பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பல்கலைக்கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆளுநருக்கு எதிரான போராட்டம் 'பேருரு' எடுப்பது உறுதி!


WhatsApp%20Image%202023-07-25%20at%2014.54.59

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுந ருக்கு எதிரான போராட்டம் "விஸ்வரூபம்" எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (Article) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண் ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப் பட்டமாகச் செய்து - தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்!

சண்டித்தனம் செய்வதே - வாடிக்கையா?

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 சட்ட வரைவுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமலும், அல்லது முறைப்படி திருப்பி அனுப்பாமலும் காலந் தாழ்த்தி மக்கள் அரசான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினைச் செயல்படாமல் செய்ய திட்டமிட்ட சண்டித் தனத்தைச் செய்து வருவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மிக உணர்ச்சி கொந்தளிக்கும் பிரச்சினையான 

நீட் தேர்வு விலக்கு போன்ற பிரச்சினையில் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதிக் கொண்டு 'நான் ஒரு போதும் கையெழுத்துப் போட மாட்டேன்" என்ற பொல்லாத வார்த்தைகளைக்  கூறி, ஜனநாயக விரோத அடாவடித் தனத்தை அங்கலாய்ப்புடன் வெளிப்படுத்தியுள்ளார்!

ஏதாவது ஒரு சாக்கை வைத்து, ஒரு சிறு கும்பலைக் கூட்டி, நாளும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக சனாதன சத்சங்க பிரசங்கி போல, பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரராகவே,  தான் தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறும் ஓர் ஊழியக்காரர் என்பதை அறவே மறந்து விட்டு அனுதினமும் தனியே தர்பார் நடத்தி வருகிறார்!

சட்ட வரைவுகள் 

"கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஊறுவதற்கா?

பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற பழைய சட்டத்தை ஒரு பிடிமானமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களை காவி மயமாக்க  தனது அதிகாரத்தை அவசியமற்றுப் பயன்படுத்துகிறார்.

ஆளுநர் வேந்தராக இருப்பதை ஏற்காத சட்ட வரைவு அவரது "கோப்பு ஊறுகாய் ஜாடி"யில் ஓராண் டுக்கு மேல் ஊறிக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் இல்லாத  - தலையில்லா   பல்கலைக் கழகங்களாக பல மாதங்களாக  (சில ஆண்டுகளாகவே)  இருந்து வருவது கொடுமை!

பல்கலைக் கழகங்களில்   ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்த, தனித்தனித் சுதந்திரமான பல்கலைக் கழக விதிமுறைகள் - துணைவேந்தர் நியமனம் உட்பட உண்டு.

உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்பிற்குள் தேவையின்றித் தலையிடுவதா?

அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாது, தான் விரும்புவது போல அச்சட்டங்களை மாற்றுங்கள், சம்பந்தமில்லாதவர்களை நியமனம் செய்யுங்கள் என்று மாநில அரசின் உயர்கல்வித் துறையின் நிர்வாக வரம்புக்குள் இயங்க வேண்டியவைகளை மாற்றிட முறையற்ற சட்ட வரம்பு மீறிய ஆலோசனைகளைக் கூறி வரும் கொடுமை! இதனால் பல பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு  பட்டமளிப்பு விழா நடத்தி, துணைவேந்தர் கையெழுத்திட்ட பட்டங்கள்  பெறுவதில் தாமதத்தின்   காரணமாக அவர்கள் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. (பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு)

முன்பு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சனாதன  விளக்கம் கூறும் ராஜ் பவனத்தின் துணை பெற்றவருக்கு பதவி நீட்டிப்பை ஓராண்டு  அளித்து புதிய துணைவேந்தர் நியமிக்கப் படாமலேயே அவரே அப்பதவியைத் தொடரும் வகை உதவினார் ஆளுநர்!

பல்கலைக் கழக விதி முறைகளை மாற்றச் சொல்லி அழுத்தம் - இப்படி பல! இதற்கிடையில் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்து காவல்துறை விசாரணையில் அதற்கு முகாந்தரம் இருக்கிறது என்று கண்டறிந்த பிறகும்கூட, அவர்கள்மீது ஊழலுக்கான வழக்குத் தாக்கலாக அனுமதி அளிக்க இந்த ஆளுநர் ஆர்.என். ரவி தயக்கம் காட்டி தனது வழக்கமான "தாமதப் பெட்டி"க்குள் போட்டு வைத் துள்ளார்.

ஊழலைச் செய்த மேனாள் அமைச்சர்கள்மீதுள்ள கோப்புகள் மேல் நடவடிக்கைக்கான அனுமதி அளிக்காது  கிடப்பில் வைத்துள்ளார் (அதிமுகவுடன் கூட்டணி வர இருப்பதால் இப்படி ஒரு பாராமுக குறுக்குச் சாலோ  என்று விவர மறிந்தவர்கள் பேசும் நிலை;  வெளிப்படை விவாதங்கள்). 

மகா வெட்கக்கேடு! கண்டனத்திற்குரியது!!

 நீட் தேர்வுக்கு விதி விலக்குக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அறவழியில் நடந்து வரும் நிலையில் "எதன் மீதோ மழை பொழிந்தது" என்பதைப் போல ராஜ்பவனத்தில் இருப்பது மகா வெட்கக் கேடு!

வன்மையான கண்டனத்திற்குரியது!  

ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல ஒரு மாபெரும் போராட்டம்   "பேருரு" எடுப்பது உறுதி!

மக்கள் நினைத்தால் மாற்றங்கள் தானே வரும் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
22.8.2023

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தவர்கள் அரசு துறையில் பதவி உயர்வு பெற முடியாது


சென்னை, ஆக.1 பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமாரை சேர்க்க வேண்டு மென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோளிங் கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறை ரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப் படிப்பை படிக்காமல், திறந்த வெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ள தால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிக வரித்துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில் குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா மற்றும் கிருஷ் ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறை தலைவர், வணிகவரித் துறை செயலாளர் ஆகி யோரின் தரப்பில் அரசு வழக்குரைஞர் இரா.நீலகண் டனும்,  சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜரானார்கள்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலை பல் கலைக்கழகம் அல்லது தொலை தூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர் களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

திங்கள், 15 பிப்ரவரி, 2021

அரசனை விஞ்சிய விசுவாசியா அ.தி.மு.க. அரசு? -இட ஒதுக்கீடு குறைப்பு


மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில் நுட்பம் முதுநிலைப் படிப்பு சேர்க்கைபற்றி

பல்கலைக் கழக மானிய குழுவே அறிவித்தும்,

49.5% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு பின்பற்றுவதா?

அதே போல உயர்ஜாதி ஏழைகளுக்கு இடம் ஒதுக்குவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டனமும் - எச்சரிக்கையும்


தமிழ்நாட்டின் நான்கு பல்கலைக் கழகங்களில் உயிரி தொழில் நுட்பம் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் (M.Sc., Bio  Technology) தமிழ்நாட்டில்  நடை முறையில் உள்ள  69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு மாறாக 49 புள்ளி 5 விழுக்காடு அளவில் இடங்களை அளித்தும், அதே போல பொருளாதாரத்தில்   நலி வடைந்த உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு என்று இதுவரை தமிழ்நாடு அரசு பின்பற்றாத நிலையில், அதை இப்போது செயல்படுத்துவதும் சமூக அநீதியும், துரோகமும், சட்ட விரோதமும்  ஆகும். உடனே தமிழ்நாடு அரசு  இவற்றை ரத்து செய்து ஏற்கெனவே   தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ் நாட்டின் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நான்கு பல்கலைக்கழகங்களில் உயிரி தொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன.

1. பாரதியார் பல்கலைக்கழகம்

2. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

3. தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகம்

4. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.

இந்நாள் வரை எல்லா பட்டப்படிப்புகளுக்கும் 69% இடஒதுக்கீடு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடந்து வந்துள்ளது .

இந்த ஆண்டு அரசு பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்  உயிரி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு (M.Sc. Bio Technology) மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது (UNESCO -Central).

பல்கலைக்கழக மானியக் குழு தெளிவாக அதன் அறிக்கையில் மாநில அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்று கூறினாலும்...

தமிழ்நாடு அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு மாறாக மத்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டை ஏற்று 49.5 விழுக்காட்டைப் பின்பற்றுவது கடும் அதிர்ச்சிக்கும் கண்டனத்துக்கும் உரியது. 

இவைகள் மத்திய அரசின் பல்கலைக் கழகங்கள் அல்ல; மாநில அரசின்கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்கள். மேலும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பொருளாதாரத்தில் நலிந்த மேல் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தது அதிமுக அரசு.

அதற்கு மாறாக இந்தத் தொகுப்பில் 10% இட ஒதுக்கீடை  உயர் ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்தோர் (EWS) என்போருக்கு நடைமுறைப்படுத்தி யுள்ளது. அதுபற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இது சமூகநீதிக்கும், நடைமுறையில் உள்ள அரசின் கொள்கைக்கும், நடப்புக்கும் நேர் எதிரான, சட்ட விரோதமான சமூக அநீதியும் - துரோகமும் ஆகும். இதற்குத் தமிழ்நாடு அரசு துணைபோக வேண்டாம்.

தமிழ்நாடு அரசு சட்ட விரோத, சமூகநீதி விரோத ஆணையை ரத்து செய்து,  தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சரியாக முழுமையாகப்  பின்பற்றுவதோடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இல்லையெனில் மிகப் பெரிய போராட்டத்தை மாநில அரசு எதிர்நோக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், ஏன் ஜெயலலிதாவிற்குக் கூட செய்யும் துரோகத்தை  தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி - திராவிட மண் ஒருபோதும் ஏற்காது - ஏற்கவே ஏற்காது.

இதனை உடனே தடுத்து நிறுத்தி, 69 சதவிகிதத்தினை அப்பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தாவிட்டால் அதற்குரிய கடும் விலையை தமிழக ஆளும் கட்சியும், மத்திய அரசில் இடம் பெற்ற கட்சியும் கொடுக்க வேண்டி வரும் என்பதை நினைவூட்டுகிறோம்.

 

 

 கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.2.2021

வெள்ளி, 13 மார்ச், 2020

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து' என்று தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மத்திய அரசு

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது தமிழக அரசு இதில் உறுதியாக இருக்கவேண்டும்!

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து' என்று தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மத்திய அரசு; அதனை ஏற்கமாட்டோம் என்ற தமிழக உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது; இதில் தமிழக அரசு உறுதியாக இருக்கவேண்டும்; இருக்கும் என நம்புகிறோம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்று

அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக் கழகம் - தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா பெயரில் நிறுவப்பட்ட திராவிடர் இயக்கச் சாதனை களின் பெருமைமிகு சான்று ஆகும்.

இதனை கபளீகரம் செய்து மத்திய அரசு தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர, தந்திரமாக அதனைப் பிரித்து, மிகப்பெரிய உயர்கல்வி ஆராய்ச்சித் தனி நிறுவனமாக, அதிகமான நிதியை ஒதுக்கிச் செய்வதாக தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி, தனது வலையை விரித்தது.

அப்போது நாமும், தி.மு.க.வும் மற்றும் பல கல்வியாளர்களும், பல அரசியல் கட்சிகளும் எதிர்த்தன!

தமிழ்நாடு அரசுக்குத்

தக்க முன்னெச்சரிக்கை விடுத்தோம்!

தமிழக அமைச்சர்கள் அய்வர் கொண்ட குழு ஒன்று போடப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டபோதே, நாம் தமிழ்நாடு அரசுக்குத் தக்க முன்னெச் சரிக்கை விடுத்தோம்.

‘‘இத்திட்டத்தை தமிழ்நாட்டு அ.தி. மு.க. அரசு ஏற்கக்கூடாது; இதனால் காலங்காலமாக நமக்கு - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இட ஒதுக்கீடு பறிக்கக் கூடிய அபாயமும், ‘‘ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டு நுழைந்து, முழு ஒட்டகமும் உள்ளே வந்து, உள்ளே இருப்பவர்களை வெளியே விரட்டிடும்'' கதைபோல, அண்ணா பல்கலைக் கழகத்தின் நிலை மையும் ஆகிவிடும்!'' என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.

தற்போதுள்ள நிலவரப்படியே மத்திய அரசு தாராளமாக நிதி உதவியை மாநில அரசுக்கு - அண்ணா பல்கலைக் கழக பெருவளர்ச்சிக்குத் தரலாம்; A1 Research University   என்று ஆக்கலாமே!

உயர் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது

‘‘இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்க வில்லை'' என்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் நேற்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த கபளீகரத் திட்டத்திற்கு இடம் தராத வகையில், உயர்கல்வித் துறை அமைச்சரின் கூற்று அமைந்துள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இறுதிவரை இருக்கவேண்டும்; இருக்கும் என நம்புகிறோம்.

அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்தால், இட ஒதுக்கீடு  பறிபோவது, அண்ணா பெயரில் மாற்றம் மட்டுமல்ல; நியமனங்களும் இட ஒதுக்கீடு  பின்பற்றப்படாமல் நடை பெறும்.

ஆளுநரின் நியமனம் - தவறான முன்மாதிரி!

சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தேடல் குழு கன்வீனராக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் (ஜே.என்.யூ.) துணைவேந்தர் என்ற பிரச்சினைக்குரிய நபரை ஆளுநர் நியமித்திருப்பது தவறான முன்மாதிரி யாகும். வெளிமாநிலத்தவர், ஏன் தமிழ் தெரியாத ‘சூரப்பர்கள்' அங்கு வந்து அதையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, உரிமைக்குப் போராடத் தயார் நிலையில் இருப்போம் நாம் அனைவரும்.

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

13.3.2020