வியாழன், 3 அக்டோபர், 2019

அமெரிக்க மாநாட்டில் "பெரியாரும் மனிதநேயமும்" என்ற தலைப்பில் ப. திருமாவேலன் உரை



பெரியாரின் பேரன்களே! பேத்திகளே!

உங்களுக்கு என்னுடைய வணக்கமும் வாழ்த்தும்!

தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இத்தகைய மகத்தான வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர், பெரியாரின் அச்சு, கடந்த முப்ப தாண்டு காலமாய் எனக்கு சமூக ஆசிரியராக இருக் கும் மானமிகு கி.வீரமணி அவர்களே!

பல்லாயிரம் கிலோ மீட்டர் கடந்து வந்து, பெரியாரைக் கடத்தி வந்து

இந்த அமெரிக்க மண்ணில் பெரியாரியத்தை வளர்த்து வரும் எனது மரியாதைக்குரிய சோம. இளங்கோவன் அவர்களே!

அன்புச் சகோதரி அருள்செல்வி வீரமணி அவர் களே! இவர்களோடு தோள் கொடுத்து அமெரிக்க மண்ணில் பணியாற்றி வரும் நண்பர்களே!

பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கும் பெரியார் பற்றாளர்களே!

என்னோடு தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் கருப்பு மெழுகுவர்த்திகளே!

உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

பெரியாரின் மனிதநேயம் என்ற தலைப்பில் பேச நான் அழைக்கப்பட்டு இருக்கிறேன்.

இந்த மாபெரும் அவையில் பேசும் ஆங்கிலப் புலமை பெற்றவனல்ல நான்.

எனவே மொழியில் இருக்கும் குறைகளை மன்னிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் நிச்சயமாக கருத்தில் பிழைகள் இருக் காது என்ற உறுதிமொழியை உங்களுக்குத் தருகி றேன்!

நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன். தமிழ் நாட்டில் ஒரு விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியாரின் எதிரிகள், 'பெரியார் தமிழர் அல்ல' என்று விவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நான் இந்தியாவில் இருந்து வருகிறேன். அங்கு ஒரு விவாதம் நடந்து வருகிறது.

பெரியாரின் எதிரிகள், 'பெரியார் இந்திய தேசத் துரோகி' என்று விவாதம் செய்து கொண்டு இருக் கிறார்கள்.

பெரியாரைத் தமிழர் இல்லை என்று சொல்வதன் மூலமாக

பெரியாரை இந்தியத் துரோகி என்று சொல்வதன் மூலமாக

அவர் பேசிய உண்மைகளை பொதுமக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விட முடியும் என்று அந்த சக்திகள் நினைக்கிறார்கள்.

பெரியார் தன்னை தமிழனாகவோ, இந்தியனா கவோ அடையாளப்படுத்திக் கொண்டவர் அல்ல.

அவர் தன்னை எப்படி அறிமுகம் செய்து கொண்டார் என்றால்,

'நான் ஒரு சுதந்திர மனிதன், சுதந்திர சிந்தனை கொண்டவன்' என்று தான் அடையாளப்படுத்திக் கொண்டார்.

சுதந்திர மனிதனுக்கு மொழியில்லை. இன மில்லை. நாடு இல்லை. ஆமாம் பெரியாருக்கு மொழி, இனம்,நாடு என்ற எந்தச் சிறையும் இல்லை.

உலகளாவிய மனிதனாகத் தான் அவர் வாழ்ந்தார்.

மனிதருக்குள் ஜாதி வேறுபாடு இல்லை, மத வேறுபாடு இல்லை, மொழி வேறுபாடு இல்லை, நாட்டு வேறுபாடு இல்லை, நான் வெள்ளை - நீ கறுப்பு என்ற வேறுபாடு இல்லை, நான் ஆண் - நீ பெண் என்ற வேறுபாடும் இல்லை.

எந்த வேறுபாடும் அற்ற உலக மனிதனாக அவர் வலம் வந்தார்.

ஆண் - பெண் வேறுபாடாவது அவருக்கு இருந் திருக்கத் தானே வேண்டும்? ஆனால் பெண்கள் மாநாட்டில் பேசிய பெரியார், 'பெண்களாகிய நாம்' என்று பேசி இருக்கிறார் என்றால் அவருக்கு பால் பேதம் என்ற நினைப்பும் இருந்ததாகத் தெரிய வில்லை. 'உங்களுக்காக பேசும் ஆணை நம்பாதே' என்று ஒரு ஆண் பேசி இருக்க முடியாது அல்லவா?

மனைவி நாகம்மாள் இறக்கிறார். 'ஒரு தொல்லை ஒழிந்தது' என்கிறார்.மணியம்மையை திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகும் அந்த மணி யம்மை, புத்தகம் விற்பவராகத் தான் வலம் வருகிறார். இந்த மனிதனிடம் பாசம் என்ற ஒன்றே இல்லையோ  என்ற அளவுக்கு நடந்து கொள்கிறார்.

என்ன தான் சுதந்திர மனிதனாக இருந்தாலும் அந்த மனிதனுக்கு மனித இயல்புகளான ஈகோ, புகழ், மான அவமானம் ஆகியவை இருக்கத் தானே செய் யும். ஆனால் புகழுக்காக எதையும் அவர் செய்ய வில்லை. புகழ் எனக்குத் தேவையில்லை என்றவர் அவர். பொதுவாழ்க்கைக்கு வந்தவன்  மான அவமா னத்தை பற்றி கவலைப்படக் கூடாது என்றார். தயவு தாட்சண்யம் இல்லாத மனிதராக இருந்தார். எல்லா வற்றையும் நிர்வாணமாகப் பார்த்தார்.

இப்படி சுதந்திரமான மனிதன் யாராவது உண்டா என்று சொல்லுங்கள்?

தன் புகழ், தன் பெருமை, தன் முனைப்பு, தான் மட்டுமே என்ற தன்மைகள் இல்லாத மனிதனாக இருந்தார் பெரியார்.

உலகம் இதுவரை பார்த்த எல்லாத் தத்துவ ஞானிகளும், 'நான் சொன்னதே சரி' என்பார்கள்.அதுதான் அவர்களை ஞானிகள் வரிசையில் கொண்டுபோய் உட்கார வைத்தது.

பெரியார் ஒருவர் தான், 'நான் சொல்வது என்னைப் பொறுத்தவரையில் சரி' என்று சொன்ன தத்துவ ஞானி.

'நான் சொல்வதை பின்பற்று' என்று தான் எல்லா தத்துவ ஞானிகளும் சொன்னார்கள்.

'நான் சொல்வதை அப்படியே பின்பற்றிவிடாதே' என்று சொன்ன ஒரே தத்துவஞானி பெரியார் மட்டுமே.

'எனது வழியில் வா' என்று தான் அனைத்து தத்துவஞானிகளும் அழைத்தார்கள்.

'எனது வழியில் வராதே, நான் எப்போது, எப்படி மாறுவேன் என்று எனக்கே தெரியாது' என்று சொன்ன தத்துவஞானி பெரியார் மட்டுமே.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அவர் மனித இயல்புகள் என்று சொல்லப்படு வதைத் தாண்டிய மனிதராக வாழ்ந்தார்.

எல்லைக்கோடுகள் இல்லாத உலக மனிதராக வாழ்ந்தார்.

அவரை யாருடன் அல்லது எதனுடன் ஒப்பிடுவது?

அவரை இயற்கையுடன் தான் ஒப்பிட வேண்டும்.

இயற்கையைப் போல எல்லாருக்குமானவராக இருந்தார். அதனால் தான் தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி, உலகின் அனைத்து நாடுகளும் கொண்டாடப் படும் மனிதராக இருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜெர்மனியில்... இந்த ஆண்டு அமெரிக்காவில்... அடுத்த ஆண்டு உலகின் ஏதாவது ஒரு பகுதியில்

சூரியனைப் போல

நிலவைப் போல

காற்றைப் போல

மாழையைப் போல நினைக்கப்படும்  மனிதராக பெரியார் இருப்பார்!

பெரியார் தன்னை மகான், மாபெரும்  பிறவி, பெரிய தலைவர், சாதனையாளர், புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி என்றெல்லாம் பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.

'எந்தக் கட்டுப்பாடுக்குள்ளும் அடங்க மறுப்பவன் ' என்றே சொல்லிக் கொண்டார்.

சிறுவயதிலேயே அடுத்தவர் பேச்சை கேட்கும் பழக்கம் தனக்கு இருந்தது இல்லை என்கிறார்.

யார் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்பவனாக இருந்ததாகச் சொல்கிறார்.

பத்து வயதிலேயே வியாபாரத்துக்கு வந்து விட்டேன், பலதரப்பட்ட மக்களை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அதன் மூலம் பல அனுபவங் களும் உண்மைகளும் தெரியவந்ததாகச் சொல்கிறார்.

தன்னுடைய  வைதீகக் குடும்பத்தில்   செய்யப்படும் சடங்குகள் அவருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. தனது தாய், தந்தையர் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் பல கேள்விகளை எழுப்புகிறது. சுதந்திர எண்ணம் உடைய பெரியார், அந்தக் கட்டுப்பாடுகளை நிராகரிக்கிறார். மனிதர்களுக்குள் வேற்றுமை இல்லை என்று நினைக்கிறார்.

மனிதனை மனிதன் தொடக்கூடாது, பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, நேரில் வரக்கூடாது, கோவி லுக்குள் வரக்கூடாது, ஒரு இடத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது.இதைத் தான் கேள்வி கேட்டார் பெரியார்.

மனிதர்கள் ஒன்று, நமக்குள் எந்த வேறுபாடும் இல்லை என்பதே மனிதாபிமானத்தின் உன்னதமான கொள்கை.

இந்த வேற்றுமைக்கு ஜாதி என்று பெயர் சூட்டுகிறார்கள். ஜாதியைக் கேள்வி  கேட்கிறார்.

இந்த ஜாதியை மதம் காப்பாற்றுகிறது என்கி றார்கள். மதத்தை கேள்வி கேட்கிறார்.

இந்த மதத்துக்கு சாஸ்திரங்கள் அடிப்படை என்கிறார்கள். சாஸ்திரங்களைக் கேள்வி கேட்கிறார்.

இந்த சாஸ்திரங்களை காப்பாற்றுபவர்களாக பிரா மணர்கள் இருந்தார்கள். அவர்களை நிராகரிக்கிறார்.

இவை அனைத்தையும் உருவாக்கியவர் கடவுள் என்றார்கள்.

அப்படி ஒரு கடவுள் இருக்க முடியாது, மனிதனை மனிதன் பிரிப்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று கேட்டார்.

இது தான் பெரியாரியத்தின் அடிப்படை பரிணாம வளர்ச்சி.

இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட இயக்கத்துக்கு மற்றவர்களாக இருந்தால் என்ன பெயர் வைத்து இருப்பார்கள்?

கடவுள் மறுப்பு இயக்கம்.

மத எதிர்ப்பு இயக்கம்.

ஜாதி ஒழிப்பு இயக்கம் - இப்படித்தான் பெயர் சூட்டி இருப்பார்கள். பெரியார் என்ன பெயர் வைத்தார் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார்.

எந்த மனிதனாக இருந்தாலும் அவனது சுய மரியாதை பாதிக்கப்படக் கூடாது,

அவன் சுயமரியாதை உள்ளவனாக வாழ வேண் டும் என்பதற்காகத் தான் இயக்கம் தொடங்கினார்.

'என் வாழ்வில் எத்தனையோ சொற்களை தேடிப் பார்த்துவிட்டேன். சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையான சொல்லை என்னால் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை' என்றவர் பெரியார்.

ஏழை பணக்காரன், உயர்ந்தவன்  தாழ்ந்தவன், அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆப்பிரிக்க குடியுரிமை பெற்றவர், ஆண் பெண் எல்லாருக்கும் பொதுவானது சுயமரியாதை. எல்லாரும் எதிர் பார்ப்பது சுயமரியாதை. எல்லோரும் விரும்புவது சுயமரியாதை.

பேதம் இல்லாத வார்த்தை சுயமரியாதை. அந்த வார்த்தையைத் தேர்ந்தெடுத்தது தான் மனிதநேயத் தின் உச்சம்.



பொதுமக்களின் சுயமரியாதைக்கும் உரிமைக்கும் விடுதலைக்கும் ஆபத்தான இயக்கம் என்று எதையாவது அவர் கருதினால் அதனை அழிக்க பின்வாங்கியது இல்லை. அதனால் எந்தப் பழி வந்தாலும் ஆபத்து வந்தாலும் அதைக் கொஞ்சமும் அலட்சியம் செய்யாமல் துணிச்சலாக நடந்து கொண்டார். ஒரு மனிதனை அவனது சுற்றுச் சார்பு தான் தீர்மானிக்கிறது என்பார்கள். ஆனால் சுற்றுச்சார்பு பெரியாரை என்றைக்கும் பாதித்தது இல்லை. சுற்றுச்சார்புக்கு விரோதமாகத்தான் அவர் நடந்து வந்துள்ளார்.

பிறப்பால் உயர்ஜாதி என்று சொல்லப்பட்டவர். ஆனால் பிறப்பால் கீழ்ஜாதி என்று அடக்கப்பட்ட வருடனேயே இருந்தார்.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பணக்காரத் தன்மை அற்றவராக ஏழைகளுக்காக பேசுபவராக வளர்ந்தார்.

இந்திய தேசியக் காங்கிரஸின் தமிழகத் தலைவராக இருந்தார். ஆனாலும் சாதாரணத் தொண்டனைப் போல கதர் துணிகளை தோளில் சுமந்து விற்றார்.

மிகப்பெரிய ஜமீன்களும், பணக்காரர்களும் நிரம்பிய நீதிக்கட்சியின் தலைவரான பிறகும் அந்த ஜமீன்களின் தயவை நாடாமல் அவர்களை தன்னுடைய சீர்திருத்தப் பாதைக்கு திருப்பினார்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அது காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் அந்த ஆட்சி தன்னுடைய கொள்கையை ஏற்று செயல்படுத்தினால் அந்த ஆட்சியை தயங்காமல் ஆதரித்தார்.

இரண்டு முறை சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி அவரிடம் கேட்டது. இரண்டு முறையும் நிராகரித்தார்.

போராட்டங்கள் நடத்திக் கொண்டார். அவர் நடத்திய போராட்டங்களைப் போல் மற்றவர்கள் காப்பி அடித்து நடத்த முடியாது. சிறைக்குச் செல்லத் தயார் நிலையில் தான் போராட்டத்துக்கு செல்வார். தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்காட மாட்டார். அதிகமான தண்டனைகள் கேட்பார்.சிறையில் வசதி எதிர்பார்க்க மாட்டார்.

இதை எல்லாம் சொல்வதற்குக் காரணம் சுயமரியதை - மனிதநேயம் ஆகிய கொள்கைகளுக்காக போராடிய அவர், தனது சுயமரியாதையைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் செயல்பட்டார். தான் என்ற மனிதன் எவ்வளவு அவமானப்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

அதனால் தான் அவர் சொன்னார், 'பொதுவாழ்க்கைக்கு வந்தவர்கள் மான அவமானம் பற்றி கவலைப்படக் கூடாது' என்றார்.

மற்றவர்களின் சுயமரியாதையைக் காப்பாற்றுவதற் காக தனது மான அவமானம் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டார்.

மிகக் கடுமையான கொள்கைகள், அஞ்சாத போராட்டங்கள் நடத்திய பெரியார் நடைமுறையில் யாராலும் நெருங்க முடியாத ஆளாகத் தான் இருப்பார்கள் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் பெரியார் மாபெரும்  மனிதாபிமானி என்பதால் பழக இனிமையான பண்பாளராக இருந்தார்.

கடலூர் என்ற ஊரில் இரவு நேரத்தில் ஒரு கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு ரிக்‌சாவில் வருகிறார் பெரியார். அவர் மீது செருப்பு வீசுகிறார்கள் எதிரிகள். அந்த நேரத்தில் எந்தச் சலனமும் காட்டாத பெரியார், சிறிது தூரம் போய்விட்டு திரும்பி வந்தார். தன்மீது விழுந்த செருப்பில் இன்னொரு ஜோடி செருப்பை தேடிப் பிடித்து எடுத்துச் சென்றார்.

பெரியார் பேசிவந்த மேடைக்கு முன்னால் உட்கார்ந்து ஒருவர் கேள்வி மேல் கேள்விகளாக எழூதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவை அனைத்துமே பெரியாரை கடுமையாக விமர்சிக்கும் கேள்விகள். ஒரு கட்டத்தில் அவரது பேனாவில் மை  காலியாகி விட்டது. தன்னுடைய பேனாவை எடுத்துக் கொடுத்தார் பெரியார்.

பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டு அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் எழுத்தாளர் ஜெயகாந்தன். தொண்டர்கள் இதனை கடுமையாக எதிர்த் தார்கள். அவர்களைக் கண்டித்துவிட்டு, ஜெயகாந்தனை தொடர்ந்து பேசச் சொன்னார் பெரியார்.

பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகர் ஒருமுறை ஊர்வலமாக வந்தபோது, திராவிடர் கழகத் தோழர்கள் அவருக்கு எதிராக மறியல் செய்தார்கள். அந்த இடத்தில் மோதல் ஏற்படும் என்ற சூழல் வந்தது. இதனைக் கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு வந்த பெரியார், தனது தொண்டர்களை  அமைதிப்படுத்தி சங்கராச்சாரியார் ஊர்வலம் அமைதியாகச் செல்ல  ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இவை எல்லாம் தன்னுடைய கொள்கை எதிரிகளிடம் காட்டிய மனிதநேயம்.

'எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள், தேதி குறிப்பேன்' என்று சொல்வார்.

ஆனால் அவர் தனது வாழ்நாளில் தேதி குறித்தது இல்லை.

'எல்லோரும் தீ பந்தம் ஏற்பாடு செய்யுங்கள், தேதி குறிப்பேன்' என்று சொல்வார்.

ஆனால் அவர் தனது வாழ்நாளில் தேதி குறித்தது இல்லை.

அவரால் அவரது  எதிரிகளுக்கு எந்த சட்டவிரோத துன்பமும் ஏற்பட்டது இல்லை. கருத்துக்களால் எழுத்துக்களால் பேச்சால் பத்திரிக்கைகளால் தாக்கினாரே தவிர நேரடியாக கலவரம்  செய்தவர் இல்லை. கம்பு தூக்கியவர் இல்லை. அவர்  மீது எத்தனையோ வழக்குகள் உண்டு. ஆனால் கிரிமினல் வழக்கு இல்லை. அந்தளவுக்கு தனது அரசியல் எதிரிகளைக் காத்த மனிதநேய மாண்பாளர் பெரியார்.

உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ சிந்தனையாளர்களை உற்பத்தி செய்துள்ளது.

அந்த சிந்தனையாளர்கள் அனைவருடனும் ஒப்பீடு செய்தால் அவர்கள் அனைவரது உயரத்துக்கும் உயர்ந்து நிற்கிறார் பெரியார்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றார் திருவள்ளுவர்.

'மனிதர்களுக்குள் ஜாதி பேதமும் இல்லை, பால் பேதமும் இல்லை' என்றார் பெரியார்.

'நான் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள்' என்றார் புத்தர்.

'நான் சொன்னதை உங்கள் பகுத்தறிவுப்படி சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்றார் பெரியார்.

'மனிதன் உரிமையோடு பிறக்கிறான், அவன் கட்டுப்பட்டுக் கிடக்கிறான்' என்றார் ரூசோ.

'மனிதன் சுதந்திரமானவன் தான்.ஆனால் அவன் சிந்தனை விலங்கிடப்பட்டுள்ளது' என்றார் பெரியார்.

'இறையியல் மனித வாழ்க்கையை ஆள முடியாது. நாத்திகரும், கடவுள் நம்பிக்கையாளரும் என அனை வருக்கும் பொதுவானது ஒழுக்கப்பண்பு' என்றார் வால்டேர்.

'பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி இல்லாவிட்டால் ஒன்றுமில்லை, ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்' என்றார் பெரியார்.

'எல்லாவற்றையும் கேள்வி கேள்' என்றார் சாக்ரடீஸ்.

'எல்லாவற்றையும் பகுத்தறிந்து பார்' என்றார் பெரியார்.

'வீரமனப்பான்மை வேண்டும்' என்றார் நீட்சே.

'எதிர்ப்புத் தெரிவிக்காதவன் வாழ முடியாது' என்றார் பெரியார்.

'பொருளாதார விடுதலையே இறுதி விடுதலை' என்றார் மார்க்ஸ்.

'எனது இறுதி லட்சியம் கூட்டுறவுத்தன்மை உள்ள பொதுவுடமையே' என்றவர் பெரியார்.

-என்று உலகச் சிந்தனையாளர்கள் அனைவரோடும் ஒத்துப் போன பெரியார், டார்வினிசத்திடம் தான் வேறுபடுகிறார்.

' வலிமையானவை அனைத்தும்   வென்று வாழும்' என்பது டார்வினிசம்.

'எல்லா உயினமும் வாழத் தகுதியானவை ' என்றார் பெரியார். அவரது மனிதநேயம் இந்த இடத்தில் தான் உயர்ந்து நிற்கிறது.

வலிமையானவன், உயர்ந்தவன், பணக்காரன், உயர் பதவியில் இருப்பவன் மட்டுமல்ல,

அடக்கப்பட்டவன், தாழ்ந்தவன், ஏழை, ஏதுமற்றவன் - இவனும் வாழத்தகுதி வாய்ந்தவன் தான்.

அதனால் தான் அனைத்துயிர்க்கும் தான் இந்த உலகம் என்றார்.

அவரிடம் இருந்து இந்த சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய மனிதநேய அரசியல் இதுதான்.

வலிமையானது பிழைக்கும் என்பது உலக நியதியாக இருக்கலாம்.

ஆனால் பலவீனமானதற்கும் சேர்ந்தது தானே இந்த உலகு?

ஜாதியால் ஒடுக்கப்பட்ட ஜாதிக்கு பெரியார் பேசியது சமூக மனிதநேயமே.

மதத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்காக பேசியது சமுதாய மனிதநேயமே.

ஆண்களால் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக பேசியது பால் மனிதநேயமே.

பெரும்பான்மை இனத்துக்கு எதிராக சிறுபான்மை தேசிய இனத்துக்காக அவர் பேசியது இனச்சார்பு மனிதநேயம்.

ஆதிக்க மொழிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மொழிக் காக பேசியது மொழிஆதரவு மனிதநேயம்.

அவரது வாழ்க்கை, போராட்டம் , கொள்கை அனைத்துமே மனிதநேய அரசியல் தான்.

' இந்த உலகத்தை யார் வேண்டுமானாலும் ஆளட்டும்,ஆனால் அனைவரையும் ஒரே மனிதராக நடத்தட்டும்' என்றார் பெரியார்.

உலகில் இப்படி ஒருவர் சொல்லி இருக்க மாட்டார்.

யாராலும் சொல்ல முடியாததைச் சொன்னார். அதனால்  தான் அவர் பெரியார்.

அதனால் தான் அவரை தமிழர்களைத் தாண்டி, இந்தியர்  தாண்டி, தெற்காசியா  தாண்டி உலகமே தங்களது நாட்டைச் சேர்ந்தவராகக் கொண்டாடுகிறது.

முதலில் நான் சொன்னதையே இறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன்.

இயற்கையைப் போலவே எல்லாருக்கும் பொதுவானவர் பெரியார்!

வணக்கம்!

இவ்வாறு ப. திருமாவேலன் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 3 .10. 19

1 கருத்து:

  1. அருமையான இந்த உரை கருத்துகள் தமிழகம் முழுவதும் பரவிடவேண்டும்.

    பதிலளிநீக்கு