ஞாயிறு, 11 அக்டோபர், 2026

மெய்யா? பொய்யா? (தில்லி போராட்டம் குறித்து அவதூறு)




CJP போராட்டத்தில் Gen Zயினர் கொண்டாட்ட நடனமா?

மெய்யா? பொய்யா?

 

பரவும் செய்தி

டெல்லியில் காக் ரோச் ஜனதா கட்சியினர், மாணவர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து வாக்கு திருட்டிற்கு எதிராக ஜந்தர் மந்தர் மைதானத்தில் கூடி காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 முதல் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவிலும் அக்டோபர் 3ஆம் தேதி போராட்டம் நடந்தது.

அந்தப் போராட்டத்தில் மாணவர்கள் நடனமாடி கொண்டாடுவதாகவும், போராட்ட நோக்கமின்றி கூடி மகிழ்ந்திருக்கவே போராட்டம் நடத்துவதாக விமர்சனத்தோடு பதிவுகள் பரவி வருகின்றன.

X தளத்தில் dr_monika_singh என்பவரின் பதிவு ”ஜெனரல்-இசட் தலைமுறையினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் மிகவும் தனித்துவமானது,

ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி  போராடும் இளைஞர்களின் கொண்டாட்டத்தைப் பாருங்கள்

பாலிவுட் ட்விஸ்ட் இல்லாமல் மும்பையில் எப்படி போராட்டம் நடத்த முடியும்?

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று நடந்த சி.ஜே.பி போராட்டத்தில் இளைஞர்கள் சிலர் “கேரக்டர் தீலா ஹை” பாடலுக்கு நடனமாடி திளைத்த இந்த காட்சிப் பதிவு (வீடியோ)” என்ற பின்னொட்டுடன் பதிவிடப்பட்டுள்ளது.

இதே போன்ற கருத்தோடு  பல காணொலிகள் கடந்த ஒரு வாரமாக பரவி வருகின்றன.

ஆய்வு

குறிப்பிட்ட காணொலியை, படங்களை வைத்து தேடும் முறையில்(reverse image search) தேடிய போது இதே போன்ற உள்ளடக்கத்தோடு பல காணொலிகள்  X தளத் திலும், Instagram தளத் திலும் அதிகளவில் அதே போன்ற உள்ளடக்கத்தோடு பதிவிடப்படுவதும், பரப் பப்படுவதும், அவை அதிக பார்வைகளைப் பெறுவதை அறிய முடிகிறது.

மேலும் தேடிய போது  Instagram தளத்தில்  avika_re12 என்ற பயனர் ”Hip Hop Battle part 1 #hiphopculture #hiphop #dancereels# mrbeastchallenge” என்ற பின்னொட்டோடு அக்டோபர் 1ஆம் தேதியன்று முதலில் பதிவிட்டுள்ளார்.

Aa_& iiii_p என்பவர் பதிவு IIT Mumbai என்ற இருப்பிடத் தகவலை இணைந்து 02ஆம் தேதி பதிவிட்டுள்ளார். மேலும், எனவே இது அய்அய்டி மும்பையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்ததாக தெரிகிறது. @dev_perspectives என்னும் IIT மும்பை மாணவரின் யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 4 அன்று பதிவிடப்பட்ட காணொலியில் red square iit Mumbai என்று பதிவிடப்பட்டுள்ளது. எனவே இந்த நிகழ்வு நடந்த இடம் மும்பை அய்அய்டி என உறுதியாகிறது.

அக்டோபர் 4 தேதிக்கு பிறகே இக்காணொலி அதிகளவில் பரவி வருகிறது. இதன்மூலம் இக்காணொலி இம்மாணவர்களின் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்பதும் உறுதியாகிறது.

பரவலுக்கான காரணம்

மாணவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி போராடி வருகின்றனர். இதற்குமுன் கடந்த ஜூலை மாதம் நாடுதழுவிய அளவில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அப்போதைய ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும்  நிலை உருவானது.

இதுபோன்ற அவதூறுப் பதிவுகளை முக்கியமாக ஒன்றிய அரசின் ஆதரவுப் பதிவர்கள் மூலமே பதிவிடப் படுவதும் பகிரப்படுவதும் அறிய முடிகிறது.

தொடர்ந்து போராட்டம் வலுத்து வரும் நிலையில் போராடுபவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகள் மாணவர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் நோக்கில் பகிரப்படுவதாக தெரிகிறது.

ஆய்வு முடிவு

இந்நிகழ்வு அய்அய்டி மும்பை யில் நடந்தது உறுதி யாவதால் பரவும் செய்தி பொய்யே.

 

– ஆய்ந்தறிவோர்

- விடுதலை நாளேடு, 11.10.26

செவ்வாய், 29 செப்டம்பர், 2026

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா? தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம்!

 


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

தனுஷ்கோடியில் அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் ‘ராம யாத்திரை’யா? குழந்தைகளுக்குக் காவி உடையா? தமிழ்நாட்டை மதவெறி மண்ணாக்க அனுமதியோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அரிச்சல் முனையில் கடந்த 27.09.2026 அன்று சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நடத்தி, உலக சுற்றுலா நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதில், அபிநய நாட்டியாஞ்சலி என்னும் குழு வினருடன் இணைந்து சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘ராம் யாத்ரா’வாம்!

ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன?

நூற்றுக்கணக்கான குழந்தைகள், கொளுத்தும் வெய்யிலில் போதுமான  ஏற்பாடுகளின்றி அவதிப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் காவி உடை அணிவித்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறைக்குக் காவி உடை அணிந்து ராம் யாத்ரா நடத்த வேண்டிய அவசியம் என்ன? மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து முன்னணி வகையறாக்களும் ராமேஸ்வரத்தைத் தொடர்ந்து மதவெறித் தளமாகப் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசும் வழிவகுக்க முயற்சிக்கிறது. இப்போது அந்தப் பாதையில் த.வெ.க. அரசு செல்கிறதா?

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில். ராமநாதபுரம் என்பதை ‘ராமன்நாடு’ என்று ஆங்கிலத்தில் எழுத முயன்று, கடும் எதிர்ப்புகளை எழுப்பி, அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

இதே ராமன் கதையைச் சொல்லித் தான், தமிழ்நாட்டின் பொருளாதார நலனுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டிய சேதுக் கால்வாய்த் திட்டம், பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.

குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்?

பிஞ்சுக் குழந்தைகளைக் காவி உடையுடன் நிறுத்திய அதிகாரிகள் யார்? இதற்கு அனுமதி அளித்த சுற்றுலாத் துறை அதிகாரிகள் யார்? மாவட்ட ஆட்சியர் இதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று சொல்லப்படுகிறதே, என்ன பின்னணி?

தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து, மதவெறிக் காடாக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு ஒத்துழைப்போர் யாராயினும், அவர்களைத் தமிழ்நாட்டு மக்களும் ஏற்கமாட்டார்கள் – வரலாறும் மன்னிக்காது.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

29.9.2026       

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

ஓவர்சீஸ் வங்கி பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் மாநில மாநாடு சென்னையில் நடந்தது

 

சென்னை, செப்.10 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இதர பிற் படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் 19ஆம் ஆண்டு விழா 6.9.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.

விழா தொடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக – சமூகநீதி கிடைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய பிரிவுகளை உருவாக்கிட – மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் வழிமுறை கண்ட தந்தை பெரியாரின் ஒளிப்படத்தினை திறந்து அனைவரும் மரியாதை செலுத்தினர்.

ஊழியர் நல சங்கத்தின் ஆண்டு விழாவினை யொட்டி பெண்களின் மேம்பாடு மற்றும் சமூகநீதி – இடஒதுக்கீடு குறித்த கருத் தரங்கம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. இராஜசேகர் கருத்தரங்கு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தலைமை வகித்தார். சங்கத்தின் செயல் தலைவர் ரவீனா விஜயகுமார் வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சமூகநீதி – இடஒதுக்கீடு நடைமுறைபற்றி சிறப்புரை ஆற்றினர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அவசியத்தையும் கணக்கெடுப்பு நடத்தப்படும் விதம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர். பிற்படுத்தப் பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு ஜாதி என்ற குறிப்பில் ஏற்கெனவே உள்ள ஒன்றிய, மாநில அரசுப் பட்டியல்களில் உள்ள பெயரிலேயே பதிவிடப்பட்ட வேண்டும் என்பதுடன் சமூக நீதியின் ஆக்கத்திற்கு உதவிடும் வகையில் இருக்கும் என விரிவாகப் பேசினர்.

தமிழ்நாடு

சமூக செயல்பாட்டாளரும் வழக் குரைஞருமான பவதாரணி, சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து சிறப்புரையினை வழங்கினார்.

அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நல சங்கங்களின் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலத் திட்டங்கள் குறித்தும், அவைகளை முழுமையாக நடை முறைப்படுத்தி பயன் பெறும் வழிமுறைகள் குறித்தும் விரிவாகப் பேசினர். ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தும், வருங்காலத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் பரவலாகத் தெரிகின்ற வகையில் உறுப்பினர் சேர்க்கையில் அக் கறை காட்டி  நடை பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.

விழாவின் நிறைவாக நலச் சங்கத் தின் பொருளாளர் பி.டி. ஆனந்த் நன்றி கூறினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிற்படுத் தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் புதிய தலைவராக சேதுராமன் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

ஆண்டு விழாவில் பல மாநிலப் பிரதிநிதி உறுப்பினர்கள், பிற நிறுவன பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் சமூகநீதியில் நாட்டம் கொண்ட பிரமுகர்கள் பலரும் பங்கேற்றுச் சிறப் பித்தனர்.




கலந்துகொண்ட திராவிடர் கழக தோழர்கள்

கொடுங்கையூர் தங்கமணி, த.தனலட்சுமி, தென் சென்னை செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அரும்பாக்கம் சா.தாமோதரன், த.ராஜா, பெரியார் மாணாக்கன்,, ஆவடி துணைச்செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் சு.மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

புதன், 16 செப்டம்பர், 2026

பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு

 


சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா நடைபெற்றது. நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். விஅய்.டி. வேந்தர் விஸ்வநாதன், வைகோ, ஏ.சி. சண்முகம், தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்.பி., அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். (சென்னை – 16.9.2026)

-விடுதலை நாளேடு,16.9.2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக ஊடகம்

திராவிடர் கழக தோழர்கள் வீ.குமரேசன்(கழக மாநில பொருளாளர்), ஒளிவண்ணன்(பகுத்தறிவாளர் கழகம்), தென் சென்னை செ.ர.பார்த்தசாரதி, மேற்கு சென்னை கரு.அண்ணாமலை,சுப்பிரமணி,சா.தாமோதரன், ஆவடி மாவட்டம் க.தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


செவ்வாய், 15 செப்டம்பர், 2026

பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!

 


தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) ‘‘அண்ணா வெறும் படம் அல்ல; என்றும், நமக்குப் பாடம்’’ என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2026) பகுத்தறிவுப் பகலவன் திராவிடர்தம் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தலைமாணாக்கரான பேரறிஞர் அண்ணா அவர்களது 118 ஆவது பிறந்த நாள் பெருவிழா!

தமிழ் மான, தன்மானப் பெருவிழா!

தனது கல்விப் பருவத்தை சென்னையில் முடித்தவு டன், தந்தை பெரியார் என்ற சுயமரியாதை ஈர்ப்பு மய்யத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணா, தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் தளபதியாக, தந்தை பெரியாரால் பெருமைப்படுத்தப்பட்டார்!

திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி
வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம்!’

அண்ணா ஒரு பல்கலைக் கொள்கலன்! எழுத்து, பேச்சு, சிந்தனை, செம்மையான ஆளுமை, நாடாளு மன்றவாதி, ஓராண்டு முதலமைச்சர் பதவிக் காலம் என்ற குறுகிய தனது ஆட்சிக்காலத்தை, திராவிடத்தின் மீட்சிக் காலமாக்கி வரலாறு படைத்த ‘அரசியல் அதிசயம்’ ஆவார்!

பொதுவாழ்வில் அவர் தனது அறிவு ஆசானிடமிருந்து – ஈரோட்டில் ‘விடுதலை’ ஆசிரியராகி கற்றுக்கொண்ட பல பண்புகள் அவரை நாளும் உயர்த்தி, வரலாற்றில் எவரும் பெற முடியாத தனித்த ஓர் இடத்தில் அமர்த்தி யுள்ளது!

‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்!’

எதிர்நீச்சல், துணிவு, எதிரிகளிடத்தில்கூட கனிவு, ஆட்சி கிடைத்தபோது பணிவு, ஆளுமையில் அவர் எந்த ஏற்றம் பெற்றாலும், அந்த ஆட்சியை தனது ஆசானுக்குக் காணிக்கை ஆக்கிய பண்பின் உச்சம். ‘என்றும் எனது தலைவர் இடம் காலியே; அதை மீண்டும் அவரை அழைத்து வந்தே நிரப்புவேன்’ என்ற வீர சபதத்தினை அரசியலில் நிறைவேற்றிக் காட்டிய விந்தை மனிதர் பேரறிஞர் அண்ணா என்ற பெரும் ஆளுமை!

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியாரே!’ என்று கூறியது மட்டுமல்ல, அதைச் சொல்லாலும், செயலாலும் அரசு மூலம் நிரூபித்துக் காட்டிய மாவீரர் நம் அண்ணா அவர்கள்.

முதலமைச்சர் பதவி, அவரது வாழ்வின் வசந்தமல்ல; தந்தை பெரியாருடன் இருந்து பரப்புரை செய்ததே ’தம் வாழ்வின் வசந்தம்’ என்று மனந்திறந்த மாமனிதர் அவர்.

தன்மான ஆடை வழங்கிய
தகைசால் வள்ளல் அண்ணா!

தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி செல்லுபடியாக்கியதன்மூலம், அத்திருமணம் மூலம் பிறந்த தலைமுறைகளுக்குச் சட்டப்படி தன்மான ஆடை வழங்கிய தகைசால் வள்ளல் அண்ணா!

அண்ணா வெறும் படம் அல்ல; என்றும்
நமக்குப் பாடம்!

அறிஞர் அண்ணாவின் திராவிடர் ஆட்சிதான் மக்களின் சுயமரியாதை தொடங்கி, மாநிலங்களின் சுயமரியாதை வரை விளக்கி, அதற்காகப் போராட, அரசியல் களம் அமைத்தவர் நம் அண்ணா!

அண்ணா ஆட்சிதான், கலைஞர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆட்சியாக அவ்வப்போது வளர்ந்து – வழிகாட்டியது!

காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்!

எனவே, அண்ணா ஒரு காலத்தை வென்றிட்ட காவியத் தலைவர்.

என்றும் மக்கள் நெஞ்சில் இருக்கும் செந்தமிழ்ப் பெட்டகம்; அறிவுச் செம்மல்!

வாழ்க! வாழ்கவே!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை        

15.9.2026        

தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?' நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட நீதியரசர் சு.இராசேசுவரன் (ஓய்வு) பெற்றுக் கொண்டார்


தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கத்தில் கவிச்சிங்கம் கண்மதியனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?’ என்ற நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, நீதியரசர் சு.இராசேசுவரன் (நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) பெற்றுக் கொண்டார். மேலும் ‘உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) ஒருவரி உரை ஓவியம்’ நூலினை முனைவர் சுவாமிநாதன் தேவதாஸும், ‘உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) புதுக்கவிதை ஓவியம்’ நூலினை செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசமும் (தலைவர், விஜிபி குழுமம்) வெளியிட்டனர். உடன்: கவிச்சிங்கம் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், முனைவர் த.கு.திவாகரன், முனைவர் இளவரச அமிழ்தன், இசைக் கலைஞர் டி.கே.எஸ். கலைவாணன். (சென்னை, 14.9.2026)

-விடுதலை நாளேடு, 15.09.2026

----------------------------------------------------------------------------------------------------------------------------

தென் சென்னை திராவிடர் கழக ஊடகம்

தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கத்தில் கவிச்சிங்கம் கண்மதியனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா!

14.09.2026 மாலை 6.00மணி




- 


சனி, 5 செப்டம்பர், 2026

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரி கணக்கெடுப்பை’’ நீக்கிட சூழ்ச்சி! - ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை



இணையவழி கையெழுத்து இயக்கம்

ஆபத்து! ஆபத்து!! அரும்பாடுபட்டுக் கொண்டு வரப்பட்ட சமூகநீதியை ஒழிக்க ஒன்றிய பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனிய அரசு சூழ்ச்சி!
‘பேக்வேர்டு கிளாஸ்’ என்பதில், ‘கிளாஸ்’ என்றால் ‘வகுப்பு’ என்று பொருள் – ஜாதியில்லை என்று குறுக்குசால் ஓட்டுகின்றனர்!
செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள்!

தமிழர் தலைவர்
ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கை

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதியை ஒழித்துக்கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைத் தவிர்க்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது – எச்சரிக்கை! எச்சரிக்கை!! என்றும், செப்.11 இல் நாடெங்கும் நடக்கட்டும் ஆர்ப்பாட்டங்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இந்திய வரலாற்றில் சமூகநீதியை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தென்னாடு குறிப்பாக பழைய சென்னை மாகாண நீதிக்கட்சி என்ற திராவிடர்களின் அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி, உத்தியோகப் பணிகளில், அதற்குமுன் பல நூற்றாண்டுகளாகத் திறக்கப்படாத மனுதர்ம இரும்புக் கதவை அசைத்து, மெல்ல திறந்தது! அதனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகி யோரும் நுழைந்து, படித்து, பணித் தகுதி பெற்றனர்.

சமூகநீதி கிடைத்த வரலாறு!

காலங்காலமாக இந்த நாட்டின் குடிமக்களான அவர்க ளுக்கு, வந்தேறிய ஆரியத்தால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை மாற்றிட, சமூகநீதி இயக்கங்களான ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களில் மக்களிடையே உரிமைக் குரல் எழுப்பி, ‘‘100–க்கு 3 சதவிகிதமாக உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களுக்கே அவற்றையும் ஏகபோகமாக்கிக் கொண்டு, அதற்குரிய பல வகை பாதுகாப்பு, ‘தகுதி – திறமை’ என்ற வடிகட்டல் முறை என்றெல்லாம் வைத்து, அரும்பாடுபட்டுப் பெற்ற சமூகநீதி – இட ஒதுக்கீடான ‘Compensatory Justice’ ஏற்கெனவே இழைக்கப்பட்ட ‘பல்லாண்டு சமூக அநீதிக்கானப் பரிகார நீதியாக’, ‘பள்ளத்தில் வீழ்ந்திருந்த மனிதரெலாம் விழி பெற்றுக் கொள்ளத்’ தொடங்கிய உரிமைப் போர், இன்றளவும் நீடிக்கும் ஆரிய – திராவிடப் போராகவே – பல முகமூடிகள் அணிந்த நிலையிலும், தொடர்ந்த வண்ணமே உள்ளது!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கரின் அரிய முயற்சியால், முகப்புரை என்ற கொள்கைத் தத்துவ அறிமுக உரையான ‘Preamble’ என்பதில், 1.சமூகநீதி 2.பொருளாதார நீதி 3.அரசியல் நீதி என்பது பறிக்கப்பட முடியாத பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை என்பது பாதுகாக்கப்பட்ட சட்ட நிலையாக இருந்தாலும்,

அரசியலமைப்புக் கட்டுமானத்தை உடைப்பதா?

பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஒன்றிய ஆட்சியில் தொடர்ந்து, ‘சாண் ஏறினால் முழம் சறுக்குதல்’ என்பதைப்போல, ‘சாண் தந்தால்‘ ‘முழம் பறித்தல்’ என்ற புதுவகை சூழ்ச்சிமூலம், அரசிய லமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டுமானத்தைத் தகர்க்கும் வகையில் சட்ட விரோத, நியாய விரோத முறைகளின்மூலம் ஒடுக்கப்பட்டோரது உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருவது கொடுமையிலும் கொடுமை!

பொய் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் காரணமாக, ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூகநீதி, தந்தை பெரியாரின் போராட்டத்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம்மூலம்  மீட்கப்பட்டது.

அதனை அறவே திரித்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கே தவறான விளக்கம் தந்து, உச்சநீதிமன்றத்தின் உயர்ஜாதி ஆதிக்க  அதிகார வாய்ப்பினைப் பயன்படுத்தி, பொருளாதார அளவுகோலை நுழைத்தனர்.

‘பொருளாதார அடிப்படை செல்லாது’ என்ற பழைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் நலிந்த அரிய உயர்ஜாதியினருக்கு, குறிப்பாகப் பார்ப்பனர்க ளுக்கு, 10 சதவிகித  இட துக்கீடு என்று திணித்து உள்ளே கொண்டு வந்து, ‘50 சதவிகிதத்திற்கு மேலா?’ என்று முன்பு கேட்ட அதே ஆரிய அதிகார வர்க்கம், நீதித்துறை களிலும் கூடுதல் 10 சதவிகிதம் உயர்ஜாதி ஏழைகள் (EWS) மூலம் என்றவுடன், தலையசைத்து சட்ட சம்மதம் தந்து, ஒரே வாரத்தில் நிதி ஒதுக்கீடு உள்பட தரப்பட்ட அதிசயம் நடந்தது. (அரசியலமைப்புச் சட்டத் திருத்த நிறை வேற்றமும் அதில் அடக்கம்!).

மண்டல் அறிக்கை அமலாக்கம் தொடர்பான ‘இந்திரா சகானி’ வழக்கில், ஒன்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு வழங்கிய தீர்ப்பை, உயர்ஜாதியினருக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு (அதுவும்கூட 3:2 என்ற நிலையில்) மாற்ற இயலுமா? அதிலும் மூன்று நீதிபதிகள் தானே உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புக் கொண்டனர். இரு நீதிபதிகள் உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையிலும் முரணானது என்று தீர்ப்பளித்தனர்.  ஆக, ஒரே ஒரு நீதிபதி மாற்றி வழங்கிய தீர்ப்பு தானே, இந்தியாவின் 140 கோடி மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போது, மக்கள் தொகையில் 100–க்கு 65 விழுக்காட்டிற்குமேல் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட ஒரு பெரும் சூழ்ச்சி திட்டத்தை மக்கள் தொகைக் கணக்கெ டுப்பின்மூலம் ‘‘சட்ட ரீதியாகச்’’(!) செய்ய முனைப்புக் காட்டி வருகின்றனர்.

சமூகநீதியை ஒழிக்க புதிய சூழ்ச்சி!

ஜாதிவாரி கணக்கெடுப்பை முன்பு எதிர்த்த பா.ஜ.க. கடந்த பீகார் மாநிலத் தேர்தலின்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக   ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், இப்போது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசும், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அதிகார வர்க்கமும் ஒரு புதிய சூழ்ச்சியை, தந்திரத்தை நுழைத்து, அதனை அறவே மறுக்க முடிவு செய்துள்ளன –

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) என்று இருப்பதால், ‘வகுப்பு என்று தான் இருக்கிறது. ‘ஜாதி’ என்று இல்லை (அரசியலமைப்புச் சட்டத்தில் Class – Not Caste என்ற) ஒரு குயுக்தியான வாதத்தைக் காரணம் காட்டி, ஏற்கெனவே நாட்டிலுள்ள சமூகநீதி, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டத் தொடங்கிவிட்டனர்.

ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும், கிரீமிலேயர் திணிக்க முன்வந்தபோது, ஒடுக்கப்பட்ட (எஸ்.சி., எஸ்.டி.,) மக்களும் ஒருங்கிணைந்து அறவழியில் போராட்டக் களம் அமைக்கவேண்டிய அரிய தருணம் வந்துவிட்டது!

வகுப்பு – கிளாஸ் என்பதற்கு அண்ணல் அம்பேத்கரும் – மண்டல் குழுவும் கூறியுள்ளதென்ன?

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வகுப்பு – Class என்பதற்கு, அதனை எழுதிய மூலகர்த்தா டாக்டர் அம்பேத்கர் அவர்களே, அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தத்தை, சட்ட அமைச்சர் என்ற கூடுதல் தகுதியுடன் கொண்டு வந்தபோது, நாடாளுமன்றத்திலேயே சிறப்பாக விளக்கியுள்ளார்.

இதனை மண்டல் கமிஷன் அறிக்கையிலும், பிறகு வெளிவந்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தீர்ப்புகளிலும் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்திரா சஹானி வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி அவர்கள் தனக்காகவும், அப்போதைய தலைமை நீதிபதி எம்.ஹெச்.கனியா, மற்ற நீதிபதிகள் எம்.என்.வெங்கடாச்சல்யா, எ.எம்.அகமதி ஆகியோருக்காக எழுதிய தீர்ப்பில்,

அப்பகுதியை அப்படியே தருகிறோம்.

Para. 662. Chapter – VII deals with ‘Social Justice, Constitution and the law’. It referes to the relvant provisions of the Constitution, to the decision in M.R.Balaji & Ors v. State of Mysore (1963 Suppl.(1) S.C.R.439) and various subsequent decisions of this Court and discusses the principles flowing from the said decisions. It notes that the subsequent decisions of this Court in C.A.Rajendran v. Union of India (1968 (1) S.C.R.721), State of Andhra Pradesh & Ors. v. P.Sagar (1968 (3) S.C.R.595) and State of Andhra Pradesh & Ors. v. U.S.V.Balram (1972 (3) S.C.R.247) etc. show a marked shift from the original position taken in Balaji on several important points. In particular, it refers to the observations in Rajendran to the effect that ‘‘caste is also a class of citizens and if the class as a whole is socially and educationally backward, reservation can be made in favour of such a caste on the ground that it was socially and educationally backward class of citizens within the meaning of Article 15(4)’’. It refers to the statement in A.Peeriakaruppan etc. v. State of Tamil Nadu (1971 (2) S.C.R.430) to the effect that ‘‘a caste has always been recognised as a class.’’ It also commends the dissent-ing view of Subba Rao, J. in T.Devadasan v. Union of India (1964 (4) S.C.R.680) (wrongly referred to as Rangachari) – [General Manager, Southern Railway v. Rangachari (1962 (2) S.C.R.586)].

இதன் தமிழாக்கம் வருமாறு:

  1. ஏழாவது அத்தியாயம் ‘சமூக நீதி, அரசியலமைப்பு மற்றும் சட்டம்’ குறித்து விவாதிக்கிறது. இது தொடர்பு டைய அரசியலமைப்பின் விதிகள், “‘எம்.ஆர். பாலாஜி மற்றும் பிறர்’ எதிர் ‘மைசூர் மாநிலம் (1963 Suppl.(1) S.C.R.439) வழக்கின் தீர்ப்பு மற்றும் இம்மன்றத்தின் பல்வேறு பிந்தைய தீர்ப்புகளைக் குறிப்பிடுவதுடன், அத்தீர்ப்புகளிலிருந்து பெறப்படும் கோட்பாடுகளையும் விவாதிக்கிறது. சி.ஏ. ராஜேந்திரன் எதிர் இந்திய ஒன்றியம் (1968 (1) S.C.R.721), ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் பி.சாகர் (1968 (3) S.C.R.595) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் பிறர் எதிர் யு.எஸ்.வி. பலராம் (1972 (3) S.C.R.247) போன்ற வழக்குகளில் இம்மன்றம் வழங்கிய பிந்தைய தீர்ப்புகள், ‘பாலாஜி’ வழக்கில் எடுக்கப்பட்ட அசல் நிலைப்பாட்டிலிருந்து பல முக்கிய அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுவதை இது சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, ‘‘ஜாதி என்பதும் குடிமக்களின் ஒரு வகுப்பே (class) ஆகும்; ஒரு வகுப்பு ஒட்டுமொத்தமாகச் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்தால், அரசியலமைப்பின் 15(4)-ஆவது பிரிவின் பொருளில் அது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய குடிமக்கள் வகுப்பாகக் கருதப்பட்டு, அந்த ஜாதிக்கு இடஒதுக்கீடு வழங்கப்படலாம்’’ என்ற ராஜேந்திரன் வழக்கின் கருத்துகளை இது குறிப்பிடுகிறது.

‘‘ஒரு ‘ஜாதி’ எப்போதும் ஒரு ‘வகுப்பாகவே’ (class) அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது’’ என்ற ஏ.பெரியகருப்பன் மற்றும் பிறர் எதிர் தமிழ்நாடு மாநிலம் (1971 (2) S.C.R.430) வழக்கின் கூற்றையும் இது குறிப்பிடுகிறது. மேலும், டி.தேவதாசன் எதிர் இந்திய ஒன்றியம் (1964 (4) S.C.R.680) வழக்கில் நீதிபதி சுப்பா ராவ் தெரிவித்த மாறுபட்ட கருத்தையும் இது பாராட்டுகிறது. (இது தவறாக ‘ரங்காச்சாரி’ வழக்கு – அதாவது பொது மேலாளர், தெற்கு ரயில்வே எதிர் ரங்காச்சாரி (1962 (2) S.C.R.586) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

Para. 698. It is worthy of notice that the Parliament, which enacted the first Amendment to the Constitution, was in fact the very same Constituent Assembly which had framed the Consti-tution. The speech of Dr. Ambedkar on the occasion is again instructive. He said:-

Then with regard to article 16, clause (4), my submission is this that it is really impossible to make any reservation which would not result in excluding somebody who has a caste. I think it has to be borne in mind and it is one of the fundamental principles which I believe is stated in Mulla’s edition on the very first page that there is no Hindu who has not a caste. Every Hindu has a caste-he is either a Brahmin or a Mahratta or a Kundby or a Kumbhar or a carpenter. There is no Hindu-that is the fundamental proposition-who has not a caste. Consequently, if you make a reservation in favour of what are called backward classes which are nothing else but a collection of certain castes, those who are excluded are persons who belong to certain castes. Therefore, in the circum stances of this country, it is impossible to avoid reservation without excluding some people who have got a caste.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

  1. அரசியலமைப்பிற்கான முதல் திருத்தத்தை இயற்றிய நாடாளுமன்றம் என்பது, உண்மையில் அதே அரசியலமைப்பு நிர்ணய சபையே என்பது குறிப்பி டத்தக்கது. அந்தச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை மீண்டும் ஒருமுறை கவனிக்கத்தக்கது. அவர் கூறியதாவது:-

‘‘அடுத்து, கூறு 16 (4) குறித்து நான் முன்வைக்கும் கருத்து இதுதான்: ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரை விலக்கி வைக்காத வகையில் இடஒதுக்கீட்டை உருவாக்குவது என்பது உண்மையில் சாத்தியமற்றது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ‘முல்லா’வின் (Mulla) நூலின் முதல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக நான் நம்பும் அடிப்படைத் தத்துவங்களில் இதுவும் ஒன்று: அதாவது, ஜாதி இல்லாத இந்து என்று எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு ஜாதி உண்டு – அவர் பார்ப்பனராகவோ, மராத்தாவாகவோ, குன்பியாகவோ (Kundby), கும்பாராகவோ (Kumbhar) அல்லது தச்சராகவோ இருக்கலாம். ஜாதி இல்லாத இந்து என்று யாரும் இல்லை – அதுவே அடிப்படை உண்மை. எனவே, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு – இவர்கள் உண்மையில் சில ஜாதிகளின் தொகுப்பே ஆவர் – நீங்கள் இடஒதுக்கீடு அளித்தால், அதனால் விலக்கி வைக்கப்படுபவர்களும் ஏதோ ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகையால், இந்நாட்டின் சூழலில், ஜாதி அடையாளத்தைக் கொண்ட சிலரை விலக்கி வைக்காமல் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது என்பது சாத்தியமற்றது.’’

இவ்வளவு தெளிவாக ‘வகுப்பு’ (Class) என்பது ஜாதிகளின் தொகுப்பே (Builde of Castes) என்று விளக்கப்பட்டதற்குப் பிறகு, இப்போது வந்து தவறான வியாக்கியானங்களுடன் நமக்கு ‘கிளாஸ்’ எடுக்க முற்படுகிறது ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு.

முந்தைய அரசை நோக்கித்தானே
குரல் எழுப்ப வேண்டும்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றுதானே பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார் அதற்கும் பின்னரும், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும் இடையில் என்ன நடந்தது?

இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் வரும்போ தெல்லாம் அளவிடற்குரிய தரவு (Quantifiable Data) இருக்கிறதா என்றுதானே உச்சநீதிமன்றம் கேட்கிறது? அதை ஒன்றிய அரசுதானே ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்  (Caste-wise Census) மூலம்  எடுக்க முடியும். மாநில அரசுகளால் சமூகநீதி சர்வே மட்டும்தானே எடுக்க முடியும் அந்த சர்வேயும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானதில்லை என்பது பீகாரிலும் கருநாடகத்திலும் கிடைத்துள்ள அனுபவங்கள் அல்லவா? எனவே ஒன்றிய அரசு சென்சஸ் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் சர்வே ஏன் எடுக்கவில்லை என்று மாநில அரசுகளைக் கேட்பதால், அரசியல் உள்நோக்கங்களைத் தவிர வேறு என்ன பயன்? அந்த கணக்கெடுப்பிலும் ஒன்றிய அரசு குழப்பத்தை ஏற்படுத்த முனையுமானால் அதை முறியடித்த முந்தைய அரசை நோக்கித்தானே குரல் எழுப்ப வேண்டும்.

பல்வேறு முறையீடுகள் வைத்து, போராட்டங்களும் நடத்தி, வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டும், 95 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்படும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பில், பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான கணக்கெடுப்பில் மட்டும் குழப்பங்களை ஏற்படுத்துவதும், குழப்பமான முடிவுகள் கிடைக்கும் வகையிலேயே முழுமையற்ற விவரங்களைச் சேகரிப்பதும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைப்பதாகும். 1931 சென்சஸ்சை மாடலாகக் கொள்ளவேண்டும்!

செப்.11 இல் தமிழ்நாடு – புதுச்சேரியில் ஆர்ப்பாட்டங்கள்!

சமூக நீதிக்காக போராடும் இயக்கங்களும், அமைப்பு களும் இதை எதிர்த்து போராட்டக் களம் காண வேண்டிய தவிர்க்கவியலாத சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை களுக்காக எப்போதும் களம் காணும் திராவிடர் கழகம் இந்தக் களத்தை மீண்டும் இப்போது தொடங்கி வைக்கிறது. வரும் செப்டம்பர் 11 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து கழக மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில், “ஜாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமூகநீதிக்காக நீதிமன்றங்கள் கேட்கும் முழுமையான விவரங்களைத் திரட்ட வலியுறுத்தியும்” அறவழி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சென்னையில் நான் பங்கேற்கிறேன்!

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் (கி.வீரமணி) பங்கேற்கிறேன். ஒத்த கருத்துடையோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து சமூக நீதிக்கான குரலை வலுப்படுத்த வரலாம்; வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

திராவிட இயக்கத்தின் அடிநாதமான சமூகநீதிக்காக தந்தை பெரியார் பிறந்த இந்த மாதத்தில் நமது போராட்டம் தொடங்கட்டும்! கருஞ்சட்டைத் தோழர்களே தயாராவீர்!

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்த போராட்டத்தை விட பொருத்தமான தொடக்கம் வேறு உண்டோ?

 

 

சென்னை      தலைவர்,

5.9.2026  திராவிடர் கழகம்