சனி, 19 அக்டோபர், 2019

பிரேமலதா உரிமைக்குரல்



மதுரை அருகே கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் (அப்பா லாரி ஓட்டுநர், அம்மா விவசாயக் கூலி) பிரேமலதா என்ற மாணவி. 2011 ஆம் ஆண்டில் இளமனூர் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.

அய்.நா. மனித உரிமைக் கவுன்சில் சார்பில், மனித உரிமைக் கல்வியை மாண வர்கள் எப்படிக் கற்கிறார்கள், அதன்மூலம் அவர்களிடம் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதுபற்றி ஆவணப்படம் எடுக்க வந்த போது, மாணவி பிரேமலதா பேசினார்.

ஜாதி ரீதியான பாகுபாடு, பாலினப் பாகுபாடுபற்றி அவர் பேசினார்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெனீவா மனித உரி மைக் கவுன்சிலிடமிருந்து அழைப்பு வர பிரேமலதா ஜெனீவா சென்றார். இந்தியா சார்பில் சென்ற ஒரே மாணவி இவர்தான் - ஜெனீவாவில் அவர் என்ன பேசினார்?

அவர் வாயாலேயே கேட் போம்:

‘‘நம் ஊரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், ஜாதிப் பாகுபாடுகள், கல்வி கற்க பட்டியல் சமூக மக்கள் படும் இன்னல்கள் பற்றிப் பேசினேன். ‘நீட்' போன்ற தேர்வுகளால் அனிதா தற்கொலை செய்து கொண்டதையும், இதுபோன்ற தேர்வுத் தடைகளால் பட்டியல் சமூக மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாமல் போவதை யும் பேசினேன். மேலும் ‘நீட்' போன்ற தேர்வுகளைத் தடை செய்ய இந்தியாவை வற்புறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.''

- ‘‘ஜூனியர் விகடன்'', 16.10.2019, பக்கம் 38-39

இந்திய அரசின் மானம் ஜெனீவாவரை கப்பலேறி விட்டது. ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற கொள் கையை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.க. நாட்டை ஆள்கிறது. அந்த வகையில் பார்த்தால், மாணவி பிரேமலதா ஜெனீவா வரை சென்று அய்.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசுக்குச் சாட்டையடி கொடுத்து முகத்திலும் கரியைத் தடவி விட்டார் (வெட்கம், மகாவெட்கம்!)

‘நீட்'டைப்பற்றியும் நெற்றி யடி கொடுத்திருக்கிறார். இட ஒதுக்கீட்டை நேரடியாக ஒழிக்க முடியாத பார்ப்பன சக்திகள் ‘நீட்' போன்ற அகில இந்தியத் தேர்வுகளை நடத்தி, அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களை ‘உதைத்து' வெளியே தள்ளுகிறார்கள்.

பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1176 மதிப் பெண் பெற்ற அனிதாவும், 1125 மதிப்பெண் பெற்ற பிரதீபாவும் தற்கொலை செய்துகொண்டது தான் மிச்சம்.

‘நீட்' வந்த பிறகு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்ற இடங்கள் அய்ந்தே அய்ந்து; என்னே கொடுமை!

‘நீட்' இல்லாதபோது சி.பி. எஸ்.இ. மாணவர்கள் பெற்ற இடங்கள் 62. ‘நீட்' வந்த பின் பெற்ற இடங்கள் 1,220. அதா வது 20 மடங்கு அதிகம்.

புரிகிறதா ‘நீட்'டின் சூழ்ச்சி?

பிரேமலதா உரிமைக் குரல் ஓங்குக!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு 19 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக