தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2024

உச்சநீதிமன்றத்தின் இரு வேறு கருத்துகள் பற்றிய திராவிடர் கழகத் தலைவரின் முக்கிய அறிக்கை


Published October 22, 2024
விடுதலை நாளேடு

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள அடிக்கட்டுமான மதச் சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதைக் குறித்தும், கடவுளைக் கேட்டு தான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்புக் கூறினேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்து சட்டப்படி சரியானதல்ல – வருங்காலத்தில் கடும் விமர்சனத்துக்கு உரியது என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ள ‘மதச் சார்பின்மை‘ (Secular), ‘சமதர்மம்‘ (Socialist) போன்ற வார்த்தைகளை நீக்க வேண்டுமென்று சு.சாமி என்பவரும், மற்றிருவரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்து, ‘‘அச்சொற்கள் ஏற்கத்தக்கவையல்ல; காரணம் அரசியல் சட்டத் திருத்தத்தால் பிறகு சேர்க்கப்பட்ட சொற்கள்’’ என்ற அவர்களது வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்காமல் நிராகரித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின்
மதச் சார்பின்மை பற்றி

உச்சநீதிமன்றத்தின் உறுதியான தீர்ப்பு!

அரசியல் சட்ட உருவாக்கக் குழுவில் அதன் தலைவர் டாக்டர் அம்பேத்கர், அவ்வார்த்தை இடம் பெறாவிட்டாலும் இந்திய அரசியல் அமைப்பு மதச்சார்பற்ற ஒன்று என்று தெளிவாகவே கூறியுள்ள பிறகும் – இம்மாதிரி வழக்காடிகள் வருங்காலத்தில் வரக் கூடும் என்பதை எதிர்பார்த்தே – பிறகு 42ஆவது சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டது மட்டுமல்ல; முன்கூட்டியே அது இருந்ததற்கான சட்டத் தகுதியும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத் திருத்தங்கள் சுமார் 100க்கு மேல் வந்து நிறைவேற்றப்பட்டு அமலாகி வரும் நிலையில், அவைதானே இன்றும் இனியும் சட்டமாகக் கருதப்பட வேண்டியது என்பது அரசியல் சட்டத்தின் பாலபாடமல்லவா?

அது மட்டுமா? முகப்புரை என்பது நமது அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானம் (Basic Structure of the Constitution) என்று உச்சநீதிமன்றம் முந்தைய தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளது.

‘மதச்சார்பின்மையை நீக்கி விட்டு, இந்திய அரசியல் அமைப்பினை – ஒரு மதச்சார்பான இந்து நாடாக்க முயலும் பேர்வழிகளே இப்படி குறுக்கு வழியில் முயற்சி எடுக்கின்றனர். இதுபற்றி விரிவான விவாதம் அரசியல் சட்ட அமைப்புக் குழுவில் பல முறை நடந்துள்ளது.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வோர் ‘கடவுள்‘ பேரால் எடுப்பது போல, ‘உளப்பூர்வமாக‘ (Affirm) எடுத்துக் கொள்ளும் உரிமையும் தரப்பட்டிருப்பதே அதற்கு ஒரு கூடுதல் சான்றாகும்!

பன்மதங்கள், பல கலாச்சாரம் – பண்பாடுகள், பல மொழிகள், பல நாகரிகங்கள் உள்ள ஒரு பரந்து, விரிந்த நாட்டில் ‘‘ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’’ என்பதே – அரசியல் சட்ட முகப்புரையில் குறிப்பிட்டுள்ள Democratic Republic என்பவற்றின் முக்கிய நோக்கத்தினைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவது அல்லவா? இது யதேச்சதிகாரத்திற்கும் மற்ற மக்களின் ஒடுக்கு முறைக்கும் தானே வழி வகுக்கும் – மதச் சார்பு நாடுகளில் மற்ற சிறுபான்மையினரின் உரிமைகள் காணாமற் போய் தானே உள்ளது.

மதச் சார்பற்ற நாட்டிலேயே சிறுபான்மையினர் தங்களது வாழ்வுரிமையை பாதுகாக்கப் போராட வேண்டித் தானே உள்ளது? எனவே மதச்சார்பின்மை முக்கியம்!

அதுபோலவே சோஷலிசத்தை வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆக்கி விட்டனர். இப்படி ஓர் அம்சம் அரசின் அடிக்கட்டுமானமாக உள்ளபோதே இந்நிலை என்றால் அதையும் நீக்கி விட்டால் எத்தனைப் பேரவலம்!

ஹிந்துத்துவா பேசுவோர், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தானே, அம்பேத்கர் தலைமையில் இயற்றப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தகர்த்து விட்டு, எடுத்து எறிந்து விட்டு அந்த இடத்தில் மனுதர்மத்தை அமர வைக்கும் முயற்சியின் முன்னோட்டம் தான் இது என்பதை நாடும், உச்சநீதிமன்றமும் உணர்ந்து, தாங்கள் பிரமாணம் எடுத்த அரசியல் சட்டத்தை உருக்குலைக்க அனுமதிக்கக்கூடாது!

‘‘கடவுளைக் கேட்டுதான் பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வழங்கினேன்‘‘ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருப்பது சட்டப்படி சரியானதா?

அதே நேரத்தில் வழக்காடிகள் இப்படி அரசியல் சட்டத்தைச் செயலற்றதாக்க முயற்சிக்கும் நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் தலைமை நீதிபதி திடீரென்று ‘‘நான் பாபர் மசூதி வழக்கைத் தீர்க்க கடவுளிடம் கேட்டு, வேண்டியே அதன்படி தீர்ப்பு தந்துள்ளேன்’’ என்ற கருத்துப்படக் கூறியது எவ்வளவு விசித்திரமும், அரசியல் அடிக்கட்டுமானத்திற்கு விரோதமான நகை முரணும் என்பதை இன்று பல பேரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். பதவி ஓய்வு பெற்றுச் செல்லும் நிலையில் இப்படி ஒரு சார்பு நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல நடந்து கொள்ளுதல் சரியா? பிள்ளையார் சதுர்த்திக்கு டில்லியில் பிரதமர் மோடியைத் தமது வீட்டுக்கு அழைத்து பூஜையில் கலந்து கொள்ளச் செய்தது – மற்றபடி திருப்பதி, மதுரை மீனாட்சி கோயில்களுக்கு செல்வதெல்லாம் அவர்களது தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அவர்களது வழிபாட்டுரிமையில் நமக்கு ஆட்சேபனை இல்லை! –

ஆனால், அவர்களுக்கான அங்கே தரப்பட்ட வரவேற்பு, பாதுகாப்பு ஏற்பாடு எல்லாவற்றுக்கும் அவரது பதவிதானே காரணம் என்பது எதார்த்தம்.
பாபர் மசூதி – ராமர் கோயில் தீர்ப்பே ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு – லட்சக்கணக்கான வழக்குகள் தேக்கத்தில் இருக்க, அதற்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமை, காட்டப்பட்ட வேகம் எல்லாம் எதிர்காலத்திலும் கேள்விக்கும், பரிசீலனைக்கும் உள்ளாகாமல் இருக்க முடியாத ஒன்று.

நீதித்துறை வேலிகள் வேலிகளாக இருக்க வேண்டும். வேலிகள் பயிரைக் காப்பதற்கே – வேலிகள் பயிரை மேய்வதற்கு அல்ல என்பது மறுக்க முடியாத உண்மை!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
22.10.2024

ஞாயிறு, 28 ஜூலை, 2024

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

 

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

விடுதலை நாளேடு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூலை 26 சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி தொகை என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனம் ராயல்டி (உரிமைத் தொகை) வழங்கியது. ஆனால், அத்துடன் சேர்த்து தமிழ்நாடு அரசு ‘செஸ்’ வரியும் விதித்தது. இதையடுத்து, ‘சுரங்கங்கள், கனிம நிலங்கள்மீது வரி விதிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு விதித்த வரியை திரும்பப் பெற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. தங்கள் பகுதிக்கு உட்பட்ட கனிம நிலத்தைப் பயன்படுத்த வரி விதிக்கும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு, ‘சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது. மாநில அரசுகளுக்கு இல்லை. குத்தகை எடுப்பவர்கள்தரும் ராயல்டியை மட்டுமே மாநில அரசுகள் பெற முடியும். ராயல்டி என்பதே வரிதான்’ என்று தீர்ப்பு வழங்கியது.
ராயல்டி என்பது வரியா, குத்தகைக் கட்டணமா? கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசு களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வந்தது.

ஒன்றிய அரசும், பல்வேறு சுரங்க நிறுவனங்களும் மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி மனுக்களை தாக்கல் செய்தன.
இதுதொடர்பாக இதுவரை 80 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று (25.7.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுரங்கங்கள், குவாரிகளை உள்ள டக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) 1957 சட்டம் (எம்எம்டிஆர்) வரை யறுக்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்கீழ் சுரங்கங்கள், குவா ரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை மாநில சட்டப்பேரவைகள் பெறுகின்றன. எனவே, எம்எம்டிஆர் சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது.
‘மாநிலங்கள் பெறும் ராயல்டி என்பது வரிதான்’ என்று கடந்த 1989 இல் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புத் தவறானது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், மாநில அரசுகளுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகைக் கட்டணம்தான்.
இவ்வாறு தீர்ப்பில்கூறப்பட்டுள்ளது.

ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு
நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ‘சுரங்கங்கள், கனிம நிலங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை’ என்று அவர் தீர்ப்பளித்தார். பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பே இறுதி செய்யப்பட்டது.
இதுவரை கனிம நிலங்களை பயன்படுத்தியதற்கான வரி நிலுவையை மாநில அரசுகளுக்கு நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா அல்லது இனி வரும் நாட்களுக்குத்தான் இந்தத் தீர்ப்பு பொருந்துமா என்பது குறித்து வரும் 29 ஆம் தேதி விளக்கம் அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

(இதுபற்றிய ஆசிரியரின் அறிக்கை நாளைய ‘விடுதலை’யில் வெளிவரும்).

செவ்வாய், 7 மே, 2024

ஹிந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு




Published May 6, 2024, விடுதலை நாளேடு
♦ ஹிந்து மத சடங்குகளின்றி நடைபெறும் திருமணங்கள் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு – பழைய ஹிந்து லாவை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புப் போல உள்ளது!
♦ கன்னிகாதானம் – தாராமுகூர்த்தம், பாணிக்கிரஹணம் என்பதெல்லாம் 
பெண்ணை ஒரு திடப்பொருளாகக் கருதுவது ஆகாதா?
தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படிசுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல!
இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்!
தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ஹிந்து திருமணச் சடங்குகள் இல்லாமல் நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பழைய ‘ஹிந்துலா’வை உயிர்ப்பிக்கும் தீர்ப்புப்போல் உள்ளது. கன்னிகாதானம், தாராமுகூர்த்தங்களை இப்போது ஏற்றால், பெண்ணை ஒரு திடப் பொருளாகக் கருதுவதுதானே! தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு அளித்த நிலையில், இந்தத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல! இதன்மீது மறுசீராய்வு மனு போடுதல் அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:-
சில வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ஹிந்து திருமணம் செய்துகொண்ட சடங்குகள் இல்லாத திரு மணங்களை அங்கீகரிக்க முடியாது என்று விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் இரு நீதிபதிகள் – நீதிபதி பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி – ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள ஒரு தீர்ப்பு அதிர்ச்சிக் குரியதாக உள்ளது என்பதோடு, நமது அரசமைப்புச் சட்டத்தின் பல பகுதிகளில் அளித்துள்ள மானுட உரிமைகளுக்கும், மனிதநேயத்திற்கும் முரணாகவும் அமைந்துள்ளது என்பதை, எந்தவித உள்நோக்கமும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின்றி சுட்டிக்காட்ட வேண் டியது – 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையை உடைய ஒரு எளிய சமூக சேவைக்காரனின் – இன்றியமையாக் கடமையாகும்!
சடங்குகள் இல்லாமல் நடத்தப்படுவது 
திருமணம் இல்லையா?
‘‘திருமணமான ஓர் ஆணும் – பெண்ணும், கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்று, எதிர்காலத்தில் குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான உறவுக்கு அடித்தளமிடும் – ‘புனித’மான நாள் முழுவதும் கண்ணிய மான சமமான, ஆரோக்கியமான உறவில் நுழையும் நிகழ்ச்சி.
ஆனால், இந்த மனுதாரர்களைப்போல், இளைய தலைமுறையின் – ஹிந்து திருமணச் சட்டப்படி எவ்விதமான முறையான சடங்குகளும் இல்லாமல், ‘கணவன் – மனைவி’ அந்தஸ்தை நாங்கள் நிராகரிக் கிறோம். ஹிந்து திருமணத்தில் மணமகனும், மணமகளும் அக்னி முன்பு 7 அடிகள் சேர்ந்து நடந்து வரவேண்டும். ‘ரிக்’ வேதப்படி இதை சப்தபதிகள் என்று கூறுகிறார்கள்.”
‘‘நாம் நண்பர்களாகி விட்டோம்; இந்த நட்பிலிருந்து பிரியமாட்டேன்” என்று மணமகளிடம் மணமகன் கூறுவான்.
இந்த சடங்கு இல்லாமல் நடத்தப்படும் திருமணத்தை ஹிந்து திருமணமாகக் கருத முடியாது.
‘ரிக்’ வேதத்தில் 
‘ஹிந்து’ என்ற சொல் உண்டா?
ஹிந்து திருமண சட்டப்படி திருமணம் என்பது புனித மானது; புதிய குடும்பத்திற்கான அடித்தளம்;  எனவே, இத்தகைய சடங்குகள் இல்லாது நடத்தப்படும் திரு மணத்தை ஹிந்து திருமணமாக (ஹிந்துத் திருமணத்தின் 7 ஆவது பிரிவின்படி) கருதப்பட முடியாது.
திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஓர் ஆதாரமாகக் கருதப்படலாம்; ஆனால், சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்திற்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது.
ஹிந்து திருமண சட்டப்படி அதைத் திருமணமாகக் கருத முடியாது.”
– மேற்கண்ட தீர்ப்பில் பழைய ஹிந்து மத திரு மணங்கள் சம்பந்தப்பட்ட ‘ரிக்’ வேதத்தை மாண்புமிகு நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டுகிறதே, அதன்படியே சில நியாயமான கேள்விகளை முன்வைத்துத் தெளிவு பெறுவது நம் கடமையாகிறது!
1. ரிக்’ வேதத்தில் எங்காவது ‘ஹிந்து’ என்ற சொல் உண்டா?
2. ரிக் வேதத்தின் புருஷ சுத்தத்தில் ஜாதிமுறைப்படி உள்ளதில் பெண்களை ‘கீழுக்கும் கீழான’ ‘நமோ சூத்திரர்கள்’ என்றுதானே வகைப்படுத்தியுள்ளனர்.
ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்துக்கே இடமில்லையே!
சூத்திரர்கள் எப்படி வேதம் கற்க உரிமையற்ற வர்களோ, அதுபோல, பெண்களும் – ‘நமோ சூத்திரர் களான’படியால், வேதம் கற்க – உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்கூட, அவர்களுக்கும் உரிமையில்லையே!
இன்று அப்பிரிவிலிருந்து பெரும் படிப்பு, பெரும் நிலையில் உள்ள பெண்கள்கூட – வேத மதத்தின் இந்த விதிக்குப் புறம்பாகத்தானே படித்து உயர்ந்துள்ளார்கள்.
அப்படிப்பட்ட நிலையில், இந்த சடங்குகளின் தாத்பரியப்படி இன்று ‘சப்தபதி’ – ஏழு அடிகள் எடுத்து வைப்பது எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் எழுதியுள்ள விளக்கப்படி எழுதினால், அதை வேத சாஸ்திரங்களாக ஏற்க இன்றைய நிலையில் முடியுமா?
மனுஸ்மிருதிப்படி திருமணம் என்பது உயர்ஜாதியினருக்கு மட்டும்தானா?
மனுஸ்மிருதிப்படி திருமண முறை உயர்ஜாதி யினருக்கு மட்டுமே உள்ள உரிமை. அனைவருக்கும்  சம உரிமை என்பதே அதில் இல்லாதபோது – ‘சம உரிமை’ இரண்டு பேருக்கும் மணமகன் – மணமகளுக்கு சப்தபதி மூலம் ஏற்படும் என்பதே – வேதப்படி இல்லாத ஒன்று; கருத்து முரண் ஆகும்!
எட்டு வகை திருமணங்கள் என்று பிரிவுகளை மனுஸ்மிருதி கூறுகிறதே, அவற்றில் ‘சப்தபதி’ உண்டா?
பழைய ஹிந்து சட்டப்படி, ஹிந்து திருமணம் ஒரு புனிதக் கட்டு (Sacrament)  – விலக முடியாத ஒரு புனிதக் கட்டு.
ஹிந்து திருமணச் சட்டப்படி 
மணவிலக்குப் பெற சட்டத்தில் இடமுண்டா?
இப்போது ஹிந்து திருமணச் சட்டப்படி திருமணங்கள் செய்துகொள்ளும் மணமக்களுக்கும் ‘‘மணவிலக்கு” (Divorce) பெற சட்டம் அனுமதிக்கும் முறை, முன்பு கிடையாதே!
3. இப்போது புரோகித சடங்குகள் நடத்தப் பெறும் ‘‘விவாஹங்கள்” எப்படி தலைப்பிடப்படுகின்றன?
அதில் சமத்துவமோ, சம உரிமையோ உண்டா?
(மாண்பமை நீதிபதிகள் கவனத்திற்கு)
‘‘கன்னிஹாதானம்”
‘‘தாரா முகூர்த்தம்”
‘‘பாணிக்கிரஹணம்”
இவற்றில் பெண்களை – மணமகளை – ஒரு திடப் பொருளாகக் (Chattel) கருதி, தானமாக – தருமமாகத் தருவது என்றால், சம உரிமை எங்கே?
மணமகன் எஜமான்,
மணமகள் அடிமைதானே!
அது தாரைவார்த்தல் என்ற கைநழுவலில் போய்விடுவது.”
பழைய ‘ஹிந்துலா’வை உயிர்ப்பிக்கும்
தீர்ப்புப்போல் உள்ளது
இவற்றையெல்லாம் தாண்டி, வாழ்க்கையில் ஈடுபடு வோர் திருமணம் என்ற சடங்கில் ஈடுபடாது – ‘Living together’ என்று வாழுவது உள்பட, உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைப்படி உள்ள சமத்துவம், அடிப்படை கடமைகள் – 51-ஏ(எச்)) பிரிவுப்படி – அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்பது, சீர்திருத்தம் செய்தல் என்பதற்கும் முற்றிலும் எதிரானது அல்லவா!
பழைய ‘ஹிந்து லாவை’ உயிர்ப்பிக்கின்ற தீர்ப்புபோல உள்ளது என்பதாலும், தமிழ்நாடு அரசின் சட்டப் பிரிவுகள் 7-ஏ சட்டத் திருத்தப்படி, சுயமரியாதைத் திருமணம் உச்சநீதிமன்றத்தாலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ள நிலையில், இது ஏற்கத்தக்கதல்ல!
இதன்மீது  மறுசீராய்வு மனு போடுதல் அவசியம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6-5-2024 

புதன், 10 ஜனவரி, 2024

உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை!


WhatsApp-Image-2024-01-09-at-13.17.01-1

உச்சநீதிமன்றத்தின் இரு தீர்ப்புகள் வரவேற்கத்தக்கவை!
பில்கிஸ் பானு வழக்கிலும் – EWS வழக்கிலும்
பி.ஜே.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி!
‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றி மற்ற மற்ற மாநில அரசுகளும்
EWS சட்டத்தை ஒழித்துக்கட்டி சமூகநீதியைப் பாதுகாக்க முன்வரவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

உச்சநீதிமன்றம் நேற்று (8.1.2024) இரு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஒன்று பில்கிஸ் பானுவின் வழக்குமீதும், இரண்டாவது EWS சட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவேண்டும் என்று ஆணையிட முடியாது என்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் வரவேற்கத்தக்கது என்றும், தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றி, மற்ற மற்ற மாநில அரசுகளும் EWS -க்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

உச்சநீதிமன்றம் நேற்று (8.1.2024) அளித்த இரண்டு முக்கிய தீர்ப்புகள் என்பது அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை சரியாக அமலாக்கும் வரலாற்றுச் சிறப்புமிகுந்தவை ஆகும்!

பில்கிஸ் பானு வழக்கில் – உச்சநீதிமன்றம் பி.ஜே.பி. அரசுக்குக் கொடுத்த சாட்டை அடி!

ஒன்று, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேருக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து, இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்பது காவி பா.ஜ.க. ஆட்சிக்குக் கிடைத்த சாட்டையடியாகும்.

இரண்டாவது, EWS என்று கூறப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அசல் அநியாயமான ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டுமானத்தையே அடியோடு தகர்ப்ப தாகும். நாடாளுமன்ற ஜனநாயக உரிமைகளை சரிவர பயன்படுத்த வாய்ப்பளிக்காமல், ஒரே வாரத்தில் இரண்டு திருத்தங்கள், முதலில் அவசரக் கோல அபத்தம் – இரண்டாவது அந்தத் திருத்தத்திற்கு மற்றொரு திருத்தம் என்று முறையே 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், 105 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ற பெயரால், திணிக்கப்பட்டதே இந்த ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு!”

மற்ற இட ஒதுக்கீடுகளுக்கு Quantifiable Data உள்ளதா? என்று கேட்கும் உச்சநீதிமன்றம், இந்த 10 சத விகித EWS இட ஒதுக்கீட்டின் தேவைக்கு அந்தப்படி எந்தப் புள்ளிவிவரமும் இல்லாதபோதும், அதற்கு மட்டும் அதாவது உயர்ஜாதிக்கு இட ஒதுக்கீட்டில் மட்டும் அதை கேட்கவே இல்லை.
அப்படியும் 5 நீதிபதிகளில் 3 பேர் ஒரு நிலைப்பாடு, 2 பேர் மாறுபட்ட நிலைப்பாடு என்று எழுதியும் அதிலும் உயிர் கொடுக்கப்பட்டது!

பொருளாதார அடிப்படை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதே!

தொடக்கத்திலிருந்தே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது; அது அரசமைப்புச் சட்டத்திற்கும், அரசமைப்புச் சட்ட கர்த்தாக்களின் வரைவுக் குழு முடிவுக்கும், கருத்துக்கும் எதிரானது என்பதை நாம் விளக்கி, எம்.ஜி.ஆர். அரசின் 9 ஆயிரம் ரூபாய் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உச்சவரம்பு கொண்டு வரப்பட்டதை – மக்கள் போராட்டக் களத்திலும், தேர்தல் களத்திலும் தோற்கடித்து, அவரையே பின்வாங்க வைத்த வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு.
எனவே, தமிழ்நாடு அரசு ‘திராவிட மாடல்’ அரசு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கும் அரசு, அதை செயல்படுத்தாத நிலையில், அதனை செயல்படுத்த உத்தரவிடக் கோரி – பார்ப்பன சங்கத்தினர் பின்னணியில் ஒரு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு – நேற்று (8.1.2024) தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது!

மாநில அரசின் உரிமையில் குறுக்கிட முடியாது; மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெளிவாகக் கூறி, தள்ளுபடி செய்துவிட்டது!

மாநில அரசுக்குத்தான் உரிமை!

இட ஒதுக்கீடு என்பது மக்களை நேரடியாக ஆளும் ஆட்சி, மாநில அரசுகளின் ஆட்சிக்குத்தான் உண்டு. எனவேதான், மாநில அரசு பட்டியலில் தனித்தனியே ஆங்காங்குள்ள நிலைமைக்கு ஏற்ப அமைக்கப் பட்டுள்ளது! உதாரணம், தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடு – அதுவும் 9 ஆம் அட்டவணை பாதுகாப்புடன் கூடிய நிலையில்!

பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நீக்கப்பட மாநில அரசுகள் ஒன்றுபடவேண்டும்!

முன்பே கலைஞர் அரசு மற்றும் தொடர் அரசு அ.தி.மு.க.வாக இருந்தாலும் – ‘கிரிமிலேயர்’ என்ற பொருளாதார அடிப்படையை தமிழ்நாடு ஏற்றுக் கொண்டதே கிடையாது. எனவே, தமிழ்நாட்டின் இந்த முன்னுதாரணத்தை சமூகநீதிபற்றி பேசும் அனைத்துக் கட்சிகளும், மாநிலங்களும் தமிழ்நாடு தி.மு.க. அரசினைப்போல, நாள் ஒன்றுக்கு 2,222 ரூபாய் சம்பாதிக்கும், வருமான வரி கட்டும் உயர்ஜாதியில் ஏழைகள் என்று முத்திரை குத்தி, தனிச்சலுகையாக 10 சதவிகிதம் கொடுப்பதை உடனடியாக ரத்து செய்ய மாநில அரசுகள் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசினைப் பின்பற்றி, சமூகநீதிக்கு உரிய பாதுகாப்புத் தேடுவது அவசரம், அவசியம்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
9.1.2024 

திங்கள், 8 ஜனவரி, 2024

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு


வெள்ளி, 24 நவம்பர், 2023

அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ''அடக்கிவாசிக்க''வேண்டும்!


 உச்சநீதிமன்றத்தின் ஆணை - பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே!

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

2

அவரது அறிக்கை வருமாறு:

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பதுபோன்றது!

அடாவடியாக ஆளுநர்கள் சிலர் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, ஏதோ தங்களுக்கே தனி அதிகாரம் இருப்பதுபோல, எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவரும் போக்கினை எதிர்த்து, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன;  ஆளுநர்கள், உரிய சட்டப்பூர்வமான அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளும், தெளிவுரைகளும் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பது போன்று அமைந்துள்ளன.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் (தமிழ்நாட்டு தி.மு.க. அரசு உள்பட) பலருக்கு உரிய நியாயம் கிடைக்கும்;  அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் அவமதித்து திசை திருப்பும் திருகுதாள முறைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது தெளிவாகிறது!

அரசியல் அருவருப்பின் உச்சம்!

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே, அவர் ஏதோ ஆளுநர் ஆட்சி (Governor Rule -Article 356) நடைபெறுவதுபோல, அதீதமாக நடந்து கொள்வது அரசியல் அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

இதற்கு டில்லி ஒன்றிய ஆட்சியாளரின் ‘‘சமிக்ஞையும், கண் ஜாடையும்'', வெளிப்படையான ஆதரவுமே மூலகாரணம் என்பதை நாட்டில் உள்ள சாதாரண குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும்!

முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றிலேயே ஓர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களைப்போல் வெளிநடப்புச் செய்தது விவஸ்தையற்ற நடவடிக்கையே! அரசு - அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த தனது சட்டமன்ற உரையில், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர் களின் பெயரையே விட்டுவிட்டுப் படிப்பது - அதில் இல்லாததை இணைத்துச் சொல்வது போன்றவை ஜனநாயக மரபுக்கும், மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்களாகும்!

10 மசோதாக்களைக் காலவரையின்றிக்  கிடப்பில் போடுவது - அரசு நிர்வாகம் சீர்குலைவு அடையும் வகையில் அன்றாடம் ஓர் அரசின் மூலாதாரக் கொள் கைகளை எதிர்த்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது, குழந்தைத் திருமணங்களை ஆதரித்து, ஊக்குவிப்பது போல, குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் சில நிகழ்வுகளில் நடந்துகொள்வது போன்ற பலவற்றையும் செய்தார்.

ஆளுநர்களின் அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் (கிடப்பில் போட்ட மசோதாக்கள் மற்றும் பல கோப்புகள்பற்றி) என்ன செய்தார்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டகேள்வியும், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘‘அலங்கார பதவிதான் ஆளுநர் பதவியே தவிர, அவர்களுக்கென தனியே, பிரத்தியேக ஆளுமை செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பதவி அது அல்ல'' என்பதையும், ‘‘சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது'' என்று ஓங்கியடித்துக் கூறியுள்ளது அவர்களது அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி யேயாகும்!

அரசமைப்புச் சட்டம்பற்றிய தெளிவுரையாகக் கொள்ளவேண்டிய ஓர் ஆவணமாகும் - சரியான சட்ட விளக்கமுமாகும்.

உடனடியாக ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியே ஆர்.என்.ரவிக்கு இல்லை!

இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent)  அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை.

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டு மல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத் துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகி விடக் கூடும்.

எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை''யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!

அனைத்து மாநில ஆளுநர்களும் இனி அடக்கிவாசிக்கவேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர் களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது!


ஆசிரியர் கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

24.11.2023


புதன், 23 ஆகஸ்ட், 2023

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை




 "ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்! திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது"

சிறப்புகள் பெரியார் - அண்ணா - கலைஞர் - ஸ்டாலின்  உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்துக்கே! 

1

"ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்!" "திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது" - சிறப்புகள் பெரியாருக்கே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

காங்கிரசில் இருந்த காலம் முதலே கோயில் நுழைவு - ஜாதி பேதமற்று அனைவரும் கருவறைக்குச் சென்று  வழிபடும் உரிமை ஆகியவற்றுக்காக குரல் கொடுத்தும், போராடியும் வந்த தந்தை பெரியார் 1969ஆம் ஆண்டு   அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் உரிமைப் போராட்டத்திற்கு மூல வித்தாக கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை பெரியார் திடலுக்கே நேரில் வந்து சந்தித்து, "அந்த அறப்போராட்டத்தைத் தள்ளி வையுங்கள்; அதற்குள் அதற்கு வழிவகுக்கும் வகையில் தனிச் சட்டமே நிறைவேற்றித் தங்களது ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசே  நடைமுறைக்குக் கொண்டு வரும் - இது உறுதி" என்றார்!

2

அதன்படியே தனித்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்கள் - 1970இல்!

அதனை எதிர்த்து தமிழ்நாட்டுப் பார்ப்பன அர்ச்சகர்களும், சில மடாதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காமல், நேரே டில்லி உச்சநீதிமன்றத்தில் தனி வழக்குகளைத் தொடுத்தனர்.

திருவாளர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் பரிந்துரையை ஏற்று, அந்நாளைய பிரபல மூத்த வழக் குரைஞரான பல்கிவாலா அவர்களே வாதாடினார்.   கே.பராசரன் போன்ற பல மூத்த வழக்குரைஞர்களும் மனுதாரர்களுக்காக வாதாடினர்.

 ‘சேஷம்மாள் வழக்கு'

அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, ஏ.என்.குரோவர், ஏ.என்.ரே, டி.ஜி.பாலேக்கர், எம்.எச்.பெக் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இதனை விரிவாக விசாரித்தது! தீர்ப்பும் கூறியது. (ஜஸ்டீஸ் டி.ஜி. பாலேக்கர் - இவர் மராத்திய அர்ச்சகப் பார்ப்பனரின் மகன் என்பது ஒரு சுவையான தகவல்).

இந்த வழக்கை ‘சேஷம்மாள் வழக்கு' என்றே சுருக்கமாகச் சட்ட நிபுணர்கள் குறிப்பிடுவார்கள்.

இவ்வழக்கினை கலைஞர் தலைமையிலான தமிழ் நாடு தி.மு.க. அரசு  சிறப்பாக, திறம்பட மூத்த அரசு வழக்குரைஞர்களை வைத்து நடத்தியது.

தீர்ப்பில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டம் செல்லும் (செல்லாது என்றுதான் பார்ப்பனர்கள், அர்ச்சகர்கள் வாதாடினர்) என்றும், தமிழ்நாடு அரசின், பாரம்பரிய அர்ச்சகர் நியமன ஒழிப்புச் சட்டம் செல்லும் என்றும் கூறிவிட்டு, ஆனால் "அர்ச்சகர் ஆவதற்கு ஆகமங்களைப் படித்து தகுதி பெற்றவர் மட்டுமே அர்ச்சகராக நியமனம் பெற முடியும் - அரசமைப்புச் சட்ட 26ஆவது பிரிவின்படி 'மதவிஷயம்' அது" என அத்தீர்ப்பில் கூறினர். இதன்படி "தமிழ்நாடு அரசு விரும்பியபடி உடனடியாக  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆக முடியாது. ஆகமத் தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும்" என்ற ஒரு நிபந்தனைத் தடுப்பை ஏற்படுத்தியது அத்தீர்ப்பு!

இதைத்தான் அன்று 'விடுதலை' தலையங்கத்தில் "ஆபரேசன் வெற்றி; நோயாளி செத்தார்" என்ற சொற்றொடர் மூலம் விளக்கினோம்.

மறுபடி ஆட்சிகள் மாறின, இந்தப் போராட்டம் பல ஆண்டுகள், பல களங்களைச் சந்தித்தது.

முற்றுப் புள்ளி

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின்படியான நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின்  தீர்ப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வும் தள்ளுபடி செய்தது. அதன் மீதான மேல் முறையீட்டினை இந்திய உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு - நேற்று (22.8.2023) தள்ளுபடி செய்ததின் மூலம் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞர் அரசால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் செல்லு படியாகும் என்பது இரண்டாவது முறையாகவும் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு  உள்ளது.  


3

நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி...

அடக்கம் செய்யப்பட்டபோது தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தந்த துணிவுமிக்க கலைஞர் துயரத்துடன் கூறினார். "தந்தைக்கு அரசு மரியாதை கொடுத்தும், அவர் "நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி" - ஆதிதிராவிடர் உட்பட அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகும் ஜாதி ஒழிப்பு விருப்பத்தை நிறைவேற்றிட முடியவில்லையே" என்று குறிப்பிட்டார்!

மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் தலைமையில் ஓர் உயர் நிலைக்குழுவினை நியமித்து உரிய ஆகமப் பயிற்சிப் பள்ளியில் ஆகமக் கல்வியைக் கொடுத்து அர்ச்சகர் நியமனத்திற்கு வழி வகை செய்தார்.

அதை எதிர்த்தும் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

205 பேர் தகுதி பெற்றனர்

1972 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பல வழிகளை கவனத்தில் கொண்டே 2006இல் கலைஞர்  தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற் றப்பட்ட  புதிய சட்டப்படி  தனித்தனியே வைணவக் கோயில், சிவன் கோயில்களுக்கு ஏற்ப  அர்ச்சகர் பயிற் சிக்கென  69 சதவிகித இடஒதுக்கீட்டின்படி மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டு (அதில் சில பார்ப்பன மாணவர்களும் கூட உண்டு) 205 பேர் தகுதி பெற்றனர்!

ஆனால் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் -  இரு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், வெங்கட ரமணா ஆகியோரும் -  16.12.2015 அன்று, சேஷம்மாள் வழக்கில் வந்த தீர்ப்புப்படி, "ஆகமத் தகுதியின்படி எந்த ஜாதியினரானாலும் அர்ச்சகராக நியமிக்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு" என்று தீர்ப்புக் கூறிவிட்டு, இறுதிப் பாராவில், "தனிப்பட்ட முறையில் யாராவது பாதிக்கப்பட்டவர்களானால் அவர்கள் தனியே நீதிமன்றங்கள் மூலம் பரிகாரம் தேடிடலாம்" என்றும் கூறி ஒரு "சிறு சந்து" விட்டிருந்த நிலையைப் போன்ற வரிகள் அத்தீர்ப்பில் காணப்பட்டன.

சரித்திர நாயகருக்கு மக்கள் தந்த பெருமை!

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு 2021 - ஆகஸ்ட் 14ஆம் தேதி,  ஒப்பற்ற முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது ஆட்சி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிடும் வகையில், ஆகமப் பயிற்சி பெற்று 10 ஆண்டுகளாக காத்திருந்தோரில் சிலரை முதற் கட்டமாக நியமனம் செய்தது. அந்த வரலாறு காணாத சரித்திரச் சாதனை யினை நிகழ்த்தியவர், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் என்று மகிழ்ச்சிப் பேருவகையுடன் மக்கள் தந்த பெருமையைப் பெற்றார்!

ஆதிக்கச் சுவையை ஆயிரக்கணக்கான ஆண்டு களாய் அனுபவித்த ஆரியம் பொறுக்குமா? மீண்டும் ஆங்காங்குள்ள சில ஆரிய நச்சரவங்களின் மறைமுக உதவியோடு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்குப் படையெடுத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நியமனம் பற்றி புது வழக்கு -  "ஆகமப் பயிற்சி பெற்றவர் - ஜாதிக் கண்ணோட்டமின்றி, அர்ச்சகர் நியமனத் தகுதி உடை யவரே" என்று தீர்ப்பளித்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில் -  அவ் வழக்கினை அனுமதிக்காமலேயே அத்தீர்ப்பு சரியானதே என்று அதைத் தள்ளுபடி செய்து ஒரு முழு வட்டப் பயணத்தை உச்சநீதிமன்றம் - இதன் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து  விட்டது.

திருப்புமுனைத் தீர்ப்பு!

இதன்மூலம் - இப்போது

"ஆபரேஷனும் வெற்றி, 

நோயாளியும் பிழைத்தார்! 

எழுந்தார்! மகிழ்ந்தார்!" 

நமது முதல் அமைச்சரும், அவரது அரசும், இதற்கு முக்கிய காரணமாக அமைந்து 53 ஆண்டுகால சமூகப் போராட்டமான ஜாதி, தீண்டாமை ஒழிப்புப் போராட் டக் களத்தில் பெரு வெற்றி வாகை சூடியது வரலாற்றின் வைர வரிகளாகும்.  நியாயத் தராசினைச் சரியாகப் பிடித்த நீதிபதிகளும் - மக்களின் பாராட்டுக்கு உரிய வர்கள் - இது ஒரு திருப்பு முனைத் தீர்ப்பு! 

தொடரட்டும் ஒப்பற்ற முதலமைச்சரின் சரித்திர சாதனைகள்! எஞ்சிய நியமனங்கள் தொடரட்டும்; இடையில்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சக ராகும் வகையில் அர்ச்சகர் பயிற்சியும் தொடரட்டும்!

இதன் மூலம் பெரியார் வென்றார், அண்ணா வென்றார், கலைஞர் வென்றார், ஸ்டாலின் வென்றார், மக்கள் வென்றார்கள்! 

முதலமைச்சருக்கு நன்றி! நன்றி!!

திராவிடம் வெல்லும்!  நாளைய வரலாறு சொல்லும்!!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
23.8.2023


புதன், 9 மார்ச், 2022

கோகுல்ராஜ் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் வேறு ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் படுகொலை செய்யப்பட்ட வழக்கு

திங்கள், 24 ஜனவரி, 2022

அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு - தி.மு.க. முயற்சிக்கு வெற்றி!