சனி, 29 பிப்ரவரி, 2020

புரோகித ஏட்டின் புலம்பல்

திராவிடர் கழகத் தலைவர் சொன்னது என்ன? 'தினமலர்'  உளறுவது என்ன? மாநாட்டுக்கு போஸ்டர் அடித்தனர், செலவு செய்தனர் என்பதற்கும்,  இந்த திருமணத்துக்கும் என்ன சம்பந்தம்? போஸ்டர் செலவை  திருமணத் தினர் ஏற்றுக் கொண்டனரா? திருமணத்துக்கோ, மாநாட்டுக்கோ திராவிடர் கழகத் தலைவர் கலந்து கொண்டதற்குப் பணம் பெற்ற துண்டா? திருமணத்துக்குப் பார்ப் பானைக் கூப்பிட்டு, அவனுக்குத் தட்சணையாக அவன் வயிற்றில் அறுத்துக் கட்டவில்லை என்ற ஆத்திரத்தில் புரோகித ஏடு புலம்பு வதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 -  விடுதலை நாளேடு, 14. 2.20

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கோவை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்

அரசமைப்புச் சட்ட முகவுரை, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் மூன்றையும் முத்திரை பொறிக்கிறது இம்மூன்றிற்கும் எதிரான ஜாதி நீடிக்கலாமா?

ஜாதி ஒழிப்புக்காக உயிரையும் கொடுக்கத் தயார்! தயார்!!

கோவை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம்

கோவை, பிப்.10  அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இம் மூன்றுக்கும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுக்கும் எதிரான ஜாதியை ஒழிக்க வேண்டாமா? ஜாதி ஒழிப்புக்காக உயிரையும் அர்ப் பணிக்கத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் போர் முழக்கம் செய்தார்.

நேற்று (9.2.2020) பெரியாரியக் கூட்டமைப்பின்  சார்பில் கோவையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

ஜாதி ஒழிப்பு மாநாடு - நீலச் சட்டை பேரணி

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்த சிறப்பான ஜாதி ஒழிப்பு மாநாடு, நீலச்சட்டைப் பேரணி என்ற சிறப்பான நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய அருமை சகோதரர் கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களே,

வரவேற்புரையாற்றிய அருமை நண்பர் குடந்தை  அரசன் அவர்களே, பங்கேற்று உரையாற்ற இருக்கக்கூடிய அருமை சகோதரர்கள், மார்க்சிய பொதுவுடைமை கட்சியின் மூத்த பெரியார் தொண்டர் ஆனைமுத்து அவர்களே, எனக்கு அடுத்து பின்னால்  உரையாற்ற இருக்கக்கூடிய எழுச்சித் தமிழர் அன் பிற்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,

அதேபோல, அருமை நண்பர் சகோதரர் கொளத் தூர் தா.செ.மணி அவர்களே, உரையாற்றிச் சென்ற பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, திருமுருகன் காந்தி அவர்களே,  பொழிலன் அவர்களே, நாகை திருவள்ளுவன் அவர்களே, அதியமான் அவர்களே, வேல்முருகன் அவர்களே, தெகலான் பாகவி அவர் களே, செங்குட்டுவன் எம்.பி., அவர்களே, சட்டப் பேரவை உறுப்பினர் தனியரசு அவர்களே, வெள்ளம் போல் திரண்டு இருக்கக்கூடிய அனைத்து இயக்கத் தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே, பெரியோர் களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன் பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு ஜாதி ஒழிப்பு மாநாடு. ஜாதியை ஒழிக்கவேண்டும் என்று நினைத்த நேரத்தில், முதல் முறையாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய இந்த நீலச்சட்டையை முன்னிலைப்படுத்தி நடத்தக் கூடிய இந்த மாநாடும், இந்த நிகழ்வும், வெள்ளம்போல் கூடியிருக்கின்ற மக்கள் மத்தியில் ஒரு செய்தியை நினைவூட்டவேண்டும்.

‘‘ஜாட்பட் தோடக் மண்டல்''

1934 ஆம் ஆண்டு, நம்மைப்போன்ற பலர் பிறக் காத காலத்தில் அல்லது பிறந்திருந்தால், இளை ஞர்களாக இருந்த காலத்தில், அம்பேத்கர் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்த நிலையில், அவருடைய இயக்கத்தைக் கட்டிக்கொண்டு, ஜாதி ஒழிப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், ‘‘ஜாட்பட் தோடக் மண்டல்'' என்று லாகூரில் இருக்கின்ற ஜாதி ஒழிப்பு அமைப்பின் சார்பாக நடைபெறுகின்ற மாநாட்டிற்குத் தலைமை தாங்க அம்பேத்கர் அவர் களை அழைக்கின்றது.

அம்பேத்கர் அவர்களும் மகிழ்ச்சியோடு அதனை ஒப்புக்கொண்டார்.  அம்பேத்கர் அவர்கள்  புரட்சிகர மான கருத்துகளை சொல்லக் கூடியவர். ஆகவே,  அந்த அமைப்பில் உள்ள சிலர்,  தேவையில்லாத கருத்தைப்பற்றி மாநாட்டில் உரையாற்றி ஆபத்தை ஏற்படுத்திவிடப் போகிறார் என்று கருதிய அவர்கள், ஒரு தந்திரம் செய்தார்கள்.

என்ன அந்த தந்திரம் என்றால், ‘‘உங்களுடைய பேச்சை புத்தகமாக அச்சிடவேண்டும்; உங்கள் உரையை நீங்கள் எழுதி அனுப்புங்கள்'' என்று சொன் னார்கள்.

அம்பேத்கர் அவர்களும், நல்லெண்ணத்தில்தான் கேட்கிறார்கள் என்று அவருடைய உரையை எழுதி அனுப்பினார்.

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து, பெரியார் - அம்பேத்கர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலர் வழங்கப்பட்டது (கோவை, 9.2.2020).

‘‘Annihilation of Caste''

அதில், ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், ஜாதிக்கு அடையாளமாக, வேராக இருக்கக்கூடிய இந்து மதத்தை ஒழிக்கவேண்டும். அதற்கு ஆதாரமாக இருக்கின்ற கீதையை எதிர்க்கவேண்டும்; ஆதாரமாக இருக்கின்ற கடவுள்களை எதிர்க்கவேண்டும். இந்தக் கருத்துகளை உள்ளடக்கி, சமுதாயத்தில் தீண்டாமை என்பது இருக்கிறதே, அது ஜாதியினுடைய அங்கம். எனவேதான், தனியே தீண்டாமை ஒழிப்பு தேவை யில்லை, ஜாதியை ஒழித்தாலே, தீண்டாமை தானே ஒழியும். ஏனென்றால், அது நிஜம்; இது நிழல். அதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கி, ஆங்கிலத்தில் ‘‘Annihilation of Caste''  என்ற தலைப்பில் எழுதி அனுப்பினார்.

ஒழிப்பு என்றுகூட போடவில்லை. Annihilation  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். அந்த உரையை 1934 இல் எழுதி அனுப்பி னார்.

அந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் என்ன சொன் னார்கள் என்றால், உங்கள் உரையில் சில பகுதிகளை நீக்கிவிட்டு, உங்களுடைய தலைமை உரையை நிகழ்த்தவேண்டும் என்று சொல்லி, அம்பேத்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.

உரையைத் திருப்பி அனுப்புங்கள்!

மற்ற  தலைவர்களாக இருந்தால் என்ன சொல்லியி ருப்பார்கள்?  வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால், அம்பேத்கர் அவர் கள் அப்படி நினைக்கவில்லை.  என்னுடைய கருத்து உறுதியானது. இந்தக் கருத்தை நீங்கள் ஏற்றால்தான், அந்த மாநாட்டிற்கு வந்து தலைமை உரையை நிகழ்த்துவேனே தவிர, இல்லையானால் ஒருபோதும் அந்த மாநாட்டிற்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி, உரையைத் திருப்பி அனுப்புங்கள் என்றார்.

இது நடந்தது 1934 ஆம் ஆண்டு. இதை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், அம்பேத்கருக்குக் கடிதம் எழுதி, அந்த ஆங்கில உரையை அனுப்புங்கள் என்று சொல்லி, ‘‘ஜாதியை ஒழிக்க வழி!'' என்ற தலைப்பில், ஒரு சிறிய நூலை, நாலணாவிற்கு தந்தை பெரியார் அவர்கள், வெளியிட்டார் என்ற செய்தியை பல பேர் அறிந்திருக்கமாட்டார்கள்.

‘‘குரலற்றவர்களின் குரல்'' பத்திரிகையில் ...

அன்றைக்கு அவர்களுக்கு நேரிடையாகத் தொடர்பு. அதற்கு முன்பு, வைக்கம் போராட்டத்தைப் பாராட்டி, அம்பேத்கர் அவர்கள் ‘‘மூக்நாயக்'' என்று சொல்லக்கூடிய ‘‘குரலற்றவர்களின் குரல்'' பத்திரிகையில் எழுதினார்.

எனவேதான், அவர்களுடைய நெருக்கம் என்பது கொள்கை ரீதியான உறவு.

ஜாதி ஒழிப்பு என்பதில் அவர்கள் இரண்டு பேரும் அன்றைக்குத் தொடங்கிய பணி, இன்றுவரை சிறப்பாக நடைபெறுகிறது.

இன்றைக்கு மனுதர்மத்தை எரிக்கவேண்டும் என்று இங்கு தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இப்போது ஆளுவது மனுதர்ம்; வெறும் எழுத்தல்ல.

மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆளுகிறது

மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆளுகிறது என்று திருமுருகன் காந்தி அவர்கள் இங்கே உரை யாற்றும்பொழுது சொன்னார்.

தந்தை பெரியார் அவர்கள், சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தை  நடத்திய நேரத்தில், காந்தியாரிடம் சமரசத்திற்குப் போனார்கள், 1924 ஆம் ஆண்டு.

அப்போது காந்தியார் ஒரு சமரசம் செய்தார்.

என்ன அந்த சமரசம் என்றால், உயர்ஜாதிக்காரர்கள், கீழ்ஜாதிக்காரப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம். ஆனால், சமையல்காரர்கள் பார்ப்பனர்களாக இருக்கவேண்டும் என்ற ஒரு தீர்வை காந்தியார் சொன்னார்.

ஆனால், நண்பர்களே! அதை வரதராஜூலு நாயுடு அவர்களோ, தந்தை பெரியார் அவர்களோ ஏற்கவிலலை.

சேலத்தில், 1924 ஆம் ஆண்டு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றபொழுது, ஏப்ரல் 13 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியே வரவில்லை. காங்கிரசிலிருந்து ஜாதி ஒழிப் பிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

‘இந்து' பத்திரிகையின்

நூற்றாண்டு விழா மலரில்....

அப்போது பெரியார் பேசுகிறார்,

‘இந்து' பத்திரிகையின் நூற்றாண்டு விழா மலர் என்று ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் பெரியாருடைய உரை வெளி யிடப்பட்டு இருக்கிறது. ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறோம்.

சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பெரியார் பேசுகிறார்.

பெரியார் சொன்ன ‘‘பிராமிணோகரசி''

‘‘வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்கு முன்பாக, பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டுப்போவதற்கு முன்பாக ஜாதி பிரச் சினை தீர்க்கப்பட்டாலொழிய வருங்காலம் இருண்ட தாக இருக்கும். ஆபத்தாக இருக்கும். அவர்கள் தீர்க்காமல் போய்விட்டால், அடுத்து என்ன நடக்கும் என்று சொன்னால், அடுத்து வரக்கூடிய ஆட்சி, ‘‘பிராமிணோகரசி'' - பார்ப்பன நாயகமாகத்தான் இருக்கும்'' என்று சொன்னார்.

இதுவரையில், டெமாகரசி என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் இருக்கிறது. பிராமிணோகரசி என்று ஆங்கில இலக்கியத்திற்கே ஒரு புதிய வார்த்தையை கொடுத்தவர் தந்தை பெரியார் என்பதை மறந்து விடாதீர்கள்.

மக்களுக்காக, மக்களின் நலனுக்காக, மக்களால் ஆளப்படுகிற மக்கள் அரசு. அதுதான் டெமாகரசிக் கும், ஜனநாயகத்திற்கும் விளக்கம்.

பார்ப்பனர்களால், பார்ப்பனர்களுக்காக, பார்ப்ப னர்களின் நலத்திற்காக நடக்கக்கூடிய அரசு பிராமிணோகரசி என்பதாகும்.

அதுதான் இன்றைக்கு நடைபெறுகிறது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி.

ஆரியம் ஆட்டி வைக்கின்றது; இவர்கள் ஆடுகின்ற கருவிகளாக இருக்கிறார்கள்

நம்மாள் முட்டாள்தனமாக கேட்கிறார்கள், அமித்ஷா யார்? பார்ப்பனரா? மோடி பிற்படுத்தப் பட்டவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே என்று.

இவர்கள் கருவிகள் அவ்வளவுதான்!

உத்தரவு எங்கே இருந்து வருகிறது, மோகன் பாகவத்;

உத்தரவு எங்கே இருந்து வருகிறது, ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து வருகிறது.

எனவேதான், ஆரியம் ஆட்டி வைக்கின்றது; இவர்கள் ஆடுகின்ற கருவிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ஏவப்படுகின்ற அம்புகளாக இருக்கின் றார்கள். அதன் காரணமாகத்தான் நண்பர்களே, இந்த ஜாதி எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.

சமதர்மமா? குலதர்மமா?

அம்பேத்கர் அவர்களைப்பற்றி உரையாற்றும் பொழுது இங்கே சொன்னார்கள்.

இரண்டு பகுதி - முன்பகுதியில் அவருக்கு சுதந்திரம் கிடைத்தது: அடுத்த பகுதியில் அவருக்கு சுதந்திரம் இல்லை. அதைத்தான் ஆனைமுத்து போன்ற நண்பர்கள் சொன்னார்கள்.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!''

அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், பீடிகை என்று சொல்லக்கூடிய முன்பகுதி என்ன?

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இம் மூன்றும் இருக்கிறது.

ஜாதிக்கு மேற்கண்ட மூன்றும் எதிரானது.

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று சொல் லக்கூடிய அந்த மகத்தான உணர்வை உருவாக்கியது நம்முடைய சமூகம்.

இன்னுங்கேட்டால், மற்றவர்கள் நினைப்பதற்கு முன்னால், ஆரியம் வருவதற்கு முன்னால், ‘‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என்று அனைவரும் நமக்குள்ளே பேதமில்லை. பேதமில்லாத பெருவாழ்வு என்று கருதக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது நண்பர்களே!

இந்துத்துவா என்ற பெயரால் வந்திருக்கிறது

இதையெல்லாம் எதிர்த்துதான் வருணாசிரம தர்மம் வந்தது. எனவே, அந்த வருணாசிரம தர்மம் இன்றைக்கு எப்படி இருக்கிறது? இந்துத்துவா என்ற பெயரால் வந்திருக்கிறது.

இதோ இங்கே இருக்கிற கூட்டம்,  எந்த சட்டை அணிந்திருக்கிறோம் என்று நினைக்காதீர்கள். இங்கே வந்திருக்கின்ற இளைஞர்களைப் பாருங்கள், இங்கே வந்திருக்கின்ற மக்களுடைய உணர்வுகளைப் பாருங்கள்.

நாங்கள் பதவி தேடி ஓடிப் போகிறவர்கள் அல்ல; புகழ் தேடிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. இந்த இளைஞர்கள், இங்கே இன்றைக்குக் கூடியிருக்கின்ற இளைஞர்கள் - ஆட்சியாளர்களுக்குச் சொல்கிறோம், இதைத் தடுக்கலாம், பெரியாரிய உணர்வாளர்கள் இந்த மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதி கேட்ட பொழுது, மறுத்துவிட்டார்கள்; நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கிக் கொண்டு வரவேண்டிய அளவிலே இருக்கிறோம் என்று சொன்னால், எங்கே இருந்து இந்த ஒழுக்கக்கேடு நடந்தது?

இங்கே திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் மற்றவர்கள்  பேசினார்களே, எது சட்டத்திற்கு விரோதம்? எது சமூகத்திற்கு விரோதம்? ஜாதி சமூ கத்திற்கு விரோதம்; ஜாதி, அரசமைப்புச் சட்டத்தி னுடைய பீடிகைக்கு விரோதம். அந்த ஜாதியை ஒழிக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா மேடை போட்டுக் கொடுக்கவேண்டும்.

ஜாதி ஒழிந்தால், உங்களுக்குத்தானே லாபம். ஜாதிச் சண்டை இருக்காதல்லவா! அந்த வேலையை நீங்கள் செய்யவேண்டும்; ஆனால், நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அதற்காக என்ன பரிசா?

பெரியார் மண்ணின் குணாதிசயத்தை எந்தக் கொம்பனாலும் மாற்றிவிட முடியாது

அடக்குமுறையினால் இந்த உணர்வை அடக்கி விடலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். இந்த மண் பெரியார் மண் - இந்த மண்ணினுடைய குணாதி சயத்தை எந்தக் கொம்பனாலும் மாற்றிவிட முடியாது.

இங்கே வந்திருக்கின்ற முக்கால்வாசி  பேர் இளைஞர்கள்.  எதற்காக இங்கே  வந்திருக்கிறார்கள்? சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லியா அழைத்து  வந்திருக்கின்றோம். ஒரு சிலர் போகட்டும் அங்கே - இருக்கவேண்டியவர்கள் இருக்கட்டும் அங்கே, அது வேறு செய்தி.

நாம் ஆயிரம் பேர் மறைந்தாலும்கூட, செத்தாலும்கூட, ஜாதி சாகடிக்கப்படவேண்டும்

ஆனால், நாங்கள் அழைத்துப் போவது, உங்களை சிறைச்சாலைக்கு அழைத்துப் போவோம்; தேவைப் பட்டால், தூக்குமேடைக்குக்கூட அழைத்துப் போவோம். காரணம் என்னவென்றால், நாம் ஆயிரம் பேர் மறைந்தாலும்கூட, செத்தாலும்கூட, ஜாதி சாகடிக்கப்படவேண்டும்; ஜாதியினுடைய அடை யாளம் இருக்கக்கூடாது. அதற்காக சர்வபரி தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும். பேசிக் கொண்டிருப்பதில்  பயன் கிடையாது.

சுதந்திரம் அடைந்து 73 ஆண்டினுடைய அடையாளமா?

எங்களுடைய தோழர்கள் பேசிப் பேசி, காலமெல் லாம் பேசியிருக்கிறார்கள்.

ஒரு செய்தியை இன்று மாலையில் கேட்டேன். நாகப்பட்டினத்திற்குப் பக்கத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தோழர்  இறந்தவுடன், அந்த சகோதரருடைய பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்குப் போக முடியவில்லை.  இட ஒதுக்கீடு சுடுகாட்டில்கூட கிடை யாது. ஜாதியினுடைய கொடுமை இது. ரத்தம் கொதிக்கிறது! இதுதான் சுதந்திர நாட்டினுடைய லட்சணமா? சுதந்திரம் அடைந்து 73 ஆண்டினுடைய அடையாளமா?

ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தைக் காப்பாற்றுவது

எனவேதான், ஜாதி ஒழிப்பு என்பது இருக்கிறதே, மனித தர்மத்தைக் காப்பாற்றுவது.

ஜாதி ஒழிப்பு என்பது மனிதநேயத்தைக் காப்பாற்றுவது - சமத்துவத்தை உருவாக்குவது.

இந்த அடிப்படையைத்தான் நீங்கள் உருவாக்கிக் காட்டவேண்டும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

ஒன்றைச் சொல்லி என்னுரையை முடிக்கின்றேன்.

ஜாதி ஒழிக்கும் வரையில் சமூகநீதி இருக்கவேண் டும். அடிப்படை வேண்டும் என்பதற்காகத்தானே போராடிக் கொண்டு, வகுப்புரிமை, சமூகநீதி என்று கேட்கிறோம்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுக்கிறார்கள்,

தாழ்த்தப்பட்டவர்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) பதவியில் உயர்வு கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது என்பதுதான் அந்தத் தீர்ப்பு.

77 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் - அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கவேண்டும் என்பதுதான். அன்றைக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்கிறது.

ஆனால், இன்றைக்கு 2 நீதிபதிகள் சொல்கிறார்கள் அவசியம் கிடையாது என்று. மனுதர்மம் ஆளுகிறது. மனுதர்மம் புத்தகத்திற்குள் மட்டும் இல்லை.

அதேபோல, இஸ்லாமிய சகோதரர்களை வேற்று மைப்படுத்திக் காட்டுகின்ற சி.ஏ.ஏ. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால், நாடு முழுவதும் கொந்தளித்துக் கொண்டி ருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸினுடைய  குருநாதர் கோல்வால்கர் எழுதிய நூலில்...

ஆர்.எஸ்.எஸினுடைய  குருநாதர் என்று சொல்லக் கூடிய கோல்வால்கர் எழுதிய ‘‘ஞானகங்கை'' என்ற நூலில் என்ன எழுதியிருக்கிறார் என்றால்,

‘‘ராமனை வணங்கினால், இஸ்லாமியர்கள் இந்த  நாட்டில் இஸ்லாமியர்களாக  இருக்கலாம்.

கிருஷ்ணனை வணங்கினால், கிறித்துவர்களாக இந்த நாட்டில், கிறித்துவர்களாக இருக்கலாம்'' என்று எழுதி வைத்திருக்கிறார்.

இந்துத்துவா என்று சொல்லக்கூடிய இந்துராஷ்டிரா - இந்து நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே -

‘‘இந்து வைஸ் மிலிட்டரி

மிலிட்டரி வைஸ் இந்து''

இதுதான் அவர்களுடைய வாசகங்கள்.

ராணுவத்தை இந்து மயமாக்கு. அது நடந்துவிட்டது. அதேபோன்று, இந்துவை ராணுவக்காரனாக்கு.

எங்களை நாங்களே  சட்ட ரீதியாகத் தற்காத்துக் கொள்ளப் போகிறோம்

எங்களுடைய பிள்ளைகள், டில்லியில் உள்ள மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நோக்கி, காவல்துறையினர் தடியடி நடத்தவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை.  தனியாரிடம் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொல்கிறார்கள்.

இதுதான் சட்டம் - ஒழுங்கு நேர்மையா?

இதை நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருப்போமா?

இந்தக் கூட்டம் முடிவு செய்யவேண்டும் -  நாங்கள் பலியாகவும் தயாராக இருக்கிறோம்.

இனிமேல் எங்களை நாங்களே தற்காத்துக் கொள்ளப் போகிறோம். சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்.  அந்த உறுதி எங்கள் இளைஞர்களுக்கு வந்தாகவேண்டும்.

ஏனென்றால், எங்கள் உயிர் போவது நிச்சயம் - அது நல்ல காரியத்திற்காகப் போகட்டும்!

ஜாதி ஒழிப்பிற்காகப் போகட்டும் -

மனுதர்ம ஆட்சியை ஒழிப்பதற்காகப் போகட்டும்!

அதேநேரத்தில், மனுதர்மத்தை பல ரூபங்களில் கொண்டு வரலாம் என்று நினைத்து, நீங்கள் எங்களிடம் விளையாடலாம் என்று நினைக்காதீர்கள். நெருப்போடு விளையாடுகிறீர்கள்.

பெரியார் - அம்பேத்கர்மீது கை வைக்க முடியாது!

அம்பேத்கர் அவர்களைகூட நீங்கள் வித்தியாச மாகக் காட்டுகின்ற இந்த நேரத்தில், பெரியார் என்ற நெருப்பின்மீது கை வைக்கலாம் என்று நினைக் கிறார்கள். இந்த இரண்டு பேரின்மீதும் கை வைக்க முடியாது. மின்சாரத்தில் கை வைத்தவர்களின் கதிதான் அவர்களுக்கு ஏற்படும் என்பதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர் களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

காவல்துறைக்குச் சொல்லுகிறோம், ஒரு சிறு அசம்பாவிதம் இந்தப் பேரணியில் உண்டா?

ஏதாவது கட்டுப்பாடு குலைந்து யாராவது நடந்து கொண்டார்களா?

இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், சட்டத்திற்கு விரோதமான தீர்மானம் இருக்கிறதா? என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

காவல்துறையினரே யாருக்கோ நீங்கள் துணை போகாதீர்கள்!

எனவேதான், யாருக்கோ நீங்கள் துணை போகாதீர்கள்; நீங்கள் பொதுவாக இருக்கவேண் டியவர்கள். ஒரு பொதுவான மருத்துவர் போல  -  பொதுவான தீயணைப்பு நிலையம் போல - பொது வான பள்ளிக்கூடம் போல இருக்கவேண்டியவர்கள். தயவுசெய்து உங்களுடைய எஜமானர்களாக யாரையோ கருதாதீர்கள். இன்னும் ஓராண்டு காலம்தான், அதிகமாகப் போனால் - ஓராண்டிற்குப் பிறகு நிச்சயமாக மாற்றம் வரும். அப்போது உங்கள் நிலை என்ன? என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

எனவே, நிதானமாக சிந்தித்து உங்களுடைய நிலையை முடிவு செய்யுங்கள் என்று சொல்லி, ஒரு பொ றுப்புள்ள அமைப்பினுடைய பொறுப்பாளன் என்ற முறையில் உங்களுக்கு சொல்லி,

வெற்றிகரமாக மாநாட்டினை, பேரணியை நடத்தியவர்களுக்கு வாழ்த்துகள்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு அடுத்தக ட்ட போராட்டம்!

மீண்டும் எழுச்சியோடு ஜாதி ஒழிப்புப் போராட் டமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு - அடுத்த கட்டத்திற்கு நாம் கொண்டு செல்லக்கூடிய போராட்டமாக, ஜாதி ஒழிப்பை நடைமுறைப் படுத்துவோம் என்று கூறி முடிக்கின்றேன்.

வாழ்க பெரியார்!

வாழ்க அம்பேத்கர்!

வளர்க பகுத்தறிவு!

ஒழிக ஜாதிகள்!

நன்றி,வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 10.2.20

மத்திய உள்துறை தோல்வி: பகிரங்கக் குற்றச்சாட்டு

டில்லியில் வன்முறை: காவல்துறையினர் கண்முன்னே தாக்குதல்...

வீடுகளுக்கு தீவைப்பு... வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்!

புதுடில்லி, பிப்.27 வடகிழக்கு டில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில் ஒரு கும்பல் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட தில் 35உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. 200 க்கும் அதிகமானோர் படுகாய மடைந்துள்ளனர். வடகிழக்கு டில்லியே பெரும் போர்க்களமாகியுள்ளது.

டில்லியில் நடந்து வரும் வன்முறையில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 250 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் டில்லி முதலமைச்சர் அர விந்த் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டில்லியில் நடைபெற்ற போராட்டங் களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டில்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதி களிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர் கள் தீ வைத்துக் கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்சுகளும் மருத் துவமனைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வன்முறை சம்பவங்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்பட 35 பேர் உயிரிழந்தனர். சுமார் 250 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் வன்முறை கட்டுக்குள் வந்துள்ள அதேசமயம், அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதி களில் வன்முறை ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் ரோந்து சுற்றி வரு கின்றனர்.

பத்திரிகையாளர்மீது தாக்குதல்

பத்திரிகையாளர்களின் கேமராக் களைப் பறித்து பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வன்முறை கும்பல் அழித் திருக்கிறது. டில்லி வன்முறை கும்பலிடம் சிக்கிய ‘டைம்ஸ் ஆப் இந்தியா'வின் செய்தியாளர் தமக்கு நேர்ந்த கொடூ ரத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார். அவ ரது இந்த வாக்குமூலம் சமூக வலைதளங் களில் வைரலாக பரவி வருகிறது.

வன்முறைக் கலவரம் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் வருமாறு:

‘‘போராட்டக்காரர்களிடையே மோதல் முற்றி விட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு ஆயுதங்களுடன் அதிரடிப் படையினர் வந்தடைந்தனர். அப்போது நிலைமை மோசமடைந்து விட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அவசரத் தகவல்கள் அனுப்பி பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.

கலவரம் நடந்த அன்று நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் மஜ்பூர், பாபர்பூர், கபீர்நகர், மேற்கு ஜோதி நகர், கோகுல்பூரி ஆகிய இடங்களில், ஆயுதங் களுடன் வந்த இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.

இது குறித்து அங்குள்ள கோயில் பூசாரி தெரிவிக்கையில், ‘‘இரவு முழுவதும் நாங்கள் தூங்கவே இல்லை. இனி இது போன்று தவறு நடக்க விடமாட்டோம். எங்களை பாதுகாத்துக் கொள்ள நாங்கள் தயாராகி விட்டோம்'' என்றார்.

வன்முறை: பா.ஜ.க. எம்.எல்.ஏ. பாராட்டு

சஜ்ஜபூர்- -காபிர் நகர் சாலையில், காவல்துறையினர் பார்த்துக் கொண்டி ருக் கும்  போதே ஆயுதங்களுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியே வந்த வுடன்,  பாபாபூர் சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராய் அவர்களை சந்தித்து பாராட்டியுள்ளார்.  முற்பகலில் வந்த இளைஞர் குழுவினர் அங்கிருந்த கடை களின் போர்டுகளை இரும்புக் கம்பி களைக் கொண்டு அடித்து நொறுக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

மஜ்பூர் சவுக்கில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இஸ்லாமிய இளைஞர்களை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. இதைத் தொடர்ந்து வன்முறை நடந்த மத்திய மற்றும் வடகிழக்கு டில்லி பகுதிகளில் மார்ச் மாதம் 24- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. பாது காப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வெறுமனே பார்த்துக் கொண்டி ருந்தனர். இந்நிலையில், அந்த இளை ஞர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களி டம் இருந்த கைப்பேசிகள், அடித்து நொறுக்கப்பட்டன.

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலவரப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற நான்கு பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்திய கும்பல் ஒன்று, அவர்கள் அடையாள அட்டையை காட்டிய பின்னர், அவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர் அவர்கள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மூன்று மணி வரை நடந்த சம்பவங்களை படம் பிடித்த தனியார் ஊடகப் பத்திரிகையாளர் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். மற் றொரு இடத்தில் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

மஜ்பூர் சவுக்கில், கவுரி சங்கர் என்பவர், முகமூடி அணிந்த அய்ந்து பேரிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டது அங்கிருந்த மளிகைக் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதி வாகியுள்ளது. மஜ்பூர் சவுக்கில் கூட்டம் மேலும் அதிகரித்ததால், காவல்துறையினர் மூன்று கண்ணீர்ப்புகை குண்டு களை வீசினர். இதையடுத்து அங்கிருந்த கூட்டம் பின்நோக்கி ஓடியது. இந்த நிலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கையில் கையெறி குண்டுகளை வைத் திருந்ததைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இவர்கள் கண்ணாடி பாட்டில் களில் பெட்ரோல் ஊற்றி கையில் எடுத் துச் சென்றதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் தங்கள் கையில் இருந்த பாட் டிலை தூக்கி காற்றில் வீசினர். இது பறந்து சென்று ஒரு வீட்டின் மீது மோதி தீ பற்றியது.

முஸ்லிம் அடையாளப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன

காவல்துறையினர் இல்லாததால், தீ வைத்த கும்பல் எளிதாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பழுதுபார்க்கும் கடையிலிருந்து வாகனங்களை வெளியே இழுத்து போட்ட அந்த கும்பல், அந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து, முஸ்லீம் உரிமையாளர் களின் பெயர்களைக் கொண்ட அடை யாள விளம்பரப் பலகைகள், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியி லிருந்து அகற்றப்பட்டன.

பெட்ரோல் பங்க்குடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் கோகுல்பூரி டயர் சந்தைக்கு வெளியே, நிறைய வாகனங்கள் தீப்பிடித்தன. இறுதியாக, சந்தைக்கு வெளியே எரிந்து கொண்டிருந்த தீப் பிழம்புகள் தணிந்தன. சில மீட்டர் தூரத்தில், பெரிய வன்முறைக் கும்பல் சுதந்திரமாக சுற்றி வருவதையும், குறிப் பிட்ட சொத்துக்களை குறிவைத்து தாக்குவதையும் காவல்துறையினர் பார்த்துக் கொண்டே இருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், எரிந்து கொண்டிருந்த  தீ யை அணைத்தனர். இருந்தபோதும் உருகிய டயர்கள் மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் போன்றவை சாலை முழுவதும் சிதறிக் கிடந்தன.''

- இவ்வாறு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு 27.2.20

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய்யர் குருமூர்த்தியா - ரஜினிகாந்தா?

துக்ளக்' ஆண்டு விழாவில் நடிகர்  ரஜினிகாந்த் தந்தை பெரியார்பற்றிப் பேசிய பேச்சு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அல்லவா! அவர் அன்று பேசியது என்ன?

‘‘1971 இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு, ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை - அதை ‘சோ', ‘துக்ளக்' அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.''

ரஜினியின் இந்தப் பேச்சை மய்யப்படுத்திதான் கடந்த 6 வார காலமாக சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பின. விவாத - பிரதிவாதங்கள் நடந்தன.

‘துக்ளக்'கும் தன் பங்குக்குத் தனக்கே உரித் தான வக்கணையோடும், வில்லங்கத்துடனும் எழுதிக் குவித்தது.

இப்பொழுது இந்த வார ‘துக்ளக்'கில் (4.3.2020).

‘துக்ளக்' பொன் விழாவில் ரஜினி காந்த் பேச்சு என்று ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதோ அந்தப் பேச்சு:

‘‘1971 இல் சேலத்தில் பெரியார் அவர்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக் கொண்டு ஒரு ஊர்வலம் போனார்கள்'' (‘துக்ளக்', 4.3.2020, பக்கம் 13) என்று ரஜினி பேசியதாக ‘துக்ளக்' வெளியிட்டுள்ளது.

‘‘ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள்'' என்று ரஜினி காந்த் பேசியதை மாற்றி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி யையும், சீதையையும் அவமரியாதையாகச் சித்தரித்து எடுத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள் என்று இவ்வார இதழில் ‘துக்ளக்' வெளியிடுவானேன்?

உடை இல்லாமல், செருப்பு மாலை போட்டு என்ற சொற்களை ‘துக்ளக்' மறைத்தது ஏன்?

ரஜினி பேசிய பேச்சுக்கு ஆதாரமாக வீடியோவே இருக்கும்பொழுது, ‘துக்ளக்' இந்தப் பித்தலாட்டம் செய்வானேன்?

உண்மையைச் சொல்லும்பொழுது, எப் பொழுது கேட்டாலும் அப்படியே முனை மழுங்காமல் அப்படியே சொல்ல முடியும்.

பொய்யைச் சொன்னால், அதைக் கடைசிவரை காப்பாற்றவே முடியாது. அந்த நிலையில்தான் ‘துக்ளக்'கும், குருமூர்த்தி அய்யர்வாளும் இப் பொழுது சிக்கியுள்ளார்கள். உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி நிலைதான் குரு மூர்த்திக்கு.

‘துக்ளக்' கின் துர்ப் போதனையைக் கேட்டு உளறிக் கொட்டிய ரஜினியை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. இவாளை நம்பினால் என்னாகும் என்பதை இப்பொழுதாவது அவர் தெரிந்துகொள்வது நல்லது.

இதில் ரஜினி பொய்யரா அல்லது ‘துக்ளக்' குருமூர்த்தி பொய்யரா?

- விடுதலை நாளேடு, 26.2.20

தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் - ஆனால், தமிழ்நாட்டில்?

வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - மக்கள் மன்னித்தாலும்கூட!

தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்; ஆனால், தமிழ்நாட்டில்? வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளா தீர்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

காற்றை விதைத்துப்

‘புயலை' அறுவடை செய்கிறது!

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்ற மூவகை குடியுரிமைத் திருத்தச் சட்டங்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை, வழமைபோல் நடத்தாமல் புதுக்கரடி ஆர்.எஸ்.எஸின் கொள்கை அஜெண்டாவை அமலாக்கும் நோக்கத்தோடு அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக நடத்தி, காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்கின்றது மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு.

அமைதியாக இருந்த நாட்டின் நாலாபகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை, பாதிக்கப்படும் அனைவரும் ஜனநாயக வழியில் - அறப்போராட்டத்தை ஆண் - பெண் சகலரும் திரண்டு வரலாறு காணாத - வன் முறையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்!

துப்பாக்கிச் சூடு கலாச்சாரம்

இந்த கட்டுக்கோப்பைக் குலைக்க திட்டமிட்டே சில காலிகளை - தனி நபர்களை ஏவிவிட்டு கல வரங்களை - துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் (அமெரிக் காவில் இருக்கும் நோய்போல) இங்கும் பரவிடும் வேதனையான நிலை, விபரீதம் ஏற்பட்டு வருகிறது.

பல்கலைக் கழக மாணவர்களின் விடுதிக்குள் - டில்லியில் தனியார்களான குண்டர்களை முகமூடி அணிந்து அதீதமாக மாணவர்களைத் தாக்கியதற்கு சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகள் சில தொலைக்காட்சி ஊடகங்களில்கூட வெளிவந்தன.

இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா?

20 உயிர்கள் பலி; ஆழ்ந்த இரங்கல்

வடகிழக்கு டில்லி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக வன்முறை - வெறியாட்டம் (திட்டமிடப் பட்டு தூண்டி விடப்படுகிறதோ என்று சந்தேகம் பலருக்கும் ஏற்படுகிறது) காரணமாக 150 பேருக்கு மேல் காயம்; 20 உயிர்கள் பலி என்ற கோரத்தின் தாண்டவம் காட்சியளிப்பது வேதனை; ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

இராணுவத்தை வரவழைக்கச் சொல்கிறார் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்; இதுதான் மத்திய ஆளுமை யின் வெளிப்படை.

டில்லியின் காவல்துறை, சட்டம் - ஒழுங்கு பொறுப்பு - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளது. (மாநில அரசு பங்கு என்பது வெகு வெகுக் குறைவே!)

இன்று காலை டில்லியில் உள்ள உயர்நீதிமன்றம் - காவல்துறை அதிகாரிகளை நேரில் வரவழைக்க ஆணை பிறப்பித்துள்ளது!

விசாரணை நடக்கிறது.

‘தூண்டி விடுகிறார்கள் எதிர்க்கட்சியினர்' என்பது பொறுப்பற்ற குற்றச்சாற்று. மக்களின் தன்னெழுச்சி என்பது வெளிப்படை.

பழியைத் துடைத்த பீகார் சட்டமன்றம்

ஆளும் கூட்டணியில் இடம்பெற்ற லோக் தளக் கட்சி - அமைச்சர் இராம்விலாஸ் பஸ்வான் கட்சி, நிதிஷ்குமாரின் பீகார் ஆட்சி, என்.பி.ஆர்.அய் எதிர்த்து, ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ‘பழி'யைத் துடைத்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில்.... சொல்ல வெட்கமாகுது; காரணம் வெளிப்பாடு.

இன்று ஒரு அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் போல, ‘‘டில்லிக்கு ஜால்ரா அடிப்பது உண்மைதான்'' என்று, பல நேரங்களில் வசதியற்ற உண்மைகளை வாய் தவறிக் கூறிடும் அமைச்சர் என்பதால், வெளிப்படையாகக் கூறுகிறார்!

எதற்கும் ஒரு எல்லை இல்லையா?

தமிழ்நாடு இந்தியாவுக்கே வழிகாட்டிய மாநிலம்!

‘அம்மா ஆட்சி' என்பது உண்மையானால், இப்படி ‘டில்லியே சரணம்' என்று சத்துணவு திட்டத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் தருவார்களா? எதற்கும் ஒரு எல்லை இல்லையா?

தமிழ்நாடு மக்கள் தீர்ப்பளிக்கக் காத்திருக்கிறார் கள் என்ற கவலை மத்திய, தமிழக ஆட்சியாளர் களுக்கு இருக்கவேண்டாமா?

வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து, துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - மக்கள் மன்னித்தால்கூட - மறவாதீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

26.2.2020

தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ளமத்திய அரசு அலுவலகம் முன்முற்றுகைப் போராட்டம்

திருச்சியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக்கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள

மத்திய அரசு அலுவலகம் முன்

முற்றுகைப் போராட்டம்;  அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும்!

திருச்சி, பிப்.22  ‘நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரி மார்ச் 23 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட் டம் நடைபெறும்; அனுமதி மறுத்தால், மீறி நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருச்சியில் நேற்று (21.2.2020) செய்தியாளர்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

மாநாடுபோல்...

திருச்சியில், அன்னை மணியம்மையார் அவர்களு டைய நூற்றாண்டு விழா அரங்கத்தில், புதுப்பிக்கப்பட்ட அந்த அரங்கத்தில், திராவிடர் கழகத்தின் பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் மகளிரணி தோழியர்கள் உள்பட பல்வேறு பொறுப்பாளர்களும், மாநிலம் முழுவதும், கன்னியாகுமரி தொடங்கி திருத்தணி வரையில் எல்லா மாவட்டங் களிலிருந்தும் தோழர்கள், இருபால் தோழர்கள், பொறுப் பாளர்கள் அனைவரும் திரண்டு வந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 800 பேர் இந்தப் பொதுக்குழுவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநாடுபோல் இடமின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதை நீங்களே பார்த்திருப் பீர்கள்.

அந்த அளவிற்கு சிறப்புமிக்க இந்தப் பொதுக்குழுவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 14 தீர்மானங்கள் மிகச் சிறப்பான அளவிலே நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

14 தீர்மானங்கள்

அந்த 14 தீர்மானங்களும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குகள், அதேபோல, சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கிற ஆபத்துகள், கல்வித்துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கண்ணிவெடிகள் ஆகியன குறித்தவையாக உள்ளன.  மனுதர்மம் ஆட்சிக்கு வந்து, குலக்கல்வித் திட்டம் மீண்டும் வருமோ என்கிற அச்சம் இருக்கிறது.

ஏற்கெனவே ‘நீட்' தேர்வைப் பொறுத்தவரையில், 9 உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அதுபோலவே, நெக்ஸ்ட் தேர்வு என்று வாழ்நாள் முழுவதும் தேர்வு என்ற நிலை.

‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள்!''

இதற்கு முன் 11 நாள்களாக தமிழகத்தில் கன்னியா குமரியில் தொடங்கி, திருத்தணி - சென்னைவரை பல மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து, கிளர்ச்சியை அறிவிப்போம் என்று சொன்ன நிலையில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. மாணவப் பிஞ்சுகளுக்கு 5 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு ‘‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிபோல'' ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்ட பிறகு, அதனை கைவிட்டு இருக்கிறார்கள். 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை கைவிட்டு இருக்கிறார்கள். அதனை நாங்கள் வரவேற்று இருக்கிறோம். அது இப்போது அரசு ஆணையாகக் கூட வெளிவந்திருக்கிறது. அது வரவேற்கத்தக்கதாகும்.

அதுபோலவே, ‘நீட்' தேர்வு என்பது இருக்கிறதே, ஏற்கெனவே நாம் அதிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். விதிவிலக்கு ஏற்கெனவே தரப்பட்டும் இருக்கிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுக்கமாட்டோம் என்று சொல்வது நீதிமன்றங்களுடைய வேலையல்ல. சட்டம் சரியா? இல்லையா? என்றுதான் சொல்ல வேண்டும்.

நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு. இதுவரை கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து மாற்றப்பட்டாலும், ஒத்திசைவு பட்டியல் என்கிற கன்கரண்ட் பட்டியலில்தான் இருக்கிறதே தவிர, அது ஒன்றும், மத்திய அரசினுடைய ‘எக்ஸ்குளூசிவ் ரைட் ' என்று சொல்லக்கூடிய அந்தப் பட்டியலுக்குப் போகவில்லை.

ஆகவே, அதை வைத்துக்கொண்டு, நாங்கள்தான் நிர்ணயிப்போம், மாநில அரசு சொல்வதைக் கேட்க முடியாது என்று மத்திய அரசால் சொல்ல முடியாது.

ஆனால், அதைவிட பெரிய ஆபத்து, மருத்துவ மனைகள் இல்லாமல், மெடிக்கல் எஜூகேசன் என்று சொல்லக்கூடிய மருத்துவக் கல்வி இருக்க முடியாது. பொது சுகாதாரம் என்பவையெல்லாம் கூட மாநில அரசின்கீழ்தான் இருக்கிறது.

மாநில அரசு எதிர்த்து

முறியடிக்கவேண்டும்

ஆகவே, அண்மையில் இதனை நாங்கள் பிரச்சாரம் செய்துகொண்டு வரும்பொழுது, ஒரு பெரிய சூழ்ச்சிப் பொறி மற்றொன்று வைக்கப்பட்டு இருக்கிறது மத்திய அரசினாலே!

பொது சுகாதாரம், மருத்துவமனைகள், மாநிலங்களில் இருப்பது, குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருப்பதை,  ஒத்திசைவு பட்டியலில் கொண்டு வந்து, தாங்களே அதை ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று ஒரு முயற்சி நடந்திருக்கிறது. அதை மாநில அரசு தெளிவாக எதிர்த்து, அதனை முறியடிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறோம்.

மார்ச் 23 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம்முன் முற்றுகைப் போராட்டம்

எனவேதான், இந்த ஆபத்து நாளுக்கு நாள் அதிக மாகக் கூடிய நிலை இருக்கிறது. எங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், பல்வேறு தீர் மானங்கள் தமிழகத்தின் நலன் கருதி, மனித உரிமை களைக் கருதி, சமூகநீதி பாதுகாப்பை கருதி தீர்மானங் களை நிறைவேற்றினாலும்கூட, இதில் மிக முக்கியமாக சொல்லவேண்டுமானால், குறிப்பாக 3 ஆவது தீர் மானத்தில், நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வுகளையெல்லாம் எதிர்த்து வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள்முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

அந்த முற்றுகைப் போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தினாலும்கூட, ஒத்தக் கருத்துள்ளவர்களும் அந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பார்கள்.

தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்

‘நீட்' தேர்வை அடியோடு ரத்து செய்யவேண்டும் என்று ஒரு பக்கத்தில் இருந்தாலும், குறிப்பாக தமிழ் நாட்டிற்கு அது பொருந்தாது; தமிழ்நாட்டிற்கு விதி விலக்கு அளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றவேண் டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் கொடுக்க மறுத்தாலும், இன்னொரு முறை அந்தத் தீர்மானத்தையே சட்டமாக ஆக்கி, மறுபடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

காரணம், அரசமைப்புச் சட்டப்படி நமக்கு அது சலுகையல்ல; அது நமக்கு உரிமை என்கிற காரணத் தினால், அதனை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில், முற்றுகைப் போராட்டம் மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் என்பது அந்தத் தீர்மானத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

அனுமதி மறுத்தால், மீறி முற்றுகைப்

போராட்டம் நடத்தப்படும்!

அந்த முற்றுகைப் போராட்டம் வழமைப்போல், திராவிடர் கழகம் அறப்போராட்டமாகத்தான் நடத்தும். திராவிடர் கழகம் நடத்தும் எந்தப் போராட்டத்திலும் பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொதுமக்களுக்கு இடையூறோ ஏற்பட்டதில்லை.

முற்றுகைப் போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று சொன்னால், மீறி அந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.

சமூகநீதி பாதுகாப்பு மாநாடு

இன்று மாலை சமூகநீதி பாதுகாப்பு மாநாடு உழவர் சந்தையில் நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டில், தோழமைக் கட்சியினர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டிற்கு அரசமைப்புச் சட்டப்படி கொடுக் கப்பட்ட, காலங்காலமாக நம்முடைய தலைவர்கள் நீதிக்கட்சி காலத்திலிருந்து போராடி பெற்ற வெற்றிகள், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் எல்லோருமே தொடர்ச்சி யாக திராவிட இயக்கம் கட்டிக் காத்த அந்த இட ஒதுக் கீட்டிற்கு இப்பொழுது ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

உயர்ஜாதியினருக்கு

வயது வரம்பில் சலுகையா?

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிப்படையையே குலைக்கக் கூடிய அளவிற்கு, இட ஒதுக்கீட்டில், உயர்ஜாதியினரில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு 10 சதவிகிதம் என்று உள்ளே நுழைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்த வயது விதிவிலக்கைக் கூட, உயர்ஜாதியினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கும் சலுகை வழங்கியிருப்பதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன வயது வரம்பில் சலுகையோ அதே சலுகையை உயர்ஜாதியினருக்கும் வழங்குவோம் என்று சொல்லி, வேண்டுமென்றே இவர்களுடைய உரிமையை பறிக்கக்கூடிய ஆபத்தும் அண்மையில் வந்திருக்கிறது இரண்டு நாள்களுக்கு முன்பு. அதையெல்லாம்கூட கண்டித்து தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.

ஆகவே, மாலையில் நடைபெறும் மாநாட்டில், அது தெளிவாக்கப்படும்.

எனவே, ஊடக சகோதரர்களாகிய நீங்கள் மாலை யிலும் வாருங்கள். அங்கே பல முக்கியமான அறிவிப்புகள் வெளிவரும்.

‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து,

இதற்கு வரக்கூடாது

செய்தியாளர்: சட்டப்பேரவையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதே, அதுபற்றி?

தமிழர் தலைவர்: முதலமைச்சர் அதை அறிவித்த வுடன், பலரும் வரவேற்றனர். நாங்கள் உள்பட! அதி லொன்றும் சந்தேகம் வேண்டாம். அந்த முயற்சி என்பது நல்ல முயற்சி என்றாலும், முழு முயற்சியாக அது அமையவேண்டும்.

‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக சட்டம் நிறைவேற்றியும், பிறகு அதற்கு ஒப்புதல் கிடைப்பதில் எப்படி சிக்கல் வந்ததோ, அதுபோல இதற்கு சிக்கல் வரக்கூடாது.

அடுத்தபடியாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வலியுறுத்தியதுபோல, வேகவேகமாக அந்த சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினோம் என் பதைவிட, இன்னும் கொஞ்சம் ஆழமாக அந்த சட்டத்தை விரிவுபடுத்தியிருந்தால், நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

டெல்டா மாவட்டங்கள் என்று அய்ந்து மாவட்டங்கள் மட்டும் இருந்தால், மற்ற மாவட்டங்கள் பாலைவனமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது என்ற அச்சம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை வருகிறது என்று சொன்னவுடன், அந்த மாவட்டத்துக் காரர்கள் அச்சப்படுகிறார்கள். அதுபோலவே, மற்ற இடங்களிலும் இந்த ஆபத்துகள் ஏற்படுகின்ற சூழல் இருக்கின்றது.

எனவேதான், முழுமையடைந்த ஒரு சட்டம் வர வேண்டும் என்று  நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

அந்த வகையில், இந்த சட்டம் இப்பொழுது நிறை வேற்றப்பட்டு இருக்கிறது சட்டமன்றத்தில். அது எப்பொழுது முழுமையாக சட்டமாக மாறும். இப்பொழுது மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. சட்டம் வந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதற்கு ஒப்புதல் வாங்கவேண்டும். ஒப்புதல் வாங்கி, அதனை முழுமை யாக நிறைவேற்றி, அதனை செயல்படுத்தும்பொழுது, ‘நீட்'டிற்கு ஏற்பட்ட விபத்து, இதற்கு வரக்கூடாது என்பதை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதியில்லை என்பதுதானே

உங்களுடைய கொள்கை

செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்; ஜாதியில்லை என்பதுதான் உங்களுடைய கொள்கை. இது முரணாகத் தெரியவில்லையா உங்களுக்கு?

தமிழர் தலைவர்: இதைப்பற்றி தெளிவாக நாங்கள் எழுதியிருக்கின்றோம். ஏனென்றால், ஜாதி அரசமைப்புச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. திருமணத்திற் காக விளம்பரம் கொடுக்கும்பொழுதே, இந்த ஜாதியில் தான் மணமகன் வேண்டும், மணமகள் வேண்டும் என்று வெளிப்படையாகப் போடுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஜாதியை ஒழிப்பதற்கு சட்டம் இல்லை. தீண்டாமையைத்தான் ஒழித்திருக்கிறோம் என்கிறார்கள், அதுவும் உண்மையாக ஒழிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள், சுடுகாட்டிற்குப் போவதற்குக்கூட பாதை கூட கிடையாது.

ஆகவேதான், அடையாளப்படுத்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில், Socially and  Educationally Backward Classes என்று வருகிறபொழுது, உயர்ஜாதிக் காரர்கள், மற்றவர்கள் என்று வரக்கூடிய இட ஒதுக்கீட் டைக் குறிக்கிறபொழுது, அதற்கு அடித்தளம் மிக முக்கியமானது.

யார்? யார்? பிற்படுத்தப்பட்டவர்கள், எவ்வளவு பேர் என்று தெரியும்.

ஆகவேதான், சில பேர் நினைக்கலாம், ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்கிறார்கள், இவர்களே ஜாதி வாரியாகக் கணக்கெடுக்கவேண்டும் என்று சொல் கிறார்களே, அது முரண்பாடு உள்ளதென்று கருதலாம்.

அது தோற்றத்தில்தான் முரண்பாடே தவிர, வேறொன்றுமில்லை - அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று முதலில் போடட்டும்.

பெரியார்தான் கேட்டார், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது'' என்று 17 ஆவது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறதே, அதனை எடுத்துவிட்டு, ‘‘ஜாதி ஒழிக்கப் பட்டு விட்டது'' என்று போடுங்கள் என்றார்.

தீண்டாமை என்பது ஜாதியினுடைய விளைவு. ஆனால், ஜாதி இருக்கும். தீண்டாமை மட்டும் ஒழிக்கப் படவேண்டும் என்று போட்டார்கள். ஜாதி என்ற வார்த்தை, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனவே, ஜாதி என்பது நடைமுறையில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களை யும் அதை வைத்துதான் அடையாளம் காண முடியும்.

பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே விருந்து சாப்பிடக்கூடிய அபாயம்

ஆகவே, இப்பொழுது அதனை விட்டுவிட்டால், ஏற்கெனவே உயர்ஜாதிக்காரர்களுக்கு, ஏழைகள் என்ற பெயரால், பசியேப்பக்காரர்கள் வெளியே நிற்க, புளியேப்பக்காரர்களே அவர்களுடைய பங்கை முழு மையாக விருந்து சாப்பிடக்கூடிய அபாயம் ஏற் பட்டிருப்பது - இன்னும் விரிவாக்கப்படக் கூடிய பேரபாயம் அதன்மூலம் வரக்கூடும்.

ஆகவேதான், ஜாதி வாரியாகக் கணக்கெடுங்கள் என்று சொல்கிறோம். மதம் கூடாது என்றாலும், எந்த மதம் என்று போடும்பொழுது, அந்த மதத்தைப் போடுகிறார்கள் அல்லவா!

இட ஒதுக்கீடு என்பது, Socially and  Educationally Backward classes என்பதுதான்.

அதை அம்பேத்கர் அவர்கள் மிக அழகாக சொன்னார், Backward என்பது Nothing but Bundle of Caste  என்றார்.

இதை ஏற்கெனவே நாங்கள் வலியுறுத்தினோம்; சென்ற முறையே ஜாதிவாரியாகக் கணக்கெடுத்து வைத் திருக்கிறார்கள். ஆனால், அதை வெளியிடவில்லை. இந்த முறை அதனை தெளிவாக ஆக்கவேண்டும் என்பதைதான் இன்று திராவிடர் கழகப் பொதுக்குழு விலும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடையே கூறினார்.

 - விடுதலை நாளேடு, 22.2.20

சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம்

அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது; அதனை அழிப்பதுதான்

பா.ஜ.க.வின் பணி!

* உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூகநீதி என்ற சொல் இல்லை

சமூகநீதி வெல்ல போராடுவோம்!

திருச்சி, பிப்.22 அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங் களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (21.2.2020) திருச்சி உழவர் சந்தையில் பொன் மாலைப் பொழுதில் சமூகநீதி மாநாடு நடைபெற்றது. மைதானம் ஒளி வெள்ளத்தில் திளைத்தது. கழகத் தோழர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் இருக்கையை நிறைத்தனர். மாநாடு தொடங்குவதற்கு முன் எழுச்சி யூட்டும் பறை இசை எங்கும் பரவியது. லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வால்டேர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகக் கொடியேற்றிய அம்பிகா கணேசன் சுருக்கமான உரையாற்ற, மேடையில் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன.

தமிழர் தலைவர் தம் உரையில் செங்கல்பட்டில் நடை பெற்ற முதலாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நினைவுபடுத்தினார். மண விழாவின் சிறப்பை சுருக்கமாக எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் நிறைவுரை

தமிழர் தலைவர் தம் நிறைவுரையில்,

மார்ச் 23ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்தார். இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போராட்டம் என்றார். அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது. அதனை அழிப்பதுதான் பாரதீய ஜனதாவின் பணி. உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூக நீதி என்ற சொல் இல்லை.

இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு இவை சிதைக்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் எல்லாமே விற்கப்படுகின்றன.

கூட்டாட்சிக்கு விடை தரப்படுகிறது. ஒரே ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, போராட்ட பூமியாக மாறி இருக்கிறது என்பதை ‘ஆனந்த விகடன்' கட்டுரை மூலம் விளக்கினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பவர் களுக்கும், அதை எதிர்ப்பவர்களுக்கும் போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

நாங்கள் அறவழி நடப்பவர்கள் - வன்முறைக்கு எதிரான வர்கள் என்பதை தெளிவுபடுத்தினார்.

பிரதமர் மோடி பதவி ஏற்றவுடன் இந்திய அரசமைப் புக் கல்வெட்டைக் கட்டி அணைத்து மரியாதை செலுத் தினார். ஆனால் வள்ளுவர், ‘‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்'' என்றார். கோட்சே, காந்தியை சுடுவ தற்கு முன்பு கும்பிட்டு விட்டே சுட்டான். இந்திய அர சமைப்புச்  சட்டம் அடிக் கட்டுமானம் உருவி எறியப்படு கிறது என்று தமிழர் தலைவர் உரைத்தார். ராமர் கோவில் கட்டும் அறக்கட்டளை உறுப்பினர்களாக, பாபர் மசூதியை இடித்தவர்கள் இரண்டு பேர் நியமிக்கப்படுவது கொடுமை என்றார். சமூகநீதி வெல்லப் போராடுவோம் என்றார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் அவர்கள் மாநாட்டை திறந்து வைத்து உரை நிகழ்த்தும் போது, திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மா னங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றார்.

தாய்மொழி நாளில் மாநாடு நடைபெறுவது சிறப்பிற்குரியது. பல மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றிருக்கிறது.

ஆனால் தமிழ் மொழிக்கு கடந்த மூன்றாண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.22 கோடி. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை 643 கோடி ரூபாய். மத்திய அரசாங்கம் பாரபட்சமாக செயல்படுகிறது என்று குற்றஞ் சாட்டினார். மார்க்ஸ் - ஏங்கல்ஸ் அறிக்கை வெளியான நாள் இன்று என்று பெருமிதம் கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் கல்விக் கொள்கை, சமூக நீதி, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்த்தல் என்று பல்வேறு செய்திகளை முத்தரசன் அடுக்கினார்.

துரை.சந்திரசேகரன்

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற் றும்போது, காஷ்மீர் பிரச்சினை, அஸ்ஸாம் பிரச்சினை, முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை பறிப்பு முதலியவற்றை எடுத்துரைத்தார்.

அப்துல் சமது

மனிதநேய கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது உரையாற்றும்போது, தமிழ்நாடு சமூகநீதியின் முகவரி என்று வருணித்தார். இந்தியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காரணம் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றார். இந்து ராஷ்டிரம் அமைப்பது பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்றார்.

இது மனுநீதிக்கும் சமூக நீதிக்கும் இடையே ஆன போராட்டம் என்றார். முஸ்லீம் சமூகத்தை நிர்மூலமாக்கி இருக்கிறார்கள். எந்தவித அதிகாரத்திலும் இஸ்லாமி யர்கள் இல்லை. அதிகாரம் இல்லை என்றால் அடிமை யாகத்தான் வாழ முடியும். தமிழ்நாட்டில் 56 லட்சம் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவை மதிப்பு இழந்த வாக்குகள் என்றார். கல்வி பறிக்கப்படுகிறது. சமூகநீதி பறிக்கப்படுகிறது. மாநில உரிமை மட்டுமல்ல மாநிலமே பறிக்கப்படுகிறது என்றார். இந்து ராஜ்ஜியம் என்பது பார்ப்பன ராஜ்ஜியம் என்று குறிப்பிட்டார்.

பவுத்தர்களையும், சமணர்களையும் அழித்து ஒழித் தது பார்ப்பனியம் என்றார். நாடாளுமன்றம் நிறைவேற் றிய சட்டத்தை 11 மாநிலங்கள் எதிர்க்கின்றன என்றார். தொடர்ந்து போராடுவோம் என்று முழங்கினார்.

கனகராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் உரையாற்றும்போது, இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களின் ஒன்றியம் என் கிறது. மொழிவாரி மாநிலங்கள் போராட்டத்தின் மூலமே உருவானது. இந்தியாவை உருவாக்கி இருக்கிற இணைப் புக்கயிறு கூட்டாட்சித் தத்துவம், மதச் சார்பின்மை என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல இந்துக்களுக்கும் எதிரானது என்றார்.

தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றும் போது, திராவிடர் கழக தீர்மானங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப் பதாக அறிவித்தார். உச்சநீதிமன்றம் சமூகநீதிக் கொள் கைக்கு எதிராக தீர்ப்பு அளிக்கிறது. மண்டல் கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பாரதீய ஜனதா சங்பரிவாரக் கும்பல். அயோத்தி தீர்ப்பு என்பது அவர்கள் விரும்பிய தீர்ப்பு என்றார். இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன் றம் தீர்ப்பு எழுதியபோது மக்கள் கொதித்து எழுந்திருக்க வேண்டும். மதத்தை அளவு கோலாகக் கொண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

பாரதீய ஜனதாவின் நீண்ட காலத் திட்டங்கள் முத்தலாக் சட்டம், காஷ்மீர் 370ஆம் பிரிவு நீக்குதல், ராமர் கோவில் கட்டுதல், இஸ்லாமியர்களின் வாக்குக ளைப் பறித்தல் என்று அடுக்கினார்.

திருச்சி சிவா

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் உரையாற்றும்போது, இன்றுதான் பேச வேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று பெருமையாக கூறினார். மதிப்பிற்குரிய ஆசிரியர் முன்னிலையில் பேச வேண்டும் என்று விரும்பினேன். இங்கு பேசினால் கருத்து சரியாக சென்று சேரும் என்பது எனக்குத் தெரியும் என்றார். அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் ஒரு வாக்கில்தான் இந்தி ஆட்சி மொழி ஆனது. உயர்ந்த தத்துவங்களுக்கு பாரதீய ஜனதா கட்சி முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது. பேராபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை. நம்மை பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறோம். எதிர்க் கட்சியின் ஒற்றுமையின்மைதான் பாரதீய ஜனதாவின் வெற்றி என்றார். முத்தலாக் தடைச் சட்டம் இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானது என்றார்.

விதவைப் பெண்களுக்கு ஆதரவாக தனி நபர் மசோதா கொண்டு வந்த போது எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதா கட்சியினர் என்று குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370ஆம் பிரிவு, ரத்து செய்ய காரணம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதுதான். பாரதீய ஜனதாவின் பாதகத்திற்கு ஆதரவு தருவது அதிமுகதான் என்றார். திராவிடர் கழகம் எல்லோருக்கும் தாய்வீடு என்று புகழ்ந்தார்.

சமூக நீதி மாநாடு இரவு 10 மணிக்கு நிறைவுற்றது.

கழக பொதுக் குழு

திராவிடர் கழகப்  பொதுக்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்று,  தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர் (திருச்சி, 21.2.2020)

காலையில் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்திற்கு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை பெரியார் மாளிகையில் கருஞ்சட்டைத் தொண்டர்கள் திரண்டனர். தமிழகத்தின் வடக்குக்கும், தெற்குக்கும் மத்திய பகுதியான தந்தை பெரியார் நேசித்து, விரும்பித் தங்கிய திருச்சி மாநகரில் கூடினர். பொதுக் குழுக் கூட்டம் தொடங்கு வதற்கு முன்பு இயக்கப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.  காலை 10.30 மணிக்கு அரங்கத்திற்குள் வருகை புரிந்த தமிழர் தலைவர், கழகத் தோழர்கள் அமர்ந் திருக்கும் பகுதிக்கு வந்து, ஒவ்வொருவரையும் நலம் விசாரித்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்.

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கடவுள் மறுப்புச் சொல்ல, கூட்டம் இனிதே தொடங்கியது. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமையில், கழகத் தலைவர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் சுருக்கமாய் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் முதலாவதாக இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நிமிடம் மவுனம் கடைப்பிடித்து வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டது பொதுக் குழுக் கூட்டம்.

சு.அறிவுக்கரசு

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தம் தலைமையு ரையில், நாடு நெருக்கடியான நிலையில் இருக்கும்போது கூடும் பொதுக்குழு இது. பாரதீய ஜனதா கட்சி தமது கொள்கைகளை திணித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படுகின்றது. மாநில ஆட்சி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது. இது சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கும் பொதுக்குழு. தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.

பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ப.சுப்பிர மணியம் அவர்கள் தம் உரையில் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் அமைய 10 அமைப்புகளிடமிருந்து தடையில்லா சான்று பெற்றுள்ளதை விளக்கினார்.

‘‘திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தடையில்லா சான்று வழங்கவேண்டும் - அது மட்டும் நிலுவையில் இருக்கிறது. அரசுதான் அனுமதி வழங்கவேண்டும் என்று காரணம் காட்டுகிறார்கள். ஆட்சி மாற்றம்தான் இதற்கு வழிவகுக்கும், அதற்கும் தயார்'' என்று அறிவித்தார்.

வீ.அன்புராஜ்

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்பு ராஜ் அவர்கள் தம் உரையில் கடந்த ஓராண்டில் திராவிடர் கழகம் செய்த பணிகளைப் பட்டியலிட்டார்.

தஞ்சை மாநாடு,  மணியம்மையார் நூற்றாண்டு விழா வினைத் தொடங்கியது, பெரியார் 1000 சிறப்பாக நடை பெற்றமை, அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மனித நேய சுயமரியாதை மாநாடு, ‘விடுதலை' நாளிதழ் தரமாக வெளிவருவது, (விளம்பரம் வந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்), ‘விடுதலை', ‘உண்மை', ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' வாசகர் வட்டம் உருவாக்குவது, சுயமரியாதைத் திருமண நிலையத்தில், கடந்த ஆண்டு 461 திருமணங்கள் நடை பெற்றன. அதில் ஜாதி மறுப்பு திருமணங்கள் 420. வேறு மாநிலத்தவர் இணையேற்பு 13. பார்ப்பனர்கள் விரும்பி செய்த திருமணங்கள் 9;  மணமுறிவுத் திருமணங்கள் 19.

கிராமப்புறப் பிரச்சாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் சிறப்பான பிரச்சாரம், வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்கு புத்தக விற்பனை, பெரியாரியல் பயிற்சி வகுப்புகள், சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாடு, தமிழர் தலைவர் அவர்கள் கலந்துகொண்ட 371 நிகழ்ச்சிகள் என்று நடைபெற்ற ஏராளமான பணிகளை விளக்கி உரையாற்றினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தம் உரையில்:- இயக்கம் வலிமையாக இருக்கிறது. தொண்டர்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. கழகப் பொறுப்பாளர்களுக்கு காவல்துறையுடன் இணக்கமான நட்பு இருக்க வேண்டும். சமூகநீதி, மதச்சார்பின்மை இரண்டும் முக்கியமான பிரச் சினைகள். நாம் இடைவிடாது உழைப்போம். எல்லைவரை செல்வோம். பெரியாரின் தத்துவம்தான் தீர்வு. பெரியார் படமும், அம்பேத்கர் படமும் மட்டும்தான் போராளிகளின் கையில் பதாகையாக ஏந்தியிருக்கிறார்கள். இந்த எழுச்சியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மண்டலப் பொறுப்பாளர்களின் பணி கேள்விக்குறியாக இருக்கிறது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு இருக்கக்கூடிய தன்மை நமக்கு இருக்கக்கூடாது. கழகத் தோழர்கள் கண்டிப்பாய் விடுதலை சந்தா உறுப்பினர் ஆக வேண்டும். மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பிற அமைப்பைச் சார்ந்தவர்கள் நடத்துகின்ற பெரியாரி யல் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தலைமையிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெறுங்கள். முகநூலில் எழுதுங்கள். தலைமைக் கழகம் அறிவித்தால் மட்டுமே கூட்டம் நடத்தும் நிலை கூடாது. தலைவர் உரையில் அறிவிப்புகள் வரும். உங்கள் ஆசை பூர்த்தியாகும் என்று உரை நிகழ்த்தினார் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கணீரென்ற குரலில் அழுத்தந்திருத்தமாக வாசித்து முடிக்க தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை ஒட்டி மணியம்மையார் அவர்களின் அஞ்சல்தலை வெளியிடுவது தொடர்பாக கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் சில விளக்கங்கள் அளித்தார். ஓர் அட்டையின் விலை ரூ. 500 என்றும், அஞ்சல்தலை

மார்ச் 10 அன்று வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்.

கழக மகளிரணி பொறுப்பாளர் இன்பக்கனி கடந்த ஆண்டில் மகளிரணி செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு அணியின் பொறுப்பாளர்கள் தத்தம்துறை தொடர்பான கருத்துரை வழங்க கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அழைத்தார். தொழிலாளர் அணியின் சார்பாக மகளிர் பாசறை செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பகுத்தறிவாளர் கழக கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மா.அழகிரிசாமி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மாணவர் கழக செயலாளர்கள் சுரேஷ், பிரின்சு என்னாரெசு, மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கருத்துகளை வழங்கினார்கள்.

பொதுக்குழுவில், கழக காப்பாளர்களும், மகளிரணி பொறுப்பாளர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும் அறிவிக் கப்பட்டனர்.

கழகத் தலைவர் நிறைவுரை

கழகத் தலைவர் உரையாற்றத் தொடங்கும்போது தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் வரிசையில் நின்று விடுதலைச் சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தார்கள். கழகத் தலைவர் 45 நிமிடம் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார். அவர்தம் உரையில், பெரியார் வாழ்கிறார், துடிப்போடு வாழ்கிறார், என்றென்றும் வாழ்வார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஆனந்த விகடன் எழுதிய செய்திக்கட்டுரையினை மேற்கோள் காட்டி எதிரிகளை உலக மகா பைத்தியக்காரர்கள் என்றார். பெரியாரும், அம்பேத்கரும் போராட்டக் கருவிகள் என்றார். போராட்டத்தைத் தூண்டி விட்டது மோடியும், அமித்ஷாவும் என்றார். படித்தவர்கள் கூலித்தொழிலாளர்களாக அலைகிறார்கள். குடும்பம் குடும்பமாக தற்கொலைகள் நிகழ்கின்றன.

கொள்கை, கொள்கை என்று லட்சியப் பயணம் செய்த வர்கள் இப்போது காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள் ளனர். தந்தை பெரியார் அவர்கள் 90 வயதுக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை பட்டியலிட்டார். தோழர்கள் வியந்து கேட்டனர். சுற்றுப்பயணத்தால் நான் தளர்ச்சி - சோர்வு அடையவில்லை என்றார். இயக்கப் பொறுப்பாளர்கள் ஒரு வாரத்தில் ஒரு நாளையாவது இயக்கப் பணிக்கு ஒதுக்குங்கள் என்றார். மகளிர் அணி தொடங்க மணியம்மையாருக்குக் கூட தயக்கம் இருந்தது. ஆனால் சிறப்பாக எந்தவித குற்றமும் இல்லாமல் சிறப்பாக நடை பெறுகிறது.

கருப்புச்சட்டை இன்று பேஷனாக கருதப்படுகிறது. நம்முடைய கருப்புச்சட்டை - கொள்கை சாயம் போகாத கருப்புச்சட்டை. கருப்புச்சட்டைக்காரர்கள் உலகில் எதற்கும் பயப்படத் தேவையில்லை. தன் வாழ்வுக்கு யாரையும் எதிர்பார்க்கக்கூடாது, சுயநலத்திற்கு என்று எந்தக் காரியத்தையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. தந்தை பெரியார் தனி வாழ்க்கை வைத்துக் கொண்டதில்லை. அதுபோல எனக்கும் தனி வாழ்க்கை கிடையாது. அண்மைக் காலத்தில் வெளிவந்த நல்ல நூல் பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம். ஒவ்வொருவர் வீட்டிலும் இடம்பெற வேண்டும். தோழர்கள் படிக்க வேண்டும்.

இந்த நூலைப் படித்த போது எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. நாகம்மையார் மொழி தெரியாத நாட்டில் திருவாங்கூரில் போராட்டம் நடத்துகின்றார். பெரியாரின் போராட்ட குணம் இந்நூலில் வெளிப்படுகிறது. பெரியார் விடுதலை பெற்றவுடன் மீண்டும் போராட்டத்தில் குதிக்கின்றார். கடுங்காவல் தண் டனை பெறுகிறார். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள் ளக்கூடாது என்பதற்காக பெரியார் கதர்ப் பிரச்சாரத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்.  நாகம்மையார் வருத்தப்படுகிறார் வைக்கம் போராட்டத்திற்கு போகமுடியவில்லை என்று, எனவே நாம் போராட்டத்திற்கு தயங்காதவர்கள்.

பொறுப்பு மாறி மாறி வரவேண்டும். 1960இல் தந்தை பெரியார் இதே இடத்தில் என்னைப் பொதுச் செயலாளர் ஆக்கினார். என் வாழ்நாள் இயக்க வளர்ச்சிக்கு - கொள் கைக்கு பயன்பட வேண்டும். பிரச்சாரம் - போராட்டம் நம் இயக்கப் பண்பு, ஒழுக்கம் - கட்டுப்பாடு - நாணயம் - நமது தனித்தன்மை.

தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகளை தமிழர் தலைவர் தெளிவுற எடுத்துரைத்தார். திருச்சி மாவட் டச் செயலாளர் தோழர் மோகன்தாஸ் நன்றி கூற பொதுக்குழுக் கூட்டம் நிறைவுற்றது.

தொகுப்பு: பேராசிரியர் நம்.சீனிவாசன்

சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (திருச்சி, 21.2.2020)

திருச்சி சமூகநீதி மாநாட்டில் ஜாதி மறுப்பு மணவிழா

திருச்சி சமூகநீதி மாநாட்டு மேடையில் குடிகாடு  அழகேசன் - இலஞ்சியம் ஆகியோரின் மகன் ஆனந்தராஜுக்கும், உங்களாபாடி துரையரசன் - ரமலா ஆகியோரின் மகள்  மாயாவதிக்கும்,  ஈரோடு மாவட்டம் ரெட்டிப்பாளையம் ப.ஆறுமுகம் -

ஆ. ஜோதி ஆகியோரின் மகன் தேவராஜுக்கும், ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் அ. பாட்டுச்சாமி- பெ. மல்லிகா ஆகியோரின் மகள் பா.ம.  தேன்மொழிக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்.

உடன்: மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் கனகராசு, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல்சமது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,  திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராசு மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (21.2.2020)

- விடுதலை நாளேடு 22.2. 20

குறைந்த சார்ஜ் நிறைந்த லாபம்!!

சகுன வியாபாரம்

நல்ல சகுனம் வேண்டியவர்களுக்கு ஒரு நல்ல சமயம். உங்களுக்கு என்ன மாதிரியான சகுனம் எந்தவிடத்தில் எப்போது வேண்டும்? தயவு செய்து தெரிவிப்பீர்களேயானால் அந்தந்த சகுனங்கள் அந்தந்தவிடத்தில் ஏற்படும் படி செய்யப்படும். உங்கள் எதிரிகளுக்குக் கெட்ட சகுனங்கள் ஆகச் செய்ய வேண்டுமானாலும் அதுவும் செய்யப் படும், சார்ஜ் விபரம் சகுனத்தையும் சமயத்தையும் பொறுத்தது.

மேல் உலகத்திற்கு ஆகாயகப்பல் சர்வீஸ்விலாசம்:-  சகுன வியாபாரம், பலவான்குடி.

காலம் சென்று மேல் உலகத்தில் இருக்கின்ற உங்கள் பெற்றோர்களுக்கு ஏதாவது சாமான் அனுப்பவேண்டுமானால் ஆகாயக்கப்பல் மூலம் அனுப்ப வசதி ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. அனுப்பவேண்டிய சாமான்கள் விபரமும் இத்தனை பேருக்கு என்கின்ற விபரமும் தெரிவித்தால் சார்ஜ் விகிதம் தெரிவிக்கப்படும்.

அநேகமாய் இப்போது மனிதன் (பார்ப்பான்) மூலமாய் அனுப்புவதற்கு உங்களால் கொடுக்கப்படும் சார்ஜைவிட சற்று குறைவாகவே செய்யப்படும். பரீக்ஷார்த்தமாய் இரண்டொரு ஆர்டர்கள் கொடுத்துப் பாருங்கள். மாதிரிக்கு இலவசமாய் அனுப்பப்படும்.

விலாசம்:- மேல் உலக சர்வீ கீழ் உலகம்.

குடியரசு 20.09.1931 நகைச்சுவை துணுக்கிலிருந்து....

- விடுதலை நாளேடு 21.2. 20

திருச்சி - திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

* நீட் தேர்வை ரத்து செய்க! தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக!

* ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக!

* சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடுக்கு வழி செய்க!

* குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேட்டைக் கை விடுக!

சென்னையில் மார்ச் 10ஆம் தேதி

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா

மார்ச் 23 ஆம் தேதி ‘நீட்' மற்றும் புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடெங்கும் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம்!

திருச்சி, பிப்.21 சென்னையில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளிட்ட 14 தீர்மானங்கள், திருச்சி பெரியார்  மாளிகை, அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில், (21.2.2020) திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1  இரங்கல் தீர்மானம்

இன்று (21.2.2020) திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட

இரங்கல் தீர்மானம்

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், திராவிட இயக்க ஆர்வலருமான ஜஸ்டிஸ் திரு.எஸ்.மோகன் (வயது 90, மறைவு 27.12.2019),

குஜராத் மாநில உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் (வயது 93, மறைவு 15.1.2020),

முதுபெரும் சுயமரியாதை வீரர் புரவலர் மதுரை ஆசிரியர் இராமசாமி (வயது 85, மறைவு 21.1.2020 - உடற்கொடை)

கோவை பாரதியார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர் கே.மாரிமுத்து (வயது 92, மறைவு 28.1.2020)

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நெல்லை தோப்பில் முகமது மீரான் (வயது 74, மறைவு 10.5.2019),

சுயமரியாதை வீரர், மேனாள் மக்களவை உறுப்பினர் கோவை மு.இராமநாதன் (வயது 87, மறைவு 9.5.2019), சென்னை மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளரும், மேனாள் மேலவை உறுப்பி னருமான ஆர்.டி.சீதாபதி  (வயது 82, மறைவு 21.5.2019), புதுச்சேரி திராவிடப் பேரவை நிறுவனர் ‘மிசா' நந்திவர்மன் (30.5.2019), திராவிட இயக்க எழுத்தாளர் ஆங்கில நூல்களின் படைப்பாளர் பேராசிரியர் அ.அய்யாசாமி (வயது 78, மறைவு 16.6.2019), திருமருகல் ஒன்றிய மேனாள் பெருந்தலை வர் சுயமரியாதை வீரர் சற்குணம் (வயது 91, மறைவு 30.6.2019), பகுத்தறிவுப் பாவலர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 6.11.2029 - உடற்கொடை), சிகாகோ தமிழ் ஆர்வலர் புரவலர் ராம்மோகன் (மறைவு, 12.12.2019), மலேசிய திராவிடர் கழகத் தோழர் மோகன் இராமசாமி (வயது 45, மறைவு 28.12.2019),

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங் களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள் அவர்க ளின் வாழ்விணையரும், சுயமரியாதைச் சுடரொளி யுமான இரா.சின்னப்பன் (வயது 71, மறைவு 28.1.2020),

பிரபல அறுவை மருத்துவரும் அரசு மருத்து வர்கள் சங்கத் தலைவருமான டாக்டர் லட்சுமி நரசிம் மன் (வயது 51, மறைவு 7.2.2020) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இப்பொதுக்குழு தன் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்டம் உள்பட கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றவரும், இளைஞர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவருமான - கழகப் பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை

கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற் கொடை), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நூற்றாண்டைக் கடந்தும் வாழ்ந்த திருச்சி ஞான செபஸ்தியான் (வயது 101, மறைவு 4.6.2019), முது பெரும் பெரியார் பெருந்தொண்டர், மேனாள்  சிவகங்கை மாவட்டக் கழகத் தலைவர் பொறியாளர் சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் (வயது 90, மறைவு 6.6.2019), முதுபெரும் சுயமரியாதை வீராங் கனையும் எழுத்தாளர் ஓவியா அவர்களின் பாட்டியு மாகிய ஒரு நூற்றாண்டையும் கண்ட காந்திமதியம் மாள் (வயது 100, மறைவு 12.7.2019),

சுயமரியாதை இயக்க வீரர், பெரியார் பெருந் தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டினமூர்த்தி (வயது 84, மறைவு 19.8.2019 - உடற்கொடை), கழகச் செயல் வீரர் கபிஸ்தலம் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019), கழக வீராங்கனை - மகளிரணி செயற்பாட்டாளர் ஆசிரியர் பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை), திருச்சி மாவட்டக் கழக மேனாள் செயலாளரும், இயக்கச் செயல்வீரருமான ‘உண்மை' கிருஷ்ணன் (வயது 92, மறைவு 24.12.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஓடாக்கநல்லூர் தன.திருமலை (வயது 94, மறைவு 10.1.2020), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்புப் போராட்ட வீரர், செந்துறை கருத்தமணி என்ற நாராயணசாமி (வயது 96, மறைவு 24.7.2019),முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை கோ.அரங்கநாதன் (வயது 98, மறைவு 5.2.2020),

திருச்சி மேலகற்கண்டார்கோட்டை கழகத் தோழர் ஜோசப் செல்வராஜ் (வயது 44, மறைவு 26.4.2019), தூத்துக்குடி கழக மாவட்ட  மகளிரணி தலைவர் பெ.சாந்தி (வயது 53, மறைவு 1.5.2019 - உடற்கொடை), தூத்துக்குடி மாவட்ட புதூர் ஒன்றிய கழகத் தலைவர் சா.முத்துராஜ் (மறைவு 18.5.2019), கல்லக்குறிச்சி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.கண்ணன் (மறைவு 27.5.2019), பண்ருட்டி திருவதிகை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் து.செல்வராஜ் (வயது 78, மறைவு 31.5.2019), திருத்துறைப் பூண்டி கழக மாவட்டம் - விக்கிரபாண்டியம் கழகத் தலைவர் இரா.அழகேசன் (வயது 96, மறைவு 1.6.2019),

பிச்சாண்டார் கோவில் தோழர் செங்குளத்தான் (மறைவு, 20.6.2019), வேட்டவலம் பெரியார் பெருந்தொண்டர் ம.ஜெயராம் (வயது 82), ஆத்தூர் வாழப்பாடி பொறியாளர் பகுத்தறிவு (வயது 45, மறைவு 15.7.2019), பண்ருட்டி கோ.புஷ்பவல்லி (வயது 86, மறைவு 20.7.2019), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காஞ்சிபுரம் அ.கோவிந்தன் (வயது 97, மறைவு 6.8.2019), தஞ்சை மாவட்ட மேனாள் மாவட்டக் கழக இளைஞரணி தலைவர் நீடாமங்கலம் வழக்குரைஞர் வி.அருளரசன் (மறைவு 6.8.2019), திருவாரூர் மாவட்டக் கழக மேனாள் செயலாளர் கமலாபுரம் காமராஜ் (மறைவு 11.8.2019), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் லால்குடி ராஜா என்ற இன்னாசிமுத்து (வயது 93, மறைவு 11.8.2019), தஞ்சை பூதலூர் கழகத் தலைவர் சந்தானம் (வயது 96, மறைவு 31.8.2019), மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை கழக செயலாளர் முருகன் (வயது 69, மறைவு 29.8.2019), லால்குடி - மேலவாளாடி திராவிடர் கழக செயலாளர் க.மாரிமுத்து (வயது 73, மறைவு 17.9.2019),

கோவை மாவட்ட வெள்ளலூர் கழக செயலாளர் தி.க. மணி (மறைவு 30.9.2019), கரூர் மாவட்டக் கழக மகளிர்ப் பாசறை செயலாளர் ஜே.செயலட்சுமி (வயது 29, மறைவு 1.10.2019), புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி கழக செயலாளர் கருப்பையா (வயது 75, மறைவு 21.10.2019), திருவாரூர் கிடாரங்கொண்டான் கழகத் தலைவர் கண்ணையன் (வயது 62, மறைவு 14.10.2019), தஞ்சை மாவட்டம் உடையார் கோவில் கழகத் தலைவர் சா.புகழேந்தி (வயது 60, மறைவு 11.11.2019), கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடை மருதூர் ஒன்றியக் கழக வீரர் பிச்சைமுத்து (மறைவு 27.11.2019), ஆவடி திருமுல்லைவாயில் எஸ்.பால கிருஷ்ணன் (வயது 83, மறைவு 1.12.2019), தஞ்சை பூதலூர் கோவிலடி பெரியார் பெருந்தொண்டர் சவுந்தரராசன் (வயது 81, மறைவு 2.12.2019),

கும்பகோணம் கழக மாவட்ட மகளிரணி  அமை ப்பாளர் கலைச்செல்வி (வயது 60, மறைவு 4.12.2019), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எம்.சாகுல் அமீது (வயது 92), புதுச்சேரி பெரியார் பெருந்தொண்டர் சு.இளங்கோவன் (வயது 78, மறைவு 1.1.2020), தோழர் பெங்களூர் பாண்டியன், கழக செயல் வீரர் வாண்டையார் இருப்பு இராம கிருஷ்ணன் (மறைவு 30.1.2020), கந்தர்வக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கோமாபுரம் இ.முரு கையா (மறைவு 30.1.2020), வடலூர் கழக வீரர் துரை.ஞானசேகரன் (மறைவு 13.5.2019 - உடற்கொடை),

வேலூர் மாவட்டம் - திருவலம் பெரியார் பெருந் தொண்டர் ‘தொண்டறச் செம்மல்' சி.எம்.சி.ராஜா (வயது 94, மறைவு 9.2.2020)

ஆகிய இயக்க வீரர்கள், வீராங்கனைகளின் மறைவுக்கு இப்பொதுக்குழு இரங்கலைத் தெரிவிப் பதுடன், அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆறுதலையும் தெரிவித்து, அப்பெருமக் களின் அளப்பரியா, ஈடு இணையற்ற கழகப் பெருந் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.

தீர்மானம் எண்: 2

அன்னை மணியம்மையாருக்கு

நூற்றாண்டு நிறைவு விழா நடத்துதல்

தந்தை பெரியார் அவர்களுக்குச் செயலாளராகவும், தாயாகவும், செவிலியராகவும் இருந்தவரும், அவர்களின் ஆயுள் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், கல்வி நிறுவனங்களையும் கட்டிக் காத்தவருமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை வரும் மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் வெகு சிறப்புடன் நடத்துவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2020 மே 16 ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை எழுச்சியுடன் நடத் துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 3

நீட் மற்றும் நெக்ஸ்ட் (NEXT)

தேர்வை நிரந்தரமாக நீக்குக!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொடங்கி சென்னை வரை தொடர்ந்து பதினொரு நாட்கள் தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய நீட் ரத்து, புதிய கல்விக் கொள்கையின் விபரீதம், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகளால் ஏற்படும் இடர்ப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விழிப் புணர்வுப் பயணம், கட்சிகளைக் கடந்து அனைத்து மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நீட் தேர்வின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பாதிப் பைப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அளவில் கொண்டு சேர்த்தது.

சமூகநீதி வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியான இந்தப் பரப்புரைப் பயணத்தினை மேற்கொண்ட கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், பயண ஏற்பாட்டாளர் களுக்கும், கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக் குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆதரவு அளித்த பொது மக்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்ளப்படுகிறது.

வட நாட்டில், நீட் தேர்வு என்பது கண் துடைப்புக்கான தேர்வு, மோசடி என்பதை வட நாட்டுச் செய்தித்தாள்களே அம்பலப்படுத்தி வருகின்றன.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடும் மசோதா குறித்து, மத்திய அரசின் கபட நாடகம் அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து இந்த நீட் தேர்வு மற்றும் மருத்துவர் தகுதிக்கான நெக்ஸ்ட் (NEXT) தேர்வையும் நிரந்தரமாக ஒழித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. நீட்டினால் ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் இருபால் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய புள்ளி விவரங் களே தெளிவாக உணர்த்துகின்றன. தனிப் பயிற்சி (Coaching) என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் இலட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். ஏழை எளிய மக்கள் அத்தகு பயிற்சிகளில் சேர முடியாத நிலை. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நீட்டைத் தொடர்வது கண்டனத்திற்குரியது - மாநில அரசும் இப்பிரச்சினையில் போதிய அக்கறை செலுத்தவில்லை. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும் என இப்பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது.

‘நீட்'டை முழுவதுமாக ரத்து செய்யக் கோரும் வகை யில் மத்திய அரசு அலுவலகங்களின்முன், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4

தேசிய கல்விக் கொள்கை வரைவு- 2019 - திரும்பப் பெறுக!

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய, இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரானதாகவும், சமஸ்கிருதமயமான கல்வியைத் திணிக்கக்கூடியதாகவும் முழுமையாக வணிக மயமாக்குகின்ற வகையிலும் வகை செய்யப் பட்டுள்ள இந்தப் புதிய தேசிய கல்விக் கொள்கை திரும்பப்பெறப்பட வேண்டும்.

இந்தியப் பன்முகப் பண்பாட்டிற்கு எதிரான இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, ஒற்றைக் கல்விமுறை, ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

1976இல் நெருக்கடி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் (State List) இருந்து ஒத்திசைவுப் பட்டி யலுக்கு (Concurrent  List)  கொண்டு செல்லப்பட்டது. இன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, கல்வியை முற்றிலும் மத்திய தொகுப்புக்கு மட்டும் உரியது போன்று தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது.

இந்தியா போன்ற பன்மொழி, பல இனம், பல கலாச்சாரம், பல மதங்கள் மாறுபட்ட இயற்கைச் சூழல்கள் கொண்ட நாட்டில், கல்விக் கொள்கை என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி சார்ந்த அறிவியலை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும் என்பதுதான் சரியானதாக இருக்க முடியும் என்பதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் அனைத்து மக்களுக்கும் உரிய முறையில் கொண்டு செல்வதற்கான நியாயத் தீர்வாக இருக்கும். இதற்கான முயற்சியை அனைத்துக் கட்சி களும் எடுத்திட வேண்டும் என்றும் நாடாளுமன்றம் வாயிலாகவும் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (அ)

உயர்ஜாதியினரில் பொருளாதார அடிப்படையில் நலிந்தோர்க்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான மோசடி

சமூக நீதிக் கோட்பாட்டையே கேலிக்கூத்தாக்கும் வகையில், மத்திய அரசு பார்ப்பன  உயர்ஜாதியினர்க்கு 10% இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி அதனை அனைத்து மத்திய அரசின் துறைகளிலும் அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் அனைத்துத் துறை சார்ந்த உயர் பதவிகளிலும் 75 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன-உயர்ஜாதி யினர்க்கு, மேலும் இடஒதுக்கீடு என்பது சட்ட விரோத மான சமூகநீதிக்கு விரோதமான, நியாய விரோதமான செயலேயாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு, பல அமைப்புகளால் தொடரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பினை விரைவில் வழங்கி, சமூக  நீதியைக் காத்திட வேண்டும் என பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், மாநில அரசுகளும் இந்த வகையில் வலியுறுத்த வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (ஆ)

யு.பி.எஸ்.சி., அய்.ஏ.எஸ். முதலிய  மத்திய அரசு தேர்வுகள் எழுதுவதற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக உயர்ஜாதி ஏழையினருக்கும்  வயது வரம்பு சலுகை என்கிற அளவுக்கு மத்திய பி.ஜே.பி. உயர் ஜாதியினர்மீது பெரும் அக்கறை கொண்டு மேலும் மேலும் சலுகைகள் அளிப்பதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இணையாக ஏற்கெனவே கல்வி, வேலை வாய்ப்புகளில் வளர்ந்த நிலையில் உள்ளவர்களை சமநிலையில் வைத்துப் பார்ப் பது சமூகநீதிக்கு எதிரானது என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதனைக் கைவிடுமாறு மத்திய அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 6

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினரின் கணக்குகள்தான் எடுக்கப் படும்; பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள ஜாதி வாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக் காட்டில் இடஒதுக்கீடு கேட்டு  வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் ஜாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர் களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் -உயர்ஜாதி அதிகார வர்க்கம் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

ஜாதியைப் பாதுகாக்கும் கொள்கையை அடிப்படை யாக ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கான உண்மைப்  புள்ளி விவரம் வெளியில் வராமலும் பார்த்துக் கொள்வது - அதன் கபடத்தனமான இரட்டை வேடத்தைத்தான் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுத்து, ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன் னிட்டும் தவிர்க்கக் கூடாது; ஜாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் பொதுக்குழு அனைத்துக் கட்சி களையும் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒடிசா மாநில அர சைப் போல, தமிழக அரசும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களின் சமூகம், கல்வி, பொருளாதார நிலையை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் நவம்பர் 2006 இல் மத்திய அரசிடம் அளித்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிக்கையின் பரிந்துரைகள், அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  எத னையும் இன்றுவரை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை விரைந்து நிறைவேற்றப் பட வேண்டும் எனஇப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8 (அ)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, திமுக ஆட்சி யில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லும் என்ற அடிப்படை யில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநில இடது சாரி அரசால் 60-க்கும் மேற்பட்ட கோவில் களில் அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர்களை நியமித்துள்ளது. தமிழ் நாட்டில் மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகராக பிற் படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.மாரிசாமி என்ற ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மேலும் 200-க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் உடனடியாக பணி நியமனம் செய்யு மாறு பொதுக்குழு தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அளிக்கப்பட்டு வந்த அர்ச்சகர் பயிற்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

தீர்மானம் எண்: 8 (ஆ)

பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் கூடாது என்ற அரசு ஆணை (நிலை) எண் 28 ஊரக வளர்ச்சி (மதிக) தெளிவாக இருந்தும் சில சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதமாகும். இதனைத் தடுத்து நிறுத்திட தமிழ்நாடு அரசை பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிடுக!

நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான் மையை தவறாகப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் (CAA), மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையை குழிதோண்டிப் புதைப் பதேயாகும். அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சி னையைத் திசைதிருப்பி, மக்களை மத ரீதியாக பிளவு படுத்தும் விபரீத செயலே என்று இப்பொதுக்குழு தெரிவிக்கிறது.

மேலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) என்பதும், அதில் பெற்றோரின் பிறந்த சான்றிதழ் உள் ளிட்ட பல்வேறு ஆவணங்களைக் கேட்பதும், அனைத்து மக்களையும் துன்புறுத்தும் அலைக்கழிக்கவும் செய்யும் நடைமுறை சாத்தியமில்லாத செயல்பாடே ஆகும்.

அனைத்துத் தரப்பு மக்களும், இதன் ஆபத்தை உணர்ந்து, மத்திய அரசு இம்மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்துவதை  அலட்சியப்படுத்தாமல், மக்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கும்வகையில், மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மக்கள் பதிவு ஆகியவற்றை உடனே திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 10

ஜாதி ஒழிப்பு - பாலியல் வன்கொடுமைத் தடுப்பு - சட்டங்கள் தேவை

ஜாதி ஆணவக் கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும் நாளும் பெருகி வருவது வெட்கக் கேடானதாகும். சுதந்திர நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, உண்மை சுதந்திரத்துக்கு எதிரான ஜாதிய கட்டமைப்பு காப்பாற்றப்படுவது வேத னைக்குரியதாகும். அதேபோல பாலின பாகுபாடும் சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் சகோதரத்துவத் துக்கும் முற்றும் எதிரானவையே!

இந்த நிலையில் ஜாதி ஒழிப்புக்கான சட்டங்களும் திட்டங்களும் மத்திய மாநில அரசுகளால் இயற்றப் படுவதோடுகூட, அவற்றைத் துல்லியமாக செயல்படுத் துவதுதான் சுதந்திர நாடு என்பதற்கான அடிப்படை அடையாளம் என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகவே தெரிவித்துக் கொள்கிறது.

அதுபோலவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோரை பெற்றோர்களே படுகொலை செய்வது என்பது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் குற்றமாகும்.

சுடுகாட்டிலும்கூட ஜாதி வேறுபாடு கண்டிப்பாக நீக்கப்படவேண்டும். கையால் மலம் அள்ளும் கொடுமை உடனடியாகத் தடுக்கப்டவேண்டும் என்றும் இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்கள் மீதான 576 வன்முறை வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலேயே நிலுவையில் உள்ளன. தமிழ் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகள் 14,545 நிலுவையில் உள்ளன. இதில் 1751 பாலியல் வல்லுறவு வழக்குகளுடன் 3181 பெண் களுக்குத் தொந்தரவு கொடுத்த வழக்குகளும் ஆகும்.

மாநிலக் குற்றவியல் பதிவுச் செயலகத்தின் பகுப் பாய்வுப் புள்ளி விவரம், தமிழ்நாட்டில் 82 விழுக்காடு பாலியல் குற்ற வழக்குகள் காவல்துறை மற்றும் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறது!

இந்தியக் குழந்தைகளில் 53.22 விழுக்காடு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், இதில் 21.09 விழுக்காடு குழந்தைகள் மிகவும் கொடூரமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர்களே இக்குற்றங்களில் ஈடுபடு கின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையங்கள் என்று இருந்தும், மகளிருக்கென்றே தனிக் காவல் நிலை யங்கள்கூட இருந்தும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்வது வெட்கக் கேடானது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகள் முடிக்கப் பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் கடினமான விதிகளை வகுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணமடைந்த நிர்பயா பெயரில் பெண்கள் வன்கொடுமையைத் தடுப்பதற்காக மத்திய அரசு ஓர் ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தும், அந்த நிதியைப் பெரும்பாலான மாநிலங்கள் தமிழ்நாடு உள்பட பயன்படுத்தவில்லை என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியதே. அந்நிதியைத் தக்க வகையில் பயன்படுத்திட முன்வர வேண்டும் என்று இப்பொதுக் குழு மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சிகளையும் துப் பாக்கிப் பயிற்சியையும் அளிப்பதற்கும் வகை செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

கல்வி, உத்தியோகங்களில் பெண்களுக்கு 50 விழுக் காடு இடங்கள் அளிக்கப்படுவதற்குத் தேவையான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அமைச்சரவையில் 75 பேர்களுள் பெண் களுக்கான எண்ணிக்கை வெறும் ஒன்பது பேர்கள் மட்டுமே. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றிட, தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ) இதனை நிறைவேற்றுவதில் காட்டும் தயக்கம், அதன் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

பெண்களின் 50 விழுக்காடு வாக்குகள் மட்டும் தேவை; அதே நேரத்தில் அவர்களுக்கான உரிமை களைப் பெற்றுத் தருவதில் தயக்கமும், தடங்கலும் செய்யும் அரசியலைப் புரிந்து கொண்டு, 50 விழுக்காடு இடங்கள் என்பதை முன்னிறுத்தி வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஆதரவு தருவது - வாக்களிப்பது என்ற முடிவை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் சமுகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 11

இரயில்வே துறையில்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ளன. ரூ.15,000 கோடி அளவுக்கான திட்டங்கள் இவை.

2019 செப்டம்பரில் தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் தென்னக இரயில்வே மேலாளரைச் சந்தித்து தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரில் வைத்தனர்.

ஆனால், நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில்  வெறும் பத்தாயிரம் ரூபாயை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கேலிக்குரியதாக ஆக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.

மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை உடனடியாக செயல்படுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத் துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியக் கவனம் செலுத்துமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12

இணைய வழி சூதாட்டம் என்னும்

பேராபத்தினைத் தடுத்து நிறுத்துக!

ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையவழி சூதாட்டம்  விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்; இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழி கின்றன.  நாட்டு மக்களை சீரழிக்கும் வகையில், பல்வேறு வடிவங்களில் ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது இணையவழி சூதாட்டங்கள் மக்களின் பணத்தை மட்டுமின்றி, நிம்மதியையும் பறிக்கின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றனவோ, அதே அளவுக்கு பாதகத்தையும் ஏற்படுத்துகின்றன என்பதற்கு சிறந்த உதாரணம் இணையவழி சூதாட்ட மாகும். முகநூல் தொடங்கி செய்தி இணையதளங்கள் வரை எதைத் திறந்தாலும், அதில் வாசகர்களை கவரும் வகையில் பெரிய அளவில் தெரியும் விளம்பரங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களாகவே உள் ளன. அத்துடன், ஆன்லைன் சூதாட்டத்தில் பங் கேற்க விரும்புபவர்கள் அதற்காக எவ்வளவு தொகையை செலுத்தினாலும் சூதாட்ட நிறுவனத்தின் சார்பில் அதிகபட்சமாக ரூ.1500 வரை போனஸ் வழங்கப்படும் என்றும், அதைக்கொண்டு அதிக நேரம் விளையாடலாம்; அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரத்தில் வலை விரிக்கப்படுகிறது.

இதற்கு மயங்கி, ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை விளையாடத் தொடங்குபவர்கள், தங்களின் பணத்தையும் இழந்து, சூதாட்டத்திற்கு அடிமையாகின்றனர். கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. நவீன செல்போன்களின் வருகையால் பாமரர்கூட  இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் சிக்கிவருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணப் பரிமாற்றம் இணையதளம் மூலமாகவே நடக்கிறது என்பதால், எவ்வளவு பணத்தை இழந்தோம் என்ற நினைவு கூட இல்லாமல் இளைஞர்கள் தொடர்ந்து விளையாடி அரும்பாடுபட்டு ஈட்டிய வருமானத்தை இழந்து விட்டு தவிக்கின்றனர்.

பிரபலமடைந்து வரும் ஆன்லைன் ரம்மி இணையத்தில் நஞ்சு போன்று பரவி லட்சக்கணக் கானவர்களை பாதிக்கும் ஆபத்து உள்ளது. ஒருமுறை இதில் விளையாட ஆரம்பித்துவிட்டால், அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமாகும். கடந்த காலங்களில் தமிழகத்தில் பெருக்கெடுத்த பரிசுச் சீட்டுக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்தன. மக்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தமிழக அரசு அதற்குத் தடை விதித்தது.

தற்போது இணையவழி  சூதாட்டம் தமிழகத்தில்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

2018 ஆம் ஆண்டு சென்னை தியாகராயர் நகரில் ‘மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சூதாட்ட விடுதிகள் நடைபெறுவது குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ரம்மி ஆடுவதும் சூதாட்டம் தான் என்றும், இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால், அதை எதிர்த்து சூதாட்ட விடுதிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டி ஆன் லைன் ரம்மி நிறுவனங்கள் மனுத் தாக்கல் செய்தன. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று கூறி, தள்ளுபடி செய்து விட்டது. அத்தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் இல்லை என்று கூறி, பல நிறுவனங்கள் அதை நடத்தி வருகின்றன.

தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு பிரபல நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் இந்த விளையாட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்புடனே விளம்பரம் செய்யப்படுகிறது.

உண்மையில், சூதாட்ட விடுதிகளில் விளையாடப் படுவதைப் போன்றுதான் ஆன்லைனிலும் ரம்மி விளையாடப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்பவர்கள் தாங்கள் கட்டிய பணத்தை பெருமளவில் இழக்கிறார்கள்;  ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினை கள் ஏற்படக்கூடும் என்று இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

இந்த இணையவழி சூதாட்டம் காரணமாக சென்னை,  கோவை, பெங்களூரு, போபால், டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் 15 தற்கொலைகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

எனவே, இந்தச் சமூக அழிவு விஷ விளையாட்டைத் தடை செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13

‘ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரால் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிப்பதும், கிராமப்புற வளர்ச்சிகளில் கவனம் செலுத்தாமையும்!

‘ஸ்மார்ட் சிட்டி' என்று கூறி, ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கொட்டுவதும், அதேநேரத்தில், கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமையும் கண்டிக்கத்தக்கதாகும்.

நகரங்கள் என்றால் வருண தருமத்தில் பிராமணத்தன்மை கொண்டது போலும், கிராமப்புறங்கள் பஞ்சம, சூத்திர வருணத்தன்மை கொண்டதுபோலும் நிலவுவதை - தந்தை பெரியார் சுட்டிக்காட்டியதையும் இந்த இடத்தில் நினைவூட்டி, கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் ‘இஸ்கான்' அமைப்பு என்ற ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின்மூலமாக சென்னை மாநகரத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் காலை உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்பட இருப்பது - பார்ப்பனீய, இந்து, ஆர்.எஸ்.எஸ். கொள்கையே! உணவுப் பிரச்சினையில் மத நஞ்சைப் புகுத்துவதை ஏற்க முடியாது என்றும், இத்திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

உணவில் மத நஞ்சைப் புகுத்தும் இந்தத் திட்டத்தைக் கண்டித்தும், எதிர்த்தும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சென்னையில் வரும் 25.2.2020 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள்

கரவொலி எழுப்பி வரவேற்றனர்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை கழகத் தோழர்கள் எழுந்து நின்று உற்சாகத்தோடு கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். (21.2.2020)

- விடுதலை நாளேடு 21.2. 20

சனி, 22 பிப்ரவரி, 2020

திராவிடம் வெல்லும் - ஆரியம் புதைக்குழி செல்லும்!

'துக்ளக்'க்குப் பதிலடி

திராவிடம் வெல்லும்  - ஆரியம் புதைக்குழி செல்லும்!

'நாங்கள் ராமரை நிர்வாணமாகப் போடவில்லை. அவருக்குச் செருப்பு மாலை போடவில்லை. யாரோ எங்களைப் பார்த்து வீசிய செருப்பை எடுத்துத்தான் உங்கள் ராமரை அடித்தோம். எனவே ரஜினி கூறியது பொய்; அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கூறுகிறார் தற்காலிக ராம பக்தரான கி. வீரமணி. சேலம் ஆபாச ஊர்வலம் பற்றிய செய்தியை 'துக்ளக்' வெளியிட்டது என்றுதானே கூறினார் ரஜினி. எனவே 'துக்ளக்' வெளியிட்ட செய்தி உண்மையா - பொய்யா என்பதுதானே பிரச்சினை. ரஜினி பொய் கூறுகிறார் என்று எப்படி சொல்ல முடியும்?' என்று திருவாளர் குருமூர்த்தி தன் பெயரிலே 'டியர் மிஸ்டர் வாசகரே' பகுதியில் எழுதியுள்ளார்.

ஓ, அப்படியா? ரஜினி பொய் சொல்லவில்லை, துக்ளக்தான் பொய்யாக எழுதியது என்கிறாரா

கு. அய்யர்?

அடேயப்பா, ரஜினியைப் பாதுகாக்க 'துக்ளக்'கையே பலி கடாவாக்கத் துணிந்து விட்டாரே குருமூர்த்தி.

'துக்ளக்' என்ன குருமூர்த்தியால் துவங்கப்பட்டதா? சோ மறைவிற்குப் பிறகு அவர் குடும்பத்திலிருந்து அபகரிக்கப்பட்டதுதானே.

ஆக ரஜினியை வைத்து ஆட்டம் போட 'சர்வ பரித்தியாகம்' செய்ய முடிவு செய்து விட்டது அக்கிரகாரம் - இதற்கு இன்னொரு  காரணம் உண்டு; ரஜினியின் வட்டாரமே அவாள்தானே!

கெட்டிக்காரன் புளுகுக்கே உச்ச வரம்பு எட்டு நாள். குருமூர்த்திகளுக்கு அவ்வளவு எல்லாம் தேவைப்படாது. 'துக்ளக்' இதழுக்குள்ளேயே அவரின் மூக்கை உடைக்க ஆள் இருக்கிறார் என்பதுதான் அந்தத் தமாஷ்.

'சோ' காலத்திலிருந்து  'துக்ளக்'கில் பணிபுரியும் தோழர் ரமேஷ் அளித்த ஒரு பேட்டியில் ராமன் சீதை படங்கள் நிர்வாணமாகக் கொண்டு வரப்பட்டது என்று 'துக்ளக்' வெளியிடவில்லை என்று கூறிவிட்டாரே!

அய்யோ, பாவம் குருமூர்த்திகள் - உரலுக்கு ஒரு பக்கம் இடி - இவாளுக்கு இரு பக்கமும் இடி! இடி!!

மீண்டும் சொல்லுகிறோம் - இராமன் சீதை படங்கள் நிர்வாணமாகக் கொண்டு வரப்படவில்லை; செருப்பு மாலை போட்டுக் கொண்டு  வரப்படவுமில்லை. தந்தை பெரியாரோ, வீரமணியோ செருப்பாலடிக்கவில்லை என்பதைத் திரும்பத் திரும்ப உண்மையையே தான் கூறி வருகிறோம்.

செருப்பாலடிக்க அஞ்சியோ - தயங்கியோ, குருமூர்த்தி எழுதுவதுபோல ராமன்மீது பக்தியோ அல்ல - அந்த ஊர்வலத்தில் அந்தத் திட்டமும் கிடையாது. அந்த ஊர்வலத்தில் நடக்காததை நடந்ததாகக் கூறும் போது அந்த பூணூல்தனங்களை தோலுரித்துக் காட்டுவதுதான் எங்கள் நோக்கம்.

இன்னொன்றுக்கு இந்தக் கூட்டத்திடமிருந்து பதில் இல்லை; நாங்கள் திரும்பத் திரும்பக் கூறும் அந்த முக்கிய தகவல் பக்கம் தலை வைத்துப் படுக்காமல்  இந்தக் கூட்டம் துண்டைக் காணோம் - துணியைக் காணோம் என்று ஓட்டம் பிடிப்பது ஏன்?

சேலம் ஊர்வலத்தை எதிர்த்துக் கருப்புக் கொடி காட்ட வந்த ஜனசங்கத்தினர் ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்ட பெரியாரை நோக்கி செருப்பை வீசியதுபற்றிய அந்தத் தகவல்தான் அது.

'துக்ளக்கும் சரி, துக்ளக் என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ரஜினியும் சரி, செய்தியாளர்கள் எழுப்பிய அதுபற்றிய கேள்விக்கு பதில் சொல்லும் நாணயம் இல்லாமல், விழுந்தடித்து ஓடியது ஏன்?

செய்தியாளர்கள் சந்திப்பு என்ற நிலையில் பொய் யான தகவலை மட்டும் கூறிவிட்டு, செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பை புறந்தள்ளி, அவசர அவசரமாக வீட்டுக்குள் ரஜினி ஓடிப் பதுங்குவானேன்!

சேலம் நிகழ்வு சம்பந்தமாக அவாளுக்குள்ளேயே முரண்பாடுகள் முண்டா தட்டுகின்றன. 'விஜயபாரதம்' எனும் ஆர்.எஸ்.எஸ். இதழில் (31.1.2020). எஸ்.ஆர். சேகர் என்பவர் எழுதிய கட்டுரையில், ஜனசங்கத்தினர் அரசு அனுமதி பெறாமல் கருப்புக் கொடி காட்டியதாக எழுதி யுள்ளார். அவருடைய மொழியிலேயே கூற வேண்டுமா னால் அசல் ஜமக்காளத்திலேயே வடி கட்டிய பொய் இது.

கலைஞர் அரசு அனுமதி அளித்துதான் - அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. காவல்துறை அனுமதி மறுத்து இருந்தால் ஜனசங்கத்தினரை ஆங்கே, கருப்புக் கொடி யுடன் கூட அனுமதித்து இருப்பார்களா!? ஆளைக் கண்டவுடன்  'அலேக்காக'த்  தூக்கிச் சென்று இருக்க மாட்டார்களா?

கருப்புக் கொடி காட்ட பெருந்தன்மையாக முதல் அமைச்சர் கலைஞர் அரசு அளித்த அனுமதியைக் கூட இருட்டடிப்பது - உண்மையை மாற்றி எழுதுவது எதைக் காட்டுகிறது? ஒரு சின்ன விஷயத்தில்கூட அவாளுக்கு இருக்கும் துவேஷமும், ஆத்திரமும், காழ்ப்பும் எந்த அளவுக்குத் திமிரி நிற்கிறது என்பதற்கான அடையாள மாகும்.

'துக்ளக்'கில் சத்தியமாக, சத்தியம் பேசுவதில்லை என்ற முடிவுடன் 'சத்யா' என்ற பெயரில் ஒருவர் கட்டுரை தீட்டியுள்ளார்.

இதோ அவர் எழுதுகிறார்:

"போதாக் குறைக்கு  வீரமணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில், பெரியார் ராமனைச் செருப்பால் அடிப்ப தற்கு முன்பு  தி.மு.க. 138 இடங்களில் வெற்றி பெற்றது.  செருப்பால்  அடித்த பிறகு 183 இடங்களில் வெற்றி பெற்றது என்று பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் 'இப்போதா பெரியார் இப்படிச் செய்கிறார்? முப்பது ஆண்டுகளாக இதைத்தானே செய்கிறார்?' என்று அப்போதைய பிரதமர் இந்திரா கூறியதையும்  நினைவு கூர்கிறார்; செருப்பால் அடிக்கப்பட்டது என்று வீரமணி கூறியது பொய்யா? செருப்பால் அடிக்கவே இல்லை என்று சில தி.க.வினர் இப்பொழுது  மறுப்பது பொய்யா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்" என்று எழுதப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

"பெரியார் ராமனைச் செருப்பால் அடிப்பதற்கு முன்பு'  என்று விஷமம் செய்கிறதே -  பெரியார் ராமனை செருப்பால் அடித்ததாக வீரமணி  எங்கே சொன்னார்"

இந்த விஷமத்துக்கு பெயர்தான் பூணூல் புத்தி என்று பொருள் ('சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டா லும் பார்ப்பனன் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள் ளவே மாட்டான்' என்ற டாக்டர் டி.எம். நாயரின் பொருள் பொதிந்தபொன்மொழியை இந்த இடத்தில் நினைவு கூர்க!)

அடுத்த வரியைக் கவனியுங்கள் - அதைவிட அபத்தம் - 'அக்மார்க்' பொய் மூட்டை!

செருப்பால் அடிக்கப்பட்டது என்று வீரமணி கூறியது பொய்யா. செருப்பால் அடிக்கவே இல்லை என்று சில தி.க.வினர் இப்போது மறுப்பது பொய்யா என்பதைக் கவனிக்க வேண்டும் அவர்கள்தான்  இதை விளக்க வேண்டும் என்று எழுதுகிறார் தோழர் சத்யா.

செருப்பால் அடிக்கவே இல்லை என்று திக.வினர் எங்கேயும் சொல்லாத ஒன்றை சொன்னதாக, தாங்களா கவே இட்டுக் கட்டிச் சொல்லுவது ஆரோக்கியமானது தானா -  வேண்டுமானால் அற்பத்தனம் என்று கூறலாம்.

பெரியார்மீது வீசப்பட்ட செருப்பு - ராமன்மீது திரும்பியது என்பதே உண்மை.

அடுத்த பகுதி அதைவிட முக்கியமானது.  அவாளின் முழு உருவமும் - அறிவுச் சூன்யமும் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதைத்  தெரிந்து கொள்ள வேண்டாமா?

"பொதுவாக நம் நாட்டில் சிறுபான்மையினர் மத அடிப்படையிலும், தீவிரப் பற்றுள்ள ஹிந்துக்கள் தவிர்த்த  மற்ற ஹிந்துக்கள், கட்சி அடிப்படையிலும்தான் வாக்களிக்கின்றனர். ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை எப்போதுமே பெரும்பாலான ஹிந்துக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை; அவற்றைக் கோமாளித்தன மாகக் கருதி அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர்.  அப்படி, சீரியஸாகக் கருதியிருந்தால் கருணாநிதியின் ஹிந்து விரோதப் பேச்சுகளுக்கு திமுக டெபாசிட்டே வாங்க முடியாத நிலை பல முறை தோன்றியிருக்கும். ஒருமுறை அப்படி நடந்திருந்தாலே கருணாநிதி அப் படிப் பேசுவதை நிறுத்தியிருப்பார்" - இதுவும் அவரேதான்.

இது உண்மையா? 'துக்ளக்'கும்,  'தினமணி'யும், 'இந்து'வும், 'இந்தியன் எக்ஸ்பிரசும்' செய்யாத பிரச் சாரமா? அதுவும் 'தினமணி'யில் சிவராமன் போடாத பெட்டிச் செய்தியா - வேண்டாத கடவுள்களா?

'சோ' ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்ய வில்லையா? முதிய வயதிலும் ராஜாஜி ஓடி ஓடிப் பிரச் சாரம் செய்யவில்லையா? இவற்றையெல்லாம் ஏன் மூடு திரை போட்டு மறைக்க வேண்டும்? தன்னை அறியா மலேயே ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டாரே!

இந்தப் பிரச்சாரம் எல்லாம் உண்மைதான். தமிழ் நாட்டு மக்கள் அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டு, பெரியார் பக்கமே நின்றனர். கலைஞர் பக்கமே நின்றனர் என்பதை 'துக்ளக்' ஒப்புக் கொண்டு விட்டதே!

ஹிந்துக்கள் சிரீயஸாக எடுத்துக் கொள்ளவில்லை யாம். உண்மைதான் - ஹிந்து என்பதன்  தத்துவமே பிறவியில் வருணபேதத்தைக் கருவாகக் கொண்டது. பார்ப்பான் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன்  - அவன் கடவுளுக்கு மேலே, பெரும்பாலான மக்கள் சூத்திரர்கள் - அதாவது வேசிமக்கள் என்று கூறுவது தான் ஹிந்து தத்துவம்!

இராமன் என்பவன் சூத்திரன் சம்பூகன் தவமிருந்த தற்காக அவனை வாளால் வெட்டிய கொலைகாரன் - வருண தர்மத்தைக் காப்பாற்றிட அவதாரம் எடுத்ததாகக் கூறுவதுதான் ஹிந்து மதம் என்ற தந்தை பெரியாரின் உண்மைப் பிரச்சாரத்தை உள்வாங்கிக் கொண்ட காரணத்தால் அவாளின் ஹிந்துப் பருப்பு வேகவில்லை, என்பது நினைவில் இருக்கட்டும் - இப்பொழுதும்கூட பிஜேபி இந்த 'ஹிந்து' விஷயத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு தமிழ்நாட்டில் கூவிக் கூவி விற்றாலும் போனியாகவில்லை என்பதும் நினைவில் இருக்கட்டும்.

ஹிந்து மதம் என்பது பார்ப்பனத் தன்மையானது  - அவாளின் ஆதிபத்தியத்தை மட்டுமே ஆழமாகக் கொண்டது என்று உணர்ந்ததாலும் 1971  சேலம் நிகழ்வை வைத்து ஆரியர் 'நிர்வாணமாக ஆட்டம் போட்டதாலும்' தானே  கடவுள் நம்பிக்கையாளரான தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்

"இன்றைய ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம் - உங்களுக்கு எது வேண்டும்?' என்று குறள் போல இரத்தினச் சுருக்கமாக அறிக்கையினை வெளியிட்டார்.

ஏதோ ஹிந்துக்கள் ஹிந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை  அப்படி சீரியஸாக  எடுத்திருக்கும் ஹிந்து  விரோதப் பேச்சுகளுக்கு திமுக டெபாசிட்டே வாங்க முடியாத நிலை பல முறை தோன்றி யிருக்கும் என்று சப்பைக் கட்டுக் கட்டுகிறார் 'துக்ளக்' எழுத்தாளர்.

ஹிந்து முழக்கம் எல்லாம் முழங்கிப் பார்த்து முற்றாகத் தோல்வியைக் கட்டிக் கொண்டு புரண்ட நிலையில் - அவாளின் மூதறிஞர் ராஜாஜி தேர்தல் முடிவில் என்ன எழுதினார்?

"இனி தமிழகம் ஆஸ்திகம் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்" என்று ராஜாஜி கையொப்பமிட்டுக் 'கல்கி'யில் (4.4.1971) எழுதினாரே? இதற்கு என்ன பதில் 'துக்ளக்'காரே?

ஹிந்து ஆஸ்திகம் தமிழ்நாட்டில் பெரியாரின் தத்துவக் கோட்பாடுகளுக்கு முன் மண்டியிட்டுத் தோற்று விட்டது என்று மண்டியிட்டு ஒப்புக் கொண்டதற்குப் பிறகு - குப்புற வீழ்ந்தாலும் பூணூலில் மண் ஒட்டவில்லை என்று எழுதுவது எல்லாம் அவாள் இன்னும் திருந்த வில்லை, ஆரிய மமதை அடங்கவில்லை; மேலும் மேலும் திராவிடத்தின் முன் ஆரியம் தோற்று, தோற்றுக் கொண்டே போய், புதை குழியில் வீழும் என்பதற்கான அடையாளம்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி மீது அந்தக் கூட்டம் ஆத்திர அனலைக் கக்குகிறது - இட்டுக் கட்டி எழுதுகிறது என்றால், அதற்குக் காரணம்  பெரியார் வழியில் அட்சரம் பிறழாமல் மானமிகு வீரமணி வீறு நடை போடுகிறார் என்பதற்கான நற்சான்றுகளே!

- விடுதலை நாளேடு, 3.2.20

"துக்ளக்கு"க்குப் பதிலடி - பின்வாங்கவில்லை கருஞ்சட்டை

அன்று 1971இல் சேலம் நிகழ்ச்சிகளை வெளியிட்ட துக்ளக்கை பறிமுதல் செய்ததன் மூலம் முதல் அமைச்சர் கலைஞர்   'துக்ளக்'கின் "சேல்ஸ் மேனேஜர்" ஆனார். (சோ கூறியதுதான்) இப்பொழுது ரஜினி விஷயத்தைப் பெரிதாக்கி யதன் மூலம் துக்ளக்குக்கு விற்பனை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக திருவாளர் குருமூர்த்தி அய்யர் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

திராவிடர் கழகத்துக்கும், திராவிடர் கழகத் தலைவருக்கும் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு 'துக்ளக்' பெரும்பாலான பக்கங்களை ஒதுக்கியுள்ளது.

அவர்கள் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் - ராமனுக்கு செருப்படி விழுந்ததை புதிய தலைமுறையினருக்கு நினைவூட்டி உற்சாகப்படுத்தியுள்ள துக்ளக்குக்கு "நன்றி" கூறுகிறோம்.

ஓ., ஓ., இராமனுக்கு செருப்படி விழுந்ததா? - இராமனின் அம்பறாத் தூளியில் இருந்த அம்புகள் எல்லாம் சுத்த கப்சாதானா என்று இத்தலைமுறை இளைஞர்களும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பினை துக்ளக் ஏற்படுத்தி விட்டது. பார்ப்பானுக்கு எப்பொழு துமே  முன் புத்தி கிடையாது என்று தந்தை பெரியார் மிகச் சரியாகத்தான் கூறியிருக்கிறார். (எப்பொழுதுமே அவர் கணிப்பு மிகத் துல்லியமாகத்தானிருக்கும்)

வரிந்து வரிந்து எழுதும் துக்ளக் ரஜினி சொன்ன ஒன்றை மூடி மறைப்பானேன்?

ராமன் - சீதா படங்களை நிர்வாணமாக எடுத்துச் சென்றார்கள் என்று சொல்லுவதன் உள்நோக்கம் என்ன? ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்களே தி.க.வினர் என்ற கெட்ட எண்ணத்தை உருவாக்குவது தானே இதன் நோக்கம்.

குருமூர்த்தி அய்யர்வாளிலிருந்து திருவாளர் நாராயணன் (மாலன்) வரை இந்த இடத்தில் நரிப் புத்தியோடு நடந்து கொள்வானேன்?

சீதை மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் சொன்ன ராமனின் ஆண் ஆதிக்கத் திமிரை அம்பலப்படுத்தியவர் பெரியார்.

இராமனை செருப்பால் அடிப்பது என்பது ஒரு சாதாரண செயல். அப்படி அடித்ததை ஒப்புக் கொள்ள வீரமணி தயங்குகிறார். நாங்கள் ராமனை செருப்பால் அடித்தால் என்ன தவறு என்று அல்லவா கேட்க வேண்டும் என்று ரொம்பவும் தான் 'துக்ளக்' ஆயாசப்படுகிறது.

அதன் ஆசை வீரமணி ராமனை செருப்பாலடிக்க வேண்டும் என்பதோ!

எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. எதைச் செய்வதாக இருந்தாலும் அதனை முன்கூட்டியே அறிவித்து விட்டுத்தான் செய்வோம்.

சேலம் ஊர்வலத்தில் ராமனை செருப்பாலடிப்பது என்பது எங்கள் திட்டத்தில் இல்லாத ஒன்று - ஜன சங்கத்தாரால் இன்றைய பிஜேபி., சங் பரிவாரின் பாட்டனால் வீசப்பட்ட செருப்பின் எதிர் வினைதான் அது - அதனை மூடி மறைப்பானேன்?

நாங்கள் திட்டமிடாத ஒன்றை அபாண்டமாக கூறுவது தவறு என்பதுதான் எங்கள் நிலைப்பாடே தவிர பின் வாங்கும் பேச்சுக்கே பெரியார் அகராதியில் இடமில்லை.

ஒரு பெரிய ஊர்வலத்தில் அதற்கு எதிர்ப்பாகக் கருப்புக் கொடி காட்டுவதற்கு பொதுவாக எந்த அரசும் அனுமதி கொடுப்பதில்லை.

முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் பெருந்தன் மையினால் எதிர்ப்பாளர்களுக்கும் அந்த உரிமை உண்டு என்ற ஜனநாயகப் முறைப்படி அனுமதி கொடுத்தார்.

ஆனால் அந்த மரியாதையை அவர்கள் காப்பாற்றிக் கொண்டார்களா?

அந்தக் கயமைத்தனத்தைக் கண்டித்து ஒரு வரி எழுத யோக்கிய பொறுப்பு இல்லாத 'துக்ளக்' கூட்டம் எதிர்வினையாக ராமன் படத்தின் மீது தொண்டர்கள் செருப்பாலடித்ததைப் பற்றி மட்டும் பெரிதுபடுத்து வானேன்?

'மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி' என்ற புத்தி அவர்களின் குருதியில் எப்பொழுதுமே குடி கொண்ட ஒன்றுதானே!

ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராயிருந்த போது பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்று முன்கூட்டியே  அறிவித்து குறிப்பிட்ட நாளிலே அதனை நடத்திக் காட்டியவர்கள் கருஞ்சட்டையினர் என்பது நினைவில் இருக்கட்டும்!

விக்னேஸ்வரர் - துயரம் இல்லாமலே காப்பாற்றக் கூடிய கடவுள் என்று 'பீலா' விடுகிறார்களே, கருஞ்சட் டையினரால் அந்த விக்னேஷ்வரன் உடைத்து நொறுக்கப்பட்ட போது  என்ன நடந்து விட்டது?

அது கூடப் பரவாயில்லை, காஞ்சீபுரத்தில் மச்சேஸ்வரர் கோயிலில் - தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கருவறையை கரு உண்டாக்கும் அறையாக மாற்றி காமக் களியாட்டம் நடத்தினானே, அதனை செல்போனில் படமாக எடுத்தும் உலாவ விட்டானே அந்த மச்சேஸ்வரன் என்ன செய்து கிழித்தான்?

ஓ, தேவநாதனாகிய இந்திரனின் கதைகளை எண்ணி மச்சேஸ்வரன் காவலாளியாக இருந்தானா?

சிறீவில்லிபுத்தூர் கோயிலில் பத்ரிநாத் என்னும் பார்ப்பான் கோயில் கருவறையை பள்ளியறையாக மாற்றினானே - அப்பொழுது அந்தக் கடவுள்தான் என்ன செய்துது?

கோயிலில் நடந்த இந்தக் காமக் குரூரங்கள் குறித்து கண்டித்து ஒரே ஒரு வரி சோ.ராமசாமியோ, மாலன் நாராயணன்களோ எழுதியதுண்டா?

குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் குடியிருப்பில் குருக்கள் பார்ப் பான் சந்திதேவ் வல்லப் அடித்த லூட்டி சந்தி சிரிக்க வில்லையா? வீடியோ காட்சிகளாக வெளிவந்தனவே - ஆகாயத்தை பிளந்து கட்டி எழுதும் இந்த பார்ப்பன ஏடுகள் மூச்சு விட்டதுண்டா?

ஏன்? அவை எல்லாம் அவாள் ஆத்து சமாச்சாரம். அப்படியே அமுக்கி விடுவார்கள் - காலமெல்லாம் அவாளுக்கே உரிய கைவந்த கலை- இந்த அமுக்கல்கள்!

பெரியாரைக் கை நீட்டிப் பேசும் யோக்கியதை இந்த நாட்டில் எவருக்கும் இல்லை என்கிற போது - இந்தப் பார்ப்பன குஞ்சுகளுக்கு அதற்கான அருகதை அறவே கிடையாது.

தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஒழுக்கத்தின் ஞான ஊற்றாக - பண்பாட்டின் பெட்டகமாக வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் எங்கே - இவர்கள் பெரியவாள் என்று ஊதிப் பெருக்கச் செய்யும் சங்கராச்சாரியார் எங்கே?

அனுராதா ரமணன் என்ற பெண் எழுத்தாளர் (பார்ப்பனப் பெண்மணிதான்) கண்ணீரும் கம்பலையுமாக தொலைக் காட்சியில் குமுறிக் குமுறி அழுது கூறினாரே - நினைவிருக்கிறதா?

மடத்தின் சார்பில் பத்திரிகை ஒன்று நடத்துவதற்காக தன்னை வரச் சொன்ன சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசிக் கொண்டு இருந்த போதே என் கையைப் பிடித்து இழுத்தார் என்று சொல்லவில்லையா?

இதில் என்ன வெட்கக்கேடு என்றால் பாதிக்கப்பட்ட  பெண்ணின் பக்கம் நின்று நியாயம் கேட்காமல், காம +கோடியின் பக்கம் நின்று அந்தப் பெண்ணின் மீது பழி சுமத்தவில்லையா இந்தக் குருமூர்த்தி?

சங்கரமடத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, பிறகு காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் - சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரர் பற்றி எழுதிக் குவித்த 'லீலா விநோதங்கள்' - கொஞ்சமா நஞ்சமா!

சங்கரராமன் ஒரு பட்டப்பகலில் வரதராஜ பெருமாள் கோயில்  சந்நிதியிலேயே வெட்டிக் கொல்லப்படவில்லையா? அந்தக் குற்றத்தின் தொடர்ச்சியில்  வேலூர் சிறையில் ஜெகத்குரு கம்பி எண்ணவில்லையா?

அப்பொழுதெல்லாம் இந்தத் துக்ளக்கோ, மாலன் களோ எங்கே போனார்கள்? மாறாக பெரியவாள் விஷயத்தில் அநீதி இழைத்து விட்டது அரசு என்று எழுதியவர்தானே திருவாளர் சோ.

தான் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடப் பெற்றால், தள்ளாத வயதிலும் காலுன்றி தன்னளவில் நிற்க முடியாத நிலையிலும் கூட,  இருபக்கங்களிலும் உள்ள தமது தொண்டர்களின் தோள்களில் கையைப் போட்டுக் கொண்டு, அந்த கடவுள் வாழ்த்துப் பாடல் முடியும் வரை நின்று கொண்டே இருக்கும் அவை நாகரிகத்தின் ஆசான் தந்தை பெரியார் எங்கே - தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த ஜெகத் குருக்கள் எங்கே?

பெரியாரைப் பற்றிப் பேசும்பொழுதோ, எழுதும்போதோ நிதானம் தேவை என்று ஒரு முறை ஜீவா சொன்னார், அந்த நிதானத்தை இந்தப் பூணூல் கூட்டத்திடம் எதிர் பார்க்க முடியுமா?

தந்தை பெரியாரைப் பின்பற்றும் இலட்சிய தோழர்களை 'துக்ளக்'  பெரியாரின் விசிறிகள் என்று எழுதுகிறது என்றால் இவர்களின் தரம் என்ன என்பது விளங்கும்.  ரஜினியின் விசிறியாகி விட்டவர்களின் புத்தி அப்படித்தான் மேயும்.

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கும் பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும், தங் களையே அர்ப்பணித்து கருப்பு மெழுகுவர்த்திகளாக பொது வாழ்வில் ஜொலிக்கும் கருஞ்சட்டை தொண்டர்களை பெரியாரின் விசிறிகள் என்று எழுது கின்ற 'துக்ளக்'குக்கு இன்னும் பதிலடிகள் உண்டு.

- விடுதலை நாளேடு 2.2. 20