பேராசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேராசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 டிசம்பர், 2022

வாழ்க இனமானப் பேராசிரியரின் தொண்டு!

இனமானப் பேராசிரியர் க.அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

நூற்றாண்டு நிறைவு விழாவில் பேராசிரியரின் படம் திறப்பு!

இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் புகழாரம்!

வியாழன், 19 மார்ச், 2020

இனமானப் பேராசிரியர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் சூளுரை

தன்மானத்தைவிட இனமானமே முக்கியம் என்று வாழ்ந்து காட்டியவர் இனமானப் பேராசிரியர்

மதவெறி- ஜாதிவெறியைத் தகர்ப்போம்!

திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது!

எதிர்வரும் சவால்களை நமது தளபதி சந்திப்பார் - வெல்வார்!

இனமானப் பேராசிரியர் நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் சூளுரை

சென்னை, மார்ச் 15   மதவெறி, ஜாதிவெறிகளை வீழ்த்துவோம் - தன்மானத்தைவிட இனமானமே பெரிது என்ற உணர்வைக் கொள்வோம். இன மானப் பேராசிரியரின் பாடங்களைப் பின்பற்று வோம் -  தளபதி மு.க.ஸ்டாலின் எதிர்வரும் சவால்களை சந்திப்பார் - வெற்றி கொள்வார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சங்கநாதம் செய்தார்.

நேற்று (14.3.2020)  மாலை சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், இனமானப் பேராசிரியருமான க.அன்பழகன் அவர் களுடைய படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்கள் தலைமை உரையாற்றினார்.

அவரது   உரை வருமாறு:

நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார்

மிகுந்த சோகத்திற்கும், துன்பத்திற்கும் இடையில், இந்த வீர வணக்க நிகழ்ச்சி நாள்.  நம்முடைய இனமானப் பேராசிரியரை இறுதியாக  வழி யனுப்பினாலும்,

என்றைக்கும் பேராசிரியர் மறையவில்லை, நம்மோடுதான் இருக்கிறார், நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார், நம் ரத்த நாளங்களில் உறைந் திருக்கின்றார், உணர்வை ஊட்டுகின்றார். எதைப் பாடமாக அவர்கள் சொல்லிக் கொடுத்தார்களோ, அந்தப் பாடங்களை மீண்டும் மீண்டும் நினை வூட்டுகிறோம் என்பதற்காக, இந்தப் படத்தைத் திறந்து வைத்து, எனக்குப் பிறகு ஒரு சிறந்த வீர வணக்க உரையை நிகழ்த்தவிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் அன்பு சகோதரர், கலைஞரால், பேராசிரியரால் அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் விட்டப் பணிகளை நான் முடித்தே தீருவேன் என்று சூளுரைக்கக் கூடிய  அருமை சகோதரர், அருமை தளபதி அவர்களே,

பேராசிரியரின் படத்திறப்பு நிகழ்விற்கு முன்னிலை ஏற்று சிறப்பாக உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் அருமை சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களே,

அனைத்து இயக்கங்களைச் சார்ந்த அருமைத் தோழர்களே, அவருடைய இழப்பால் மிகப்பெரிய சோகத்திற்கு ஆளாகியிருக்கக்கூடிய அவருடைய குருதிக் குடும்பத்தவர்களே, கொள்கைக் குடும்பத்த வர்களாக இருக்கக்கூடிய அருமை சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு பேராசிரியர்களை

அடையாளம் காட்டினார்

பேரறிஞர் அண்ணா அவர்கள்  இந்த இயக்கத்தில் தளபதியாக இருந்த காலத்தில், இரண்டு பேராசிரியர் களை அடையாளம் காட்டினார்.

பல பேருக்கு இந்த வரலாறு நினைவூட்டப்பட வேண்டிய வரலாறு. தந்தை பெரியார் அவர்களையே, அண்ணா அவர்கள் முதலில் ‘‘பேராசிரியர்'' என்று குறிப்பிட்டார். தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார் என்று சொன்னார்கள். அந்த பேராசிரியரின் உரை  மாலை நேர வகுப்புகளாகத்தான் தொடங்கும். மூன்று மணி நேரம், நான்கு மணிநேரம் பல ஊர்களிலே நடக்கும் என்று சொன்ன அண்ணா அவர்கள்,

அடுத்து அவரால் அடையாளம் காட்டப்பட்ட இன்னொரு பேராசிரியர்தான் இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கக்கூடிய நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்?

இளைஞர்களுக்குத் தெரியவேண்டும். சுருக்கமாக சொல்லுகிறேன். பேராசிரியர் எப்படி இனமானப் பேராசிரியராக அழைக்கப்பட்டார்? இதைத் தெரிந்து கொண்டு நீங்கள் இந்த அரங்கத்தைவிட்டுப் போகவேண்டும்.

அதுதான் அந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது நாம் நினைவூட்டிக் கொள்ளவேண்டிய பாடமும்கூட.

தந்தை பெரியார் சொன்னார்,  இந்த இயக்கம் தன்மான இயக்கம் - சுயமரியாதை இயக்கம்; தன்மானம் என்று சொல்லும்பொழுது, தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்பதுதான் தன்மானம். ஆனால், தன்மானத்தைவிடப் பெரியது ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர்தான் இனமானம்.

தன்மானம் தோற்கவேண்டும்;

இனமானம் வெற்றி பெறவேண்டும்

தன்மானத்திற்கும், இனமானத்திற்கும் போட்டி வருகின்ற நேரத்தில், தன்மானம் தோற்க வேண்டும்; இனமானம் வெற்றி பெறவேண்டும். அதற்காகத்தான் உழைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் எடுத்த பாடத்தை, பேராசிரியர் சொல்லிக் கொடுக்கவில்லை;  மாறாக வாழ்ந்து காட்டினார். அவர்தான் நம்முடைய இனமானப் பேராசிரியர்.

தன்னை விட மூத்தவர்கள், இளையவர்கள், தன்னைவிட அதிகமான சிறப்புப் பெற்றவர்கள் என்பதைப்பற்றி எல்லாம் அவருக்குக் கவலை யில்லை.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்ற குறள் முக்கியமானது.

கலைஞர் கட்சியின் தலைவர் என்று சொல் லுகின்ற நேரத்தில், கட்டுப்பாடோடு பின்பற்றி னாரே, அதனால்தான் அவர் இனமானப் பேராசிரி யர் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தப் பாடத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

‘‘கொள்கைகளைப் பேசா நாட்களெல்லாம்

பிறவா நாட்களே!''

அதுபோலவேதான், அவரைப் பொருத்தவரை யில், எந்தப் பதவியையும் அவர் தேடிப் பிடித்ததில்லை. எல்லாப் பதவிகளும் அவரைத் தேடிப் பிடித்தன. அதுதான் அந்த இனமானப் பேராசிரியருடைய தனித்தன்மை. கொள்கைகளைத்தான் எந்த மேடையிலும் சொல்வார். தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள்கையை, பகுத்தறிவுக் கொள்கையை, இனமானக் கொள்கையை அண்ணா அவர்கள் எப்படி  விரிவாக விளக்கினார்களோ, அதற்கடுத்து, மிகத் தெளிவாக, கலைஞரும், பேரா சிரியரும்,  எல்லா மேடைகளிலும், இந்தக் கொள்கை களைப் ‘‘பேசா நாட்களெல்லாம் பிறவா நாட்களே'' என்று கருதியவர்கள் பேசியவர்கள்!

இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்; இந்த இயக்க வரலாற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். நான்கு தலைமுறைகளைப் பேராசிரியர் கண்டிருக்கின்றார்.

எந்தக் கொம்பனாலும்

வீழ்த்திவிட முடியாது

கழகத்தின் தலைவராக, தளபதியாரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்; ஏற்றுக் கொண்டிருப்பது மட்டு மல்ல, தட்டிக் கொடுத்திருக்கிறார். உற்சாகப்படுத்தி யிருக்கிறார், இளைஞர்களை வரவேற்கக்கூடிய அந்த மனப்பான்மை இருக்கிறதே, அதுதான் இந்த இயக்கத்தினுடைய ரத்தவோட்டம் - அதுதான் ஜீவநாடி!  இதை எந்தக் கொம்பனாலும் வீழ்த்திவிட முடியாது என்பதற்கு உத்தரவாதம்.

அண்ணா அவர்கள் இயக்கத்தில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இந்த மூன்றைக் கவசங்கள் போலத் தந்தார்கள்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

அண்ணா அவர்கள் மறைகின்ற நேரத்தில், பெரியார் ஒரு விளக்கத்தை சொன்னார்கள். அது என்ன தெரியுமா?

‘‘மூன்றும் முக்கியம்தான் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகவும் முக்கியம்தான். கடமை என்பதற்கு ஒரு பொருள் சொல்லலாம்; இரண்டு பேர் மாறுபடலாம். கண்ணியம் என்பது ஒருவருக்குக் கண்ணியமாக இருப்பது, இன்னொருவருக்கு வேறு விதமாக தெரியலாம். அதற்கு இரண்டு அர்த்தங்கள், வியாக்கியானங்களை சொல்லலாம். ஆனால், கட்டுப்பாடு என்பதற்கு ஒரே பொருள்தான். எனவே, இந்த இயக்கம் தழைக்கவேண்டுமானால், திராவிட இயக்கம் என்றைக்கும் நிலைக்கவேண்டுமானால், கட்டுப்பாடு, கட்டுப்பாடு, கட்டுப்பாடு'' என்று சொன்னார்கள்.

கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கிறார்!

அந்தக் கட்டுப்பாட்டை காத்தவர்தான், இங்கே படமாகவும், பாடமாகவும் இருக்கின்ற நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

இந்தப் பாடம் நமக்கு உறுதியாக இருக்கின்ற வரையில், எந்தக் கொம்பனும் இந்த இயக்கத்தை அசைத்துவிட முடியாது; இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என்று கணக்குப் போட முடியாது.

எனவேதான், பெரியார் தந்த வழியிலே, அண்ணா காட்டிய முறையிலே, கலைஞர் உழைத்த உழைப் பிலே, இன்றைக்கு எல்லோரையும் சேர்த்து வைத்து, செதுக்கப்பட்டவர்தான் நமது தளபதி! எதிர் வருகின்ற சவாலை ஏற்கக்கூடிய எங்கள் தளபதி அவர்கள், சகோதரர் அவர்கள் துணிவாக, களத்திலே நின்று சந்திக்கக்கூடியவர்!

மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது

எனவே, இது வெறும் வீர வணக்க நாள் அல்ல நண்பர்களே, மீண்டும் நம்முடைய லட்சியப் பயணம் தொடருகிறது - வெற்றியை நோக்கித் தொடருகிறது.

‘‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?'' என்று கேட்கக்கூடிய அந்த உணர்வோடு நம்முடைய லட்சியத்தை நோக்கிப் போகின்றோம் என்பதைப் புதுப்பிக்கின்ற நாள் இந்த நாள் - இந்தப் படத்திறப்பு.

அதை செய்வதற்குரியவர்தான் அடுத்து இங்கே உரையாற்றவிருக்கிறார்கள்.

பேராசிரியர் பேசியதைப்பற்றி இங்கே துரை முருகன் அவர்கள் சொன்னார்கள். அதையே நான் வழிமொழிகிறேன்.

அதுமட்டுமல்ல, இன்னும் தெளிவாக, பேராசிரிய ருடைய அந்த விளக்கம் இருக்கிறதே, எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதற்குத் தெளிவான பதிலை சொல்வார்கள் என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தை சொல்கிறேன்.

இளைஞர்கள், புதிதாக தங்களை இயக்கத்தில் இணைத்துக் கொள்கிறார்கள், அந்தத் திராவிடத்தை அழிப்போம் என்று சிலர் கனவு காண்கிறார்கள் அல்லவா - திராவிடத்தை நாங்கள் வீழ்த்திவிடுவோம் என்று இப்பொழுது யார் யாரெல்லாமோ வந்திருக் கிறார்கள் அல்லவா! சில பேரை ஏமாற்றுகின்ற வகையில்,  பேசுகிறார்கள்.  நாம் பக்குவப்படுத்தி இருக்கின்ற வயலில் இருக்கின்ற நாற்றங்காலை, வேறு வயலில் திருட்டுத்தனமானப் பிடுங்கி நடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களை அடை யாளம் காணவேண்டும்.

பேராசிரியர் பேசுகிறார் கேளுங்கள்:

பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன் - பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்

‘‘எதற்காக தமிழ்நாட்டில், தமிழர்களாகிய நாம், திராவிடர் கழகம் என்று பெயர் வைக்கவேண்டும். தமிழர் என்ற பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?''  என்று கேட்டார்கள்.

அதற்குப் பதில் சொல்கிறார் பேராசிரியர்,

‘‘நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் பதில் இதுதான். பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன். பார்ப்பனரைவிலக்கிய பெயர் திராவிடன்.''

எவ்வளவுத் தெளிவாக இருக்கிறது பாருங்கள். எனவே,  இந்தத் தெளிவு இருக்குமேயானால், இந்த இயக்கத்தை ஆயிரமாண்டுகள் ஆனாலும், எந்த வடநாட்டுக் காற்றும், வாடைக் காற்றும் அசைத்துவிட முடியாது. மதவெறி இந்த இயக் கத்தை உலுக்கிவிட முடியாது.

அதைத் தெளிவாகச் சொன்னது மட்டுமல்ல,

தமிழர் என்று கூறிக்கொள்வதில் நான் பெரு மைப்படுகிறேன். திராவிடர் என்பதால், நான் உரிமை பெறுகிறேன். இதுதான் பேராசிரியர் அவர்களுடைய விளக்கம்.

திராவிடர் என்று சொன்னால்தான், உரிமை - மான உரிமை - ஆட்சி உரிமை - எல்லா உரிமை களும்.

எனவேதான் நண்பர்களே, இந்தப் பாடங்கள் என்றைக்கும் நிற்கும். இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது,  அந்தப் பாடத்தை நாம் தெரிந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே, பேராசிரியர் அவர்களுடைய பாடங்கள், என்றைக்கும் நாம் புதுப்பித்துக் கொள்ளவேண்டிய பாடங்கள். என்றைக்கும் மறையக்கூடிய பாடம் அல்ல. ஏனென்றால், கொள்கைகளைக் கொண்டது. ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக.

ஆட்சிக்காக நாம் செய்யவேண்டியதில்லை. கொள்கைக்காக, கொள்கையை செய்வதற்காக, லட்சியத்தை அடைவதற்கான வழிமுறை அது.

பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது

எனவே, இந்த மேடை, இந்த வீர வணக்க நாள் - நம்முடைய தளபதி எல்லாவற்றையும் சேர்த்து, எல்லா ஆற்றலையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்.

அவரை உற்சாகத்தோடு, இத்தனைத் தோழர்கள் கூடி, லட்சியப் பயணத்தில், இந்தப் பந்தயக் குதிரை வெல்லும் என்று சொல்வதற்காகத்தான் இந்த மேடை.

பந்தயக் குதிரைக்கு முன், ஜட்கா குதிரைகள் ஒன்றும் செய்ய முடியாது. சில குதிரைகளைக் கொண்டு வந்து காட்டினார்கள் - ஆனால், சில நாள்களுக்கு முன்பு அவை பொய்க்கால் குதிரைகள்  என்று புரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு வந்து விட்டது என்பதை நாடே தெரிந்துகொண்டிருக்கிறது.

நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம்!

எனவே, நாளையும் நமதே  - நாளைய மறுநாளும் நமதே - நாடும் நமதே - ஆட்சி நமதே - அதுவே பாடம் - அதுவே பேராசிரியர் நமக்கு சொல்லிக் கொடுக்கின்ற பாடம்.

ஆட்சி என்பது இருக்கிறதே காட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக - அதை செய்யக்கூடிய தளபதி இங்கே இருக்கிறார் - அவருடைய கரத்தைப் பலப்படுத்துவதற்கு அத்தனைப்  பேரும் இங்கே இருக்கிறோம்.

இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய  மேடை  இந்த மேடை

இவ்வளவுப் பேரும் மேலும் கூடுவார்களே தவிர, இது குறையாது - இது வளரும் - அதுதான் இந்தியா விற்கே வழிகாட்டக்கூடிய  மேடை இந்த மேடை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மதவெறி வெல்லாது

ஜாதி வெறி வெல்லாது

இனப் பகை ஒழியும் என்பதில் அய்யமில்லை.

இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும்!

பாரம்பரிய விரோதிகள் இருக்கின்ற இடம் தெரியாமல் போவார்கள். எங்கள் இளைஞர் கூட்டம் எழும் - சிங்கம்போல் எழும் - அதுதான் இந்தப் பேராசிரியருடைய புன்னகைக்குப் பொருள் என்று கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பேராசிரியர்! வெல்க திராவிடம்!

வாழ்க பெரியார்! வளர்க  பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

-  விடுதலை நாளேடு 15 3 20

ஞாயிறு, 15 மார்ச், 2020

இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்!

கவிஞர் கலி.பூங்குன்றன்

எத்தனையோ பேராசிரியர்களை நாடு கண்டு இருக்கிறது. ஆனால், இனமானப் பேராசிரியர் என்று ஏற்றுக்கொள்ளத்தக்க _ போற்றிப் புகழத்தக்க _ வரலாற்றில் நிலைக்கத் தக்கவர் _ தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் செம்மாந்து நின்ற மானமிகு க.அன்பழகன் அவர்களே ஆவார்!

நேர்கொண்ட பார்வை _ இரு பொருள் தரும் சொற்களைப் பேசாமல் -_ எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுதான் அவரின் அணுகுமுறையும் நடைமுறையுமாகும்!

பதவிக்காக வளைவது _ குனிவது _ நழுவுவது என்பது எல்லாம் அவரைப் பொருத்தவரை எதிர்மறைச் சொற்களே!

தி.மு.க. என்பது இந்து மதத்திற்கு எதிரானது _ இந்துக்கள்தான் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் _ எனவே பெரும்பான்மையான மக்களுக்கு தி.மு.க எதிரானது என்று நிலைநாட்ட பார்ப்பன சக்திகள் படாத பாடு படுகின்றன.

பார்ப்பனர் இந்து மதம் என்கிற போர்வையிலே தங்களின் (பார்ப்பன) ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையும் _ இந்து மதம் என்று சொன்னால் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள், பஞ்சமர்கள், அடிமைகள், இழி ஜாதியினர் என்று நசுக்கி மிதிப்பதையும் எடுத்து விளக்கும்பொழுதுதான் இவர்களின் இந்து மதப் பூச்சாண்டியின் பற்களை உடைக்க முடியும்.

நீ கீழ்ஜாதி _ நீ அடிமை _ நீ சேரியிலே வாழக்கூடியவன் _ நீ படிக்கக் கூடாது _ பஞ்சமன் _ தீண்டத்தகாதவன் என்று ஒடுக்கி வைத்து _ ஒதுக்கி வைத்து, அவர்களையும் இந்து மதம் என்னும் வலைக்குள் சிக்கவைத்து,  பக்திப் போதை ஊட்டி, மயக்கி அடியாள்களாக ஆக்கிக் குளிர்காயலாம் என்று அந்த குல்லூகப்பட்டர் பரம்பரை விரிக்கும் சூழ்ச்சி வலையைக் கிழித்துத் தள்ளினால் _ இவர்கள் ஒண்டுவதற்கு இந்த மதம் எங்கே மீதி இருக்கப் போகிறது?

தாழ்த்தப்பட்டவன் இந்துவா? பிற்படுத்தப்பட்டவன் இந்துவா? அப்படியானால் அவர்களுக்கு இடஒதுக்கீடு என்கிறபோது ஏன் எதிர்க்கிறாய்? அவர்களும் இந்துக்கள் தானே? அவர்கள் இந்துக் கோயில் கருவறைக்குள் செல்ல உரிமை தேவை என்கிற போது, ஏன் எதிர்க்கிறாய்? அதற்காகச் சட்டம் செய்தால் ஏன் உச்சநீதிமன்றம் செல்லுகிறாய்?

ஆகமங்களைத் தூக்கிக் காட்டி சாஸ்திரங்களை சாட்சிக்கழைத்து இவர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டாகி விடும் _ ஏன் சாமி செத்துப் போய்விடும் _ அதற்காகத் தீட்டுக் கழிக்க வேண்டும். ஆயிரம் புதிய கலசங்களைச் செய்து வைக்க வேண்டும் _ பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சங்கராச்சாரி பார்ப்பானிலிருந்து சவுண்டிப் பார்ப்பான் வரை காட்டுக் கூச்சல் போடுவது ஏன்?

தினமலரும், தினமணியும், துக்ளக்கும் வரிந்து கட்டிக்கொண்டு ஆமாம் ஆமாம் என்று அவுட்டுத் திரியை அவிழ்த்துப் போட்டு ஆந்தைகள் போல அலறுவானேன்?

இதைப் பற்றி எல்லாம் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் எத்தனை எத்தனைக் கூட்டங்களில் எடுத்துக் கூறியிருப்பார்கள்? எத்தனை எத்தனை மாநாடுகளில் விரிவுரையாற்றி இருப்பார்கள்?

இதற்கெல்லாம் நாணயமான பதில் சொல்லும் பண்பாடும், நாணயமும் இல்லாதவர்கள் தாங்கள் அடிமைப்படுத்து வதற்கு ஒரு கூட்டம் வேண்டும் _ பெரும்பான்மை என்னும் பலத்தைக் காட்டி சிறுபான்மையினரைச் சீண்ட வேண்டும் _ அதன் மூலம் எல்லா வகையிலும் ஆதாயக் குளிர் காய வேண்டும் என்கிற தந்திரம் தந்தை பெரியார் சகாப்தத்தில் நடக்காது என்று நிரூபிக்க வேண்டும்.

அதனால்தான் “இந்து என்று சொல்லாதே இழிவைத் தேடிக் கொள்ளதே’’ என்னும் முழக்கத்தை திராவிடர் இயக்கம் முன்வைக்கிறது என்பது ஞாபகத்தில் இருக்கட்டும்.

இதுதான் நமது கொள்கை. இதற்கெல்லாம் சமாதானம் சொன்னால் எதிரி ஜெயித்துவிடுவான் என்பார் தந்தை பெரியார். இந்த வகையில் மறைந்த இனமானப் பேராசிரியர் சிந்தனைகள் சீர்தூக்கத்தக்கவை.

பள்ளத்தூரில் இனமானப் பேராசிரியர் பேசி ‘விடுதலை’யில் (25.3.1982) வெளிவந்த அந்தக் கருத்து முத்திரை இதோ:

“‘பிராமண’ருக்கு முன்னாலே அத்தனை பேரும் சூத்திரர்கள்தான். செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். இங்கே ஏழையாக இருக்கிற வலையரும், ‘பிராமண’ருக்கு முன்னாலே சூத்திரர்தான். எங்களைப் போல அமைச்சர்களாக இருந்தவர்களும் சூத்திரர்கள்தான். ஆக, எல்லோரும் சூத்திரர்கள்தான். நான் இதைச் சொல்லுகிறபோது பிராமணர்களைக் கண்டிப்பதற்குக்கூட அல்ல; நமக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காகத்தான் சொல்லுகிறேன்.

‘பிராமண’ரிடத்திலேயா நாம் கோபித்துக் கொள்வது? என்னுடைய முட்டாள்தனத்தை வைத்து நீ என்னை ஏமாற்றலாமா? என்று கோபித்துக் கொள்வதைப் போல _ நாம் முட்டாளாக இருந்தால் எவனும் நம்மை ஏமாற்றத்தான் செய்வான். ஆகவே, நாம் யார் என்று கேட்டால், நாம் ஜாதி அடிப்படையை ஒத்துக்கொள்ளாத _ ஏற்றுக்கொள்ளாத வள்ளுவர் வழியிலே வந்த _ வடலூர் வள்ளலார் வழியிலே வந்த _ தமிழ்ப் பண்பாட்டு வழியிலே வந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தாலேதான் இந்துக்கள் என்று சொல்லுவதிலேகூட எங்களுக்கு அக்கறை இல்லை.

இங்கே பேசிய நண்பர்கள் சொன்னார்கள். நம்முடைய முகவை ராமச்சந்திரன் பேசியபோது சொன்னார். கிறிஸ்துவர்களை, இஸ்லாமியர்களைக் கண்டிப்பீர்களா? இந்துவைத்தானே கண்டிக்கிறீர்கள் என்று  வேறு ஒரு கட்சியிலே உள்ள ஒருவர் சொன்ன கருத்தை இங்கு எடுத்துச் சொன்னார்.

நான் இந்துவைக் கூட கண்டிக்கவில்லை. எங்களை இந்து என்று சொல்கிறான். இந்து என்று சொன்னால், இந்தப் படிக்கட்டுகளிலே ஏதாவது ஒரு படிக்கட்டிலே நின்றாக வேண்டும். நான் இந்து இல்லை என்று சொன்னால் படிக்கட்டிலே நிற்க வேண்டியதில்லை. இந்து என்று சொன்னால் நான் சூத்திரன். இந்து என்று சொன்னால் நான் ‘பிராமண’ருடைய உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து என்று சொன்னால் நான் நால்வகை ஜாதிக்கும் ஆட்பட வேண்டும். என்னை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிற காரணத்தால்தான் நான் தமிழனே தவிர, இந்து அல்ல என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் இந்து அல்ல என்று சொன்னால் இந்துக்களுக்கு விரோதமாக இருக்கிறேன் என்று அர்த்தம் அல்ல; நான் இந்துவும் அல்ல; முஸ்லிமும் அல்ல; கிறிஸ்துவனும் அல்ல; இன்னும் சொல்லப்போனால் புத்த மதத்தைச் சேர்ந்தவனும் அல்ல. எனக்கு என்று ஒரு மதம் இருந்தால் நான் மனிதன் என்ற மதத்தைச் சேர்ந்தவன்.’’

இன்றைக்கு இன எதிரிகளுக்கு இந்து என்ற கூண்டு வைத்து தி.மு.க.வை வீழ்த்திடலாம் என்று வியூகம் வகுக்கும் கும்பலுக்கு 38 ஆண்டுகளுக்கு முன்பே இனமானப் பேராசிரியர் சவுக்கடி கொடுத்திருக்கிறார்.

கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் (26.5.1983) தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் ஆற்றிய உரை: கழகக் கண்மணிகளின் காதுகளில் ‘கணீர் கணீர்’ என்று ஒலிக்க வேண்டியவையாகும்.

இதோ அந்த இனமான முழக்கம்:

“தமிழர்களை ஓர் இனமாக ஆக்கிப் பார்க்க வேண்டும். ஆட்சி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, நண்பர் சுப்பு அவர்கள் பேசும்போது இந்த ‘ஆட்சி’யை விட ‘இலட்சியம்’ முக்கியமானது என்று சொன்னபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் இந்தச் சமுதாயம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகின்ற ஒரு சமூகம். தமிழினம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டே போகிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ காரணங்களால் தமிழ்ச் சமூகம் மெல்ல மெல்ல அழிந்துகொண்டு போகிறது என்பதை கடந்த 45 ஆண்டுகால அனுபவத்தில் உணர்ந்து வேதனைப்படுபவன் நான்.

இந்தச் சமூகம் வாழவில்லை; இந்தச் சமூகத்திற்கு வாழ்வதற்கான ஆற்றல் இல்லை; தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வல்லமையைப் பெற்றிருக்கவில்லை. இந்தச் சமூகத்திற்கு, தான் ஒரு சமூகம் என்கிற உணர்ச்சியே இல்லை.

ஒரு சமூகம் என்கிற உணர்வு ஏற்படவேண்டும். வகுப்புவாதத்திற்காக அல்ல; இன்னொரு இனத்தாரைப் பகைப்பதற்காக அல்ல;  நம் இனத்தின் வீழ்ச்சியை மாற்றுவதற்காக.

இந்த இனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்ற வீழ்ச்சி ஒரு வரலாற்று வீழ்ச்சி. கரிகால் பெருவளத்தான் காலத்தில் தமிழன் கொடிகட்டி ஆண்டான். அந்த வரலாற்றைச் சொல்ல நேரமில்லை.

ஓர் ஆயிரம் ஆண்டுக் காலமாக தமிழருடைய கலை, பண்பாடு, நாகரிகம் மெல்ல மெல்ல சீரழிக்கப்பட்டுவிட்டது.

சீரழிக்கப்பட்டது என்றால், ஓர் உயர்ந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, அதை பூசை செய்ய பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்று எழுதிவைத்த காரணத்தாலே தமிழர்களுடைய கலை, பண்பாடு, கோயில்களிலே அழிக்கப்பட்டன. கடவுள் வழிபாட்டிலேயே தமிழனுடைய பண்பாடு அழிக்கப்பட்டது என்றால் மற்ற துறைகளிலே அழிப்பது என்பது மிகச் சாதாரணம். ஒருவனை ஆண்டவன் பெயராலே முட்டாளாக்கி விட்டால் எப்போதுமே அவனை அடிமையாக இருக்க வைக்கலாம்.

கடவுள் பெயராலே நம் மக்களை முட்டாளாக ஆக்கியதற்குப் பின்னர் நம்மை அடிமைகளாக வைத்திருக்க எவனெவனுக்கோ முடிந்தது. நம்மைப் பொருத்தவரையிலே எவனெவனுக்கோ அடிமையாக இருந்த காரணத்தால் இன்றைக்கு இவனுக்கு அடிமையாக இருக்கிறோம்.

என்ன காரணம்? தமிழனுக்கு தமிழன் என்கிற உணர்வு இல்லை.’’ இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் உரையாற்றினார்.

இனமானப் பேராசிரியர் இன்று நம்மிடையே உடலால் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் ஆற்றிய இந்த இனமான சங்கநாதம் செப்பேடாக _ சங்கப் பலகையாக நம் முன் என்றென்றும் எச்சரித்துக்கொண்டே இருக்கும். சறுக்கல் வராமல் தடுத்தாட் கொள்ளும் பிரகடனங்கள் இவை!

எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய அறிவு நாணயம் என்பது இனமானப் பேராசிரியருக்கான தனித்தன்மையான முத்திரை இதோ:

“சுயமரியாதை இயக்கத்தின் பொன்விழா தஞ்சாவூரில் 1976 ஜனவரி 22 முதல் 24 முடிய சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. அவ்விழாவில் மாயவரம் சி.நடராசன் படத்தைத் திறந்து வைத்து இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் தெரிவித்த _ தெளிவித்த  கருத்து _ வரலாற்றின் ஒளிவிளக்காகும்.

“சமுதாயத்தில் வளர்ந்து இருக்கின்ற ஜாதித் தன்மைகளால் மனிதன் மனிதனாக நடத்தப் பெறவில்லை. மனிதனாக நடக்கும் தன்மையை இழந்திருக்கிறார்கள் என்பதை ஓயாது எடுத்துச் சொன்ன காரணத்தினால்தான், அந்த வித்து முளைத்து, மரமாகி, அதிலிருந்து விழுதுகளாய்க்  கிளம்பியதுதான் பகுத்தறிவு, சுயமரியாதை, திராவிடர் கழகம் ஆகும். நாங்கள் எல்லாம் பெரியார் தொண்டர்களாக இருந்ததால்தான் அமைச்சர்களானோம். தஞ்சையில், கரந்தையிலே ஒரு மாநாடு நடந்தது. அதிலிருந்து இயக்கம் அரசியலில் இயங்க வேண்டும் என்ற கருத்து தோன்றினாலும் பெரியாரை எதிர்க்க எங்களுக்குத் தெம்பு கிடையாது. ஆனதினால், பெரியாரிடமிருந்து விலக நாங்கள் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தோம்.’’ (‘விடுதலை’ 31.1.1976 பக்கம் 2)

 திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கும் இனமானப் பேராசிரியர். உடன் தமிழர் தலைவர் ஆசிரியர், பேராசிரியர் இராமசாமி.

 பெரியார் _ மணியம்மை திருமணம் என்பது ஒரு சாக்காகக் கூறப்பட்டதே தவிர, அரசியலில் செல்ல வேண்டும் என்பதுதான் தங்களின் நோக்கம் என்பதை வெளிப்படையாகச் சொல்லும் துணிவு கலந்து அந்த அறிவு நாணயத்தை எத்தனை பத்தரை மாற்றுத் தங்கத்தாலும் எடைபோட்டுப் பாராட்டலாம்! இதுதான் இனமானப் பேராசிரியருக்கான அறிவு ஆளுமை. கருத்துகளை ஆழமாக வெளிப்படுத்தும் அழகும் அடடே, எத்தனை கம்பீரம் -_ எடுப்பு!

இன்றைக்குத் திராவிடமா? தமிழா? என்ற கேள்வி சில தரப்பில் திட்டமிட்டு எழுப்பப்படுகிறது. ஏன், இன்னும் சொல்லப்போனால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கூறுவோரும் கிளம்பியிருக்கிறார்கள்.

இதுகுறித்து இனமானப் பேராசிரியர் வெளிப்படுத்திய கருத்து விவேகமானது.

சென்னைப் பெரியார் திடலைத் தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தை’த் தொடங்கி வைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் தெரிவித்த கருத்துதான் அது. (7.9.2010)

அந்த உரை “திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் _ தேவையும்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக (இயக்க) வெளியீடாக வெளிவந்துள்ளது.

“அந்தக் காலத்திலே தந்தை பெரியாரும், அறிஞர்அண்ணாவும் சேர்ந்து நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.

 பெரியார் திடலில் அன்னை நாகம்மையார் அரங்கத்தை

இனமானப் பேராசிரியர் திறந்து வைக்கிறார்.

 “எதற்காகத் தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்னும் பெயருடன் கழகம் இருக்கக் கூடாதா?’’ என்று கேட்டார்கள்.

நான் அவர்களுக்கெல்லாம் சொல்லும் விளக்கம் இதுதான்:

பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’. பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்’. என்று பளிச்சென்று சொன்னார். (அரங்கே அதிரும் அளவுக்குப் பலத்த கரவொலி)

‘தமிழர்’ என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்; ‘திராவிடர்’ என்பதால் நான் உரிமை பெறுகிறேன் என்றும் அழுத்திக் கூறினார்.

மேலும், அந்த உரையில், “ஏன் இந்தத் திராவிட இன உணர்வும் பற்றும் நமக்கு ஏற்பட்டது? இந்த உணர்வு _ தமிழரை இழிவுபடுத்தியதை, சூத்திரன் என்று தாழ்த்தியதைப் பொறாமல் உரிமைக் குரல் எழுப்பியபோது ஏற்பட்டது.’’ என்று கூறினார்.

திராவிடர் என்பதற்கான விளக்கமும் விவேகமும் இதற்கு மேல் தேவைப்படாது. எவரைச் சந்தித்தாலும் கைகொடுத்துக் குலுக்கும் அந்தச் சமத்துவ உணர்வு _ தந்தை பெரியாரின் சுயமரியாதை _ பகுத்தறிவு _சமதர்ம சித்தாந்தத்தின் கருப்பையில் தோன்றியது. இனமானப் பேராசிரியர் உடலால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் எழுப்பிய கொள்கை முழக்கம் என்றும் நம்மிடையே ஒலித்துக்கொண்டே இருக்கும்.

- உண்மை இதழ், 16-31.3.20