வெள்ளி, 11 அக்டோபர், 2019

‘திராவிடர் விவசாயத் தொழிற்சங்கம்’தொடர்பாக அரசியல் சட்ட எரிப்புப்போராளி நாகை எஸ்.எஸ். பாட்சாவின் அவர்களின் நேர்காணல்

‘திராவிடர் விவசாயத் தொழிற்சங்கம்’தொடர்பாக
அரசியல் சட்ட எரிப்புப்போராளி நாகை எஸ்.எஸ். பாட்சாவின் அவர்களின்  நேர்காணல்
-----------------------------------------

கேள்வி: திராவிடர் விவசாய தொழிற்சங்கம் பற்றி ?

பதில்: நாம் சுயமரியாதை இயக்கம் 1926 ல் ஆரம்பித்தோம். சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையே சாதியற்ற சமுதாயம், மதமற்ற சமுதாயம், பேதமற்ற சமுதாயம் எல்லாம் இருக்கணும். இதுதான் அடிப்படை.

நம்ம கட்சியில யார் யார் முதன்முதலாக வந்து சேர்ந்தார்கள் என்றால் ஆதிதிராவிடர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், நாடார்கள் இப்படி சமுதாயத்தில் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு இருந்தார்களோ அவர்கள்தான் பெரியாரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.

முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லோரும் பெரியாரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

இவர்கள் எல்லாமே பற்றுக்கோலாக ஒரு பலம் வாய்ந்த தலைவன் பெரியாரைத் தவிர இல்லை எனக் கூறி பெரியாரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

இந்த இயக்கம் வேகமாக வளரும் போது, நாங்கள் தான் தொழிலாளர்களுக்குப் போராடுகிறோம் என்கிற மாதிரி சிந்தனையை சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகமாக மாறியபோது..!

பேச்சாற்றல், செயலாற்றல் என மிகப் பெரிய விலாசமாக வேகமாக வளரும் போது இவர்கள் ஏழை, எளியவர்களுக்கு போராடவில்லை என்கிற மாதிரி தோற்றத்தை அப்போதே பொதுவுடமைக் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர்.

அந்தச் சூழலில் 1952 இல் உருவாக்கப்பட்டது திராவிடர் விவசாயத் தொழிற்சங்கம்.

கேள்வி: திராவிடர் விவசாயத் தொழிற்சங்கத்தின் சாதனைகள் என்ன?

முதல் பலன் என்ன கிடைத்தது என்றால், சாணிப்பால், சவுக்கால் அடித்தது எல்லாமே திராவிடர் கழகம் எதிர்த்தது. அவர்களும் (கம்யூனிஸ்ட்டுகள்) எதிர்த்தனர். நாமும் எதிர்த்தோம்.

நாம என்னமோ கை மூடி இல்லை. நேரடியாக தொழிற் சங்கத்திற்கு வந்த பின்பு எல்லாப் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.

கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என.

திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் என விடுதலையில் சின்ன புத்தகம் போடப்பட்டது.

அதில் என்ன கொள்கை என சுருக்கமா பெரியார் சொல்வார். கொள்கைகளையும்நடைமுறைகளையும் வகுத்து கொடுத்தார்.

முதல் பலன் கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி காலத்தில் பெரியார் ஒரு சாதனை செய்தார். `

தஞ்சை ஜில்லா பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்` பண்ணையாளுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. அவன் காலையில் வேலைக்கு போவான்.

மறுநாள் வேலைக்கு போனால் வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அவனுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. அவனுக்கு ஒரு காம்பென்சேசன் கொடுக்கனும் என்று அந்த சட்டத்தில் வந்தது.

அது ஒரு பெரிய பாதுகாப்பாக பண்ணையாளுக்கு வந்தது. அது நம்ம டிமாண்ட்ல கிடைத்தது. நமது போராட்டத்தால் கிடைத்தது. ..

இங்கு நாகப்பட்டிணத்தில் திராவிடர் விவசாய தொழிலாளர் மகாநாடு 1954 ல் நடத்தினோம்.

திராவிடர் கழக மாநாடு என இரண்டு நாள் சனி, ஞாயிறு என இரண்டுநாள் டிக்கெட் போட்டு நடத்தினோம். வந்த அனைவருக்கும் சோறு போட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

நான் தான் செயலாளர். ஆர்.வி. கோபால் தலைவர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டு திறப்பாளராக டாக்டர் அம்பேத்கர் அவர்களை அழைத்தோம்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அவருடைய செயலாளர் ராஜ்போஜ் என்பவர் மாநாட்டை திறந்து வைத்தார். மாநாட்டில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பெரியாரும், ராஜ்போஜும் வந்தனர்.

பெரிய கோவில் உள்ளது. தேரல்லாம் நிற்கிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் கடவுள் பொம்மைகளை உடைத்தனர். ராஜ்போஜ்`வாட் இஸ் திஸ்? என்கிறார்.

நான் பின்னால்வந்து கொண்டிருந்தேன். திஸ் இஸ் ஆல்சோ என்றேன்.

உடனே ராஜ்போஜ் `கெள திஸ் பாஸிபில்’? என்கிறார். மாநாட்டில் அதைப்பற்றி ஆச்சரியமாகப் பேசுகிறார். அவர் மிகவும் அதிர்ச்சியாக விட்டார்.

மாநாட்டில் பேசும் போது `வடநாட்டில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை. கோவில் முன்பு கடவுள் சிலைகள் உடைக்கப்படுகிறது.

அதன்பிறகும் மாநாடு நடக்கிறது என ஆச்சரியமாக பேசினார். வடநாட்டில் இப்படி சிந்தித்து கூட பார்க்கமுடியாது. மாநாடு அமைதியாக நடக்கிறது.

நானும் பேசிக் கொண்டிருக்கிறேன். வடநாடாக இருந்தால் மகாநாடு தீப்பிடித்து எரியாதா? என அவர் கொண்டுவந்த ட்ராப்ட்டை தாண்டி பேச ஆரம்பித்து விட்டார்.

அந்த மாநாட்டில் விவசாயிகளுக்குத் தேவையான தீர்மானங்கள் போடப்பட்டன.

1952 ல் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது. விவசாய சங்கம் ஆரம்பித்து இந்த வெற்றி கிடைத்த பின்னால் கூட்டம் அதிகமாக கூட ஆரம்பித்து விட்டது.

பலன் கிடைத்தால் தான் கூட்டம் கூடும். பலன் கிடைக்காவிட்டால் கூட்டம் கூடாதே. அதனால்குத்தகைதாரர்களுக்கு விவசாய சங்கம் பாதுகாப்பை ஏற்படு த்தியது. நீதிமன்றத்திற்கு போகும் போது கூட அட்வகேட் போக வேண்டும் என்பது இல்லை.

‘பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்திலும், குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டத்திலும் ஒரு பெரிய விதிவிலக்கு என்னவென்றால்..!?

தொழிலாளர்களின் ரெப்ரசன் டேட்டிவா பேப்பரில் கையெழுத்து வாங்கி கொடுத்தால் போதும்.

என்னுடைய ரெப்பரசன்டேடிவா இவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் அட்வகேட்டுக்கு தரக்குடிய மரியாதை அனைத்தும் கிடைக்கும்.

அப்ப நம்ம தொழிற்சங்க தோழர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், மற்ற தோழர்கள் வாதாடியுள்ளனர்.

நானே பல வழக்குகளில் வாதாடியுள் ளேன். பெரிய பெரிய வழக்குகள் கூட நடத்தப் பட்டுள்ளது.

ஏழை எளியவர்கள் வழக்கறிஞருக்கு பணம் கொடுக்க முடியாது. அந்த சட்டத்திற்கு பிற்பாடு மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு ஏற்பட்டது.

ஆட்சி மாறி காமராசர் ஆட்சி வந்த பின்பு பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் ஒரு பாதுகாப்புக்குத் தான்.

பண்ணையாளே இருக்கக்கூடாது என்பதுதான் நமது கொள்கை. இருந்தாலும் இருக்கிற முறைக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று குத்தகை தாரர் பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.

குத்தகை 40 சதவீதம் சாகுபடிக்கார னுக்கும், 60சதவீதம் முதலாளிக்கும் இருந்தது, ஆட்சி மாறி காமராசர் ஆட்சி வந்தவுடன் 60 சதவீதம் குத்தகைகாரனுக்கும் 40 சதவீதம் முதலாளிக்கும் என மாற்றம் வந்தது.

அது ஒரு பெரிய பலன். என்ன விளையுதோ அதில் 60 சதவீதம் சாகுபடிகாரனுக்கு. அது ஒட்டு மொத்தமாக இவ்வளவுதான் என்ற கெஸ் பண்ணிக்கொன்டு ஒரு குத்தகையை நிர்ணயம் செய்து விடுவது.

இப்ப நம்ம பூமியில 100 மூட்டை காணும்னு முடிவு பண்ணி 40 மூட்டை கொடுத்துவிடுகிறோம் என்று அக்ரிமென்ட் போட்டுக் கொள்வது என்று சட்டமே சொன்னது.

இது சட்டத்தோட பலன் தான் நான் சொல்வது. அந்த பலன்களை வைத்துப் பார்க்கும் போது நல்ல வளர்ச்சியிலதான் திராவிடர் விவசாய தொழிற் சங்கம் இருந்தது.

நன்னிலம் தாலூகா, தஞ்சாவூர் தாலூகா, நாகபட்டிணம்தாலூகா,திருக்காட்டுபள்ளி, லால்குடி இங்கெல்லாம் ரொம்ப பலமாக இருந்தது.

இதுபோல தோண்டத் தோண்ட, பிரமிக்கத்தக்க செயல்கள் வெளிச்சத்தி ற்கு வருகிறது..!

ஆனால் ஆதையெல்லாம் வரலாறு பேசவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருக்கும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சாதனைகளை தோண்டியெடுத்து மக்களுக்கு படயலிடுவோம்..!

வாருங்கள் இன்னும் பயணிப்போம்....

1 கருத்து:

  1. நல்ல பாராட்டத் தக்க பணி தான் அன்றைய கா கட்டத்தில் இது பெரும் முயற்சி தான்

    பதிலளிநீக்கு