செவ்வாய், 22 அக்டோபர், 2019

மும்மொழி திட்டத்தின் அடிப்படையில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதலாம் கடும் போராட்டத்தை சந்திக்க நேரிடும்!

மும்மொழி திட்டத்தைக் கட்டாயப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு நாளை (23.10.2019) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சிக்குரியது. இது உண்மையானால் கடும் மக்கள் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய கல்விக் கொள்கையை தயாரித்திருந்தது. இதன் வரைவு அறிக்கை வெளியிடப் பட்டபோது இந்தி கட்டாயம் என்ற பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மேலும், மும்மொழிக் கொள்கை, இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்ற பரிந்துரைகள் எதிர்ப்பை ஏற்படுத்தின. இதனை அடுத்து, புதிய கல்விக்கொள்கை வரைவுமீது பொதுமக்கள், கல்வி யாளர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரியிருந்தது. பல தரப்பினரும் (நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள்) புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகப் பேசியதால், அரசியல் அரங்கிலும் புதிய கல்விக் கொள்கையின் திரைமறைவில் பதுங்கியிருக்கும் ஆபத்துகள் பரவலாகப் பொதுமக்களிடத்தில் போய்ச் சேர்ந்தன.

இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை மீதான பொதுமக்கள் கருத்து கூற கால அவகாசம் முடிந்த நிலையில், அந்த கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டனவாம்!

நாளை ஒப்புதலா?

இந்த நிலையில் வரும் புதனன்று (23.10.2019)  அமைச்சரவைக் கூடி புதிய கல்விக்கொள்கை மசோதாவிற்கு ஒப்பு தல் அளிக்க உள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. (‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா', 22.10.2019).

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை திணிப்பதில் வேகம் காட்டுகிறது. ஜூலை மாத இறுதி யில் புதிய கல்விக்கொள்கை கருத்துக் கேட்கும் பணி முடிவடையும் என்று கூறிய நிலையில், எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆகஸ்ட் இறுதிவரை என்று கூறியது. அதன் பிறகு புதிய கல்விக் கொள்கை குறித்து அமைதிகாத்து வந்த மத்திய அரசு மகாராட்டிரா மற்றும் அரியானா தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த உடனேயே புதிய கல்விக்கொள்கை குறித்த மசோதாவில் முக்கிய முடிவை எடுக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. வரும் புதன் கிழமையன்றே புதிய கல்விக் கொள்கை மசோதா அமைச்சரவையின்  ஒப்புதலுக்கு அளிக்கப்படுகிறதாம்.

ஏமாற்று வேலை!

கடும் எதிர்ப்புப் புயல் சுழன்றடிக்கும் நிலைமையிலும், மும்மொழிக்கொள்கை என்ற பரிந்துரையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அதில் இந்திவேண்டாம் என்றால் அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு செம்மொழி மூன்றாவது மொழியாக பயிற்றுவிக்கப்படும் என்றும்  கூறப்படு கிறது.

தற்போது, இந்தியாவில் தமிழ், மலை யாளம், சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகள் செம்மொழி தகுதியைப் பெற்றுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.

மேம்போக்காகப் பார்க்கும்பொழுது, இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் இல்லை என்று புறத் தோற்றத்திற்குத் தெரிந்தாலும், இது ஓர் ஏமாற்று வேலையே! நடை முறையில் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயமாகும் என்பதே  யதார்த்த நிலை யாகும்.

ஒரு வகுப்பில் ஓரிரு மாணவர்கள், ஒடியா, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளைப் படிக்க விரும் பினால், அதற்கு ஏற்பாடு செய்வது சாத்தியமா? பெரும்பாலானவர்கள் இந் தியும், சமஸ்கிருதத்தையும்தான் படிக்க விரும்புகிறார்கள் என்று காரணம் கூறி, தங்கள் திட்டத்தை மத்திய பி.ஜே.பி. அரசு அரங்கேற்றியே தீரும்.

எதையும் சூழ்ச்சி வலை விரித்து, தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவது தானே பார்ப்பனீயம். அப்படிதான் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும் நிறைவேற்றத் துடிக்கிறது.

கல்வியாளர் சிந்தனை எது?

இது ஒருபுறம் இருக்கட்டும். பிஞ்சு வயதில் மூன்று மொழிகளைத் திணிப் பதும், 5, 8, 10, 12 வகுப்புகளுக்குத் தேர்வு என்று அச்சுறுத்துவதும் கல்வியியல் நோக்கில் ஆபத்தானது - உளவியல் பாதிப்பை பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் எனும் கல்வியாளர்களின் கருத்துக்கு என்ன பதில்? கஸ்தூரி ரங்கன் குழு என்பது கல்வியாளர்கள் குழு அல்லவே!

‘‘முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான்'' என்பது இன்றைய மத்திய பி.ஜே.பி. ஆட்சிக்குப் பொருந்தக் கூடி யதே!

 

கடும் போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கை!

மும்மொழித் திணிப்பை எதிர்த்து கடும் போராட்டப் புயல் வீசப் போகிறது - அதனை மத்திய அரசு எதிர்கொள்ளத் தயாராக இருக்கட்டும்! இந்தியாவுக்கே பெரியார் மண் இதில் வழிகாட்டியாக இருக்கும் என்றும் தொலைநோக்கோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

22.10.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக