திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2021

திராவிடத்தின் ‘அறமும்', ஆரியத்தின் ‘‘தருமமும்'' ஒன்றா? அல்ல; வேறு, வேறு!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

 

ஆரியம், திராவிடம் என்பது இரு வேறு பண்பாடுகள்; இரு வேறு நாகரிகங்கள் என்ப தற்குப் பல துறைகளிலிருந்து நிறுவிக் காட்ட இயலும்.

இரு வேறு மொழிகள் சார்ந்தவை பண் பாடும், நாகரிகமும் - அந்த மொழிகளில் ஒன்று தமிழ் (திராவிடம்) தென்மொழி.

மற்றொன்று சமஸ்கிருதம் என்ற வடமொழி.

தமிழ் திராவிட மொழி -

சமஸ்கிருதம் ஆரிய மொழியாகும்!

பண்பாட்டை அறிவதற்கும், நாகரிகங்களைப் புரிந்து கொள்வதற்கும் பெரிதும் அம்மொழிச் சொற்கள் அடையாளங்களாக அமைகின்றன.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மிகவும் எளிமையாய் தமிழர்களுக்குப் பாடம் எடுத்தார்.

‘‘தமிழனே இது கேளாய்-உன்பால்

சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு

காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!

நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு

நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!

தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;

தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!

கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு

காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு

தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்

நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.

தமிழனே இது கேளாய்!''

ஆரியத்தின் ‘தருமம்' கூறும் நூல் மனுநீதி

திராவிடத்தின் ‘‘அறம்''பற்றி கூறும் சமயச் சார்பற்ற நூல் திருக்குறள்.

‘தருமம்' என்பதற்கு என்ன விளக்கம் என்பதை திராவிடர் இயக்கம்பற்றிய ‘Minorities in Tamil Nadu' என்ற டாக்டர் சரஸ்வதி எழுதிய ஆராய்ச்சி நூலில் விளக்குகிறார்.

‘‘To the Hindus, Dharma primarily denotes the fulfilling of caste duties. The inexorable law of Karma in which the orthodox place implicit faith, assigns to each man his work and status in accordance with his deeds in previous birth. They hope that by a strict discharge of caste duties one could raise oneself in social scale in a subsequent birth. Dr. Dube elucidates the point, "the concepts of sin, merit and pollution are fundamental to the concept of Dharma. Dharma which means that which is right covers all the phases of human life cycle and fixes several details of intra and inter-group life. Acceptance of caste traditions and the general rules of piety can be said to constitute the Dharma of the people and it is through Dharma that one can look forward to Shaping one's destiny."

இதன் தமிழாக்கம்:

‘‘இந்துக்களுக்கு, ஜாதித் தொழிலைச் செய்வதே தர்மமாகும். கட்டாயத் தன்மையுள்ள கர்ம விதியின்படி மதம் சார்ந்த வெளிப்படையான நம்பிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய முந்தைய பிறவியின் நடத்தைகளின்படி இப்பிறவியில் சமூக அந்தஸ்தும், தொழிலும் விதிக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையிலான தொழிலைச் சரியாகச் செய்து முடிப்பதால் அடுத்த பிறவியில் ஒருவரது சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படுகிறது. ஆய்வறிஞர் டாக்டர் துபே கூற்றுப்படி, பாவம், புண்ணியம், தீட்டு ஆகியவைகளே தர்மத்திற்கு அடிப்படையாக உள்ளன. ‘எது சரி?’ என்ற சொல்லக்கூடிய தர்மமானது மனித வாழ்க்கைச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவி, சமூகப் பிரிவுகளுக்கிடையிலும், சமூகப் பிரிவு களுள் ளேயும் பல விஷயங்களை தீர்மானிக் கிறது. ஜாதி வழக்கத்தை ஏற்றுக்கொள்வதும், பக்தி சார்ந்த பொதுப் பழக்கங்களுமே ‘‘தர்மம்'' என்பதை உருவாக்குகிறது. இப்படிப்பட்ட தர்மத்தின் வழியாகத்தான், ஒருவரு டைய தலை விதி என்பது தீர்மானிக்கப்படுகிறது.''

‘அறம்' என்றால் தருமம் அல்ல. மேற்சொன்ன ஜாதி தர்மம், குலதர்மம், வர்ணதர்மம் என்ற பொருளில் வருவதாகும்.

மாறாக,

‘மனத்துக்கண் மாசிலன்' - தூய்மையான மனம் - அதனை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கம்!

ஆரிய ‘தர்மத்தில்' - ‘பிராயச்சித்தம்' என்ற ‘கழுவாய்'க்கு வாய்ப்பு உண்டு.

ஆனால், திராவிடத்தில் 'அறம்' என்பதில் அதற்கு இடமே தரவில்லை.

தவறு இழைத்தால் தக்க தண்டனையை அனுப வித்தே தீரவேண்டும்.

‘‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.'' (குறள் 655)

இதன்படி செய்தமைக்கு தண்டனை உண்டே தவிர,

‘கழுவாய்', ‘பிராயசித்தம்' கிடையாது.

இது திராவிடர் ஒழுக்கத்தின் விழுமிய பண்பாடு!

எதையும் செய்யலாம் பாவம், மன்னிப்பு உண்டி யலில் பணம் போட்டால் - காணிக்கை அளித்தால் அது அறம் ஆகாது.

அந்தணர் என்ற சொல்பற்றி நாவலர் இரா.நெடுஞ்செழியன் தனது திருக்குறள் ஆய்வுரை விளக்கத்தில் மிகவும் தெளிவாய் விளக்குகிறார்.

‘‘அந்தணர் (குறள் 30, 543) அந்தணன் (குறள் 8) ‘‘அந்தணர்'' என்ற சொல் இக்காலத்தில் பார்ப்பனரைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.

இடைக்காலங்களில் அந்தணர் என்ற சொல்லின் சிறப்பையும், மேன்மையையும் கருதி பார்ப்பனர் சூழ்ச்சி செய்து, அதனைத் தம்மைக் குறிக்கும் ஒரு சொல்லாக ஆக்கிக் கொண்டனர்.

வள்ளுவர், அழகிய அருள்தன்மை உடையோரைக் குறிக்கும் ஒரு சொல்லாகத்தான் அந்தணர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.''

அந்தணர் என்போர் அறவோர் என்பது வள்ளுவம் - அதாவது ‘திராவிடம்!'

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில்கூட (அதுவும் ஆயிரம் ஆண்டு கடந்த நிலையில்) பரி மேலழகர் என்ற வைணவப் பார்ப்பனர், உரைப் பாயிரத்தில்,

‘‘அறமாவது மனு முதலிய நூல்களில்

விதித்தன செய்தலும் விலக்கிய தொழிதலும்''

என்ற திரிபுவாதத்தைப் புகுத்தினார் என்றால்,

திருக்குறள்பற்றிய பல்வேறு திரிபுவாதங்கள், காவிச் சாயம் இப்போது பூசுவது ஒரு பண்பாட்டுப் போரின் தொடர்ச்சியேயாகும்!

ஆரியர் ஒழுக்கத்தில் ‘யாகம்' என்பது முக்கியம்.

ஆனால், திராவிடர் ஒழுக்கத் தத்துவத்தில், திராவிட அரசர்கள் யாகங்களைத் தடை செய்ததால் தான் தேவர் (ஆரியர்), அசுரர் (திராவிடர்) போர்களே கூட ஏற்படக் காரணம் என்பது புராண இதிகாசங்களில் காணப்படுகிறது.

யாகங்களையும், அதன் சடங்கு சம்பிரதாயங் களையும் கண்டித்து வள்ளுவர் திருக்குறளில்,

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

யாகம், நெய், எரித்தல் என்பவற்றை எப்படி கண்டிக்கிறார் திருவள்ளுவர்! காரணம் யாகம் நடத் துவோர் அணிந்த வேடத்தையே கூட வன்மையாகக் கண்டிக்கிறார்.

திராவிடத்தில் ‘தவம்' என்பது ஒழுக்கத்தின் உறுதி, உறுதி. உறுதியின் வெளிப்பாடு.

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு (குறள் 261)

தனக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும், இரண்டு உடையார் ‘தவம்' செய்வோர் ஆவார்!

எந்த சடங்கும் இதில் அடங்கவில்லை; மாறாத பண்பு நலன்களால் மனிதர்கள் உயரவேண்டும் - இது திராவிடத்தின் மாண்பு - தத்துவம்!

இப்படி இந்த ஆய்வை ஏராளமான தரவுகள்மூலம் தொடரலாம்!

திராவிடர் திருநாளாம் பொங்கல் பெருவிழா சிந்தனையாக இது ஒரு சிறு பகுதி மட்டுமே - தேன்துளி போல்!

‘‘மனுவின் மொழி'' - அறமானதொரு நாள் -

அதை மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்

என்றார் புரட்சிக்கவிஞர்!

ஆரியர்கள் தங்களை ‘மேன்மையர்' என்று பொருள் கூறி உயர்த்திக் கொண்டார்கள்.

அவர்கள் எப்படி நுழைந்தார்கள் என்பதை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் தம் நூலில் (‘இந்து மதம் எங்கே போகிறது?')

‘‘ஆரியர்கள் சிந்து நதி இமயலை என பள்ளத்தாக்குகளைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மலைச் சாலையைவிட அந்த மலைச்சாலை எவ்வளவு கடினமாக இருக்கும்?

நதிக்குக் கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் - இவற்றையெல்லாம் தாண்ட ஆரி யப் பெண்களுக்குத் தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப் பட்டது.

வரும் பெண்கள் வரலாம் - வராதவர்கள் இங்கேயே இருக்கலாம். ஆப்கானிஸ்தானத்தை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி.''

‘‘ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.'' (பக்கம் 19).

அந்த மனு தர்ம சாஸ்திரத்தில் திராவிடர்களை - ஆரியரல்லாதவர்களை, பழங்குடியினரைக் காட்டிலும் தங்களை மேன்மையர் என்று உயர்த்திப் பொருள் கூறியதோடு,  மற்றவர்களை தஸ்யூக்கள், தாசர்கள், நீஷர்கள் (நீச்சர்கள்), சண்டாளர்கள் என்றும், சூத்திரர், அசுரர்கள், அரக்கர், ராட்சசர்கள் என்றும் இழிவுபடுத்தினர். கருப்பின மக்களை இழிவுபடுத்தும் வண்ணமும் இச்சொற்கள் அமைந்திருக்கின்றன

அதுபோல, தங்களின் வடமொழியை ‘தேவ பாஷை' என்றும், கடவுள் உருவாக்கிய மொழி என்றும், தமிழ் முதலிய மற்றவை ‘நீஷ பாஷை' என்றும் இழி சொற்களால் உருவாக்கிய ஒருவகை பண்பாட்டுப் படையெடுப்பின் பல்வேறு கட்டங்கள் என்பதால்தான், தந்தை பெரியார் நோய் நாடி நோய் முதல் நாடுவதுபோல, நோயின் மூல நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சுயமரியாதை விஞ்ஞானத்தைப் புகுத்தி வெற்றி கண்டார்.

அது பல களங்களில் நடைபெற்றது. அதில் ஒன்று, பொங்கல் என்னும் திராவிடர் திருநாள் என்ற விழாக் கொண்டாட்டமான மீட்டுருவாக்கம்.

மேற்காட்டிய பல கருத்துகளை தந்தை பெரியார் என்ற நம் அறிவு ஆசான், எப்படி தமிழ்நாட்டு மேடைகளில் சமதர்மம், குலதர்மம் என்று பிரித்துக் காட்டி மக்களுக்கு விளக்கி, தமிழ் நிலத்தை பகுத்தறிவு வாதங்களால் உழுது பண்படுத்தி, சுயமரியாதையை விதைத்ததின் விளைவுதான் உழவர் அறுவடைத் திருவிழாவாகவும், பண்பாட்டு மீட்டுருவாக்க விழாவாகவும், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும்  அறிவுறுத்தினார்.

திராவிட இனத்தின் எழுச்சி - தத்துவப் போர்களால் தளராமல் நடைபெறுகின்றது - சமூக, அரசியல் பொருளியல் களங்களில்!

பொங்கலோ பொங்கல்!

அனைவருக்கும் அனைத்தும் தந்து உழவை, உழவர் உரிமை காக்க இத்திருநாளில் சூளுரைப்போம்!

புதன், 6 ஜனவரி, 2021

திராவிடம் பனை மரம்... நின்று பயன் தரும்!


தொ. பரமசிவன் பேட்டி

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் வழி திராவிட மரபின் உன்னதங்களைப் புதிய தலைக்குக் கடத்திய ஆய்வாளர் தொ.பரமசிவன், அடுத்தடுத்த அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஒரு அறைக்குள் முடங்கிவிட்டார். தன் பேச்சுகளாலும் எழுத்துகளாலும் ஒரு மாணவப் படை யையே உருவாக்கிய பேராசிரியரின் பேச்சு, எழுத்து எல்லாம் கிட்டத்தட்ட முடங்கி விட்டன. ஆனால், திராவிட அரசியல் என்று சொன்ன மாத்திரத்தில் தன் ஆற்றல் அத்தனையையும் பெருக்கிக்கொண்டு எழுந்தார்.

இன்றிலிருந்து பார்க்கும்போது திராவிட எதிர்காலம் எப்படித் தெரிகிறது?

எனக்கு வயது 15. காரைக்குடிக்கு பெரியார் வந்திருந்தார். போய்ப் பார்த்தேன். அன்று அவர் பேசியதெல்லாம் இன்று காலை பேசியதைப் போலத் தான் இருக் கிறது. ஏன் கர்நாடகத்தில் இந்தியை எதிர்த்து இன்றைக்குப் போராடுகிறார்கள்? அதே பிரச்சினைகள் தொடர்வதால் தானே? திராவிடக் கருத்தியல் உயிர்த் துடிப்போடு இருப்பதால் தானே? இந்துத் துவ வெறியர்கள் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வன்முறையில் ஈடுபடும்போது, திராவிட நாட்டைப் பற்றிக் கேரளம் பேசுகிறது? தனிப்பட்ட சுக துக்கங்கள், பதவி, அதிகாரங்களை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, இந்தச் சமூகத் திற்காக ஓடி உழைத்துத் தன் முழுச் சொத் துக்களையும் பொதுவாக்கிவிட்டுப் போன தலைவர் பெரியார்! அந்தத் தியாகம் எல்லாம் வீண் போகாது. ‘தென்னை வச்ச வன் தின்னுட்டு சாவான்; ‘பனையை வச்ச வன் பார்த்துட்டு சாவான்’ என்று ஒரு பழமொழி உண்டு. “திராவிடம் பனை மரம். நின்று பயன் தரும்“.

திராவிடக் கட்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. வலுவான தலைவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே?

உலகமே மூக்கில் கை வைக்கும்படி பத்து இலட்சம் மக்கள் பங்கேற்ற ஜல்லிக் கட்டுக்கான போராட்டத்தை எந்த இயக்கம், தலைவர்கள் நடத்தினர்? திராவிட அரசி யல் என்பது இந்த மக்களின் அரசியல். இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றும் இல்லா மல் போகட்டுமே? அதனால் திராவிட அரசியல் அழிந்து விடுமா? அதிலிருந்து புதுப்புது இயங்கங்களும் தலைவர்களும் ஊற்றெடுப் பார்கள்.

- “தெற்கிலிருந்து ஒரு சூரியன்” நூலிலிருந்து...

திங்கள், 21 டிசம்பர், 2020

திராவிடம் வெல்கவே! நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

நீதிக்கட்சித் தலைவர்களின் உருவப் படங்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் தோழர்கள் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 17.12.2020).

இந்நாள் தமிழ்நாட்டு வரலாற்றில், குறிப்பாக பார்ப் பனர்கள் அல்லாத ‘சூத்திரர்' ‘பஞ்சமர்' என்று ஆக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் - ஆட்சி ரீதியாக திருப்பம் ஏற்பட்ட வைரக் கல்வெட்டு நாள்.

ஆம்! இந்நாள்தான் (17.12.1920) நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், சென்னை மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடலூர் ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) தலைமையில் மூவர் கொண்ட அமைச்சரவை பதவி யேற்ற நாள்! (மற்ற இரு அமைச்சர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி).

இந்த டிசம்பர் 20 இல்தான் (1916) வெள்ளுடை வேந்தர்  பிட்டி தியாகராயரால் நீதிக்கட்சி சார்பில் ‘‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை'' (The Non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.

ஒரு நூறாண்டுக்கு முன் பார்ப்பனர் அல்லாத திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சி 1920 முதல் 1937 வரை 17 ஆண்டுகள் செய்த சாதனைகள் அனைத்தும் இன்று நம் மக்கள் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கும், வாய்ப்புகளுக்கும், வளமைகளுக்கும் போடப்பட்ட மிகப் பலமான அடிக்கற்கள் ஆகும்.

அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே சட்ட ரீதியாக இந்திய அரசமைப்புச் சட்ட 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் இன்று தமிழ்நாட்டு மக்கள் 69 விழுக்காடு அளவில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பயன் பெறுகிறார்கள் என்றால், அதற்கான தொடக்கத்தைக் கொடுத்த அந்தத் தூயதான நல்லாட்சிக்கு நன்றி உணர்வுடன் இந்நாளில் நமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்!

எத்தனை எத்தனை மகத்தான சாதனைகள் அவை. இப்பொழுது நினைத்தால்கூட மயிர்க்கூச்செரிகிறது.

‘‘ஜனநாயகக் குழந்தை தவழ்ந்து விளையாடும் தொட்டில்'' என்று போற்றப்படும் இங்கிலாந்தில்கூட முழுமையான வடிவத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை 1928 இல் தான் கொண்டுவரப்பட்டது - தொடர் போராட் டங்களுக்குப் பிறகு.

ஆனால், நீதிக்கட்சி நிர்வாகம் செய்த சென்னை மாநிலத்தில் 1921 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது (அரசு ஆணை எண்: 108, நாள்: 10.5.1921).

எடுத்துக்காட்டாக நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட முக்கிய ஆணைகளும், சட்டங்களும் இதோ:

* முதல் வகுப்புரிமை ஆணை (M.R.O. Public Ordinary Service G.O. No.613, Dated: 16.9.1921).

* பதவி உயர்விலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யப்பட்டது. (M.R.O. Public Ordinary Service G.O. No.658, Dated: 15.8.1922).

* ‘‘பஞ்சமர்'' என்ற சொல் நீக்கப் பெற்று, ‘‘ஆதிதிராவிடர்'' என அழைக்கப்படவேண்டும். (அரசாணை எண்: 817 நாள்: 25.3.1922).

* கல்லூரிகளில் முதல்வர்கள் பார்ப்பனர்களாக இருந்த நிலையில், பார்ப்பனர் அல்லாதார் கல்லூரிகளில் சேர முட்டுக்கட்டை நிலவிய சூழலில், ஒவ்வொரு அரசு கல்லூரியிலும் குழுக்கள் (Selection Board) அமைக்கப் பட்டது. (அரசாணை எண்: 536 நாள்: 20.5.1922).

* கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனர் அல்லாத பிள்ளைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கென்றே தனி ஆணை (அரசாணை எண்: 849 நாள்: 21.6.1923).

* சென்னை பல்கலைக் கழக செனட்டின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், எல்லா வகுப்பினருக்கும், பொது நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழி செய்யும் ஆணை (பல்கலைக் கழக சட்டம் ஆணை 1923).

* பொதுக் கிணறு, குளம், சாலைகளில் தாழ்த்தப் பட்டோர் புழங்கும் உரிமை (தீர்மானம் முன்மொழிவு: இரட்டைமலை சீனிவாசன் - கெசட்டில் வெளியீடு 24.2.1925).

* தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்கப்பட வேண்டும். (அரசாணை எண்: (அ) 205 நாள்: 11.2.1924, (ஆ) 825 நாள்: 24.9.1924). தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்காகவே தனியே லேபர் துறை.

* இந்து சமய அறநிலைய சட்டம் (அரசாணை எண்: 29 நாள்: 27.1.1925).

* சென்னை மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கென்றே ஓர் ஆணை (எண்: (அ) 636 நாள்: 2.5.1922 (ஆ) 1880 நாள்: 15.9.1928).

* ஆங்கிலேயர் எதிர்ப்புக்கிடையே மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கியது பனகல் அரசர் தலைமையிலான அமைச்சரவை.

* மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதம் தேவை என்ற நிபந்தனையை நீக்கியதும் பனகல் அமைச்சரவையே.

* நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு முதன்முதலில் செயல்பாட்டுக்கும் வந்த வகுப்புரிமை ஆணை (G.O. M.S. No.1880 Education Dated: 15.9.1928 மற்றும் அரசு ஆணை எண்: 226 நாள்: 27.2.1929).

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கான சட்டம் இயற்றல் (1928 டிசம்பர் 21).

* சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உருவாக்கம் (அரசாணை எண்: 484 நாள்: 18.10.1929).

* தேவதாசி ஒழிப்புச் சட்டம் - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முயற்சியால். (1930 இல்)

* சென்னை பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதப் படிப்பு உண்டு. ஆனால், தமிழுக்கென்று ஒரு துறை இல்லை. இந்த நிலையை மாற்றியது நீதிக்கட்சி.

* சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300; தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாய முதலியாருக்கு மாதச் சம்பளம் ரூ.81. இந்தப் பேதத்தை நீக்கியதும் நீதிக்கட்சி ஆட்சியே!

* வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் சென்னை மேயராக இருந்தபோதுதான் முதன்முதலில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நண்பகல் உணவளிக்க வழி செய்யப்பட்டது. அதன்பின் தான் நகராட்சி சட்டத்தைத் திருத்தி, நீதிக்கட்சி ஆட்சியில் மாநில அரசே மதிய உணவுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது. (அரசாணை எண்: 1008 (L&M) நாள்: 7.6.1922).

* தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி வெறும் சமஸ்கிருதக் கல்லூரியாக இருந் ததை மாற்றி தமிழும் சொல்லிக் கொடுக்க ஆவன செய்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான ஏ.டி. பன்னீர் செல்வம். (ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்தவர்).

* அரசு மாணவர் விடுதிகளான ராஜா மடம், உரத்தநாடு விடுதிகள் பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமாகவே இருந்ததை அனைவருக்கும் பயன் படும்படிச் செய்தவரும் அவரே!

* இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து என்று ஆணை பிறப்பித்தார்.

* தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்தவர் - நீதிக்கட்சியின் முக்கிய தலைவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார் ஆவார்.

இந்த நீதிக்கட்சியின் தொடர்ச்சிதான் அரசியல் ரீதி யில் தி.மு.க.வாகும்.

சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்; சுயமரியாதைத் திருமணச் சட்டம்; இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை - தமிழும், ஆங்கிலமும்தான்; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், சுயமரியாதை இயக்க வீராங் கனைகளின் பெயரில் மகளிர் வளரச்சி - உரிமை சட்டங் கள் - திட்டங்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்யும் இணையர்க்கு தங்கம் - நிதி உதவி.

நுழைவுத் தேர்வு ரத்து - நீட்டை எதிர்த்து வழக்கு.

பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமை ஆக்கியது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், இலவச கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், கைரிக்ஷா ஒழிப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட் டோருக்கு என்று தனித்தனி துறைகள், அரசு ஊழியர் இரகசிய குறிப்பாணை (Personal File) இரத்து,

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 சதவிகிதம்; தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடங்கும் ஆணை.

பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள், உள்ளாட்சிப் பதவிகளில் பெண் களுக்கு 33 விழுக்காடு, இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்ற நிலை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு, கோவில்களில் கருணை இல்லம், மீனவர்களுக்கு இலவச வீடுத் திட்டம், பசுமைப் புரட்சி திட்டம், வெண்மைப் புரட்சி திட்டம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி ஒதுக்கீடு, விவசாயத்துக்கு இலவச மின்சாரம், தமிழ் செம்மொழியாக அங்கீகாரம், தொழிற்கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 விழுக்காடு ஒதுக்கீடு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி உழவர் சந்தை, சமச்சீர் கல்வி முறை, திருவாரூர், கோவையில் மத்திய பல்கலைக் கழகங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்,

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளில் பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் - அதற்குள் மய்யக் கருவாக - புள்ளியாக சமூகநீதி  - இனப் பண்பாடு எனும் கண்ணோட்டமும் கண்டிப்பாக இருக்கும்.

இந்தியாவிலேயே சமூகநீதி என்ற சமுதாயக் கொள்கை உடைய ஓர் அரசியல் கட்சி உண்டு என்றால், அது தி.மு.க.தான்!

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவைக்கான நூற்றாண்டு என்னும் வைர ஒளி மின்னும் நாளில் (17.12.1920) இவற்றையெல்லாம் அசை போடுவோம்!

அன்று எதிர்க்கத் தொடங்கிய உயர்ஜாதி ஆணவ எதிர்ப்பு இன்றுவரை தொடர்வதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், அதன் வழி வந்த விழுதான தி.மு.க.வை ஆட்சிப் பீடத்தில் நிறுத்த உறுதி எடுப்போம்!

வெல்க திராவிடம் -

வெல்கவே!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

17.12.2020