வியாழன், 3 அக்டோபர், 2019

"துக்ளக்கே" - ரொம்பவும் தான் துள்ளாதே!

- மின்சாரம்


"நரேந்திரமோடியும் - திராவிடர் கழகமும்" என்ற தலைப்பில் இவ்வார 'துக்ளக்' இதழ் (9.10.2019 - பக்கம் 4, 5) ஒரு கட்டுரையை எழுதித் தள்ளியிருக்கிறது.

"அய்யோ பாவம்"  'விடுதலை'யின் சூடுதாங்க முடியாமல் 'துக்ளக்' ரொம்பதான் புண்பட்டிருக்கிறது. பூங்குன்றன் எழுதுவதால் புறநானூற்றுப் பூங்குன்றனை துணைக்கழைத்து - தி.க.  'பித்தலாட்டம்' என்றெல்லாம் எழுதித் தன் தரத்தின் கோர முகத்தினைக் காட்டியுள்ளது.

திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" தான் தங்களின் முதன்மைக் கொள்கை என்று அறிவித்தது என்று எழுதிய 'துக்ளக்' அதைக் கூறியது கணியன் பூங்குன்றன்தான் என்பதை தி.க. மறைத்து விட்டதாம் - கணியன் பூங்குன்றன் கருத்தை தி.க. திருடி விட்டதாம்.

'விடுதலை'யில் துக்ளக்கின் முகத்திரையைக் கிழித்து எழுதிய ஒரே ஒரு கட்டுரையின் ஒரே ஒரு வரிக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் முடங்கிப் போன துக்ளக், எதையோ எழுத வேண்டும் என்ற ஆத்திரத்தில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது. மத்தியில் பிஜேபி அதிகாரத்துக்கு வந்த திமிரில் பார்ப்பனர்கள் சிண்டும் பூணூலும் கொஞ்சம் விரைக்க ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.

அது சரி -  சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பவள விழா மாநாட்டில் கணியன் பூங்குன்றனின் அந்த வரிகள் பற்றிய பிரச்சினையே எழவில்லையே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லாடல், மாநாட்டின் தீர்மானத்திலோ, உரையிலோ இல்லாத போது, குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக அல்லவோ கதைக்கிறது.

சேலம் பவள விழா மாநாட்டில் இடம் பெறாத ஒன்றை இடம் பெற்றதாகக் கூறி கீழறுக்கும் வேலையில் இந்த கின்னரர்கள் ஈடுபடுவது பரிதாபமே.

அப்படியே இருக்கட்டும். "யாதும் ஊரே யாவரும் - கேளிர்" பற்றி அய்.நா.வில் பேசி விட்டாராம் பிரதமர் நரேந்திரமோடி - கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் 3000 ஆண்டுகளுக்கு முன் சொன்ன கருத்தை அய்.நா. சபையில் கூறி விட்டதாகப் புளகாங்கிதம் கொண்டு புளியேப்பம் விடுகிறது இந்தப் புளியோதரை.

"யாதும் - ஊரே யாவரும் கேளிர்" என்ற கருத்தை பிஜேபியோ, சங்பரிவார்களோ ஏற்றுக் கொள்கின்றனவா என்கிற கேள்வியை முகத்துக்கு முகமாக வைக்கிறோம் -  பதில் சொல்லட்டும் பார்க்கலாம்.

இவர்களின் இந்து மதம் எல்லோரையும் சமமாகவும், சகோதரர்களாகவும், கேளிராகவும் பாவிக்கிறதா? ஏற்றுக் கொள்கிறதா?

இந்து மதமான சனாதன தர்மத்தில் பிறப்பில் பேதமில்லாத் தன்மை உண்டா?

இவர்களின் குருஜி கோல்வால்கரிலிருந்து, காமகோடி சங்கராச்சாரியார் வரை வருணாசிரமக் கொள்கையோடும் புத்தியோடும் உருண்டு புரண்டு கொண்டுள்ள நிலையில் அனைவரும் கேளிர் என்று சொல்லுவதற்கான குறைந்தப் பட்சத் தகுதி ஏதேனும் உண்டா?

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் ஜாதி அமைப்பு முறையைப் பச்சையாக ஆதரித்து எழுதியுள் ளாரே, வர்ண வியா வஸ்தாவைத் தூக்கி நிறுத்துகிறாரே?(BUNCH OF THOUGHTS), அத்தியாயம் - 8, சுலோகம்: 107)

ஜாதி என்பது மனிதனை பிரிப்பதா? இணைப்பதா? அனைவரையும் கேளிர் என்று சொல்வதா?

இந்தப் பிளவுபடுத்தும் ஜாதியைப் பாதுகாப்பு வளையத்தில் வைத்துக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். பிஜேபி குழுமத்தின் முகமாக இன்றைக்குத் தெரிந்து கொண்டுள்ள நரேந்திரமோடி யாவரும் கேளிர் என்ற மனித ஒற்றுமை, நேசத் தத்துவம் பற்றிப் பேசுவதற்கு தகுதி உடையவர்தானா?

இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள் குடியுரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்(WE OR OUR NATIONHOOD   DEFINED) என்று கூறும் கோல்வால்கரை குருஜி என்று கும்பிடும் கும்பல் யாவரும் கேளிர் என்ற வார்த்தையை உச்சரிக்கும் உதடுகளுக்குச் சொந்தக்காரர் களாக இருக்க முடியுமா?

450 ஆண்டுக்கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப்பகலில் உடைத்து நொறுக்கியவர்கள் யாவரும் கேளிர் என்று கூறிட, நாண வேண்டாமா?

தீண்டாமை ஷேமகரமானது என்று கூறுபவரை ஜெகத்குரு என்று தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் 'துக்ளக்' குருமூர்த்திக் கூட்டம் யாவரும் கேளிர் என்ற உன்னதத் தமிழ்ப் பண்பாட்டின் பக்கம் ஒதுங்கி நிற்கக் கூடத் தகுதி உடையது தானா?

பெண்களும், சூத்திரர்களும், வைசியர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறும் கீதையினைப் படுக்கையறையில் கூட வைத்துக் கொஞ்சும் கும்பலா - "யாவரும் கேளிர்"ப் பற்றி பேசுவது!

இதில் "யாதும் ஊரே" என்ற பேச்சும் ஒரு கேடா! கடல்தாண்டி செல்லுவது தோஷம் என்று எழுதி வைத்திருக்கும் இந்துத்துவா பேர்வழிகள் "யாதும் ஊரே" என்று பேசலாமா?

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குள் சென்ற காந்தியார் தடுக்கப்பட்டது ஏன்? அவர் கடல் கடந்து இங்கிலாந்து சென்றார் என்ற காரணம் கூறப்பட்டதா இல்லையா?

பூங்குன்றனாரையோ புறநானூறையோ குறிப்பிட்டால் ஈ.வெ.ரா.வின் கேவலப் பேச்சு அம்பலமாகுமே என்று அச்சத்தினால்தான் பூங்குன்றனாரை மறைத்து அவர் கருத்தை திருடி தான் சொந்தக் கருத்துப் போல தி.க. காட்டுகிறதாம். கோணல் புத்தி துக்ளக் இப்படியும் கிறுக்கியுள்ளது.

கணியன் பூங்குன்றனாரின் கருத்தைத் திருட வேண்டிய அவசியம் இல்லை தி.க.வுக்கு. ஏன் என்றால் தி.க.வின் கருத்தும், கணியன் பூங்குன்றன் கருத்தும் ஒன்றே!

அதே நேரத்தில் கணியன் பூங்குன்றனாரின் மனித நேய, மனித சமத்துவத்திற்கு எதிரான கோட்பாட்டையும்,  சனாதனத்தையும் சதையும் ரத்தமுமாகக் கொண்ட 'துக்ளக்' கும்பல்தான் இருட்டு வேளையில் திருட்டு வேலையைச் செய்துள்ளது.

வழக்கம் போல தந்தை பெரியார் தமிழை இழிவுபடுத்தி விட்டார் என்ற கீறல் விழுந்த கிராமஃபோன் பாட்டைப் போட்டுக் காட்டுகிறதே!

தமிழை நீஷப்பாஷை என்றும் கூறும் ஒரு ஆச்சாரியாரை ஆதர்ஷ புருஷராக, லோகக் குருவாகக் கொண்டாடும் கூட்டம் தமிழைப் பற்றிப் பேசலாமா?

தமிழைப் பற்றி தந்தை பெரியார் கூறும் கருத்து தமிழ் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்  - விஞ்ஞான கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு வளம் பெற வேண்டும் என்ற அக்கறையினால்தான்.

" தமிழ் மொழி ஆங்கில மொழி இரண்டைப் பற்றி என்னுடைய கருத்தை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பது தானே தவிர, தமிழ் மீது எனக்கு தனி வெறுப்பில்லை"

(விடுதலை, 1.12.1970 பக்கம் 2)

இதுதான் தந்தை பெரியாரின் தமிழ் மீதான கருத்து.

ஆனால் சங்கராச்சாரியாரின் கருத்தோ தமிழை நீஷப்பாஷை என்று கூறி இழிவுபடுத்துவதாகும். பூஜை வேளையில் சங்கராச்சாரியார் 'நீஷப்பாஷையான' தமிழைப் பேசமாட்டாராம். அப்படி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பேச நேர்ந்தால் ஸ்நானம் செய்து தீட்டுக் கழித்துதான் பூஜை வேலையில் ஈடுபடுவாராம் - இந்தக் கூட்டம் தான் தமிழ் எழுத்து திருத்தம் செய்து மேலும் தமிழை விஞ்ஞானப்படுத்த வேண்டும் என்ற அக்கறையோடு விரும்பும் தந்தை பெரியார் மீது சேற்றை வாரி இறைக்கிறது.

கோயில் கூடாது,  கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் கோயிலுக்குள் நிலவும் தீண்டாமையை எதிர்த்தும், கோயிலுக்குள் தமிழ் வழிபாடு ஏனில்லை என்றும் போர்க்குரலையும் எழுப்பினாரே!

ஆனால் இதே 'துக்ளக்' தலையங்கத்தில் (18.11.987) திருவாளர் 'சோ' ராமசாமி என்ன எழுதினார்?

"மொழி ஆர்வமா? மதத்துவேஷமா?" என்ற தலைப்பில் பச்சையாக தனது பார்ப்பன குயுத்தியை காட்டினாரே.

தமிழில் வழிபட்டால் பொருள் இருக்கும். ஆனால் அருள் இருக்காது என்று எழுத வில்லையா?

சமஸ்கிருத ஒலியில் தான் தெய்வசக்தியிருக்குமாம். எத்தகைய பித்தலாட்டம் இது! - இந்தக் கூட்டம் தான், தமிழில் வழிபாடு தேவை என்று கூறும் தி.க.வைப் பார்த்து ஏகடியம் பேசுகிறது. இன்னும் ஒரு தடுமாற்றத்தைக் கேளுங்கள் - கேளுங்கள்! - தமிழைப் பற்றி பெரியார் சொன்னதாக ஆதாரம் காட்டியுள்ள "அறிவு விருந்து" எனும் நூலின் மொத்தப் பக்கங்கள் 28 தான், ஆனால் துக்ளக்கோ 29முதல் 35 பக்கத்தில் இருப்பதாக எழுதுகிறது. பித்தலாட்டமே உன் பெயர் தான் துக்ளக்கா?

கடைசியாக வழக்கம் போல தி.மு.க. மீது ஒரு பாய்ச்சல். தமிழுக்காக உயிரையும் விடுவேன் என்று கூறும் தி.மு.க. வீரமணியோடு சேர்ந்து ஈ.வெ.ரா.வை கொண்டாடுகிறது என்று ஆத்திரப்படுகிறது.

புரிகிறதா சூட்சமம்? இங்குதான் அவாளின் அஸ்திரம் மறைந்து நிற்கிறது.

தி.க. வீரமணியின் நெருக்கம் வேண்டாம் - ஒதுங்கி நிற்க வேண்டும் மு.க.ஸ்டாலின் என்று திருவாளர் குருமூர்த்தி இதோபதேசம் செய்து பார்த்தார்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எங்களின் கொள்கைப் பாதையை நிர்ணயிப்பது பெரியார் திடல்தான் என்று முகத்தில் மொத்துவது போல் அறைந்தார். இளைஞரணி தளபதியாகக் இருக்கக்கூடிய மானமிகு உதயநிதியோ, இந்துத்துவாவை வேரறுப்போம் என்று கர்ச்சனை செய்கிறார். அந்த ஆத்திரத்தில் இடுப்பு வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் சல்லடம் கட்டி ஆடுகிறது இந்த அக்ரகார ஏடு.

தி.மு.க. மட்டுமா தமிழ்நாட்டில் உள்ள அத்தனைக் கட்சி தலைவர்களுமே "வழிகாட்டுங்கள் வீரமணி அய்யாவே" என்று குரல் கொடுக்கும் நிலை ஏற்படுவதை கண்டு குரல் வளை நெரிக்கப்பட்டது போல குமுறுகிறது விஜயபாரதம்.

குடுமிகளே,  குருமூர்த்திகளே உங்களின் மித்திர பேதம் திரிபு வேலை,  அவுட்டு திரி "அணுகுண்டு"கள் எல்லாம்  பெரியார் என்ற மாபெரும் சகாப்தத்துக்கு முன்பே நமத்துப் போய்விட்டது என்பதை மறக்க வேண்டாம்.

உங்கள் எத்து வேலையும், நயவஞ்சகமும், காலாவதி யானவையே! மீண்டும் கொடுக்கை நீட்டிப் பார்க்கலாம் - அதிகார பலம் இருக்கிறதுஎன்று எண்ணினால் எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக புலிப் போத்துகளாக  கிளர்ந்து எழுந்து கொண்டு இருக்கக்கூடிய கருஞ்சட்டை காளையர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் - எச்சரிக்கை!

 - விடுதலை நாளேடு, 3.10.19

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக