செவ்வாய், 30 மே, 2023

பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் - வாரீர்!

 

 * சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே!

* நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றுவதா?

1

திராவிட நாகரிகமே சிந்து சமவெளி நாகரிகம் என்று நூறாண்டுக்கு முன்பே தொல்லியல் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டது & இப்பொழுது அதனை ஆரிய நாகரிகமே என்று திரிபுவாதம் செய்யும் - மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து மாபெரும் இயக்கமாக நடத்துவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது இன்று, நேற்று தோன்றியதல்ல.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய காலத்தால் மூத்த நாகரிகம், பண்பால் பழுத்த நாகரிகம்! "கருத்தால்" நிலைத்த நாகரிகம்!

சில காவிகள் - சரியான ஆய்வறிவு இல்லா அறிவு சூன்யர்கள்,   'வெள்ளைக்கார கிறிஸ்துவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் போன்றவர்களால் திராவிடம் உருவாக்கப்பட்டது' என்று கூறியும் எழுதியும் தங்களது கட்டை அறிவை உலகத்தாருக்குப் பறைசாற்றுகிறார்கள்.

மனுதர்மத்திலேயே 

திராவிடம் வந்துள்ளதே!

2

அவர்களது மனுதர்மம் வேதத்தின் விழுது 'ஸ்மிருதி' என்றும், அது 'சுருதி'யிலிருந்து மாறுபட்டது என்றும் கூறுவோர் அதில் திராவிடம் பற்றி (அத்தியாயம் - 10 சுலோகம் - 22, 44) இடம் பெற்றிருப்பது கால்டுவெல் காலத்திற்கு முன்பா? பின்பா?

பாகவத புராணத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக் கிறதே - அதை எந்த வெள்ளைக்காரன் எழுதினான் என்ற தந்தை பெரியாரின் கேள்விக்கு இன்றுவரை பதில் உண்டா?

சர். ஜான் மார்ஷல் என்ற வெளிநாட்டு தொல் பொருள் ஆய்வாளர் 100 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தை பழைய முன்னோடியான திராவிட நாகரிகம் என்றார்; அத்தகைய புதை பொருள் ஆய்வில் ஈர்ப்பு கொண்ட (பாதர்) ஹீராஸ் பாதிரியார் 1945-இல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேசியபோது, "நான் கிரேக்கத்திலிருந்து வந்த திராவிடன் பேசுகிறேன்" என்று தனது அறிமுக உரையைத் துவக்கியபோது மாணவர்கள் கைத்தட்டல் வானைப் பிளந்தது!

சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் அங்கு பேசப்பட்ட மொழி தமிழ் என்பதை பல தரவுகள் மூலம் ஒடிசா அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், சிறந்த ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களும் சிறப்பாக ஏறத்தாழ, சுமார் 1000 பக்கங்கள் கொண்ட நூலை முன்பு ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழிலும் கொண்டு வந்துள்ளார்கள்!

தினமணி ஆசிரியராக இருந்த அய்ராவதம் மகாதேவனும் திராவிட நாகரிகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளாரே!

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே - 

நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிப்பு

வருகிற 2024இல் திராவிட நாகரிகம் பிரகடன அறிவிப்பின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கிறது!

இந்நிலையில் பண்பாட்டுப் படையெடுப்பைத் திட்டமிட்டு நடத்தும் ஆர்.எஸ்.எஸ். ஆரியம், முன்பு அமெரிக்காவில் சில போலி ஆய்வாளர்களை கூலிக்கு அமர்த்தியோ என்னவோ, சிந்துவெளி மொஹஞ்சதாரா, ஹரப்பா அகழ்வாய்வில் கிடைத்த (திராவிடர்களின்) காளை மாட்டுச் சின்னத்தை அப்படியே மாற்றி (ஆரியர்களின்) குதிரைச் சின்னமாக மாற்றியது அம்பலப்படுத்தப்பட்டது.

'Front Line' போன்ற ஆங்கில ஏடுகளே இதுபற்றி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு இந்தப் புரட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியதுண்டே!

சரஸ்வதி நாகரிகம் என்ற ஒன்றுண்டா?

இப்போது அங்குள்ள  கறுப்பான ஒரு சிலையை வெள்ளையடித்து  (இல்லாத) சரஸ்வதி நாகரிகம் என்று இட்டுக்கட்டி ஒரு புதிய புரட்டினை ஆய்வுச் சரக்குபோல் வெளியே விட்டுள்ளனர்!

இதைக் கண்டித்து எதிர்த்து மதுரை (மார்க்சிஸ்ட் கட்சி) எம்.பி. தோழர் வெங்கடேசன் உடனடியாக இந்தப் புரட்டினைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

செத்தமொழி சமஸ்கிருதத்தை சிம்மாசனத்தில் ஏற்றவே இப்படி இடையறாத 'பம்மாத்து' வேலைகளைக் கூச்ச நாச்சமின்றி செய்வது ஆரியத்துக்கு கைவந்த கலை! 

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் பணிகளில் முக்கியமானது தத்துவங்களை (Philosophy) மதமாக   மாற்றுவதாகும்.

ஆன்மீகப் புராணங்களை வரலாறு என்றும், போலி அறிவியலை (Pseudo Science)  உண்மை அறிவியல் போல புனைவதும் இதுபோல பண்பாடுகளைத் தமதாக்கி இல்லாதவைகளை முந்தைய காலக் கணக்கீடுகளைப்  போன்றும் புரட்டி விடுவார்கள்.

பண்பாட்டுப் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்குவோம் - செயல்படுவோம்

இதனை எதிர்த்து ஒரு மாபெரும் பண்பாட்டுப் பாதுகாப்பு புரட்சி இயக்கத்தை, பிரச்சாரம் - கிளர்ச்சி இருமுனை இயக்கமாக ஆக்கிட அனைத்து முற்போக்காளர்களையும் சுற்றுச் சூழல் பாதுகாவலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் - தொல்லியல் ஆர்வலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து விரைவில் ஒரு திராவிடப் பண்பாட்டுப் பாதுகாப்புக் கூட்டணியை திராவிடர் கழகம் உருவாக்கும்.

ஒத்த கருத்துள்ள அனைவரும் ஆதரவு தாரீர்! தாரீர்!!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

25.5.2023

திங்கள், 29 மே, 2023

அரசு அலுவலகங்களில் நாள்தோறும் திருக்குறள் எழுதவேண்டும் தலைமைச் செயலாளர் ஆணை

 

 6

சென்னை, மே 10 - தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அய்ஏஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இரண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். 

தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்கள், கழகம் மற்றும் வாரியத் தலைவர்களுக்கும் வெ. இறையன்பு எழுதியிருக்கும் கடிதத்தில், 

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள கரும்பலகையில், நாள்தோறும் ஒரு திறக்குறளை அதன் பொருளுடன் எழுதி வைக்க வேண்டும். மேலும், ஆங்கில அர்த்தத்துடன் கூடிய தமிழ் கலைச் சொற்களை காட்சிப்படுத்த வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனை பின் பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் ஒரு சில அலுவலகங் களைத் தவிர்த்து மற்ற துறைகளில் இந்த உத்தரவு பின்பற்றப்பட வில்லை என்றும், இனிமேல் சரியாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோரின் கோரிக்கைகளை வென்றெடுக்க கூட்டமைப்பின் சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

  

 21

சென்னை, மே 15 சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் 13.5.2023 அன்று காலை 11 மணியளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின்  கூட்ட மைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம்  எழுச்சியுடன்  நடைபெற்றது.

இக்கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி தலைமையில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.. நாட்டின் பெரும்பான்மை மக்களாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் தொடர்பான பிரச்சினைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்று கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள்  எஸ்.எஸ்.பாலாஜி,  (விசிக), ஆ.வந்தியத்தேவன், (ம.தி.மு.க.), சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர்.ஜி.ஆர்.ரவீந்திரநாத் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.) ஆகியோர் கலந்து கொண்டு உரை யாற்றினர். 

பிற்படுத்தப்பட்டோரின் பிரச்சினை களை எடுத்துரைத்து, நாடாளுமன்றத் திற்கு வெளியேயும் உள்ளேயும் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளின் சார்பில்,  எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பாங்க் ஆப் பரோடா), என்.சிறீதர் (சிபிசிஎல்), ஏ.அழகுராஜ் (என்எல்சி), கே.ராமமூர்த்தி (அய்சிஎஃப்), டி.முத்துக்குமரன் (எம்.எஃப்.எல்.), முருகன் (ஜிஅய்சி-யுனைடெட் இந்தியா), ஆர். குமார் (சேலம் உருக்காலை), செல்வம் (பிஎச்இஎல்-திருச்சி) ஆகியோர் கோரிக் கைகள் குறித்து பேசினர். கூட்டமைப்பில் துணைத் தலைவர் ஏ. ராஜசேகரன் நன்றி கூறினார்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமைப்புகளான ஏர் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பிஎச்இஎல் (திருச்சி), சென்சஸ், கனரா வங்கி சென்னை பெட் ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்(சிறிசிலி), இ.எஸ்.அய்.சி. (ணிஷிமிசி), அய்.அய்.டி. - சென்னை, அய்.சி.எப்.(மிசிதி) சென்னை, எச்.வி.எப்.-ஆவடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை உரத் தொழிற்சாலை, மணலி,  நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன், (என்எல்சி) நெய்வேலி, என் அய்ஆர்டி-அய்சிஎம்ஆர், ஜிஅய்சி - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஜிஅய்சி - யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், சேலம் உருக்காலை (சேலம்), யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஓபிசி கமிட்டி - ராஜாஜி பவன் ஆகிய அமைப்பின் தோழர்கள் , மகளிர் (பாங்க் ஆப் பரோடா) உள்பட ஆர்ப்பாட்டத்திற்கு ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

கருநாடக மாநிலம் - சித்தராமையா பதவி ஏற்பு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட ஆறு முதலமைச்சர்கள் பங்கேற்பு

 

 29

பெங்களூரு, மே 21  பெங்களூருவில் நேற்று (20.5.2023) நடைபெற்ற  விழாவில் கருநாடக மாநிலத்தின் 24-ஆவது முதல் வராக பதவியேற்றார் சித்தராமையா. துணை முதலமைச்சராக    டிகே சிவகுமார் பதவியேற்றார். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

 கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதலமைச்ச ராகவும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும்  பதவி ஏற் றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங் களூரு கன்டீரவா அரங்கில் நேற்று (20.5.2023) கோலாகலமாக நடைபெற்றது.

முதலில், முதலமைச்சராக சித்த ராமையா, துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். தொடர்ந்து, அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ் வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜாரகிஹோலி, மல்லிகார்ஜூன கார் கேவின் மகன் பிரியங்க்    கார்கே,   ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது  ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற் றார்கள். அவர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதிதாக பதவி ஏற்ற சித் தராமையா கருநாடகாவின் 24-ஆவது முதலமைச்சர் ஆவார். 

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன் னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பருக் அப்துல்லா, பிடிபி தலைவர் மெகபூபா முப்தி, மராட்டிய மாநில மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர்கள் நிதிஷ்குமார் (பீகார்), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), அசோக் கெலாட்(ராஜஸ்தான்), பூபேஷ் பாகேல் (சத்தீஸ்கர்), சுக்விந்தர்சிங் சுகு (இமாச்சல பிரதேசம்), ஹேமந்த் சோரன் (ஜார்க் கண்ட்), பீகார் துணை முதல மைச்சர் தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மைதானத்தின் நடுவில் சுமார் 40 ஆயிரம் இருக்கைகளும், மைதானத்தின் கேலரியில் பொதுமக்களுக்கான இருக் கைகளும் போடப்பட்டிருந்தன. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் மைதானத் திற்குள்ளும், வெளியேயும் பெரிய எல். இ.டி. திரைகள் மூலம் நேரடியாக ஒளி பரப்பு செய்யப்பட்டன.  

பதவி ஏற்பு விழா முடிந்ததும் சித் தராமையா, பெங்களூரு விதானசவுதா வில் (சட்டமன்றம்) உள்ள முதல மைச்சர் அறைக்கு சென்றார். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு கன்டீரவா அரங்கை சுற்றி யுள்ள சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

விழா மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

செவ்வாய், 23 மே, 2023

தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்

தமிழ் உலகு: தமிழ் இனி கட்டாயம்:     Viduthalai     May 23, 2023     தமிழ்நாடு, சென்னை,மே23- 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்' என, த...

சனி, 6 மே, 2023

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவைப் போற்றும் வகையில் சென்னையில் சிலை அமைக்கப்படும்!

  

 சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

17

சென்னை,ஏப்.20- “மேனாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர் களின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும்”   என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன்கீழ் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

மேனாள் பிரதமர், சமூகநீதிக் காவலர்,  இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக் களின் பிதாமகர், மறைந்த வி.பி.சிங் அவர் களுக்கு, இந்த 'திராவிட மாடல்' அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் தங்கள் அனுமதியோடு 110 விதியின்கீழ் வெளியிட விரும்புகிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில், மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர்தான் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும், அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்; சர்வோதய சமாஜில் இணைந்தார்; பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார்; தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 

1969-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் நின்று வென்றார்.   உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்; ஒன்றிய வர்த்தக அமைச்சர்; வெளியுறவுத் துறை அமைச்சர்; நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.  தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.  வி.பி.சிங் பிரதமராக இருந்தது பதி னோரு மாதங்கள்தான் என்றாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.  அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக் கப்பட்டபோது தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின ருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு, அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணை யம்தான் ஙி.றி. மண்டல் தலைமையிலான ஆணையம்.  சமூகரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு, ஙி.றி. மண்டல் பரிந்துரையின் ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங் அவர்கள். 

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல; ஏழை - எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல; ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.    மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, 'முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்னபோது, 'இதோ, இப்போதே தேதியைச் சொல்கிறேன்' என்ற கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள்.   அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. 

'சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் 'சுயமரியாதைச் சுடரொளி' வி.பி.சிங் அவர்கள்.   'வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்' என்று கூறும் அளவிற்கு சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் நலனில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு; தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான தொடக்கப் புள்ளி; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் திற்கான தொடக்கப் புள்ளி; வேலை உரி மையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது; தேர்தல் சீர்திருத்தங்கள்;  மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில்;  தேசியப் பாதுகாப்புக் குழு; உழவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மூன்று குழுக்கள்;  டில்லி குடிசைப் பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்; அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (விஸிறி)  அச்சிட வேண்டும்;  நுகர்வோர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் செய்து காட்டிய மாபெரும் சாதனையாளர்தான் வி.பி. சிங் அவர்கள்.  

தமிழ்நாட்டைத் தனது இரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்.  தந்தை பெரியாரைத் தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக் கொண்டார்.  'ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமை யானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுய மரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.   தலைவர் கலைஞர் அவர்களைச் சொந்த சகோதரனைப் போல மதித்தார்.   ''எனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக, இலட்சியத்துக்காக என் னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர்'' என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.  

அதற்கேற்றாற்போல், 21-8-1990 அன்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் இந்தப் பேரவையில் உரையாற்றியபோது, “இந்திய வரலாற்றிலேயே, புதியதொரு சகாப்தமாக சமூகநீதி வழங்கிடும், இந்தப் புரட்சிகரமான முடிவை எடுத்துள்ள தேசிய முன்னணி அரசுக்கும், பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கும், இந்தப் பேரவை தனது இதயமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது”  என வாழ்த்தி, இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  

1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது, மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன்.  பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரித்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங் அவர்கள். அவர் பிரதமர் ஆனபின்னர், டில்லி சென்றோம்; சட்டமன்றக் குழுவோடு நானும் சென்றேன். அப்போது என்னை அவரிடத்தில் அறி முகப்படுத்தினார்கள்.  “இவரை எனக்கு அறிமுகப்படுத்து கிறீர்களா?  இவரை எனக்குத் தெரியாதா? நீங்கள்தானே சென்னையில் இளைஞர் படையை அணிவகுத்து ஒரு மாபெரும் பேரணியை நடத்தி னீர்கள்!" என்று சொன்னது, என்னைப் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன்.  

அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின், உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில், சமூக நீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும், சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற் படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்க வேண் டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் தி.மு.க. போராடியதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

இட ஒதுக்கீடு கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புக்கொள்ள வைத்தது, தி.மு.க. உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்கள்தான்.   அதனை மனதில் வைத்துத்தான், அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உரு வாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூல மாக நடந்திருக்கிறது. அகில இந்திய அளவில் பெரும் பாலான கட்சிகள் அதில் பங் கெடுத்தன. அகில இந்தியா வுக்கே தமிழ்நாடுதான் வழி காட்ட வேண்டும் என்று அக் கட்சிகள் அழைப்பு விடுத் துள்ளன.  தமிழ்நாட்டின் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு மட்டு மல்ல; இந்தியா முழுமைக் குமான அனைத்து மக்களுக் காகவும் குரல் கொடுத்து வருகிறோம். சி.ஆர்.பி.எப். தேர்வானது இந்தி, ஆங்கி லத்தில் மட்டும்தான் நடை பெறும் என்று அறிவிக்கப் பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச் சருக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். தி.மு.க. மாணவ ரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைத் தேர்வுகளும் நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி நமக்குக் கிடைத்திருக்கிறது.  

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.  இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.  தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக் காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்தவர் வி.பி.சிங் அவர்கள்.  இலங்கைப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி 'இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில், தலைவர் கலைஞர் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்குத் தமிழ்ச் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை மிகுந்த பெருமிதத்தோடு, இந்த மாமன்றத்தில் அறிவிக்க விரும்புகிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த, எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத, டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களது புகழ் வாழ்க, வாழ்க, வாழ்க என்று கூறி அமைகிறேன். 

-இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

செவ்வாய், 2 மே, 2023

தலைவர்களின் சிலை மற்றும் நினைவிடங்களில் அவர்களை முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘க்யூஆர் கோட்' முறை அறிமுகம்

  

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

3

சென்னை, ஏப்.21 மக்கள் அதிகமாக பார்வை யிடும் நினைவிடங்கள் மற்றும் தலைவர்களின் சிலைகளில் உடனடியாக அந்த இடங்களின் வரலாறு, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு! அவர்களின் மக்கள் நலத் தொண்டுகள் போன்றவற்றை அறிந்துகொள்ள அந்தச்சிலை களின் கீழே கியூஆர் கோடு பொருத்தும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்துள் ளார். முதல்முதலாக  திருவள்ளுவர் சிலை யிலும், அதற்கு பிறகு அனைத்து சிலைகளிலும் கியூ.ஆர். கோடு பொருத்தும் பணி ஒரு வாரத்தில் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர் களின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ. சுவாமி நாதன் கூறும்போது, 

ஒருவாரத்திற்குள்  நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளின் அருகில் கியூ ஆர் ஸ்கேனர் கோடுகளைப் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்படும், ‘‘மாநிலத்தில் 81 நினைவுச் சின்னங்கள் உள்ளன. இந்த இடங்களில் நினைவகங்களில் முப்பரிமாண முறையில் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடங்கப்படும். பின்னர் அந்த ஒளிப்படங்கள்  www.tndipr.com இல் பதிவேற்றப்படும். இதன்மூலம்  பொதுமக்கள்  நினைவுச்சின்னங்களின் முழு அமைப்பையும் பார்க்கலாம். 

முதலில் சென்னையில் 15 சிலைகள் மற்றும் நினைவிடங்களில் இந்த க்யூஆர் கோட் வைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவிற்கு வந்து விட்டது. தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய இடங்களிலும் இன்னும் 2 மாதங்களுக்குள் பணிகள் முடிந்துவிடும் என்று அமைச்சர் கூறினார்.

QR என்பது Quick Response  என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும்  அனை வராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது. இவற்றில் உள்ள குறியீடுகள் பல வண்ணங்களில் சதுரங்களின் வரிசையைக் கொண்டதாகும். கைபேசி காமி ராவைப் பயன்படுத்தி குறியீட்டில் இருக்கும் முழுமையான விவரங்களைக் காணமுடியும்.