சனி, 13 ஜூன், 2020

விலை போகும் இ.டபுள்யு.எசு சான்றிதழ்!

பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேருவதற்கு நாடு முழுவதும் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பான பல செய்திகள் சமூகவலைதளங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் “இடஒதுக்கீட்டை பாதுகாப்போம், தேசத்தைக் காப்போம்'' என்ற அமைப்பு மும்பை 'மிரர்' ஆங்கில நாளிதழுக்கு சான்றுகளோடு முறைகேடு ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளது,

மகாராட்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த பெரும் செல்வந்தரின் மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி என்று போலியாக சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. இவர் கடந்த ஆண்டு படிப்பை முடித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அவர் எடுத்த மதிப்பெண்படி இட ஒதுகீட்டின் மூலம்தான் இடம் கிடைக்கும் என்ற காரணத்தால் போலிச் சான்றிதழ் வாங்கியுள்ளார். விதர்பா பகுதியைச் சேர்ந்த சில தரகர்கள் இது போன்ற போலிச் சான்றிதழ்களை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு தயாரித்துத் தருகின்றனராம்.

“இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம் தேசத்தைக் காப்போம்'' என்ற அமைப்பு இட ஒதுக்கீட்டில் நடக்கும் முறைகேடுகளையும், தகுதியான நபர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காதது குறித்தும் ஆய்வு செய்துவருகிறது, மேலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு பயனாளர்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கூறியதாவது, “நான் வேண்டுமென்றே இந்த செயலைச் செய்யவில்லை. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது இப்போது மிகவும் அரிதாகியுள்ளது, ஆகவே எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் எப்படியாவது கிடைக்கவேண்டும் என்ற நிலையில் இதைச் செய்தேன். எங்களது குடும்பம் ஆண்டிற்கு 8 லட்சத்திற்கு மேல் வருவாய் பெறுகின்றனர். எங்கள் பகுதியில் நிறைய பேர் இது போன்று சான்றிதழ்களை வாங்கியுள்ளனர். இது தவறு என்று தெரியும். ஆனால் இதுவரை இது போன்ற சான்றிதழ்கள் தொடர்பாக யாருமே கேள்வி கேட்கவில்லை. ஆகவே எங்களுக்குப் பயம் ஒன்றுமில்லை. 1000 ரூபாய்க்கு சான்றிதழ் கிடைக்கும் போது பிரச்சினை எதுவும் வந்தால் சில ஆயிரங்களைச் செலவழித்து பிரச்சினையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்'' என்று அவர் கூறியுள்ளார்.

“நான் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும் போது அந்தத் துறையின் அதிகாரி ஒருவர் உனது தாய்-தந்தை இருவருமே வேலை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆகவே நீ சான்றிதழ் பெறவேண்டுமென்றால் எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சொன்னால் அவர் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று கூறினார். அதே போல் அவரது நண்பர் இரண்டே வாரத்தில் வெறும் ஆயிரம் ரூபாயில் எனக்குச் சான்றிதழ் வாங்கிக் கொடுத்துவிட்டார்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்களின் வழக்குரைஞர் ஒருவரை அவரது தந்தை சந்தித்திருப்பதாகவும், இந்த சான்றிதழ் பிரச்சினை குறித்து எதுவுமே அச்சப்பட வேண்டாம் என்று அந்த வழக்குரைஞர் கூறியுள்ளதாகவும், ஆகவே தான் எதற்கும் பயப்படத் தேவையில்லை, மூன்று மாதமாக பொழுதைப் போக்கிவருகிறேன், தனக்கு விரைவில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றும் அந்த மாணவி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக "இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம் தேசத் தைக் காப்போம்” என்ற அமைப்பினர் கூறும் போது “நாங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதி பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்தோம். அதில் பலர் ஓய்வெடுக்க சுவிட்சர்லாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தவர்கள். பலரது பெற்றோர் கோடிக்கணக்கில் ஆண்டு வருமானம் பார்ப்பவர்கள். இவர்கள் அனைவருமே போலிச்சான்றிதழ் வாங்கியுள்ளனர்” என்று கூறினர். இந்த விவகாரத்தில் இன்னும் பல முறைகேடுகள் நடந் துள்ளன. ஆனால் அவர்களுக்கு அரசுத் துறையில் உள்ள மூத்த அதிகாரிகளே துணை நிற்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இதை விட சமூகநீதிக்கு மரண அடி வேறு ஒன்றும் இருக்க முடியாது.

குற்றம் சொல்லியிருப்பவர்கள் 'ஏனோ தானோ' பேர் வழிகள் அல்ல. ஓர் அமைப்பின்கீழ் செயல்படக் கூடியவர்கள். மும்பை 'மிரர்' ஆங்கில ஏடும் சான்றுகளோடு வெளியிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதே அடிப்படையில் சமூக நீதியின் ஆணி வேரை வெட்டுவதாகும். பொருளாதார ரீதியாக சான்றிதழ் பெறுவது அப்படியொன்றும் கடினமானதல்ல. அதே நேரத்தில் ஜாதி சான்றிதழ் வாங்குவது என்பது எளிதான ஒன்றல்ல என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். போலியான சான்றிதழ் விற்கப் படும் தகவல் சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும். அரசுகள் இதில் முக்கிய கவனம் செலுத்தட்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் நலிவ டைந்தவர்களுக்கான (EWS) சான்றிதழை எந்த அரசு அதிகாரி யும் கொடுக்கக் கூடாது என்று அறிவித்திருப்பது வரவேற்கத் தகுந்தது.
- கவிஞர் கலி.பூங்குன்றன்
13.6.20