சனி, 19 அக்டோபர், 2019

எல்லோரும் சமமனிதரே என்று கூவும் உலக மானுட இயக்கமே தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்!

வாஷிங்டன் மாநாட்டில் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை




வாஷிங்டன், செப்.25 உலக மனிதர்கள் அனைவரும் சரி சமமே என்று கருதும், கூவும் உலக மானுட இயக்கமே தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்.

22.9.2019 அன்று வாஷிங்டன் மேரிலாண்டில் மாண்ட் கோமரி கல்லூரி பண்பாட்டு கலை மய்யத்தில் நடை பெற்ற பன்னாட்டுப் பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆற்றிய தொடக்கவுரை வருமாறு:

கடந்த 2017 இல் ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மாநாடு


ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு 2017 சூலை 27 முதல் 29 ஆம் தேதிவரை நடைபெற்றது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தந்தை பெரியாரின் சிந்தனைகளான சுயமரியாதை -மனிதநேய வாழ்க்கை முறை பரந்துபட்ட, உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தை பெரியாரின் மானுட நேயத்துடன் கூடிய சுயமரியாதை பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமயமாக்குவது என பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாடு தீர்மானிக்கிறது.

- அந்தத் தீர்மானத்தின் நீட்சியே இந்த மாநாடு.

சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் காங்கிர சில் இருந்தபோதே தொடங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 1925 நவம்பரில்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் - கொள்கையின் அடிப்படையில், சமூகநீதி அடிப்படையில்!

ஆனால், அதற்கு 6 மாதங்களுக்கு முன்பே ‘குடிஅரசு’ இதழைத் தொடங்கிவிட்டார். (2.5.1925)

‘சுயமரியாதை’ என்ற வார்த்தைக்கு...


சுயமரியாதை என்று சொல்லும்போது அது மனிதநேயத்தை உள்ளடக்கியதாகும்.

“இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும்-அழகுப் பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுயமரியாதை’ என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள ஒரு வார்த்தையை உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது’’ என்றார் தந்தை பெரியார்.

(‘குடிஅரசு’ 1.6.1930)

ஒரு மனிதனுக்குள்ள உரிமை மற்றவனுக்கும் இருக்க வேண்டும். சுயமரியாதை என்பது அடுத்தவனின் சுய மரியாதையையும் அங்கீகரிப்பதே!

பிறன் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதேபோல் நீயும் அப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் ஒழுக்கமாக வும், நாகரிகமாகவும் கூறுகிறார் தந்தை பெரியார்.

சுயமரியாதை என்கிறபோது - அது மனிதநேயத்தை உள்ளடக்கமாகக் கொண்டதாகும்.

தந்தை பெரியார் எனது ‘கண்வலி’ என்பதும், ‘எனது ரத்தக் கொதிப்பு’ என்பதும் எதைக் கூறுகிறார்?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி, கூலி, ஏழைமக்கள்தான் எனக் குக் கண்வலியாய் இருப்பவர்கள். அவர்களைச் சம மனிதர் களாக ஆக்குவது எனது கண்நோய்க்குப் பரிகாரம்.

(‘விடுதலை’ 15.10.1967)

இவ்வளவு பாடுபட்டும் இன்னும் இந்தக் காலத்திலும் பார்ப்பான் இருக்கிறான்; சூத்திரன் இருக்கிறான்; பறையன் இருக்கிறானே! உலகிலெல்லாம் மார்க்சிசம் பரவின இந்தக் காலத்திலா இத்தகைய பேதங்கள் இருப்பது? அந்த ஜாதிகளில் ஒன்றுதானே தொழிலாளி ஜாதி! பாழும் சுயராஜ்யம் வந்தும் ஒரு பார்ப்பான் குறையவில்லையே! அவை வளருகின்றன. அது மாத்திரமல்லாமல் சூத்திரன் அனுபவிக்கும் கொடுமையும், பறையன் அனுபவிக்கும் கொடுமையும் குறையவில்லை. அவர்களது இழிநிலை, பாட்டாளித் தன்மை குறையவில்லை. குறையவில்லை என்பதோடு மட்டுமல்ல; இந்தப் பேதங்கள், இந்த சுயராஜ்யக் குடியரசிலே இன்னும் அதிகமாகப் பலப்படுத்தப்படுகின்றன! இதைப் பற்றிக் கொஞ்சமாவது தொழிலாளர்களுக்குப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த வீரர்கள் கவலைப்பட வேண்டாமா? இந்த நாட்டுக்கு இதுதான் ஒரு முக்கியமான சங்கதி. இதைப்பற்றி இத்தனை நாளும் யாரும் கவலை எடுத்துக்கொள்ளவில்லையே, எங்களைத் தவிர! வீராதிவீரர்கள் என்றெல்லாம் ‘விருது’ பெற்ற சூரர்கள் இதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கிறார்களா? சும்மா தொழிலாளர்களை உசுப்பி விட்டு அவர்களுக்கு அடி உதை வாங்கி வைப்பதில்தானே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். தொழிலாளி-க்கு அடி உதை. அதோடு மட்டுமா? தொழிலாளர்கள் குடும்பப் பெண்கள் எத்தனை பேர்கள் கற்பழிக்கப்பட்டார்கள். எத்தனைப் பெண்டுகளை மயிரைப் பிடித்து இழுத்து தெருவிலே போட்டு அடித்தார்கள்! இவ்வளவு பாடுகள் படச்செய்தும் அவர்களது இழிவு நீங்கப் படவில்லை. குறைந்த கஷ்டநஷ்டத்தில் அதிகப்படியான லாபத்தை அல்லவா பெறவேண்டும்! இதை நினைத்தால் எனக்கு மனம் பதறுகிறது. நம் மக்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்களே என்கிற ஆத்திரத்தில் சில சமயங்களில் ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. எத்தனை நாளைக்கு இப்படி நடந்தாலும் சூத்திரன் (தொழிலாளர்) சூத்திரனாகவும், பார்ப்பான் (பிறவி முதலாளி) பார்ப்பானாகவும்தானே இருப்பர்?

- (தந்தை பெரியார், எஸ்.ஆர்.எம்.யூ. தொடக்கவிழா (பொன்மலை, 10.9.1952) உரையிலிருந்து...

தந்தை பெரியார் அணுகுமுறை எத்தகையது?

ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் தந்தை பெரி யாரின், திராவிடர் கழகத்தின் விழுமிய இரு விழி போன்ற கொள்கைகளாகும்.

“ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்ற கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகமில்லாமல் பார்த்துக் கொள் வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவு குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு மற்ற சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக்குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கெள்ளும் உணர்ச்சியாகும்!’’

(தந்தை பெரியார், ‘விடுதலை’ 1.1.1962)

‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’


தந்தை பெரியாரின் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?’’ என்ற நூல் பெண்ணியல் தடத்தில் உலகில் மேலோங்கி நிற்கக் கூடியதாகும். தந்தை பெரியார் கேட்கிறார்

பெண்களின் உடல் அழகைப் பற்றி 50 வரிகள் எழுதும் புலவர்கள் அவர்களின் உரிமையைப் பற்றி நான்கு வரிகள் எழுதக்கூடாதா என்ற கேள்வியில் பெண்கள் மீது தந்தை பெரியாருக்குள்ள மனிதநேயமும் சுயமரியாதை உணர்வும் புலப்படும்.

மனிதநேயத்தின் சூளிலிருந்து பிறந்ததுதான் தந்தை பெரியாரின் சுயமரியாதை


“பெண்கள் உரிமை என்று வரும்போது தயவுசெய்து, உங்கள் மனைவிகளை நினைத்துச் சிந்திக்காதீர்கள். உங்கள் மகளை நினைத்துக்கொள்ளுங்கள், சகோதரிகளை நினைத்துக் கொள்ளுங்கள்’’ என்பதில் சுரக்கும் மனித நேயத்தை கவனிக்கத் தவறக்கூடாது, இதில் ததும்பும் மனிதத் தன்மையின் நேயத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் மனிதநேயத்தின் சூளிலிருந்து பிறந்ததுதான் தந்தை பெரியாரின் சுயமரியாதை.

மனிதனிடம் ஆறு அறிவு இருக்கிறது என்பதாலேயே அவன் உயர்ந்தவனா? என்ற வினாவை எழுப்பும் தந்தை பெரியார், விலங்குகளை விட எந்த வகையில் உயர்ந்தவன் என்ற வினைவையும் தொடுக்கிறார்.

சுயமரியாதையா? சுயநலமரியாதையா? - இதுதான் அய்யா கேள்வி

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளை யெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாக பார்ப்பானை ஏற்றி வைப்பதும், பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதையாகாது; இவையெல்லாம் சுயநல மரியாதையே ஆகும்.

உண்மையான ஜீவகாருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலைகீழாய்க் கொண்டு போகப் படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும் ஜீவ காருண்யம் என்று எண்ண மாட்டார்கள். பெரும்பான் மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுயநலத்தால் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பதைத்தான் கவனிப்பார்கள்.



அமெரிக்க மாநாட்டில் பங்கேற்ற பேராளர்கள்


பெரிய மாறுதல்கள் உண்டாக்கப்பட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய நோக்கக் காரர்களும் சுயநல நோக்கக்காரர்களும் சில சமயங்களில் மனக் கஷ்டப்படத்தான் நேரும், அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர் போவதனால் எத்தனை சங்கராச்சாரிகள் மனம் பதறுகிறது? இதில் ஏதாவது நாணயமோ உண்மையோ இருக்க முடியுமா?

மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும் இழி தன் மைக்கும், ஓய்வற்ற தன்மைக்கும் சதா கவலைக்கும் காரண மாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமே ஆகும்.

மனிதப் பிறவி உயர்ந்ததென்றும் அருமையான தென்றும் மற்ற ஜீவராசிகளைவிட மேம்பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது.

“அரிதரிது மானிடராய்ப் பிறத்தலரிது’’ என்பது சோம் பேறிகள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர்களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு, நான் இழிவு இழிவு மனிதராய்ப் பிறத்தல் இழிவு’’ என்றுதான் சொல்லுவேன். மனிதனைவிட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமைக் கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக ஆபூர்வமேயாகும்.

- (‘குடிஅரசு’ 18.12.1932)

மனித உரிமைமக்காகவும், மனித நேயத்துக்காகவும் எத்தனையோ போராட்டங்களை தந்தை பெரியார் நடத்தியதுண்டு. காங்கிரசிலிருந்தபோதே அவர் நடத்திய வைக்கம் போராட்டமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் குறிப்பிடத்தக்கன. இவை இரண்டுமே மனிதனின் சுயமரியாதையும் மனிதநேயத்தையும் உள்ளடக்கமாகக் கொண்டவையே! காங்கிரசின் உதவி யோடு சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி உணவும், தனி இடமும், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு வகையிலும் நடத்தப்பட்டதை எதிர்த்துதான் தந்தை பெரியார் கிளர்ந்து எழுந்தார்.

சேரன்மாதேவி குருகுலத்தை நடத்திய பொறுப்பாளர் வ.வே.சு.அய்யர் சொன்ன கருத்து இதுதான். “தீவிர வைதீக பிராமணர்கள் உணர்வு புண்படும் ஆகையால் இதில் மாறுதல் செய்வதற்கில்லை. சமுதாயத்தில் கலந்துண்ணுதல் இல்லாதபோது குருகுலத்தில் மட்டும் அதை நடை முறைப்படுத்தச் சொல்வது முற்றும் முறையற்றது என்ற சொத்தை வாதத்தை முன்வைத்தார்.

திருச்சியில் நடந்த காங்கிரஸ் குழுக்கூட்டத்தில் எம்.கே. ஆச்சாரியார் என்பவர், “ஒரு பிராமணச் சிறுவன், ஒரு பிராமணரல்லாத சிறுவனுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாக தான் கேள்வியுற்றால், தாம் இதற்காக பத்துத் தினங்கள் பட்டினி இருப்பேன்’’ என்றார்.

(‘குடிஅரசு’ 10.5.1925)

திருச்சியில் நடைபெற்ற காங்கிரசு கூட்டத்தில் எஸ்.ராம நாதன் கொண்டுவந்த தீர்மானம் தேசிய இயக்கத்திலிருந்து பங்கு பெறும் எந்த நிறுவனமும் பிறப்பு அடிப்படையில் வேறுபாடு காட்டக்கூடாது என்ற தீர்மானத்தை இராமநாதன் முன்மொழிந்தார். ஆதரவாகப் 19 பேர் இருந்தனர். எதிர்த்தவர்கள் 7 பேரும் பார்ப்பனர்கள். இராஜாஜி, எஸ்.டி.எஸ்.இராஜன், விஜயராகவாச்சாரியார், கே.சந்தானம் அய்யங்கார், டாக்டர் சுவாமிநாதன், என்.எஸ்.வரதாச்சாரி. ஆதரித்தவர்கள்: பெரியார், திரு.வி.க., எஸ்.இராமநாதன், இராமசாமி, இராமச்சந்திரனார், சிங்காரவேலு, தங்கப் பெருமாள், புதுப்பாளையம் இரத்தினசாமி, சேலம் ஆதி நாராயணன், பி.இராமசாமி.

(‘விடுதலை’ 6.1.1960, 30.3.1952)

குருகுல சிக்கல் காந்தியார் வரை சென்றது. சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக் கூடாது. மேலும் ஒரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜனம் செய்ய விரும்பிவில்லை என்றால் அவர்களது அந்த உணர்வு மதிக்கப்பட்டாக வேண்டும் என்றார் காந்தியார்.

(‘இந்து’ 12.3.1925)

தந்தை பெரியார் மறைந்தாலும்


வெற்றி பெற்றுள்ளார்


தீண்டாமை ஒழிப்பைப் பேசும் காந்தியார்தான் இப்படி நடந்துகொண்டார் என்பதைக் கவனிக்கவேண்டும். இந்த இடத்தில்தான் தந்தை பெரியாரையும், காந்தியாரையும் எடைபோட்டுப் பார்க்க வேண்டும்.

இறுதியில் சேரன்மாதேவி குருகுலம் இழுத்து மூடப் பட்டது. ஜாதிப் பாகுபாடு, தீண்டாமைக்கு எதிராகப் நடத்தப்பட்ட போராட்டத்தில் தந்தை பெரியாருக்குக் கிடைத்த முதல் வெற்றி இது.

அனைத்து ஜாதியினர்களும் அர்ச்சகராக உரிமை என்ற போராட்டத்தை தந்தை பெரியார் எடுத்துக்கொண்டதும் மனித உரிமையையும் சுயமரியாதையையும் சார்ந்ததாகும். சாமி சிலையை ஒரு தாழ்த்தப்பட்ட தோழரும், பார்ப் பனரல்லாதாரும் தீண்டினால் தீட்டுப்படும் என்று ஆகமங் களைச் சுட்டிக்காட்டும் கொடுமையின் எதிர்ப்பே இந்த இறுதிப் போராட்டமாகும். தந்தை பெரியார் மறைந்தாலும் இதில் வெற்றி பெற்றுள்ளார்.

கடவுள் மறுப்பு என்று வரும்போது கூட தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்?

“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் வடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டை, பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யா மலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’’ என்கிறார் தந்தை பெரியார்.

கடவுள் மறுப்பும் கூட மனித சுயமரியாதையை, சமத்துவத்தைப் பொறுத்ததுதான் தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில்.

தந்தை பெரியார் உண்டாக்கிய இயக்கம், அதன் கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை மட்டும் சார்ந்ததல்ல - இது ஓர் உலக இயக்கம் எனலாம்.

“மனித சமூகத்தினிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை, அப்படிப்பட்ட சம தர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்; ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம்; பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும், பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும், ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம்.

(‘குடிஅரசு’, 30.7.1933)

தந்தை பெரியார், மனிதன் தொண்டு செய்யக் கடமைப் பட்டவன் என்பதற்கு அவர் கூறும் காரணம் முக்கியமானது. “மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே, அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்துச் செயல்புரிவதுதான் மனிதன் தன்மை’’ என்கிறார் தந்தை பெரியார். (21.7.1962)

ஆம் உலகத் தலைவர் தந்தை பெரியார் உலக மானுடத்துக்கே தரும் இந்தச் செய்திகளைப் பரப்புவோம் - பரப்புவோம்.

ஜாதி மதபேதங்கள் மூடவழக்கங்கள்

தாங்கி நடைபெற்று வரும் சண்டையுலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்; பின்னர்

ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்

பேசு சுயமரியாதை உலகு எனப் பேர்வைப்போம்!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இவ்வாறு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 25 9 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக