திங்கள், 23 ஜனவரி, 2023

பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் பயனாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து இயக்க வெளியீடுகளை வழங்கி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மு.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, காங்கிரசு கட்சி செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, நாசே இராமச்சந்திரன், இதயதுல்லா, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை.


வியாழன், 19 ஜனவரி, 2023

பிராமணர்' சங்க மாநாட்டில் பாண்டே ஜாதித் திமிர் பேச்சு?

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரில் சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

 

 தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை கடந்த மே மாதத்தில் வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை எனப் பெயர் மாற்றி அரசாணை வெளியிட்டது. தினமணி (9.9.2022) ஏடோ இன்னமும் பழைய பெயரையே வெளியிடுவது ஏன்? சாலை பெயர் மாற்றம் தினமணிக்கு தெரியாதா?

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசிடம், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் பாதுகாத்து அவரது இயக்கமாம் திராவிடர் இயக்கத்தை மேலும் அய்ந்தாண்டு காலம் காத்தவரும், ஏராளமான ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லம் அமைத்தும், மேலும் 60 ஆண்டுகளாக திருச்சியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவருமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூற்றாண்டை அரசு சார்பில் நடத்திடும் வாய்ப்பை இதற்கு முன் பெறவில்லை.

இந்த நிலையில், பெரியார் ஈ.வெ.ரா. சாலை அருகில் உள்ள வேனல்ஸ் சாலையில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் முழு உருவச் சிலை தமிழ்நாடு அரசின் உரிய அனுமதியோடு மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் 1994 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.

அந்த சிலை அமைந்து இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின் பகுதியிலிருந்து செல்லும் வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை 

ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்வது அவரது நூற்றாண்டு காலக்கட்டத்தில் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை யாரை பெருமைப்படுத்தியதாகவும், மகளிர் மாண்பை உயர்த்தியதாகவும் இருக்கும்." எனக் கோரி இருந்தார்.

இதனை ஏற்று சென்னை மாநக ராட்சி மண்டலம் 5-க்கு உள்பட்ட சென்னை வேனல்ஸ் சாலையை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என பெயர் மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணை வெளியிட்டு இருக்கிறது.

அன்னை மணியம்மையார் சிலை அருகிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்தையொட்டி ஆல்பர்ட் திரையரங்கம் வரை உள்ள வேனல்ஸ் சாலை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர்ப்பலகை அரசு சார்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தினமணி (9.9.2022) ஏட்டில் அன்னை 

ஈ.வெ.ரா.மணியம்மையார் சாலை என்று வெளியிடுவதற்கு பதிலாக பழைய பெயரையே வெளியிட்டிருப்பது ஏன்?

தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீக்கம்

 

தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்களுக்கே அரசுப் பணி 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது!

தமிழ் படிக்காமலேயே தமிழ்நாடு அரசுப் பணி களில் சேர்ந்த அவலத்தை நீக்கும் வகையிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடுதலாகக் கிடைக்கும் வகையிலும், இனி தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்பவர்கள் தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றாகவேண்டும் என்ப தற்கான சட்டத் திருத்தம், தமிழ்நாடு சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் பாராட்டியும், வரவேற்றும்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர்ந்திட தமிழ் மொழிக் கட்டாயம் என்று, சட்டத்தின் முன்வரைவு நேற்று (13.1.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகமிக வரவேற்றுப் பாராட்டப்படவேண்டிய ‘திராவிட மாடல்' ஆட்சியின் தனிப்பெரும் சாதனையாகும்!

நிதியமைச்சரும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று (13.1.2023) தாக்கல் செய்த இந்த மசோதா தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு உரிமை - வாய்ப்புகளைக் காப்பாற்ற பெரிதும் பயன்படும்.

தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்திட தமிழில் 40% மதிப்பெண் அவசியம் - சட்டத் திருத்தம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 அய் திருத்துவதற்கான சட்ட மசோதா கூறுவது என்ன?

அச்சட்டத்தின் 21 ஆம் பிரிவில் 21-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அந்தச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின்படி, தமிழ்நாட்டின் அலுவல் மொழியான தமிழில் போதிய அறிவு பெறாத எவரும், நேரடி ஆள் சேர்ப்பின்மூலம் நடைபெறும் பணி எதிலும் நியமனம் செய்யப்பட, தகுதி உள்ளவராக கருதப்பட மாட்டார்.

அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழில் போதிய அறிவு இல்லாதிருந்த விண்ணப்பதாரர்கள், தமிழ் மொழித் தகுதி பெறாமலேயே பணி நியமனம் பெற்றிருக்கலாம்; அப்படிப்பட்டவர்கள், பணியமர்த் தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில், இரண்டாம் மொழித் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு பணியில் சேர விண்ணப்பிக்கவேண்டும். தமிழில் தேர்ச்சி பெறவில்லையானால், பணியிலிருந்து அவர் களை விடுவிக்கலாம்.

தற்போது அந்தச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் 21-ஏ பிரிவின்படி, 1.12.2021  ஆம் நாளில் இருந்து, நேரடி ஆள்சேர்ப்பு மூலம் எந்த ஒரு பதவிக்கும் விண்ணப் பிக்கும் நபர் எவரும், பணி நியமனத்திற்காக நடத்தப் படும் தேர்வில், தமிழ் மொழித் தாளில் 40 விழுக் காட்டிற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

தமிழ் மொழித் தேர்வுக்கான அப்பாடத் திட்டத்தை அவ்வப்போது அரசு வெளியிடும்.

முந்தைய சட்டத்திலிருந்த 

ஓட்டை அடைக்கப்பட்டுள்ளது

இம்மசோதா முந்தைய சட்டத்தில் உள்ள ஓட்டை களை அடைக்கின்ற வகையில் உள்ளது என்றாலும், வெளிமாநிலத்தவர் நம் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறித்துக்கொண்டு செல்லாத அளவுக்கு, உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தமிழ்ப் படித்தவர்களா (அவர்கள்) என்பதை உறுதி செய்து, பிறகு வேலை வாய்ப்பை அளிக்கும் ஓர் ஓட்டையை விட்டுள்ள (Fool-proof) முறையை ஆய்வு செய்வது அரசின் கண்ணோட்டமாகி, நமக்குப் பயன்படவேண்டும்!

தமிழ்நாட்டு இளைஞர்கள் பல லட்சம் பேர் ஏங்கித் தவிக்கையில், முன்பிருந்த அ.தி.மு.க. அரசு, பிற மாநில இளைஞர்களுக்குப் பணி நியமனங்களில் அகலமாகக் கதவுகளைத் திறந்து வைத்த காரணத்தினால், இத்திருத் தங்கள் இன்று முக்கியமாகத் தேவைப்படுகின்றன.

அவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்களா? தமிழில் படித்தவர்களா? என்று உறுதிப்படுத்திக் கொண்டு பணி நியமனத்திற்கு மனு போடும் தகுதியை முன்நிபந்தனை ஆக்கவும் வேண்டும்.

தமிழ் ஆட்சி மொழியாக தமிழ்நாட்டில் இருக்கும் போது, தமிழ் தெரியாதவர்கள் - அவர்கள் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்.,களாக இருந்தாலும் அல்லது நான்காம் பிரிவு (குரூப் 4) பணியாளர்களாக இருந்தாலும் அரசுப் பணிகளைப் பெறும் நிலை இனியும் இருக்கக்கூடாது.

மாநிலத்தின் ஆளுமைத் திறனையும் இது வெகுவாகப் பெருக்கப் பெரிதும் உதவவும் கூடும்.

தமிழ்ப் படிக்காமலேயே 

அரசுப் பணியில் சேர்ந்த அவலம்!

இந்தத் திருத்தத்தின் முக்கியத்துவம், தமிழ் மொழித் தாளில் 40 விழுக்காடு மதிப்பெண் என்பது முன் நிபந் தனையாகும். நம் இளைஞர்களும்கூட, தமிழ் படிக்கா மலே அரசுப் பணிகளில் சேரலாம் என்ற அவலத்திற்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால், இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்!

உணவின் தரம், சமைப்பதைவிட அதை உண்ணுபவர்களின் ருசியே முக்கியம். சத்தும் மிகமிக முக்கியம் என்பதே இதன் நோக்கமாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.1.2023

சனி, 14 ஜனவரி, 2023

வடபுலத்தில் பெரியார் முழக்கம்!

 

மண்ணின் மைந்தர்களுக்கு எதிரானவையே மனுஸ்மிருதி - 

ராமாயணங்கள் எல்லாம்! வெறுப்பைப் பரப்புவதே ஆர்.எஸ்.எஸ். பணி!

பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பீகார் கல்வி அமைச்சர் சாட்டை அடி!

பாட்னா, ஜன. 14 - மனுஸ்மிருதியும், ராமசரிதைகளும் இந்த நாட்டின் ஆதிகுடிகளான தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு எதிரானவை என்று பீகார் கல்வி யமைச்சர் சந்திரசேகர் பேசியுள்ளார். மேலும், இவை மக்களி டையே வெறுப்பை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். 

பீகார் கல்வி அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவருமான சந்திரசேகர், நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 15 ஆவது பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். 

‘‘ராமாயண காவியத்தை அடிப் படையாகக் கொண்ட துளசிதாசர் எழுதிய ராமசரித்மனாஸ் கவிதை சமூகத்தில் வெறுப்பைப் பரப்புகிறது. ராம்சரித்மனாஸின் சில பகுதிகள் குறிப்பிட்ட ஜாதியினருக்கு பாகுபாடு காட்டுகிறது. 

தாழ்த்தப்பட்டவர்கள், கல்வியைப் பெற்ற பின் பாம்பு களைப் போல ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள் என்று ராம்சரித்மனாஸ் கூறுகிறது. ‘ராம்சரித்மனாஸ்’ மற்றும் ‘மனுஸ் மிருதி’ ஆகியவை சமூகத்தை பிளவு படுத்துகின்றன. அத னாலேயே தாழ்த்தப்பட்ட,  பழங்குடிகள் மத்தியில் ராம்சரித் மனாஸுக்கு எதிர்ப்பு எழுந்தது. காவி சித்தாந்தவாதியான கோல்வால்கரின் ‘சிந்தனைக் கொத்து’ வெறுப்பைப் பரப்பும் நூலாகும். 

அதற்கு முன்பு, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் ஆகியவை நாட்டில் வெறுப்பைப் பரப்பின. ஆனால், வெறுப்பு அல்ல, அன்புதான் நாட்டை ஒன்றிணைக்கிறது. இந்துக்களின் மரியா தைக்குரிய நூல்களான, மனுஸ்மிருதி, ராம்சரித்மனாஸ் போன்றவை தாழ்த்தப் பட்டவர்கள், பிற  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கல்வி கற்கும் பெண் களுக்கு எதிரானவை. எனவே, ராம்சரித் மனாஸில் சமூகப் பாகுபாடுகளை அங்கீ கரிக்கும் வகையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்” என சந்திர சேகர் கூறியுள்ளார்.

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

பாதை மாறா பயணம்‘‘ நூலினைப் பெற்றுக்கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

வெள்ளி, 6 ஜனவரி, 2023

பிரிவினை பேசுவது ஆரியர்களா? திராவிடர்களா? * ஆளுநரே, உச்சநீதிமன்றம் வைத்த குட்டை மறந்துவிட்டீர்களா?

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

நமது 'விடுதலை' நாளேட்டில் ஒரு புதிய திட்டம்! பயிற்சிப் பட்டறை - எழுத்தியல், கருத்தியல் பயிற்சி!


மாணவ, இளைஞர்களுக்கு 

எழுத்து ஊடகப் பயிற்சித் திட்டம்

பயிற்சிப் பட்டறை - எழுத்தியல், கருத்தியல் பயிற்சி!

35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் - பால் வேறுபாடு தடையில்லை. ஆர்வமிக்க இளைஞர்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரை பயிற்சி தரவும் -

பிறகு பயன்படுத்தும் தகுதியுடன் அவர்களுக்குப் புது வாய்ப்பு தரும் திட்டம் ஒன்றை விரைவில் அறிவிக்கவிருக்கிறோம்!

அடிப்படையில் பெரியாரியல் மாணவர்களாக, ஆர்வலர்களாக அவர்கள் இருப்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்கும்.

உள்ளூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அறிமுகப் பரிந்துரையுடன் இது செயல்டும்!

தைப் பொங்கல் முடிந்தவுடன் நமதுப் பிரச்சாரப் பயணமும் தொடரும்