வியாழன், 30 ஏப்ரல், 2020

புரட்சிக்களம் பாடிய கவிஞன்



வானின் வண்ணம் பாடிய கவிஞன் வாழ்வின் வசந்தம் பாடிய கவிஞன் அழகின் மயக்கம் பாடிய கவிஞன் அருவியின் அழகைப் பாடிய கவிஞன்
மலையின் சிகரம் பாடிய கவிஞன் கலையின் உணர்வைப் பாடிய கவிஞன் 
நிலத்தின் நிலையைப் பாடிய கவிஞன் 
நீரின் பெருமை பாடிய கவிஞன் கடலின் அலையைப் பாடிய கவிஞன் 
உடலின் தன்மை பாடிய கவிஞன் காதல் சுகத்தைப் பாடிய கவிஞன் காம சுரத்தைப் பாடிய கவிஞன் மலரின் மணத்தைப் பாடிய கவிஞன் 
மாந்தரின் மனதைப் பாடிய கவிஞன் 
இயற்கை எழிலைப் பாடிய கவிஞன் 
இல்லாத இறையைப் பாடிய கவிஞன் என்ற வகையில் எண்ணற்ற கவிஞருண்டு 
ஆனால் . . . 
அறிவின் ஆற்றலைப் பாடிய கவிஞன் 
அழியாக் கல்வியைப் பாடிய கவிஞன் 
பசியின் கொடுமையைப் பாடிய கவிஞன் 
பகுத்தறிவுக் கருத்தைப் பாடிய கவிஞன் 
ஜாதியை சாகடிக்கப் பாடிய கவிஞன் 
சமத்துவம் சமைக்கப் பாடிய கவிஞன் 
இசையின் இனிமையைப் பாடிய கவிஞன்
புரட்சிக் கனவைப் பாடிய கவிஞன் புரட்சிக் கருவைப் பாடிய கவிஞன் புரட்சியின் உருவைப் பாடிய கவிஞன் 
பாரதிதாசன் ஒருவன் மட்டுமே ! அதனால் பெரியார் அப்பெருங் கவிஞனை புரட்சிக் கவிஞர் என்றே அழைத்தார் அந்தக் கவிஞன் காண விரும்பிய புதியதோர் உலகம் படைப்போம் - கெட்டட் போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம் பேதமிலா அறிவுடைய அவ் வுலகிற்கு பேசு சுயமரியாதை உலகென்று பெயர் வைப்போம் வாழ்க புரட்சிக் கவிஞர் ! 

- அதிரடிக . அன்பழகன்

- விடுதலை நாளேடு, 29.4.20

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இந்தியா - ஹிந்து நாடல்ல - மதச்சார்பற்ற நாடு!- தீர்ப்பினை வரவேற்று - பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இந்தியா - ஹிந்து நாடல்ல - மதச்சார்பற்ற நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

தீர்ப்பினை வரவேற்று - பாராட்டி தமிழர் தலைவர்  ஆசிரியர்  அறிக்கை

ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது - இந்தியா ஓர் இந்து நாடல்ல என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றும் திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினை வரவேற்று, பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

அண்மைக் காலத்தில் வேடிக்கையான நாடகம் ஒன்று நம் நாட்டில் அரங்கேறி நடந்துகொண்டுள்ளது.

வெளிநாடுகளின் ஏடுகள் முதல்,

அரசர் குடும்பங்கள் வரை

பலரும் கண்டனம்

திடீரென்று ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி, பா.ஜ.க. போன்ற அமைப்புகளுக்கு இஸ்லாமியர்களான சிறுபான்மையினர்மீது பரிவும், பாசமும் பொத்துக் கொண்டு, பீறிட்டு அடிப்பதைப் போன்ற நாடகக் காட்சிகள் - பழைய கால நாடகங்களில் வரும் திடீர் ‘‘டர்னிங் சீன்களைப் போல'' - நடந்து வருவதன்பற்றிய பின்னணி - முக்கிய காரணம் கவனிக்கத்தக்கது. இங் குள்ள அந்த அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தேவை யின்றி சிறுபான்மைச் சமுதாய மக்களான இஸ்லாமி யர்கள்மீது- கரோனா தொற்று நோயை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி - டில்லியில் தப்ளிக் அமைப்பினர் நடத்திய மாநாடு - அதன் பிறகு அதில் கலந்து கொண்டோரால் நாடெங்கும் அதிகமாக பரவியது கரோனா என்ற ஒரு பிரச்சாரம், அதன் காரணமாக சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள்மீது வெறுப்பு நடவடிக்கைகளை ஏவுதல் முதல் வெளிநாடான அய்க்கிய அரபு நாட்டில் பரவிய கரோனாவையும் வைத்து,  ஒரு வெறுப்புப் பிரச்சார அலையை உருவாக்கி, சமூக வலை தளங்களில் பரவ விட்டதற்கு, அந்த நாடுகளின் ஏடுகள் முதல், அரசர் குடும்பங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தன. இதனால் இந்தியாவுடன் தாம் கொண்டுள்ள நல்லுறவுக்குக் கேடு ஏற்படக் கூடும் என்பதாக பதிவிட்டதன் விளைவு -  நமது பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் முதல்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரை பலரும் இதனைச் சமாளிக்க விளக்கங்கள் கொடுப்ப தோடு, இஸ்லாமியர்களை வேற்றுமைபடுத்திக் காட்டக் கூடாது என்பது போன்ற ஒரு புதிய நிலைப்பாடு - பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விநோதமான விளைவை உருவாக்கி, வெளிநாட் டிலும், உலகத் திலும் ஏற்பட்ட சரிவைத் தடுத்து நிறுத்த முயல்கின்றனர். (Damage Control Exercise).

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த நிலைப்பாடு இப்படி இருக்கையில், தமிழ்நாட்டில் உள்ள ஹிந்து முன்னணி என்ற அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஏழை இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சிக்காக 5,460 டன் பச்சரிசியை வழங்கக்கூடாது என்று - அதன் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் மூலம் பொதுநல வழக்கு ஒன்றை (PIL)  உயர்நீதி மன்றத்தில் போட்டுள்ளனர்.

இந்தப்படி ஆண்டுதோறும் அவர்களது விழா விற்கு ஏழை, எளியவர்களுக்கு உதவியாக முதல மைச்சராக ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்திலே இருந்து சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. அப்போதெல்லாம் வாய்மூடி மவுனியாக இருந்தவர்கள் இப்போது இப்படி ஒரு வல்லடி வழக்குப் போடுவது ஏன் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்குத் தெரியும் வகையில், இஸ்லாமிய வெறுப்புக் கூடாது என்று ஒருபுறத்தில் பிரச்சாரம் - இன்னொரு களத்தில் (தமிழ்நாடு) இப்படிப்பட்ட ஒரு வழக்கு என்றால், இது அசல் இரட்டை வேடம் அல்லவா?

இவர்களை - இவர்கள் இரட்டை நாக்கு - இரட்டைப் போக்குப் பேர்வழிகள் - எப்படிப்பட்ட சூழ்ச்சியாளர்கள் என்பதை இந்த வழக்கின்மூலம் உலகம் நன்கு புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது உறுதி.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரம் உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியம்!

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, ஹிந்து முன்னணி பதிவு செய்யப்பட்ட அமைப்பா? என்று கேட்ட கேள்விக்கு, வாதாடிய வழக்குரைஞர் சரியான பதிலை அளிக்க முடியாத நிலையில், தனி நபர் வழக்காக வாதாடப்பட்டது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை என்ற அடிப்படைக் கோட்பாட்டிற்கு முரணானது என்று கூறி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் கலாச்சாரம் உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியமானது - நாட்டை ஒன்றுபடுத்தும் தத்துவக் கோட்பாடு - பாதுகாப்பு என்பதை ‘‘பிரபுல்லா கொராடியா  க்ஷிs இந்திய யூனியன்'' என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழக்கொன்றின் (2011) தீர்ப்பை அடிப் படையாகக் கொண்டு, (அத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் - ஜஸ்டிஸ் மார்க்கண்டேய கட்ஜூ, ஜஸ்டிஸ் கியான் சுதா மிஸ்ரா ஆகிய இருவர்). சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.

ஹிந்து முன்னணியினரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது!

அத்தீர்ப்பில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு; அது ஒரு ஹிந்து நாடு அல்லவென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியதோடு, 1947 நாடு பிரிவினையின்போது அதனால்தான் நம் நாடு பல சோதனைகளையும் கூட நிதானத்துடன் தீர்க்க முடிந்தது என்று குறிப்பிட்டு, இலவசமாக இஸ்லாமி யர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கக் கூடாது என்ற ஹிந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று இந்தக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்துள்ளனர்.

(ஆங்கில ‘இந்து' நாளேடு 28.4.2020, பக்கம் 4 இல் வெளியிட்டுள்ள செய்தியைக் காண்க).

இத்தீர்ப்பை வரவேற்றுப் பாராட்டுகிறோம்!

ஹிந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய ‘‘வித்தைகளைப் புரிந்து'' - சரியான பார்வையோடு தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் - பெருமக்களின் இந்தத் தீர்ப்பு ஒரு கலங்கரை வெளிச்சமே!

இதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.4.2020


ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42% 21 வயதுமுதல் 40 வயதுள்ளோர்

இளைஞர்களே எச்சரிக்கையாக இருப்பீர்!

கரோனாவால் பாதிக்கப்படுவோரில் 42 சதவிகிதம் 21 வயது முதல் 40 வயதுள்ளோர் - இளைஞர்களே எச்சரிக் கையாக இருப்பீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வேண்டு கோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மத்திய நல்வாழ்வுத் துறையின்

புள்ளி விவரம்

மத்திய நல்வாழ்வுத் துறையின் கூட்டுச் செயலாளர் அகர்வால் பத்திரிகைகளிடம் கரோனா வைரஸ் (கோவிட் 19) இந்தியாவில் எப்படி, யாரை பாதிக்கிறது எந்த வயது அளவில் உள்ளவர்கள் என்பதுபற்றிய புள்ளி விவரங்களைத் தந்துள்ளார் - முதல் முறையாக!

இது மிகவும் அதிர்ச்சிக்குரியதாகவும், அதேநேரத்தில் வேதனைக்கும், விசனத் திற்கும் உரியதாகவும் உள்ளது!

இந்தியாவில் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் (Confirmed Positive for Covid-19) 42 சதவிகிதத்தினர் 21 வயதிலிருந்து 40 வயதுக்கு உட் பட்டவர்களேயாவார்கள்.

என்னே கொடுமை!

கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 17 சதவிகிதம் பேர்தான் 60 வயதுக்கு மேற் பட்ட வயது வரம்பு அடுக்கில்!

அமெரிக்காவோடு இதை ஒப்பிடும் போது, கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களில்  32 சதவிகிதம்தான் - 20 வயதுமுதல் 40 வயதுள்ளவர்கள்.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்

எண்ணிக்கை

இந்தியாவில், நம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளவர்கள் 2,904 பேர்.

75 மரணங்கள் நிகழ்ந்துள்ளன (சனிக் கிழமை நிலவரப்படி) தமிழ்நாட்டில் பலி எண்ணிக்கை 4 (இன்று காலை நிலவரப்படி).

மரணமடைந்தவர்களின் பட்டியலில் வயது பற்றிய தகவலை மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை பகுத்து அளிக்கவில்லை.

20 வயதுக்குக் கீழே கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 9 ஆகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆலோசனை அமைப்பு உடனடியாக வேகமான முறையில் Antibody  மற்றும் ரத்தப் பரிசோதனைகள் அடிப்படையில் வெளியிலிருந்து வந்தவர்களில் Evacuee Centres செய்யத் தொடங்கவேண்டும்.

இதன் பரிசோதனை முடிவு (Results) 15, 30 மணித் துளிகளில் தெரிந்துவிடும் என்றும் கூறியுள்ளது மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை.

அதிர்ச்சி தரும் தகவல்!

இப்போதுள்ள கரோனா நோயாளிகளில் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 40 வய துள்ள வர்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள்.

இளைஞர்களே,

வாலிபர்களே,

மிகவும் கவனமாக இதனைத் தடுக்க ஒத்துழையுங்கள்!

வயதானவர்களுக்குத்தான் வரும், நம்மை ஒன்றும் செய்யாது என்று நினைத்து ஊரடங்கை மீறி, வெளியே வருவது, இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி ‘ஜாலி ரைட்' - Adventure செய்யும் வீண் விபரீத வேலைகளில் ஈடுபடாதீர்கள்.

கரோனாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர். சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். உங்களை நம்பியுள்ள உங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் இவர் களைப்பற்றியெல்லாம் ஒருகணம் சிந்தி யுங்கள் - தன்னைக் காத்து, தான் சார்ந்த குடும்பத்தையும், சமூகத்தையும் கரோ னாவின் கோரப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

அலட்சியம் வேண்டாம்!

வாழ வேண்டியவர்கள் நீங்கள்!

இளைஞர்கள் -வாலிபர்கள் - சாதிக்க வேண்டியவர்கள் நீங்கள் என்பதை மறவாதீர் - பொறுப்போடு நடந்துகொள் ளுங்கள்!

தனிமை - தூய்மை -  கட்டுப்பாடு கடைபிடியுங்கள்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

5.4.2020

சனி, 4 ஏப்ரல், 2020

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது!

பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறுக!

உடனடித் திட்டம்: மருத்துவச் சேவைகள் - பொருளாதாரத் திட்டங்கள்பற்றி

ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம்!

பிரதமரின் தொலைக்காட்சி உரை ஏமாற்றம் அளிக்கிறது; பொருளாதார நிபுணர்கள் - மருத்துவப் பேரறிஞர்கள் - சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைப் பெறவேண்டும் என்றும், மருத்துவச் சேவைகள், பொருளாதாரத் திட்டங்கள்பற்றி ஆக்கப்பூர்வமாக அறிவிப்பதே இப்பொழுது முக்கியம் என்றும் மத்திய அரசுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று

இன்றைய நிலவரத்தில் நாடெங்கும் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்தபாடில்லை; கூடுதலாகி வருகிறது. ஒரு பகுதியினர் குணமாகி வீடு திரும்பும் செய்திதான் இந்தப் பாலைவனத்தில் காணும் ‘ஓயாசிஸ்' ஊற்று ஆகும்.

பிரதமரின் உரை - ஏமாற்றத்தையே தந்தது!

நேற்று (3.4.2020) பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றப் போகிறார் என்ற செய்தி வந்த வுடன், மாநில முதலமைச்சர்கள் முதல் கடைக்கோடி மக்கள்வரை மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தனர். அடுத்தகட்ட ஆக்கப்பூர்வ திட்டங்களின் - சிகிச்சைக்கு மருத்துவமனைகளின் விரிவாக்கம் - அதற் கேற்ப மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி உதவி, மத்திய அரசே ஆங்காங்கு தனது சுகாதாரத் துறை, அறிவியல் ஆய்வுத் துறை, தொழில்நுட்பத்துடன், நிதித்துறை மூலம் மக்களின் அல்லல் அவதிகளைப் போக்கும் வகையில் பல புதிய தெம்பூட்டும் அறிவிப்புகளை அறிவிப்பார் என்ற எதிர் பார்ப்பு ஏமாற்றத்தையே தந்தது.

நாட்டில் இருக்கும் 1.2 கோடி சிறு வியாபாரிகளின் மளிகைக் கடைகள் போன்றவற்றில், சுமார் ஒரு கோடி கடைகள் மூடப்பட்டுள்ளன. - ஊரடங்கு காரணமாக.

ஊரடங்கு தேவைதான்- எனினும், இப்படி அனைத்தும் மூடப்பட்டதால், வேலை கிட்டாது ஏற்படும் பொருளாதார இழப்பினால் பாதிக்கப்படுபவர்கள் சிறு தொழில் நடத்து பவர்கள்தான்.

அவர்களுக்குப் போதிய மாற்று புது நம்பிக்கை தரும் திட்டம் இல்லையே என்ற ஏமாற்றம் உள்ளது.

மாநில அரசுக்கு

நிதி வழங்குவதில்

முன்னுரிமை முக்கியம்!

மாநில அரசுகள்தான் உண்மையில் மக்களிடம் நேரடித் தொடர்புடைய அரசுகள்; மத்திய அரசின் திட்டங்கள் எவையாயினும் மாநில அரசின்மூலம்தான் செயல்படுத்த முடியும் என்பது யதார்த்தம். எனவே, மாநில அரசுகளுக்கு நிதியை வழங்குவதில் முன்னுரிமை காட்டுதல் முக்கியம்.

பழைய பாக்கி - நிலுவைகளை அளிப்பது, மதிப்புக் கூட்டு வரி சில மாதங்கள் தள்ளல், ஜி.எஸ்.டி. பாக்கி, கூடுதலாக கரோனா தடுப்பு - ஒழிப்பு தற்காலிக மருத்துவமனைகள் - சோதனை மய்யங்கள் உருவாக்குவது - மருத்துவ ஓய்வாளர்களை மீண்டும் பணியமர்த்தி, அடுத்த கட்டத்திற்குத் தயார் நிலை போன்ற திட்டங்கள் ‘போர்க்கால அடிப்படை' என்று உச்சரிக்கையில் நிதி ஆதாரங்களைப்பற்றி அறிவிப்பு வந்திருந்தால், புது நம்பிக்கையை அது பெருக்கியிருக்கும். வெறும் ஒலி, ஒளிக்காட்சிகளின்மூலம் நாடே ஒன்றுபட் டுள்ளது என்பதை நாளை (5.4.2020) 9

மணிக்கு 9  நிமிடங்கள் இருட்டில் ஒளி பாய்ச்சுதல் என்பது ஒரு நல்ல அடையாள மாகக் கூட இருக்கலாம். ஆனால், இது அறிவியல்பூர்வமானது அல்ல. ஆக்கப் பூர்வ எதிர்ப்பார்ப்புகளை அது எந்த அளவில் நிறைவேற்ற உதவும் என்ற கேள்வி பல பக்கங்களிலிருந்து கிளம்புகிறது!

உடனடித் திட்டங்கள் அவசியம்!

பொருளாதார நிபுணர்கள், மருத்துவத் துறை பேரறிஞர்கள், சிறந்த சிந்தனை யாளர்கள் - இவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைத்து-  உடனடித் திட்டம், நிவாரணம், தடுப்புக்கான சிகிச் சைகள் - கூடுதல் மருத்துவ சேவையாளர் கள் அணி ஆயத்தம் - நீண்டகால அடுத்த கட்ட பொருளாதார சிக்கல் தீர்வு - விவ சாயிகளின் வாழ்வாதாரம் - வேலை வாய்ப்பு - விலைவாசி உயர்வு - நிதி நிலைமைபற்றி ஆக்கபூர்வ ஆலோசனை களை மக்களுக்குத் அறிவிப்பதே அவசரத் தேவையாகும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.4.2020


வெள்ளி, 3 ஏப்ரல், 2020

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கவேண்டிய கடமையின் உச்சம்

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்ற தந்தை பெரியாரின் உயர்கருத்துகளை உள்வாங்கிச் செயல்படுவீர்!

சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது. கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத்தோடு ஒத்தறிவு கருதி, பெருந்தன்மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

கரோனாவின் கொடூரம் இன்னும் சில வாரங்களில் உச்சக்கட்டத்திற்குச் செல்லக் கூடும்; ஆதலால், மக்கள் மிகவும் எச்சரிக் கையாக இந்த கரோனா தொற்று பரவாம லிருக்க மிகமிக, மிகப் பாதுகாப்புடன் இருக்கவேண்டும்.

அது யார் கையில் இருக்கிறது? நம் கையில், நம் முடிவில், நம் உறுதி யில்தான் தோழர்களே இருக்கிறது. எளிய வழி - மருந்துச் செலவுகூட இல்லை!

நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளு வதைக் கடைப்பிடிப்பதன்மூலம் நம்மையும் காப்பாற்றி, அடுத்த (சமுதாயத்து) மனிதர் களையும் காப்பாற்றும் பெருங்கடமையாற்று கிறோம்.

நன்றிக் கடனுக்குரியவர்கள்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத் துவ தொண்டறச் செம்மல்கள், இதனை ஒருமுகப்படுத்தும் ஆட்சியாளர்கள்  - பிரதமர் முதல் முதல்வர்கள், ஆளுவோர், எதிர்க்கட்சித் தலைவர்கள், தாராளமாக வாரி வழங்கிடும் நாடாளுமன்ற உறுப் பினர்கள், தனியார் நிறுவனங்கள் அனை வருமே சமூகத்தின் நன்றிக் கடனுக்குரிய வர்கள்.

டில்லியிலும் மற்ற இடங்களிலும் மருத் துவர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்த வர்கள் பாதிக்கப்பட்டிருப்பது கவலைக் குரிய ஒன்று. அவர்களுக்குரிய மருத்து வமும், பாதுகாப்பும் அளிக்கப்படவேண்டி யது மிகவும் அவசியமாகும். நாட்டு மக்களின் நல்லெண்ணம் அவர்களின்பால் நிச்சயம் இருக்கிறது. அவர்கள் குணம் பெறவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!

மிகவும் நெருக்கடியான, மனவேதனை யும், பொருளாதார நெருக்கடியும், அதனால் ஏற்படும் மக்களின் மன அழுத்தமும் கூடும் இவ்வேளையில், கட்சி, ஜாதி, மதம், குரோத உணர்ச்சி, அரசியல் தூண்டிலைத் தூக்கி குட்டையைக் குழப்பி சிறு மீன், பெருமீன் கிடைக்காதா என்றெல்லாம் பார்க்கும் கயமை இவைகளுக்கு இடமில்லை.

அரசியல் ஆதாயம் தேட நினைப்பது

மிகப்பெரிய சிறுமைக்குணம்!

எவர் எந்த அளவு உதவினாலும், வாழ்த்தவேண்டும்; வரவேற்கவேண்டும். எல்லோரும் ‘‘அம்பானி, கிருபானிகளோ, அதானிகளோ, டாட்டாக்களோ அல்லது பெருமுதலாளிகளோ அல்ல. (அவர்களில் பலர் மக்கள் பணத்தை பல ஆயிரம் கடன் வாங்கி விழுங்கி ஏப்பம் விட்டு, வெளி நாட்டில் உல்லாச வாழ்வு வாழ்கின்ற சமுதாய அட்டைகள்). பிரதமர் நிதிக்கோ, முதல்வர் நிதிக்கோ, அவரவர் முடிந்த அளவுக்கு உதவுகிறார்கள்; இதை விமர்சனம் செய்வதோ, கேள்வி கேட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதோ மிகப்பெரிய சிறுமைக்குணம்.

பா.ஜ.க., தி.மு.க.வை நோக்கி - நன்கொடை பற்றி எழுப்பும் கேள்வி மிகவும் கேவலமான - சுமூக சூழ்நிலையைக் கெடுப்பதாகும்.

ஒருவருக்கொருவர் பதில் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு இதுவா நேரம்?

மக்கள் அறிவார்கள், யார் உண்மையாக அழுகிறார்கள் என்பதை!

தமிழக அரசின் சிறப்பான செயல்பாடு!

தமிழக அரசைப் பொறுத்தவரை அவர்கள் குறிப்பாக மருத்துவத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை முதலியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பலரையும் அழைத்து கருத்துரைகள் - யோசனைகள் கேட்டு, போர்க் காலத்தில் ஏற்படும் கூட்டுப் பொறுப்பாக அனை வரையும் ஈடுபடுத்தினால், மிகப்பெரிய ஒருமையும், சீர்மையும் தழைத்தோங்கும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கும்.

முதலமைச்சர் இது மருத்துவர்கள் பிரச்சினை என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல. என்றாலும், குறையோ, விமர்சனமோ செய்யத் தேவையில்லை.

மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்!

1. ஓய்வு பெற்ற அதிலும் கடந்த ஆண்டு, இவ்வாண்டு ஓய்வு பெற்ற - அனுபவம் மிகுந்த - மருத்துவர்கள் மீண்டும் தற்காலிகமாகப் பணியில் சேர ஒரு பட்டியல் தயாரித்து தயார் நிலையில் - இரண்டாம் கட்டப் பணி - தற்காலிக மருத்துவ சோதனை நிலையில், மருத்துவ உதவிப் பணிகள் செய்வதற்கு.

2. அதுபோலவே தொடர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கு ஓய்வும், புத்தாக்க சக்தியும் தேவை என்பதால், அதனை மாற்றிவிட இத்தகைய முயற்சிகள் தேவை.

3. நிதி ஆதாரத்திற்கு மத்திய அரசு, மாநில அரசுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி., பங்கு, மானிய பாக்கி, மத்திய அரசிடமிருந்து பெறவேண்டிய நிதிகள் பாக்கி இவற்றை உடனே மத்திய அரசு தர வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு அனைத்து எம்.பி.,க்கள்மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டியது அவசர, அவசியமாகும்!

ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

இப்போது அனைவரின் கவனமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டும், தூய்மைப்படுத்திக் கொண்டும் (அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும்; 20 நொடிகள் சோப்புப் போட்டுக் கழுவுதல், தும்மல் - இருமலின்போது மற்றவர்மீது படாது கைக்குட்டையால், காகிதத்தால் முகத்தை மூடுதல், முகக்கவசம், ஒரு மீட்டர் தள்ளி நிற்றல் - முதியவர்கள் முறைப்படி மருந்து களைத் தவறாது எடுத்துக் கொள்ளுதல் - ஆரோக்கிய எளிய உணவு) வாழ்ந்து ஒத்துழைப்புத் தரவேண்டிய தருணம் இது!

போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

சமூகத்தைப் பாதுகாக்கும்

காவல் அரண்கள்

காவல்துறையின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. காவல்துறையினருக்காக அல்ல ஊரடங்கு ஆணை - நமக்காக - நம் உயிர் காக்க. அவர்கள் நம் உயிர் காக்கும் தோழர்கள் - கால நேரம் பாராது தங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவர் களும், காவல்துறையினரும், துப்புரவுத் தொழிலாளர்கள் என்ற தன்னல மறுப் பாளர்களும் நம் சமூகத்தைப் பாதுகாக்கும் காவல் அரண்கள்.

அவர்களது தொண்டுக்குத் தலை தாழ்த்தி வணங்கி நன்றி கூறுவோம்!

உங்கள் மனச்சாட்சி,

உங்களை மன்னிக்காது!

இந்நேரத்தில் சிலர் வாணிபத்தில் ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்க உதவும் உணவுப் பண்டங்கள், காய்கறிகளில் விலையேற்றி லாபம் தேட நினைக்காதீர்கள். இதைவிடப் பெரிய சமூக விரோதச் செயல் வேறில்லை. யார் மன்னித்தாலும், உங்கள் மனச்சாட்சி, உங்களை மன்னிக்காது!

கொள்முதல் கூடுதலானால் அரசிடம் உதவி கேளுங்கள் - தன்னார்வ நிறு வனங்களின் உதவி கேளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு பசி தீர ஒத்துழையுங்கள். ‘போதும்' என்ற ஒரு சொல் அந்தப் பசிக்குத் தரும் உணவுக்கு மட்டுமே உள்ள தனித்தன்மை - பெருந்தன்மை!

இந்நேரம் நம் அனைவர் வாழ்வின் முக்கிய நேரம் - நாமும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைக்கவேண்டிய கடமையின் உச்சம் இது.

சமூகத்தை - உலகத்தைக் காக்க

உன்னதமான கடமையாற்ற வாரீர்!

கட்டுப்பாடு காத்து, கருணை உள்ளத் தோடு - ஒத்தறிவு (empathy) - ‘பிறிதின் நோய் தன் நோய்போல்' கருதி, பெருந்தன் மையோடு சமூகத்தை - உலகத்தைக் காக்க உன்னதமான கடமையாற்ற வாரீர்!

ஆழ்ந்து சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

வீட்டுக்குள் இருங்கள்!

சட்டத்தை மதிக்காத சமூகம் பாழ்பட்ட சமூகம்.

தந்தை பெரியார் சொன்னார், ‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை'' என்று. ஆழ்ந்து சிந்தி யுங்கள்! செயல்படுங்கள்! வீட்டுக்குள் இருங்கள்! அப்போதுதான் கரோனா கேட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற முடியும்!

மறவாதீர், ஒத்துழைப்பீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

3.4.2020

புதன், 1 ஏப்ரல், 2020

‘தினமலரின்' திமிரு...

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஏழை-எளிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் தான். குறிப்பாக அன்றாடம் காய்ச்சிகளான உழைப்பாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையிலும் கூட ‘தினமலர்' பத்திரிகை தன்னுடைய திமிரையும், வன்மத்தையும் வெளிப்படுத்துகிறது ‘தினமலர்' திருச்சி பதிப்பில்,

‘‘தீண்டாமை தேவைப்படற தேண்ணா!'' என்ற தலைப்பில் ஒரு டாக்டர் சொல்வதுபோல,

‘‘எட்ட நின்னு பேசுங்கோ,

ஜலத்தை அண்ணாந்து குடியுங்கோ,

வேற்றாள் தொட்ட பொருட்களை நல்லா ஜலம் விட்டு அலம்பி ஆத்துக்குள்ள கொண்டு போங்க,

வாயை கைக்குட்டையால் மூடிண்டு பேசுங்க,

யாராவது மேல பட்டா கை கால நல்லா சோப்பு போட்டு அலம்புங்க...

வெளியில் கண்டத சாப்பிடாதீங்கோ"

என்று எழுதி (கரோனா வராமல் தடுக்க வழிகள்) என்று கூறப்பட்டுள்ளது.

கரோனோ பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அளித்துள்ள அறிவுரைகளை தன்னுடைய கேடுகெட்ட சித்தாந்தத்திற்கு ‘தினமலர்' பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது.

ஜாதி, மத அடிப்படையிலான தீண்டாமையை எந்த வகையிலேனும் கடைப்பிடிப்பது குற்றம் என்று அரசமைப்புச் சட்டம் கூறியுள்ள நிலையில், இது அப்பட்டமாக தீண்டாமையை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக தினமலர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். கரோனோ தற்காலிகமானது. ஜாதி-மத வெறியும், தீண்டாமையும் மனித சமூகத்தைப் பிடித்துள்ள நிரந்தர நோய்கள். இதை ஒரு போதும் பரவ அனுமதிக்கக்கூடாது.

- மதுரை சொக்கன்

-  விடுதலை நாளேடு 1 4 20

கரோனாவைத் தடுக்க இந்து அறநிலையத் துறை யாகம் நடத்தச் சொல்வதா?

மக்களைத் தவறான சிந்தனைக்கு இழுத்துச் செல்வது பேராபத்து - தடுத்து நிறுத்தவேண்டும்!

கரோனாவைத் தடுக்க இந்து அற நிலையத் துறை யாகம் நடத்தச் சொல்வதா? மக்களைத் தவறான சிந்தனைக்கு இழுத்துச் செல்வது பேராபத்து - தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

கரோனா வைரசின் கோரத் தாண்டவம்!

‘சந்தடி சாக்கில் கந்தப் பொடித் தூவுதல்' என்ற பழமொழியும், ‘ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிருப்பது' என்ற முதுமொழியும் நாட்டு மக்கள் அறிந்த ஒன்று.

ஏற்கெனவே ‘விடுதலை' தலையங்கம் ஒன்றில், ‘வீடு பற்றி எரியும்போது, சுருட் டுக்கு நெருப்புக் கேட்கும் (ஈனச்) செயல்' என்ற பழமொழியையும் நினைவூட்டியிருந் தோம்!

கரோனா என்ற கொடூரம் உலகையே ஆட்டிப் படைக்கிறது. 199 நாடுகளில் அதன் கோரத் தொற்றுத் தாண்டவம் குறைந்த பாடில்லை.

எல்லா மதக் கடவுளரும் (அப்படி ஒருவர் இருந்தால்) கரோனாவுக்கு அஞ்சி அவரவர் கூடாரத்தை மூடச் சொல்லி, அந்தந்த மத பக்தர்களிடம் கூறி யிருக்கிறார்கள் போலும்!

கரோனாவை ஒழிக்கச்

சிறப்பு பூஜையா?

சர்வசக்தி, சர்வ வியாபி, சர்வ தயாபரன் என்று கடவுளுக்குச் சொல்லப்படும் மனிதனுக்கு மேற்பட்ட சக்திகள் கற்பனை என்பதும், கடவுள்களும், கோவில்களும், மசூதிகளும், மாதா கோவில்களும்கூட சமூகப் பரவலால் கரோனா தொற்று ஏற்படுகிறது என்பதால், மூடப்பட்டுள்ள நிலையில்,

இங்குள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை, அதன் நோக்கம் வெறும் தணிக்கை (Audit) செய்வதுதான் என்று சட்டத்தின் கர்த்தாக்கள் கூறியதையே புறந்தள்ளிவிட்டு, மதச்சார்பற்ற அரசு என்று பிரகடனப்படுத்தப்பட்ட அரசமைப் புச் சட்டப்படி நடக்கவேண்டிய அரசின் துறை, கரோனாவை ஒழிக்க சிறப்பு பூஜை நடத்த ஆணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி உண்மை தான் என்றால், வன்மையாகக் கண்டிக் கின்றோம். பார்ப்பனர்களுக்கு வருமானத் திற்கு வழி என்பதைத் தவிர, மூடநம் பிக்கைகளைப் பரப்பும் முட்டாள்தனக் கேலிக் கூத்தின் வெளிச்சம் இது என்பதைத் தவிர வேறு என்ன?

மக்கள் வரிப் பணம் அல்லவா அரசுத் துறைமூலம் செலவழிக்கப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதம்!

பிரதமர் மோடிக்கு ஓர் இளங்குழந்தை எழுதிய கடிதத்தில், ‘‘கரோனா தடுப்பு நிதிக்கு மத அறக்கட்டளைகள் (கோவில் வருமானங்களிலிருந்து) வரும் வருவாயில் 80 விழுக்காடு எடுத்துக்கொண்டு மருத்து வக் கருவிகள், மருத்துவமனைகள் கட்டப் பயன்படுத்துங்கள்'' என்று கேட்கும்போது, இப்படி ஒரு பார்ப்பனப் புதுச் சுரண்டலா - யாகம் என்பதன்மூலம்?

யாகத்தினால் குணப்படுத்த முடியும் என்றால், நிரூபிக்கட்டும். மருத்துவம னைக்குப் போகாமலேயே வெறும் மந்திர உச்சாடனம்மூலம், பிரசாதம்மூலம் குணப் படுத்திடலாம் என்றால், உலகம் நம்மைப் பார்த்து எப்படிச் சிரிக்கும்? யோசனை வேண்டாமா?

அரசமைப்புச் சட்டத்தின்

51-ஏ(எச்) பிரிவு

‘‘அறிவியல் மனப்பான்மையை ஒவ் வொரு குடிமகனுக்கும் பரப்பவேண்டியது அடிப்படைக் கடமை'' என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவை இப்படித்தான் மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதா?

மதத் தலைவர்களை, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சாமியார்களை அழைத்துப் பிரதமர் மோடி கலப்பதற்கு முன்னே, விஞ்ஞானி களோடு காணொலிமூலமாவது யோசனை கேட்டிருந்தால், பாராட்டலாம்.

இறைவனின் திருவிளையாடலாம் - கர்ம வினைப் பயனாம்!

இங்குள்ள அதிபுத்திசாலி அமைச்சர் ஒருவர், ‘இறைவனின் திருவிளையாடல்' என்று ஊதுகிறார். இது சரி என்றால், மத்திய - மாநில அரசுகளும், பிரதமரும், முதல மைச்சரும் கரோனா ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது கடவுள் விரோதச் செயல் அல்லவா!

புதுச்சேரியில் உள்ள துணைநிலை ஆளுநர் ஓர் அய்.பி.எஸ்., ‘கர்மவினைப் பயன்' என்று கூறி, தனது அறியாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறார்.

‘கர்ம வினைப்பயன்' என்று கைகட்டி, வாய் பொத்தி இருக்கச் சொல்லுவது ஒன்றே போதும் அல்லவா? இதைவிட பொறுப்பற்ற பேச்சுகள் வேறு உண்டா?

இன்னும் சிலர், ‘‘கோதுமை மாவு அகல் விளக்கு ஏற்றினால், அந்த வெளிச்சத்தில் கரோனா வைரஸ் சாவும்'' என்றும், மற்ற சிலர், ‘‘பசுமாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா கிருமிகள் சாகும்'' என்றும் சொல்கின்றனர்.

பிரபல இந்தி நடிகரின் உளறல்!

பிரபல இந்தி நடிகர் ஒருவர், பிரதமர் கூறியதுபோல், ஓங்கிக் கைதட்டினால், ‘‘அமாவாசையில், மணியடித்தால் கரோனா வைரஸ் ஓடிவிடும்'' என்று உளறிக் கொட்டி, நாடே நகைத்தபின், தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டார். ஏப்ரல் ஒன்றாம் தேதி ஒரு நாள்தான் முட்டாள்தினம்; இதுபோன்ற முட்டாள்தனம் வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்!

தடுப்பு முறையும் - அறிவியலுமே

உலகைக் காக்கும்!

இப்போது அவசரத் தேவை தனிமைப் படுத்திக் கொள்ளல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகளை பலமுறை கழுவுதல், ஒரு மீட்டர் தூரம் இடைவெளி - தும்மல், இருமல் வந்தால், கைக்குட்டையை வைத்து மற்றவர்மீது பரவாமல் தடுத்தல், அறிகுறி சந்தேகம் வந்தால், தனிமையைத் தாண்டி, மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ளல் போன்ற எல்லா முறைகளையும் தாண்டி, ‘‘மூடநம்பிக்கை வைரஸ்'' நம் மூளைக்குள் புகுந்து, நிரந்தர மூளை கெட்ட முட்டாள்தனத்தின் மூலதனமாக்கிவிடக் கூடாது, எச்சரிக்கை!

அறிவியல்படி நடந்துகொள்ளவேண் டும் என்று ஒரு பக்கத்தில் அரசே அறிவித்துக்கொண்டு இருக்கையில், இன்னொரு பக்கத்தில்  மூடத்தனத்தின்பக்கம் ஓர் அரசுத் துறையே, மக்களை இழுத்துச் செல்லுவது அரசுக்கு எதிரான - ஆபத்தான நடவடிக்கை அல்லவா! யாகம்தான் நடக் கிறதே, நாம் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஊட்டலாமா? உடனே இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்!

தடுப்பு முறையும், அறிவியலும் அதன் வெற்றியுமே உலகைக் காக்கும் என்பது அனுபவப் பாடம்!!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

1.4.2020