வெள்ளி, 24 நவம்பர், 2023

அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது ''அடக்கிவாசிக்க''வேண்டும்!


 உச்சநீதிமன்றத்தின் ஆணை - பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே!

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

1

மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

2

அவரது அறிக்கை வருமாறு:

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பதுபோன்றது!

அடாவடியாக ஆளுநர்கள் சிலர் - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினர், தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஒப்புதல் தராமல், ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, ஏதோ தங்களுக்கே தனி அதிகாரம் இருப்பதுபோல, எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவரும் போக்கினை எதிர்த்து, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தன;  ஆளுநர்கள், உரிய சட்டப்பூர்வமான அரசமைப்புச் சட்டக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் கூறிய கருத்துகளும், தெளிவுரைகளும் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஆணி அடிப்பது போன்று அமைந்துள்ளன.

இதன்படி, பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் (தமிழ்நாட்டு தி.மு.க. அரசு உள்பட) பலருக்கு உரிய நியாயம் கிடைக்கும்;  அரசமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் அவமதித்து திசை திருப்பும் திருகுதாள முறைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது தெளிவாகிறது!

அரசியல் அருவருப்பின் உச்சம்!

தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவியேற்ற தொடக்கத்திலிருந்தே, அவர் ஏதோ ஆளுநர் ஆட்சி (Governor Rule -Article 356) நடைபெறுவதுபோல, அதீதமாக நடந்து கொள்வது அரசியல் அருவருப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளது.

இதற்கு டில்லி ஒன்றிய ஆட்சியாளரின் ‘‘சமிக்ஞையும், கண் ஜாடையும்'', வெளிப்படையான ஆதரவுமே மூலகாரணம் என்பதை நாட்டில் உள்ள சாதாரண குடிமகனால்கூட புரிந்துகொள்ள முடியும்!

முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றிலேயே ஓர் ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவர்களைப்போல் வெளிநடப்புச் செய்தது விவஸ்தையற்ற நடவடிக்கையே! அரசு - அமைச்சரவை தயாரித்து ஒப்புதல் அளித்த தனது சட்டமன்ற உரையில், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர் களின் பெயரையே விட்டுவிட்டுப் படிப்பது - அதில் இல்லாததை இணைத்துச் சொல்வது போன்றவை ஜனநாயக மரபுக்கும், மாண்புக்கும் ஊறுவிளைவிக்கும் முன் உதாரணமற்ற தரந்தாழ்ந்த செயல்களாகும்!

10 மசோதாக்களைக் காலவரையின்றிக்  கிடப்பில் போடுவது - அரசு நிர்வாகம் சீர்குலைவு அடையும் வகையில் அன்றாடம் ஓர் அரசின் மூலாதாரக் கொள் கைகளை எதிர்த்து குற்றச்சாட்டுகளைக் கூறுவது, குழந்தைத் திருமணங்களை ஆதரித்து, ஊக்குவிப்பது போல, குற்றவாளிகளைக் காப்பாற்றும் வகையில் சில நிகழ்வுகளில் நடந்துகொள்வது போன்ற பலவற்றையும் செய்தார்.

ஆளுநர்களின் அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி!

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் (கிடப்பில் போட்ட மசோதாக்கள் மற்றும் பல கோப்புகள்பற்றி) என்ன செய்தார்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டகேள்வியும், பஞ்சாப் மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ‘‘அலங்கார பதவிதான் ஆளுநர் பதவியே தவிர, அவர்களுக்கென தனியே, பிரத்தியேக ஆளுமை செய்யும் அதிகாரம் பெற்றுள்ள பதவி அது அல்ல'' என்பதையும், ‘‘சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக் களைத் திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க, செயல்படாமல் அதைச் செய்யும் ‘வீட்டோ பவர்' (Veto Power) ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டப்படி கிடையாது'' என்று ஓங்கியடித்துக் கூறியுள்ளது அவர்களது அதீதத்திற்கு வைக்கப்படும் முற்றுப்புள்ளி யேயாகும்!

அரசமைப்புச் சட்டம்பற்றிய தெளிவுரையாகக் கொள்ளவேண்டிய ஓர் ஆவணமாகும் - சரியான சட்ட விளக்கமுமாகும்.

உடனடியாக ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியே ஆர்.என்.ரவிக்கு இல்லை!

இதன்படி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent)  அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை.

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதி மன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டு மல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத் துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகி விடக் கூடும்.

எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை''யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!

அனைத்து மாநில ஆளுநர்களும் இனி அடக்கிவாசிக்கவேண்டும்!

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை - கருத்தாக்க விளக்க ஆணை பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அதிகாரம் உள்ள எல்லாப் பகுதி ஆளுநர் களுக்கும் பொருந்தும் ஆணை என்பதை தமிழ்நாடு ஆளுநர் உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனி அடக்கிவாசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனியும் சோதனை வரக்கூடாது!


ஆசிரியர் கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

24.11.2023


செவ்வாய், 14 நவம்பர், 2023

தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் குலக்கல்விக்கு எதிராக தெருமுனைக் கூட்டங்கள்

தஞ்சையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

4

தஞ்சாவூர், நவ. 14-- திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்   தஞ்சாவூர் அன்னை அரங்கம் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் முனைவர் ராஜவேல் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி துணைச் செய லாளர் இரா.வெற்றி குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி அமைப் பாளர் வழக்குரைஞர் ஆ.பிர பாகரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

 கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இளைஞரணி தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என் பது குறித்தும், இளைஞரணியை வலுப்படுத்துவதற்கான காரணங்களையும் விளக்கிப் பேசினார்.

கழகக் காப்பாளர் மு.அய் யனார், தஞ்சை மாவட்ட தலை வர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித் துப் பேசினர்.

நிறைவாக கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின் சுனாரெசு பெரியார் கருத்துரை ஆற்றினார். அப்போது இளை ஞரணி செயல்பாடுகள் குறித் தும், சமூக ஊடகங்களில் இளை ஞர் அணியினர் செயல்படைய வேண்டிய விதங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் கள் சென்னை சோ.சுரேஷ்,  நாகை நாத்திக.பொன்முடி,  செந்துறை சு.அறிவன், திண்டுக் கல் நா.கமல்குமார்,  ஆத்தூர் ப.வேல்முருகன்,  தாராபுரம் ஆ. முனீஸ்வரன்,  ஜெகதாபட்டினம் ச.குமார், கோபி ப.வெற்றிவேல், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்தி ராபதி, மாவட்ட ப.க பொறுப் பாளர் வீரக்குமார், விருத்தா சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம்பரசன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன், அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் வி.ஜி மணிகண்டன், அரியலூர் ஒன் றிய இளைஞரணி செயலாளர் கி.கமலக்கண்ணன், மணல் மேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.யோவான், தஞ்சை மாநகர இளைஞரணி பொறுப் பாளர்கள் மணிகண்டன், பிர காஷ், பெரியார் பிஞ்சு முகிலன் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தின் முடிவில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திண்டிவனம் வழக்குரைஞர் தா.தம்பி பிர பாகரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில், உலகத் தலை வர் தந்தை பெரியார் அவர்க ளின் கொள்கைகளை உலகமய மாக்கும் பணியில் ஓயாது உழைத்து வரும் தமிழர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் 91 ஆவது பிறந்தநாள் விழாவை (சுயமரியாதை நாள்)  2023 டிசம்பர் 2 ஆம் நாள் தொடங்கி மனிதநேய பணிகளான குருதிக் கொடை வழங்குதல், உடற் கொடை வழங்குதல், மருத்து வமனை உள்நோயாளிகளுக்கு உணவுப் பொருள் வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நமக்கு அளித்த தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல், கழக கொடியேற் றுதல், கொள்கை விளக்க பிரச் சாரக் கூட்டங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்வதெனவும், 

விஸ்வகர்மா யோஜனா என்னும் பெயரில் மீண்டும் குலக்கல்வியை திணிக்கும் ஒன் றிய அரசின் நவீன தீண்டா மைக்கு எதிராகவும், குலக்கல் வித் திட்டத்தின் ஆபத்துகளை விளக்கி கழக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனவும்,   கழக இளை ஞரணி மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக பொறுப் பாளர்கள் தங்கள் பொறுப் புக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல் கூட்டங் களை நடத்தி கிராம கிளை, ஒன்றிய அமைப்பு, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி களில் வட்டக் கழக வாரியாக இளைஞர் அணி அமைப் புகளை வலுப்படுத்தி முழு வீச்சுடன் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மேலும், மாநில, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் புதிய இளைஞரணி அமைப்புகளை தங்கள் பகுதிகளில் உருவாக்கி இளைஞரணி அமைப்பை பர வலாக்கிட வேண்டும். மேலும், கழக இளைஞரணி பொறுப் பாளர்கள் அந்தந்த மாவட்டங் களில் நடைபெறும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்கள் இளைஞர்களின் முகவரி மற் றும் தொலைபேசி எண்களை பெற்று அவர்களை தொடர்பு கொண்டு இயக்க நடவடிக்கை களில் பங்கேற்க செய்வதென வும், ஜாதி ஒழிப்பும் -தீண்டாமை ஒழிப்போம் நமது கண்ணான கொள்கை. ஜாதி தீண்டாமைப் போன்ற கொடுமைகள் எந்த பகுதியில் நடந்தாலும் கழக இளைஞரணி தோழர்கள் உட னடியாக தலைமைக் கழகத் திற்கு தெரிவித்து களப்பணியில் உடனடியாக இறங்க வேண்டும் எனவும், தீண்டாமை சட்டப் படி குற்றம். மனிதாபிமானத்திற் கும் மனித உரிமைக்கும் எதி ரானது என்பது போன்ற விளம் பரங்களை கழக இளைஞரணித் தோழர்கள் தமிழ்நாடு முழு வதும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜாதி - தீண்டாமை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல, சமூக மாற்றம் பற்றி தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டிய பிரச்சனை யும் கூட என்பதை உணர்ந்து கழக இளைஞரணியினர் முனைப் புடன் செயல்படுவதனவும், கழக இளைஞரணி சார்பில் பெரியார் சமூக காப்பணி பயிற்சி பட்டறை அறிமுக வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் கீழ்க்கண்டவாறு நடத்துவதெனவும் தீர்மானிக் கப்படுகிறது:

பெரியார் சமூக காப்பணி பயிற்சி வகுப்பு பட்டியல்:

டிசம்பர் - 9, 10 -  வடசென்னை, கும்மிடிப்பூண்டி,ஆவடி, சென்னை

டிசம்பர் 16- 17 - திருவொற்றியூர், தென்சென்னை, சோழிங்கநல்லூர், தாம்பரம் .

டிசம்பர் 30, 31 - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை.

ஜனவரி 6, 7 - வேலூர், செய்யாறு, திருப்பத்தூர்.

ஜனவரி 20, 21 -திண்டிவனம், விழுப்புரம், கல்லக்குறிச்சி, திரு வண்ணாமலை.

ஜனவரி 27, 28 - கடலூர், சிதம்பரம்,விருத்தாசலம், புதுச்சேரி.

பிப்ரவரி 3,4 - ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரூர்.

பிப்ரவரி 10, 11 - சேலம், ஆத் தூர்,மேட்டூர் , நாமக்கல்.

பிப்ரவரி 17, 18  - மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை.

பிப்ரவரி 24, 25- மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர்.

மார்ச் 2, 3 - அரியலூர், பெரம் பலூர், லால்குடி.

மார்ச் 9 , 10 - திருச்சி, துறையூர், கரூர்.

மார்ச் 16, 17 - ஈரோடு, கோபி, மேட்டுப்பாளையம், நீலகிரி.

மார்ச் 23, 24 - தாராபுரம், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி.

மார்ச் 30, 31 - புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம்.

ஏப்ரல் 6, 7 - சிவகங்கை, காரைக் குடி.

ஏப்ரல் 13 , 14 - திண்டுக்கல், பழனி, கம்பம், தேனி.

ஏப்ரல் 20, 21  - மதுரை மாநகர், மதுரை புறநகர், ராஜபாளையம், விருதுநகர்.

ஏப்ரல் 27, 28  - குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.

கழக மாவட்டத்திற்கு 5 முதல் 10 தோழர்களை பங்கேற் கச் செய்திட வேண்டுமெனவும், கழக இளைஞரணி சார்பில் 2023 டிசம்பர், 2024 ஜனவரி மாதத்தில் திருச்சி, சென்னை, புதுச்சேரி, தர்மபுரி, ஈரோடு, திருவாரூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய ஊர்களில் களப்பணி பயிற்சி முகாம்கள் நடத்துவதெனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வயதை குறித்திடும் வகையில், தஞ்சை மாவட்ட இளைஞரணி சார் பில் தஞ்சை மாநகரில் 91 அடி உயர கொடிக்கம்பம் நிறுவி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து கழகத் தின் லட்சியக்கூடிய ஏற்றுவதெ னவும், தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி சார்பில் விடுதலை சந்தாக்களை திரட்டி வழங்குவதெனவும் தீர்மானிக் கப்பட்டது.

 புதிய பொறுப்பாளர்:

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.பிரகாஷ் - பெரியபாளையம்.

2024 - மோடிக்குப் பதிலாகட்டும்!


3

« சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மை யான சம்பாத்தியம்?

« ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

« பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

« மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப் பட்ட ரூ.10,000 கோடி பணம் யாருடையது? 

பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனே ஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன் வந்தார்கள் ?

« அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் தூய்மையாவது எப்படி?

« எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச் சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

«  பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கிய மான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறையீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

« வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட இன்று வரை மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டி யலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

« பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் இரகசியம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

« ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத் தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

« கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய் னர்  பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப் படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிகைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரி யாமல் கைமாறிய கண்டெய்னர்களின் எண்ணிக்கை என்ன?

« மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடு களை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வர வில்லை? வந்தது  எனில் விபரமென்ன?  எவ்வளவு?

« மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவ ரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளி நாடுகளில் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்வது எப்படி?

« மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி?  

« லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங் கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு இழப்பு அடைந்தது எப்படி? இன்று ரிலையன்சுக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி? அரசு விமான நிலையங்களும், துறைமுகங் களும் இன்று அதானி விமான நிலையங்களும் துறைமுகங்களுமாக மாறியது எப்படி?

« பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத் திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செல விடப்பட்டிருக்கின்றன?

« தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங் குவது ஏன்?  

« யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி யளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

« ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப் படுவதன் ரகசியம் என்ன?

« பல்லாயிரம் கோடிகள் உபரிப் பணம் இருக் கும் எல்அய்சி பங்கு கள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்அய்சியில் எந்த விதமான இழப்பு ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் ரகசியம்  என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

« மாநிலங்களின்  ஜி.எஸ்.டி.  பங்குகள் எங்கே மாய மானது? 

« கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜக வில் இணைந்து வருகிறார்களே ஏன்? ரவுடிகளின், பாலியல் வன்முறை செய்த காவாலிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா? 

« PM. Care  collection 

எவ்வளவு?  என்ன கணக்கு?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை. 

ஆனால் நம்புங்கள்.

மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!

பா.ஜ.க. 9 ஆண்டு கால ஆட்சி

கீழே உள்ள தகவல்களில் ஏதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந் தாலும் சுட்டிக்காட்டலம்.......

1.  பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு

2.  மருந்து பொருள் விலை உயர்வு

3.  ரயில் கட்டண விலை உயர்வு

4.  கேஸ் விலை உயர்வு

5.  புதிய வரிகள்

6.  பெரு முதலாளிகளின் வாராக்கடன்

7.  வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்

8.  ரூ.500-1000 தடை மற்றும் வேலை இழப்புகள்

9.  ரூபாயின் மதிப்பு

10.  மோடி வெளிநாட்டுப் பயணங்கள்

11.  வெளியுறவுக் கொள்கை

12.  ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்

13.  உதய் மின்திட்டம்

14.  தமிழ்நாடு வறட்சி நிவாரணம்

15.  அஞ்சல் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்

16.  காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு

17.  அருணாசல பிரதேச ஆட்சிக் கலைப்பு

18.  ராணுவத்திற்கான உணவில் முறைகேடு

19.  சீனப் பட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு

20.  பலுசிஸ்தான் தலையீடு

21.  இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்

22.  ஓய்வூதிய வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்

23.  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்

24.  ஜி.டி.பி.யில் குளறுபடி

25.  புதிய வங்கிக் கட்டணங்கள் - ஆதார்

26.  வெளிநாட்டு நேரடி முதலீடு

27.  தூய்மை இந்தியா திட்டம்

28.  மேக் இன் இந்தியா

29.  டிஜிட்டல் இந்தியா திட்டம்

30.  அணு உலை

31.  புல்லட் ரயில்

31.  நிலம் கையகப்படுத்தும் மசோதா

33.  ஸ்மார்ட் சிட்டி

34.  ஹிந்தி திணிப்பு

35.  காவேரி நீர்மேலாண்மை ஆணையம்

36.  நீதிபதிகள் நியமனம் தாமதம்

37.  ஜி.எஸ்.டி

38.  சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்

39.  IT ஊழியர்கள் பணி நீக்கம் 

40.  காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41.  கல்புர்கி கொலை

42.  ரோஹித் வெமுலா

43.  ஜவாஹர்லால் பல்கலைக்கழகச் சர்ச்சைகள்

44.  வருண் காந்தி -  ராணுவ ரகசியங்கள்

45.  ரகுராம் ராஜன் மாற்றம்

46.  ஜல்லிக்கட்டு

47.  உத்தராகண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ

48. எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா? தொடர் ராணுவ வீரர்கள் பலி

49.  ஜியோ சிம் விளம்பரம்

50.  லலித் மோடி

51.  வியாபம்

52.  கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்

53.  சுரங்க ஊழல் - மகாராட்டிரா & கருநாடகா

54. தனி விமானம் ரூ.8000 கோடி

55.  பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை

56.  ரூ.15 லட்சத்தில் ஆடை

57.  பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்

58.  பள்ளிப் பாடப் புத்தகங்களில் வரலாறு திரிப்பு

59.  முக்கிய பிரச்சினைகளில் மவுனம்

60. பல்வேறு பா.ஜ.க. உறுப்பினர்களின் வெடி  பொருள் தயாரிப்பு செயல்பாடுகள்

61. பாலியல் வன்முறை, பெண்கள் பற்றி கலாச் சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

62. சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது.

63.  தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM

64.  குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்

65.  பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வித் தகுதி

66.  ஒன்றிய அமைச்சரும் நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வித் தகுதி சர்ச்சை

67.  தேச பக்தி நாடகங்கள்

68.  மேகாலயா ஆளுநரின் காம லீலை

69.  ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி

70.  பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71.  சமஸ்கிருதத் திணிப்பு

72.  புதிய கல்விக் கொள்கை

73.  பொது சிவில் சட்டம்

74.  கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டம் - ரூ.20,000 கோடி வீண்

75.  மாட்டுக் கறிக்குத் தடை

76.  மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)

77.  சிறீ சிறீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்

78.  அயோத்தி ராமர் கோவில்

79.  அமைச்சர்களின் வெறுப்புப் பேச்சு

80.  கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81.  காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை

82.  டில்லி விவசாயிகள் நிர்வாணப் போராட்ட நிலை

83.  அதானிக்கு மட்டும் ரூ.72,000 கோடி கடன்

84.  SBI மினிமம் பேலன்ஸ் ரூ.5000

85.  சிறுபான்மையினரிடம் விரோதப் போக்கு

86.  மாட்டு அரசியல் 

87.  சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டவர்களும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல் லப்பட்ட சம்பவங்கள்

88.  'நீட்' தேர்வு

89.  ரேஷன் மானியம் நிறுத்தம்.

90.  ஆதார் அட்டை குளறுபடிகள்.

91.  காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது. 

92.  கரோனா சொதப்பல்கள் - பலரை கொலை செய்தது

93.  CAA  NRC,CAB. ???

94. 68,000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி - மற்றவர் களுக்கு பட்டை

95.  HB

96.  உன்னா ரேப். உபியில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப் பினர் பாலியல் கொடுமை செய்து பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொளுத்திக் கொன்றது.  

97.  பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட் சியை மிரட்டிப் பறித்தது

98. மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையைப் போட்டது.

99.  பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது -  பிணைகூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.

100. பிரான்ஸிலிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மவுனம் காப்பது.

101. ஒட்டுக் கேட்க, மென் பொருள்  வாங்கிய விவகாரம்?

இதற்கெல்லாம் பதில் 2024இல் கூறப்படும்!

- இணையத்திலிருந்து...


வெள்ளி, 10 நவம்பர், 2023

இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் - அறிக்கை

* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? 

* இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? 

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய 

உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் தானே ஓ.பி.சி.?

1

அரசமைப்புச் சட்டத்தில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு என்று வரையறை செய்துள்ள நிலையில், பொருளாதார அளவுகோலைத் திணித்து உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்த ஒன்றிய பிஜேபி அரசு - அதன் பிரதமர் சமூக நீதி - இடஒதுக்கீடு பற்றிப் பேசலாமா? ஒன்றிய அரசின் 90 செயலாளர்களில் மூன்றே மூன்று பேர்தானே ஓ.பி.சி. என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

 அவரது அறிக்கை வருமாறு:

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள்,

"சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது  அரசு (ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் - பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது" என்று கூறியிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தின்  தலைப்பு என்ன தெரியுமா? "பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம்" ("Self Respect to  BC's") என்பதாகும்.

இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்:

அவரது ஒன்றிய அமைச்சரவையில் 27 சதவிகித ஓ.பி.சி.  (OBC) அமைச்சர்கள், உள்ளனராம்.

2014இல் பிரதமர் பதவிக்கு அவர் வந்தபோது எத்தனை சதவிகிதம் இவர்கள் இருந்தனர் என்ற கேள்விக்கு அவரால் விடையளிக்க முடியாத இக்கட்டு நிலையே ஏற்படும்!

எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களைப் பற்றி கூறியிருக்கும்போது, நமது பிரதமர் அவர்களை நோக்கி சில சந்தேகங்களை வைக்க ஒடுக்கப்பட்ட மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். 

அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டின் அளவுகோலில் பொருளாதாரம் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 15(4)இன்படி OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளப்படுத்தல் சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் ("Sociallly and Educationally") என்பதுதானே - அதை மாற்றி, முந்தைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேரைக் கொண்ட இந்திரா சஹானி வழக்கில் பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு (முன்பு) 10% சதவிகிதம் செல்லாது என்பதை தலைகீழாக்கி அவசர அவசரமாக 103ஆவது அரசமைப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவந்து 4  நாட்களில் சரியான விவாதமே நாடாளுமன்றத்தில் நடத்தாமல், நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கி,  50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மேலே 10 சதவிகித இடஒதுக்கீடு - அதுவும் உயர் ஜாதி ஏழைகளுக்கு மட்டுமே; எல்லா ஜாதி ஏழைகளும் இதன் கீழ் வர மாட்டார்கள் என்று அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தையே தகர்த்தெறிந்தீர்களே, மாநிலங்களின் ஒப்புதல்களைப் பெற்று நிறைவேற்றாது 'தானடித்த மூப்பாக'வேத்தானே நடத்தினர்.

2

உயர்ஜாதியினரில் சமூக கல்வி ரீதியாக 

பின் தங்கியோர் உண்டா?

உயர் ஜாதி ஏழைகள் - கல்வியிலும், சமூக ரீதியாகவும், பிற்படுத்தப்பட்டவர்களா? புள்ளி விவரக் கணக்கு ஏதேனும் நடத்தப்பட்டதா?

 ஒன்றிய அமைச்சரவையில்  பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதம் என்று இப்போது  தேர்தல் பிரச்சார சங்கீதம் பாடுகிறாரே - அந்தப்படி அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் 100க்கு 100 சதவிகிதம் உயர்ந்தவர்கள், தேவையற்ற அஜீரணக்காரர்கள் - பசியேப்பக்காரர்கள் அல்ல என்ற உண்மையை இவர் மறுக்க முடியுமா?

அவர்களிலும்கூட அன்றாட வருமான அளவு நாள் ஒன்றுக்கு 2222 ரூபாய் பெறுபவர்கள்  ஏழைகளா?

பதில் அளிக்கட்டுமே பிரதமரோ, அத்துறை அமைச்சரோ!

இதுவரை அவரது அதிகார வர்க்கத்தில் எத்தனைப் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்?

எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார்?

90 ஒன்றிய அரசு இலாக்காக்களில் செயலாளர்களில் வெறும் 3 பேர் தான் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இளந் தலைவர் ராகுல் காந்தி விடுத்த கேள்விக்கணைக்கு அவர் பதில் அளிப்பாரா?

இவரது அரசு எத்தனை எஸ்.சி., எஸ்.டி., உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை இந்த 9 ஆண்டு ஆட்சியில் நியமனம் செய்துள்ளது?

மத்திய பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் களோ, பேராசிரியர்களோ எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இவர்களில் இவரது ஆட்சியில் நியமனம் பெற்றோர் புள்ளி விவரங்களைப் பார்த்தால் ஒடுக்கப்பட்டோர் உரிமை காற்றில் பறந்திருக்கும் நிலை தெளிவாகுமே! எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்? சமூகநீதி என்றால் இதுவா? பதில் கூறட்டும்! 

இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை 
10.11.2023


ஞாயிறு, 5 நவம்பர், 2023

திராவிடர் கழகத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய கடிதம்


மக்களை பிரித்தாளும் பிஜேபியின் கருத்தியலை முறியடிக்க தந்தை பெரியாரின் கொள்கைதான் அடித்தளமாக உள்ளது

''பெரியாரின் தொலைநோக்கும்,கொள்கையும் நம்மை வழிநடத்தட்டும்!''

1

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

கடித விவரம் வருமாறு:

அன்பார்ந்த திரு.வீரமணி அவர்களுக்கு,

தாங்கள் நலமுடன் இருக்க விழைகிறேன். சென்னை- பெரியார் திடலுக்கு என்னை அழைத் ததற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இந்தியா' (I.N.D.I.A.) கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். தங்களது கடிதத்தில் மிகவும் சரியாக விளக்கிக் காட்டியதுபோல இந்தக் கூட்டணி அரசியல் கூட்டணி என்பதைவிட மேம்பட்டது.

சமூகநீதி தேவையின் அடிப்படையில்  கட்டமைக்கப்படும் அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களைப் பிரித்தாளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுயமரியாதையுடன் வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலை நோக்குதான் பாதை அமைத்துத் தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பிற்கு, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் போராடியதுதான் அடித்தளமாக அமைந்துள்ளது. தந்தை பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழிநடத்தட்டும்!

2

தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் திருமதி சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.