திங்கள், 14 அக்டோபர், 2019

பார்வையாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழர் தலைவரின் பதில்கள் திராவிடம் என்பதன் உள்ளடக்கம்தான் தமிழ்த் தேசியம்! - 1&2

பாஸ்டன்:  பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்  கருத்துரை


* 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் எதிர்காலம் என்ன?

* உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது?

* மத்திய  அரசு துறைகளில் நமக்குக் கிடைத்த சதவிகிதம் என்ன?

* பெரியாரைப் பொதுமைப்படுத்த தவறிவிட்டோமா?



பாஸ்டன், அக்.14  திராவிடம் என்பதின் உள்ளடக்கம்தான் தமிழ்த் தேசியம் என்று விளக்கமளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். மேலும் பார்வையாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் விடை யளித்தார்.

‘‘பெரியார் என்ற போர்க் கருவி''


பாஸ்டனில் கடந்த 29.9.2019 அன்று பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தில், ‘‘பெரியார் என்ற போர்க் கருவி'' என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி பதில் விவரம் வருமாறு:

தமிழ்த் தேசியம்: திராவிட இயக்கங்கள்


எப்படி கையாள்வது?


கேள்வி: தற்போதைய தமிழ்த் தேசியம், அதன் எதிர்காலம், அதை திராவிட இயக்கங்கள் எப்படி கையாள்வது? என்பது பற்றிய உங்கள் கருத்து?

தோழர் பிரபு, நியூஜெர்சி

தமிழர் தலைவர்: திராவிடம் என்று சொல்லுகிற பொழுது அதனுடைய உள்ளடக்கம்தான் தமிழ்த் தேசியம், உண்மையான தமிழ்த் தேசியம்.

தமிழ்த் தேசியத்தை இப்பொழுது போலியாக, திரையாக பயன்படுத்தக் கூடிய சூழலும், எதிரிகளுக்கு அது கையாளாகப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு, அரசியலில்  தங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதற்காக, திராவிடத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய சூழலும் இன்றைக்கு ஏற்படுகின்றன.

எனவேதான், உண்மையான தமிழ்த் தேசியம் எது? போலி தமிழ்த் தேசியம் எது? என்று தெரியவேண்டும்.

தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல. தமிழ்த் தேசியம் என்பது நம்முடைய அடையாளம் என்று சொல்லுகிற நேரத்தில், முதன்முதலில் இந்தக் குரலைக் கொடுத்தவரே தந்தை பெரியார் அவர்கள்தான்.

ஆனால், தமிழ் என்று சொல்லுகிற நேரத்தில், அவர் களே சொன்ன விளக்கப்படி, அதிலே பார்ப்பனர்களும் உள்ளே புகுந்து, எதிரிகள் உள்ளே நுழைந்து அதனை வேறு வகையாக திசை திருப்பி விடுகிறார்கள் என்பதற் காகத்தான் திராவிடம் என்பதை மிகத் தெளிவான உணர்வோடு எடுத்துச் சொன்னார்கள்.

இது சூத்திரர்கள் கழகம், பஞ்சமர்கள் கழகம், ஆதி திராவிடர்கள், திராவிடர்கள் என்று வருகின்ற நேரத்தில், அந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லும்போது, நாம் மண்ணுக்கு உரிமை பேசுவதை விட, மக்களுக்கு உரிமை பேசுகிறோம், உரிமை வேண் டும் என்று சொல்லுகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்டிருப்பது.

எனவே,  இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசிய லிலும் சரி, இந்திய அரசியலிலும் சரி, வேறு இடங்களிலும் இந்த பெரியார் உணர்வு உண்டாக்கிய திராவிட இயக் கங்கள் உருவாக்கிய இந்த உணர்வை வேறு சிலர் குளிர்காய்வதற்குப் பயன்படுத்துவதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டு நாம் ஏமாந்து விடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால், பச்சையாக பச்சை பாம்பும் இருக்கும்; பச்சை இலையும் இருக்கும். ஆகவே, இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு உதாரணமாக, ‘‘பார்ப்பனர்கள் பாம்புத் தின்கிற ஊருக்குப் போனால், நடுக்கண்டம் நம்முடையது'' என்று சொல்வார்கள். அதுபோலத்தான், இப்போது பலரும், இந்த தமிழ்த் தேசியத்தை, நமக்கு எதிராக, குறிப்பாக திராவிட இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு, லட்சியத்திற்கு - திராவிடம் என்று சொல்லும்பொழுது ரத்தப் பரிசோதனையோ, மற்றவர்களிடமிருந்து பிரிவினையோ என்று சொல்லவில்லை. மாறாக, பிறப் பொக்கும் என்பதுதான்.

உரிமைகள் என்று வருகின்றபொழுது நம்முடைய உரிமைகளை நாம் வலியுறுத்துகின்றோம், மொழி உரிமை மற்ற எல்லா உரிமைகளுக்கும்.

இந்தத் தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் வடமொழி ஆதிக்கத்தை எந்த அளவிற்கு எதிர்க்கிறார்கள். வடமொழி ஆதிக்கத்திற்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய பார்ப்பனச் சடங்குகள், பார்ப்பன சம்பிரதாயங்களுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

பார்ப்பனர்கள் தமிழர்களா?


சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமல்ல, பார்ப்பன ஆதிக்கம் கொழுந்துவிட்டு எழும்புகின்ற நேரத்தில், அவர்களைப்பற்றி இவர்களுடைய கருத்து என்ன? பார்ப்பனர்களும் தமிழர்களா? இல்லையா? பார்ப்பனர் களும் தமிழர்கள்தான் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கலாமா?

அடிகளார் அழகாக சொன்னார், ஒருவர் இந்த நாட்டிலே அந்த ஒரு மொழி பேசுகிறார்; நீண்ட காலம் இருக்கிறார் என்று சொன்னால், அவரை அந்த நாட்டிற்குச் சொந்தக்காரர் என்று சொல்ல முடியாது.

உதாரணமாக, நீண்ட காலத்திற்கு முன்பு அண்ணா ஒரு கேள்வி கேட்டார்,

ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி, வலங்கைமான் சாஸ்திரி மிகப் பிரபலமாக ஆங்கிலம் பேசுவார். நுனி நாக்கு ஆங்கிலம். silver-tongued orator  என்று பெயர். அதற்காக எந்த ஆங்கிலேயரும் அவரை வெள்ளைக் காரர் என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதுபோல, இந்த நாட்டில் பார்ப்பனர்கள் நம்மோடு இருந்தாலும்கூட, தமிழ் மொழியைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர் களும், தமிழர்கள் என்று சொல்லும்பொழுது, தமிழ்த் தேசியத் தினுடைய அடித்தளத்தையே, வேரையே வெட்டி விடு கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொன்றைத் தெளிவாகச் சொல்லவேண்டும். எவ்வளவுதான் மாறுபட்டவராக இருந்தாலும், அவர்கள் வீட்டிலே தமிழ்த் திருமணங்கள் நடைபெறுகிறதா? தமிழிலே நிகழ்வுகளை, சடங்குகளை நடத்துகிறார்களா? என்று எண்ணிப்பாருங்கள்.

அவ்வளவு தூரம் போகவேண்டாம், சமஸ்கிருத மந்திரத்தைத்தானே இன்னமும் கோவில்களில் சொல் லிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவாசகத்திற்கு உருகார்; ஒரு வாசகத்திற்கும் உருகார்.

தேவாரம், திருவாசகம் அத்தனையும் இருக்கிறது என்று சொன்னால், சைவ சமய புலவர்கள் நால்வர்கள் என்று சொல்வதில், திருநாவுக்கரசர் அப்பர் அடிகளைத் தவிர, மீதி மூன்று பேருமே பார்ப்பனர்கள்தான்.  அவர் கள் பாடியதுதான் தேவாரம், அவர்கள் பாடியதுதான் திருவாசகம். ஆனால், அதைக்கூட அவர்கள் ஏன் கோவிலில் பாட விடமாட்டேன் என்கிறார்கள்.

தமிழ் நீஷப் பாஷையாம்!


பார்ப்பனர்களே தமிழைச் சொன்னாலும், அதனை விடமாட்டார்கள். காரணம், தமிழ் நீஷ பாஷை; சமஸ்கிருதம் தேவ பாஷை என்று சொல்கிறார்கள். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு அதனுள் இருக்கிறது.

எனவே, தேசியம் என்பது அரசியலில் ஓட்டு வாங்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய சொல்லாக இருக் கக்கூடாது. பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக் கூடிய ஒரு ஆயுதமாக இருக்கவேண்டும். அந்த ஆயுதம் பெரியார் என்ற ஆயுதமாகத்தான் இருக்க முடியுமே தவிர, இந்தக் கொள்கையாகத்தான் இருக்க முடியுமே தவிர, வேறு கிடையாது.

எனவேதான், உண்மையான தமிழ்த் தேசியம், திராவிடத்திற்குள் அடக்கம்; திராவிட உரிமையை அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பைப்பற்றி புரிந்து கொண்டு, யார் யார் ஏற்கிறார்களோ, அவர்கள்தான் உண்மையான தேசியவாதிகள்; மற்றவர்கள் போலி நாணயங்கள் என்பதுதான் மிக முக்கியம்.

69% இட ஒதுக்கீட்டிற்கு எதிர்காலத்தில்


சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டா?


கேள்வி: 69% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன, எதிர்க்காலத்தில் அதற்கு சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டா?

தோழர் ரவிக்குமார், சிகாகோ

தமிழர் தலைவர்: நிச்சயமாக. நல்ல கேள்வி. 69 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால், நாகலாந்து வடக்குப் பகுதியில், வடகிழக்கு மாநிலங்களை எல்லாம் சேர்த்தால்தான் 80 சதவிகிதம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், ஒரு மாநிலம் என்ற அளவில் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒன்று - அதிகமான அளவிற்குத் தமிழ்நாடு.

அதுமட்டுமல்ல, 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு இருக்கிறதே, அது வேறு யாருக்கும் கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி, முறைப்படி,

9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் ஒரு பொருள் வைக்கப்பட்டால், அது நீதிமன்றத்திற்குப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டது.

அதையும்கூட இப்போது திரிபுவாதம் செய்கிறார்கள்; பார்ப்பன செல்வாக்கு இருக்கிற காரணத்தால், உயர்ஜாதிக்காரர்களின் ஆதிக்கம் நீதிமன்றங்களில் இருக்கின்ற காரணத்தால்.

இந்த சட்டத்தைக் கொண்டு வரும்போது, தமிழகத் தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர், தன்னை ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒரு முதலமைச்சர்.

அதேபோல, அப்போது திராவிடர் கழகத்தின் கருத்தை ஏற்று,  நாங்கள் எழுதிக் கொடுத்ததை அப் படியே மசோதாவாக, சட்டமாக ஆக்கி, நாடாளுமன்றம் நம்முடைய யோசனையை ஏற்று, இரண்டு நாள்கள் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, விவாதம் இல்லாமல், கட்சி வேறுபாடு இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மூன்று மாதங்களுக்குமேல் கிடப்பில் போடப்பட்டது டில்லியில்.

முதலமைச்சர் தலைமையில், பிரதமராக இருந்த நரசிம்மராவை சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே வேகமாக சொன்னார்; தமிழ்நாடு கொந் தளித்துப் போய் இருக்கிறது. ரத்த ஆறு ஓடக்கூடிய சூழல் இருக்கிறது - சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். ஆகையால், இதனை உடனடியாக நீங்கள் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.

மூன்று பார்ப்பனர்கள்


நாடாளுமன்றத்தில் ஒரு பெரிய வேடிக்கை என்னவென்றால், அர்ஷத் மேத்தா விவகாரம் அந்த நேரத்தில் ஓடியதால், 30, 40 நாள்கள் நாடாளுமன் றத்தையே நடக்கவிடாமல் செய்தார்கள் எதிர்க்கட்சியினர்.

அந்த நேரத்தில், வி.பி.சிங் அவர்கள் பதவியில் இல்லை என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து - காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி அவர் கள் இருந்தார். அவரையும் சந்தித்துப் பேசினார்.

இதற்காகவும், மண்டல் ஆணையத்திற்காகவும்

42 மாநாடுகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து,  இந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது; இத்தனை கோடி மக்களைப் பொறுத்த ஒன்று. ஆகவே, நீங்கள் தயவு செய்து ஒரு நாளைக்காவது நாடாளுமன்றத்திற்கு வந்து வாக்களியுங்கள்என்று சொன்னோம். அதற்கு வி.பி.சிங் அவர்கள் முன்னாலே நின்றார்.

வடபுலத் தலைவர்கள் எல்லாம் நமக்குத் தொடர்பு இருந்த காரணத்தினால், திராவிடர் கழகம் இதனை முன்னின்று செய்து, பல மாநிலங்களுக்கும் சென்று, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும் ஓரணியில் கொண்டு வருவதற்கு அரும்பாடுபட்டு, அந்தக் குரலை ஒலிக்க வைத்தவுடனே, அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அன்றைக்கு வாஜ்பேயி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவரையும் சந்தித்துப் பேசினோம். எல்லோரும் இந்த மசோதாவிற்கு ஒப்புக்கொண்டார்கள். விவாதம் இல்லாமல் இதனை நிறைவேற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டோம்.

அன்றைக்கு சீதாராம் கேசரி அவர்கள்தான் இத்துறை அமைச்சராக இருந்தார். பிரதமராக இருந்தவர் நரசிம்ம ராவ் அவர்கள்.

எல்லோரும் வாக்களித்தார்கள், எதிர்ப்பே இன்றி, விவாதம் இன்றி அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

பிறகு அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்குப் போனது. அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்தவர் உத்தரப்பிரதேச பார்ப்பனரான சங்கர் தயாள் சர்மா ஆவார்.

எனவே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இந்தியப் பிரதமர் நரசிம்மராவ், இந்தியக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா - இந்த மூன்று பேரும் உயர் ஜாதிக்காரர்கள்.

இந்த மூவரையும் வைத்துக்கொண்டு வேலை வாங்கியதுதான் மிகப்பெரிய சாதனை.

ஒரு காலத்தில் நாங்கள் அவர்களுக்குப் பயன்பட் டோம் என்று எங்கள்மீது சேற்றை வாரி இறைத்தார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம், இதுதான் வரலாறு.

அதன் பிறகு 69  சதவிகித இட ஒதுக்கீடு சட்டமாகி, இன்றைக்கு ஏறத்தாழ 35 ஆண்டுகளாக 69 சதவிகிதத்தை அனுபவிக்கிறார்கள். மற்ற மாநிலத்தவர்கள் எங்களுக் கும் தமிழ்நாட்டில் இருப்பதுபோன்று  கொடுங்கள் என்று சொல்கிறார்கள். 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது; அப்படிப் போனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகிவிடும் என்றெல்லாம் மேலேயும், கீழேயும் குதித்த உயர்ஜாதிக்காரர்கள், இன்றைக்கு அவர்கள், தங்களுக்கு 10 சதவிகிதம் கொடுக்கிறார்கள் என்றவுடன், 50 சதவிகிதம் எல்லாம் ஒன்றும் பிரமாதம் இல்லை; அதையும் தாண்டி இருக்கலாம் என்று சொன்னால், அவர்களையும் புரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.

ஆனால், இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமல்ல, பொதுவாக இந்தியாவில் இருக்கின்ற இட ஒதுக்கீடு, மண்டல் கமிசனில் இருக்கிற 27 சதவிகித இட ஒதுக்கீடு மத்திய அரசில் -  எல்லாவற்றிற்குமே ஆபத்து ஏற்படக்கூடிய அளவிற்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் - அந்த அமைப்புதான்  உண்மையாக இந்திய அரசியலை நடத்தக்கூடிய ஒரு அமைப்பு - நேரிடையாக அரசியலுக்குப் போகாவிட்டாலும், பா.ஜ.க. என்பது அதனுடைய அரசியல் வடிவம். ஆகவே, அதற்கு உத்தரவுப் போடுகிறார்கள்.

அவர்கள் அடிக்கடி இட ஒதுக்கீடுபற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும்; விவாதம் செய்யவேண்டும் என் றெல்லாம் சொல்லிச் சொல்லி அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறார்கள்.

வாய்ப்புக் கிடைக்குமா? சமூகநீதியினுடைய கழுத்தை நெரிப்பதற்கு என்பதற்காக நடைமுறையில் அவர்கள் அதனை செய்கிறார்கள்.

சட்டப்படி நமக்கு அந்த உரிமை இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் நடைமுறைக்கு வரும்பொழுது, இதனை அவர்கள் செயல்படுத்தாமல் விடுகிறார்கள்.

மத்திய அரசு துறைகளில் நமக்குக் கிடைக்கும் சதவிகிதம் என்ன?


உதாரணமாக மத்திய அரசு பணிகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்று சொன்னால், இதுவரையில் அவர் கள் 11 சதவிகிதம்தான் கொடுத்திருக்கிறார்கள். அதே போல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, 23 சதவிகிதம் வரவேண்டும் என்று சொன்னால், அதிலே கூட முழுமையாக கிளாஸ் 1, கிளாஸ் 2 என்னும் முதல் பகுதியில் நிரம்பவில்லை.

அதேபோலத்தான், 31 நீதிபதிகள் இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தில், இப்போது 4 பேரை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அங்கே பார்த்தீர்களேயானால், 4 பேர் இப்பொழுது நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னுங் கேட்டால்,  சீனியாரிட்டியை ஒதுக்கி, பணிமூப்பு அடிப் படையைக்கூட ஒதுக்கிவிட்டு, பார்ப்பனர்களாகவே நான்கு பேரையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இவர்களைவிட மூத்தவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர், மணிப்பூரில் இருக்கிறார். அவர் 24 ஆம் இடத்தில் இருக்கிறார்; ஆனால், 35 ஆம் இடத்தில் உள்ள ஒருவரைக் கொண்டு வந்து நியமித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நீதித்துறையிலே இட ஒதுக்கீடு மாவட்ட அளவிலேதான் இருக்கும்; அதற்குமேலே உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் கிடையாது என்று அவர்களே ஒன்றை உருவாக்கி வைத்துவிட்டார்கள். இதையெல்லாம் எதிர்த்துப் போராடவேண்டும்.

எனவேதான், சமூகநீதிப் போராட்டம் என்பது ஒரு தொடர் ஓட்டம். அது நடந்துகொண்டேதான் இருக்கும்.

சுதந்திரத்தைக் காப்பாற்றிட விழிப்புணர்வு தேவை!


ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு,

Eternal vigilance is the price of  liberty

நாம் நம்முடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமானால், எப்பொழுதும் விழிப்பாக இருக்கவேண்டும்.

அதுபோல, இப்பொழுது சமூகநீதியை, நம்மு டைய உரிமையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டு மானால், நாம் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்புணர்ச்சி தேவை.

அடிக்கடி அதற்கு சோதனை வருகிறது. பாம்பு புற்றுக்குள்ளேயிருந்து வெளியே தலையை நீட்டு கிறது; பெரியாரின் கைத்தடியை ஓங்கியவுடன், தலையை உள்ளே இழுத்துக் கொள்கிறது பாம்பு.

எனவே, பெரியாரின் கைத்தடி என்றைக்கும் தயாராக இருக்கவேண்டும். அதற்கும் இந்தப் போர் ஆயுதம் மிகவும் முக்கியம்.

உங்களால் மறக்க முடியாத


நிகழ்வுபற்றி....


கேள்வி: தந்தை பெரியாருடன் அணுக்கமாக பணி யாற்றி உள்ளீர்கள். அதில் மறக்கமுடியாத நிகழ்வு ஏதாவது ஒன்றைப்பற்றி கூறுங்கள்? இயக்கப் போராட் டத்தினைப்பற்றி...?

தோழர் அறிவுப்பொன்னி, வெர்ஜினியா

தமிழர் தலைவர்: எதுவுமே மறக்க முடியாததுதான். எதையும் நான் மறந்ததில்லை. அதனால், எதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னால், நான் அதைப்பற்றி சொல்லுகிறேன்.

அய்யா அவர்கள், தன்னுடைய தொண்டர்களைப் பற்றி எவ்வளவு கவலைப்படுகிறவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மற்ற தலைவர்களுக்கும், பெரியாருக்கும் உள்ள அணுகுமுறை என்னவென்றால்,

மற்ற தலைவர்களை தூரமாக இருந்து பார்க்கும் பொழுது, அவர்களின்மேல் ஒரு பெரிய பற்று இருக்கும். ஆனால், நெருக்கமாக அவர்களைப் பார்க்கும்பொழுது, இவ்வளவுதானா என்று நினைப்பார்கள்.

ஆனால், நம்முடைய அய்யா விஷயத்தில், நம்முடைய அறிவாசான் விஷயத்தில், அவரைப் பொறுத்தவரையில், அவரை நாம் தூரத்தில் இருந்து பார்ப்பதைவிட, நெருக்கத்தில் பார்க்கும்பொழுது, அவர் மேலுள்ள மரியாதை அதிகமாகும்; அன்பு அதிகமாகும்.

ஒரு சின்ன செய்தியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

இரவு பொதுக்கூட்டம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்ததும், ‘‘வீரமணியை கூப்பிடுங்கள்'' என்று புலவர் இமயவரம்பன் அவர்களிடம் சொல்லும்பொழுது,

புலவர் இமயவரம்பன் அவர்கள் கொஞ்சம் தயங்கி, ‘‘அய்யா, அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்'' என்று சொன்னவுடன்,

இல்லை, இல்லை அவரை உடனே எழுப்புங்கள் என்று சொல்லமாட்டார்.

பரவாயில்லை. நாங்கள் வேனில் வரும்பொழுது, நான் படுத்திருந்தபொழுதுகூட, அவர் விழித்துக்கொண்டு தான் வந்தார்; அவரை எழுப்பவேண்டாம் என்று சொல்வார்.

போராட்டத்தில் பங்கேற்றதால், நம்முடைய தோழர் கள் எல்லாம் தண்டிக்கப்பட்டு சிறைச்சாலையில் இருக் கிறார்கள். என்னை அழைத்து, நீங்கள் அம்மாவுடன் இருங்கள் என்று சொல்லிவிட்டு, ஆறு மாதம்  தண்டனை என்று சொல்லி, அய்யா தண்டிக்கப்பட்டு, உடல்நிலைக் காரணமாக மருத்துவமனையில் இருக்கிறார்.

அம்மாவுடன் இருந்தேன்!


நான் சட்டக் கல்லூரிப் படிப்பைப்பற்றி கவலைப் படாமல், அம்மாவுடன்தான் இருந்தேன்.

சிறைக்குப் போனவர்களின் குடும்பத்தினரை ஒவ் வொருவராக சந்தித்து, உதவி தேவைப்படுமேயானால், உதவி செய்யுங்கள் என்றார். சில குடும்பத்தினர் வசதி இல்லாத குடும்பம்; அன்றாடம் தொழில் நடத்தி, குடும்பத்தை நடத்துகின்ற தோழர்கள். அவர்களைப்பற்றி அய்யாவிற்கு நன்றாகத் தெரியும்.

அந்தக் குடும்பத்தினரைப் பார்த்து, உதவிகளைச் செய்யுங்கள் என்றார் அய்யா அவர்கள்.

பல இடங்களுக்குச் சென்று அந்தத் தோழர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். வசதியாக உள்ளவர்கள் உதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். சாதாரண மாக உள்ள குடும்பத்தினர்கூட உதவிகளை வாங்க மறுத்தார்கள். நாங்கள் வற்புறுத்தி, அய்யா செய்யச் சொன்னார் என்று சொல்லி, உதவிகளை செய்தோம்.

இந்தத் தகவல்களை அய்யாவிடம் சொன்னோம். அய்யா அவர்கள் தொண்டர்களைப்பற்றி அதிகமாகக் கவலைப்படக்கூடிய ஒருவர். அவர்களுடைய குடும்ப விஷயங்கள் உள்பட எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு, எந்த உதவிகள் என்றாலும் செய்யக்கூடிய ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

அவருடைய ஒவ்வொரு அணுகுமுறையைப் பார்த் தீர்களேயானால், மிகச் சிறப்பாக இருக்கும். கொள்கைக் குடும்பம் என்று சொல்லும்பொழுது, கொள்கையும் இருக்கும்; அந்தக் குடும்பப் பாசமும் இருக்கும்.

இன்னுங்கேட்டால், ஒரு செய்தியை நான் சொல்ல விரும்புகிறேன்.

நான் கல்லூரி இன்டர்மீடியட்டில் தேர்வாகிவிட்டேன். பொருளாதாரப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றதால், எனக்குப் பரிசு கொடுக்கப் போகிறார்கள். பொதுத் தேர்வில், இன்டர்மீடியட்டில்.

அய்யா அவர்கள் பி.எம்.ஓ. செய்தார்


அடுத்தாக, பொருளாதார ஆனர்ஸ் படிப்பு படிக்க வேண்டும் என்றால், அதிகமாக மதிப்பெண் பெறவேண் டும். எந்தப் பரிந்துரையும் இல்லை. அப்ளிகேஷன் போடவேண்டும். நண்பர்கள் எல்லாம் அதைப்பற்றி எனக்கு எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய ராக வானந்தம் கேபின் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார் கடலூரில். குறிப்பிட்ட தேதிக்குள் 90 ரூபாய் கட்ட வேண்டும். பணம் கட்டவேண்டிய வசதி எனக்கு அன்றைக்கு இல்லை. எங்களுடைய வீட்டில் பணம் கேட்பதற்கும் சங்கடமாக இருந்தது. ஏனென்றால், இதுவரை படித்ததுபோதும், ஏதாவது வேலைக்குப் போங்கள் என்று சொன்னார்கள்.

ராகவானந்தம் அவர்கள் உள்பட இன்னும் சிலர் என்னிடம், ‘‘அய்யாவிடம் கடிதம் எழுதி பணம் கேளுங் கள்; அய்யா அவர்கள் உதவி செய்வார்கள்'' என்று சொன்னார்கள்.

நான் தயங்கித் தயங்கிதான் மிகவும் பவ்யமாக ஒரு கடிதம் எழுதினேன்.

எனக்கு இதுபோன்ற சூழல் இருக்கிறது; இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எகனாமிக்ஸ் ஆனர்ஸ் படிப்பிற்காக அப்ளி கேசன் போட்டிருக்கிறேன்; எனக்குக் கொடுத்துவிட்டுத் தான் மற்றவர்களுக்கு சீட் தருவார்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்

உடனே அய்யா அவர்கள், பணத்தை பிஎம்ஓ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள் - தந்தி மணியார்டர் என்று சொல்வார்கள். அந்த முறையில் பணம் அனுப்பினால், கட்டணம் அதிகம். சிக்கனத்தைப்பற்றி யோசிக்கும் பெரியார் அவர்கள்,  உடனடியாக தந்தி மணியார்டர்மூலம் பணம் அனுப்பினார்.

நான் எகனாமிக் ஆனர்ஸ் படிப்பு படித்துத் தேர்வாகி, தங்கப்பதக்கம் வாங்கினேன். அந்த சான்றிதழ்களையும், தங்கப் பதக்கத்தையும் அய்யாவிடம் வந்து காட்டினேன்.

எஸ்.வி.அய்யர் என்கிற எஸ்.வைத்தியநாத அய்யர் அவர்கள் - சி.பி.ராமசாமி அய்யர் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அவர். அவர் என்னுடைய பேராசிரி யராக இருந்தார்.

அவர் எனக்கு, ஒரு அற்புதமான சான்றிதழை ஆங்கிலத்தில் கொடுத்திருந்தார். அதைப் பெரியார் அவர்கள் படித்துவிட்டு, ‘‘என்னப்பா, ஒரு அய்யர் உனக்குப் புரபொசரா? அவரா இவ்வளவு அழகாக உன்னைப்பற்றி சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்றார்.

எஸ்.வி.அய்யர் கொடுத்த சான்றிதழ்!


எஸ்.வி.அய்யர் அவர்கள் கொடுத்த சான்றிதழில், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, கடைசியாக,


I would Strongly recommend him to go and continue his further studies in one of the eminent universities either in UK or in USA என்று எழுதியிருந்தார்.


அதை அய்யா அவர்கள் படித்துவிட்டு,


‘‘என்னப்பா வெளிநாட்டில் சென்று படிக்க வேண்டும் என்று உயர்வாக எழுதியிருக்கிறாரே - எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நேர்மையான ஆளாக இருப்பார் போலிருக்கிறதே. உன்னைப்பற்றியும், உன்னுடைய கருத்துகளையும் பற்றி அறிந்தவர்தானே அவர்'' என்றார்.


நன்றாகத் தெரியும் அய்யா. நம்முடைய கூட்டத் திற்குத் தலைமை தாங்கிய பிறகு, அடுத்த நாள் என்னை அழைத்துக் கேட்டார்,

‘‘Are you an adopted son of E.V.Ramaswamy Naicker''  என்று கேட்டார்.

நான், ‘‘இல்லை, இல்லை'' என்றேன்.

அவர் பெரிய கொள்கையாளர், பெரிய சிந்தனை யாளர் என்று உங்களைப்பற்றி சொன்னார். அவர் மிகவும் வித்தியாசமானவர்தான். பாகிஸ்தானில் உள்ள டாக்கா பல்கலைக் கழகத்தில் பணியாற்றி விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார் என்று பேராசிரியரைப்பற்றி அய்யாவிடம் சொன்னதும், மிகவும் ஆச்சரியப்பட்டார் அய்யா அவர்கள்.

என்னுடைய வாழ்க்கையில்  நடந்த இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறேன்.

நான் வெளிநாட்டிற்குச் சென்று படிக்க விரும்ப வில்லை.  பல்கலைக் கழகத்திலேயே ஒரு வேலை கொடுத்தார்கள். அந்தப் பணியைப் பார்த்தேன்.

என்னுடைய பிள்ளைகள் அமெரிக்காவில் படித் தார்கள் என்பது இருக்கிறதே, அது என்னுடைய வாழ் நாளில் நடந்த ஒரு திருப்பம்.

இது அத்தனைக்கும் காரணம் நான் படித்ததோடு, என்னுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடிய வாய்ப்பு வந்தது. இவை அத்தனைக்கும் மூல வித்து எங்கே இருந்து வந்தது என்றால், 90 ரூபாயில் இருந்து வந்ததுதான்.

நாம் பெரியாரை பொதுமைப்படுத்தி அனைவருக்குமானவர் என்று புரிய வைக்க தவறிவிட்டோமா?


கேள்வி: பெரியாரை இன்னமும் கடவுள் மறுப்பாளர் என்கிற சிறிய வட்டத்துக்குள் மட்டும் அடைத்து பகுத்தறிவு கொள்கைகளை மடைமாற்றம் செய்கிறார்கள். நாம் பெரியாரை பொதுமைப்படுத்தி அனைவருக்கு மானவர் என்று புரிய வைக்க தவறிவிட்டோமா? இந்த பிம்பத்தை மாற்ற நாம் செய்யவேண்டியவைகளாக நீங்கள் அறிவுறுத்துபவை என்ன?

தோழர் அகிலா(சிகாகோ)

தமிழர் தலைவர்: அய்யா சொன்ன கொள்கைகளை எடுத்து தெளிவாகவே பிரச்சாரம் செய்யவேண்டும் என்பது ஒன்று. அதில் நாம் தவறவில்லை.

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கிருஷ்ணன் சொல்கிறான்

பிரம்மா, முகத்திலிருந்து பிறந்தான், தோளில் இருந்து பிறந்தான், தொடையிலிருந்து பிறந்தான், காலில் பிறந்தான் - எல்லாவற்றையும் நான்தான் உருவாக்கி னேன் என்று சொல்கிறார் என்று கடவுளைப்பற்றி அவர் பேசவேண்டிய அவசியமே, சுயமரியாதைதான் - அதை நாம் தெளிவுபடுத்தவேண்டும்.

பெரியார் அவர்கள், காங்கிரசிலிருந்து வெளியே வந்ததற்குக் காரணம் - சீர்திருத்தம், சுயமரியாதை, கடவுள் மறுப்பிற்காக வெளியே வரவில்லை.

சமூகநீதியை, 50 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொள்ளவில்லை காங்கிரஸ் என்பதினால்தான், அதிலிருந்து வெளியேறினார்.

சமூகநீதியைத்தான் அடிப்படையாகக் கொண்டார். ஆனால், என்னாயிற்று என்றால், பார்ப்பன ஆதிக்கம் என்பது மதத்தினால்தான், கடவுள்களினால்தான் இன் றைக்குப் பாதுகாக்கப்படுகிறது, பரப்பப்படுகிறது. ஆகவே, எது மூலாதாரமோ, அந்த மூலாதார வேருக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

கடவுள் மறுப்பாளராக பெரியாரைப் பார்ப்பவர்கள் என்று சொல்கின்ற அளவைப்பற்றி சொல்லும்பொழுது, சென்னையில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் நண்பர் சுப.வீ. அவர்கள் ஒரு கருத்தை மிக அழகாக சொன்னார்.

அத்திவரதரைப் பார்ப்பதற்கு நிறைய கூட்டம் வந்தது என்று சொல்பவர்களுக்கு அவர் அழகாக பதில் சொன்னார்,

பெரியாருடைய பணிகளுக்கு முன்பாக, ‘‘கும்பிடறன் சாமி'' என்றுதான் எல்லோரும் சொல்லிக்

கொண்டிருந்தார்கள். ஆனால், இப்பொழுது

‘‘சாமி கும்பிடுகிறார்கள்'' - ஆனால், ‘‘கும்பிடறன் சாமி'' என்று யாரும் சொல்வது கிடையாது. இன்றைக்கு யாரைப் பார்த்தாலும், ‘‘சூத்திரா, இங்கே வா!'' என்று ஜாதிப் பெயரைச் சொல்லி கூப்பிடுவதில்லை. காரணம், இதெல்லாம் பெரியாருடைய கொள்கைக்குக் கிடைத்த வெற்றி.

நம்முடைய பிள்ளைகள் இன்றைக்கு நன்றாகப் படிக்கிறார்கள். கடவுள் போதை, மத போதை இருப்பதி னால், அந்த வெறுப்பாளர் போன்று பெரியாரைக் காட் டுகிறார்கள். ஆனால், அதற்குப் பெரும்பாலும் நம்மு டைய மக்கள் பலியாகவில்லை. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்னவென்றால், இந்தத் தேர்தல் முடிவுகள்தான்.

தேர்தலுக்கு முன்பு பொள்ளாச்சி சம்பவம் - பாலினக் கொடுமைகள் நடைபெற்றன. அதனைக் கண்டித்து  எழு தினால், அதற்குக் காரணமே, பெரியாரும், வீரமணியும், திராவிடர் கழகமும்தான்; இவர்கள் பெண்களுக்கு ஒழுக்கம் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள் என்று ‘துக்ளக்' இதழில் குருமூர்த்தி போன்றவர்கள் எழுதினார்கள்.

ஒழுக்கம் பொதுச் சொத்து என்றவர் பெரியார்


அதற்குப் பதில் சொல்லும் விதமாக, தேர்தலுக்கு முன்பாக சென்னை பெரியார் திடலில் ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு, பெரியார் ஒழுக்கத்தைப்பற்றி அதிக மாகக் கவலைப்பட்டவர்.

ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து

பக்தி என்பது தனிச் சொத்து.

ஒழுக்கம் இல்லாவிட்டால், எல்லாமே பாழ் -

பக்தி இல்லாவிட்டால், யாருக்கும் எந்தவிதமான கெடுதியும் இல்லை என்கிற கருத்தை சொன்னவர் தந்தை பெரியார். அவரை இருட்டடித்து பொள்ளாச்சி சம்பவத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்களே - நாங்கள் திருப்பிச் சொல்லவேண்டுமென்றால், கிருஷ்ண பர மாத்மா என்று நீங்கள் கொண்டாடுகின்ற கடவுள் இருக்கிறானே,  அவன்மீதுதானே ஈவ்டீசிங் வழக்குப் பதிவு செய்யவேண்டும். காரணம் என்னவென்றால், அவன்தானே, குளத்தில் குளிக்கின்ற பெண்களின் சேலைகளை எடுத்துக்கொண்டு மரத்தில் ஏறிக்கொண் டவன். அவனை நீங்கள் கும்பிடுகிறீர்கள் - பெரியாரை குறை சொல்கிறீர்களே! சம்பந்தம் இல்லாமல் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே என்று அந்த சிறப்புக் கூட்டத்தில் பேசினேன்.

இந்தக் கூட்டம் நடந்தது தேர்தலுக்கு முன்பு. ஆனால், அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா? வேறு எதையும் அவர்களால் சொல்ல முடி யாத காரணத்தால், முன்பு 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை வைத்து அன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் ‘‘இராமனை செருப்பாலடித்தவர்களுக்கா உங்கள் ஓட்டு?'' என்று சொல்லி கலைஞருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள்.

பொய்ப் பிரச்சாரம் எடுபடவில்லை


இப்பொழுது, வீரமணி இப்படி சொல்லிவிட்டார் என்று சொல்லி, தி.மு.க.வை மிரட்டுவதற்காக, தி.மு.க. விற்கு இந்துக்கள் ஓட்டு வரக்கூடாது; உயர்ஜாதிக்காரர் களின் ஓட்டு வரக்கூடாது என்பதற்காக அதனை ஒரு பிரச்சாரமாக செய்தார்கள்.

ஆனால், மக்களின் முன் அந்தப் பிரச்சாரம் எடுபட வில்லை. நல்ல அளவிற்கு தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணி மிகப்பெரும் அளவிற்கு வெற்றி பெற்றது.

ஆக, 1971 இல் இராமரும் தோற்றான்

2019 இல் கிருஷ்ணனும் தோற்றான்!

பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக சொல்ப வர்களுக்கு நாம் விளக்கி சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையாகவே தூங்குகிறவர்களை எழுப்புகிறோம்; தூங்குவதுபோன்று பாசாங்கு செய்பவர்களையோ, எதிரிகளைப்பற்றியோ நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

நாமம் போட்டிருக்கிறவர்கள், விபூதி பூசுகிறவர்கள், கோவிலுக்குப் போகிறவர்கள்கூட என்ன சொல்கிறார் கள், ‘‘நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன்தான்; இருந்தாலும், பெரியார் இல்லை என்றால், என்னுடைய பிள்ளைகள் படித்திருக்க முடியாது; என்னுடைய பிள்ளைகள் உத்தியோகத்திற்குப் போயிருக்க முடியாது'' என்று மிகத் தெளிவாக சொல்கிறார்கள்.

பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு இந்த இரண் டிற்குள் பெரியாரை அடக்குவது என்பது பெரியாருக்குச் செய்கின்ற நீதியாகாது. அதனை விளக்கவேண்டியது நம்முடைய கடமை - விளங்கிக் கொள்ளவேண்டியது பெரும்பாலோரின் கடமை - விளங்கிக் கொள்ள மறுக்கிறவர்களை நாம் அலட்சியப்படுத்தவேண்டும்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 14 .10 .19

சமூகநீதிக்காக உழைத்த தலைவர்களை ஜாதிப் பட்டியலில் அடைப்பது சரியானதுதானா?

பாஸ்டனில் பார்வையாளர்கள் கேள்விக்கு தமிழர் தலைவர் பதில்

பாஸ்டன், அக்.15  சமூகநீதிக்காகப் பாடுபட்ட தலைவர் களை ஜாதிப் பட்டியலில் அடைப்பது குறித்த பார்வை யாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதில் அளித்தார். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி அஞ்ஞானத்தைப் பரப்புவது போன்றதே இந்த செயல் என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் இதற்கான காரணத்தையும் விளக்கினார்.

‘‘பெரியார் என்ற போர்க் கருவி''

பாஸ்டனில் கடந்த 29.9.2019 அன்று பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டத்தில், ‘‘பெரியார் என்ற போர்க் கருவி'' என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நேற்று வெளிவந்த கேள்வி - பதில் தொடர்ச்சி வருமாறு:

மோடி , நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சில், தமிழில் மேற்கோள் காட்டுவது

தமிழக தேர்தல் களத்தில் எந்த அளவு எடுபடும்?

கேள்வி: பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள்  அம்பேத்கர், ஆதரவாளராக தம்மை காட்டிக் கொள்வ தையும் , மோடி , நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சில், தமிழில் மேற்கோள் காட்டுவதும் தமிழக தேர்தல் களத்தில் எந்த அளவு எடுபடும்? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தோழர் வினோத் சந்தர், ( மிச்சிகன்)

தமிழர் தலைவர்: என்ன செய்தாலும் எடுபடாது. அவர்களுடைய வித்தைகளை நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்ற மண் பெரியார் மண்.

ஆகவேதான், இவர்கள் பேசுகின்ற தமிழ் - அய்.நா. சபையில்  ‘‘யாதும் ஊரே  யாவரும் கேளிர்'' என்று சொல்லிவிட்டு, இதனை கணியன் பூங்குன்றனார் சொன்னார் என்று சொல்வதும்,

அதேபோன்று தமிழ் இருப்பதிலேயே உயர்ந்த மொழி, இருப்பதிலேயே மிகச் சிறப்பான மொழி என்று சொல்வதோ -

செம்மொழி தமிழ் என்று ஆக்கியது கலைஞர் - அவருடைய சொந்த பணம் 5 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, மைசூரில் இருந்த செம்மொழி நிறுவனத்தை சென்னைக்குக் கொண்டு வந்து அதற்கு உயிரோட்டம் கொடுத்தார்.

ஆனால், இன்றைக்கு செம்மொழி நிறுவனத்தை தினக்கூலி நிறுவனம் போன்று ஆக்கி வைத்திருக் கிறார்கள். நிரந்தர உறுப்பினர்களோ, நிரந்தரப் பேரா சிரியர்களோ, தமிழ் தெரிந்தவர்களோ, தமிழாய்ந்தவர் களோ இல்லை. இவை அத்தனையும் அங்கே நடக்கிறது என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

எனவேதான், தமிழ் முகமூடிப் போட்டுக்கொண்டு வந்தாலும், அல்லது வேறு முகமூடி போட்டுக்கொண்டு வந்தாலும், அந்த முகமூடிகளையெல்லாம் கழற்றிப் பார்த்து, உண்மையான முகம் அதுவல்ல என்று  தெரிந்துகொள்ளக்கூடிய பக்குவத்தை, தமிழ்நாடும், தமிழ் மண்ணும், பெரியார் மண்ணாக இருக்கின்ற காரணத்தால், புரிந்து வைத்திருக்கின்றன. திராவிட இயக்கங்கள் அதனைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், சிறு குழந்தைகள்கூட அதனை நம்பமாட்டார்கள்.

எனவேதான், கருவாட்டை வைத்து பூனையைப் பிடிக்கலாம் என்று நினைத்தால், இந்தப் பூனை - கரு வாட்டை நம்பி ஏமாறக்கூடிய அளவில் தமிழ்நாடு இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

பலம் பொருந்தியவர்களுடன்

கைகோக்க முடியுமா?

கேள்வி: விநாயகர் சதுர்த்தி போன்றவை மக்களிடம் கொண்டாட்டத்தை முன் வைத்து வளர்ந்து வரும் வேளையில் அறிவு திருவிழா அல்லது அறிவியல் திருவிழா போன்றவற்றை பெரியார் அமைப்புகள் முன்னெடுக்க அமைப்புப் பலம் பொருந்தியவர்களுடன் கைகோக்க முடியுமா?

தோழர் வசந்த் (ஆர்லாண்டோ)

தமிழர் தலைவர்: நல்ல யோசனைதான். நாங்கள் இப் பொழுது அதுபோன்று செய்துகொண்டுதான் இருக்கி றோம்.

உதாரணமாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரியார் பிறந்த நாள் விழாவில், ஒத்தக் கருத்துள்ள வர்கள், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு களைத் தவிர எல்லாக் கட்சியினரும், எல்லா அமைப் பினரும் கலந்துகொள்கிறார்கள். பெரியார் ஊர்வலம், பெரியாரைப்பற்றி பிரச்சாரங்கள் எல்லாம் நடைபெறு கின்றன; நீங்கள் சொல்லியது மிகவும் சிறப்பானது.

விநாயகர் சதுர்த்தி விழா என்பது முதன்முதலில், சாதாரண ஒரு  பொம்மையை வாங்கி நடத்தினார்கள்; மத ரீதியான விழாவாக இருந்ததை, முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகக் கொண்டு வந்தவர் திலகர். பம்பாயில், வெள்ளைக்காரர்களுக்கு எதிராக அதனைப் பயன் படுத்தினார், அரசியல் ரீதியாக.

அதனை அப்படியே இப்பொழுது தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பிள்ளையார் சிலைகளை வைப்பதற்காகக் காசு கொடுக்கிறார்கள்; அதற்காக ஆட்களைப் பிடிக்கிறார்கள்; சாராயத்தைக் குடித்துவிட்டு ஆட்டம் போடுகிறார்கள்; அதற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை இல்லாத அளவிற்குப் போய்க் கொண்டிருக்கின்றன.

விநாயகர் சதுர்த்தி விழாவும் - பெரியார் பிறந்த நாள் விழாவும் ஒன்றல்ல; அது மூடநம்பிக்கை - இது அறிவு.

ஆனாலும், அறிவுப்பூர்வமான விழாவை, விழா என்ற முறையில் எடுத்து, பல இடங்களில் ஒத்தக் கருத் துள்ளவர்களை அழைத்து அதனை நடத்தவேண்டும்.

என்னுடைய அன்பான வேண்டுகோள் என்னவென் றால், நமக்கு இரண்டு திருவிழாக்கள்தான் மிகவும் முக்கியம். திராவிடர்த் திருவிழாக்களில் - மற்ற குடும்ப விழாக்களில் சந்திப்பது என்பது நல்லதுதான்.

ஒன்று, பெரியார் பிறந்த நாள் விழா அன்று - புது உடைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும்; இனிப்புகளை மற்றவர்களுக்குக் கொடுப்பது - மதவாதிகள் எப்படி விழாக்களைக் கொண்டாடு கிறார்களோ, அதைவிட சிறப்பாக பெரியார் பிறந்த நாளை மிகச் சிறப்பான வகையில் ஒவ்வொருவரும் கொண்டாடக்கூடிய பழக்கத்தை உண்டாக்கவேண்டும்.

அதேபோன்று, திராவிடர்த் திருநாள் - பொங்கல் விழா - அறுவடைத் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு விழா - தை முதல் நாள்தான் - தமிழ்ப் புத்தாண்டு - அறுவடைத் திருநாள் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உண்டாக்க வேண்டும்.

உங்களுடைய ஆலோசனை மிகவும் சிறப்பானது. ‘‘விழாக்களும் - நாமும்!'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் பேசிய உரை புத்தகமாக வெளிவந்திருக்கிறது, அந்த புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் தெளிவாக விளங்கும்.

ஜனநாயகத்தை ‘பேய்' என்று

பெரியார் அழைப்பது

இன்றைக்கும் பொருந்துமா?

கேள்வி: பெரியார் ‘விடுதலை'யில் 22.5.1959-இல் "முட்டுக்கட்டைகள்" என்ற தலைப்பில் எழுதிய தலை யங்கத்தில், இப்படி எழுதுகிறார்: "நமது நாட்டைப் பிடித்துள்ள பேய்கள் மூன்று: 1. கடவுள் - மதம் - சாஸ் திரங்கள், 2. ஜாதி, 3. ஜனநாயகம் என்பன." இதில், முதல் இரண்டைப் புரிந்து கொள்ள முடிகிறது. மூன்றாவதாக ஜனநாயகத்தையும் ஏன் பேய் என்று குறிப்பிடுகிறார்? அது அன்றைய ஜனநாயகத்தின் விமர்சனமா, அல்லது ஜனநாய கத்தை பேய் என்று பெரியார் அழைப்பது இன் றைக்கும் பொருந்துமா?

தோழர் பார்த்திபன், (பாஸ்டன்)

தமிழர் தலைவர்: ‘பேய்' என்பதே ஒரு கற்பனை. அதற்குரிய விளக்கத்தை அய்யா சொல்லியிருக்கிறார். ‘பேய்' உண்மையானதல்ல.

நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது என்று சொல் கிறார்களே தவிர, அவன் பண நாயகத்தைத்தான் நடத்துகிறான்; ஜாதி நாயகத்தைத்தான் நடத்துகிறான். அதனால், அதை மனதில் வைத்துக்கொண்டுதான் தந்தை பெரியார் சொன்னார்.

மக்களுடைய உரிமைகளில் உண்மையாகவே ஜனநாயகம் இருக்கவேண்டும் என்றால், இந்தத் தேர்தல் முறையில் மாறுதல் நடத்தவேண்டும் என்ப தற்காகத்தான் கருத்து விளக்கங்களை தெளிவாக எழுதியிருக்கிறார்.

‘பேய்' இருப்பதாக நம்பப்படுகிறது; ஆனால், உண் மையில் இல்லை. அதேபோன்று, நம்முடைய நாட்டில் ஜனநாயகம் நடப்பதாக நம்பப்படுகிறது; அது உண்மையில்லை. அது பண நாயகமாக, ஜாதி நாயகமாக இருக்கிறது என்பதினுடைய கருத்தின் விளக்கம்தான் அது.

இன்றைய சமூகம் குறித்து....

கேள்வி: இன்றைய சமூகம் குறித்து உங்களுடைய  அன்றாட மனநிலை என்ன?

தோழர் மகேஷ் ( பாஸ்டன்)

தமிழர் தலைவர்: இன்றைய சமூகம் என்றால், தமிழ்நாட்டையா? இந்தியாவையா? உலகத்தைப்பற்றி சொல்கிறீர்களா?

தமிழ்நாட்டில் இருக்கின்ற சமூகத்தைப்பற்றித்தான்.

இன்றைய சமுதாயம் ஜாண் ஏறினால், முழம் சறுக் கக்கூடிய சமுதாயமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அறிவியல் வளர்ந்தால், மூடநம்பிக்கை ஒழியும் என்று சொல்வது, முற்றிலும் நமக்குப் பொருந்தாதது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவியல் கருவிகள், மின்னணுவியல் கருவிகள், ஊடகங்கள் இவைகள் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.

அதேபோல, கைகளில் செல்போன் இல்லாதவர்களே கிடையாது.

ஆனால், அது எதற்குப் பயன்படுகிறது என்றால், விஞ்ஞானத்தை வளர்ப்பதற்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, விஞ்ஞான ரீதியாக அஞ்ஞானத்தைப் பரப்புவதற்கு அது அதிகமாகப் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக, சபரிமலையிலே திருவிழா என்று சொன்னால், அல்லது திருவண்ணாமலையில் கார்த் திகை தீபம் என்று சொன்னால், அந்த ஊரில் உள்ள மூடநம்பிக்கை, பக்தி என்ற அளவில் இருந்தது.

ஆனால், இன்றைக்கு அந்த நிகழ்வுகளை நேரலை செய்கிறோம் என்று சொல்லி, எல்லா இடங்களிலும் அதனை ஒளிபரப்புவதால், ஓரிடத்தில் தோன்றுகின்ற வியாதி, பல இடங்களுக்கும் அந்த நோய்க் கிருமி பரவு வதுபோல, இன்றைக்கு அவைகளைப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதைவிட, மிகவும் படித்த பாமரர்கள் சமுதாயத்தில் மிக அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். நன்றி உணர்ச்சி மிகவும் குறைவாக இருக்கக்கூடிய சமுதாயம், நம்முடைய சமுதாயம்.

அவர்கள், சாப்பாட்டை எடுத்து வாயில் வைக்கும் பொழுது, பெரியாரை நினைக்கவேண்டும்; காமராசரை நினைக்கவேண்டும்; திராவிட இயக்கத்தை நினைக்க வேண்டும்.

அதுபற்றியெல்லாம் கவலைப்படாத ஒரு சமுதாய மாக இருக்கிறது. எனவேதான், பெரியார் அவர்கள், இப்படியெல்லாம் இருக்கும் என்பதை எதிர்பார்த்து,

‘மானம் பாராத தொண்டு செய்யவேண்டும்'

‘நன்றி எதிர்பார்க்காத பணி செய்யவேண்டும்'

‘புகழைப்பற்றி கவலைப்படக்கூடாது'

‘நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் என் னுடன் வரவேண்டாம்; கெட்ட பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்!'

அதேபோன்று, எதிர்நீச்சல் அடிக்கவேண்டும் என்பார்.

ஆகவே, நாம் கடந்த தூரங்களைவிட, கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். பயணங்கள் முடிவதில்லை.

அடைந்த வெற்றிகளைவிட - அடையவேண்டிய இலக்குகள் அதிகம்.

இந்தப் போர்க் கருவி - முனை மழுங்காத போர்க் கருவியை - எப்பொழுதும் ஆயுதமாகக் கொண்டு போராடவேண்டும்.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் நடைமுறைபடுத்த முடியாதது ஏன்?

கேள்வி: 29.07.1999 இல் ஜாதி ஒழிப்பிற்கான பத்து அம்ச திட்டத்தில் இடஒதுக்கீடு உரிமைக்காக அளிக்கப் படும் ஜாதி சான்றுகளில் Group 1 (ST),Group 2 (SC),Group 3(MBC),Group 4 (BC),Group 5 (IC ), Group 6 (FC) என்றும் குறிக்கப்பட வேண்டும் என்று உள்ளது; ஜாதியின் பெயர் இடம் பெற கூடாது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோரின் பிள்ளைகளை Group 5 (IC) என்று குறிப்பிட்டு தனி இட ஒதுக்கீடும் முன்னுரிமையும் அளிக்கப்பட வேண்டும் என்கிற திட்டம் இருந்தது. இப்பொழுது இருபது ஆண்டுகளுக்கு பின்னும் இதை நடைமுறைபடுத்த முடியாதது ஏன்?

தோழர் வினோ பிரியா, ( சிகாகோ)

தமிழர் தலைவர்: நல்ல கேள்வி. நாம்தான் இதனை முதன்முதலில் சொன்னோம்.

சப்-காஸ்ட் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கொஞ்ச நாள்களுக்கு இட ஒதுக்கீடு தேவை. நம்முடைய ஆட்களே, நல்ல எண்ணத்தில் சொல்லக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்  - ‘‘என்னங்க, பள்ளிக்கூடத் தில் ஜாதியைக் கேட்கிறார்களே?'' என்று.

உதாரணமாக, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டபூர்வமாக இருக்கிறது. இன்றைக்குத் தீண்டாமை ஒழிக்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட சமுதாய விளிம்பு நிலை மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால்தான் அவர்கள் மேலே வர முடியும்.

அவர்களுடைய தனித்தனிப் பிரிவை வைத்துக் கொண்டு, ஓர் அடையாள வருணத்தை எடுத்துக் கொண்டு பதியவேண்டும் என்ற கருத்தை நாம் முன் வைத்து, தீர்மானம் நிறைவேற்றி நாம் வலியுறுத்திக் கொண்டே வருகிறோம்.

ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்யக்கூடியவர் களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

மற்ற சமுதாயத்தில் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக, எதிரடை அளவிற்குக் கொண்டு வந்து, முதலில் 5 விழுக்காடு - இன்னொன்றில் குறைத்து, இதில் ஏற்றுவது என்கிற தீர்மானத்தை பிரச்சாரத்தின் மூலமாக செய்து கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்னதுபோன்று, 1999 ஆம் ஆண்டு இந்தத் தீர்மானத்தைப் போட்டிருக்கிறோம். 20 ஆண்டு கள் கழித்தும் அது நடைமுறைக்கு வரவில்லை என்று சொன்னால், பொதுவாகவே, நம்முடைய தீர்மானங் களைப் பார்த்தீர்களேயானால், 1929 இல் நிறைவேற்றிய தீர்மானம், எந்த ஆண்டில் வந்தது நடைமுறைக்கு - பெண்கள் சொத்துரிமைபற்றிய தீர்மானம் - நம்முடைய தீர்மானங்கள் வருங்கால அரசாங்கத்தினுடைய சட்டங்கள்.

இன்றைய மாநாட்டுத் தீர்மானங்கள் - எதிர்கால அரசாங்கத்தினுடைய சட்டங்கள். அது வருவது உறுதி.

வருவதற்குக் கொஞ்சம் தாமதமானாலும், அது உறுதியாக வரும்.

அதற்கு என்ன காரணம் என்றால், இது அரசாங்கம் செய்யவேண்டிய வேலை. நல்ல அரசாங்கம் அமையும் பொழுது,  சட்டங்களாக வரும்.

உதாரணமாக, கலைஞர் அவர்களே தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், அதுபோன்ற சட்டங்கள் நிறைவேறி இருக்கும்.

அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை -  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தலை வர்களாக சொல்லக்கூடியவர்களை வைத்தே எதிர்க்க வைத்தார்கள். அதையெல்லாம் தாண்டித்தான், கலைஞர் காலத்தில் அதனை நிறைவேற்றினோம்.

அதேபோன்று, இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்கிற வாய்ப்புகளை உருவாக்கினோம். அன்றைக்கு அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சி உறுதுணையாக இருந்தது.

இப்பொழுது அந்தக் கருத்துக்கு விரோதமாக, அக்கறையில்லாத  அல்லது மடியில் கனம் இருப்பதினால், வழியில் பயம் இருக்கிற காரணத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் இருக்கின்றன.

நாம் நேரடியாக அரசியலுக்குப் போகவில்லை என்றாலும், பெரியார் காலத்தில், ஆட்சிக்குப் போகாமல், ஆட்சி செய்த பெரியார் என்று சொல்லக்கூடிய வாய்ப்பை உண்டாக்கினாரோ, அதுபோன்றே இப் பொழுதும் நாம் உருவாக்கக் கூடிய அளவிற்கு நம்முடைய இயக்கம் பலமாக இருக்கிறது.

உரிய ஆட்சி வரும்பொழுது, அதுபோன்ற செயல்கள் நடைமுறைக்கு வரும்.

உதாரணமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நடைமுறை இருந்தது; கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் தான், ஆகமப் பள்ளி வைத்து அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்கள். சட்டபூர்வமாக வந்து வழக்கு நடத்தி, பிறகு கொள்கை அளவில் வெற்றி பெற்றோம்.

இன்றைக்கு அவர்கள் நிறைய பேர் பணிக்குச் செல்லவில்லை. முதல் ஆளும், இரண்டாவது ஆளும் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். ஆக அந்தக் கட்டு உடைந்து போயிற்று. கதவு திறந்தாயிற்று; இன்னும் அகலமாகத் திறக்கவில்லை என்பதுதான் இப்பொழு தைய பிரச்சினை.

அதுபோன்றதுதான், சரியான ஆட்சியை உருவாக் கும்பொழுது, சரியான நடைமுறைகள் வரும். எத்தனை ஆண்டுகள் என்பது முக்கியமல்ல.

42 மாநாடுகள்; 16 பேராட்டங்கள்!

உதாரணமாக, மண்டல் கமிசனை எடுத்துக்கொண் டால், 1980 ஆம் ஆண்டில் அறிக்கை கொடுத்தார்கள்.

இன்றைய இளைஞர்கள் இதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால், இன்றைய இளைஞருக்கு அந்த வரலாறு தெரியாது.

1980 ஆம் ஆண்டு மண்டல் அறிக்கை கொடுத் தார்கள். அதனை நடைமுறைப்படுத்தக் கோரி, 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தியிருக்கிறது.

அதற்கு முன், நேரு காலத்தில் கொண்டுவரப்பட்ட காகாகலேல்கர் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப் படவேயில்லை. அலமாரியிலேயே பூட்டி வைத்து விட்டார்கள்.

மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு, திராவிடர் கழகத்துக்காரர்கள் முயற்சி செய்தால்தான் நடக்கும் என்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பி.பி.மண்டல் அவர்கள் உரையாற்றினார்.

நாங்கள் முயற்சி செய்வோம் என்று, அதற்குரிய முயற்சிகளை செய்தோம்.

அதற்காக சென்னை சைதாப்பேட்டையில் நடத்திய மாநாட்டில், தேவராஜ் அரஸ்சை அழைத்து நடத்தி னோம்.

To Publish and Implement the Mandal Commission Recommendations

என்று போட்டோம். அதாவது, வெளியிடவேயில்லை. வெளியிடுவதற்கே 10 ஆண்டுகள் ஆயிற்று. பிறகு, காங்கிரஸ் ஆட்சி வெளியிட்ட பிறகும், அப்படியே அதனை கிடப்பில் வைத்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது, இராம்விலாஸ் பஸ்வானை விட்டு, நாடாளுமன்றத்தில் அந்த மசோதா வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1992 ஆம் ஆண்டு தடை போடப்பட்டது. ஒரு பகுதி வந்தது; வேலை வாய்ப்புக்கு மட்டும் வந்தது.

வி.பி.சிங் அவர்கள் எங்களிடம் நேராகவே சொன் னார், இதனை ஆரம்பித்தால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால், மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம்; ஏற்கெனவே படித்தவர்களுக்கு வேலை கொடுப்போம் முதலில். பிறகு, படிப்பதற்கும் கதவைத் திறந்துவிடுவோம் என்றார்.

ஆனால், 10 மாதங்களிலேயே அவருடைய ஆட் சியை கவிழ்த்தார்கள்.

அதற்குப் பிறகு பாதி தூரம் வந்தோம். 16 - 4 என்ற அளவில் வேலை வாய்ப்பில் வந்தோம்.

அய்.அய்.டி., அய்.எம்.எஸ்.,  மத்திய பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு இல்லாதபோது, அதற்காகத் தொடர்ந்து போராடினோம்.

2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆதரவோடு, அர்ஜூன் சிங் மத்திய அமைச்சராக இருந்தார் - அப்பொழுது அரசியல் சட்டத் திருத்தத்தை நாம் வழங்கியதால், 93 ஆவது அரசியல் சட்டம் வந்தது.

முதல் சட்ட திருத்தம்

1950 ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்தபொழுது, அம்பேத்கர் அவர்கள் அமைச்சராக இருந்தார் - உடனடியாக ஓராண்டில் பெரியார் அவர்களுடைய முயற்சியால், அரசியல் சட்டத் திருத்தம் வந்தது.

அதற்குப் பிறகு 69 சதவிகிதம் - 76 அரசியல் சட்டத் திருத்தம் - பெரியார் இல்லாத காலத்தில், நம்முடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டு, 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு 93 ஆவது  அரசியல் சட்டத் திருத்த மாக, தி.மு.க. ஆதரவோடு, அர்ஜூன்சிங் அவர்கள் மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்தபொழுது, அய்.அய்.டி., அய்.எம்.எஸ்.,  மத்திய பல்கலைக் கழகங் களில் இட ஒதுக்கீடு வந்தது.

ஆகவேதான், அவ்வப்பொழுது அமைகிற அரசு களைப் பொறுத்து செய்வது.

நிச்சயமாக, இந்தத் தீர்மானம் இன்றைக்கு இல்லா விட்டாலும் நாளைக்கு சட்டமாக வரும். நல்ல அரசாங்கம் அமையும்பொழுது, நிச்சயமாக அது நடைமுறைக்கு வரும். நம்புகிறோம், முழு நம்பிகை இருக்கிறது.

நமக்கு ஏற்படுகின்ற சோர்வினை

எப்படி எதிர்கொள்வது?

கேள்வி: திராவிடர் கழகம் சார்பாக சில நிகழ்ச்சிகளை நடத்தும்பொழுதும்,  பொதுவாக உள்ளவர்களிடம் நம்மு டைய கருத்துகளைப்பற்றி சொல்லும்பொழுது, என்ன தான் சொன்னாலும், அவர்கள் கேட்பதில்லை; அப் பொழுது நமக்கு ஏற்படுகின்ற சோர்வினை எப்படி எதிர்கொள்வது?

தோழர் பிரேம்

தமிழர் தலைவர்: சோர்வடையவே கூடாது. ஏனென் றால், இது மலையேறுகிற பணி போன்றது.

பெரியார் சொன்னார்,

என்னுடைய பணி என்பது வழுக்கு மரத்தில், உடம்பு முழுவதும் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு ஏறினால், ஜாண் ஏறினால், முழம் சறுக்குவதுபோன்றதாகும்.

போதையில் இருப்பவனிடம், ‘‘வேட்டி இல்லாமல் இருக்கிறாயே'' என்று சொன்னால்,

அவர் என்ன சொல்வார், ‘‘நான் வேட்டிக் கட்டிக் கொண்டிருக்கிறேன், நீதான் வேட்டிக் கட்டவில்லை'' என்பார்.

நான்கு குடிகாரர்கள் வரிசையாக சொன்னவுடன், நமக்கே நம்முடைய இடுப்பில் வேட்டிக் கட்டிக் கொண் டிருக்கிறோமா - இல்லையா என்று சந்தேகம் வரும்.

ஆகையால், நாம் சலிப்படையவே கூடாது. சலிப் படையாமல் இருப்பதற்காக, பெரியாருடைய உழைப்பு, பெரியாரின் பெருந்தொண்டை நினைக்கவேண்டும்.

எல்லோருக்கும் அந்த சலிப்பு வரும். எனக்கும் அந்த சலிப்பு வந்ததுண்டு. நன்றி இல்லாத இந்த சமுதாயத் திற்காக இவ்வளவு பாடுபடுகிறோமே என்று.

அப்பொழுது பெரியாரை நினைக்கவேண்டும்; பக்தன் கடவுளை நினைப்பதுபோன்று என்ற அந்தக் கருத்தில் நான் சொல்லவில்லை.

பெரியாருக்கு மட்டும் சலிப்பு ஏற்பட்டிருந்தால், நாம் எல்லாம் இந்த அளவிற்கு வந்திருப்போமா? தனி மனி தராகத்தானே அவர் இயக்கம் தொடங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்பட்டாரா?

எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. நானே எழுதி, நானே அச்சடித்து, நானே படித்துக் கொள்வேன் என்ற உறுதியோடு இருந்தார் அல்லவா! அந்த உறுதி வெற்றி பெற்றதா இல்லையா?

இன்றைக்கு பாஸ்டனில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவோம் என்று நாம் நினைத்திருப்போமா? அல்லது மேரிலாண்டில், மாநாடு நடத்துவோம் என்று நினைத்திருப்போமா? வாழ்நாள் சாதனையாளர் விரு தினை அளித்து ஒரு பெரியார் பணியாளனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று நாம் நினைத்தி ருப்போமா? இதெல்லாம் பெரியாருடைய உழைப்பின் வெற்றிதானே!

ஆகவே, நீங்கள் நடந்த தூரத்தை அரிமா நோக்குவது போன்று திரும்பிப் பாருங்கள். அதனைப் பார்த்தாலே, செல்லவேண்டிய தூரம் மிக சாதாரணமாக இருக்கும்.

இது 5 ஆயிரம் வருஷத்து மூடநம்பிக்கை - உடனடியாக அதனை ஒழித்துவிட முடியாது.

அம்பேத்கர் அவர்கள் அழகாக சொல்லியதுபோல, ஜாதி என்பது ஒரு கட்டு அல்ல; ஒரு பொருளல்ல. சம்மட்டி எடுத்து அடித்தவுடன் நொறுங்கிவிடுவதற்கு. இது ஆழமாக ஊறிப் போன ஒன்றாகும்.

ஒருவருக்கு திடீரென்று ஹார்ட் அட்டாக் வருகிறது - அப்பொழுதுகூட மருத்துவரின் மருத்துவ முறை எப்படியென்றால், மார்பில் ஏறி குத்துவார்கள்; வேக வேகமாகக் குத்தி, அந்த நின்று போன இதயத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால், நன்றாகத் தெரியும், 10 ஆயிரத்தில் ஒன்றுதான் வெற்றி பெறும். மற்ற முயற்சிகள் தோல்வி அடையும். அப்படி இருந்தாலும் மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள்- 10 ஆயிரத்தில் ஒருவராக ஏன் இவராக இருக்கக்கூடாது என்கிற தன்னம்பிக்கை.

ஆகையால், நம்பிக்கையோடு நம்முடைய பய ணத்தைத் தொடருவோம். இறுதி வெற்றி நமக்குத்தான். சலிப்படைய வேண்டிய அவசியமில்லை. வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால், பெரியாருடைய தத்துவங்கள், சுயமரியாதை இயக்கம் ஒரு சமூக விஞ்ஞானம்.

விஞ்ஞானம் ஒருபோதும் தோற்காது!

சமூகநீதித் தலைவர்களையும் ஒரு ஜாதிக்குள் அடைக்கின்ற வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!

கேள்வி: தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக எல்லா சமூகநீதித் தலைவர்களையும் ஒரு ஜாதிக்குள் அடைக் கின்ற வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதார ணமாக,  திராவிடம் என்ற சொல் அயோத்திதாசர் பயன் படுத்தி இருக்கின்றார்.  அவரையும் ஒரு ஜாதிக்கான தலைவராக நிறுவ முயற்சி நடக்கின்றது.  இது குறித்து உங்கள் கருத்து என்ன?

தோழர் விஜய்( டல்லாஸ்)

தமிழர் தலைவர்: ஜாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை, மனிதநேய வளர்ப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய் வதுதான் ஒரே வழி.

விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்தவுடன், அந்த விஞ்ஞானத்தையே தங்களுக்கானதாக ஆக்கிக்கொண்டு, அதற்குள் நுழைந்துகொண்டு, அஞ்ஞான கருத்துக்களை, மூடநம்பிக்கைக் கருத்துகளை எப்படி வைதீகம் பரப்புகின்றதோ, ஆரியம் பரப்புகின்றதோ அதேபோன்ற நடைமுறைதான் இது.

வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு என்ன பெருமை?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. என்றுதான் எல் லோரும் சொன்னோம்.

சைவப்பிள்ளை என்பதுதான்

வ.உ.சி.க்கு அடையாளம்?

இப்பொழுது பார்த்தீர்களேயானால், வ.உ.சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளன்று, எல்லாக் கட்சிக்காரர்களும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தாலும், அவ ருக்கு விளம்பரத்தை யார் கொடுக்கிறார்கள் என்றால்,

காடுகாத்த பிள்ளைமார்கள் அல்லது சைவ பிள்ளை மார்கள் அவருடைய ஜாதியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்கிறார்கள்.

அதுபோன்றே இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் மாவட்டங்களைப் பிரித்தபொழுது, பெரியார் பெயரில் மாவட்டம் இருக்க வேண்டும் என்று சொன்னோம்; அண்ணா பெயரில் மாவட்டம் இருக்கவேண்டும் என்று சொன்னோம். ஒன்று, இரண்டு தலைவர்களின் பெயரில் மாவட்டம் இருந்தால்தான் அதற்கு மரியாதை. ஆனால், இதற்குப் போட்டிப் போட்டுக்கொண்டு, அந்தத் தலைவருடைய தொண்டுக்கு  செய்வது என்பது வேறு. ஆனால், ஒவ் வொரு ஜாதிக்கும் ஒரு தலைவரைக் கண்டுபிடிக்கின்ற அளவிற்குப் போனார்கள்.

அந்த ஜாதித் தலைவரின் பெயரை வைக்கவேண்டும்; இந்தத் தலைவரின் பெயரை வைக்கவேண்டும் என்று, ஜாதி உணர்வைப் புதுப்பிப்பதுபோன்று வந்த சூழ் நிலையில், கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், நான் ஒரு அறிக்கையை எழுதினேன்.

போக்குவரத்துக் கழகங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைத்தார்கள். இன்னும் சில கண்டுபிடிக்க முடியாத ஜாதிக்காரர்கள், அந்த ஜாதியில் ஒரு தலைவரின் பெயரைக் கண்டுபிடித்து பெயர் வைக்கச் சொன்னார்கள்.

அப்பொழுது நான் ஒரு அறிக்கை எழுதினேன்.

பெரியார், அண்ணா பெயர்கள் போகிறதே என்று நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்களுடைய பெயரை எடுத்துவிடுங்கள். அவர்கள் பெயருக்காக இருந்தவர்கள் அல்ல - அவர்களுடைய தத்துவங்கள் என்றைக்கும் வாழும் என்று சொன்னவுடன்,

முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் அதனை உடனே  செய்தார்கள்.

அப்பொழுது நகைச்சுவையாக ஒன்றைச் சொன் னேன், அது என்னவென்றால்,

திருவாரூர் மாவட்டத்திற்கு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பெயர் வைத்தார்கள். அவர் கிறித்துவ மதத்தைச் சார்ந் தவர்.

அவர் ஜாதியை சொல்லி, ‘‘நன்றி, நன்றி, நன்றி! முதலமைச்சருக்கு நன்றி!'' என்று சொல்லி ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.

ஒரே ஒரு மாவட்டம்தான் நன்றி போடாத மாவட்ட மாகும்.

எல்லா ஜாதிக்காரர்களும் விளம்பரம் கொடுத்தி ருந்தார்கள்.

பெரம்பலூருக்குத் திருவள்ளுவர் மாவட்டம் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்கு மட்டும் நன்றி விளம்பரம் கொடுக்கவில்லை.

திருவள்ளுவர்

எந்த ஜாதி?

ஏனென்றால், திருவள்ளுவர் எந்த ஜாதி என்று இன்னும் நிர்ணயம் ஆகவில்லை.

ஆகையால், ஜாதியைப் புதுப்பிப்பது யார் என்று சொன்னால், அரசியல் தலைவர்கள்தான். எதற்காக அதனை செய்கிறார்கள் என்றால், வேறு எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தால், ஜாதியைச் சொல்லி ஓட்டு வாங்கலாமா? என்பதற்காகத்தான்.

ஜனநாயகம் பேய் என்று ஒரு நண்பர் கேள்வி கேட் டாரே, அதுபோன்ற அளவிற்கு வந்து - இந்த சூழ்நிலை அதற்குப் பயன்படுத்தக் கூடியது.

அரசியல்வாதிகள்தான் இதனை முழுக்க முழுக்க இதுபோன்றவற்றை பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இப்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புதுக்கோட்டை பக்கம், ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பெயரை சொல்லி, அந்தப் பெண் களைக் கொச்சைப்படுத்தி, ஒரு சோசியல் மீடியாவில் போட்டார்கள்.

தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணுவதற்கு முன்பாக, புதுக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில், குறிப்பிட்ட வகுப்பினர் உள்ள பகுதிகளில், கலவரம் நடைபெறக் கூடிய சூழல் வந்தாயிற்று.

அதற்கு யார் காரணம் என்று கண்டுபிடிப்பதற்கான முயற்சியை காவல்துறையினர் மேற்கொண்டார்கள்.

அதற்குள்ளாக, மூன்று, நான்கு மாவட்டங்களில் கலவரம் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது.

வேறொரு ஜாதிக்காரன் சொல்கிறான் என்று இன்னொரு ஜாதிக்காரனை குற்றம் சொன்னார்கள்.

இதற்கு மதவெறியர்களின் பின்னணி இருக்கிறது. இரண்டு ஜாதியினருக்கு இடையே மோதல் வந்தால்தான் வசதியாக இருக்கும் என்பதற்காக இதனை செய்கி றார்களோ என்று பார்த்தால்,

மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால், நான்கு, அய்ந்து வேட்பாளர்களில், ஒரு சுயேச்சை வேட் பாளர் அந்த ஜாதியைச் சேர்ந்தவர்.

அவரைச் சார்ந்தவர்கள், சிங்கப்பூரில் இருந்து, இதுபோன்ற பிரச்சினையைக் கிளப்பிவிட்டால், உடனே பிரச்சினை எழுந்து, தன்னுடைய ஜாதிக்காரர்கள் எல்லாம் ஓரணியில் நிற்பார்கள். மற்ற ஜாதிக்காரர்களின் ஓட்டுப் பிரிந்தால், நம்முடைய ஜாதியைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதற்காக இதனை செய்தவரைக் கண்டுபிடித்து, கைது செய் தார்கள்.

அப்படியென்றால், இதனை எதற்காகப் பயன்படுத் துகிறார்கள், யார் பயன்படுத்துகிறார்கள் என்றால், முழுக்க முழுக்க ஜாதி தலைவர்கள், வேறு தகுதியில் லாதவர்கள், கொள்கை இல்லாதவர்கள், சுயநலவாதிகள் இதுபோன்று செய்கிறார்கள்.

சமூக வலைதளங்களைப்

பயன்படுத்துவீர்!

நம்மைப் போன்ற, உங்களைப் போன்றவர்கள் விவரம் தெரிந்தவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்பொழு தெல்லாம் சோசியல் மீடியா மூலமாக அம்பலப்படுத்த வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

- விடுதலை நாளேடு 15 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக