வியாழன், 3 அக்டோபர், 2019

ஆயுத பூஜையும் அதன் வரலாறும் மக்கள் போற்றும் பவுத்த பண்டிகை நூலிலிருந்து

ஆயுதம் என்னும் சொல்லுக்கு எதிரிகளின் ஆயுளை (உயிரை) அழிக்கும் சாதனங்கள் என்று பொருள். ஆயுதத்திற்கும், கருவிக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல. தொழில் செய்யும் கருவிகளை வைத்து, வணங்கி பூஜை செய்வது தான் ஆயுத பூஜை என்பது உண்மையல்ல.

ஆயுத பூஜை உருவானதற்கு மிகப்பெரிய வரலாறே உள்ளது. மாமன்னன் அசோக மகா சக்கரவர்த்தி இந்தியாவை அரசாண்டு வந்த காலத்தில், கலிங்க நாட்டின் மீது போர் தொடுத்து பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொன்று குவித்தான். பல்லாயிரம் பேரை சிறைபிடித்தான். போரில் வெற்றி வாகை சூடினான். இதனை அறிந்த உபருப்தா என்னும் ஒரு புத்தஞானி அசோகரை சந்தித்து மன்னர் கலிங்கப்போரில் நீர் அடைந்தது தோல்வியே அதற்கு பெயர் வெற்றியல்ல என்று கூற, மாமன்னன் காரணம் கேட்டான்.

நீர் போரிட்ட போர்க்களத்தை மீண்டும் ஒருமுறை திரும்பிச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள் என்றுரைத்தார். போர்க்களத்தைச் சுற்றிப்பார்த்தான். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பிணமாகி கிடந்தனர். இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தான், கை, கால்களை இழந்து வெட்டுப்பட்டு, குத்துண்டு துடித்துத் தவிப்போரைக் கண்டான். போரில் மாய்ந்து போன வீரர்களின் மனைவிமார்கள். தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் முதலானோர் அழுது புலம்பி தவிப்பதையும் கண்ட மாமன்னன் மனம் நடுங்கினான்.

தோல்வியை ஒப்புக்கொண்ட அசோகனிடம் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இனிமேலாவது போர் செய்யும் செயலை அறவே விட்டுவிடு. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டு என்றுரைத்தார் புத்தஞானி. இரத்தக்கறைபடிந்த ஆயுதங்களை கழுவி தூய்மை செய்; இனி ஒருபோதும் ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு உயிரையும் கொல்லமாட்டேன், அவ்வாறு மற்றவர்கள் செய்யவும் அனுமதிக்க மாட்டேன், போர்தொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துகொள் என்று புத்தபிக்கு கேட்டுக்கொண்டார்,

ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் போர் ஆயுதங்களை கழுவி தூய்மைபடுத்தி அடுக்கி வைத்து அசோக மன்னன் போர் தொடுக்கமாட்டேன், எவ்வுயிரையும் கொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்துகொண்டு. புத்த பகவானை வணங்கி வழிபட்டான். அந்த நாளையே ஆயுத பூசை என்று கூறி விழாவாகக் கொண்டாடினான் அசோக மன்னன். ஆயுதம் களைதல் என்னும் பெயரால் ஆண்டுதோறும் ஆயுத பூசை கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரிய இந்து பார்ப்பனர்கள் இதனை பல்வேறு விதமான கதைகளாக திரித்து உண்மையை மறைத்தனர். நாமும் உண்மையை மறந்தோம், மறுத்தோம், இனியாவது நம் பாரம்பரியத்தினை நாம் அறிந்துகொள்வோம். நாம் புத்தனின் வம்சாவழி என்பதை உணர்ந்துகொள்வோம்.

தொகுப்பு : க.வசந்தமணி

அறிவுச்சுடர் கல்வி மய்யம் மொடையூர், செஞ்சி

 


- விடுதலல நாளேடு, 3.10.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக