பற்றி உரையாற்றினார்.
அடுத்து ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழக தென் ஆசிய & தென்கிழக்கு ஆசியப் புலம் பேராசிரியர் முனைவர் ஸ்வென் வொர்ட்மென் ‘பரிணாமம் மனிதநேயம்' எனும் தலைப்பில் உரையாற்றினார். எழுத்தாளர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘பெரியாரும் மனிதநேயமும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அடுத்து ‘மாற்ற அறிவியல் - ஆதாரம் அடிப்படையிலான செயல்பாடு' எனும் தலைப்பில் டெப்பி கோடார்டு உரை யினை வழங்கினார்.
நண்பகல் உணவிற்குப் பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்கின. கருத்துகள நிகழ்ச்சியினை ஊடகவியலாளர் ப.திருமாவேலன் முகவுரையாற்றி தொடங்கி வைத்தார்.
கருத்துக் களத்தில் மருத்துவர் சரோஜா இளங்கோவன், ‘பெண்ணின் நிலை: பெரியாருக்கு முன், பெரியாருக்குப்பின்' எனும் தலைப்பிலும்,
அகத்தியன் பெனடிக்ட், ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு..... தந்தை பெரியார்' எனும் தலைப்பிலும்,
பெனிசில்வேனியா பன்னீர்செல்வம் இராஜமாணிக்கம், ‘வைகறை - வைக்கம் பெரியார்' எனும் தலைப்பிலும், சிகாகோ செல்வி அகிலா செல்வராஜ், ‘இன்றைய கல்வியும், கேள்விக் குறியாகும் சமூகநீதியும்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
கருத்துக் களத்தில் அடுத்து எம்.வி.கனிமொழி, ‘திராவிட இயக்கம் பதித்த தடங்களும் இன்று சந்திக்கும் பிரச்சினை களும்' எனும் தலைப்பிலும்,
துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன், ‘உயர்ஜாதி ஒதுக்கீடும் சமூகநீதியும்' எனும் தலைப்பிலும்,
சிகாகோ சரவணக்குமார், ‘அறிவியக்கத்தின் தேவை' எனும் தலைப்பிலும்,
வேல்முருகன் பெரியசாமி, ‘பெரியாரைத் துணைக்கோடல் இன்றைய தேவை' எனும் தலைப்பிலும்,
மேரிலாந்து மணிக்குமார், ‘ஒரு நாடு, ஒரு மொழி, ஒரே மதம் - பொய்' எனும் தலைப்பிலும் கருத்துகளை வழங்கி னார்கள்.
அடுத்து ஊடகவியலாளர் ப.திருமாவேலன், ‘தமிழ்த் தேசியமும், பெரியாரும்' எனும் தலைப்பில் உரையாற்றினார். திராவிடம் என்பதில் தமிழ்த் தேசியம் அடங்கும் என்று ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளன், ‘மனிதநேயமும் சமூகநீதியும்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
எழுச்சித் தமிழர் உரையாற்றுவதற்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் மாநாடு நடந்த விதம்பற்றி சுருக்கமாக உரையாற்றினர்.


மாநாட்டு நிறைவு அமர்வில் அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் மேனாள் செயல் இயக்குநரும், ‘தி ஹியூமனிஸ்ட்'  (The Humanist) ஆங்கில ஏட்டின் மேனாள் ஆசிரியருமான பிரட் எட்லர்ட்ஸ், ‘மகிழ்ச்சியான வாழ்வு' என்பதுபற்றி உரையாற்றினார்.
மாநாட்டின் நிறைவுரையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘எதிர்காலம்' எனும் தலைப்பில் செய்யவேண்டிய பெரியார் பணிகள்பற்றி அரியதொரு உரையினை ஆற்றினார்.
அமெரிக்க தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருவதற்கான ‘சேவை விருது'களை மருத்துவர் சரோஜா இளங்கோவன், குழந்தைவேலு ராமசாமி, ஜெயந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பரிசினை வழங்கினார்.
இரண்டாம் பன்னாட்டு மாநாடு முதலாம் பன்னாட்டு மாநாட்டைவிட  ஏற்பாட்டிலும், பேராளர்கள் பங்கேற்பிலும் வெகுசிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் மாநாட்டை பெரியார் பன்னாட்டு மய்யம் மட்டும் நடத்தியிருந்தது. இரண்டாம் நாள் மாநாட்டை அமெரிக்க மனிதநேயர் சங்கத்துடன் இணைந்து நடத்தியது மாநாட்டு சிறப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இரண்டு நாள் மாநாட் டிலும் சிறப்பாகப் பங்கேற்று, 2021  ஆம் ஆண்டு நடை பெறவுள்ள பன்னாட்டு மாநாட்டிலும் பங்கேற்றிட வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பேராளர்கள் விடைபெற்றனர். பெரியார் கொள்கைகளை உலக மயப்படுத்துதலில் பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு ஒரு சாதனை மைல் கல்லாகும்.
அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் 2019 ஆம் ஆண்டிற்கான ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருதினை வழங்கினார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் 2019 ஆம் ஆண்டிற்கான ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருதினை வழங்கினார். கண்ணபிரான் ரவிசங்கர், டாக்டர் சோம.இளங்கோவன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர் தலைவரின் இணையர் மோகனா அம்மையார், பொருளாளர் வீ.குமரேசன், பெரியார் பெருந்தொண்டர் மண்ணச்சநல்லூர் அரங்கநாயகி, கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, டாக்டர் இலக்குவன் தமிழ் ஆகியோர் உள்ளனர் (அமெரிக்கா, 22.9.2019)
- விடுதலை நாளேடு, 23. 9. 19