நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 டிசம்பர், 2023

புயல் - வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!


3-16

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் – பெரியார் மணியம்மைக் கல்வி அறப்பணிக் கழகம் – பெரியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோர் சார்பில்
புயல் – வெள்ள நிவாரண நிதிக்கான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை
முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார் அறக்கட்டளையின் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி!

இயற்கையின் சீற்றம் காரணமாக புயல் – மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் மக்கள் பெரும் அல்லலுக்கும், துயருக்கும் ஆளாகியுள்ளார்கள் – தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு ஒரு சீரான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மட்டும் அல்ல; தன்னார்வ நிறுவனங்களும் ‘உற்றுழி உதவுதல்’ என்ற முறையில், உதவிக் கரத்தை நீட்டவேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடும், மனிதநேயத்துடனும், ‘‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்‘’, ‘‘பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம்‘’ என்கிற அறக்கட்டளை அமைப்புகளின் சார்பிலும், ‘‘பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள்” சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் சந்தித்து
ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் இன்று (11.12.2023) காலை 11 மணியளவில் வழங்கினார். நூல்களைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முதலமைச்சரிடம் அளித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், அரசின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதலமைச்சரிடம் உரையாடி விடைபெற்றார்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உடன் சென்றிருந்தார்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி

*https://www.hindutamil.in/news/india/540102-extra-fund-for-sanskrit.html*

*"செம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை விட சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 மடங்கு கூடுதல் நிதி"*

*- ஆர். ஷபிமுன்னா -*

புதுடெல்லி, பிப். 18 -
செம்மொழி பட்டியலில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியாவைவிட, சுமார் 22 மடங்கு கூடுதலாக சம்ஸ்கிருத மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
மத்திய அரசின் செம்மொழி பட்டியலில் சம்ஸ்கிருதத்தை அடுத்து, கடந்த 2004-ம் ஆண்டு தமிழ்மொழியும் இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளும் அப்பட்டியலில் இடம் பெற்றன. இவற்றில் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளின் ஆய்வுக்கு மட்டுமே மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. மற்ற 4-ல் மலையாளம் மற்றும் ஒடியாவுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்படவில்லை. அத்துடன் அம்மொழிகளுக்காக மத்திய அரசின் ஆய்வு மையங்கள் கூட இன்னும் தனியாக தொடங்கப்படவில்லை. மாறாக மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்திலேயே அவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தெலுங்கு மற்றும் கன்னடத்துக்கு அதன் துறைகள் உயர் ஆய்வு மையங்களாக மாற்றப்பட்டன. பிறகு தெலுங்கு உயர் ஆய்வு மையம் மட்டும் ஆந்திராவின் நெல்லூருக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தின் சமீபத்திய கூட்டத்தொடரின்போது, சம்ஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக மற்றும் சிவசேனா உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அதில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி தொகை ஒதுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி வெகுவாகக் குறைந்து வருகிறது. இதன்படி, 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழாய்வு நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக தமிழக முதல்வர் இருந்தும் அதனால் வளர்ச்சி பெற முடியவில்லை. இதன் பொறுப்பு இயக்குநர்களாக நியமிக்கப் படுபவர்களும், தமிழறிஞர்களாக இல்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி மற்றும் கட்டுமான வளர்ச்சி தடைபட்டு வருகின்றன.
சர்வதேச நாடுகளுடன் தமிழுக்கான ஒருங்கிணைப்பு கிடைக்காததுடன் ஆய்வுகளும் முறையாக நடைபெறாமல் உள்ளன. தொடக்கத்தில் மூத்த ஆய்வறிஞர்கள் 10 பேர் இருந்தனர். தற்போது ஒருவர்கூட இல்லை. புதிதாக அமர்த்தப்பட வேண்டிய சுமார் 150 பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதுபோன்ற செயல்களால் 13 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் இழப்பையும் மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனக் கருதப்படுகிறது.

*நன்றி : "இந்து தமிழ் திசை" நாளேடு 18-02-2020*